அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள்: இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் - பகுதி 3
Arts
10 நிமிட வாசிப்பு

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள்: இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 3

January 25, 2024 | Ezhuna

இலங்கை முஸ்லிம்கள் குறித்து பண்பாட்டு மானிடவியல் ரீதியான ஆய்வுகளை மானிடவியல் ஆய்வு மரபுகளைப் பின்பற்றி முறையான பரந்துபட்ட வகையில் மேற்கொண்டவர் பேராசிரியர் டெனிஸ் மெக்கில்ரே. அமெரிக்கரான டெனிஸ் மெக்கில்ரே கொலராடோ பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறைப் பேராசிரியர். இலங்கைத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் குறித்த பரந்துபட்ட மானிடவியல் ஆய்வுகளை மேற்கொண்ட மேற்கத்தேயப் பேராசிரியர்களுள் மிக முக்கியமானவர் மெக்கில்ரே. குறிப்பாக கிழக்கிலங்கைத் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பண்பாட்டு மானிடவியல் மரபுகள், தொன்மங்கள், பண்பாட்டுக் கூறுகள் குறித்த விரிந்த ஆய்வுகளை மேற்கொண்டு அதனை உலகப் பரப்புக்குக் கொண்டு சென்றவர் என்ற வகையில் இலங்கைத் தமிழர்களும், முஸ்லிம்களும் அவருக்குக் கடமைப்பட்டுள்ளனர். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, பண்பாடு, மானிடவியல் மரபுகள், தொன்மங்கள் பற்றிய அவரது சமூகவியல் நோக்கிலான ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் ‘டெனிஸ் மெக்கில்ரே ஆய்வுகளில் தமிழரும் முஸ்லிம்களும் : பண்பாட்டு மானிடவியல் நோக்கு‘ எனும் தலைப்பில் வெவ்வேறு உப தலைப்புகளுடன் வெளிவரும்.

ஆங்கில மூலம் : டெனிஸ் மெக்கில்ரே

இலங்கையில், மரைக்காயர் எனும் சொல் பெரும்பாலும் மரைக்கார் (மரிக்கார், மார்க்கார், முதலியன) என வழங்கப்படுகிறது. இது முன்னணி சோனகக் குடும்பப் பெயர்களிலும், பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் தலைவருக்கு (அதாவது உள்ளூர் சோனக சமூகத்தின் தலைவர்) வழக்கமாக வழங்கப்படும் பெயராகவும் விளங்குகிறது (அலி 1981a; மஹ்ரூஃப் 1986a; மெக்கில்ரே 1974).

தென் தமிழ்நாட்டின் மரக்காயர் நகரங்களுக்கும் இலங்கைச் சோனக குடியேற்றங்களுக்கும் இடையிலான வணிக, கலாச்சார மற்றும் புலப்பெயர்வு ரீதியான தொடர்புகள் பேருவளை, கல்பிட்டி, யாழ்ப்பாணம் மற்றும் முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் ஏனைய கரையோரப் பிரதேசங்களினதும் வரலாற்று மரபுகளில் காணக்கிடைக்கின்றன (அலி 1981a; காஸி செட்டி 1834: 254 ff; டென்ஹாம் 1912: 234). இத்தகைய தொடர்புகள் இன்றும் தொடரலாம்: 1969-71 இல் அக்கரைப்பற்றில் (அம்பாறை மாவட்டம்) எனது ஆரம்பக் களப்பணியின் போது நான் தங்கி இருந்த சோனக நில உரிமையாளர் தனது இளமைக் காலத்தில் காயல்பட்டினத்தில் மரக்காய வணிகர் ஒருவரிடம் வேலை பழக பல வருடங்கள் கழித்ததாகக் குறிப்பிட்டார். 1983 இல் நான் தென்னிந்தியாவிற்குச் சென்றபோது தனிப்பட்ட முறையில் அந்தத் தகவலை உறுதிப்படுத்திக் கொண்டேன். நெடுங்கால இடப்பெயர்வும், கலப்புமணம் எனக்கருதப்படும் திருமணங்களும், தமிழகத்தைச் சேர்ந்த மரைக்காயருக்கும் (காயலர்களும்) கேரளாவைச் சேர்ந்த மாப்பிளாக்களுக்கும், இலங்கையைச் சேர்ந்த மூர்களுக்கும் இடையில் இருந்ததற்கான ஆதாரங்கள் (இந்த மூன்று இனங்களும் அவர்களுக்குள் தமிழக உறவுமுறை வழியில் பெற்றோராகவும் மூத்த சகோதரர்களாகவும் பகிர்ந்து கொண்டது போன்று) தமிழகத்தைச் சேர்ந்த பிற முஸ்லிம் இனத்தினரிடமோ லெப்பைகளிடமோ காணப்படவில்லை (Mines 1972: 26-27).

