சிவ வேடதாரி
Arts
8 நிமிட வாசிப்பு

சிவ வேடதாரி

May 8, 2022 | Ezhuna

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.

சைவக் கோயில்களில் பூவரசம் இலை அமர்ந்த விபூதி, சந்தனம், குங்குமத்தின் இன்றைய நிலை!

 “சிவ சின்னங்கள் யாவை?” என நாவலர் அவரது சைவ வினாவிடையின் அங்கமாகிய விபூதியியலிலே கேட்டு, சிறுவர்களுக்கு சிவ சின்னங்களில் முதன்மையான ‘விபூதி’  பற்றிப் போதித்தார். அவரது போதனை முறையை அடியொற்றி சைவ சமயப் பாடப் புத்தகங்களும் இடைவிடாது அதேகேள்வியையும் விடையையும் திரும்பத் திரும்பக் கேட்டுப் பதிலும் சொல்கின்றன. சிவ சின்னத்தில் முதன்மையான விபூதி ‘புனிதமான சாம்பல்’ (திருநீறு) எனப் பொருள்படுவது. புராண ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும்  சைவசமயத்தில் இது முக்கியமானது. அது ‘சுந்தரமாவது’ மட்டுமல்ல ‘மந்திரமாவதும்’, ‘வானவர் மேலதும்’ என சைவசமய அடியவர்களால்  ‘துதிக்கப்படுவது’. அது ‘சுடலைப் பொடி பூசியனான’ சிவனின் முதன்மைச் சின்னமும் – குறியீடும் ஆகும். விபூதி அணியும் மேற்படி வழக்கமானது, பெரும்பாலும் மூத்த சைவப் பிரிவான கபாலிகர்களிடம் இருந்து வந்திருக்க வேண்டும். ஏனெனில் கபாலிகர்கள் அடிப்படையில் சுடலையாடிகள்.

விபூதி

இதேநேரம் திருநீற்றை ‘திரிபுண்டரமாக’ (முக்குறியாக) அல்லது  ‘உத்தூளனம்’ எனும் பரவிப்  பூசுதல் எனும் முறையிலோ அணிய வேண்டுமென சைவசமயச்  சாத்திர நூல்கள் கூறுகின்றன. ‘நீறு இல்லா நெற்றி பாழ்’ என்ற முதுமொழிக்கிணங்க நெற்றியை விபூதி பூசுதலுக்கான பிரதேசமாகவே சைவ சமயம் இட ஒதுக்கீடு செய்து வைத்துள்ளது. அதேசமயம் ஆறுமுகநாவலர் சைவத் திருவுடலைக் கட்டியமைக்கும் பிரதான காட்சிப் பொருளாக விபூதியையே கண்டார்.

இதன்வழி சைவ சமயத்தவர்கள் பல நூறு வருடங்களாக விபூதி தரித்தலைத் தமது சமய – பண்பாட்டு வாழ்வின் பிரதான பகுதியாகக் கொண்டிருக்கிறார்கள். அதேவேளை அதனை  உடல் உபாதைகளுக்கான ஒரு  மாமருந்தாகக் கொண்டு வாயிற் போட்டு ‘சிவ சிவா’ எனக் கூறி மெல்லுபவர்கள் பலரை இன்றும் காணலாம். அது கோமயம் என நன்நாமம் சூட்டப்பட்ட மாட்டின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சுமார் 50 வருடங்களுக்கு முன்புவரை விபூதியை வீடுகளிலேயே தயாரிப்பர். என்னுடைய சிறுபாராயத்தில் என்னுடைய தாய்வழிப் பேர்த்தியார் சாணகத்தை தட்டிக் காய வைத்து வறட்டியாக்கிப் பின்னர் நெருப்பிட்டு எரித்து திருநீற்றை எடுப்பதைப் பல வருடங்களாகப் பார்த்து இருக்கிறேன். எங்களது வீட்டில் மட்டுமின்றி அப்போது ஏறத்தாழ அனைத்து சைவசமயத்தவர் வீடுகளிலும் கோவில்களிலும் இச்செயற்பாடு பெருவழக்காய் இருந்தது. இன்று இல்லாமற் போன பலவற்றைப் போல அவ்வழக்கத்தினையும் பெரும்பாலும் காணமுடிவதில்லை. அதற்குப் பதிலாக இன்று கடைகளில் பழனி முருகன் அடிவாரத்து ஜவ்வாது விபூதிகள் தொடக்கம் உள்ளூர் விபூதிப் பொதிகள் வரை தாராளமாகக் கிடைக்கின்றன.

