கருத்துச் சுதந்திரம் என்பது எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களைப் பிறர் கூறுவதற்கான சுதந்திரம் மட்டுமல்ல எம்மால் சகித்துக் கொள்ளவே முடியாத கருத்துக்களைப் பிறர் கூறுவதற்கான சுதந்திரமும் கூட என்பார் ஜோன் ஸ்ருவர்ட் மில்.
ஆனால் இலங்கையின் கடந்த இரண்டு தசாப்தகால வரலாறும் இதற்கு எதிர்மாறானதாக இருந்தது. உன்னுடைய கருத்துடன் எனக்கு உடன்பாடில்லையாயினும் எனது உயிரைக் கொடுத்தாவது உனது கருத்துச் சுதந்திரத்தைக் காப்பேன் என்பதாக அல்லாமல் உயிரை எடுத்தாவது எனதல்லாத எந்தக் கருத்தையும் அனுமதியேன் என்றாகி விட்டது.
விளைவு தமிழ்நெற் ஆசிரியர் டி.சிவராம், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, நமது ஈழநாடு முகாமைத்துவப் பணிப்பாளர் சிவமகாராஜா உட்பட முப்பதுக்கு மேற்பட்ட ஊடகத்துறை சார்ந்தோர் கொன்றொழிக்கப்பட்டார்கள். நமது ஈழநாடு, மௌபிம, சண்டே ஸ்ரான்டட் ஆகிய பத்திரிகைகள் இழுத்து மூடப்பட்டன. சண்டே லீடர், உதயன், எம்ரிவி போன்ற ஊடக நிறுவனங்கள் தாக்குதலுக்குள்ளாகின. உதயன் ஆசிரியர் குகநாதன், நேசன் ஆசிரியர் லலித் அழகக்கோன் ஊடகச் செயற்பாட்டாளர் போத்தல ஜயந்த என்று பலர் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளானார்கள். ஊடகவியலாளரான இராமச்சந்திரனிலிருந்து ஊடகவியலாளரும் கேலிச்சித்திரக் கலைஞருமான பிரகீத் ஹெக்னேலியகொட வரை பலர் கடத்தப்பட்டுக் காணாமல் போனார்கள.; முதன்முதலாகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நோர்த் ஈஸ்ரன் மாதசஞ்சிகையின் ஆசிரியர் இரண்டு கட்டுரைகளை எழுதிய குற்றத்திற்காக இருபது ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்.
இந்த நிலைமைகள் இலங்கையின் ஊடக சுதந்திரத்தை கடும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியது. ஊடகத்தொழிற்துறை ஆபத்துமிக்க ஒரு தொழிற்துறையாகியது. உயிரச்சம் காரணமாகப் பலர் நாட்டைவிட்டு வெளியேற நேரிட்டது. பெரும் எண்ணிக்கையிலான தமிழ் ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி போருக்கு எதிராக இருந்த சிங்கள ஊடகவியலாளர்களும்; நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. அவ்வாறு உயிரச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய சிங்கள் ஊடகவியலாளர்களுள் ஒருவர் தான் சுனந்த தேசப்பிரிய.
சுனந்த தேசப்பிரிய இலங்கையின் தென்கரையோரப் பிரதேசமான அம்பலாங்கொடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1971ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கு எதிராக சிங்கள இளைஞர்கள் மேற்கொண்ட ஆயுதக்கிளர்ச்சியில் ஈடுபட்டவர். அதன் காரணமாக ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் கழித்தவர்.
1990ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யுக்திய என்கிற வாராந்தப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் ஆசிரியராக மட்டுமன்றி ஒரு செயற்பாட்டாளராகவும் இருந்தார். இலங்கையின் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவராக இருந்ததோடு, அதுகாலவரை தனித்தனியாக இயங்கி வந்த ஊடக சுதந்திரத்திற்கான அமைப்புக்களை இணைத்து பலமான ஒரு வலையமைப்பை உருவாக்கியவர். இலங்கை ஊடகவியல் கல்லூரி, இலங்கைப் பத்திரிகைப் பேரவை, ஊடகவியலாளர்களுக்கான ஓழுக்கக் கோவை என்பவற்றை உருவாக்குவதிலும் அவருடைய முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது.
இத்தொகுப்பு சுனந்த தேசப்பிரிய அவ்வப்போது எழுதி வந்த பத்திகளின் தொகுப்பு. அண்மைக்கால இலங்கையின் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான நெருக்கடிகளின் ஒரு குறுக்குவெட்டுப்பார்வை இது என்றால் மிகையில்லை.
இப்பத்திகளில் அவர் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை. அவை கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பதனையும் தாண்டி ஜனநாயக விழுமியங்களின் வீழ்ச்சி குறித்தும் அறச்சாய்வு குறித்தும் கேள்வி எழுப்புபவை. போர்க்காலத்தில் ஊடகங்கள் கட்டியெழுப்பிய போலியான தேசப்பற்றுக் குறித்து விமர்சனங்களை முன்வைப்பவை. அதேவேளை ஊடகத்துறையினரின் செயற்பாடுகள் குறித்த மீள்பார்வையையும் சுயவிமர்சனத்தையும் கோருபவை.
