இலங்கையில் தமிழ் பௌத்தர் - பகுதி 3
Arts
22 நிமிட வாசிப்பு

இலங்கையில் தமிழ் பௌத்தர் – பகுதி 3

November 29, 2023 | Ezhuna
'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.

சிங்கள மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன

தமிழ்நாட்டில் ஏற்பட்ட சைவ மறுமலர்ச்சி இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்பட முடியும். இரு நாடுகளுக்கும் இடையில் இந்து சமய உறவுகள் இருந்ததற்கான ஆதாரமாக இலங்கை வடமாகாணத்தில் அமைந்துள்ள திருக்கேதீசுவரம் பற்றிய பக்தி பாடல் ஒன்றும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில்  அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் கோயிலைப் பற்றிய பக்தி பாடல் ஒன்றும் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டுள்ளமையை கூறலாம். மேலும் சைவ மத பிரச்சாரகராக விளங்கிய சுந்தரர் கிபி. 9 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் இந்த சிவன் கோவிலில் ‘கேது வழிபாடு’ ஒன்றையும் நடத்தியுள்ளதாக தெரிகிறது. ‘கேது’ என்பது பாம்பின் வடிவம். இங்கு ‘சைவ பாத’ வழிபாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாக பழங்குடியினரிடையே இருந்த ‘புத்தர் சிரிபா’ வழிபாடு என்பது ‘ஸ்ரீ பாதஸ்தான புத்தர் சிரிபா வந்தனா’ பாதயாத்திரைகளில் இருந்து பிறந்திருக்கலாம்  என்று நினைக்கலாம்.

தமிழ் பௌத்தரும் தமிழ் சிவபக்தரும் பொதுவான இலக்கை அடையும் மார்க்கம் ஒன்று அவசியமாகிறது. அதுவே மறுபிறவி தொடர்பான கருத்து. மறுபிறப்பு என்பது கர்மாவின் காரணமாக நிகழ்கின்றது என்று இரு குழுக்களும் நம்புகின்றன. ஆனால் இதில் ஒரு வித்தியாசம் உள்ளது. அதாவது, பௌத்தர் தர்மத்தின் மூலம் கர்மாவை வெல்கிறார். சிவ பக்தன் சிவ நம்பிக்கை மூலம் சிவன் மீது நம்பிக்கை கொண்ட வாழ்க்கையை நடத்துவதன் மூலம் அதனை அடையலாம் என்று நம்புகிறான். சிவன்-பார்வதி காதல் உறவு இதற்கு ஒரு நல்ல உதாரணம். சைவ தர்மப் பிரச்சாரகர் சம்பந்தர் எழுதிய பக்திப் பாடல்களில் இந்த விஷயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன என்பது அறியக் கிடைக்கின்றது.

திருகோணமலையில் உள்ள சிவன் கோயில், சம்பந்தர் என்ற பெரும் சிவ பக்தரால் போற்றிப் பாடப்பட்ட ஒரு சிவஸ்தலமாகும். அவர் அதை தெற்கு கைலாஷம் என்றே கருதினார் (கைலாச பர்வதம் என்பதே சிவபெருமானின் வாச பூமியாகும்). கைலாசம் என்பது பசு உருவம் பொறிக்கப்பட்ட கொடியால் உருவகப்படுத்தப்படுகிறது. சம்பந்தர் தம் பாசுரத்தில், முதலில் கோவிலில் உள்ள கொடி பற்றிய கீர்த்தனையையே முன்வைத்துள்ளார். அவரது கீர்த்தனையின்  இறுதியில் திருகோணமலையில் உள்ள இக்கோயில் அனைத்து சிவன் கோவில்களைக் காட்டிலும் உயர்வானது என்று குறிப்பிட்டுள்ளதுடன் அவர்களுக்காக அல்ல, அங்கு வாழும் சிவபெருமானுக்காக பாடுபவர்களாக இருந்தாலும் சரி, கேட்பவராக இருந்தாலும் சரி, அனைவரும் ஒரே மாதிரியான உடல் வடிவத்திலேயே சுவர்க்கபுரியை அடைவார்கள் என்று கூறப்படுகிறது.

