மீட்பராக மருத்துவர் கிறீனது மீள்வருகை
Arts
7 நிமிட வாசிப்பு

மீட்பராக மருத்துவர் கிறீனது மீள்வருகை

February 13, 2023 | Ezhuna

ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. அவ்வாறு மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போதுவரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்து தருவதாக ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகின்றது.

மருத்துவர் கிறீனது 2 ஆவது வருகை

மருத்துவர் கிறீன் 1862 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் திகதி பிறதேசங்களுக்கு மிஷனரிகளை அனுப்பும் அமெரிக்க மிஷன் சங்கத்துக்கு (ABCFM) எழுதிய கடிதத்தில் தான் யாழ்ப்பாணம் புறப்படுவதற்குத் தயாராகி இருந்தமையைத் தெரிவித்திருந்தார். கப்பல் புறப்படுவதற்காக 5 மாதங்கள் வரை கிறீன் காத்திருக்க வேண்டியிருந்தது. நியூயோர்க்கிலிருந்த கிறீன், 82 வயதான தந்தையிடம் இறுதி பிரியாவிடை பெறுவதற்காக கிறீன் கில்லிற்குச் (Green Hill) சென்றிருந்தார்.

A-small-trading-brig-entering-the-Bristol-Avon-painted-by-Joseph-Walter

யாழ்ப்பாணம் புறப்பட 4 தினங்களுக்கு முன்னர் 1862. 05. 22 அன்று மருத்துவர் கிறீனுக்கும் திருவாட்டி மார்க்கிரட் பெல்ப்ஸ் உவில்லியம் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. போஸ்ரனிலிருந்து சமாதானத்தின் நட்சத்திரம்  (Star of Peace) என்ற கப்பலில் கிறீனும் அவரது பாரியாரும் 1862. 05. 26 அன்று யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டனர். நான்கரை மாதங்களாக தரையைக் காணாத நீண்ட கடற்பயணத்தில் பாரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி ஒக்ரோபர் மாதமளவில் சென்னையை அடைந்தனர். சில வாரங்கள் சென்னையிலிருந்து பின்னர் கிறீன் தம்பதியினர் இரட்டைப் பாய்மரக் கப்பலிற் (Brig) புறப்பட்டு 1862. 10. 19 அன்று உடுப்பிட்டியை அடைந்து மானிப்பாய்க்குச் சென்றனர்.

மானிப்பாயிலே அமெரிக்க மிஷனரிகளும் கிறீனுடைய தமிழ் நண்பர்களும் இணைந்து அமெரிக்காவிலிருந்து திரும்பிய கிறீனுக்கும் முதற்தடவையாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த கிறீனது பாரியார் மார்க்கிரட் பெல்ப்ஸ் உவில்லியம் அம்மையாருக்கும் மகத்தான வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்.

கிறீனுடைய மாணவன் மருத்துவர் மெக்கின்ரைய 1861 இல் ஆரம்பித்த மருத்துவ மாணவ அணியினர் மருத்துவர் கிறீனது மேற்பார்வையின் கீழ் வந்தனர்.

Hippocrates Refusing the Gifts of Artaxerxes

கிறீனது மூத்த சகோதரர் அன்ரூ கஸ்வெல் கிறீன் அவர்கள் நியூயோர்க் நகரிலே சட்டத்தரணியாகவும் நகர திட்டமிடல் அதிகாரியாகவும் கடமையாற்றினார்; பின்னர் இவர் நியூயோர்க் நகரின் தலைமைக் கணக்காளராகவும் (Comptroller) பணியாற்றினார். நியூயோர்க் நகரின் அடையாளச் சின்னங்களாக (Icons) விளங்கும் றிவர்சைட் ரைவ், மோர்ணிங் சைட் பார்க், மத்திய பூங்கா (சென்றல் பார்க்), அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (American Museum of Natural History), நியூயோர்க் பொது நூலகம் (New York Public Library) ஆகியவற்றின் உருவாக்கத்துக்கு பிரதான உந்து சக்தியாக இருந்தவர் கிறீனது சகோதரர் அன்ரூ கஸ்வெல் கிறீன் அவர்களே.

மானிப்பாயை வந்தடைந்த கிறீன் 1862 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தனது மூத்த சகோதரர் அன்ரூ அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் தனது பொறுப்பின் கீழ் வந்த புதிய மருத்துவ மாணவர் அணியைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“என்னுடைய மருத்துவ மாணவர்களுக்கான விரிவுரையைப் பற்றி தங்களுக்கு விளக்கம் தரவேண்டும். மருத்துவ விஞ்ஞானம் பயில்வதில் மிகுந்த ஆர்வமும் பற்றுறுதியும் மதிநுட்பமுள்ள 11 இளம் மாணவர்கள் என்னிடம் கற்பதற்கு வந்துள்ளார்கள். 2 தொடக்கம் 3 மணி நேரம் வரை நீண்டு செல்லும் விரிவுரையில் அவர்கள் என்னையே பார்த்தவாறு இருப்பர். என்னில் மிகுந்த நம்பிக்கை கொண்டு எனது செயல்முறை விளக்கங்களைப் பணிவாகக் கேட்பார்கள். பின்னர் டிஸ்பென்சரிக்குச் சென்று நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதைப் பார்வையிடுவார்கள்.”

