இன்றைய நவீன காலனித்துவ உலகம் மனிதனை இயற்கையிலிருந்து பிரித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மனித குலத்தின் பாரம்பரியங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கலாசார நடவடிக்கைகள் அனைத்தும் சீர்குலைந்துள்ளன. இதைத் தாமதமாகவேனும் உணர்ந்துகொண்டே மனிதச் சிந்தனையானது தன் இயல்பான வாழ்க்கை முறையை நோக்கி நகர முற்பட்டுள்ளது. பல இடங்களில் வியாபாரமாகவும், சில இடங்களில் திறமான கருத்தாடலாகவும் இது காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தான் நவீன உலகில் மானுடவியல் ஆய்வுகளும் ஆய்வாளர்களும் தேவைப்படுகிறார்கள்.
இந்த நிலை நமது இலங்கைத் தீவையும் விட்டு வைக்கவில்லை. இருப்பினும், இந்த தீவு தேசத்தின் பூர்வீக மக்களின் வாழ்க்கை முறை, அவர்தம் சடங்கார்ந்த நடவடிக்கைகள் மற்றும் அவர்களுக்கே உரித்தான நிகழ்த்து கலைகள் முதலான பண்பாட்டு அசைவுகள் முதலானவை இச்சூழ்நிலையை சாதகமாக எதிர்கொள்ள முடியும் என்ற பார்வையை நம் கண்முன் அகலித்துள்ளன.
கடலோர வேடர்கள் இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள தமிழ் பேசும் சமூகங்களின் ஒரு பிரிவினராக இன்றைய நிலையில் காணப்படுகின்றனர். அவர்கள் இலங்கை வேடர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் வழித்தோன்றல்களாகப் பரந்துள்ளனர். அதே சமயம் இன்றைய சூழலில் தூய (கலப்பற்ற) வேடர்களை அரிதாகவே காண முடிகின்றது. கட்டாயக் குடியேற்றத் திட்டங்கள் மற்றும் புவியியல் மாற்றங்களின் விளைவாக, அவர்கள் மற்ற சமூகங்களுடன் கலப்புற்ற வாழ்க்கை முறைகளையும், மரபுகளையும் கடைப்பிடிக்கின்றனர்.
கடலோர வேடர்களுக்கென்று தனி மொழி இருந்தாலும் இன்றைய சூழலில் அது பரவலாக இல்லை. அவர்களின் சடங்குகள் மற்றும் சடங்கார்ந்த ஆற்றுகைகளின் போது மட்டுமே அவர்கள் தங்கள் மொழியைப் பாவிக்கின்றனர். இவ்வகையான பண்புக்கூறுகளுடன் காணப்படுகின்ற இவர்கள் கிழக்கிலங்கையில் பாட்டாலிபுரம், இலக்கந்தை, சந்தோசபுரம், வெருகல், இலங்கைத்துறை மாங்கேணி, காயங்கேணி, பனிசங்கேணி, மதுரங்குளம், கிரிமிச்சை, உறியக்காடு, கதிரவெளி, கட்டுமுறிவு, அமந்தனாவெளி, வாகரை, புன்னைக்கிளங்கு, குஞ்சான்குளம், மட்டக்களப்பு வேடர் குடியிருப்பு (குடியிருப்பு), தளவாய், சித்தாங்கேணி, களுவன்கேணி, நாசிவன் தீவு, இறால் ஓடை, பொண்டுகள் சேனை, கொங்கனை, பால்சேனை, திராய்மடு, வாகனேரி, முறுத்தானை, தம்பானை, கொக்கட்டிச்சோலை எனப் பல இடங்களில் கலப்புறாமலும், கலப்புற்றும் காணப்படுகின்றனர்.
