1882 : மானிப்பாய் மருத்துவக் கல்லூரியின் இறுதி நாள்கள்
Arts
10 நிமிட வாசிப்பு

1882 : மானிப்பாய் மருத்துவக் கல்லூரியின் இறுதி நாள்கள்

September 1, 2023 | Ezhuna

ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. அவ்வாறு மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போதுவரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்து தருவதாக ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகின்றது.

அமெரிக்க இலங்கை மிசனரியினர் (ACM) 1879 ஆம் ஆண்டின் காலாண்டுக் கூட்டத்தொடர் ஒன்றில் மானிப்பாய் மருத்துவக் கல்லூரி தொடர்பில் சில தீர்மானங்களை மேற்கொண்டனர். அதிலே மருத்துவக் கல்லூரிக்கு ஒரு வகுப்பில் ஆகக் கூடுதலாக 15 மாணவர்களையே அனுமதிப்பதென்றும் ஒவ்வொரு மாணவரிடமும் மாதாந்தம் 3 ரூபாவை பள்ளிக் கட்டணமாக அறவிடுவதென்றும் தீர்மானித்தனர்.

இதற்கமைய ஒவ்வொரு மாணவரும் வகுப்பில் அனுமதிக்கப்படும் போது முற்பணமாக 25 ரூபாவை கட்டணமாகச் செலுத்துமாறு கேட்கப்பட்டனர்.  இந்நிபந்தனைகளுக்கு அமைவாக கிறீனது மருத்துவக் கல்லூரியின் 11 ஆவது அணியில் பயில்வதற்கு 15 பேர் உள்வாங்கப்பட்டனர். இவர்களே அமெரிக்க மிசனரி மருத்துவர் கிறீன் ஆரம்பித்த மானிப்பாய் மருத்துவக் கல்லூரியில் பயின்ற கடைசி மாணவர் அணியினர். மருத்துவர் சி.ரி. மில்ஸ், மருத்துவர் உவில்லியம் தில்லையம்பலம் போல் மற்றும் மருத்துவர் கிளைவ்ஸ் ஆகியோர் இம் மாணவர்களுக்கு மருத்துவம் கற்பித்தனர். இவர்கள் அனைவரும் தமிழர்களே.

1881 ஆம் ஆண்டு சனவரி மாதம் லீச் சகோதரிகள் என்று அழைக்கப்படும் மேரி லீச் மற்றும் மாக்கிறெட் லீச் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க இலங்கை மிசனுக்காகப் பணியாற்ற வந்தனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் 7 ஆண்டுகள் பணியாற்றினர். இவர்கள் வடபகுதி மருத்துவத்துறைக்கு ஆற்றியபணி அளவிடற்கரியது. சகோதரிகள் இருவரும் இங்கிலாந்து, ஸ்கொட்லாண்ட், மற்றும் அமெரிக்காவில் மிகப்பெரியளவில் நிதி திரட்டினர். இந்நிதியின் மூலம் மானிப்பாய் மருத்துவமனையின் விரிவாக்கத்துக்கும் இணுவிலில் அமைந்துள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான மக்லியோட் மருத்துவமனையை நிறுவுவதற்கும் இம் மருத்துவமனைகளில் மருத்துவ மிசனரிகளைக் கடமையில் ஈடுபடுத்தவும் இவர்கள் காரண கர்த்தாக்களாக விளங்கினர்.  

1882 ஆண்டு கிறீன் உருவாக்கிய மானிப்பாய் மருத்துவக் கல்லூரியில் பயின்ற 11 ஆவது அணியினர் தமது மருத்துவக் கல்வியை நிறைவு செய்தனர். இவர்கள் தமிழ்மொழி மூலம் மருத்துவம் பயின்ற 6 ஆவது அணியினர்.  