SL moors

இலங்கையின் மேற்குக் கரையோரப்பகுதி சோனக சமூகத்தின் தீர்மானம் எடுக்கும் பாரம்பரிய நிறுவனமாக, மரைக்கார், மத்திச்சம் அல்லது நாட்டாண்மைக்காரர் (மஹ்ரூப்) என்ற பட்டம் பெற்ற பள்ளிவாயல் பிரதம நம்பிக்கையாளரின் தலைமையிலான கிராமிய சபை அல்லது ஊர்கூட்டம் (neighbourhood assembly) செயற்பட்டது. உள்ளூர் கூட்டங்களின் இத்தகைய அமைப்பு இடைக்கால கேரளாவின் சிறப்பியல்பு ஆகும். அங்கு அவை கிராமம் முதல் மாவட்டம் வரை, பரந்த பிராந்திய அலகுகள் வரையில் கூட, அரசியல் அதிகாரத்தை அதிகரிக்கும் படிநிலையை உருவாக்கியது (பத்மநாப மேனன் 1924: 250-69). 

இன்றும் கூட, மேற்குக் கரையோரச் சோனகருடன் காலனித்துவத்திற்கு முந்தைய அரசியல் மரபை பகிர்ந்துகொண்டதாக நம்பப்படும் இலங்கையின் கிழக்குக் கரையோர தாய்வழித் தமிழர்களால் இந்த உள்ளூர் சபைகளின் வாய்மொழிப் பாரம்பரியம் இன்னும் நினைவு கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் மரக்காயர்கள், இலங்கையின் சோனகர்கள் ஆகிய இரு இனத்தவர்களிடையேயும், அதேபோன்று கிழக்குக் கடற்கரையில் உள்ள தாய்வழி இந்துத் தமிழர்கள் மத்தியிலும், யாழ்ப்பாணத்திலுள்ள மலபார் குடிகள் (Malabar inhabitants) மத்தியிலும் இந்தத் தாய்வழி மற்றும் கடல்சார் முஸ்லிம் குணாதிசயங்கள் பல வலிமையாக காணப்படுவதற்கு முந்தைய ‘கேரள இணைப்பு’ காரணமாக இருக்கலாம் (ராகவன் 1971:199-217).

Kerala Muslims

எவ்வாறாயினும், இலங்கைச் சோனகர் வரலாற்று ரீதியாகவும் சமூகவியல் ரீதியாகவும் இந்தியாவில் உள்ள அவர்களது நெருங்கிய முஸ்லிம் அயலவர்களிலிருந்து வேறுபட்ட அம்சங்களையும் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் எழுத்தாவணங்களின் படி பார்க்கும் போது, ஒட்டுமொத்தமாக இலங்கை முஸ்லிம் சமூகம் அதன் தென்னிந்திய சகாக்களை விடவும் சமத்துவமும் ஒரு படித்தன்மையும் கொண்டது. செல்வம் மற்றும் வர்க்க அமைப்பில் உயர்நிலையிலுள்ள, உயர்தர இரத்தின வியாபாரிகளான இலட்சாதிபதிகளிலிருந்து நகர்ப்புற தொழில்முனைவோர், கிராமப்புற விவசாயிகள், சிறு அங்காடி வியாபாரிகள் (Mauroof 1972) வரை சமூக அடுக்கமைப்பு செங்குத்தாக இருந்து வந்தாலும், தென்னிந்தியாவில் உள்ள மாப்பிளாக்கள், மரக்காயர்கள், லெப்பைகளுக்கு இடையில் ஆவணப்படுத்தப்பட்ட, அகமணம், சாதி போன்ற பிரிவுகள் இருப்பதைப் போன்று இலங்கை முஸ்லிம்களிடம் காணப்படவில்லை. மேலும், ஃபேன்செலோ (1989) சுட்டிக்காட்டியுள்ளபடி, தென்னிந்தியாவின் மாப்பிளாக்கள், மரக்காயர்கள், டெக்கானி முஸ்லிம்கள் உள்ளூர் இந்து மன்னர்களுக்கு மூலோபாய இராணுவ தொழில்நுட்பங்களை (கடற்படை படைகள், குதிரைப்படைகள்) வழங்குபவர்களாக இருந்தனர் அல்லது ஆற்காடு நவாப்களின் ஆட்சியின் கீழ் உருது பேசும் அரசியல் உயர் குழாத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். இலங்கையின் வரலாற்றில் சோனகர்கள் ஒருபோதும் அத்தகைய மூலோபாய இராணுவ அல்லது அரசியல் பாத்திரத்தை வகிக்கவில்லை (அலி 1981 அ; தேவராஜா 1986). இதன் விளைவாக அவர்கள் ஓர் அரசுடன் அடையாளம் காணப்படவில்லை அல்லது இறையாண்மை பற்றிய அவர்களின் சொந்த அரசியல், இராணுவ சித்தாந்தத்தை விருத்தி செய்துகொள்ளவில்லை. 

