ஆங்கில மூலம் : ரஞ்சித் அமரசிங்க
பண்பாட்டு அடையாளம் பற்றிய பிரச்சினையும் அதிகாரப் பகிர்வும்
அதிகாரப் பகிர்வு பற்றிய புதுமைகளை வெளிப்படுத்தியதாக ஸ்பெயினின் அரசியல் யாப்பு அமைந்தது. அரசியல் யாப்பினை வரைந்தவர்கள் விட்டுக்கொடுப்போடும் இணக்கபாட்டுடனும் நடந்து கொண்டனர். புதிய ஜனநாயக அரசியலுக்கு வழிசமைத்த இவ்வரசியல் யாப்பு நடைமுறை உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. ஸ்பானிய அரசு ஜனநாயக அரசாக மாற்றம் பெற்றது. அந்நாட்டின் பிராந்தியங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த வரலாற்றுத் திருப்பத்துக்கு காரணமாக மூன்று இயக்கங்கள் இருந்தன. அவையாவன :
அ.) அரசு அதிகாரம் மத்தியப்படுத்த வேண்டும் என்ற இயக்கம்
ஆ.) தேசியவாத இயக்கம்
இ.) பிரிவினைவாத இயக்கம்
முதலாவதான அரச அதிகாரம் மத்தியப்படுத்தப்பட்டிருத்தல் ஓர் நல்ல விடயம் என்ற கருத்து இருந்து வந்தது.இலங்கையிலும் அதிகாரப் பகிர்வு தொடர்பான விவாதத்தின் போது இவ்வாறே பலர் கருத்துத் தெரிவித்தார்கள். அதிகாரம் பரவலாக்கப்படுவதற்கு எதிரான கருத்து இலங்கையிலும், ஸ்பெயின் நாட்டிலும் நீண்ட காலமாக இருந்து வந்தது. அரச அதிகாரத்தை மத்தியப்படுத்தி வைக்க வெண்டும் என்ற இந்தக் கருத்து ஸ்பெயின் நாட்டின் சர்வாதிகார ஆட்சியின் ஒரு மரபாக இருந்தது. புரட்சிக்குப் பிந்திய பிரான்ஸ் நாட்டில் அதிகாரத்தை மத்திய நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற கருத்துத் தோன்றியது. இது அயல் நாடான ஸ்பெயினிலும் வேரூன்றியது.
அதிகாரத்தை பரவலாக்கல் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போதெல்லாம் அரசியல் வாதிகளும் அரச அதிகாரிகளும் அதனைப் புறக்கணித்தல் வழமையாக இருந்தது. ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் உருசிகண்டவர்கள். சுயாட்சி பற்றிய கோரிக்கைகள் பிராந்தியங்களில் இருந்து எழுந்தபோது அதனை அவமதிக்கும் முறையில் நடந்து கொண்டனர். தலைநகர் மட்ரிட்டில் அதிகாரத்தில் இருந்த கஸ்-ரீலியன் உயர்குழாம் (Castilian elite) பிராந்தியங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதை எதிர்த்தது. அதன் நோக்கில் அவ்வாறு அதிகாரத்தை வழங்குவதால் பிரிவினைவாதப் போக்கு அதிகரிக்கும் எனக் கருதப்பட்டது. 1978 இன் அரசியல் யாப்பை வரைந்தோர் இப்படியான மத்தியப்படுத்தல் சார்பான சிந்தனைகளை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. அரசியல் யாப்பை வரைந்த குழுவில் வலதுசாரிகள், சோஷலிஸ்டுகள், லிபரல் ஜனநாயக வாதிகள் என்ற மூன்று வகையினரின் பிரதிநிதிகள் பங்கு கொண்டனர். தீவிர தேசியவாதம் நாட்டின் பிரிவினைக்கு வழிசமைத்துவிடும் பிராந்தியங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து கொடுத்தால் தீவிர தேசிய வாதங்களை கட்டுப்படுத்தலாம். நாடு எதிர்நோக்கும் ஆபத்தை தடுக்கலாம். என்றவாறு வலதுசாரிகளை உணரச்செய்வது சாத்தியமாயிற்று. பிரிவினைவாதத் தேசியவாதம் நாட்டில் உறுதிநிலையைக் குலைத்துள்ளது: ஜனநாயகப் பாதையில் செல்வதற்குத் தடையாக உள்ளது. என்றவாறான வாதத்தை வலதுசாரிகள் முன்வைப்பதால் அரசியல் தீர்வு அடையமுடியாத இலக்காகியது. இக் காரணத்தால் பிரிவினைக்கு பதிலாக நியாயமான அளவு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க கூடிய அரசியல் தீர்வுக்கு இணங்க வேண்டும் என்பதை தீவிர தேசியவாதிகளை ஏற்றுக்கொள்ள வைத்தது. ஸ்பெயின் ஐக்கியப்பட்ட ஒரே நாடு; ஸ்பானியாவின் அரசுதான் முதன்மை உடையது;. பிராந்திய அரசுகளை விட ஸ்பெயினின் மத்திய அரசே மேன்மை உடையது என்ற எண்ணங்களுக்கு அரசியல் யாப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இது மத்தியப்படுத்தலுக்கு ஆதரவானோரைத் திருப்திப்படுத்த உதவியது. இவ்வகையில் ஸ்பானியாவின் 1978 அரசியல் யாப்பு மாதிரி பல தரப்பினரையும் சமரசம் செய்து வைக்க உதவியது.
