கிளிநொச்சி விவசாயத்தில் சுவிஸ் தொழில்நுட்ப மேலாண்மை
Arts
18 நிமிட வாசிப்பு

கிளிநொச்சி விவசாயத்தில் சுவிஸ் தொழில்நுட்ப மேலாண்மை

December 26, 2023 | Ezhuna

நீண்டகால யுத்தத்தின் முடிவிற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரதும் கவனத்திற்கு கொண்டுவருவதே ‘வளரும் வடக்கு’ எனும் இத் தொடரின் நோக்கமாகும். வடக்குப் பிரதேசத்தில் புலம்பெயர் சமூகத்தின் முதலீடு, புத்தாக்க தொழில் முனைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எத்தனிப்புகள், தொழில் முனைவோரின் அனுபவப் பகிர்வு, முயற்சிகளின் தோல்விகளில் இருந்து கற்ற பாடம், வடக்கு பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படக்கூடிய பிரச்சனைகள், உலகளாவிய சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை வெற்றிகரமாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இத்தொடர் அமையும். இத் தொடர் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார முயற்சிகளை விபரிப்பதோடு மட்டுமே நின்றுவிடாது, அதன் தொடர்ச்சியான அசைவிற்குத் தேவையான முன்னெடுப்புகளின் சாத்தியம் குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பின்னணியில் தரவுகளோடு ஆராய்கிறது. இது புதிய முயற்சியாளர்களுக்கு பாடமாக அமைவதோடு மேலும் பல முயற்சியாளர்களை வடக்கை நோக்கி வரவழைக்கும்.

தமிழில் : த. சிவதாசன்

கமில்டன் ஆறுமுகம், லீக்க ஷ்றோடருடனான எனது சந்திப்பு தவறுதலாகவே நிகழ்ந்தது. ஒரு குறிக்கப்பட்ட வேலைத்திட்டமொன்றில் எங்கள் இருவருக்கும் ஆர்வம் இருக்கலாமெனக் கருதிய பொதுவான நண்பரொருவர் ஏற்பாடு செய்ததன்படி எனது அலுவலகத்தில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. உண்மையில் நண்பர் கருதிய அவ்வேலைத்திட்ட விடயத்தில் எங்களுக்குள் எதுவித பொதுமையும் இருக்கவில்லை. ஆனாலும் அது ஒரு அதிர்ஷ்டவசமான தவறாக அமைந்துவிட்டது. இதன் மூலம் நான் இரண்டு அரிதான மனிதர்களைச் சந்தித்தேன். சுவிட்சர்லாந்திலிருந்து நாடு திரும்பும் கமில்டனும் ஹொலாண்டிலிருந்து வருகை தரும் லீக்கவும் தமது நேரம், பணம், திறமை ஆகியவற்றை முதலிட்டு வடக்கில் வியாபாரமொன்றை ஆரம்பிக்கவென வந்திருந்தார்கள்.

போர்க்காலத்தில் சுவிட்சர்லாந்துக்குத் துரத்தப்பட்டவர் சமாதானகாலத்தில் இயக்கச்சிக்குத் திரும்புகிறார்

போர் காரணமாக கமில்டன் தனது 14 வயதில் யாழ்ப்பாணத்தை விட்டுப் போகிறார். ஏற்கெனவே அகதிகள் அமைத்து வைத்திருந்த மன்னார் – ராமேஸ்வரம் கடல் பாதையே அவருடையதாகவும் அமைந்தது. 2009 இல் முடிவுற்ற, சுமார் 30 வருடப் போரின் மத்தியில் ஒரு பதின்ம வயதுப் பையனுக்கு சாதாரண பாதைகள் கிடைப்பது இலகுவாகவிருக்கவில்லை. ஒருபுறம், இளைஞர்கள் எதிரிகளாகப் பார்க்கப்பட்டார்கள்; மறுபுறம், போராளிகளாகப் பார்க்கப்பட்டார்கள். இந்தியாவை நோக்கிப் பயணிக்கும் அயலவர்களோடு தனது இளைய மகனான கமில்டனையும் சேர்த்து மன்னார் துறைக்கு அனுப்பிவிடுகிறார் அவரது அம்மா. இளையவர்களை வீட்டில் வைத்திருப்பதைவிட சிறிய படகுகளிலேனும் கடலுக்குள் தள்ளிவிடுவதைப் பாதுகாப்பெனத் தாய்மார் கருதிய காலமது. எஞ்சிய அம்மாவும் ஒரு வயது மகளும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவோ அல்லது ஆயுதப் போராளிகளாவதற்கான தகுதிகளோ இல்லாத காரணத்தால் வழமையான பாதைமூலம் பஸ் வண்டியில் கொழும்பு விமானநிலையத்துக்குச் சென்றார்கள்.