விபூதி தயாரித்தல்

ஆனால், இவை கோமயத்திற் செய்யப்படுபவை அல்ல என்பது ஒன்றும் இரகசியமல்ல. அவை உமி, கோதுமை மா முதலான இன்னோரன்ன மூலப்பொருட்களால் ஆக்கப்படுபவை. நறுமணம் வேண்டி இரசாயனங்கள் கலக்கப்பட்டவை. இதனால் சருமத்திற்கும் உடலின் பிற பாகங்களுக்கும் தீங்கு பயப்பவையாக அமைகின்றன.  அதன் சமய, சமூகரீதியான அடிப்படைகள் எதுவும் அதன் உற்பத்தியாளர்களுக்கு முக்கியமானதல்ல. உற்பத்தியாளர்களுக்கு மட்டுமல்ல அதனைப் ‘பூசுவதும் வெண்ணீறு’ எனத் துதித்துப் பூசும் அடியவர்க்கும் அவ்வாறே அமைவதுதான் இதிலுள்ள முரண்பாடு.

திருநீறு மட்டுமல்ல சந்தனத்தின் நிலையும் இவ்வாறு முக்கியத்துவமில்லாததாகவே அமைகின்றது. முன்நுதல் புறணியின் (Prefrontal Cortex ) வெம்மையைப் போக்கிக் குளிர்ச்சி தரும் சந்தன மரப்பொடி போய், அதற்குப் பதிலாக மரவள்ளிக் கிழங்குப் பொடி பயன்படுத்தப்படுகின்றது. அதற்கு வாசனையும் – நிறத்தையும் தரவேண்டி இரசாயனப் பதார்த்தங்கள் கலந்துச் செய்யப்படும் ஒன்றாக அது மாறிவிட்டது. அதுபோலவே மஞ்சள், வெண்காரம், படிகராம் , கஸ்தூரி மஞ்சள் முதலியவற்றின் இணைப்பால் உருவாக்கப்படும் குங்குமமும், அதன் மூலப்பொருட்களை விடுத்து, செயற்கை இரசாயனங்களாற் தயாரிக்கப்படுகிறது. குங்குமம் வைக்கும் பலர் இதனால் நெற்றி கறுத்தல் மற்றும் சிரங்கு போன்ற தோல் வியாதிகளுக்குக் கூட ஆளாகின்றமையைப் பரவலாகக் காணமுடிகிறது.

பூவரசம் இலைகள்

மேற்படி பிரசாதங்கள் மட்டும் வீழ்ச்சி அடையவில்லை. அத்துடன் இம்மூன்றையும் ஈழத்துச் சைவக் கோவில்களில் பெரும்பாலும் பூவரசம் இலைகளில் வைத்துப் பிரசாதமாகத் தரும் மரபும் இழக்கப்பட்டு வருகிறது. (கோவில்களைப் பொறுத்து சிலவேளை இவ்விலைகள் மாறுவதுண்டு). இன்று மிக அருந்தலாகவே பூவரசம் இலையேறிய விபூதிப் பிரசாதத்தினைக் காண முடிகிறது. ஆனால், இலைகளுக்குப் பதிலாக இன்றைய ஈழத்துக் கோவில்கள் பிளாஸ்ரிக் உறைகள் அல்லது அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் விபூதிப் பிரசாதங்களை பொதியிடுகின்றன. சிலவேளை கோவில்கள் தம் பெயர்களை அவற்றில் அச்சிட்டுத் தம் ‘விலாசத்தையும்’ பறைசாற்றுகின்றன. அவற்றின் புதிய பகட்டுக்கு இலைப் பிரசாதங்கள் சிறப்பினைத் தரா போலும்.

தென்னிந்தியாவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பன்னீர் இலையிற் தரப்படும் ‘இலை விபூதி’ கண்கண்ட மருந்தாகப் போற்றப்படுவதுடன் அக்கோவிலின் அடையாளமாகவும் தனித்துவமாகவும் இன்றுவரை பேணிப் பாதுகாக்கப்படுகிறது.