தமிழ் பௌத்தத்தின் வீழ்ச்சிக்கு இது போன்ற பாடல்கள்தான் காரணமாக அமைந்தன என்று கூறப்பட்ட போதும், யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி இலங்கைத் தீவு முழுவதும் தமிழ் பௌத்தத்தின் வீழ்ச்சிக்கும் இது காரணமாக அமைந்தது. சிவதர்ம போதனையை  செய்ய முனைந்தவர்கள் அனைவரிலும் மாணிக்க வாசகர் சுவாமிகள் என்பவரே ஈழத்தில் இந்து தர்மம் மேலெழுந்து வர மூல காரணமாக இருந்தவராகும் என்று கூற முடியும் (The furtherance of saivism in Ilam). இது தொடர்பில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால 1958 இல் வெளியிடப்பட்ட  ஔவை எஸ். துரைசாமி பிள்ளையின் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற இலக்கியம் சம்பந்தப்பட்ட நூலில் ஒரு அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

manicavasagar

மாணிக்கவாசகரின் சொந்த ஊர் தமிழ்நாடு. கிபி. 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பாண்டிய மன்னனுக்கு குதிரைகளை வாங்கிக் கொடுக்கச் சென்று சிவபக்தனாக மாறியதாக நம்பப்படுகிறது. திருப்பெருந்துறை என்ற இடத்தில் பணத்தை எடுத்துக்கொண்டு குதிரை வாங்குவதற்காக புறப்பட்ட  இவருடன் திருவாதவூர் என்ற  இடத்தில் இருந்து ஈழத்து அரசர் ஒருவர் இணைந்து சிதம்பரம் சென்றதாகவும் அவ்வேளை மாணிக்கவாசகர் பௌத்த பிக்கு ஒருவருடன் மத வாதவிவாதத்தில் ஈடுபட்டதாகவும் பௌத்த துறவி வாதத்தில் தோற்றத்துடன் அவரும் சிவபக்தனாக மாறினார் என்றும் அந்த ஈழ மன்னனும் சிவ பக்தனாக மாறியதுடன் அரசனின் மகளையும் அவள் ஊமையாக இருந்ததிலிருந்து குணமாக்கினார் என்றும் புராணம் கூறுகிறது.

மேற் சொல்லப்பட்ட நூலில் இப்படிப்பட்ட கதைகள் பல இருந்தாலும், அப்படிப்பட்ட ஒரு ஈழத்துச் சிங்கள மன்னன் தொடர்பில் சரித்திர சான்றுகள் இல்லை. சில சமயங்களில் இந்த ஈழ மன்னன் என்பவன் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒரு மன்னனாக இருக்கலாம். எப்படி இருப்பினும், இந்த கருத்துக்களிலிருந்து வெளிப்படும் ஒரு உண்மை உள்ளது. அதாவது யாழ்ப்பாணக் கடற்கரையானது தமிழகக் கடற்கரையில் உள்ள திருப்பெருந்துறைக்கு மிக அருகில் உள்ளது. சிறிது காலம் மாணிக்கவாசகர் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்து இந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று ஊகிக்க முடியும். அவர் வியாபாரிகள் மற்றும் மீனவர்களுடன் மன்னாருக்கு வந்தார் என்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணினார் என்றும் தெரிய வருகிறது. மாணிக்கவாசகர், இலங்கையில் ஒரு மத குருவாக பிரசித்தம் பெற்றிருந்தார் என்றும் அதற்கு சாட்சியாக கொழும்பு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் கிபி.11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மாணிக்கவாசகரின் பித்தளைச் சிலையையும் கூறலாம்.

இலங்கையில் சைவ சமயம் பரவியதற்கு இங்கு வசித்த சோழ மக்கள் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இந்த மக்கள் குழுவினருக்கு சமய வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக கிபி. 11 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் முதலாம் இராஜேந்திர மன்னர் நல்லூர் சிவன் கோவிலை கட்டி பூஜை செய்ததாக வரலாற்று சான்றுகள் உள்ளன. பின்னர் தமிழ் பௌத்த மேலாதிக்கத்திற்கு எதிராக நல்லூர் கந்தரோடையை மையமாக கொண்ட தமிழ் சைவசமய ஆதிக்கம் உயர்ச்சியடைந்திருக்கலாம் என்று அனுமானிக்க இடம் உண்டு. மாவிட்டபுரத்தில் சோழ இளவரசி ஒருவர் கந்தசுவாமி கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியதாக வரலாற்று சான்றுகள் உள்ளன. அவர் கதிரமலை என்ற இடத்தில் வசித்த யாழ்ப்பாண அரசரை மணந்தார் என்றும், அவர்கள் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களை சைவத்திற்கு மாற்றியதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன. கதிரமலை அருகே உள்ள கந்தரோடை தீவுகளின் கூட்டமாகும். கந்தரோடை என்பது புதிய பெயர். முதலில் இருந்த பெயர் இந்து மதத்தை சேர்ந்தது என்று கூறப்படுகிறது.

