இலங்கை நாட்டில் சுமார் இருநூறு வருடங்களாக வசித்து வரும் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள் தம்மை ‘இந்திய தமிழர்கள்’ என்று அழைத்துக் கொள்ள வேண்டுமா, அல்லது ‘மலையகத் தமிழர்கள்’ என்று இனம் காண வேண்டுமா என்ற விவாதம் நீண்ட காலமாகவே இம்மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த மக்கள் மத்தியில், இந்தியாவில் ஒருகாலும் இலங்கையில் ஒரு காலும் வைத்துக்கொண்டு, சில சொச்ச நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அடிக்கடி இந்தியாவுக்குச் சென்று, தம் உறவுகளை புதுப்பித்துக் கொண்டு, இந்திய உறவுகளைப் பேணி வரும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையைக் கொண்ட மேட்டுக்குடி மக்கள் மாத்திரமே, தம்மை இந்தியராக அடையாளப்படுத்துவதன் வழியே, தாம் இந்த நாட்டுக்கு அந்நியர்கள் என்ற மனோபாவத்தை சுமந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் இந்த ஒட்டுமொத்த மலையகச் சமூகத்தினதும் எதிர்கால நலனை அவர்கள் கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறார்கள் என்பதுடன் இந்த மக்களைத் தொடர்ந்தும் தேசிய நீரோட்டத்தில் கலந்து விடாமல் இருப்பதற்காக பெரும் தடையாகவும் இருந்து வருகிறார்கள்.
மறுபுறத்தில், இந்த நாட்டில் வடக்கு-கிழக்கு பிரதேசத்தில் வாழ்கின்ற இலங்கைத் தமிழ் மக்கள், தமிழ் மொழியைப் பேசுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மலையக மக்களும் தமிழ் சமூகமே என்று ஏற்றுக்கொண்ட போதும், அவர்கள் ஒருபோதும் இந்தச் சமூகத்தினரை தமக்குச் சமமான சமூகமாகக் கருதியதில்லை. அதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது இந்த மக்கள் முற்றிலும் ஒரு தொழிலாளர் படையைச் சேர்ந்த வர்க்கத்தினராக இருந்ததும், தங்களுடைய மேட்டுக்குடிச் சாதி அமைப்புகளுடன் பொருந்தாதவர்களாக இருந்ததும் ஆகும். அத்துடன் இந்த நாட்டின் பாரம்பரியக் குடிகள் என்றும் அவர்கள் தம்மை பெருமையுடன் கூறிக்கொண்டனர். மேலும் இந்த இரண்டு சமூக இனக்குழுவினரும் பலவிதங்களில் வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் கொண்டிருந்தனர். இவர்களுக்கிடையில் கலை, கலாசார, சமூக, பொருளாதார, மொழி, பேச்சுவழக்கு, எதிர் நோக்கிய அரசியல் பிரச்சனைகள் என்பவற்றிலும் பாரிய வேறுபாடுகள் காணப்பட்டன. இதன் காரணமாக ‘இலங்கையின் தமிழர்கள்’ என்ற பொது எண்ணக் கோட்பாட்டுக்குள் இன்னொரு ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, இரண்டாந்தரச் சமூகமாக இவர்கள் இதுவரை காலம் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அந்த எண்ணக் கோட்பாடு அண்மைக் காலமாக மாறி வந்ததுடன் அவர்கள் தம்மை சகல அம்சங்களிலும் பூரணமான ஒரு தனியான தேசிய இனமாக இந்த நாட்டுக்குள் உருவாக்கிக் கொண்டுள்ளனர் என்பது நிதர்சனமாகும்.
இலங்கை நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பதாக இருந்தே இந்திய வம்சாவழி மலையக தமிழர் மீது இனவாத சாயம் பூசப்பட்டு அவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்திருந்த போதும் சுதந்திரத்துக்குப் பின்னர் பல மடங்காக இனவாத தாக்குதல்கள் தீவிரமடைந்து, 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக் கலவரமாக அதி உச்ச நிலையை அடைந்தது. எனினும் 1960 களில் இருந்தே இந்த சமூகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் இந்திய வம்சாவழி தமிழர்கள் என்ற அடையாளத்தை புறந்தள்ளி ‘மலையக தமிழர்கள்’ என்ற அடையாளத்தை முன்னெடுத்து தாம் தொடர்ந்தும் இந்திய நாட்டுக்கு விசுவாசமானவர்கள் அல்ல என்று தம்மை நிரூபிக்க முற்பட்டார்கள். அதன் விளைவாக இந்தியத் தமிழர் என்ற அடைமொழியைப் போடுவதற்கு பதிலாக மலையகத் தமிழர் என்ற அடைமொழியைப் போட்டுக் கொண்டனர். இளைஞர் குழுக்கள் மத்தியில் இவ்வித எண்ணக் கருத்து விரைவில் பற்றிக்கொண்டது.
இதன் விளைவாக மலைநாட்டில் ‘மலையகம்’ என்ற அடைமொழியை தம் பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்ட பல வாலிபர் சங்கங்களும் இயக்கங்களும் கட்சிகளும் உருவாகின. அத்தகைய சங்கங்களிலும் அமைப்புகளிலும் பின்வருவன குறிப்பிடத்தக்கவை.
