நிலப்பயன்பாடும் நன்னீர் நிலைகளின் பல்வகைமையும் – பகுதி 2
Arts
10 நிமிட வாசிப்பு

நிலப்பயன்பாடும் நன்னீர் நிலைகளின் பல்வகைமையும் – பகுதி 2

January 3, 2024 | Ezhuna

எமது சுற்றாடல் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இக் கூறுகளின் ஒருங்கிணைந்த மற்றும் ஒருங்கமைந்த செயற்பாடுகளே சுற்றாடலின் நிலைபேறான அபிவிருத்தியில் பங்காற்றும். மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் சுற்றாடல் பற்றி சரிவர அறிந்துகொள்ளப்படுதலும் சிறப்பான வழிமுறைகளில் பயன்படுத்தலும் இக்கூறுகளை பேணிப்பாதுகாத்தலும் முக்கியமானவைகள். அந்த வகையில் வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில் உயிர்ப்பல்வகைமையின் பங்களிப்பு பற்றிய பயனுள்ள கருத்துகளை ‘வடக்கு–கிழக்கு பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ எனும் இக் கட்டுரைத் தொடர் தாங்கிவருகின்றது.

நன்னீர் நிலைகளின் பல்வகைமையும்  அபிவிருத்தியும்

வளமுள்ள நிலங்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு ஆகிய பிரதேசங்கள் வெவ்வேறு வகையான அச்சுறுத்தல்களுக்கு உட்படுகின்றன. அவ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே அபிவிருத்தியும் நடந்தேறுகிறது. வடக்கு மற்றும் கிழக்கானது இலங்கையின் அபிவிருத்தியில் முக்கிய பங்குவகிக்கும் பிரதேசங்களாகும். மேடுபள்ளம் அதிகமுள்ள தரைத்தோற்றமாகையால் இப் பகுதியில் நடாத்தக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகள் ஒப்பீட்டளவில் இலகுவில் முன்னெடுக்கப்படக்கூடியவை. பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டமையால், இப் பாதைகளிலிருந்து எய்தக்கூடிய போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மேலும் வலுவூட்டுகின்றன. நிலங்களின் தன்மையுடன் கூடியதான அபிவிருத்தி நடவடிக்கைகளானது மேலே அடிக்கோடிட்டு கூறப்பட்டுள்ளது. சுண்ணக்கல்லை மூலமாகக்கொண்ட சீமெந்துத் தொழில், முருங்கன் களியை மூலமாகக்கொண்ட சீமெந்துத் தொழில் என்பன குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பிரதான அபிவிருத்தி நடவடிக்கைகளாகும். இவ்வகை தொழிற்சாலைகள் யுத்தத்தினால் கைவிடப்பட்டிருந்தாலும் மீண்டும் புதிய தொழில்நுட்பங்களுடன் அதிக வீச்சான தொழிற்சாலைகளாக உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகளோடு உள்ளன. இவை பற்றிய கொள்கை ரீதியான மாற்றங்கள் உள்வாங்கப்பட்டு பாரிய அபிவிருத்தி முன்னெடுக்கப்பட வேண்டும். சிறு கைத்தொழில்களான சுண்ணாம்பு தயாரித்தல் தொழிற்சாலை, சட்டி – பானை தொழிற்சாலை என்பனவும் ஓரளவு இயங்கி வருகின்றன.

clay pot

எம் பிரதேசத்திலுள்ள மண் வகைகள் சட்டி – பானைகள் மட்டுமல்லாது ஓடுகள் செய்யவும் பயன்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பகுதியில் (ஓடுசுட்டான்?) ஓட்டுத்தொழிற்சாலைகள் காணப்பட்டன. இவைகளும் மீள் அபிவிருத்திக்கு உட்படக்கூடியனவே. பெருந்தொகையான மண், அதாவது கட்டடங்களிற்கு பயன்படுகின்ற மணல்வகைகள், கடற்கரைகளை அண்டிய பகுதிகளில் மட்டுமல்லாது காடுகளை ஊடறுத்துச் செல்லும் காட்டாறுகள் மூலமாகவும் பெருவாரியாகச் சேகரிக்கப்படுகின்றன. சரியான சட்டவாக்கல், அமுல்படுத்தல் மூலமாக இவ்வகை மண்களை கட்டடங்களின் அபிவிருத்திக்கு பயன்படுத்த முடியும்.