பாளி மரபுப்படி சோழர்கள் பௌத்தத்தின் எதிரிகள். ஆனால் ‘சோழர்கால பௌத்தம்’ என்றொரு கருத்து இருந்ததைக் குறிப்பிடத்தான் வேண்டும். இங்கு சோழர்கள் பௌத்த சமய அனுசரணையாளர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ விஜய என்ற பேரரசரின் வேண்டுகோளின்படி சோழர்களால் சோழர் துறைமுகத்திற்கு அருகில் நாகப்பட்டிணம் என்ற இடத்தில் ஒரு பெரிய புத்த விஹாரை கட்டப்பட்டது. அதற்கு ஆனைமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள அனைவரும் பங்களிப்பு செய்துள்ளனர் என்று தெரிய வருகிறது. இது தொடர்பில் லாகர் லேடன் (Larger Laydon) அவர்களின் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜராஜன் என்ற சோழ மன்னன் ஒரு புத்த கோவிலுக்கு தன் பெயரை வைத்திருக்கலாம் என்று நினைப்பதற்கான காரணங்கள் உள்ளன. அவரது பெரும் கோயில் திட்டமான தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட சிவன் கோவிலுக்கு எவ்வாறு ‘ராஜராஜேஸ்வரம்’ என்று பெயர் சூட்டினாரோ அதேபோல் திருகோணமலை சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள பௌத்த விகாரைக்கு ‘இராஜராஜப்பெரும்பள்ளி’ என்று பெயர் வைக்க இணக்கம் தெரிவித்தார் என்று கூறப்படுகிறது. ‘பெரும்பள்ளி’ என்பதனை தமிழில் ‘மகா விஹாரை’ என்று குறிப்பிடலாம். ‘இராஜராஜன்’ என்ற பெயர் சோழ மன்னனால் சேர்க்கப்பட்டது. இந்த விஹாரை திருகோணமலையில் உள்ள பெரியகுளம்  என்ற இடத்தில் உள்ளது. இந்த இடத்தைப் பற்றி மற்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

சோழர்களின் வருகைக்கு முன்னர் கடலோரப் பகுதிகளில் தமிழ் பௌத்தம் பரவி இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. கிழக்கு கடற்கரையில் திரியாய் மற்றும் குச்சவேலியில் காணப்படுகின்ற கிபி. 8,9 ஆம் நூற்றாண்டுகளில் பொறிக்கப்பட்ட பல்லவகால எழுத்துக்களில் எழுதப்பட்ட சமஸ்கிருத கல்வெட்டுக்களிலிருந்து திருகோணமலையில் பல நூற்றாண்டுகளாக தமிழ் பௌத்தர்கள் இருந்தார்கள் என்பது புலனாகிறது. இவர்கள் இராஜராஜபெரும்பள்ளி என்ற தமிழ் பௌத்த விஹாரை கட்டப்பட்ட பிறகு அவர்கள் அதனை பூஜிப்பவர்களாக ஆனார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இலங்கையில் தமிழ் பௌத்தம், தமிழ் விஹாரை கட்டிடக்கலை  போன்றவை சோழர்களின் ஆதரவிலேயே பிறந்தன. இன்னும் ஒரு விஷயத்தையும் கூற வேண்டியுள்ளது. இலங்கை தீவு ஒரு காலத்தில்  ‘மும்முடிச்சோழமண்டலம்’ என்று அழைக்கப்பட்டது. இந்தப் பெயர் தொடர்பில் திருக்கேதீஸ்வரம், ஸ்ரீபாதி கிராமம் மற்றும் இராஜராஜபெரும்பள்ளி ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்முடிச்சோழன்; மூன்று கிரீடங்கள் கொண்ட சோழ மன்னன். அவர் சேர (கேரளா) – சோழ – பாண்டிய ஆகிய ராஜ்ஜியங்களின் கிரீடத்தை வைத்திருந்தார். அதன்படி தமிழ் நாடும் சோழர்களுக்கு சொந்தமானதாக இருந்தது. அப்போது, இலங்கைத் தீவும் சோழ மன்னனின் கீழ் தமிழ்நாட்டின் மாநிலமாக மாறி இருந்திருக்கலாம். அக்காலத்தில் இலங்கைத் தீவு ‘சேயகம்’ (பிள்ளை நாடு) என்று அழைக்கப்பட்டதுடன் தமிழ்நாடு ‘தாயகம்’ அல்லது தாய் நாடு என்றும் அழைக்கப்பட்டுள்ளது. அதனால் சேயகம் அல்லது பிள்ளை நாடு எப்போதுமே தாய் நாட்டையும் தாய் நாட்டின் கலாச்சாரத்தையும் சார்ந்தே இருந்தது என்பதுடன் தாயகம் சேயகத்தை உணவளித்து போசித்தும் வந்தது என்று நம்பலாம்.

