17 ஆம் நூற்றாண்டின் இலங்கைப்படங்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டை அண்டிய தீவுகள் குறித்த தகவல்களை ஏற்கெனவே பார்த்தோம். அப்படங்களில் யாழ்ப்பாணக் குடாநாடு தொடர்பிலும் அதை அண்டித் தலைநிலத்தில் உள்ள பகுதிகள் தொடர்பிலும் காணப்படும் தகவல்களைத் தொடர்ந்து பார்க்கலாம். அந்நூற்றாண்டில் 1558 வரையான காலப் பகுதியைச் சேர்ந்த இலங்கை நிலப்படங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தெளிவாகக் காட்டவில்லை என்றும், அப்பகுதி தொடர்பில் குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் அப்படங்களில் இல்லை என்றும் ஏற்கெனவே அறிந்துகொண்டோம்.
ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய 1658 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 1700 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவையாக இன்று கிடைக்கக்கூடிய நிலப்படங்களுள் 1670 ஆம் ஆண்டில் யொகான்னஸ் விங்பூன்ஸ் என்பவரால் வரையப்பட்ட இலங்கையின் நிலப்படம் காலத்தால் முந்தியது. எனினும், இது ஒரு மூலப்படம் அல்ல. 1658-1659 காலப்பகுதியில் பத்தேவியாவில் வரையப்பட்ட நிலப்படம் ஒன்றைத் தழுவி வரையப்பட்டது. 1 எனவே, விங்பூன்சின் நிலப்படத்தில் உள்ள தகவல்கள் 1659 ஆம் ஆண்டுக்கு முற்பட்டவை. இந்த நிலப்படத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தலைநிலத்திலிருந்து பிரித்துத் தெளிவாக வரைந்துள்ளனர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் நான்கு பிரிவுகளுள் ஒன்றான வலிகாமத்தை ஏனையவற்றிலிருந்து பிரிக்கும் கடல்நீரேரியை நிலப்படம் காட்டியபோதும், தென்மராட்சியையும் வடமராட்சியையும் பிரிக்கும் கடல்நீரேரிப் பகுதி நிலப்படத்தில் இல்லை. வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய மேற்படி நான்கு பிரிவுகளினதும் எல்லைகளை நிலப்படம் அண்ணளவாகக் குறித்துக் காட்டுகிறது. எனினும், இப்பிரிவுகளையோ பிற இடங்களையோ நிலப்படம் பெயர் குறித்துக் காட்டவில்லை. குடாநாட்டுப் பகுதியில் “யாப்னாபட்ணம்” என்னும் பெயர் “IA—T—“ என அரைகுறையாக எழுதப்பட்டுள்ளது. இவ்வாறே வன்னி நிலப்பரப்பிலும் பெயர்களின் முதல் எழுத்துகள் மட்டும் காணப்படுகின்றன. இது, மேற்படி நிலப்படம் முழுமை பெறாததைக் காட்டுவதாகக் கொள்ளலாம்
1683 ஆம் ஆண்டில் ஜொகான் ரோகவீன் என்பவரால் வரையப்பட்ட இலங்கையின் நிலப்படம் ஒன்று பிரான்சின் தேசிய நூலகத்தில் உள்ளது. 2 இது 1666 ஆம் ஆண்டில் வரையப்பட்ட நிலப்படமொன்றின் படியாகும். இந்த நிலப்படத்தில் இலங்கையின் புறவுரு வடிவம் முன்னர் குறிப்பிட்ட விங்பீன்சின் நிலப்படத்தை ஒத்துள்ளது. ஆனால், ரோகவீனின் நிலப்படத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சியையும் தென்மராட்சியையும் பிரிக்கும் கடல்நீரேரியும் ஒரு ஆறு போல் வரையப்பட்டுள்ளது.