1882 ஆண்டு ஒக்ரோபர் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க இலங்கை மிசனது காலாண்டுக் கூட்டத்தின் அறிக்கையில் பிரித்தானிய அரசாங்கம் அனுப்பிய கடிதம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கடிதத்திலே அமெரிக்க மிசனரிகளின் மானிப்பாய் மருத்துவக் கல்லூரிக்கு பிரித்தானிய அரசாங்கம் ஆண்டுதோறும் வழங்கிவந்த நிதியை 1000 ரூபாவால் குறைக்கும் முடிவை எடுத்திருப்பதையும் அதன்பின்னர் 1883 முதல் இந்நிதியை முற்றாக நிறுத்தும் முடிவை அறிவித்திருப்பதையும் அறிக்கையில் தெரிவித்தனர். மேலும் இந்தக் கூட்டத்திலே மானிப்பாய் மருத்துவக் கல்லூரியை நடத்துவதற்கு அமெரிக்காவிலிருந்து மருத்துவர் ஒருவரை அழைக்க இலங்கை அமெரிக்க மிசன் எடுக்கும் முயற்சியை கைவிடுவதென்றும் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புக்களை 1882 ஆம் ஆண்டுடன் நிறுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. 1882 ஆண்டு நவம்பர் ஓராம் திகதியுடன் மருத்துவர் மில்ஸ் அவர்களது சேவையும் நிறுத்தப்பட்டது.

அமெரிக்க இலங்கை மிசனது 1882 ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கையில் இதுவரையான காலப்பகுதியில் மானிப்பாய் மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவர்களானவர்களைப் பற்றிய புள்ளிவிவரம் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் மிசனரிகள் ஆரம்பித்த ஒரு துறையானது முடிவுக்கு வந்தமை பற்றிய கவலையும் வெளிப்படுத்தப்பட்டது.

1848 ஆம் ஆண்டு மருத்துவர் கிறீன் ஆரம்பித்த மானிப்பாய் மருத்துவக் கல்லூரியில் 1882 ஆம் ஆண்டு கற்பித்தல் நிறுத்தப்படும் வரையான காலப்பகுதியில் மொத்தமாக 113 பேர் மருத்துவம் பயின்று மருத்துவர்காக அங்கீகாரம்(பட்டம்) பெற்றிருந்தனர். மானிப்பாய் மருத்துவக் கல்லூரி மூடப்பட்டு ஏறத்தாழ 100 வருடங்களுக்குப் பின்னரே 1978 இல் யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவ  பீடம் ஆரம்பிக்கப்பட்டது.

old green hospital

அமெரிக்காவுக்குச் சென்ற மருத்துவர் கிறீன்  மீள இலங்கை வரமாட்டார் என்பதை நன்கு அறிந்த கொண்ட  இலங்கை(பிரித்தானிய) அரசாங்கம் மருத்துவக் கல்லூரிக்கு ஆண்டு தோறும் வழங்கிவந்த நிதியை பாதியாகக் குறைக்கத் தீர்மானித்ததுடன் பின்னர் அதனை முற்றாக நிறுத்துவதென்றும் முடிவு செய்தமை மருத்துவக் கல்லூரி மூடப்படுகின்றமைக்கு பிரதான காரணமாக அமைந்தது.

1873 இல் மருத்துவர் கிறீன் அமெரிக்கா திரும்பிய பின்னர் போஸ்ரனிலுள்ள பிறதேசங்களுக்கு மிசனரிகளை அனுப்பும் அமெரிக்க மிசன் சங்கமானது மருத்துவ மிசனரிகளை யாழ்பாணத்துக்கு அனுப்ப ஆர்வம் காண்பிக்கவில்லை. மருத்துவர் கிறீனது கிறிஸ்தவ ஊழியத்தில் அவர்கள் திருப்தியின்மையைக் கொண்டிருந்தமை காரணமாக இருக்கலாம். கிறீன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஆரம்பநாள்களில் கிறிஸ்தவ மறையைப் பரப்புவதில் ஆர்வம் கொண்டிருந்தாலும் பின்னாளில் அவர் மேலைத்தேச மருத்துவத்தை பரப்புவதிலும் தமது மக்களிடையே பணிபுரியும் தமிழர்களை மேலைத்தேச மருத்துவர்களாக பயிற்றுவிப்பதிலுமே தனது வாழ்வை அர்ப்பணித்திருந்தார். கிறீன் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவுக்குச் சென்ற பின்னரும் மானிப்பாயில் தமிழில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்காக ஆங்கிலத்தில் வெளியான பிரபல்யமான மருத்துவ நூல்கள், மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதிலும் யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பப்படும் மொழிபெயர்ப்பைச் செவ்வை பார்ப்பதிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார்.