திஸ்ஸநாயகம் குறித்து அவர் எழுதிய பத்தியை இவ்வாறு நிறைவு செய்கிறார்: ‘திஸ்ஸநாயகத்தின் வழக்கினைப் பற்றி வாயைத் திறந்து எதனையும் நேரடியாகப் பேச முடியாதிருந்ததற்கான காரணம் என்ன? சிறைக்கு அனுப்பப்பட்டிருந்த எமது சக நண்பர் அமைதியாக்கப்பட்டதன் சூழ்ச்சியை மறக்குமளவிற்கு சுய தணிக்கை எம்மிடையே இருந்தது ஏன்? இவ் ஒடுக்குமுறை செயற்பாடுகளுடன் நாம் இணங்கிச் சென்றதே இதற்கான காரணமா? இல்லையெனில், அச்சமா? இவற்றில் நாம் எந்த விடயத்துடன் சேர்க்கப்படுவோம் என்பதை மனச்சாட்சியிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
இது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் திஸ்ஸநாயகம் கைது செய்யப்பட்ட போது சிங்கள ஊடகத்துறை கடைப்பிடித்த கடும் மௌனம் குறித்த கேள்வியை எழுப்புகிறது. அதுவும் சிங்கள ஊடகத்துறையின் முற்போக்கான சக்திகள் எனக்கருதப்பட்டோர் மட்டுமல்ல, மனித உரிமையாளர்கள், இடதுசாரிகள் எனப் பலரும் கடும் மௌனம் காத்தனர். அது குறித்த இந்தச் சுய விசாரணை மிக முக்கியமானது.
இவ்வாறான சுயவிசாரணையை தமிழ் ஊடகத்துறையினரும் மேற்கொண்டாக வேண்டும் என்பதனை இவ்விடத்தில் குறித்துக் காட்டியாதல் வேண்டும்.
இதேபோல் அறச்சாய்வு குறித்து அவர் ஒரு பத்தியில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘வீதியின் அனைத்து சந்திகளிலும் முச்சக்கர வண்டி சங்கத்தினரும் காவல்துறையினரும் இணைந்து புத்த சிலைகளை நிறுவினர். காலையிலும், மாலையிலும் உபதேசங்கள் ஆரம்பிக்கப்பட்டன. வைத்தியசாலை, பாடசாலை என அனைத்துப் பொது இடங்களிலும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது படங்களோடு புத்த பகவானின் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. புத்த தர்மம் அரசியல்வாதிகளினால் ஆட்டுவிக்கப்படும் சக்தியாக மாற்றப்பட்டது. அரசியல் மேவிய புத்த தர்மத்தின் மூலம், சிறந்த குணவியல்புகள் எதனையும் கொண்ட சமூகமாக எமது சமுகம் மாற்றப்படவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.’
இது பௌத்தம் அரசியல் சாயம் பூசப்பட்ட பௌத்தமாக, கருணையையும் அன்பையும் போதித்த பௌத்தம் போருக்கு ஆசி வழங்கும் பௌத்தமாக ஆள்வோரின் நலனைப் பேணும் ஒரு மதமாக அறச்சாய்வு கொண்டதை சுட்டிக்காட்டுகிறது.
போரின் போது ஆட்சியாளரின் நலன்களைப் பேணும் வகையில் ஊடகங்கள் எவ்வாறு கையாளப்பட்டன என அவர் இவ்வாறு விபரிக்கிறார், ‘ அரசாங்கத்தின் போர்ப் பிரச்சாரத்தினை உண்மையென ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஊடகங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. பகிரங்கமாகவும், இரகசியமாகவும், வார்த்தைகளாலும், கொலைகள் ஊடாகவும் அது நடைமுறைப்படுத்தப்பட்டது. யுத்தத்தைத் தவிர வேறு தீர்வுகள் இல்லை என்றும் யுத்தம் பரிசுத்தமான முறையில் முன்னெடுக்கப்பட்டதென சமூகத்திற்கு போலி முகம் காட்டவுமே ஊடக ஒடுக்குமுறை முன்னெடுக்கப்பட்டது. யுத்தத்திற்கு எவராயினும் எதிர்ப்புத் தெரிவித்தால், அது தேச மற்றும் அரச துரோகங்களாகக் கணிக்கப்பட்டது. கருத்து சுதந்திரம் கொலை செய்யப்பட்டது. ஊடக ஒடுக்குமுறைக்கான காரணம், யுத்தத்திற்கு விரோதமான ஊடகப் பாவனையென காரணம் கூறப்பட்டது. விசேடமாக யுத்த காலத்தில் அரசாங்கத்தை விமர்சிக்கக் கூடாது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தை விமர்சிக்கும்போது, அரசாங்கம் பலமிழந்து யுத்தத்தில் அது பலவீனப்பட வாய்ப்பிருக்கிறது என்ற கருத்தையே இத்தர்க்கங்கள் பிரதிபலிக்கின்றன.’
ஊடகங்கள் அவற்றின் செயற்பாடுகள் குறித்த நூல்கள் தமிழில் மிகக்குறைவு என்றே சொல்லலாம். அத்தகைய ஒரு சூழலில் சுனந்த தேசப்பிரியவின் இந்த நூல் தமிழில் வெளிவருவது அவசியம் என்று எழுநா கருதுகிறது. பத்திரிகைக்காக எழுதிய பத்திகள் என்பதால் தொடர்ச்சியின்மையையும் கூறியது கூறலையும் வாசகர்கள் உணரக்கூடும் என்றாலும் அதற்குமப்பால் அவர் சொல்ல முனைகிற விடயங்கள் முக்கியமானவை. கருத்தாடலைத் தூண்டக்கூடியவை. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பற்றிப் பேசுவோர் அக்கறைப்பட வேண்டியவை என்றும் எழுநா எண்ணுகிறது.
Read Less