இந்த நிலப்படத்தின் வலது பக்கக் கீழ் மூலையில் “யாழ்ப்பாணப்பட்டினமும் வலிகாமம்பற்று, வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரிவுகளும்” என்ற குறிப்புக் காணப்படுகிறது. இதிலிருந்து இந்த நிலப்படம் யாழ்ப்பாண இராச்சியப் பகுதி தொடர்பான சில தகவல்களைக் காட்டுவதற்காக வரையப்பட்டதுபோல் தோன்றுகிறது. குறிப்பாக, யாழ்ப்பாணக் குடாநாட்டின் நான்கு பிரிவுகளையும் நிலப்படம் பெயர் குறித்துக் காட்டுவதுடன், தொண்டைமானாற்றிலிருந்து முல்லைத்தீவு வரை அப்பகுதியின் கிழக்குக் கரையோரத்திலுள்ள ஊர்கள் பலவற்றையும் அவற்றின் பெயர்களுடன் குறித்துக் காட்டுகிறது. இது, நீர்வழிப் போக்குவரத்துக்காக அப்பகுதியிலுள்ள பாதுகாப்பான இறங்குதுறைகளை அடையாளங்கண்டு குறிக்கும் முயற்சியாகும். தொண்டைமானாறு, பருத்தித்துறை, வெர்காமுனை, கற்கோவளம், குடத்தனை, அம்பன், நாகர்கோயில், செம்பியன்பற்று, குடாரப்பு, மருதங்கேணி, உடுத்துறை, வெற்றிலைக்கேணி, குரங்குத்துறை, பைல் கடவை, சுண்டிக்குளம், செம்மலை, ஆண்டிக்குடா, கொக்கிளாய் ஆகிய 18 உள்ளிட்ட 27 இடப்பெயர்களை நிலப்படத்தின் இப்பகுதியில் காணமுடிகின்றது. மேற்படி கிழக்குக் கரையோர ஊர்களைத் தவிரக் குடாநாட்டின் உட்பகுதியிலுள்ள ஊர்கள் எவற்றையும் நிலப்படம் காட்டவில்லை. ஆனாலும், யாழ்ப்பாண நகரப் பகுதியில் ஒல்லாந்தக் கொடியுடன் கூடிய கோட்டை அடையாளம் வரையப்பட்டுள்ளது.
குடாநாட்டுக்குத் தெற்கே தலைநிலத்தில் பூநகரியைச் சூழவுள்ள பகுதியை நிலப்படம் எல்லை குறித்துக் காட்டுகிறது. இது வெளிப்பற்றுப் பிரிவை உள்ளடக்குகிறது. இதற்குள் பூநகரி, பல்லவராயன்கட்டு ஆகிய ஊர்களை நிலப்படம் காட்டுகிறது. இப்பகுதிக்குத் தெற்கே பரந்த பகுதி “பெரிய வன்னி நிலப்பரப்பு” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது இன்றைய வன்னிப் பகுதிகளான முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களுடன், வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகியவற்றின் சில பகுதிகளையும் உள்ளடக்குவதைக் காணமுடிகிறது. இலங்கையின் பழைய தலைநகரமான அநுராதபுரமும் இதற்குள் அடங்குகிறது. இப்பகுதியின் துணைப் பிரிவுகளின் பெயர்களும் நிலப்படத்தில் உள்ளன. எனினும், அப்பிரிவுகளின் எல்லைகளைப் படம் காட்டவில்லை.
வன்னியில் செட்டிகுளம்பற்று, பனங்காமப்பற்று, கருநாவற்பற்று, மேற்பற்று, முள்ளியவளைப்பற்று, கரிக்கட்டுமூலைப்பற்று, தென்னைமரவடிப்பற்று ஆகிய பிரிவுகள் இருந்ததைப் பிற ஆவணங்களில் இருந்து அறியமுடிகின்றது.3 ரோகவீனின் நிலப்படம் தமிழ்ப் பகுதிக்குள் முசலிப்பற்று, செட்டிகுளம்பற்று, உரகரைப்பற்று (Ouregarepatte), கருநாவற்பற்று, மேல்பற்று, முள்ளியவளைப்பற்று, கரிக்கட்டுமூலைப்பற்று, தென்னமரவடி ஆகிய பிரவுப் பெயர்களைத் தருகிறது. கேரோஸ் பாதிரியாரின் நூலில் உருகரைப்பற்று என்னும் பிரிவு பனங்காமப்பற்றுக்குள் அடங்கியுள்ளது என்ற குறிப்பு உள்ளது. எனவே, நிலப்படத்தில் பனங்காமப்பற்றையே உரகரைப்பற்று எனக் குறிப்பிட்டிருப்பதாகக் கொள்ளமுடியும்.
