உலகச் சமநிலை மாற்றத்தைத் தீவிர நிகழ்வுகள் முனைப்புடன் வேகப்படுத்தியவாறுள்ள சூழலில் இந்தத் தொடரில் இணைந்து பயணிக்கிறோம். அதிலும் இந்த அத்தியாயம் மத்திய கிழக்கில் இயங்கி வருகின்ற உலக மேலாதிக்கச் சக்தியின் ஒரு குவிமையமான இஸ்ரேல் தனது மேலாதிக்க ஆற்றலின் பலவீனத்தை முதல் தடவையாக வெளிப்படுத்தியவாறு இருக்கும் 2023 நொவெம்பர் மாதத்துக்கு உரியதாக உள்ளது. ஏற்கனவே ஐந்தாறு வருடங்களாக ஐக்கிய அமெரிக்க மேலாதிக்கத் தலைமையிலான ஏகாதிபத்தியத் திணையானது அதனது பொருளாதார வலுவில் மிக வேகமான சரிவைச் சந்திக்கத் தொடங்கிய போது ஒடுக்கப்பட்ட தேசங்களாயிருந்த சீனா, இந்தியா, முன்னாள் சோசலிசக் கட்டமைப்புத் தகர்க்கப்பட்டதனால் பலவீனப்பட்டுப்போன ருஷ்யா என்பன முன்னேறும் பொருளாதார வல்லாண்மையை வெளிப்படுத்தி வரலாயின. ஒரு வருடத்துக்கு மேலாக நீடிக்கும் உக்ரேன் – ருஷ்யப் போர் ஏகாதபத்தியத் திணையின் அரசியல் மேலாண்மைக்கு மரண அடி கொடுப்பதாக அமைந்து வருகிறது.
இன்னமும் கருத்தியல் மேலாதிக்கத்தைத் தக்க வைக்கும் காப்பிரேட் மூலதனத்தின் ஊடகக் கையாளுகையே ஏகாதிபத்தியத் திணையின் பொய்ப் பிரசாரங்கள் வாயிலாக உலக ஆளுகைக்கான வாய்ப்பைத் தக்கவைத்தவாறு இருந்தது. காசாப் பிரதேச வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்களுக்கு இஸ்ரேலினால் கூறப்பட்ட காரணங்களை மெய்ப்பித்துக் காட்டும் வகையில் சோடிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஊடகப் புனைந்துரைகளின் போலிச் சான்றாதாரங்களை அம்பலப்படுத்தவல்ல இன்றைய சமூக ஊடக ஜனநாயக வாய்ப்புகள் காப்பிரேட் மூலதனத்தின் ஊடக மேலாதிக்கத்தையும் கேள்விக்கு உள்ளாக்கி வருகின்றன. ஏகாதிபத்திய ஒடுக்குமுறையே தீர்மானமிக்க அம்சம் என்பது இவற்றின் வாயிலாக இறங்குதசையடைந்து வரும் சூழலில் தேசங்கள் இடையே ஜனநாயகத் தொடர்பாடலுக்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது. டொலரின் உலக மேலாதிக்கத்தை ஊடறுத்தவாறு பிராந்தியங்கள் இடையே சீனாவின் யென், ருஷ்யாவின் ரூபிள், இந்தியாவின் ரூபாய் என்பன வர்த்தக ஊடாட்டத்துக்குரிய இடை ஊடகங்களாக மாறி வருகின்றன. ஐ.நா. வில் ஏகாதிபத்திய அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான ஒடுக்கப்பட்ட தேசங்களின் சொந்த விருப்பங்களை வெளியிடும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
நூறு வருடங்களின் முன்னர் பலஸ்தீனப் பிரதேசத்தில் ஏகாதிபத்தியச் சுயம் நிர்ணயித்த வண்ணம் இஸ்ரேல் என்ற தேசம் விதைக்கப்பட்டு அதன் சியோனிச ஆக்கிரமிப்புக் கெடு நோக்குகள் நேற்று வரை வெற்றிபெற இயலுமாக இருந்தது என்ற நிலை மாற்றம் பெற்றுப் பலத்த அடியை இன்று எதிர்கொண்டு வரும் புதிய செல்நெறியின் தொடக்கத்தைக் குறிக்கும் வெளிப்பாடுகள் இவை. உடனடியாகவே விடுதலைத் தேசிய விழிப்புணர்வு எங்கெங்கும் பிரகாசம் பெற்று ஒளிரும் என்பது இவற்றின் பொருளல்ல. மக்கள் விடுதலை எழுச்சிகளின் திசை நோக்கிய மாற்றத்தின் வேகம் இனித் துரிதப்படும். இரண்டாம் உலக யுத்த முடிவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத் தலைமையில் இருந்த ஐரோப்பிய ஏகாதிபத்தியத் திணை பலவீனப்பட்ட வாய்ப்புடன் ஒடுக்கப்பட்ட தேசங்கள் (ஏகாதிபத்தியச் சுயநிர்ணயத்தையும் உள்வாங்கிய படி) அரைச் சுதந்திரத்தை நாற்பதாம் ஆண்டுகளின் கடைக்கூறில் இருந்து பெற்று வந்தன. இரண்டு தசாப்தங்கள் கடந்த நிலையில் (எழுபதாம் ஆண்டுகளில்) ஒவ்வொரு நாடுகளின் தேசிய முதலாளி வர்க்கத் தலைமையிலான அரசுகள் சுயசார்புப் பொருளாதார முன்னெடுப்பை மேற்கொள்ள இயலுமாக இருந்தது. அதற்கான வாய்ப்பினை வழங்கும் பின்னணியைச் சோசலிச முன்னெடுப்பில் அபாரமான வளர்ச்சியை எட்டியிருந்த சோவியத் ருஷ்யா வழங்கியிருந்தது.