அரசியல் யாப்பை ஒற்றையாட்சி என்றோ சமஷ்டி ஆட்சி என்றோ வகைப்படுத்தி கூற முடியவில்லை. பெயரளவில் சமஷ்டி ஆட்சி முறை என்று கொள்ளப்படுகின்ற அரசியல் யாப்புக்களை விட இவ் அரசியல் யாப்பு கூடிய அளவு பொறுப்புக்களை பகிர்ந்தளித்துள்ளது. முன்னையவற்றை விட பல மடங்கு முன்னேற்றமானது என சில புலமையாளர்கள் பாராட்டியுள்ளனர். ஸ்பானிய இராச்சியம் பல தேசிய இனங்களை உள்ளடக்கியதாய் இருந்தது. அவை சுயாட்சி கோரி நீண்ட காலமாக அழுத்தம் கொடுத்தபடி இருந்து வந்தன. 1978 அரசியல் யாப்பு வழங்கிய அதிகார பகிர்வு தேசிய இனங்களின் நீண்ட கால முனைவின் பயனாகும். நவீன காலத்தில் பிராந்தியவாதமும் தேசியவாதமும் மக்கள் இயக்கங்களாக வளர்ச்சி பெற்றன. இவ் வளர்ச்சியை விளங்கிக் கொள்வதற்கு நாம் 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் ஸ்பானிய இராச்சியத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை ஆராய்தல் வேண்டும். அதிகாரங்களை மத்தியில் குவிக்கும் போக்கு 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி தொடக்கம் ஸ்பானிய அரசியல் நிறுவன அமைப்பின் முக்கிய இயல்பாக இருந்து வந்தது. இப் பின்னணியில் 1978 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு யாப்பு ஸ்பானியாவின் நவீன வரலாற்றில் ஓர் திருப்புமுனையாகும். அந்நாட்டில் ஒன்றோடொன்று போட்டியிடும் பல அடையாளங்கள் இருந்து வந்தன. அவ் அடையாளங்கள் ஸ்பெயினின் வரலாற்றில் கால் கொண்டிருந்தன. பல வகையான சமூக பொருளாதார, இனத்துவ நிறுவன காரணிகள் இவ் அடையாள உணர்வுகளை பலப்படுத்தி இருந்தன. கடந்த காலத்திலும், அண்மை காலத்திலும் ஆட்சியாளர்கள் நாட்டிற்குப் பொதுவான ஸ்பானிய அடையாளத்தை உருவாக்க முயன்றனர். ஆயினும் ஸ்பெயின் நாட்டின் புறநிலைமைகள் யாவரையும் உள்ளடக்கிய பொதுவான ஸ்பானிய அடையாளத்தை உருவாக்குவதற்கு இடம் தரவில்லை. இப்போது உருவாக்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு முறையானது ஸ்பானியாவின் தேசிய இனங்களினதும் பிராந்தியங்களினதும் சமஷ்டிக்கான அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவில்லை. ஆகையால் அது ஸ்பானிய தேசியவாதத்தைப் பலமிழக்கச் செய்யும் என்று அண்மையில் ஓர் ஆய்வு குறிப்பிட்டது. அரசாங்கங்களின் செயற்பாடுகளில் குறையும், நிர்வாகத் திறமையின்மையும், அரசியல் முரண்பாடுகள் வேகமாக அதிகரித்தலும், சமநிலையற்ற பொருளாதார வளர்ச்சியும் ஐக்கிய ஸ்பானிய தேசிய அடையாளத்தைக் கட்டியெழுப்ப உதவவில்லை என்றும் ஆய்வு குறிப்பிட்டது.