ottisuttan

கிழக்கு பகுதியிலுள்ள கற்பாறைகள் கட்டடங்களின் மூலப்பொருள் தொழிற்சாலைக்கு பயன்படக்கூடியன. ஒழுங்கமைக்கப்பட்ட கற்குவாரிகளை அமைத்தால் இவை மூலம் பாரிய பயனைப் பெறலாம். குடியேற்றமில்லாத வெளிகளை விமானப் போக்குவரத்திற்காக அபிவிருத்தி செய்ய முடியும். இதன்மூலம் உள்ளூர் விமானப் போக்குவரத்துக் கட்டமைப்பு வலுப்படும். வடக்கு கிழக்கிலுள்ள ரயில் போக்குவரத்துப் பாதைகள் புனரமைக்கப்பட வேண்டும். இப் பாதைப் புனரமைப்புடனான சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி, முனைப்புடன் நடாத்தப்படவேண்டிய ஒன்று. முன்னைய அத்தியாயங்களில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. உள்ளகச் சுற்றுலாத்துறையை மேம்படுத்தக்கூடியவகையில் வடக்கு கிழக்கின் தரைத்தோற்றம் அமைந்துள்ளது. உதாரணமாக, சேதனப் பண்ணைகள் அமைக்கலாம். வவுனியா மாவட்டத்தில் சிறிய கல்வாரி எனப்படும் மலைத்தொடர் ஒன்று சுற்றுலாவிற்கு பயன்படுகிறது. அதேபோன்று கந்தரோடையிலுள்ள புராதன புத்த விகாரைக் கூடங்கள், கிழக்கு மாகாணத்திலுள்ள ஹபரணை காட்டு யானைப் பிரதேசங்கள் போன்றன சுற்றுலாத் துறைக்கு வலுவூட்டக்கூடிய இடங்களாகும். கல்விச் சுற்றுலாக்களுக்கு அமைவான அநேக பொருத்தமான இடங்கள் காணப்பட்டாலும் அதனோடு ஒத்து வலுவேற்படுத்தக்கூடிய குடிநீர் வசதிகளும் தங்குமிட வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். மத யாத்திரிக ஸ்தலங்களான திருக்கேதீஸ்வரம் (மன்னார்), திருக்கோணேஸ்வரம் (திருகோணமலை), நல்லூர் (யாழ்ப்பாணம்), வற்றாப்பளை (முல்லைத்தீவு), மடு (மன்னார்), மாமாங்கம் (மட்டக்களப்பு), தேற்றாத்தீவு (மட்டக்களப்பு) போன்றன மத நம்பிக்கைகளுடன் இணைந்த சுற்றுலாத் துறைகளுக்கான இடங்களாகும்.

பாலைதீவு, கச்சதீவு, நயினாதீவு, நெடுந்தீவு போன்றனவும் இவ்வகையான மத நம்பிக்கைகளுடன் கலந்த சுற்றுலாத்துறைப் பிரதேசங்கள் ஆகும். ஆழம் தெரியாதென வரையறுக்கப்பட்டு தற்போது ஆழம் அறியப்பட்டுள்ள நிலாவரை, கரணவாய்க்குகை, பூநகரி குவேனிக் கோட்டை என்பனவும் குறித்துச்சொல்லப்பட வேண்டியவையே. அதிகம் கவனிக்கப்படாத இந்தச் சுற்றுலாத்துறைப் பிரதேசங்கள், வடக்கு – கிழக்கில் அபிவிருத்தி செய்யப்படவேண்டிய ஒன்றாகும்.

paalai theevu

மிகப்பெரிய குளங்களான கட்டுக்கரை, இரணைமடு, சேனநாயக்க சமுத்திரம், உன்னிச்சைக்குளம் போன்றன நன்னீருடன் கூடிய மீன்பிடித்துறைக்கு ஏற்ற குளங்களாகும். வடக்கு – கிழக்கு பிரதேசத்தின் உணவுப் பழக்கத்தில் நன்னீர் மீன்களின் பாவனை சற்றுக் குறைவாகவே உள்ளது. அதனாலோ என்னவோ, எம் பிரதேசத்தின் நன்னீர் மீன்பிடித்துறை வெளிநாடுகளைப் போல அபிவிருத்தியடையவில்லை. சிறு குளங்கள், நடுத்தரக்குளங்களிலும் கூட இந் நன்னீர் மீன்பிடி அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இப் பயனுள்ள நன்னீர் நிலைகளை மேம்படுத்தி நன்னீர் இறால், நன்னீர் நண்டு போன்ற விலைமதிப்புள்ள அசைவ உணவுகளை உற்பத்திசெய்ய முடியும். நன்னீர் மீன்பிடித் திணைக்களம் ஓரளவு முயற்சிசெய்திருந்தாலும் கூட உள்ளூர் அமைப்புகள், கூட்டுறவுகள், தனியார் நிறுவனங்கள் இந் நன்னீர் மீன்வள அபிவிருத்தியில் அதிக அக்கறை காட்டுவதில்லை. இறால், நண்டு, விலாங்கு, விரால் போன்றன பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படக்கூடியவை. இது சம்பந்தமான முன்னெடுப்புகளுக்கு அவசியம் உண்டு என்பதை இங்கு சுட்டிக்காட்டல் பொருத்தமானது.

unnichai

மீன் குஞ்சுகளை நீர்நிலைகளில் விட முன்பு, குறித்த நன்னீர்ப் பகுதியை தகுதியான ஆராய்ச்சிக்கு உட்படுத்தல், மீன்குஞ்சுகளைப் பெருக்குவதற்கு வழிவகுக்கும். அதிகரித்து வரும் குடித்தொகையினால் குடிநீர் பாவனையும் அதிகரித்துள்ளது. இப் பாரிய நீர் நிலைகளிலிருந்து நகரங்களுக்கும் புறநகர் பகுதிகளுக்கும் நன்னீர் வழங்கும் திட்டம் அபிவிருத்திக் செய்யப்பட வேண்டும். குடிநீர் அற்ற பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டால் நகர்ப்புற மற்றும் ஏனைய பகுதிகளின் அபிவிருத்தி வலுப்படும்.