இலங்கை முழுவதும் பல சமூக கட்டமைப்புகளும் அவர்களுக்கென்று தனித்த கலாசாரம், சடங்குகள் மற்றும் நிகழ்த்துகலைகள் என்பன காணப்பட்டாலும், வேடர் சமூகத்தினரிடையே காணப்படும் நிகழ்த்து கலைகளான புலிக்கூத்து, கரடிக்கூத்து மற்றும் யானை கட்டுதல் ஆகியன சுயாதீனமானவையாகக் காணப்படுகின்றன. மேலும், இந்த நிகழ்த்துக் கலைகள் வேடர் இன மக்களின் தொன்மச் சின்னங்களை வருங்கால சந்ததியினருக்குப் பாதுகாத்துக் கடத்தும் உயிரோட்டமான ஊடகமாகவும் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் இந்நிகழ்வுகள் தொடர்பாக இன்றைய ஆய்வாளர்கள் சிலர் முன்வைக்கும் முரண்பட்ட கருத்துக்களையும், இனச்சிதைப்புக்களையும் தெளிவுபடுத்தும் நோக்கிலும், இவ்விடயங்களை ஆதாரத்துடன் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் இக்கட்டுரையானது வரையப்பட்டுள்ளது.
புலிக்கூத்து
கடலோர வேடுவர்களிடம் ‘மாறா’ எனும் வேட்டைத்தெய்வம் ஒன்று புழக்கத்தில் உண்டு. அது ஏழு வகைப்படும். வழமையாக இவர்கள் வேட்டைக்குச் செல்லும் போது குறித்த மாறாத்தெய்வத்தை வழிபட்டு, அதனிடம் அனுமதி பெற்றே செல்வர். ஒரு நாள் வேடுவரும், வேட்டுவிச்சியும் வேட்டையாடும் பொருட்டு அடர்ந்த வனப்பகுதிக்குச் செல்கின்றனர். அன்று வழமைக்கு மாறாக தமது வேட்டைத் தெய்வத்தை வழிபட மறந்து சென்று விடுகின்றனர்.
இருவரும் தமது கூட்டாளிகள் சகிதம் வேட்டையாடிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஒரு புலியிடம் சிக்கிக் கொள்கின்றனர். வேடுவன் தன்னால் முடிந்தளவு புலியிடம் சண்டையிட்டுப் பார்க்கின்றான். ஆனால் புலி அவனைக் கடித்து விடுகின்றது. உடனே அவன் மயக்கமுற்று விடுகின்றான். மயங்கிய தன் கணவனையும், ஏனையோரையும் புலியுடம் இருந்து பெரும் சிரத்தையுடன் வேட்டுவிச்சி காப்பாற்றி இருப்பிடம் கொண்டுவருகின்றாள்.
உடனே குழுத்தலைவருக்கு குறித்த சம்பவம் எடுத்துச் செல்லப்படுகின்றது. பின்னர் அவர்கள் விட்ட பிழையினை அறிந்து கொள்கின்றனர். இவ்வாறே புலிக்கூத்து எனும் ஆற்றுகையானது நன்றி மறவாது ஒருவர் நடந்து கொள்ள வேண்டியதன் தேவையினை உணர்த்தி நிற்பதாகக் காணப்படுகின்றது.
இதில் காட்டில் வேட்டைக்காகப் பயன்படுத்தப்படும் வில் மற்றும் அம்பு முதலானவையும், இலை குலைகள், இயற்கை வர்ணங்கள் மற்றும் ஏழு வகையான தாளங்கள் பறையில் வாசித்தல் முதலான ஆற்றுகை அம்சங்கள் காணப்படுகின்றன.
கரடிக்கூத்து
கரடிக்கூத்தானதும் கடலோர வேடுவர்களிடம் காணப்படும் புலிக்கூத்தினைப் போன்ற ஆற்றுகை அம்சங்களைக் கொண்டதான ஒரு நிகழ்த்து வடிவமாகும். இது வேட்டையாடுதலின் இன்னொரு பகுதியான தேனெடுத்தலுடன் தொடர்புடைய ஆற்றுகை வடிவமாகும். ஒரு வேட்டுவ குழு தேனெடுக்க வனத்திற்குச் செல்கின்றனர். அவர்களைப் போல கரடியும் தேன் குடிக்கச் செல்கின்றது. கரடியைப் பின் தொடர்ந்து சென்றால் தேன் இருக்கும் இடத்தினை இலகுவாக அடைந்து விட முடியும் எனும் தந்திரத்துடன் குறித்த கரடிக்குப் பின்னால் செல்கின்றனர்.