இக்காலப் பகுதியில் அமெரிக்காவிலிருந்து மருத்துவர் ஒருவர் யாழ்ப்பாணம் சென்று மருத்துவக் கல்லூரியைப் பொறுப்பேற்காவிடில் அதனை மூடவேண்டிய நிலை ஏற்படலாம் என்ற உணர்வு கிறீனுக்கு ஏற்பட்டிருந்தது! எனவே இதற்கு மாற்றீடாக அக்காலத்தில் மீளவும் புத்துயிர் பெற்றுவந்த யாழ்ப்பாணக் கல்லூரியை பல்கலைக்கழகக் கல்லூரியாக்கத் தரமுயர்த்துவதன் மூலம் யாழ்ப்பாணக் கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பைத் தொடர்வது குறித்து கிறீன் தீவிரமாகச் சிந்தித்து வந்தார். இவ்விடயம் குறித்து அமெரிக்க மிசனரிகளுக்கு தொடர்ச்சியாகக் கடிதம் எழுதினார்; ஆலோசனைகளையும் வழங்கி வந்தார். மேலும் கிறீனது சகோதரியும் தந்தையார் நினைவாக 1000 அமெரிக்க டொலரை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் மருத்துவப் பேராசிரியருக்குரிய பதவிநிலையை உருவாக்குவதற்காக வழங்கியிருந்தமை நினைவு கூரத்தக்கது. கிறீனுக்கு நோயினால் ஏற்பட்ட ஆரோக்கியக் குறைவு அவரை செயலற்றவராக்கியது. அன்றேல் யாழ்ப்பாணத்தில் – வட்டுக்கோட்டையில் மருத்துவக் கல்வியைப் புத்துயிர் பெறச்செய்வதற்காக உண்மையான கிறிஸ்தவனான வாழ்ந்த கிறீன் எந்தநிலைக்கும் சென்றிருப்பார்!

மானிப்பாய் மருத்துவக் கல்லூரியும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியும்

ida shopia (3)

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் என்ற இடத்தில் அமெரிக்க மிசனரி மருத்துவர் சாமுவேல் பிஸ்க் கிறீன் அவர்கள் 1848 இல் ஒரு டிஸ்பென்சரியையும் பின்னர் மருத்துவக் கல்லூரியையும் ஆரம்பித்தது போல் தமிழ்நாட்டில் வேலூரில் வண. மருத்துவர் ஜோன் ஸ்கடர் அவர்களின் பேர்த்தி ஐடா சோபியா ஸ்கடர் அம்மையார் அவர்கள் 1900 இல் ஒரே ஒரு படுக்கையுடன் மிசன் பங்களாவில் ஒரு மருத்துவமனையை நிறுவினார். இதன் விரிவாக்கமாக 1909 இல் பெண்களுக்கான முறைப்படியான தாதியப் பயிற்சி நெறியையும் 1918 இல் பெண்களுக்கான மருத்துவப் பட்டம் வழங்கும் ஆசியாவின் முதல் மருத்துவக் கல்லூரியையும் ஆரம்பித்தார்.