ஐரோப்பியத் தலைமையிலான ஏகாதிபத்தியத் திணையின் இயங்கு முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற அவா புதிய தலைமையைக் கையகப்படுத்த இருந்த ஐக்கிய அமெரிக்க முதலாளித்துவத்துக்கும் இருந்தது. இத்தகைய அரைச் சுதந்திர நாடுகளில் தனது சுரண்டலை ஐரோப்பியத் திணையை மேவியதாகவும் சுதந்திரமாகவும் மேற்கொள்ள இயலும் என்ற காரணத்தினாலேயே ஐக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியம் அந்தச் சுதந்திர முன்னெடுப்பை ஆதரித்தது. மத்திய கிழக்கு நாடுகளில் பெற்றோலியக் கனிமம் கண்டறியப்பட்டு அதனை அபகரிக்கும் நோக்கில் ஐக்கிய அமெரிக்கத் தலைமையை ஏற்றுக்கொண்ட ஏகாதிபத்தியத் திணை இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கெடுபிடிகளுக்குத் தூபமிட்டு வந்தது. உலக நாடுகள் அனைத்தையும் தமது இராணுவ, பொருளாதார, அரசியல், பண்பாட்டு மேலாதிக்கத்தின் கீழ் வைத்து ஆட்சியைச் செலுத்திய ஏகாதிபத்திய வல்லாதிக்கம் தகர்க்கப்பட்டு தேசங்கள் ஒவ்வொன்றும் பூரண விடுதலை பெற இயலும் என்பதற்கான நம்பிக்கை இன்று வலுவடைந்து வருகிறது.
மூலதன வாய்ப்புடன் மேலைத்தேச ஏகாதிபத்திய சகாப்தம் தொடர்ந்துகொண்டு இருப்பதாக இன்றைய வரலாற்று இயங்கு நிலை; இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக மேலைத்தேச நாடுகள் உலக ஆதிக்கத்தின் உச்ச நிலையை வெற்றி கொள்வதற்கு மூலதனத் திரட்சி கைகொடுத்திருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான மருதத் திணை மேலாதிக்கம் கட்டியெழுப்பி வந்த அதிகார வல்லாதிக்கம் கிபி 9 – 12 ஆம் நூற்றாண்டுகளில் உலகின் முதல்நிலை வல்லரசு நாடுகளில் ஒன்றாகத் தமிழகத்தை ஆக்கியிருந்தது. இந்த நான்கு நூற்றாண்டுகளின் உச்ச நிலை ஒன்றுக்குரிய ஒரு நூற்றாண்டில் ஏற்கனவே தமிழகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் கொண்டுவந்த சோழப் பேரரசே உலகின் முதல் நிலையைப் பெற்றிருந்தது. விவசாய வாய்ப்புடன் இவ்வகை மேலாதிக்கத்தைக் கட்டியெழுப்பிய மருதத் திணையின் வாரிசுகளான வெள்ளாளர்களது கருத்தியலாக மேற்கிளம்பிய சைவசித்தாந்தம், கடவுள் கோட்பாட்டின் அதியுயர் வடிவமாக அமைய இயலுமானதில் அந்த அதியுச்ச நிலை ஆதிக்க வெளிப்பாட்டைக் காண இயலும் !
வெள்ளாள மேலாதிக்கப் பிராமணியம்
வெள்ளாளர்கள் நிலப்பிரபுத்துவத்தின் அதியுயர் வளர்ச்சியை எட்டியிருந்த சோழப் பேரரசர் காலத்தில் சைவசித்தாந்தம் படைக்கப்படவில்லை. அப்போது வேத-வேதாந்தத்துக்குரிய பிராமணர்களை மென்மேலும் வரவழைத்து நிலங்களை அவர்களுக்குமானதாக வழங்கித் தமக்குச் சமதையான நிலப்பிரபுக்களாக வளர்த்தெடுத்தவாறு இருந்தனர். அனைத்துச் சாதியினரையும் ஐக்கியப்படுத்தி ஆக்கிரமித்திருந்த நிலபுலங்களில் ஏனைய சாதிகளைத் தொண்டூழியத்துக்கு உரியோராக ஆக்கி ஒட்டச் சுரண்டும் வரலாற்றை முன்னெடுக்க வேண்டி இருந்தது. பிராமணியம் வழங்கிய சாதியக் கருத்தியல் சற்சூத்திரர்களாக வெள்ளாளர்களை அங்கீகரித்துக்கொண்டு ஏனைய சாதிகள் இடையே தொண்டூழியத்துக்கு உரிய மனப்பாங்கை ஏற்க வைக்கும் கருத்துருவாக்கங்களால் அடிமைகொண்டன ஆதிக்கச் சாதிகள் இரண்டும். ராஜராஜ சோழன் உள்ளிட்ட மன்னர்கள் கல்வெட்டுகள் வாயிலாகவும் ‘பிராமணர்கள் போன்ற தண்டனை விலக்களிக்கப்பட்ட புனிதச் சாதியினராக’ வெள்ளாளர்களைப் பதிய வைத்துக்கொண்டனர் !