1873 இல் ஸ்பானியா முதலாவது குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்ட போது அதனை சமஷ்டிக் குடியரசு என அறிவிக்கப்பட்டது. குடியரசுவாதிகளிடம் பிராந்தியங்களுக்கான அதிகாரம் என்னும் விடயம் தீவிரமாக பரிசீலனைக்கு உட்படுத்திய முதலாவது சந்தர்ப்பமாக அது அமைந்தது. சுயாட்சி அபிலாசைகளைக் கொண்டிருந்த பிராந்தியவாதிகளுக்கு ஊக்கம் தரும் விடயமாகவும் அவ் அறிவிப்பு விளங்கியது. 1873 குடியரசு அரசியல் யாப்பின்படி 17 உறுப்புரிமை அரசுகள் சமஷ்டியில் உள்ளடங்கியிருந்தன. அவை ஒவ்வொன்றிற்கும் தனியான யாப்பு, தனியான பாராளுமன்றம், தனியான நிர்வாக நீதி அதிகாரங்கள் என்பன அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தன. இச் சமஸ்டியில் கடல் கடந்த பிரதேசங்களான கியூபா புவட்டொரிக்கோ என்பனவற்றையும் சமஷ்டியில் உள்ளடக்கும் நோக்கம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயினும் இவற்றை உறுப்பு அரசுகளாக ஆக்கும் நோக்கம் நடைமுறையில் சாத்தியமாகவில்லை. குடியரசு தலைவர்கள் சமஸ்டி முறையையோ அதிகாரப் பகிர்வையோ செயற்படுத்தத் தவறினர். அடுத்த வருடம் குடியரசு மீண்டும் முடியாட்சியாக மாற்றப்பட்டது. அக்காலத்தில் சமஷ்டி குடியரசு என்ற தொடரின் பிரயோகம் மறைமுகமாக ஜனநாயகத்திற்கும் அதிகாரப் பரவலாக்கத்திற்கும் உள்ள தொடர்பைக் குறிப்பதாக இருந்தது. 1978இன் அரசியல் யாப்பிலும் ஜனநாயகம், அதிகாரப்பரவலாக்கம் என்ற இரண்டும் வெளிப்பட்டுள்ளன. 1873 இல் சமஷ்டி என்ற சொல் பிரயோகிக்கப்பட்ட பின்னர் உள்ள காலப் பகுதியில் பஸ்க், கற்ற லோனியா, ஹலிசியா ஆகிய மூன்று பகுதிகளிலும் தேசியவாத உணர்ச்சி வளர்ச்சி பெற்றிருந்தது. இவ்வினத்தவர்களின் இலக்கியங்கள், வரலாற்றை மீள் விளக்கம் செய்யும் எழுத்துக்கள் என்பனவற்றின் மூலம் பண்பாட்டு இயக்கம் ஒன்றும் வளர்ச்சி பெற்றது. இவை மூன்றும் வரலாற்றுத் தேசிய இனங்கள் (Historic Nationalities) என்னும் அதிகாரப் பகிர்வுக்கு ஏற்றவை என்றும் கருதும் நிலை தோன்றியது. வடக்கு அமெரிக்காவிலும் தெற்கு அமெரிக்காவிலும் இருந்த தனது காலனிகளைப் பாதுகாக்கும் போரில் ஸ்பானிய சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சியுற்றது. இவ்வீழ்ச்சி ஸ்பானிய அரசின் வலிமையை பாதித்தது. இப்பின்னனியில் அந்நாட்டின் பிராந்தியங்களில் தேசியவாதம் எழுச்சி பெற்றது. தேசியவாதக் கட்சிகளும் ஸ்பானிய இராச்சியத்திற்குள் வளர்ச்சி பெற்றன. 1931இல் இரண்டாவது குடியரசு தோன்றிய போது அதன் யாப்பில் சமஷ்டி பற்றி வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் பிராந்தியங்களின் குடியரசுவாதிகள் சுயாட்சிக்கான நியதி சட்டங்களை (Statutes) இயற்றினர். இந்நிலையில் ஸ்பானிய பாராளுமன்றம் கற்றலோனியா விற்கு சுயாட்சியை வழங்கும் நியதிச் சட்டத்தை அங்கீகரித்தது. குடியரசு பெயரளவில் 1939 வரை நீடித்திருந்தது. ஆனால் ஸ்பானியாவில் உள்நாட்டு போர் ஆரம்பித்ததால் கற்றலோனியாவில் கூட சுயாட்சியைச் செயற்படுத்தல் சாத்தியமற்றதாகியது.