தந்தையார் ஏற்கெனவே நாட்டைவிட்டு ஓடி சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்தவர். அவரது அழைப்பின்பேரில் கமில்டன் அவரது தாயாருடனும் சகோதரியுடனும் சென்று சுவிட்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் தந்தையோடு இணைந்துகொண்டனர். நான்கு வருட தொழிற்கல்வியுடன் கமில்டனின் கல்விப்பயணம் தொடர்ந்து இளமானிப் பட்டத்தில் முடிந்தது. கல்வி முடிந்த கையோடு அவர் பல தொழில்களை ஆரம்பிக்கிறார்; சிகை அலங்காரம், தோட்டி வேலை, புகைப்படக் கடை எனப்பல கடந்து இறுதியில் பிறநாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வதில் வந்து நின்றது. இலங்கை அந்நாடுகளின் பட்டியலில் இருக்கவில்லை.

வடக்கின் பொருளாதாரத்துக்கு ஏதாவது செய்யவேண்டுமென்பதே கமில்டனின் ஆசை. ஐரோப்பாவில் நிறுவனமொன்றை வெற்றிகரமாக நிர்வகித்து போதுமான பணத்தை ஈட்டி வைத்திருப்பவர். அவர் விரும்பினால் உலகின் செல்வம் கொழிக்கும் நகரங்களில் நிரம்பி வழியும் சந்தைகளைத் துழாவிக்கொண்டு, செறிந்த வாசம் தரும் உயர்தரக் காப்பியை அருந்திக்கொண்டு, வேகமான விலையுயர்ந்த வாகனங்களில் தெருக்களைக் கிழித்துக்கொண்டு, திரையரங்குகளில் காலத்தைக் கழித்திருக்கலாம். கமில்டனும் லீக்கவும் வாழ்வின் உன்னதங்களை அனுபவிப்பவர்கள் தான். அதே வேளை கிளிநொச்சியின், யாழ்ப்பாணத்தின், வடக்கின் மிக எளிமையான வாழ்வையும் சில வாரங்கள், மாதங்கள் அனுபவிக்கத் தயாராகவிருக்கிறார்கள்.

Lekha and kamilton

“நாங்கள் வடக்கிற்கு வந்தபோது கண்டது தேக்கமடைந்த நிலங்களையும் மனமொடுங்கிய மனிதர்களையுமே. எதுவுமே நடப்பதாகத் தெரியவில்லை. ஒருநாள் மறுநாளைவிட நல்லது எனக் கூறமுடியாது. தொழிற்சாலைகள் ஸ்தம்பித்துப்போயிருந்தன. உதவிப்பணத்தில் விவசாயம், முனைப்பு என்பது அரியதொரு சங்கதி. வாழ்வதை விடவும் தினம் தினம் மக்கள் வேறெல்லாமோ செய்துகொண்டிருந்தார்கள்” என்கிறார் கமில்டன்.