சாதிகள் இடையேயான உறவு அன்று எவ்வகையில் இருந்தது என்பதனை இன்றைய உணர்வு நிலையில் இருந்து கணிப்பிட இயலாது. அன்றைய வரலாற்றுத் தேவை வெள்ளாள-பிராமண உறவை ஒன்றித்த நலனுக்கு உரியதாக அமைத்திருந்தது. முன்னதாக அறநெறிக் காலத்தில் அதிகாரச் சாதியாக இருந்த வணிகத் திணையை முறியடிக்கும் கிபி. 7 ஆம் நூற்றாண்டின் பக்திப் பேரியக்க முன்னெடுப்பின் போது வீழ்த்தப்பட வேண்டிய வணிக சக்தியின் ஒரு தரப்பையும் ஐக்கியப்படுத்திய திணை அரசியல் செயலொழுங்கு வெள்ளாள – பிராமண தலைமையில் அனைத்துச் சாதிகளையும் ஒன்றுபடுத்தியதாக இருந்தது. முழுமையாக விவசாயத் திணை மேலாதிக்கம் நிலைநிறுத்தப்பட்ட சோழப் பேரரசின் உச்சக் கட்டத்தில் நிலத்துடன் பிணைக்கப்பட்டு இருந்த ஏனைய உழைக்கும் சாதிகளைத் தர வரிசைப்படுத்தி சாதி பேதம் வலுப்படுத்தப்பட்ட போது வெள்ளாள – பிராமண உறவு சமநிலையிலும் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை நல்குவதாகவுமே இருந்தது.
இதன் வெளிப்பாட்டை, பக்தி இயக்க வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவான “பெரிய புராணம்” எனும் காப்பியத்தில் காணலாம். குலோத்துங்க சோழச் சக்கரவர்த்தியின் மந்திரி என்பதோடு வெள்ளாள சமூகத்தவராகவும் விளங்கிய சேக்கிழார் படைத்தளித்த பெரிய புராணம் மேலாதிக்கச் சாதிகள் இரண்டினதும் இணக்கத்தைக் காட்டும் ஒரு படைப்பு. தமது சாதியின் புனிதத்தை வலியுறுத்தும் நன்றிக் கடனாகப் பிராமணரை உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடி இருந்தது பெரிய புராணம். எந்தச் சாதிய வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்தை வெள்ளாளர்கள் கையகப்படுத்திக் கொண்டனரோ அந்த வணிகத் தரப்பாரது நலன்களைத் தமது மேலாதிக்கத்தின் கீழ் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பையும் கூட அந்தப் படைப்பு வெளிப்படுத்தி இருந்தது. வணிகச் சிறுவன் ஒருவனுக்கு நீதி கிடைப்பதற்காக பரம்பொருளாகிய சிவனே வந்து வழக்காடிய திருவிளையாடலையும் இத்தகைய புராணங்கள் வெளிப்படுத்தி இருப்பதனைக் கவனங்கொள்ளலாம்.
திணை அரசியல் செயலொழுங்கில் அதிகாரக் கைமாறுதலின் பொருட்டு வீழ்த்தப்படுகின்ற சாதியை எதிரியென ‘அழித்தொழிக்க’ முற்படாத இந்தப் பண்பு மிகுந்த கவனிப்புக்கு உரியது. வர்க்கச் சமூக முறைமையில் இதனை எதிர்பார்க்க இயலாது. ஆண்டான்கள் ஆதிக்கம் செலுத்திய கிரேக்க – ரோம் சமூகங்களில் அந்த அதிகார வர்க்கம் வணிகத்தையும் மேற்கொண்டிருந்தது. ஆண்டான் – அடிமைச் சமூக முறைமை வீழ்த்தப்பட்டு நிலப்பிரபுத்துவ வர்க்கம் அதிகாரம் பெற்றபோது வணிகம் எதிர் நிலைக்கு உரிய பாவச்செயலாக ஐரோப்பா முழுமையிலும் கணிக்கப்பட்டது. நிலப்பிரபுத்துவச் சமயமாக எழுச்சி பெற்ற கிறிஸ்தவ மதம் வணிக எதி்ர்ப்பைப் பரப்புரை செய்தது. எதிர் கருத்தியலுடைய யூதர்கள் சிறுபான்மையினராக இருந்து ஐரோப்பியச் சமூகத்துக்கான வணிகத்தை மேற்கொண்டனர். ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் யூதர்களது வணிக மோசடி சித்திரிக்கப்படுவது ஐரோப்பியர்களது பார்வையில் வெளிப்படும் யூத – கிறிஸ்தவ முரண்பாட்டின் குறிகாட்டி!