ஸ்பானிய தேசிய அரசின் (Nation State) பொறுமையை அறைகூவல் விடுக்கும் முறையில் பிராந்திய அடையாளங்கள் அடிப்படையிலான இயக்கங்கள் பல தோன்றின. இவையாவற்றுள்ளும் பஸ்க் பகுதி கற்றலோனியா ஹலிசியா என்பனவற்றில் தோன்றிய இயக்கங்கள் மிக முக்கியமானவை. ஸ்பானியாவின் பெரும்பான்மையினரான கஸ்-ரீலியன் மொழிப் பேசுவோரில் இருந்து தம்மை வேறுபடுத்தும் இயல்புகள் கொண்டனவாய் இவ் மூன்று பிராந்தியங்களும் விளங்கின. இவற்றிற்கு சுயாட்சிக்குரிய நீண்ட வரலாறு இருந்தது. இவை தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களையும் மரபு வழி நிறுவன அமைப்புக்களையும் கொண்டிருந்தன. இவற்றின் பிராந்திய மொழிகள் ஸ்பானியாவின் பெரும்பான்மையினரில் இருந்து இவற்றை வேறுபடுத்தி காட்ட உதவின. இன்று இவ் வேறுபாடுகள் தாம் ஸ்பெயினின் அதிகார பகிர்வின் அவசியத்திற்கான நியாயங்களாக அமைகின்றன. ஆதலால் இவ் வேற்றுமை களினதும் தேசிய வாதத்தினதும் வரலாற்றுப் பின்னணியை விளக்குதல் அவசியம். பஸ்க் தேசியவாதிகளும் ழூழூ கற்றலன் தேசியவாதிகளும் ஸ்பானியாவின் வரலாற்றில் ஜனநாயகம் அதிகாரப் பரவலாக்கம் என்ற இரண்டினதும் தேவையை உணர்த்தும் வகையில் மிக அண்மை காலம் வரை பலமான இயக்கத்தை முன்னெடுத்தனர். நவீன ஸ்பானியாவின் அரசியல் யாப்பில் அடிப்படைகளை உருவாக்கியதில் இத் தேசியவாதிகளின் வகிப்பாக முக்கியமானது.
பஸ்க் நாட்டின் கிராமப்புறங்களின் பிரபுக்களும் மத போதகர்களும் தேசியவாத உணர்வுகளை வளர்ப்பதில் பெரும்பங்காற்றினர். இப் பிரபுக்களும் போதகர்களும் மரபு வழிபட்ட சமய உயர்குழாம் ஆவர். இவர்களை விட வேறொரு உயர்குழாம் ஆகிய நகர்ப்புற உயர்குழாமும் இருந்தது. நகர்ப்புற உயர்குழாமில் வர்த்தக முதலாளிகளும் கைத்தொழில் முதலாளிகளும் இருந்தனர். பஸ்க் நாட்டின் இரும்பு உருக்கு கைத்தொழில் வளர்ச்சி கைத்தொழில் மயமாதல் நகரமயமாக்கம் என்பவற்றின் பாதகமான விளைவுகளால் கிராமப்புற உயர்குழாம் அதிருப்பதி அடைந்திருந்தது. ஆனால் நகர்ப்புற உயர்குழாம் தேசியவாத உணர்வு அற்றதாய் மட்ரிட் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தது. அத்தோடு அடையாளம் சார்ந்த பிராந்திய நலன்களைக் கவனத்தில் கொள்ளாது ஸ்பானிய அரசு செயற்பட்டது. அரசுக் கட்டமைப்பை மாற்றுவதற்கு முயற்சி செய்தது. இதனால் மரபு வழி உயர்குழாம் அரசின் மீது வெறுப்படைந்தது. ஸ்பானிய அரசு துசியக் கல்விக் கொள்கையை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்தியது. இக் கல்விக் கொள்கையில் கஸ்-ரீலிய வரலாறு, கஸ்-ரீலிய மொழி என்பனவற்றிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இதனை பஸ்க் தேசியவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமது மொழிகளையும், மரபு வழிக் கல்வி முறையையும் போற்றி வளர்ப்பதில் விருப்பம் கொண்டிருந்த கற்றலன், ஹலிசியா மக்களும் தேசியக் கல்விக் கொள்கையால் அதிருப்தி அடைந்தனர்.