‘வான்பூங் குடசம்’ என சங்க கால இலக்கியமான குறிஞ்சிப்பாட்டு சுட்டும் தாவரமே இன்று பூவரசு என அழைக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. அத்துடன் யாழ்ப்பாணத்துத் தாவர மரபில் அது தனியிடம் வகிக்கின்றது. வேனில்கால யாழ்ப்பாணத்தின் முக்கியமான வீட்டு மரமாகவும் (domestic tree) அது காணப்பட்டது. இவ்விதமான வரலாற்று நீட்சியுடையதும்  இயற்கை மரபுரிமை மற்றும் பண்பாட்டு மரபுரிமைச் சின்னமாகவும் இருக்கும்  பூவரசினைப்  போற்றிப் பாதுகாக்க வேண்டியவர்களாலேயே அது ஒதுக்கப்பட்டு வருகிறது என்பது தமிழ்ப் பண்பாட்டுக் குழுக்களுள்  உள்ள  இரண்டக நிலைமைகளின் வெளிப்பாடு எனக் கொள்ளலாகுமோ?.

இந்த நிலை மாற்றங்கள் அடிப்படையில் மூன்று வகையான பிரச்சினைகளைச் சமூகத்தில் உருவாக்கியுள்ளன. இதில் முதலாவதும் முக்கியமானதும், ஈழத்துச் சைவ மரபுரிமை அடையாளங்களின்  அழிவு மற்றும் அழிப்பாகும். அதாவது விபூதி, சந்தனம் , குங்குமம் என்பவற்றை மலிவான பொருட்கள் மூலம் உருவாக்குதனூடாக உள்ளூர் மரபுகள் அழிக்கப்படுவதோடு, சமயப் பயில்வுகளும் கேலிப் பொருளாக்கப்படுகின்றன. இந்தக் கேலியாக்குதலின் இன்றைய உச்சபட்ச நடவடிக்கைளில் ஒன்றை இதனோடு சேர்த்துக் கூறுதல் பொருத்தமானது என நினைக்கிறேன். இப்போதெல்லாம் கோவிலுக்காக எதனையாவது வாங்கப் போனால் ‘கோயிலுக்குத் தானே’ என்று கேட்டுவிட்டு தரங் குறைந்தவற்றைக் கோவிலுக்கானதாக முன்வைக்கின்றனர். உதாரணமாக, நெய்யை எடுத்துக் கொண்டால் – ‘சாப்பாட்டிற்கா? அல்லது பூசைக்கா?’ எனக் கேட்டுவிட்டுத் தரங் குறைந்தவற்றைக் கோயிலுக்கானதாகத் தருகின்றனர். சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை முதல் விளைச்சல்,  உள்ளதிலேயே ஆகச் சிறந்தவற்றையே கோவில்களுக்குத் தருதல் என்ற நடைமுறையே இருந்தது. இந்த மனமாற்றங்களின் தொடர்ச்சியே கோவிற் பிரசாதங்களை வெறுமனே அசண்டையீனமாக கொள்ளுதலின் அடிப்படை போலத் தோன்றுகிறது.

இரண்டாவது இதனூடாக நிகழும் உடலியல் ரீதியான பிரச்சினைகள் குறிப்பாக,  இரசாயனங்கள் செயற்கைப் பொருட்கள், தீங்கு விளைவிக்கக் கூடிய புதிய உள்ளீடுகள் என்பவற்றால் விபூதி, சந்தனம், குங்குமமம் முதலியவற்றை உற்பத்தி செய்வதனால் ஏற்படும் சருமப் பிரச்சினைகள் உள்ளிட்ட வியாதிகளின் உருவாக்கம். சமயவாதிகளுக்கு இப்போதெல்லாம் இதில் அக்கறை இல்லாவிட்டாலும், இவ்விடயத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் – சமூக மருத்துவத் துறையினர் இன்னும் ஏன் கவனஞ் செலுத்தாமல் உள்ளனர் என்பது புரியவில்லை.

பூவரசம் இலைகள்

மூன்றாவதாகச் சுற்றுச்சூழற் பிரச்சினைகள் பூவரச இலைப் பாவனையை விபூதிப் பிரசாத வழங்கற்  செயற்பாட்டிலிருந்து விலக்கியதன் மூலம் சைவசமய மரபுரிமை அழிப்பு நிகழ்கின்றது.  மட்டுமின்றி சூழலியல் ரீதியாக நட்புடைய சுற்றுச் சூழலை பாதுகாக்கக் கூடிய இலைக்குப் பதிலாக சுற்றுச் சூழல் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தத்தக்க பொலித்தீன், பிளாஸ்ரிக் முதலியவற்றின் தேவையற்ற பாவனையை அதிகரித்துள்ளோம். அதனூடாக நாம் வாழும் உலகை, மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக்கும் கைங்கரியத்திலும் ஈடுபடுகிறோம்.