shivan kovil

சோழர்கள் இலங்கைத் தீவின் கிழக்குப் பகுதியில் சிறப்புக் கவனம் செலுத்தினர். திருகோணமலைக்கும் தென்கிழக்காசியாவுடனான வர்த்தகத்திற்கும் நெருங்கிய தொடர்பு காணப்பட்டமை இதற்குக் காரணமாக அமைந்தது. தெற்காசியா உடனான இணைப்புக்கு திருகோணமலை அமைவிடம் முக்கியமானது என்று கருதப்பட்டது. சோழர்களுக்கு அடிபணிந்திருந்த அக் காலத்தில், தமிழகத்தில் சில ஊர் பெயர்களை மாற்றினார்கள். அதேபோல் திருகோணமலையில் உள்ள கிராமத்தின் பெயர்களையும் மாற்றி ‘மண்டலம்’ என்று வைத்தார்கள். துணை மண்டலங்கள் ‘வளநாடு’ என்று அழைக்கப்பட்டன. இராஜராஜபெரும்பள்ளியில் இருந்து கிடைக்கப் பெற்ற கல்வெட்டுக்களின்படி சோழர்கள் திருகோணமலையை ‘பரகேசரி வளநாடு’ என்று அறிமுகப்படுத்தியதாக தமிழ் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. சில இடங்களில் ‘அபயாஷா’ வளநாடு என்றும் மற்றும் சில இடங்களில் இராஜேந்திரசிங்கன் (ராஜேந்திரசிங்க என்பதை மேற்சொன்ன விதத்தில் உச்சரித்திருக்கலாம்) வளநாடு என்ற பெயர்களும் காணப்பட்டுள்ளது.

தமிழ் கல்வெட்டுகள் அதிகம் உள்ள இடம் இராஜராஜபெரும்பள்ளி என்று கருத முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக  அங்கு கிடைக்கப்பெற்ற 16 ஆவணங்களில் அதிகமாகமானவை அழிக்கப்பட்டுவிட்டன.

சோழர்கள் தீவிர சிவபக்தர்களாக இருந்தபோதிலும், அவர்கள் வைணவம், பௌத்தம், சமணம் போன்றவற்றையும் ஆதரித்து வந்ததாக தெரிகிறது. இந்த ஆதரவு தென்னிந்தியாவின் மத நல்லிணக்கத்தை தெளிவுபடுத்துகிறது. ஆனால் இலங்கையின் சிங்கள பௌத்தர்கள் சோழர்களுக்கு எதிராக செயல்பட்டார்கள். 