கற்றலோனியாவில் சுதேசிய பண்பாட்டியக்கம் எழுச்சி பெற்றது. அம்மக்கள் பிராந்திய மொழியான கற்றலன் மொழியை உபயோகிப்பதை விரும்பினர். கற்றலன் மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்பதும் கற்றலின் பகுதிக்கு சுயாட்சியை வழங்க வேண்டுவதென்பதும். அவர்களின் பிரதான கோரிக்கைகள் ஆகும். இத்தேசியவாதத்தின் நீண்ட வரலாறு 1873 ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு காலத்திலிருந்து ஆரம்பமானது. அவ்வேளை சமஸ்டி அரசியல் முறையை நிறுவ தவறியமை இத் தேசியவாதம் வளரத் தூண்டுதல் ஆயிற்று. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசியல் பொருளாதார முன்னேற்றங்கள் கற்றலன் பண்பாட்டின் செழிப்பான வளர்ச்சிக்கு உதவின. கவிதையும் ஓவியமும் பண்பாட்டுத் துறை வளர்ச்சியினை முன்னெடுத்துச் சென்ற முக்கிய துறைகளாகும். இலத்தின் மொழியின் இடத்தைக் கற்றலன் பிடித்துக் கொண்டது. அம்மொழி பண்பாட்டு ஊடகமாகவும் அப்பகுதியின் அரசாங்க நிர்வாக மொழியாகவும் உயர்வு பெற்றது. 19 ஆம் நூற்றாண்டின் முடிவில் ஸ்பானியாவில் முதன் முதலில் கற்றலோனியாவில் தான் நவீன அரசியல் கட்சி ஒன்று தோன்றியது. பின்னர் இக்கட்சி கற்றலோனியாவின் பிற அரசியல் இயக்கங்களுடன் கூட்டுச் சேர்ந்து பிராந்திய மட்டத் தேர்தல்களில் வெற்றியீட்டியது. ஸ்பானியா உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நெருக்கடிகளை எதிர் நோக்கிய வேளை கற்றலன் பகுதியில் ஏற்பட்ட கைத்தொழில் வர்த்தக வளர்ச்சி அந்நெருக்கடிகளை முகம் கொடுக்க உதவியது. கைத்தொழில் வர்த்தக வளர்ச்சியின் ஊடாக எழுச்சி பெற்ற மத்தியதர வகுப்பு கற்றலோனிய அடையாளத்தை வலியுறுத்துவதன் தேவையை உணர்ந்தது. 1909 இல் கற்றலோனியாவின் கிளர்ச்சியை அரசு இராணுவ பலத்தால் அடக்கியது. இம் மக்கள் கிளர்ச்சியின் கசப்பான நினைவுகள் மத்திய அரசின் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கியது. நாட்டில் ஓரினத்தன்மையான பண்பாட்டை வளர்க்கும் அரசின் திட்டம் கற்றலன் மொழியையும், பண்பாட்டையும் சீரழிக்கும் என கற்றலன் மக்கள் கருதினர். ஆயினும் அவர்கள் பிரிவினையைக் கோரவில்லை. ஸ்பெயின் நாட்டிற்குள் அதிகார பரவலாக்க முறையொன்றின் கீழ் தமக்கு நிர்வாகத்தில் பங்கையும் தேசிய அரசியலில் பங்கேற்புக்கான வழிகளும் இருத்தல் வேண்டும் என அவர்கள் விரும்பினர். முன்னர் குறிப்பிட்டது போல் இரண்டாம் குடியரசு 1931 ஆம் ஆண்டில் பிராந்திய சுயாட்சியை ஏற்றது. கற்றலோனியா மட்டுமே ஸ்பெயினால் சுயாட்சியை பெற்ற ஒரே ஒரு பிராந்தியமாக இருந்தது. உள்நாட்டுக்கு யுத்தம் தொடங்கியதும் பிராங்கோவின் சர்வாதிகார ஆட்சி தொடர்ந்ததும் சுயாட்சிக்கான நம்பிக்கைகள் யாவற்றையும் சிதறடித்தன.