ஐரோப்பியர்கள் தாமே முதலாளித்துவ – வணிக வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டி இருந்த போது போட்டியாளர்களாக எதிர்ப்பட்ட யூதர்கள் மீதான வெறுப்பு மேலும் பன்மடங்காக அதிகரித்தது. தலைமுறை தலைமுறையாக வணிக வளத்துடன் செழிப்புற்றிருந்த அறிவும் பணமும் யூதர்களுக்கு உரியதாக இருந்த காரணத்தால் அவர்களுக்கு எதிரான வன்மத்தை ஐரோப்பியர்கள் வெளிப்படுத்துதல் தவிர்க்கவியலாததாக ஆயிற்று. அதன் உச்சமான கொலை வெறி இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஹிற்லர் தலைமையில் ஜெர்மனியால் மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக ஐரோப்பாவில் இருந்து வெறுக்கப்பட்ட சமூகமாகத் துரத்தப்பட்ட யூதர்களை சென்ற நூற்றாண்டின் இருபதாம் ஆண்டுகளிலேயே பலஸ்தீன மண்ணில் குடியேற்றும் கைங்கரியத்தை நீண்டகால ஏகாதிபத்திய நலனின் பேரால் பிரித்தானிய ஏகாதிபத்தியம் மேற்கொண்டது. தம்மைத் துரத்தியடித்துக் கொலைபாதகம் புரிந்த ஐரோப்பியச் சமூகத்தின் அதிகாரக் கும்பலுடன் கைகோர்த்தவாறு தமக்குப் புகலிடம் தந்து அரவணைத்த பலஸ்தீன மக்கள் மீது கொலைவெறித் தாண்டவத்தை இன்றைய யூத மதப்பிரிவின் அதிகாரக் கும்பல் மேற்கொள்கிறது!
சமூக சக்திகள் தமக்கிடையே எதிர் நிலை – ஐக்கியப்படல் என்பவற்றில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்பதனைக் குறித்த வரலாற்று நிலையில் அவரவர்களது நலனை அடிப்படையாக வைத்தே தீர்மானிப்பர். ஏகாதிபத்தியமாகப் பரிணமிப்பதை நோக்கி வளர்ந்தவாறு இருந்த ஐரோப்பியக் கிறிஸ்தவ அதிகாரத் தரப்பு தொடக்க நிலையில் யூதர்களை எதிரியாக இனங்கண்டது. துரத்தப்பட்ட ஏதிலிகளென அடைக்கலம் வழங்கி அரவணைத்த இஸ்லாமிய மக்களைப் பயங்கரவாத முத்திரை குத்தி எதிரியாகச் சித்திரித்தபடி இன்றைய யூத அதிகாரத் திணை தம்மைத் துரத்திய ஏகாதிபத்தியத் திணையுடன் கூட்டமைத்துள்ளது.
இவ்வகையிலான மாறுபடுகின்ற ஐக்கியமும் – எதிர் நிலையும் என்பதனை வெள்ளாளர் – பிராமணர் எனும் இரு சமூக சக்திகள் இடையிலும் காண இயலும். நிலப்பிரபுத்துவ அதிகாரத்தை நிலைநிறுத்தும் ஆரம்பக் கட்டத்தின் போது இரு தரப்பாரும் ஒன்றுபட்டு இயங்கினர். சுரண்டல் வாய்ப்பு வலுப்பட்ட பின்னர் தம்மைவிட மேலாதிக்கத்தில் பிராமணர் கூடுதல் சலுகைகளுக்கு உரியோராகிவிட்டனர் எனக் கண்டபோது தமக்கான தனித்துவமிக்க தத்துவமாக சைவசித்தாந்தத்தைக் கட்டமைக்க நிர்ப்பந்திக்கப்பட்ட வெள்ளாளர்கள் ஒருவகை எதிர்நிலையை அதன் வாயிலாக வெளிப்படுத்த வேண்டியவர்களாயினர். வெள்ளாளர்களுக்கானதாக இருந்த பிராமணியம் எனும் கட்டத்தைத் தாண்டிய வரலாற்றுச் சூழலின் வெளிப்பாடு இது!
பிரமத்தைக் கடந்த பதி
தமிழகத்தின் பெரும்பகுதி விஜய நகரப் பேரரசின் ஆட்சியின் கீழ் உள்ளடக்கப்பட்ட நிலையில் தமிழும் வெள்ளாளரும் இரண்டாம் தரப்பட நேர்ந்தது. ஆட்சியாளர் அனுசரணையைப் பெற்ற மொழியாகத் தெலுங்கும் சமூக சக்தியாக வெள்ளாளர்களைக் காட்டிலும் பிராமணர்களும் (மற்றும் தமிழகத்தில் புதிய நிலப்பிரபுக்களான தெலுங்கு வம்சாவழியினரும்) மேலான வாய்ப்புகளைப் பெற்ற போது வேதாந்தமும் சமஸ்கிருத மொழியும் மேலாண்மை செலுத்தும் நிலை வளர்ந்து வரலாயிற்று. அதன் பின்னரே வெள்ளாளர்கள் தமிழ் மொழியூடாகத் தமக்கான இறையியல் தத்துவமாக சைவசித்தாந்தத்தை வெளிப்படுத்த நிர்ப்பந்திக்கப்படனர்.
பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுச்சி பெற்ற சைவசித்தாந்தம் பிராமணியத்துடன் அடிப்படை முரண்பாட்டை உடையதல்ல எனும் கருத்தும் புறக்கணிக்க இயலாத ஒன்றே தான். அடிப்படையில் வெள்ளாள – பிராமண முரண் என்பது பகைமைக்கு உரியதல்ல; ஒரே வாழ்வியலுக்கு உரிய இரு சமூக சக்திகள் இடையிலானது என்ற வகையில் ஒத்த பண்புக் கூறுகள் பலவற்றைக் கொண்டிருப்பனவே பிராமணர்களது வேதாந்தமும் வெள்ளாளர்களின் சைவசித்தாந்தமும்!
அதேவேளை பிராமணர்களின் வேதாந்தம் இருக்கு வேதத்தை அடித்தளமாகக் கொண்டு எழுச்சி பெற்றது – சைவசித்தாந்தம் ஆகமங்களை மூலாதாரமாகப் பின்பற்றியது என்பதிலுள்ள பண்பு ரீதியான வேறுபாட்டை மனங்கொள்ளாதிருக்கவும் இயலாது. திராவிடரிய நோக்காளர்கள் வெள்ளாள – பிராமண முரணைத் தொடக்கம் முதலாகப் பகைமைக்கு உரியதாகப் பார்ப்பதில் தவறிழைக்கிறார்கள் என்பதைப் போன்றே இந்து மதப் பற்றாளர்கள் வேதாந்தத்துக்கும் சைவசித்தாந்தத்துக்கும் இடையே அடிப்படையான வேறுபாடு எதுவும் இல்லை எனக் கூறுவதிலும் உள்ளது.
மாயாவாதத்தை முன்னிறுத்தியவாறு உண்மைப் பொருளல்லாதது இந்தப் பிரபஞ்சம், வெளியே உள்ள பிரமம் மட்டுமே உள்பொருள் என்பது வேதாந்தம்; பதி, பிரபஞ்சம், ஆன்மா எனும் முப்பொருள் உண்மையை வலியுறுத்துவது சைவசித்தாந்தம். இருக்கு வேத இலக்கியத்துடன் ஆரியர்களது வருகை ஏற்பட முன்னர் இருந்தே தொன்றுதொட்டு இருந்து வருவதென வலியுறுத்தப்பட்டு வந்த ஆகமம் மட்டுமன்றி அதனை வழங்கிய சிந்துவெளிப் பண்பாட்டுடன் தொடர்புபட்ட மற்றொரு மரபுக்கு உரியதான ஆசீவகம் கிமு. 6 ஆம் நூற்றாண்டு முதல் நாலைந்து நூற்றாண்டுகளாக ஆளுமையுடன் இயங்கிய தமிழக அனுபவங்களை உள்வாங்கியதாக சைவசித்தாந்தக் கருத்தியல் அமைந்துள்ளது. பதி, பிரபஞ்சம், ஆன்மா என்பன மூன்றும் உண்மைப் பொருட்கள் என்பதோடு பதி (கடவுள்) போன்றே மற்றிரண்டும் கூட அனாதியானவை என்பதிலுள்ள ஆசீவகத் தாக்கம் நுண்ணாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று !
கிபி. 7 ஆம் நூற்றாண்டுக்கு உரியவராக ஆய்வுலகம் வலியுறுத்தும் திருமூலர் பெருமத நெறியின் முன்னோடி எனக் கொள்ளப்படுகிற அதேவேளை சித்தர் மரபின் தொடக்குனராகவும் வலியுறுத்தப்படுகிறவர். பெருமதச் சடங்காசாரங்களை நிராகரித்து உண்மைப் பொருளைத் தேடும் ஞானியர்களாகச் சித்தர்கள் கருதப்படுவர்; அதிலே உண்மை உண்டு. பெருமத எழுச்சி ஏற்பட முன்னரே எப்படி திருமூலர் வாயிலாகச் சித்தர் மரபு தொடங்க இயலும்? அவரது கருத்தியல் தளமே சைவசித்தாந்த அடிப்படையாக எவ்வாறு அமைய இயலுகிறது? தொடர்ந்து இயக்கம் கொண்டு வளர்ந்த ஏற்றத்தாழ்வுச் சமூக அமைப்பில் தனக்கான வடிவில் இயங்க இயலாமல் போனபோது ஆசீவகமானது அவைதிக, வைதிக நெறிகள் ஊடாகச் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டமை குறித்து முந்திய இயல்களில் பேசி வந்துள்ளோம். புதிய சூழலுக்கு அமைவாக, கடந்தும் உள்பொதிந்தும் உள்ள பதியையும் தனக்கேயான வாழ்வியலின் உண்மைத் தன்மைகளையும் சைவசித்தாந்த மற்றும் சித்தர்கள் மரபுகள் சார்ந்த இரு வழித்தடங்களிலும் பயணிக்க அடித்தளம் இடும் ஆளுமையாகத் திருமூலரை இனங்காண இயலுமாக உள்ளது !
