சாதியத் தகர்ப்புக் கருத்தியல்கள்
Arts
20 நிமிட வாசிப்பு

சாதியத் தகர்ப்புக் கருத்தியல்கள்

February 21, 2024 | Ezhuna

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம், மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல. சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதினின்றும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக ‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்’ என்ற இத்தொடர் அமைகிறது.

தமிழ் மக்களாக இயங்கும் எமது வாழ்வியலில் அடித்தளமாக அமைந்து தாக்கம் செலுத்தி வருகின்ற பணபாட்டுக் கோலங்களின் தொடக்கம் – மாற்றங்கள் – விருத்திகள் என்பவற்றை இந்தத் தொடரில் பார்த்து வருகின்றோம். ஏற்பட்டிருக்கும் ஒரு முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டுமாயின் அதன் தொடக்கம் – ஊடுபாவு – முடிவிடம் என்பவை கண்டறியப்படுதல் அவசியம். ஒன்றுக்கு மேற்பட்ட முடிச்சுகள் உள்ள நிலையில் அடிப்படையான மூலத்தை அவிழ்ப்பதனூடாக ஏனையவற்றையும் மீட்டெடுக்கும் இலகு வழியைக் கண்டடைவோம். எமக்கான சமூக இருப்பில் சாதி, வர்க்கம், இனத்தேசியம், பாலினப்பேதம், பிரதேசவாதம் எனப் பன்முகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தேடிக் கண்டடைய வேண்டியுள்ளது.

இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் ஏற்றத்தாழ்வான வாழ்வியல் முறைமையின் விளைவுகள். எமக்கிடையேயான பேதங்களைக் களைந்தெறிந்து சமத்துவ வாழ்வியல் எட்டப்படும்போது சாதி, மத, பாலின, பிரதேச வேறுபடுத்தல்கள் யாவும் அற்றுப்போகும் என்ற புரிதலுடனான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இன்றைய பொருளுற்பத்தி – விநியோக முறைமை என்பவற்றில் நிலவும் வர்க்க பேதம் அகற்றப்படுதலே அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் தகர்க்கும் வழியெனத் தீர்மானிக்கப்பட்டு நடாத்தப்பட்ட போராட்டங்கள் சென்ற நூற்றாண்டின் எழுபதாம் ஆண்டுகள் வரை முன்னிலைக்கு உரியனவாக இருந்தன. எண்பதாம் ஆண்டுகளின் பிற்கூறில் இருந்து அந்த வரலாற்றுப் போக்குத் திசைமாறி சாதிகள், இனத்தேசியங்கள், பாலினப் பேதங்கள், பிரதேசங்கள் போன்றவற்றிடையேயான மோதல்கள் மேலோங்கிவிட்டன. வர்க்க முரண்கள் முனைமழுங்கிப் போயின. சென்ற நூற்றாண்டின் இறுதி இரண்டு தசாப்தங்களாக இயங்கத் தொடங்கிய அடையாள அரசியலின் முன்னெடுப்புகள் எத்தகைய தீர்வுகளையும் எட்டாத சூழலில் திணை அரசியலுக்கான தேடல் முனைப்புற்று வருகின்றது!

வர்க்கங்களாகப் பேதப்பட்டு மட்டும் தான் பொருளுற்பத்தி – விநியோக முறைமை இயங்கி வந்துள்ளதா? இனத்தேசியங்கள் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதாக உள்ள இன்றைய உலக நாடுகளுக்கான நிலவரத்தை வர்க்க அரசியல் சார்ந்த எழுச்சிகளால் தடுக்க இயலாமல் போனது ஏன்? எழுபது வருடங்களுக்கு மேலாக சோசலிச முன்னெடுப்பை மேற்கொண்ட சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் தகர்ந்ததும் அதனுள் இயங்கிய குடியரசுகள் ஒன்றுடனொன்று யுத்தம் புரிந்ததும் – அதன் உச்சமாக அவற்றுள் இயங்கிய இரு பெரும் குடியரசுகளான ருஷ்யாவும் உக்ரேனும் இன்னமும் மோதிக்கொண்டு இருப்பதும் ஏன்? பிராமண மேலாதிக்கம், வெள்ளாளியம், தலித்தியம் என வர்க்கங்களின் ஒன்றிணைவான முழுச் சமூக சக்திகளே இன்றைய பேசுபொருளாக மேற்கிளம்பி வந்திருப்பது எதனால்?