இதே காலப்பகுதியில் ஜெராட் ஃபொன் கியூலென் (1670), நிக்கொலஸ் விஸ்ச்சர் (1680), தொபியாஸ் கொன்ராட் லொட்டே ஆகியோர் வரைந்த இலங்கைப் படங்களும், போல்டேயஸ் பாதிரியாரின் நூலில் காணப்படும் இலங்கைப் படமும் அடிப்படையான வடிவத்தையும் சில விவரங்களையும் பொறுத்த அளவில் ஒரே மாதிரியானவை. இவையனைத்தும் ஒரே மூலப் படத்தை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு தேவைகளுக்காக வரையப்பட்டிருக்கலாம். சில விவரங்களில் இவை ஒன்றுக்கொன்று வேறுபட்டுக் காணப்படுகின்றன. குறிப்பாகச் சில படங்கள் கோட்டே இராச்சியப் பகுதியின் உட்புறங்கள் தொடர்பான விவரங்களைத் தருகின்றன. இலங்கையின் வட பகுதியைப் பொறுத்தவரை இவ்வேறுபாடுகள் குறிப்பிடத் தக்கனவாக இல்லை.
நிக்கொலஸ் விஸ்ச்சரின் நிலப்படத்தில் இலங்கையின் தென்மேற்கு, தென்கிழக்குப் பகுதிகளில் கூடுதலான விவரங்களைக் காண முடிவதுடன், இலங்கையின் நிர்வாகப் பிரிவுகளும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. முன்னர் குறிப்பிடப்பட்ட ஜொகான் ரோகவீனின் நிலப்படத்தில் உள்ளதுபோலன்றி, விஸ்ச்சரின் நிலப்படம் வன்னியின் தமிழ்ப் பகுதியைத் தெளிவாகப் பிரித்துக் காட்டுகிறது. இது தவிர யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் வன்னியிலும் புதிய விவரங்கள் எதையும் நிலப்படம் தரவில்லை. கியூலெனின் நிலப்படத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு, வன்னிக் கரையோரங்கள் உள்ளிட்ட இலங்கையின் கரையை அண்டிய பகுதிகளில் கடலின் ஆழம் தரப்பட்டுள்ளது.
போல்டேயஸ் பாதிரியாரின் நூலில் காணப்படும் இலங்கைப் படம், முன்னர் விவரிக்கப்பட்ட நிலப்படங்களில் உள்ள கரையோர ஊர்களுடன் யாழ்ப்பாணக் குடாநாட்டின் உட்பகுதியில் உள்ள ஊர்களையும் பெயர் குறித்துக் காட்டுகிறது. (படம்-1) வட்டுக்கோட்டை, மானிப்பாய், தெல்லிப்பழை, மயிலிட்டி, யாழ்ப்பாணப்பட்டினம், பள்ளிவிலி, கொழும்புத்துறை, நாவற்குழி, சாவகச்சேரி, கட்டைவேலி என்பன மேற்படி ஊர்கள். மேற்குறிப்பிட்ட ஊர்களைக் குறித்துக்காட்டும் மிகப் பழைய நிலப்படம் இதுவாக இருக்கக்கூடும். இப்படத்தில் கோட்டைக்கு மேற்கே காட்டியுள்ள பள்ளிவிலி (Palwalys) என்னும் பெயர் இன்று எந்த ஊரையும் குறிப்பதில்லை. முன்னரும் இப்பெயரால் குறிப்பிடப்பட்ட ஊர் எதுவும் இருந்ததற்கான சான்றுகள் இல்லை. ஆனால், இப்பகுதியில், குறிப்பாகக் கொட்டடியில், பள்ளிவிலி தோட்டம் என்று அழைக்கப்படும் காணிகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஒல்லாந்தர் காலத்தில் இவ்விடத்தில் பள்ளிவிலி என்னும் பெயரில் பெரிய தோட்டம் ஒன்று இருந்ததாகத் தெரிகின்றது. அது பிற்காலத்தில் வீடுகள் கட்டுவதற்காகப் பல காணித்துண்டுகளாகப் பிரிக்கப்பட்டது. இக்காணிகளே இன்றும் மேற்படி தோட்டத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றன. முக்கியமான ஊர்களுக்கு நிகராக, அதுவும் நல்லூர், வண்ணார்பண்ணை போன்ற முக்கியமான ஊர்கள் காட்டப்படாத நிலையில், ஒரு தோட்டத்துக்கு வழங்கிய பெயர் நிலப்படத்தில் முக்கியத்துவம் கொடுத்துக் காட்டப்பட்டிருப்பதற்கான காரணம் தெரியவில்லை.