தேசியவாத உணர்வு பலமிக்கதாக இருந்த இன்னொரு பிராந்தியம் ஹலிசியா ஆகும். அப்பகுதி மக்கள் சுயாட்சியைக் கோரினர். அக்கோரிக்கைக்குப் பலமான ஆதரவு அங்கு இருந்தது. ஹலிசியாவில் விவசாயமும் மீன்பிடியும் பிரதான தொழில்களாக இருந்தன. ஸ்பானியாவின் கைத்தொழில் பிரதேசங்களுக்கு ஹலிசியா மூலப் பொருட்களை வழங்கி வந்தது. பஸ்க் தேசம் கற்றலோனியா என்பனவற்றோடு ஒப்பிடும்போது ஹலிசியா கைத்தொழில் வளர்ச்சியிலும், நகரமயமாக்கத்திலும் பின்தங்கியதாய் இருந்தது. ஹலிசியாவின் தேசியவாத இயக்கத்திற்கு அப்பகுதியின் புத்திஜீவிகளும் குட்டி முதலாளி வகுப்பினரும் தலைமை தாங்கினர். ஸ்பானியா அரசின் கீழ் தாம் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை அவர்கள் உணர்ந்தனர். மொழிச் சகோதரத்துவம் என்ற ஹலிசிய மக்கள் அமைப்பு இறுதியில் வீரியமிக்க தேசியவாத இயக்கமாக உருமாற்றம் பெற்றது. பஸ்க் தேசத்திலும் கற்றலோனியாவிலும் போன்றே ஹலிசியாவிலும் ஸ்பானிய அரசின் பண்பாட்டு ஓரினமயப்படுத்தும் கொள்கைகள் தேசியவாதத்தை தூண்டி வளர்த்தன. அரசாங்கம் கஸ்-ரீலின் மொழியை தேசிய மொழியாக ஆக்கியதோடு கல்வித்துறையில் ஹலிசிய மொழியின் உபயோகத்தை ஒழித்தது. ஹலிசிய மொழி நாட்டுப்புற விவசாயிகளின் மொழி என தரம் தாழ்த்தப்பட்டது. நாடு நவீனமயமாவதற்கான இலக்குகளை அடைவதற்கு ஹலிசிய மொழி பயன்படாது என அரசாங்கம் கருதியது. இரண்டாவது குடியரசு ஹலிசிய மக்களின் சுயாட்சிக் கோரிக்கைக்கு அங்கீகாரம் அளித்திருந்தது. ஆயினும் ஸ்பானியாவில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பமானதன் காரணமாக பஸ்க், கற்றலின் ஆகிய பகுதிகளின் சுயாட்சி முடக்கப்பட்டது. இதேபோல் ஹலிசியாவிலும் சுயாட்சி செயற்பாடற்றதாகியது. இரண்டாம் குடியரசினால் ஏற்கப்பட்ட சுயாட்சி நடைமுறை பயனற்றது என்பது உண்மையே. ஆயினும் ஸ்பானியாவில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மத்தியப்படுத்தும் கொள்கைகளை கடைபிடித்து வந்ததால் ஏற்பட்ட திரிபுகளை சீர் செய்து தேசியவாத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை இரண்டாவது குடியரசு ஏற்றிருந்தது. வரலாற்றுத் தேசிய இனங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் குறியீடாக இரண்டாவது குடியரசு அமைந்தது. பஸ்க், கற்றலின், ஹலிசியா ஆகிய மூன்று பிராந்தியங்களிலும் சுயாட்சிக் கோரிக்கைகள் வலுப்பெற்று இருந்த காலத்தில், உருவாக்கப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு இப் பிராந்தியங்களுக்கு அரசியல் யாப்பு அங்கீகாரத்தை வழங்கும் தேவையும் இருந்தது. உள்நாட்டுப் போரில் வலதுசாரி சக்திகள் வெற்றி பெற்றன. பிராங்கோவின் சர்வாதிகார ஆட்சி ஸ்பெயினில் நிலை பெற்றது. இதனால் தேசிய இனங்களின் சுயாட்சி அபிலாசைகள் சிதறடிக்கப்பட்டன. லூலிஸ் மொரினா (Luis