இது வெறுமனே மரபுரிமை சார்ந்ததோ – சுகாதார , மருத்துவப் பிரச்சினையோ அல்லது சுற்றாடல் சார்ந்த ஒரு பிரச்சினையோ மட்டுமல்ல. இவற்றைச் சீர்படுத்துவதனூடாக உள்ளூர் வர்த்தகத்தினையும் விருத்தி செய்ய முடியும். 2017களில் இந்திய – அமேசனில் சாணக வறட்டி விற்பனைக்கு வந்துள்ளமை அவதானிக்க முடிகிறது. 2019களின் கடைசிக் காலங்களில் அமெரிக்காவிலுள்ள பல்பொருள் அங்காடிகளில் 10 சாண வறட்டிகள் இலங்கை விலையில் ஏறத்தாழ 530 ரூபா வரை விற்கப்பட்டமையை ரி.ரி.என் இணையத் தளச் செய்தி பதிவு செய்திருக்கிறது..

சாண வரட்டி

எங்களிடம் பெருந்தொகையான மாடுகள் இல்லாவிட்டாலும் கூட, இருப்பவற்றிலிருந்து ஏன் நாங்கள் ஒரு முறையான விபூதித் தொழிற்சாலையை அல்லது பல உற்பத்தி மையங்களை உருவாக்கக் கூடாது?   கிராமிய மட்டத்தில் இதற்கான முன்னெடுப்புக்களைச் செய்வது பயன்தரும். கிராமியக் குழுக்கள் – மகளிர் உற்பத்திக் குழுக்கள் – விவசாயச் சேவை வழிகாட்டிகள் இவை தொடர்பாகச் சிந்திக்க முடியும். மெய்யான சமூக – சமயச் செயற்பாட்டாளர்கள் இது தொடர்பான முன்னெடுப்புக்களைச் செய்வதன்மூலம் இந்த நிலைவரங்களை மாற்றி அமைக்க முடியும். இதே வகையிலேயே சந்தனம், குங்கும உற்பத்திகள் பற்றியும் சிந்திக்கலாம்.

இவற்றோடு தொடர்புபடக் கூடிய அரச- பொது அமைப்புகள் இதற்கான சிறுமுதல் ஏற்பாடுகள் – தர நிர்ணயங்களை ஏற்படுத்தலாம். இவை வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பதோடு போரின் பின்னணியில் தங்குநிலைச் சமூகக் குணங்குறிகளைக் காட்டும் உள்ளூர்ச் சமூகத்தை உற்பத்திச் சமூகமாக மாற்றும் செயற்பாட்டிற்கு சிற்றளவிலேனும் உதவ முடியும். இவ்வாறு எல்லா புதிய சமூக நிலவரங்களின் கீழாக புதிய தொழிற்துறைகளைத் தொடங்கவும் அதனூடாகக் குறிப்பிட்ட இனக் குழுக்களின் மரபுரிமை- சூழலியற் பாதுகாப்பையும், செய்யக் கூடிய வாய்ப்புக்களைப் பெருக்காமல் நிவாரணச் சமூகத்தையே கட்டி எழுப்புவதை நாம் நிறுத்த முயற்சிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4602 பார்வைகள்

About the Author

பாக்கியநாதன் அகிலன்

பாக்கியநாதன் அகிலன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் (கலை வரலாறு), பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் (கலை விமர்சனம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளாகப் பணிபுரியும் அகிலன் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுவருகின்றார்.

'பதுங்குகுழி நாட்கள்', 'சரமகவிகள்', 'அம்மை', 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்பன இவரது கவிதைத் தொகுப்புகளாகும்.

இவரின் ஏனைய நூல்களாகக் 'காலத்தின் விளிம்பு' என்ற மரபுரிமை சார்ந்த நூலும் 'குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து' ஆகியவை அமைவதுடன் 'வெங்கட்சாமிநாதன் – வாதங்களும், விவாதங்களும்' என்ற நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)