கொழும்புத்துறை யாழ்ப்பாண இராச்சியக் காலத்திலேயே ஒரு முக்கிய துறையாக இருந்துள்ளது. போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தின்மீது முதன் முதலாக 1560 ஆம் ஆண்டில் படையெடுத்தபோது அவர்கள் கொழும்புத்துறையிலேயே இறங்கினர். கேரோஸ் பாதிரியார், டிரினிடாட் பாதிரியார் முதலிய போர்த்துக்கேய வரலாற்றாளர்களின் நூல்களில் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால், அவர்கள் கொழும்புத்துறை என்ற பெயரைப் பயன்படுத்தவில்லை. போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி ஆண்ட காலத்துக்குரிய ஆவணம் ஒன்றில் இப்பெயர் கொழும்பொகம (Columbogama) என உள்ளது.4 இன்று கிடைப்பவற்றுள் கொழும்புத்துறை என இவ்வூரின் பெயரைக் குறிக்கும் மிகப் பழைய நிலப்படம் போல்டேஸ் பாதிரியார் பயன்படுத்திய நிலப்படமாக இருக்கக்கூடும்.
போல்டேயஸ் பாதிரியார் 1658 – 1665 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர். அக்காலத்தில் யாழ்ப்பாணக் கட்டளையகத்தின் தேவாலயங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர். இவர் தனது நூலில் மேற்படி தேவாலயங்களைப் பற்றித் தனித்தனியாக விவரங்களைத் தந்துள்ளார். ஆனாலும், இந்நூலிலுள்ள இலங்கைப்படத்தில் மேற்குறித்த தேவாலயங்கள் இருந்த எல்லா ஊர்களையும் குறித்துக் காட்டவில்லை. இதே நூலில் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் அயற்பகுதிகளையும் காட்டும் நிலப்படம் ஒன்றும் உள்ளது. (படம்-2) உண்மையில் இது முன்னர் குறிப்பிட்ட இலங்கைப் படத்திலிருந்து பெருப்பிக்கப்பட்ட வடபகுதியைக் காட்டுகின்ற போதிலும், இதில் ஒல்லாந்தருடைய கிறித்தவத் தேவாலயங்கள் இருந்த எல்லா ஊர்களும் குறிக்கப்பட்டுள்ளன.
போல்டேயஸ் பாதிரியார் தந்துள்ள இலங்கைப்படத்தில் வன்னிப் பகுதியின் தெற்கு எல்லை மேற்குக் கரையில் கற்பிட்டிக்கு அண்மையிலிருந்து கிழக்கே திருகோணமலை வரை ஒரு நேர்கோடாகக் காட்டப்பட்டுள்ளது. இது துல்லியமான எல்லை அல்ல. ஒல்லாந்த ஆளுனர் ரைக்கிளோவ் வான் கூன்ஸ், யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதிக்கு எழுதிய வழிகாட்டற் குறிப்பில் வன்னிப் பகுதி, மேற்கில் கற்பிட்டி, மாதோட்டம், மன்னார் ஆகியவற்றை உள்ளடக்கிக் கிழக்கே திருகோணமலை வரை பரந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.5 இது மேற்படி நிலப்படத்திற் காட்டிய எல்லையுடன் பொருந்துகிறது. போர்த்துக்கேய வரலாற்றாளரான கேரோஸ் பாதிரியாரும் வன்னியைப் பற்றி விளக்கும்போது, அது திருகோணமலை வரை பரந்திருந்ததாகக் குறிப்பிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. நிலப்படத்தின்படி வன்னி ஒரு பெரிய நிலப்பகுதி என கேரோஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.6 இவர் குறிப்பிட்டுள்ள நிலப்படம் எதுவெனத் தெரியவில்லை. இது இப்போது கிடைக்காத ஒரு நிலப்படமாக இருக்கக்கூடும்.