உடலைப் பேணி வளர்ப்பவரே ஆன்மாவைச் செழுமைப்படுத்திப் பதியெனும் உண்மைப்பொருளைக் கண்டு அதனுடன் கலக்க இயலுமென வலியுறுத்தியவர் திருமூலர். இதே சமகாலத்தில் வீறுகொள்ளத் தொடங்கிய பக்திப் பேரியக்கமும் திருமூலரின் தத்துவத் தேடலும் இணைந்த பரிணமிப்பாகவே 13 ஆம் நூற்றாண்டின் சைவசித்தாந்தம் முன்னிறுத்திய பதிக் கோட்பாடு வெளிப்பட்டது. கிபி. 7 ஆம் நூறாண்டுகுப் பின்னரான தமிழகத்தின் நிலப்பிரபுத்துவம் முழு இந்தியாவிலும் வீச்சுடையதாக அமைந்திருந்தமையும் அதன் பேறாக இந்தியாவுக்குரிய மிகப் பரந்ததும் நீண்டகால ஆட்சியைக் கொண்டிருந்ததும் என்ற வகையில் இந்தியாவின் முதல் நிலைப் பேரரசு என வரலாற்றாசிரியர்களால் வலியுறுத்தப்படுகிற சோழப் பேரரசின் சக்கரவர்த்திகளது ஆள்புலம் சார்ந்த கருத்தியல் விஸ்தீரணத்துடன் உலக மதங்களில் கடவுள் குறித்த அதியுயர் விளக்கத்துக்கு உரியதாக சைவசித்தாந்தத்தின் பதி வெளிப்பட்டிருந்தது !
கடவுளுக்கான அந்தப் ‘பரிபூரண மேலாண்மை’ வேதாந்தத்தின் பிரமத்துக்கு வந்தமையவில்லை. இயற்கை அம்சங்கள் அனைத்தையும் சமநிலையில் வழிபடுவதாக அமைந்த வேத இலக்கியம் கிமு. 6 ஆம் நூற்றாண்டில் ஏற்றத்தாழ்வான வாழ்முறையும் சுரண்டலும் வலுப்பட்டு பேரரசு உருவாக்கங்கள் ஏற்படத் தொடங்கிய சூழலில் வேதக் கருத்தியல் போதுமானதாக இருக்கவில்லை; அப்போது தோற்றம்பெற்ற உபநிடதக் கோட்பாடு இயற்கை உலகுக்கு அப்பாலான பிரமம் பற்றிய தத்துவத் தேடல்களில் இறங்கியது. வைதிக நெறி இத்திசையில் இயங்க முற்பட்ட சமகாலத்தில் வணிகக் கருத்தியலான பௌத்தமும் சமணமும் வலுப்பெற்று வளர்ந்து ஆதிக்க நிலையை விரைவில் எட்டின. அப்போது உருவாகி வந்த பேரரசு வணிக நலனின் பொருட்டு பாதுகாப்புடனான போக்குவரத்துக்கு அவசியப்பட்ட நிர்மாணங்களுக்கு முன்னுரிமை வழங்கியது. அந்தவகையில் அவைதிக மதங்களை, குறிப்பாக பௌத்தத்தை அந்தப் பேரரசுகள் ஆதரித்தன. இயங்கியல் அணுகுமுறையுடன் மாற்றங்களை உள்வாங்கிய பௌத்தம் சூனியவாதத்தை முன்னிறுத்தும் கட்டத்தை எட்டியது. உழைப்பைப் பிரிந்த நிலப்பிரபுத்துவச் சிந்தனை முறைக்கு உகந்ததான அந்த மாயாவாதத்துடன் பிரமத்தை விளக்கங்கொண்ட அத்வைத வேதாந்தக் கோட்பாட்டை சங்கரர் ஒழுங்கமைத்து வெளிப்படுத்திய நிலையிலேயே பின்னர் நிலப்பிரபுத்துவத்துக்கான இந்து மதமாக வைதிக நெறியால் தலைதூக்க இயலுமாக இருந்தது. வெற்றிபெற்று உறுதிப்பட்ட பின்னர் மாயாவாதக் கறைபடிந்த ‘மறைவான பௌத்தர்’ என்ற குற்றச்சாட்டை சங்கரர் மீது சுமத்தியபடியே பிரமக் கோட்பாட்டை பின்வந்த பிராமணியம் புதிய வடிவங்களுக்கு அமைவாக வியாக்கியானப்படுத்தி வந்தது!
எந்த வடிவில் முன்னிறுத்தப்படுகிற பிரமும் பதி அளவுக்கு முழுமைப்படவில்லை. சங்கரரது அத்வைதம் பிரமத்தை மட்டும் உள்பொருளாக கொண்டு மாயையுடன் இணைந்த பிரமத்தின் திரிபுக் கூறான உலகை உண்மைப் பொருளாக மயங்கும் ஆன்மாவையும் பிரமத்தின் விம்பமாகவே வியாக்கியானப்படுத்தியது. இராமானுஜரின் விசிஸ்டாத்வைதம் விசேடித்த பண்புகளுடன் பிரமத்தை வேறுபடுத்திப் புனிதப்படுத்திய போதிலும் ஆன்மாக்களைத் தனித்த உள்பொருளாகக் கொள்ளவில்லை. மத்துவரின் துவைதம் பிரமத்தினின்றும் வேறாக ஆன்மாக்களுக்கான இருப்பை வலியுறுத்திய போதிலும் அதன் பிரமம் பற்றிய விளக்கங்களில் இஸ்லாத்தின் தாக்கம் கவிந்துள்ளதாகக் கூறி நிராகரிக்கப்படும் நிலை மத்துவரது துவைதக் கோட்பாட்டுக்கு நேர்ந்துள்ளது (சொந்த அடித்தள மரபுடன் ‘முழுநிறைவான பரிபூரணத்துவத்தை’ விளக்க இயலாத நெருக்கடி பிரமத்துக்கு). பின்னரான விவேகானந்தரின் செயல்முறை வேதாந்தத்துடன் மீண்டும் பிரமம் ஆன்மாக்களுடன் அத்வைத சங்கமிப்புக்கு உள்ளாகும் வியாக்கியானங்களைப் பெற்ற சூழலில் சமத்துவத்துக்கான போராட்டங்களுடன் இணைத்துப் பார்க்க இயலுமாகி இந்த உலகுக்குள் கடவுள் கரைந்து போகவும் இடமேற்பட்டது !