1862 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க இலங்கை மிஷன் ஆண்டறிக்கை மருத்துவர் கிறீனது மீள்வருகையைப் பற்றி சிலாகித்துக் குறிப்பிட்டிருந்தது.

கிறீனது மீள்வருகையானது யாழ்ப்பாணத்திலே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்க மருத்துவர் – வெள்ளைக்கார பாதிரி மருத்துவர் – சுகப்படுத்துபவர் – கிறீன் யாழ்ப்பாணத்துக்கு மீளவும் வந்து விட்டார் என்ற செய்தி யாழ்ப்பாணம் எங்கும் பரவியதும் வீடுகளிலே துன்பப்பட்டு முடங்கியிருந்த நோயாளிகளும் நடமாடமுடியாத நிலையிலிருந்தவர்களும், அங்கவீனமடைந்தவர்களும் யாழ்ப்பாணத்தின் நாலா திக்குகளிலிருந்தும் கிறீனுக்கு முன் கொண்டு வரப்பட்டனர்.

ஈராயிரம் வருடங்களுக்கு முன்னர் இயேசு நாதர் ஒரு கிராமத்துக்கு வருகை தந்த செய்தி அறிந்து பல்வேறு பிணிகளால் துன்பப்பட்டோரும் அங்கவீனர்களும் அவரைத் தரிசித்தால் தமது துன்பம் போய்விடும் என்றும் அவரது ஆடையைத் தொட்டாலே தங்களது நோய் மாறிவிடும் என்றும் நம்பிக்கையோடு இயேசுவைக் காண மக்கள் முண்டியடித்து வந்தது போல் நோயினால் துன்பப்பட்ட யாழ்ப்பாண மக்கள் நம்பிக்கையோடு கிறீனுக்கு முன் கொண்டுவரப்பட்டனர்.

The-Hippocratic-Oath-is-an-oath-traditionally-taken-by-physicians-pertaining-to-the-ethical-practice-of-medicine

கிறீன் ஒரு மருத்துவராகவும் கிறித்துவ மறைபரப்பும் ஊழியராகவும் இருந்தபோதிலும் அவர் பிரார்த்தனையால் நோய் தீர்ப்பவரல்லர்; அவர் தகுதிவாய்ந்த மருத்துவர்; சத்திரசிகிச்சை நிபுணர்; நன்கு பயிற்சிபெற்று விஞ்ஞான மருத்துவ அறிவை தனது வாழ்விலே பின்பற்றியவர்; அன்று அமெரிக்கப் பல்கலைக்கழங்களிலே நடைமுறையிலிருந்த இருந்த பாடத்திட்டத்தை ஒத்த பாடத்திட்டத்தைப் பின்பற்றி மானிப்பாய் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கு முறைப்படி மேலைத்தேச மருத்துவத்தைப் போதித்து யாழ்ப்பாணத்திலே மருத்துவர்களை உருவாக்கியவர்; மருத்துவத்துறையின் தந்தை என்று போற்றப்படும் ஹிப்போகிரட்டீஸின் உறுதிமொழிப்படி மருத்துவம் பார்த்தவர்.

கிறீன் யாழ்ப்பாணம் வந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் மேலைத்தேச மருத்துவ விஞ்ஞான அறிவு மக்களிடையே பரவலடையவில்லை; நோய் தொடர்பில் அறியாமையும் தவறான நம்பிக்கைகளும் இறை அச்சமும் மிகுந்திருந்தது. யாழ்ப்பாணம் வருகைதந்த 3 ஆவது மிஷனரி மருத்துவரான கிறீன் அவர்கள் 4 வருட ஓய்வின் பின்னர் 2 ஆவது தடவையாக யாழ்ப்பாணம் வருகைதந்த போது அவரிடம் சிகிச்சை பெற வந்த மக்கள் கூட்டம் கிறீனையும் ஒரு தேவதூதராக, நோயிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் மீட்பராகக் கண்டனர்.

கிறீன் யாழ்ப்பாணம் வருகை தந்து 2 மாதங்கள் கழிந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் 9 தினங்கள் தொடர்ச்சியாக மழை பெய்தது. இப்பெரு மழையால் 1862 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி காலைவேளையில் கிறீன் தங்கியிருந்த வீட்டின் கூரை முறிந்து விழுந்தது. இந்த அசம்பாவிதத்தின் போது கிறீனும் அவரது மனைவியும் மயிரிழையில் உயிர்தப்பினர். பெறுமதி வாய்ந்த பொருட்கள் சேதமடைந்தன. தற்காலிகமாகத் தமது இருப்பிடத்தை மாற்றினர். வீட்டை மீளமைப்பதற்கு கிறீனுக்கு 3 மாதங்கள் எடுத்தது.