17 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியை, குறிப்பாக 1700 க்குச் சற்று முற்பட்ட காலத்தில் வரையப்பட்ட இலங்கையின் நிலப்படங்களில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் வட பகுதியைப் பற்றி மேலும் சில புதிய தகவல்களைக் காணமுடிகின்றது. இலங்கைத் தீவையும் தென்னிந்தியாவின் சில பகுதிகளையும் காட்டும் நிலப்படம் ஒன்று நெதர்லாந்தின் தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ளது. (படம்-3) இது 1690-1700 காலப்பகுதியில் ஜான் கிறிஸ்டியானெஸ் தூர்சீ என்பவரால் வரையப்பட்டது. இதில் தரப்பட்டுள்ள விவரங்களைக் கருத்திற் கொள்ளும்போது, இதற்கு முந்திய நிலப்படங்களை விட இது பெருமளவு முன்னேற்றமடைந்த நிலப்படமாகக் கருதப்படுகிறது. இலங்கையில் ஒல்லாந்தரின் ஆட்சியின் கீழிருந்த பகுதி முழுவதிலும் வீதிகளையும் அவ்வீதிகளை அண்டிக் காணப்படும் முக்கிய இடங்களையும் குறிக்கும் மிக முந்திய நிலப்படங்களுள் இது ஒன்று. குறிப்பாக வன்னிப் பகுதியில் வீதிகளும் வழியில் இருக்கக்கூடிய முக்கியமான இடங்களும் செறிவாகக் குறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வன்னியில் உட்புறப் பகுதிகளில் நில அளவைத் தகவல்களைச் சேகரித்து நிலப்படங்களைத் தயாரித்ததானது, ஒல்லாந்தர் வன்னியில் தமது அதிகாரத்தை வலுப்படுத்தியதைக் காட்டுகிறது எனலாம்.
இலங்கையின் வடபகுதியைப் பொறுத்தவரை யாழ்ப்பாணக் குடாநாட்டில் முக்கியமான மூன்று வீதிகளை நிலப்படம் காட்டுகிறது. இவை, யாழ்ப்பாணம் – காங்கேசந்துறை வீதி, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணத்திலிருந்து தென்மராட்சி, பச்சிலைப்பள்ளியூடாக வன்னிக்குச் செல்லும் வீதி என்பன. வீதிகள் காட்டப்பட்டிருப்பதால் குடாநாட்டில் உள்ள பல்வேறு ஊர்களுக்கு இடையிலான போக்குவரத்துத் தொடர்புகள் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது.
காங்கேசந்துறை வீதியில் யாழ்ப்பாணம், நந்தாவில், உடுவில், தெல்லிப்பழை, காங்கேசந்துறை ஆகிய ஊர்கள் குறிக்கப்பட்டுள்ளன. தற்காலத்தில் முக்கியத்துவம் பெறும் கொக்குவில் என்னும் ஊர்ப்பெயருக்குப் பதிலாக அப்பகுதியில் உள்ள ஒரு குறிச்சிப் பெயராக நந்தாவில் என்னும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், அச்சுவேலி ஆகிய ஊர்களைக் குறித்துள்ளனர். இவ்வீதியில் வடமராட்சிப் பிரிவுக்குள் உள்ள எந்த ஊரும் குறிக்கப்படவில்லை. வன்னிக்குச் செல்லும் வீதி நாவற்குழி, புலோப்பழை, பைல் கடவை, மான்பிராய், சுண்டிக்குளம் ஆகிய இடங்களூடாகச் செல்கிறது. அக்காலத்தில் ஆனையிறவினூடாக வன்னிக்குச் செல்லப் பாதை இல்லை. பைல் கடவை என்பது குடாநாட்டுக்கும் வன்னிக்கும் இடையிலான போக்குவரத்தைக் கண்காணிப்பதற்கும் வரி அறவிடுவதற்கும் நிறுவப்பட்ட சோதனைச் சாவடிகளுள் ஒன்று.