நிலமொன்றைத் தேடி

2018 இல் பாவனையற்ற நிலங்களுக்குப் பஞ்சமே இருக்கவில்லை. நகரங்களிலும், தேவைக்கதிகமான அளவில் கிராமங்களிலும் இப்போதும்கூட பெருந்தொகையான நிலங்கள் இருக்கின்றன. அப்படியிருந்தும் அவற்றை சட்டபூர்வமாக வாங்குவதென்பது இப்போதும் மிகக் கடினமான ஒன்றே. நிலத்தை உடமையாக்குவதற்குமுன் அவற்றில் முதலீடு செய்வதில் பிரயோசனமில்லை. ஒருநாள் அவற்றை உண்மையான சொந்தக்காரனோ அல்லது போலியான சொந்தக்காரனோ பறித்துவிடலாம். சிலவேளைகளில் குண்டர்களைக் கொண்டு காணிகளிலிருந்து உதைத்து விரட்டப்படலாம். அல்லது பலவருடங்களாக நீதிமன்றங்களில் ஏறி இறங்கவேண்டியும் ஏற்படலாம். பல நிலச் சொந்தக்காரர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள். பெரும்பாலானவை, நிலம் பற்றி எதுவுமே தெரியாத, அக்கறையில்லாத உரிமையாளரின் வாரிசுக்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன. இந்நிலங்கள் போரினால் சிதைக்கப்பட்ட பொருளாதாரக் கழிதரையெனத் தவறாகப் பார்க்கப்படுகின்றன. திரும்பி வரும் எண்ணமற்றவர்களால் நிலங்கள் மிக மலிவாக விற்கப்படுகின்றன. சிலரால் முற்றாகக் கைவிடப்பட்ட காணிகள் காடுகளாகிக்கொண்டிருக்கின்றன. பலரது உறுதிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறதெனக் கருதப்படும் கச்சேரிகளில் காணாமலோ அல்லது அழிக்கப்பட்டோ விட்டன. எனது பாட்டியின் பழைய உறுதியைத் தேடியபோது அது பலவருடங்களுக்கு முன்னரே வெள்ளத்தினால் நாசமாக்கப்பட்டுவிட்டதெனக் கச்சேரி அலுவலர் கூறினர். தமது வாழ்நிலங்களிலிருந்து விரட்டப்பட்ட அகதிகள் சிலர் கைவிடப்பட்ட நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள். அது அவர்களது தவறல்ல. பல ‘கள்ள’ உறுதிகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஆமை வேகத்தில் இயங்கும் இலங்கையின் நீதிபரிபாலனத்தோடு பல நில உரிமையாளர்கள் வருடக்கணக்காக மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது. பத்திரம் கிடைக்கத் தாமதமாகியதனாலோ அல்லது நீதிமன்றத்துக்கு ஒருவர் வரத்தவறிய காரணத்தினாலோ வழக்குகள் மீண்டும் மீண்டும் பின்போடப்படுகின்றன. சிலவேளைகளில் ஒவ்வொரு தடவையும் மூன்று அல்லது ஆறு மாதங்களாலும் பின்போடப்படலாம். இதனால் உரிமையாளர்கள் நிலத்தைப் பயன்படுத்தவோ அல்லது வேறு யாருக்காவது விற்பதற்கோ முடியாமலிருக்கிறது. இதனால் நிலங்கள் தரிசுகளாகின்றன.

நிலமொன்றுக்காகத் தேடிக்கொண்டிருந்தபோது கமில்டன் பருத்தித்துறையைச் சேர்ந்தஅவரது முன்னாள் ஆசிரியரைச் சந்திக்க நேரிட்டது. ஆனையிறவுக்கு அண்மையில் இருக்கும் இயக்கச்சியில் அவருக்கு 70 ஏக்கர்கள் இருந்தது மட்டுமல்லாது அதை விற்பதற்கும் அவர் முயன்றுகொண்டிருந்தார். அக்காணியின் அயலவரும் தனது 70 ஏக்கர் காணியை விற்பதற்கு முயன்றுகொண்டிருந்தார். ஆசிரியரும் அயலவரும் பல தசாப்தங்களாக இக்காணிகளின் உரிமையாளர்களாக இருந்தார்கள். உறுதிகளும் இருந்தன. 2019 இல் கமில்டன் மொத்த 140 ஏக்கர்களையும் வாங்கி எஸ்.கே. பண்ணைகள் (SK Farms) எனப் பெயரிட்டார். சிவஞானமூர்த்தி என்பது அவரது தந்தையின் பெயர். அவரது முதலெழுத்தையும் தனது பெயரின் முதலெழுத்தையும் கொண்டது இப்பண்ணையின் பெயர்.

பண்ணை அபிவிருத்தி

2019 இல் கோவிட் முடக்கம் ஆரம்பித்தபோது கமில்டன் இந்நிலங்களை வாங்கினார். கோவிட் அவரை சுவிட்சர்லாந்தில் முடக்கிவிட்டிருந்தது. இயக்கச்சியில் இருந்த சிலருக்கு அவர் பணத்தையும் கூடவே செய்யவேண்டிய வேலைகள் பற்றிய கட்டளைகளையும் அனுப்பினார். அது பலனளிக்கவில்லை. பணம் கையாடப்பட்டது. கட்டளைகள் உதாசீனம் செய்யப்பட்டன. பொதுப்புத்தி பிரயோகிக்கப்படவில்லை. 10,000 தென்னைகள் நாற்றிடப்பட்டன. 2021 இல் கமில்டன் இயக்கச்சி வந்தபோது அவற்றில் 4,000 கன்றுகள் இறந்துபோயிருந்தன. மீதி கைவிடப்பட்ட நிலையில் இருந்தன.