அச்சுறுத்தல்

அதிகரித்துவரும் அபிவிருத்தியானது இந் நிலப்பயன்பாடுகளுக்கும் நன்னீர் பல்வகைமைக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதை சொல்லியே ஆகவேண்டும். இருப்பினும் சேதப்படுத்தாமல், அதியுச்ச பயன்பாட்டை முன்னோக்கி இவ் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டால் வளங்களுக்குரிய அச்சுறுத்தல் குறைக்கப்படும். உதாரணமாக கட்டடங்களுக்கான மணல் சேகரிப்பு வரையறையற்றுப் போவது ஒரு அச்சுறுத்தலே. இதனால் ஆறுகளின் கரையோரமாக ஏற்படும் மண்ணரிப்பானது உயிர்ப்பல்வகைமையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது. கைத்தொழில் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் வீசப்படுதல் இப் பிரதேசத்தின் சுற்றாடலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்துவதுடன் சுகாதாரச் சீர்கேடுகளையும் உருவாக்குகிறது. இவ் வகையில் அச்சுறுத்தப்படும் நிலத்தின் பயன்பாடு சரிசெய்யப்பட வேண்டும்.  நிலங்கள் துண்டாடப்படுவதும் பாதைகள் சரிசெய்யப்படாமல் இருப்பதும் இவ் வளமான நிலங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்துகின்றன. அதிகரித்து வரும் விவசாய உரங்களின் பாவனை மற்றும் மருந்துகளின் பாவனை நிலத்தடி நீருக்கும் நன்னீர் நிலைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாகும். உவர் நீர் தடுப்பணைகள் சரிசெய்யப்படாமல் இருப்பது உள்ளக நன்னீர் நிலைகளை உவர்த்தன்மையாக்குகிறது. இது கடற்கரையோர உவர்த்தன்மையை அதிகரிக்கும். வரையறையற்ற குழாய்க் கிணறுகள், விசேடமாக ஆழமான குழாய்க்கிணறுகளின் பாவனை, குடிநீரை உவர்ப்பாக்குகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. வரையறையற்ற நிலத்தடி நீரின் பிரயோகம் குடியிருப்பு பகுதிகளின் குடிநீர் பாவனையை கேள்விக்குறியாக்கும். சீர்செய்யப்படாத, வண்டல் எடுக்கப்படாத குளங்கள் (Desilting), மறுசீரமைக்கப்படாத பாரிய குளங்களின் அணைக்கட்டுகள் என்பன காலநிலை மாற்றத்துடன் கூடிய வானிலையால் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. உப்பு நீர் அணைகள், சிறுகுளங்கள் மற்றும் பெருநீர்ப்பாசனக் குளங்கள் என்பனவற்றின் மறுசீரமைக்கப்படாத தன்மை முறையே கரையோர உவர்வாதல், வெள்ளப்பெருக்கு என்பனவற்றுக்கு காரணங்களாகும். ஆக, நன்னீர் நிலைகள், நிலங்கள் என்பன சரியான முறையில் பேணிப் பாதுகாக்கப்படாதது வடக்கு – கிழக்கு பிரதேசத்தின் நன்னீர் நிலைகள் மற்றும் நிலங்களின் பயன்பாடு என்பனவற்றுக்கு பாரிய அச்சுறுத்தலே. பல்வேறுவகைப்பட்ட நிலங்களின் பயன்பாடும் நன்னீர்நிலைகளில் நிலவும் பல்வகைத்தன்மையும் இக் கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது. அபிவிருத்தி, அச்சுறுத்தல் என்பனவும் விபரித்துத் தரப்பட்டுள்ளன. வாசகர்கள் இத் தரவுகளைப் பயன்படுத்தி பயனடையும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

8463 பார்வைகள்

About the Author

சி. ஜேம்சன் அரசகேசரி

விவசாய விஞ்ஞானியும் சூழலியலாளருமான கலாநிதி.சி.ஜேம்சன் அரசகேசரி அவர்கள் விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் முன்னைநாள் மேலதிக பணிப்பாளர் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாயத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரான இவர் விவசாயத்துறையில் மூன்று தசாப்தங்களாக பயனுள்ள பங்காற்றி வருவதுடன் மிளகாய், வெங்காயம், நிலக்கடலை, குரக்கன் மற்றும் மா போன்ற பயிர்களில் புதிய வகைகளைக் கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயம் சம்பந்தப்பட்ட அநேக பிரச்சினைகளின் தீர்வுகளுக்கு வழிவகுத்துள்ள அரசகேசரி அவர்கள், மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் விவசாய மற்றும் சுற்றாடல் சம்பந்தப்பட்ட கருத்திட்டங்களுக்கு ஆலோசகராகவுள்ளதுடன் சமூக சேவையாளராகவும் திகழ்கிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (18)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)