பிராமண மேலாதிக்கம் என்னதான் ஆன்மீகப் புனித மேலாண்மையைச் சமூகத்தின் மத்தியில் கொண்டிருந்த போதிலும் ‘மறைவான பௌத்தம்’ , ‘தனித்துவப் பண்பில் இஸ்லாத்தின் தாக்குறவு’ எனப் பந்தாடப்படும் கடவுள் கோட்பாடாகவே இருந்து வந்துள்ளது. மாறாக, திருமூலரால் தொடக்கப்பட்டு சந்தான குரவர்களால் 13 ஆம் நூற்றாண்டுக்கு உரியதாக வளர்க்கப்பட்ட பதிக் கோட்பாடு சமூக மேலாதிக்க உச்ச நிலைகளை நோக்கி வளர்ந்து வந்த பரிணமிப்புடன் விருத்திபெற்று வந்ததும் சொந்தக் கோட்பாட்டு அடித்தளப் பரிணமிப்புக்கு உரியதும் என ஏற்கப்பட்டுள்ளது. இவ்வகையில் ஒரு சீரான வளர்ச்சி அமைய இயலுமானதில் தமது தலைமையில் சமூக மேலாதிக்கத்தை வளர்த்தெடுத்த வெள்ளாளர்களுக்கான ஆளுமையைக் காண இயலும். சத்திரியர்கள் ஆக்கிரமித்துத் தர மாறிவருகிற சமூகச் சூழல்களுக்கு ஏற்ற அவசியப்பாட்டின் கருத்தியல்களை ஒட்டுண்ணியாக இருந்துகொண்டு வருவிக்க முயலுகின்ற பிராமணியத்திடம் அத்தகைய ஆளுமை வந்தமையவில்லை !
வேதாகம இணைவு
திணை அரசியல் செயலொழுங்குக்குரிய எமது சமூகத்தில் அரசு யந்திரத்தின் ஒடுக்குமுறையை விடவும் கருத்தியல் மேலாண்மையே தீர்க்கமான பாத்திரம் வகிப்பது. அந்தப் புரிதல் தமக்கான அரசியல் அதிகாரத்தைத் தெலுங்கு பேசும் ஆட்சியாளரிடம் இழந்த பின்னரே வெள்ளாளருக்கு உறைக்க ஆரம்பித்துத் தமக்கான தனித்துவக் கருத்தியல் வெளிப்பாடாகச் சைவசித்தாந்தத்தை வடிவப்படுத்தினர். அதற்கு முன்னரே ஆன்மிகத் தலைமையை உறுதியாகப் பிராமணருக்கு வழங்கித் தம்மைவிடவும் புனிதச் சாதியெனக் கருவறை அதிகாரத்தையும் தமது படைப்புகளூடாக வெளிப்படுத்தி இருந்த அங்கீகாரம் காரணமாக வெள்ளாளர்களால் ஆன்மிகத் தளச் சமத்துவத்தைப் பிராமணர்களுடன் எட்ட இயலாமல் போனது.
மற்றொரு அம்சம் மிகப் பிரதானமானது. பிராமணியம் சமூக மாற்றங்களை உள்வாங்கிப் புதிய சூழலுக்கு அமைவான மாறுபட்ட கருத்தியல்களை வெளிப்படுத்த வல்லதாகத் திகழ்வது. நிலப்பிரபுத்துவக் கொடுமுடியாக வெளிப்பட்ட சைவசித்தாந்தத்தினால் அந்நிய ஆக்கிரமிப்புக்கு ஆட்பட்டிருந்த காலத்துச் சுதந்திரப் போராட்டக் களத்துக்கு அமைவான கருத்தியலை வழங்க இயலவில்லை. சுதந்திரப் போராட்டப் பேரெழுச்சியின் தமிழகத்துக்கான முதல் அரசியல் தலைவராக வெளிப்பட்ட வ.உ. சிதம்பரனார் சைவசித்தாந்தத்துக்குச் சமகாலப் புரிதலுடன் உரை எழுதிய போதிலும் சுதந்திரப் போராட்டக் கருத்தியலாகக் காட்ட இயலாத நிலையே இருந்தது. அரசியல் வாழ்வுடன் தொடர்பற்ற சமய – ஆன்மிக நாட்டத்துக்கு உரியதாக மட்டுப்பட்டு இருந்தது சைவசித்தாந்த அபிமானம்!