grass variety

ஆகஸ்ட் 2021 இல் கமில்டன் நாடு திரும்பியிருந்தார். இரண்டு மாதங்களின் பின்னர் அக்டோபர் முடிவில் லீக்க அவரோடு இணந்துகொண்டார். புதிய குழுவொன்றுடன் கமில்டனும் லீக்கவும் நிலத்தில் உழைத்தார்கள். ஆரம்பத்திலிருந்தே தென்னை சாகுபடி வாரியம் மற்றும் உள்ளூர் அனுபவஸ்தர்கள் போன்றோரின் ஆலோசனைகளைப் பெற்று பணியாற்றினார்கள். நெதர்லாந்து தூதரகத்திடமிருந்து எதிர்பாராமல் உதவியும் கிடைத்தது. லீக்க ஒரு டச்சு நாட்டுக்காரவர் என்பதனால் இது சாத்தியமானது. தூதரகம் திரு நிஷான் என்பவரை விவசாய ஆலோசகராக நியமித்தது. நிசானின் அறிவும், திறமையும், அவரது தொடர்புகளும் மிகவும் உதவியாக இருந்தது என கமில்டன் கூறுகிறார். நிஷானின் ஆலோசனையுடன் எஸ்.கே. ஃபார்ம்ஸ் தென்னைகளோடு மட்டும் நில்லாது இதர சாகுபடிகளையும் கால்நடைகளையும் கூடவே வளர்த்தது ஆடு, கோழி, கெண்டை (திலாப்பியா) மீன் ஆகியவற்றுடன் ஆரம்பித்த எஸ்.கே. ஃபார்ம்ஸ் இப்போது வாத்து, பன்றிகளையும் வளர்ப்பதற்கு திட்டமிடுகிறது. சுவிட்சர்லாந்து விவசாயத்தின் மேலாண்மை வழங்கிய துல்லியத்தின் உதவிகொண்டு தமது கால்நடைகளுக்குத் தேவையான சரியான புல்வகைகளை அவர்கள் பயிரிடுகிறார்கள். ஒவ்வொரு தனித்தனி தென்னையையும் அடையாளமிடுவது முதல் முழுப் பண்ணையையுமே வரைபடக்குறியீட்டுடன் நேர்த்தியாக வடிமைத்துள்ளனர்.

ஏப்ரல் 2022 இல் கமில்டன் தனது பால்ய பள்ளி நண்பர் ஒருவரை முகநூல் மூலம் சந்தித்தார். வசீகரன் என்ற அவரை எனக்கும் சில வருடங்களாகத் தெரியும். கமில்டன் தனது 14 வயதில் படகில் தப்பியோடும் வரை வசீ அவரது நண்பனாக இருந்தவர். பின்னர் 32 வருடங்களாகத் தொடர்பற்றுப் போய்விட்டது. யாழ் நகரிலிருந்து சில கி.மீ. தொலைவில் ‘மார்கோசா கிரீன் ஹொட்டேல்’ என்னும் ஒரு மரபுரீதியான உணவகமொன்றை வசீ நடத்திவருகிறார். யாழ்ப்பாணத்தின் சூழல் செயற்பாட்டாளர் சமூகத்தில் முன்னணிப் பங்கு வகிப்பவர். உள்ளூரிலும் புகலிடத் தமிழர்களுடனும் மிகுந்த தொடர்புகளைப் பேணி வருபவர்.

S K Farm

நிஷான், வசீ போன்றோரின் ஆலோசனைகளுடன் கமில்டனும் லீக்கவும் துரித முன்னேற்றத்தைக் கண்டனர். எஸ்.கே. ஃபார்ம்ஸ் அபிவிருத்தியின்போது சுமார் 74 பேருக்குப் பணிவழங்கப்பட்டது. டிசம்பர் 2022 வரை, 14 மாதங்களுக்கு கமில்டனும் லீக்கவும் பண்ணையிலேயே தங்கிப் பணியாற்றினர். தற்போது பண்ணையின் உருவாக்கம் நிறைவுபெற்ற நிலையில் 34 பேருக்கு நிரந்தர வேலை வழங்கப்படுகிறது. இன்னும் இரண்டு வருடங்களில் இப்பண்ணை கணிசமான வருமானத்தைத் தேடித்தரும். இன்னும் 5 வருடங்களில் தென்னைகள் பலன் தர ஆரம்பிக்கும். ஆட்டுக் கொட்டில்கள் செயற்படத் தயாராகிவிட்டன. கெண்டை மீன் வளர்ப்பு, பன்றிகள், வாத்துகள் வளர்ப்புக்காகக் குளமொன்று தயாராகிக்கொண்டிருந்தது. பண்ணை செயற்படுவதற்குத் தேவையான நாளாந்த நடவடிக்கைகள் நிரற்படுத்தப்பட்டாகிவிட்டது. கமில்டனும் லீக்கவும் தமது அடுத்த தொழில்முயற்சிகளில் கவனம் செலுத்த இது வசதியாகவிருந்தது.