அவ்வாறு செல்லும் போது கரடி ஒரு மரப்பொந்தில் தேனை எடுத்து உண்கின்றது. அவ்வேளை குழுவில் இருந்த இளம் வேட்டைக்காரன் ஒருவன் தேனைக் கண்ட ஆவலினால் பொறுமையிழந்து ஓர் அரவத்தினை உண்டு பண்ணி விடுகின்றான். உடனே விழிப்படைந்த கரடியானது குழுவில் உள்ளவர்களைக் கடிக்கத் துரத்துகின்றது. பின்னர் ஒரு வழியாக தமது வேட்டைத்தெய்வமான மாறாவின் உதவியுடன் அவர்கள் தப்பித்து வீடு வந்து சேருகின்றனர். பொறுமையின் பலம், இயற்கை அனைத்து உயிர்களுக்குமானது எனும் வாழ்க்கை நெறியைக் கடத்துவதாக இவ்வாற்றுகையானது காணப்படும். இதிலும் ஏழுவகையான பறைத் தாளங்களே பாவிக்கப்படும்.
யானை கட்டுதல்
கடலோர வேடுவர்களிடம் வேட்டையாடுதலைத் தவிர்த்து சேனைப்பயிர்ச் செய்கைகளும் காணப்படுகின்றன. இன்றும் இவர்கள் வாழும் பெருவாரியான இடங்கள் சேனைப்பயிர்ச் செய்கைக்காக வெட்டப்பட்டு குடியேறிய இடங்களே ஆகும். அவ்வகையிலே யானை கட்டுதல் எனும் நிகழ்த்து வடிவமானது சேனைப்பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய ஆற்றுகை வடிவமாகும்.
வேடர் ஒருவர் சேனைப்பயிர்செய்கையின் பொருட்டு காடுகளை சீர்செய்யும் போதும், பயிர்களை விளைவித்த பின்பும் காட்டு யானைகளினால் உயிர் அச்சுறுத்தலுக்கும், விளை பயிர் அழிவால் நட்டத்துக்கும் உள்ளாகின்றனர். நீண்ட நாள் பிரயத்தனத்திற்குப் பின்னர் குறித்த யானையினை தம் வயப்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பிட்ட காலத்தின் பின்னர் யானைக்கு உதவியாக இவர்களும், இவர்களுக்கு உதவியாக யானையும் மாறி விடுகின்றன.
இவ்வாற்றுகையில் பறையுடன் சேர்த்து சங்கும் இசைக்கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இயற்கையை நேசிப்பதன் மூலமும், இயற்கை வழி வாழ்க்கை முறையின் மூலமும் இயற்கையை தன்வயப்படுத்தி எதுவித சங்கடமும் இல்லாமல் வாழ முடியும் எனும் என்பதற்கு இவ்வாற்றுகை சான்றாகும்.
மேலும், மேற்சொல்லப்பட்டதான நிகழ்த்து கலைகளின் மூலம், இன்றைய நவீன உலகம் தேடும் நல்வாழ்வின் அடிப்படையான தொன்மக் குறியீடுகள், இயற்கையை விரும்பும் பழக்கவழக்கங்கள், இயற்கை வழி வாழ்க்கை நெறிமுறைகள் போன்றவற்றை இன்றுவரை கடைப்பிடித்து வருவதை அறிய முடிந்தது.
இன்றைய ஆய்வாளர்களின் முரண்பட்ட ஆய்வு முடிவுகள்
இன்றைய கால கட்டத்தில் கடலோர வேடுவர்கள் சார்ந்து ஆய்வை மேற்கொள்ளும் பலர் மேலோட்டமான கருத்துக்களையும், தன்னிச்சையான முடிவுகளையுமே முன்வைக்கின்றனர். இவ்வாறான முடிவுகளை அம்பலப்படுத்துவதையும், அவற்றை ஆய்வுத் துறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும், காரண காரியமாக வெளிப்படுத்துவதையும் அறிந்து கொள்ள வேண்டிய தேவை தற்காலத்தில் நன்குணரப்பட்டுள்ளது.