மாறாக, கிமு. 6 ஆம் நூற்றாண்டின் முதல் பேரரசு உருவாக்கத் தொடக்கத்தில் வெளிப்பட்ட பிரமக் கோட்பாடு நிலப்பிரபுத்துவ உச்ச வளர்ச்சிகள் எட்டப்பட்ட போது (கிபி. 12 ஆம் நூற்றாண்டளவில்) விசேடித்த பிரமமாக விசிஸ்டாத்வைதத்திலும் முற்றிலும் பிரிந்து தனி நிலைக்குரிய பிரமமாக துவைதத்திலும் வியாக்கியானப்படுத்த இயலுமாக இருந்தது. மேலாதிக்கங்களைத் தகர்த்து விடுதலைத் தேசங்களாகச் சுதந்திரம் பெறத் துடித்த நவீன சமூகத்தில் செயல்முறை வேதாந்தமாக அரசியல் நெறிக்குரிய தத்துவமாகவும் அத்வைதத்தால் தகவமைப்புப்பெற இயலுமாக இருந்துள்ளது. தேச சுதந்திரத்தையும் கடந்து சமூக – பொருளாதார சமத்துவத்தை எட்டுவதற்கான கருத்தியல் அவசியப்பட்ட போது வேதாந்தத்தைக் கடந்து ‘பச்சை வேதத்துக்கு’ செல்ல பாரதியால் வழிப்படுத்தவும் பிராமணியத்தின் நெகிழ்வுப் பண்பு இடமளிப்பதாக அமைவு பெற்றுள்ளது !
பிராமணர்கள் மட்டுமே பிரமத்தை உணரவும் இறை நிலை எய்தவும் இயலுமெனச் சங்கரரது அத்வைதம் (நிலப்பிரபுத்துவம் அதிகாரத்தை வென்றெடுத்த ஆரம்ப நிலையில்) அமைய, ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ எனும் முதலாளித்துவச் சமூக நியதிக்கு உரியதாக விவேகானந்தரின் ‘செயல்முறை வேதாந்தம்’ எனப் பரிணமித்துப் பிராமணரல்லாதோருக்குமான அத்வைதமாக – இந்து விடுதலை நெறிக்கு உரியதாக – வியாபிதம்பெற இருந்த வாய்ப்பு, அதற்குமப்பால் பூரண சமத்துவத்துக்கான ‘பச்சை வேதம்’ என்பதாகப் பிராமணத் திணையால் அமைவுபெறச் சாத்தியப்படுகின்ற வரலாற்று இயங்கு நிலை என்பன கவனிப்புக்குரியன. புராதனப் பொதுவுடமைச் சமூக முறையுடன் நாடோடிகளாக இந்தியாவினுள் பிரவேசித்த இருக்கு வேத ஆரியர்களிடையே பிராமணர் என்பது ஆன்மிக நாட்டமுள்ள எவரும் பெறத்தக்க வர்ணப் பிரிவு தான். சமூக மாற்றத்துடனான வரலாற்றுத் தளங்களைக் கவனங்கொள்ளாத பிராமண எதிர்ப்பு மனப்பாங்கு காரணமாக சமத்துவ சமூக உருவாக்கத்துக்கும் பிராமணியத்தால் வழிகாட்ட இயலும் என்ற கருத்தை விளங்கிக்கொள்ளுதல் சாத்தியமற்றது தான் !
அதேவேளை, மேலாதிக்க ஒடுக்குமுறையுடன் பிராமணியம் இழைத்துவரும் கொடூரங்களை இனங்காண்பதையும் கைவிட்டுவிட இயலாது. அதுகூட ‘ஆரியச் சதியே பிராமணியம்’ என்ற அணுகுமுறையுடன் கையாளத்தக்கது அல்ல என்ற தெளிவுக்கு உட்பட்டு அமைந்தாக வேண்டும். சமத்துவ வாழ்நிலையுடன் இந்தியாவினுள் நுழைந்த ஆரியர்கள் இங்கு நிலையான விவசாயப் பண்பாட்டு வாழ்வியலுக்கு ஆட்பட்ட மாற்றத்தை எட்டி ஏற்றத்தாழ்வுச் சமூக நியதிகளை வந்தடைந்த போது திராவிடப் பூசகர்களுடன் இணைந்த புதிய பிராமணச் சாதி என்ற வடிவம் கைவரப்பெற்ற பின்னரே குடும்பத் தொடர்ச்சி உடைய, வம்சாவழியான பிராமண வர்ணத்தட்டு உருப்பெற்றது.
தொன்றுதொட்டு இருந்து வந்த திராவிடருக்கு உரிய ஆகமத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பெற்ற மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் என்பவற்றை உள்ளடக்கும் கோயிலில் உச்சாடனம் செய்யப்படும் மந்திரமாக இருக்கு வேதம் மாற்றம்பெற்ற பின்னர் புதிய சமூக சக்தியாக பிராமணச் சாதி வடிவம் பெற்றுக்கொண்டது. கோயிலை மையமாக வைத்துச் சமூக மேலாதிக்கத்தைச் சாத்தியப்படுத்துதல் இந்த ஆகம – வேத இணைப்பின் பேறு !
பிராமணித்தின் சாதி பேத வாழ்வியலுக்கு எதிரான இயக்கம் ஆயிரம் வருடத்துக்கு முன்னரே மேற்கிளம்புவதில் கூட பிராமணர் ஒருவருக்குப் பங்கிருந்துள்ளது. “சாதி மறுப்பு இயக்கங்கள் : வீர சைவம், சீக்கியம்” எனும் பொருளுக்குரிய அடுத்த இயலில் அது குறித்துப் பேச இயலும் !
தொடரும்.