இதர தொழில் முயற்சிகள் : இறால், கெண்டை மீன்குஞ்சு, நெல், உழவு இயந்திரம்

இப்பண்ணையின் உருவாக்கத்திற்கான செலவை ஆரம்பத்திலிருந்து கமில்டனின் ஐரோப்பிய நிறுவனங்களே பொறுப்பேற்று வருகின்றன. 140 ஏக்கர்கள் காணியை அபிவிருத்தி செய்வதென்பது மிகவும் செலவைத் தரும் காரியம். கட்டிடங்கள், உட்கட்டுமானங்களை விட்டு உழவு இயந்திரங்கள், பவுசர்கள், JCB மற்றும் இதர இயந்திரங்களை இறக்குமதி செய்ய பல இலட்சம் டாலர்கள் செலவு செய்யப்பட்டன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்களை கமில்டன் தனது பண்ணையில் பாவித்துப் பார்த்தார். அவை அடிக்கடி பழுதுபடுவதால் இரண்டு மாத வேலைத்திட்டங்களை நிறைவேற்ற ஆறு மாதங்கள் எடுத்தன. இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களை இயக்குவதில் அவரது பணியாளர்கள் பெருமிதம் கொள்கின்றனர். அவற்றில் சுவிஸ் இயந்திரங்கள் குளிரூட்டப்பட்டவை. இதன் மூலம் அவர்கள் தமது தொழில் திறன்களை அதிகரிப்பதுடன் சுய கெளரவத்தையும் விருத்தி செய்துகொள்ள முடிகிறது. அவர்கள் தாம் வெறும் கூலி வேலைக்காரர்கள் அல்ல தொழில் வல்லுனர்கள் என்ற நினைப்பை கொள்வதற்கு இது வழிவகுக்கின்றது. இதனால் நிறுவனத்துடனான பணியாளர்களது விசுவாசமும் அதிகரிக்கிறது.

அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு அனுபவம் மிக்க பொறியியலாளர் ஒருவர் இவ்வியந்திரங்களைப் பராமரித்து வருகிறார். இறக்குமதி செய்யப்பட்ட இவ்வியந்திரங்களை உள்ளூர்த் தேவைகளுக்காக வாடகைக்கு விடுவதன்மூலம் நல்ல வருமானத்தை ஈட்ட முடிகிறது. முழுப் பண்ணையினதும் நாளாந்த செலவை இவ்வருமானம் ஈடுசெய்கிறது. நம்பிக்கையான இவ்வியந்திரங்களை அதிக வாடகைக்குப் பெற்றுக்கொண்டாலும் அவை உடைந்து செயற்படாமல் போனாலும் பணியாளர், நேர விரயம், பணிச்சுணக்கம் ஆகியவற்றினால் ஏற்படும் நட்டத்தைவிட இது மேலானது என்ற நம்பிக்கை உள்ளூர் மக்களிடம் ஏற்பட்டுவிட்டது.

தற்போது எஸ்.கே. ஃபார்ம்ஸ் கடற்கரையோடு இருக்கும் 30 ஏக்கர்கள் காணியைக் கொள்முதல் செய்ததுடன் அதில் 2,000 தென்னைகளைப் பயிரிடவும் ஆரம்பித்துவிட்டது. இப்பகுதியில் அசையும் பொருட்கள் களவுபோவது அதிகமாகையால் கால்நடைகள் இங்கு வளர்க்கப்படவில்லை.