Moreno) குறிப்பிட்டது போல் இனத்துவ பண்பாட்டுப் பன்மைத்துவத்தை பிராந்திய நிலையில் அழிப்பதற்கு அரசு தீவிரமாக முயற்சித்தது. இதற்கு பண்பாட்டுத் தரப்படுத்தல் ஒரு கருவியாகக் கையாளப்பட்டது. பிராங்கோவின் ஆட்சியின் உத்தியோகக் கொள்கையான பாசிச கருத்தியல் (Fascist Ideology) ஸ்பானியாவை கடவுளின் சாம்ராஜ்யம் என உயர்த்திப் பேசியது. இந்தக் கருத்தியலுக்கு அதிகாரப்பகிர்வு முறை ஒவ்வாத ஒன்றாக விளங்கியது. பிராங்கோவிற்கு சுயாட்சி என்றால் தனது அதிகாரத்திற்கு அச்சுறுத்தும் விடயம் ஆகியது. அவரது ஆட்சியில் சுயாட்சிக்கான எந்த ஒரு முனைப்பும் பிரிவினைவாதம் எனக் கருதப்படலாயிற்று. தன்னை அதிகாரத்தில் இருத்தியமை தாய் நாட்டின் புனிதமான ஒற்றுமையின் அடித்தளத்தை இட்டுள்ளது என்ற கருத்தை பிராங்கோ பிரகடனம் செய்தார். பிராந்தியவாதம் இந்த ஒற்றுமையைக் குலைத்துவிடும், நாட்டை இந்த ஆபத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என அவர் கருதினார். ஸ்பானியாவின் தேசிய இனங்களின் உள்ளார்ந்த பண்பாட்டு விழுமியங்களிற்குத் தீங்கிழைக்கும் வகையிலான தேசிய ஐக்கியம் என்ற கருத்து ஒரு இறுக்கமான தீவிரக் கொள்கையாக மாறியது என்று மொரினோ கூறி இருப்பது பொருத்த முடையது.
தேசிய ஐக்கியத்தை கட்டி எழுப்புதல் என்ற பெயரில் பிராங்கோ நடைமுறைப்படுத்திய மாதிரி ஸ்பானியாவின் சிறுபான்மையினரையும் பிராந்திய தேசியங்களையும் அடக்கி ஒடுக்குவதாகவே அமைந்தது. கஸ்-ரீலியன் ஸ்பானிய மொழியல்வாத பிற மொழிகளில் நூல்கள், பத்திரிகைகள் வெளியிடுவதை பிராங்கோ ஆட்சி தடை செய்தது. சுயாட்சியை இலட்சியமாகக் கொண்ட நிறுவனங்களும் தடை செய்யப்பட்டன. பிராங்கோவின் ஐக்கியத்தை கட்டி எழுப்பும் கொள்கையின் முக்கிய அம்சங்களாக இவை அமைந்தன. கற்றலன் பஸ்க் ஹலிசியன் முதலிய சிறுபான்மை மொழிகளின் உபயோகம் தடை செய்யப்பட்டது. அவை புறக்கணிப்புக்குள்ளாகின. பிராந்தியங்களின் நிர்வாகமும் மத்தியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பிராந்தியங்களின் மொழிகள் பண்பாட்டு மரபுகள் என்பவற்றையும் சுயாட்சி நிறுவனங்களையும் ஏனைய இனத்துவ அடையாளங்களையும் பிராங்கோ ஆட்சி திட்டமிட்டு அழித்து வந்தது. இதனால் பிராந்தியவாதிகள் சுயாட்சி என்னும் தமது இலக்கை அடைவதற்கான உறுதியுடன் தளராது போராடினர். கஸ்-ரீலியன் அல்லாத பண்பாடுகளை அழிப்பதில் பிராங்கோவின் கொள்கைகள் வெளிப்படுத்திய தீவிரம் எதிர்பாராத எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது. முன்னர் சுயாட்சியில் விருப்பம் அற்றனவாக இருந்த பிரதேசங்களிலும் சுயாட்சிக்கான உணர்வுகள் கிளர்ந்தன. உதாரணமாக 1970களில் முற்பகுதியில் கனறி மற்றும் பலேரிக் தீவுகளிலும் (Canary and Balearic Islands) அஸ்ரூரியா (Asturias) எகஸ்ரிமதுரா ((Extremadura) போன்ற