வன்னிப் பகுதிக்குள் பூநகரியில் இருந்து மேற்குக் கரையோரமாக ஒரு வீதி வடபகுதியைத் தென்னிலங்கையின் மேற்கு, தெற்குப் பகுதிகளுடன் இணைப்பதைக் காண்கிறோம். இவ்வீதி ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் செல்வதற்கான முக்கிய வீதியாக இருந்தது. ஆனையிறவுக்கு எதிர்ப் புறம் இருந்து வன்னியின் நடுப் பகுதியை ஊடறுத்து இன்னொரு வீதி இலங்கையின் மத்திய பகுதியை நோக்கிச் செல்கிறது. இவ்வீதியின் ஒரு இடத்திலிருந்து ஒரு வீதி கிழக்கு நோக்கி முல்லைத்தீவுப் பகுதிக்குச் செல்கிறது. மேற்படி வீதிகளை அண்டியிருந்த பெருமளவு ஊர்களின் பெயர்கள் இந்நிலப்படத்தில் குறிக்கப்பட்டுள்ளன.
ஏறத்தாழ இதே போன்ற தகவல்களைத் தருகின்ற இன்னொரு இலங்கைப்படமும் நெதர்லாந்தின் தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ளது. (படம்-4) “இலங்கை” (Ceylon) என்று தலைப்பிடப்பட்ட இந்நிலப்படத்தை வரைந்தவரின் பெயர் தெரியவில்லை. இது 1690-1700 காலப்பகுதியைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் இலங்கையின் புற வடிவம் தூர்சியின் நிலப்படத்தில் இருப்பதைக் காட்டிலும் வேறுபட்டிருந்தாலும், அந்நிலப்படத்தில் உள்ளது போலவே வன்னிப்பகுதியில் முக்கியமான வீதிகளும் ஊர்களும் இதிலும் குறிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணக் குடாநாட்டில், காங்கேசந்துறையில் ஒரு பெரிய கோட்டையையும், யாழ்ப்பாணத்தில் சிறிய கோட்டையையும் நிலப்படம் காட்டுகிறது. இது வேறெந்த நிலப்படத்திலும் இல்லாத அம்சமாகும். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்திலிருந்த போர்த்துக்கேயரின் தலைமையிடத்தை வேறிடத்துக்கு நகர்த்துவதற்கும் முதலில் திட்டமிட்டிருந்தனர். இதற்கமையக் காங்கேசந்துறை தலைமையிடமாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கலாம் என்றும், கோட்டை ஒன்றைக் கட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட தொடக்கக் கட்டுமானங்களின் எச்சங்கள் அங்கே உள்ளதாகவும் ஆர். எல். புரோகியர் முதலிய சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.7 இந்நிலப்படத்தில் காங்கேசந்துறையில் பெரிய கோட்டையைக் காட்டியிருப்பது காங்கேசந்துறை புதிய தலைமையிடமாகத் தெரிவுசெய்யப்பட்டதன் வெளிப்பாடா என்பது தெரியவில்லை. ஆனால், இந்த நிலப்படம் வரையப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணமே தலைமையிடமாகத் தொடர்வதற்கு முடிவு செய்யப்பட்டுப் புதிய கோட்டையின் உட்புறக் கட்டுமானங்களும் நிறைவுபெற்றுவிட்டன. ஒருவேளை, தலைமையிடத்தைக் காங்கேசந்துறைக்கு நகர்த்தும் முடிவு எடுக்கப்பட்ட காலத்து மூலப் படமொன்றைத் தழுவி இந்த நிலப்படம் வரையப்பட்டிருக்கும் சாத்தியம் உண்டு. எனினும், ஆழமான ஆய்வுகள் இல்லாமல் சரியான முடிவுக்கு வரமுடியாது.
குறிப்புகள்
- Rob van Diessen and Bert Nelemans, Comprehensive Atlas of the Dutch United East India Company – IV Ceylon (Voorburg: Asia Maior/ Atlas Maior, 2010), 34.
- Rob van Diessen and Bert Nelemans, Comprehensive Atlas, 34-35.
- P. E. Pieris, The Kingdom of Jafanapatam 1645, (New Delhi: Asian Educational Services, 1995), 48.
- சி. பத்மநாதன், வன்னியர், (பேராதனை: 1970), 54.
- Instructions from the Governor-General and Council of India to the Governor of Ceylon 1656-1665, trans. Sophia Pieters (Colombo: Ceylon Government Printer, 1908), 85.
- Fernao De Queyroz, The Temporal and Spiritual Conquest of Ceylon vol I, trans. S. G. Perera (New Delhi: Asian Educational Services, 1992), 51.R. L. Brohier, “Ceylon in Maps,” The Journal of the Dutch Burgers Union, vol XXXII, no. 2 (October 1942): 80
தொடரும்.