சோழர்கள் திருகோணமலையை சைவசமயக் கோட்டையாகப் பராமரிக்க முயன்றதற்கான ஆதாரங்கள் போதுமான அளவுக்கு கிடைத்துள்ளன. திருகோணமலையில் பிரமாண்டமான சிவன் கோயிலைக் கட்டியபோது, சோழ நாட்டிலிருந்து தமிழ் சைவ தொண்டர்களை வரவழைத்து கோவிலை பராமரிக்கவும், பழுது பார்க்கவும், அதற்குப் பொறுப்பாக குளக்கோட்டன் என்ற சோழ இளவரசனை நியமித்ததாகவும் கோணேசர் கல்வெட்டு என்னும் கோயிலின் வரலாறு குறித்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி ஆவணத்தின்படி, கந்தளாய் குளமானது கோவிலின் பயிர்ச்செய்கைக்கு தண்ணீர் பெறுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. கந்தளாய் ஏரிக்கு அருகில் ‘சதுர்வேதிமங்கலம்’ என்ற பிராமண கிராமம் உருவாக்கப்பட்டது. சோழர் காலத்திற்குப் பிறகும் இந்த ஊர் இருந்துவந்துள்ளது. இராஜராஜப்பெரும்பள்ளி தமிழ் பௌத்த விஹாரையானது தீவிர சோழ சைவாகம சூழலில் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இராஜராஜபெரும்பள்ளி கோயில் கடந்த காலங்களில் வேறு பல பெயர்களாலும் அறியப்பட்டிருந்து. தமிழ் கல்வெட்டுகளில் அந்த பெயர்கள் ‘வெல்கா விஹாரை’ , ‘வெல்கா வெரத்து’ , ‘வெல்கம் வேரம்’, ‘வெல்காமபள்ளி’ முதலிய பெயர்களில் அறியப்பட்டிருந்து. நான்கு கல்வெட்டுகள் ‘வெல்கம் வேரம்’ பற்றிக் குறிப்பிடுகின்றன. ‘வெல்கம்பள்ளி’ என்ற பெயர் இரண்டு கல்வெட்டுகளில் காணப்படுகிறது. விஹாரம் அல்லது விஹாரை என்பது தமிழில் கோயிலுக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகிறது. ‘வேரம்’ என்ற சொல் கொச்சையான அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ்ச் சொல் ஆகும். வெல்காமபள்ளி என்றால் ‘வெல்கம பன்சல’ என்று அர்த்தப்படுத்தப்பட்டது. எனினும், இந்த வெல்கம விஹாரையை வழிபட்டவர்கள் தமிழ் பௌத்தர்களா அல்லது சிங்கள பௌத்தர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த விஹாரையின் கட்டிடக்கலை முற்றிலும் திராவிடமயமானது. அனுராதபுரம் – பொலன்னறுவ ஆகிய இடங்களில் தாபிக்கப்பட்டு இருந்த விஹாரைகள் சிங்களப் பாணியிலான விஹாரைகளாகவும் புனித இடமாகவும் இருந்திருக்க வேண்டும். வெல்கம வெஹெர பின்னர் ‘நாதனார் கோவில்’ என்று எவ்வாறு அழைக்கப்பட்டது என்பது தொடர்பில் தகவல்கள் இல்லை .

சிதிலமடைந்த வெல்கம விஹாரையின் எச்சங்கள் உள்ளூர் தமிழர்களால் சிவன் கோவிலின் எச்சங்கள் என்று கருதப்பட்டன. மாணிக்கவாசர் எழுதிய திருவாசகம் என்ற பாசுரத்தில் சிவபெருமான் ‘நாதா’ என்று அழைக்கப்படுகிறார். சமஸ்கிருதத்தில் நாதா என்றால் கடவுள், அதாவது சிவன் என்று பொருள்படும். நாத நம்பிக்கையானது வடக்கு வங்காளத்தின் இமயமலைப் பிரதேசம் மற்றும் தாந்திரீகத்தினை பின்பற்றுவோரின் நம்பிக்கையாகவும் இருந்தது. பின்னர் அது பௌத்தத்துடன் தொடர்புடையதாக மாறியது. காரணம் அவலோகிதேஸ்வரர் உருவத்தில் மறைந்திருந்த போதிசத்துவர் நாதா என்று அறியப்பட்டதாகும். இதனால் ஞானம் பெற்ற போதிசத்துவர்கள் சிவனுக்கு சமமானவர்கள் ஆனார்கள். இவை மற்றும் பிற காரணிகள் வெல்கம வெஹெர, நாதனார் கோயிலாக பரிணாம வளர்ச்சியடைய வழிவகுத்தன. தேரவாத பௌத்தர்களால் மகாயான தாந்திரீகங்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டாலும், தேரவாதிகளின் மணிமகுடமாகக் கருதப்படும் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்குப் பக்கத்தில் நாதா கோயில் ஒன்று இப்போதும் பராமரிக்கப்படுவதைக் காணலாம்.

இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் பீட்டர் ஷோல்க், வெல்கம வெஹர என்ற இடத்தில் அணையா விளக்கொன்று காணப்பட்டது தொடர்பில் ஆராய்ந்த போது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அங்கு ஒரு இந்து கோவில் இருந்ததாக ஊகிக்கிறார். இந்த கோவிலுக்கு அணையாத விளக்குகள் என்று அழைக்கப்படுகின்ற ‘நந்தாவிளக்கு’, ‘நொந்த விளக்கு’, ‘நுந்த விளக்கு’ என பல பெயர்கள் கொண்ட விளக்குகளை காணிக்கையாக கொடுத்தவர்கள் தொடர்பில் பல ஆவணங்களை மேற்படி ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார். அந்த ஆவணங்களின்படி சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை இந்த உலோக விளக்குகள் எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த தீபங்களுக்கு தொடர்ச்சியாக நெய் வார்ப்பதற்காக 84 பசுக்கள் காணிக்கையாக வழங்கப்பட்டிருந்தது என்றும், அந்தப் பசுக்களிடமிருந்து பெறப்படும் நெய்யால் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் மற்றொரு ஆவணம் கூறுகிறது. பேராசிரியர் அவர்களின் கூற்றுப்படி, இத்தகைய பாரம்பரியம் கிபி. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவில் பிரபலமாக காணப்பட்ட ஒரு இந்து சடங்கு முறை ஆகும். பௌத்த விஹாரை வழிபாட்டிலும் விளக்குப் பூஜை நடத்தும் பாரம்பரியம் உண்டு. புத்தரை விளக்குக்கு ஒப்பிடுகிறார்கள். ‘பன்னிரு மகா தீபம்’ எனப்படும் அணையாத உலோக விளக்கும் புத்தருக்கு ஏற்றப்படுகிறது. ஆனால் நந்தா விளக்கு என்று அழைக்கப்படும் தீபம் அங்கு வாழும் தேவர்களுக்கு அல்லது கடவுளுக்குப் படைக்கப்பட்டதாக வெல்கம விஹாரை தொடர்பான மற்றொரு ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. மறுபுறத்தில் புத்தர் ஒரு கடவுள் அல்ல என்றும் அவர் ‘தேவாதி தேவர்’ என்றும் வர்ணிக்கப்படுகிறது. ஆனால் மற்றொரு விடுவிக்கப்படாத புதிர் ஒன்றும் உள்ளது. அதாவது புத்தரின் பேரில் 05 காளைகளும் 35 பசுக்களும் நன்றிக் காணிக்கை செலுத்தியதாக (புண்ணியத்துக்கு) மற்றொரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்த விலங்குகள் கோயிலைப் பராமரிக்க அர்ப்பணிக்கப்பட்டவை என்று அனுமானிக்கலாம். இந்த உண்மைகள் அனைத்தையும் மூன்று வழிகளில் விளக்கலாம். முதலாவதாக, இந்துக்கள் புத்தரைக் கடவுளாக வழிபட்டிருக்கலாம். புத்தர் தமிழ் மொழியில் ‘அய்யனார்’ என்றும் அழைக்கப்படுகிறார். இரண்டாவதாக, புத்தருக்கும் கடவுள்களுக்கும் இங்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மூன்றாவதாக, புத்தருக்கான கடவுள்களின் காணிக்கையிலும் அவர்கள் அதே முறையைப் பின்பற்றியுள்ளனர். வடக்கு கிழக்கில் மட்டுமன்றி சிங்கள பௌத்த மையங்களான அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய இடங்களிலும் தமிழ் பௌத்தம் இருந்ததை அந்தந்த பிரதேசங்களில் கிடைத்த தமிழ் கல்வெட்டுகள் காட்டுகின்றன என்று கூற முடியும்.