இன்று இந்தியாவில் முதல் தரமான மருத்துவக் கல்வியை வழங்கும் கல்விச்சாலைகளில் ஒன்றாக, 6 வளாகங்களைக் கொண்ட பல்கலைக்கழகமாகவும் சர்வதேச புகழ்பெற்ற மருத்துவமனையாகவும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமாகவும் ஐடா ஸ்கடர் அம்மையார் நிறுவிய வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி விளங்குகிறது. (ஐடா ஸ்கடரது மருத்துவப் பணி பற்றி இந்தத் தொடரின் ஆரம்பத்தில் இரு அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன.)

எப்.ஆர்.சி.எஸ் (FRCS) பட்டம் பெற்ற முதல் இலங்கையர் : மருத்துவர் சாமுவேல் செல்லையா போல்

Samuel Chelliah Paul

மருத்துவர் உவில்லியம் தில்லையம்பலம் போல் (Dr. William Thillaiampalam Paul) அவர்களின் மகன் மருத்துவர் சாமுவேல் செல்லையா போல் அவர்களே இங்கிலாந்து நாட்டின் அரசர்க்குரிய சத்திரசிகிச்சைக் கல்லூரியில் (FRCS) அங்கத்துவம் பெற்ற முதலாவது இலங்கையர் ஆவர். மருத்துவர் சாமுவேல் போல் 1901 ஆம் ஆண்டு இந்த சிறப்புரிமையப் பெற்றார்.

Milroy Aserappa Paul

மருத்துவர் சாமுவேல் செல்லையா போல் அவர்களின் மகன் பேராசிரியர் மருத்துவர் மில்ரோய் ஆசிரப்பா போல் (Milroy Aserappa Paul) அவர்களே கொழும்பு மருத்துவப் பீடத்தின் சத்திரசிகிச்சைப் பிரிவின் முதல் பேராசிரியராக விளங்கியவர். மில்ரோய் போல் கொழும்பு மருத்துவப் பீடத்தின் சத்திரசிகிச்சைப் பிரிவின் சிற்பி அல்லது ஞானத்தந்தை என்று போற்றப்படுகின்றார். இங்கிலாந்தின் அரசர்க்குரிய சத்திரசிகிச்சைக் கல்லூரியில் (Royal College of Surgeons) சத்திர சிகிச்சை மருத்துவத் துறை முன்னோடி ஜோன் ஹன்ரர் நினைவாக 1813 முதல் வருடந்தோறும் பேருரைகள் நிகழ்கின்றன. மருத்துவர் மில்ரோய் போல் அவர்களே இங்கு பேருரையாற்ற (Hunterian Oration) அழைக்கப்பட்ட முதல் இலங்கையர் ஆவர். மில்ரோய்  போல், மூன்று தடவைகள் ஹன்ரேரியன் விரிவுரையாற்ற அழைக்கப்பட்டவர் என்ற சிறப்புக்குரியவர்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6604 பார்வைகள்

About the Author

பாலசுப்ரமணியம் துவாரகன்

பாலசுப்ரமணியம் துவாரகன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். 2005 - 2008 காலப்பகுதியில் சுகாதார அமைச்சில் கடமையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் ஆளுமைகளை நேர்காணல் செய்து கனடாவிலிருந்து வெளிவரும் 'வைகறை' வாரப்பத்திரிகையிலும் 'காலம்' சஞ்சிகையிலும் பிரசுரித்துள்ளார். கலாநிதி. சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலரின் பதிப்பாசிரியர்.

கடந்த 14 வருடங்களாக யாழ். போதனா மருத்துவமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் துவாரகன் 2018 இல் யாழ். போதனா மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மேலைத்தேச மருத்துவ வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார். இவர் மருத்துவ அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பு அலுவலராக விளங்குவதுடன் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களது வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் தனித்துவமான மருத்துவ அருங்காட்சியகம் உருவாகக் காரணமானவர். இங்குள்ள தொலைமருத்துவப் பிரிவில் பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள் வாரந்தோறும் கலந்துகொள்ளும் இணையவழி தொலைமருத்துவக் கருத்தமர்வுகளின் இணைப்பாளராகவும் செயற்படுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)