இடங்களிலும் சுயாட்சிக்கு தீவிர முனைவுகள் எதனையும் காண முடியவில்லை. ஆயினும் பிற்காலத்தில் இப் பகுதிகளில் இருந்தும் சுயாட்சிக்கான கோரிகைகள் எழுந்தன. அரசியல் யாப்பு தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டதும் பஸ்க் பகுதி கற்றலோனியா ஹலிசியா என்ற மூன்று வரலாற்றுத் தேசிய இனங்களும் சுயாட்சிச் சமூகங்களாக தம்மை ஆக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளை ஆர்வத்துடன் முன்னெடுத்தன. 1983 ஆம் ஆண்டளவில் சுயாட்சிக்கு தகுதியுடையன எனக் கருதப்பட்ட சமூகங்களும் பிராந்தியங்களும் தமக்குரிய நியதிச் சட்டத்தை தயாரித்தளித்தன. இதன் பயனாக தீவிரமான அளவுக்கு மத்தியபடுத்தலை கொண்டிருந்த ஸ்பானியா மிக விரிந்த அளவிலான அதிகாரங்கள் பிராந்திய மட்டத்தில் பகிர்ந்தளிக்கப்பட்ட ஒரு நாடாக மாறியது. மொத்தம் 19 சுயாட்சி அலகுகள் உருவாகின. இவற்றுள் மொராக்கோவின் வட கடற்கரையோத்தில் அமைந்துள்ள இரண்டு சுயாட்சி நகரங்களும் அடங்கும்.
புதிய அரசியல் யாப்பின் படி முன்னர் தீவிரமான அளவில் மத்திய படுத்தப்பட்ட ஆட்சி முறையைக் கொண்டிருந்த ஸ்பானியா மிக விரிந்த அளவில் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்ட ஆட்சி அமைப்புடைய நாடாக மாற்றமுற்றது. ஸ்பானியாவின் நவீன வரலாற்றில் இதுவோர் திருப்புமுனையாகும். ஸ்பானியா பண்பாட்டுப் பன்மைத்துவம் உடைய நாடு என்ற யதார்த்த உண்மை அதன் அரசியல் யாப்பில் பிரதிபலிக்கப்பட்டது. இதற்கு முன்னர் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் முக்கியமாக பாசிச பிராங்கோவின் ஆட்சியினால் மிருகத்தனமான முறையில் சுயாட்சிக்கான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு மக்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டது. சுயாட்சிக்கான உரிமை மறுக்கப்பட்டதோடு பிராந்தியங்களின் பண்பாட்டு அடையாளங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளும் உத்தியோக ரீதியாக மேற்கொள்ளப்பட்டன. நாடு தழுவிய கஸ்-ரீலிய ஸ்பானியா அடையாளத்தை உருவாக்குவதே அரசின் திட்டமாக இருந்தது. இதன் விளைவாக இனத்துவ அடிப்படையில் எதிர்ப்புக்கள் கிளர்ந்தன. இடதுசாரிகள், பஸ்க் தேசியவாதிகள் வன்முறையான பிரிவினைவாத கிளர்ச்சியில் இறங்கினர். இவற்றை சாட்டாக வைத்து ஆட்சியாளர்கள் முழு நாட்டிற்குமே ஜனநாயக உரிமைகளை மறுத்தனர். ஸ்பானியாவில் ஜனநாயகம் தோன்றிய போது 1978 அரசியல் யாப்பின் கீழ் அதிகார பகிர்வும் இணைந்து கொண்டது. ஸ்பானியாவின் வெவ்வேறு சமூகங்களின் வரலாறும் வளர்ச்சியும் பண்பாட்டு உணர்வுகளும் வேறுபட்டனவாக இருந்தன. இந்த வேறுபாடுகளை கருத்தில் கொண்டு சுயாட்சி அலகுகளுக்கு இடையில் அதிகார பகிர்வில் வேறுபாடுகள் இருந்தன. அசமத்துவமான அதிகார பகிர்வு ஏற்றதொரு முறையாக அமைந்தது.
தொடரும்.