ஆபத்துக்கு உதவி வைத்தியசாலையின் (FINS Hospital) அத்தியட்சகராகக் கடமையேற்ற கிறீன்

யாழ். அரசாங்க அதிபராக இருந்த சேர் பேர்சிவல் அக்லண்ட் டைக் அவர்கள் யாழ். நகரத்திலிருந்த ஆபத்துக்குதவிச் சங்கத்தின் வைத்தியசாலையையும் மருந்துச்சாலையையும் பொறுப்பேற்குமாறு மருத்துவர் கிறீனிடம் கேட்டிருந்தார். 1863 ஆம் ஆண்டு இரு பிரதான காரணங்களுக்காக இப்பொறுப்பை மருத்துவர் கிறீன் ஏற்றுக்கொண்டார். முதலாவதாகக் கிடைக்கும் மேலதிக வருவாயின் மூலம் மருத்துவ நூல்களை மொழிபெயர்ப்பதற்கும் அவற்றை அச்சிடுவதற்கும் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வது, அடுத்தது தனது மாணவர்கள் பல்வேறு விதமான நோயாளிகளையும் பார்வையிடுவதன் மூலம் பரந்த அறிவைப் பெறுவார்கள் என்று கிறீன் கருதியிருந்தமை. மருத்துவர் கிறீன் வாரத்தில் 2 தினங்கள் ஆபத்துக்கு உதவி வைத்தியசாலையில் கடமையாற்றுவதற்காக வருடத்துக்கு 50 ஸ்ரேலிங் பவுண் நிதியை அமெரிக்க இலங்கை மிசனுக்கு வழங்குவதற்கும் மானிப்பாயிலிருந்து 5 மைல் தொலைவிலுள்ள யாழ்ப்பாணத்துக்கு கிறீனது போக்குவரத்துச் செலவுக்காக மேலதிகமாக 25 ஸ்ரேலிங் பவுண் நிதியை வருடாந்தம் வழங்குவதற்கும் அரசாங்கம் உடன்பட்டிருந்தது. ஆரம்பத்தில் 3 மாதங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மருத்துவர் கிறீன் 5 வருடங்கள் இப்பதவியில் தொடர்ந்தார். இங்கு தனது மாணவர்களுக்கு உடற்கூற்றியல் பாட செய்முறைப் பயிற்சியின் போது உடல் அறுவைப் பகுப்பாய்வுக்கு போதிய வசதி கிடைத்ததையிட்டு கிறீன் மகிழ்ச்சியடைந்தார். 1863 ஆம் ஆண்டு ஆபத்துக்குதவி வைத்தியசாலையில் 8630 பேருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது.

1863 காலப்பகுதியில் மானிப்பாய் மருத்துவமனை மருத்துவர் மெக்கின்ரைய அவர்களது பொறுப்பில் இயங்கியது. இவருக்கு 3 மருத்துவ மாணவர்கள் உதவியாக இருந்தனர். 1863 இல் மானிப்பாய் மருத்துவமனையில் 1217 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

1863 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் திகதி கிறீனது நாட்குறிப்பில் சங்குசேகரிப்போர் இருவர் சுறாவினால் தாக்கப்பட்டு பாரிய காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காகக் காலையில் ஆபத்துக்குதவி வைத்தியசாலைக்கு வந்திருந்தமையை மருத்துவர் இடன்போர்த் அனுப்பிய தகவலிலிருந்து பதிவிட்டிருந்தார்.

தொடரும்.


7254 பார்வைகள்

About the Author

பாலசுப்ரமணியம் துவாரகன்

பாலசுப்ரமணியம் துவாரகன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். 2005 - 2008 காலப்பகுதியில் சுகாதார அமைச்சில் கடமையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் ஆளுமைகளை நேர்காணல் செய்து கனடாவிலிருந்து வெளிவரும் 'வைகறை' வாரப்பத்திரிகையிலும் 'காலம்' சஞ்சிகையிலும் பிரசுரித்துள்ளார். கலாநிதி. சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலரின் பதிப்பாசிரியர்.

கடந்த 14 வருடங்களாக யாழ். போதனா மருத்துவமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் துவாரகன் 2018 இல் யாழ். போதனா மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மேலைத்தேச மருத்துவ வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார். இவர் மருத்துவ அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பு அலுவலராக விளங்குவதுடன் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களது வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் தனித்துவமான மருத்துவ அருங்காட்சியகம் உருவாகக் காரணமானவர். இங்குள்ள தொலைமருத்துவப் பிரிவில் பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள் வாரந்தோறும் கலந்துகொள்ளும் இணையவழி தொலைமருத்துவக் கருத்தமர்வுகளின் இணைப்பாளராகவும் செயற்படுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)