அநுராதபுரத்தில் தமிழ் இந்து இடிபாடுகள் இருப்பதாக நம்பப்படும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு, அவ்விடத்தில் ‘மாக்கோடைப்  பள்ளி’ என்ற புத்த கோவில் இருந்ததாக குறிப்பிடுகிறது. அந்த ஆவணத்தின்படி, இந்த கோயிலானது தருமபாலன் (தர்மபாலன்) என்ற தமிழ் பௌத்த துறவியால் கட்டப்பட்டது என்றும் அதை தமிழ் பேசும் வணிகர் குழுவான ‘நான்கு நாடார்’ வணிகச் சமூகத்தினர் கவனித்து பராமரித்து வந்தனர் என்றும் கூறப்படுகின்றது. இந்த கோயிலின் பெயரால் மற்றொரு முக்கியமான விஷயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மாக்கோடை என்ற இடப்பெயர் இடைக்கால கேரளாவின் தலைநகராக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. அந்தத் தலைநகரின் முக்கிய பௌத்த மையமாக மாக்கோடைப்பள்ளி இருந்துள்ளது. அப்படியானால், கேரளாவிலிருந்து இங்கு வந்த கேரளத் துறவிகள் அனுராதபுரத்தில் அந்தப் பெயரில் ஒரு கோயிலைக் கட்டியிருக்க வேண்டும். இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தமிழ் ஆவணம் கிபி. 9 – 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதனை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அப்போது கேரளாவில் இந்து எழுச்சிக் கலவரங்கள்  நடந்து கொண்டிருந்ததால் கேரளாவில் இருந்து தப்பி ஓடி வந்த தமிழ் பௌத்த துறவி ஒருவர் இந்த விஹாரையை கட்டியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இலங்கையின் தமிழ் கல்வெட்டுகளில் உள்ள (The Tamil Inscriptions, part ii, p 15) ஆவணத்தின்படி, ஆயிரம் திசைகளில் இருந்து வந்த 500 தமிழ் வணிகர்கள் (திசை ஆயிரத்து ஐந்நூறுவர்) பொலன்னறுவையில் ஒரு கோவிலை பராமரித்து வந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

காலனித்துவ காலத்திற்கு முன்பே சிங்கள பௌத்தமும் தமிழ் இந்துமதமும் தனித்தனியாகவே இருந்தன. பௌத்தத்தைச் சுற்றி சிங்கள மக்கள் ஒன்றிணைந்ததால், அது ஒரு இனவாத மதமாக மாறியது. இது தமிழ் பௌத்தத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் மீண்டும் சுதந்திரக் குழுவின் தலைமையில் பௌத்தம் ஆரம்பமானது. ஆனால் சிங்கள பௌத்த இனவாதத்தால் தமிழ் பௌத்தம் அதிலிருந்து ஆதரவைப் பெறவில்லை. 

13 ஆம் நூற்றாண்டில், தமிழ் பௌத்தத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான பல காரணிகள் பின்னணியில் காணப்பட்டன. முதலாவதாக, மேலே குறிப்பிட்டதுபோல், சிவாகமத்தின் வளர்ச்சி தமிழ்நாட்டில் சைவ சித்தாந்தமாக வளர்ந்தது. தென்னிந்தியாவின் தொண்டை மண்டலத்திலிருந்து வந்த சிவாகம வெள்ளாளச் சாதியைச் சேர்ந்த பல குடும்பங்கள் யாழ்ப்பாண கிராமப் பகுதிகளில் குடியேறினர். பௌத்த தத்துவத்தை ‘சிவஞான சித்தியார்’ என்ற நூல் அலசி ஆராய்ந்ததுடன் பௌத்த சமயம் முற்றாக மறுத்தலிக்கப்பட்டது. கதை வடிவில் வழங்கப்பட்ட ஸ்கந்த புராணம் என்ற சைவ சித்தாந்தத் தத்துவம் யாழ்ப்பாணத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களிலும் கந்த புராணம் பயன்படுத்தப்பட்டது.

vallipuram kovil

அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் தமிழ் பௌத்தம்  முற்றாக மறைந்துவிட்டது. ஒரு சில இடிபாடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. வல்லிபுரம் ஒரு காலத்தில் பிரசித்தி பெற்ற பௌத்தப் பிரதேசமாக இருந்தது. இன்று வல்லிபுரம், விஷ்ணு கோயிலாக மாறியிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இவ்விதம் சிந்திப்பதற்கு பல ஆதாரங்கள் சாட்சிகளாக உள்ளன. முதலாவது, விஷ்ணு கோயிலில் உள்ள வட்டமான பொருள், புத்தரின் தர்மச் சக்கரம் என்று நம்பப்படுகிறது. இரண்டாவதாக, இந்தக் கோயில் ஆழ்வார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. தமிழ் பௌத்தர்கள் புத்தரையும், அவரது நினைவுச் சின்னங்களையும், புத்த துறவிகளையும் ஆழ்வார் என்ற சொல்லைக் கொண்டே அழைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் உள்ள 09 பழமையான தமிழ் பௌத்த விகாரைகளில் 04 அய்யனார் கோவில்களாக மாறியுள்ளன. அய்யனார் சிவபெருமானின் புத்திரன் என்று இந்துக்கள் நம்பினாலும் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பத்தினி வழிபாடு பௌத்தத்துடன் தொடர்புடையதாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. புங்குடுதீவு மற்றும் கரவெட்டி பௌத்த விகாரைகளில் வெசாக் மற்றும் பொசன் தினங்களில் விசேட பத்தினி பூஜைகள் இடம்பெற்றமைக்கான சான்றுகள் உள்ளன.