- மலையக இளைஞர் முன்னணி
- மலையக இளைஞர் பேரவை
- மலையக மக்கள் இயக்கம்
- மலையக வெகுசன இயக்கம்
- மலையக இளைஞர் முன்னணி
- மலையக மக்கள் முன்னணி
இந்த சங்கங்களும் இதில் அங்கம் வகித்தவர்களும் அன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் புதிய சிந்தனைகளையும் கருத்துக்களையும் பதித்தனர். அவற்றில் குறிப்பிடத்தக்க முக்கியமானதொரு சிந்தனை மலையக மக்கள் கல்வியில் அதிக முக்கியத்துவம் செலுத்த வேண்டும் என்பதாகும். அன்று அத்தகைய சங்கங்களுக்கு மத்தியில் இருந்து எழுச்சி பெற்று வந்த ஒரு அமைப்பான மலையக மக்கள் முன்னணி பின்னர் அரசியல் கட்சியாக பிரபலம் பெற்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருந்த இடத்தை தனதாக்கிக் கொண்டது. அந்தக் கட்சியால் முழுதாக மலையக மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியவில்லை. ஆயினும் மலையக மக்கள் மத்தியில் ஒரு புதிய அலையையும் எழுச்சியையும் ஏற்படுத்துவதற்கு அது பின் நிற்கவில்லை. அவ்விதம் அத்தகைய ஒரு புதிய சிந்தனை எழுச்சியைத் தோற்றுவித்தவர்களில் இர. சிவலிங்கம், எஸ். திருச்செந்தூரன், பதுளை பாரதி ராமசாமி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
என்னதான் இவர்கள் தம்மை வடக்கு-கிழக்கு தமிழர்களில் இருந்து வேறுபட்டவர்கள் என்று குறிப்பிட்ட போதும் தமக்கும் மேற்படி 30 ஆண்டு காலமாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்திற்கும் சம்பந்தம் இருக்கவில்லை என்று பறைசாற்றிக் கொண்ட போதும் அந்த யுத்தம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இவர்களால் கொஞ்சமும் விடுபட முடியவில்லை. அரசியல் உரிமைகளை பொறுத்தவரையில் இந்தியத் தமிழர்களை வேறுபடுத்திப் பார்த்து அவர்களை இந்தியாவுக்கே அனுப்பி விடவேண்டும் என்று கருதிய சிங்கள ஆட்சியாளர்கள், அந்த 30 ஆண்டு கால யுத்தத்தின் போது இந்த மக்களுக்கும் யுத்தத்திற்கும் சம்பந்தமில்லை என்று பிரித்துப் பார்க்கவில்லை. இவர்களுக்கும் தனிநாட்டுக் கோரிக்கைக்கும் சம்பந்தமில்லை என்று தெரிந்திருந்தும், இவர்களும் யுத்தத்தின் பங்காளிகள் தான் என்று சத்தம் போட்டு கூறி இம் மக்களையும் சேர்த்தே ஒடுக்கினார்கள். வடக்கு கிழக்கு மக்களும் கூட அவர்களின் மக்கள் தலைவர்களும் கூட ‘இந்த யுத்தத்துக்கும் மலையக தமிழ் மக்களுக்கும் சம்பந்தமில்லை. அவர்களை அடிப்பதை விட்டுவிடுங்கள்.’ என்று ஒருபோதும் கூறியதில்லை. அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ மௌனமாகவே இந்த மக்களையும் தமது யுத்தத்தின் பங்காளிகளாக ஆக்கிக் கொண்டனர். முடிவில் அந்த மக்களுக்கும் தீர்வு கிடைக்கவில்லை. யுத்தத்தில் பங்கு பற்றாத இந்த மக்களுக்கும் எந்தவித பரிகாரங்களும் கிடைக்கவில்லை. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்ற கதையாக ஆகிப்போய்விட்டது.
இருந்தபோதும் யுத்தம் ஒரு பாடத்தை இவர்களுக்கு கற்றுக் கொடுத்தது. போர் முடிந்து போய்விட்டாலும், போர் ஒன்று எழுந்ததற்கான காரணிகள் அதன் பின்னரும் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றது. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் அதற்கான தீர்வு ஒன்றை வழங்காமல் விட்டதால் அது புகைந்துகொண்டு இருக்கும் எரிமலையாகவே தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கிறது என்பது வெள்ளிடைமலை. இந்த நாடு எதிர்நோக்கியிருக்கும் இந்தப் பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதனையும் ஒரு காரணமாக கொள்ளலாம். இந்த நாட்டின் மூன்று தேசிய இனங்களான இலங்கை தமிழ் தேசிய இனம், முஸ்லிம் சிறுபான்மை தேசிய இனம், மலையகத் தமிழ்த் தேசிய இனம் ஆகிய மூன்று இனங்களுமே இந்த நாட்டின் தேசிய அரசியலில் பங்கு பற்ற முடியாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பதையும் இதனோடு இணைத்து புரிந்துகொள்ள வேண்டும்.
நான் மேலே குறிப்பிட்டது போல் புகைந்து கொண்டிருக்கும் எரிமலை எந்தச் சந்தர்ப்பத்திலும் வெடித்துச் சிதறலாம் என்று எதிர்பார்க்க வேண்டியதன் தேவை இந்த நாட்டில் பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் இருந்து கொண்டே இருக்கும். அதனை உணரும் பதவிக்கு வரும் எந்தவொரு அரசாங்கமும் அதனைத் தீர்க்க முற்படும்போது, மேற்படி மூன்று தேசிய இனங்களினதும் பிரச்சினைகளையும் சேர்த்தே தீர்க்கவேண்டிய நிர்ப்பந்தமும் இருந்துகொண்டே இருக்கும். அவ்விதம் ஒரு சந்தர்ப்பம் வருமாயின் அந்தச் சந்தர்ப்பத்தின் போது மலையகத் தமிழ் மக்களும் தமக்கு இருக்கும் பிரச்சனைகளை முன்வைத்து அதற்கான சரியான தீர்வுகளை பெற்றுக்கொள்ள பின் நிற்கக்கூடாது என்பது இவ்விடத்தில் அடிக்கோடிட்டு காட்டப்படுகிறது.
தொடரும்.