கடல் எல்லையில்லாத மேலும் 50 ஏக்கர் காணியையும் இப்பண்ணை வாங்கியுள்ளது. இதில் 40 x 1000 கன அடி குளமொன்றை அமைத்து அதில் இறால் வளர்ப்பதெனத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென அமைக்கப்பட்ட வாய்க்கால்கள் மூலம் கடல்நீர் கொண்டுவரப்பட்டு விசேட சுத்திகரிப்பு நிலையங்களூடு சென்று மீண்டும் கடலை அடையும் வகையில் இக்குளம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு வருடமொன்றுக்கு 5,000 தொன்கள் வரை பிரபலமானதும், ஆரோக்கியதுமான வண்ணாமை இறால்களை உற்பத்தி செய்வதே கமில்டனின் நோக்கம்.

வடக்கில் ஆரம்பிக்கப்பட்டு இயங்காமல் கிடக்கும் தொழில்கள் ஏராளம். புதிய இயந்திரங்களுடன் இயங்காமல் இருக்கும் அரிசி ஆலைகள், பாவிக்கப்படாமலிருக்கும் தானம் செய்யப்பட்ட இயந்திரங்களுடன் தேங்காய் எண்ணை உற்பத்தி நிலையம் எனச் சில உதாரணங்கள் உண்டு. வெளிநாட்டு அரசாங்கமொன்றின் உதவியுடன் 2014 இல் ஆரம்பிக்கப்பட்டு 2017 இல் கைவிடப்பட்ட கெண்டை மீன் வளர்ப்புத் தொழிற்சாலையை வாங்கும் திட்டம் கமில்டனுக்கு உள்ளது. இவற்றைச் செயற்படுநிலைக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தமொன்றை எஸ்.கே. ஃபார்ம்ஸ் செய்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் மீன்வளர்ப்புத் துறையை அபிவிருத்தி செய்வதுடன் உள்ளூர் வாசிகளுக்கு வேலை வழங்குவதுடன் அவர்களது மீன் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். இங்குள்ள 25 மீன் வளர்ப்புத் தடாகங்களில் ஐந்தைக் கமில்டன் தனது சொந்தச் செலவில் புனருத்தாரணம் செய்கிறார். மீதியைப் புனருத்தாரணம் செய்ய இதர முதலீட்டாளர்களை அவர் எதிர்பார்க்கிறார்.

இவற்றோடு கூடவே விவசாயக் கழிவுகளை மீள்சுழற்சி செய்யும் நிறுவனமொன்றையும் உருவாக்க கமில்டன் முதலீட்டாளர்களின் உதவிகளை எதிர்பார்க்கிறார். அவரும் லீக்கவும், மேலும் தங்களை நலியவைக்க முடியாது; நல்ல தரங்களை நியமப்படுத்த தரமானதும் திறமையுள்ளதுமான பணியாளர்களை எடுக்கவேண்டுமென்பதில் திடமாக உள்ளனர்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க வீரர்களுக்கப்பாலும் தேவைகளிருக்கிறது

வடக்கின் பொருளாதாரத்தை மீள்கட்டுமானம் செய்ய உயர்தர முகாமையாளர்களும் உசாரான பணியாளர்களும் தேவை. துணிச்சலான தொழில் வல்லுனர்களால் மட்டும் அது சாத்தியமாக முடியாது. கமில்டன், லீக்க, சுகந்தன் போன்றோர் – அவர்கள் IT அல்லது விவசாயம் அல்லது உற்பத்தி துறைகள் போன்ற எத்துறைகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் – சிறந்த முகாமையாளர்களையும் பணியாளர்களையும் உருவாக்குவதை ஊக்குவிக்க வேண்டும். சிறந்த முகாமையாளர்களும் பணியாளர்களும் தொழில்களை சிறப்பாக நடத்தும்போது முதலீட்டாளர்கள் வேறு வாய்ப்புகளைத் தேடிப்போகவோ அல்லது விடுமுறைகளில் செல்வதிலோ கவனம் செலுத்தலாம். வீரர்கள் வேண்டுமானால் வெற்றிகரமான பொருளாதாரத்தை ஆரம்பிக்கலாம் ஆனால் அவை வளரவும் திளைக்கவும் தகமையுள்ளதும் அர்ப்பணிப்புள்ளதுமான பணியாளர்களே தேவை.

நன்றி : மறுமொழிLanka Business Online (www.lankabusinessonline.com)

கமில்டன், லீக்கவுடன் தொடர்புகொள்ள விரும்புபவர்கள் info@sk-farm.net என்னும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

9204 பார்வைகள்

About the Author

ஜெகன் அருளையா

இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் தனது பெற்றோருடன் பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக, இலங்கையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனங்களிலும் பணியாற்றியவர். 2015 இல், நிரந்தரமாக யாழ்ப்பாணத்துக்குக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)