மேற்சொல்லப்பட்ட ஆய்வாளர்களின் ஆய்வுச் செயல்பாடானது கடலோர வேடுவர்களின் கலை வடிவங்களை அவர்களிடமிருந்து பிரிக்கிறது. மேலும் அவர்களின் கலாசாரத் தொன்மங்கள் கருத்திற் கொள்ளப்படவில்லை. தமிழ் காலனித்துவமானது நிகழ்த்து கலை வடிவங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு சீர்குலைக்கப்படுகிறது. உதாரணமாக இன்றைய புலிக்கூத்து நிகழ்வு பற்றியதான ஒரு வேட்டுவ ஆற்றுகை நெறியாளரின் (கப்புறாளை) கருத்து இவ்வாறு அமைகின்றது.
“எங்கள் நடிப்பு அவர்கள் சொல்வது போல் இல்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் நம் முன்னோர்களின் வேட்டையாடலையும், இயற்கையான வாழ்க்கை முறையையும் தொடர்கிறோம். எங்கள் மொழி அவர்கள் பேசும் தமிழ் மொழி அல்ல. அவர்கள் பயன்படுத்தியதைப் போன்ற தாள அமைப்புகளோ பாடல் வடிவங்களோ எங்கள் புலிக்கூத்தில் இல்லை. இது முழுக்க முழுக்க ‘பறை’ இசை பயன்படுத்தப்படும் ஒரு கலை வடிவமாகவே காணப்படுகின்றது. இதுபோன்ற நிகழ்வுகளில் வேட்டையாடுவதற்கு உதவும் ‘மாறா’ (இதில் ஏழு வகை உண்டு) கடவுளை நினைவு கூர்கின்றோம். அந்த கடவுளுக்குப் பாடும் பறை இசையையே ஆற்றுகைக்கும் பயன்படுத்துவோம். இத்தகைய முறைகளில் புலிக்கூத்து, கரடிக் கூத்து, யானை கட்டுத்தல் போன்ற கலை வடிவங்கள் எங்களிடம் இருந்தன”
இவ்வாறு குறித்த கப்புறாலையின் கருத்தில் இருந்து பல உண்மைச் சிதைவுகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. அதாவது புலிக்கூத்தும் அதன் ஆற்றுகை அம்சங்களும் முற்றுமுழுதாக தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவத்திலேயே இன்றைய உலகிற்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. இங்குதான் நாம் தமிழ்க் காலனியத்தின் செல்வாக்கினைக் காணமுடியும். ‘தன தத்தோம் புலிக்கூத்து’ என்று சொல்லி மத்தளத்தில் தாளம் இசைகின்றனர். ஆரியக்கூத்துக்களில் பாவிக்கப்படும் வில்லம்புடன் ஆற்றுகையாளர்கள் தோன்றுகின்றனர். இங்குதான் வேடர்களின் மொழி, பண்பாடு என்பவற்றை தமிழ்க்காலனியம் உட்செரித்து விட்டதை நன்கு அவதானிக்க முடிகின்றது. இது இவ்வாறிருக்க கரடிக்கூத்து மற்றும் யானை கட்டுதல் முதலானவை கவனித்தில் கொள்ளப்படுவதே இல்லை.
ஆதிகாலத் தொன்மங்கள் மற்றும் குறியீடுகள் இன்று உலகம் முழுவதும் ஏதோ ஒரு வகையில் பரவி வருகின்றன. காலனித்துவ எதிர்ப்பு உரையாடல்கள் மற்றும் சமூக – கலாசார அரசியல் ஆய்வுகள் போன்றவை பழங்குடி மக்களின் கலை வெளிப்பாட்டை மக்கள் மத்தியில் பரப்புவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களும் கலை அமைப்புகளும் அதற்கேற்ப செயற்பட வேண்டும். ஆனால் நவீன கல்வியின் தாக்கம், காலனித்துவ சிந்தனை, மேலாதிக்க மனப்பான்மை மற்றும் பல காரணிகளும் கடலோர வேடர்களின் கலாசார சீரழிவுக்கு பங்களிப்புச் செய்வனவாகவே இன்றைய காலத்தில் காணப்படுவது பெரும் கவலைக்குரியதே.
தொடரும்.