தமிழ் பௌத்தம் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். மணிமேகலை காவியத்தின் தமிழ் பௌத்தக் கவிதைகளில் வெளிப்படுத்தப்படும் வணிகப் பௌத்தம் (Mercantile Buddhism ) மற்றும் சிங்களவர்களின் நீரியல் பௌத்தம் (Hydraulic Buddhism) கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பௌத்தம் (Imported Buddhism) ஆகியவற்றுக்கு இடையே தொடர்ந்தும் மோதல்கள் இருந்து வந்தன. எனினும் பௌத்தம் யாழ்ப்பாணத்திற்கு கேரளாவில் இருந்து வந்தது என்று கூறுவதற்கு பல காரணிகள் உள்ளன. திருகோணமலையில் பௌத்த மதமும் இந்து மதமும் கலந்திருந்தது. இது தவிர, மணிமேகலை மகாகாவியத்தின்படி, வடக்கே நாகநாட்டில் சுதந்திரமான பௌத்த மரபுகள் காணப்பட்டமைக்கும் ஆதாரங்கள் உள்ளன.

தமிழ் பௌத்தர் ஹீனயான பௌத்த பிரிவைச் சேர்ந்தவர்களா? அல்லது மகாயான பௌத்த பிரிவை சேர்ந்தவர்களா? முக்கிய தமிழ் பௌத்தர்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்? இந்தக் கேள்விகளுக்கு விடை இன்னும் கிடைக்கவில்லை. இந்தக் கட்டுரை ஒரு விஷயத்தை மறுதலிக்கிறது. அதாவது இலங்கைத் தீவில் உள்ள பௌத்தர்கள் அனைவரும் சிங்களவர்கள் அல்ல. இலங்கையில் பௌத்தம் வாசிக்கப்பட வேண்டியது மத ரீதியாக அல்ல. 

இதுவரை முன்வைக்கப்பட்டவை தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் ஒருவரின் கருத்துக்கள். சிங்கள பௌத்த பிக்கு ஒருவரினால் தமிழ் பௌத்தம் பற்றிய யோசனை ஒன்றை முன்வைத்து இந்த அத்தியாயத்தை நிறைவு செய்யலாம் என்று நினைக்கிறேன். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளுக்கு எல்லாம் சென்று பௌத்த மதத்தைப் பரப்ப நம் பெருமக்கள் தயாராக இருந்தும், நம் தாயகத்தின் வடபகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குப் புத்த தர்மத்தைப் பரிசாகக் கொடுக்க நினைக்காதது வருந்தத்தக்கது. அந்த நற்செயலை முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்னரே செய்து அந்தப் பிரதேசத்தில் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தால் நாடு எதிர்நோக்கும் இனப்பிரச்சினை இவ்வளவு மோசமாகியிருக்காது. இதற்கான பொறுப்பை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குச் சென்று விஹாரைகளை நிறுவிய அமைப்புக்களும் தேரர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப இத்தகைய பொறுப்பு ஒன்றை நிறைவேற்றுதல் கடினமானதாக இருக்கும் என்பதால், நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்ட பின்னர், தமிழ் பிள்ளைகளுக்கு திரிபிடக தர்மம் மற்றும் சிங்களம், பாளி, சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்றவற்றை கற்க ஆர்வமூட்ட வேண்டும் என்பதுடன் மத விவகாரங்களின் பொறுப்பும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வது நிச்சயமாக எதிர்காலத்தில் தேசிய நல்லிணக்கத்தையும் நாட்டில்  வளத்தையும் செழிப்பையும் ஏற்படுத்த வழிவகுக்கும். இதில் அரசாங்கமும் கல்விக்கு பொறுப்பான குருமார்களும் கவனம் செலுத்த வேண்டும் (வெள்ளவத்தை ஞானாபிவன்ச தேரர், தினமின வெசாக் வெளியீடு, 1996, ப.22).


ஒலிவடிவில் கேட்க

14339 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார். விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்.