இலங்கை சோனகரின் புவியியல், சனத்தொகையின் தனித்துவமான அம்சங்களையும் ஒருவர் கருத்தில் கொள்ள வேண்டும். வடக்கு மலபார் மாவட்டங்களில், நகர்ப்புற கரையோர நகரங்களில் இருந்து, உள்ளூர் விவசாய நிலம் வரை பரவியுள்ள மாப்பிளாக்கள் ஒரு தனி முஸ்லிம் சனத்தொகையை உருவாக்குகின்றனர். அதேசமயம் தமிழ்நாட்டில் கரையோர நகர்ப்புற மரக்காயர் வர்த்தக உயர் குழாத்தினர், உள்நாட்டு லெப்பைகளிடம் இருந்து தங்களைப் பிரிக்கும் அகமணத் தடைகள் போன்றவற்றை உருவாக்கியுள்ளனர். இந்த தமிழ்நாட்டு முஸ்லிம் குழுக்கள் எதுவும் பெருந்தொகையினரான கிராமப்புற விவசாயிகளை தங்களுள் ஒரு பகுதியினராக இணைத்துக் கொள்ளவில்லை. மாறாக, இலங்கை முஸ்லிம்கள் மத்தியில், நகர்ப்புற முஸ்லிம் உயர் குழாத்தினர், கிராமப்புற முஸ்லிம் விவசாயக் குடிகள் என இரு சாராரும் உள்ளனர். ஆனால் அவர்கள்  கண்டிய மலைகளால் பிரிக்கப்பட்டுள்ள தீவின் எதிரெதிர் பக்கங்களில் காணப்படுகின்றனர்.

வடக்கு, கிழக்கு கரையோரங்களில் உள்ள பெரும்பான்மை சோனக விவசாயிகள், நாட்டின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள வர்த்தகம், அரசியல் அதிகாரம் போன்றவற்றில் மேல்நிலையிலுள்ள முஸ்லிம் உயர் குழாத்தினரிடமிருந்து புவியியல் ரீதியாக மட்டுமன்றி சமூக, அரசியல்-பண்பாட்டு ரீதியாகவும் வேறுபட்டுள்ளனர். முஸ்லிம்கள் மேல் மாகாணத்திலும், மலையகத்திலும் சில நன்கு அறியப்பட்ட பகுதிகளைத் தவிர (எடுத்துக்காட்டாக, பேருவல, அக்குரணை, புத்தளம்/கல்பிட்டி, மன்னார், கொழும்பு மற்றும் காலியின் சில சுற்றுப்புறங்கள்) சிறுபான்மையாகச் சிதறி வாழ்கின்றனர். இன்னொரு பக்கம் கிழக்கு கரையோரச் சோனகர் விவசாய நகரங்கள், கணிசமானளவிலும் செறிவாகவும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளாக உள்ளன. அத்துடன் அவை விவசாயப் பின்புலத்துடனும், தனித்துவமான பிராந்தியத் துணைக் கலாச்சாரத்துடனும் ஒருங்கிணைக்கப்பட்டது; இப்பகுதி இலங்கை முஸ்லிம் சனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

திருகோணமலைக்கு தெற்கே மூதூர், கிண்ணியா, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில முக்கிய நகரங்கள், விவசாயப் பகுதிகள் (எ.கா. ஏறாவூர், காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில்) போன்ற பிரதேசங்களில் சனத்தொகையில் பாதி முதல் முக்கால்வாசி வரை மூர் இனத்தவர்கள்தான். முழுத் தீவிலும் இந்த கிழக்குப் பிரதேசம் மட்டுமே முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் தேர்தல் தொகுதியாக உள்ளது (குருகுலசூரிய. 1988).

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8359 பார்வைகள்

About the Author

ஜிஃப்ரி ஹாசன்

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையைச் சேர்ந்த ஜிஃப்ரி ஹாசன் அவர்கள் சப்ரகமுவப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் பட்டம் பெற்றவர். மேலும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியலிலும் பட்டப்பின் டிப்ளோமா பட்டம் பெற்ற இவர், தற்போது ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

சிறுகதை, கவிதை, இலக்கிய விமர்சனம், பண்பாட்டு ஆய்வு, மொழிபெயர்ப்பு என விரிந்த தளத்தில் தீவிரமாக இயங்கி வருபவர். இவரது ‘போர்க்குணம் கொண்ட ஆடுகள்’, ‘அகாலத்தில் கரைந்த நிழல்’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு சார்ந்து இவரது நூல்கள் பல வெளிவந்துள்ளன.

இலங்கை முஸ்லிம் பண்பாடு, சமூகவியல், ஈழ இலக்கியம், சிங்கள இலக்கியம் முதலான கருபொருள்களில் ஆழமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்