Image 1

கூர்மையான வர்க்கப் போராட்ட முனைப்பு ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து வரலாறு படைக்க உந்திக்கொண்டு இருந்த கொதிநிலையின் உச்சக் கட்டத்தில் 1917 ஒக்ரோபர் புரட்சி சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தை உருவாக்கி இருந்தது. அதன் பின்னர் ஐரோப்பாவில் சோசலிசத்தை வென்றெடுப்பதற்கான புரட்சிகள் ஏன் எழவில்லை என்பதற்கான தேடல்கள் பல தளங்களில் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் இத்தாலிய மார்க்சியரான கிராம்ஷியின் கருத்து நிலை பின்னர் உலகளவிலான கவனத்தை ஈர்ப்பதாக அமையலாயிற்று. அத்தகைய ஈடுபாட்டுடன் 1985 ஆம் ஆண்டு நியூட்டன் குணசிங்க ஆற்றிய “கிராமஷியின் சிந்தனைகள்” எனும் தலைப்பிலான உரை வர்க்கப் புரட்சி எதிர்நோக்கிய இடர்ப்பாடுகளுக்கான அடிப்படைகளைப் புரிந்துகொள்ள வழிசமைப்பதாக அமைந்து இருந்தது. சட்டத்தரணி சி. கனகசிங்கம் தமிழாக்கம் செய்து வழங்கியுள்ள நியூட்டன் குணசிங்கவின் வெளிப்பாட்டின் ஊடாக இவ்விடயத்தைக் கிரகிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது (நியூட்டன் குணசிங்க, “அந்தோனியோ கிராம்ஷி: ஒரு சுருக்க அறிமுகம்” . தமிழாக்கம்: சட்டத்தரணி சி. கனகசிங்கம் LLB, குமரன் புத்தக இல்லம், கொழும்பு-சென்னை. 2024).

இத்தாலி நாட்டின் மார்க்சியரான கிராம்ஷி, ஒக்ரோபர் புரட்சி வாயிலாக சோவியத் யூனியன் உருவாக இயலுமாக இருந்த வரலாற்றுப் பின்னணியை விளக்கி உள்ளார். ஜனநாயக மறுப்புடன் இயங்கிய ஜாரிஸ ருஷ்யாவின் வன்முறை ரீதியிலான ஒடுக்குமுறைக்கு எதிராகப் பாட்டாளி வர்க்கப் புரட்சி அங்கே ஏற்பட இயலுமாயிற்று. ருஷ்ய ஆட்சியாளரது கருத்தியலை மேவிப் பாட்டாளி வர்க்கக் கருத்தியல் மேலாண்மை பெற வாய்ப்பு இருந்தது. பலாத்கார ஒடுக்குமுறையைக் காட்டிலும் கருத்தியல் மேலாண்மை வாயிலாக (மக்களது ஒப்புதலுடன்) சுரண்டலை மேற்கொள்ள ஏற்றதான ஜனநாயக அரசுகளை ஏற்படுத்தியவாறு இயங்கிய மேற்கு ஐரோப்பாவில் பாட்டாளி வர்க்கப் புரட்சி இலகுவானதாக இருக்கவில்லை. ஆளும் தரப்பாரது கருத்தியல் மேலாண்மை வலுவுடனுள்ள மேற்கு ஐரோப்பாவில் முன்னெடுக்கப்பட வேண்டிய மாற்று வழிகளை கிராம்ஷி முன்வைக்கிறார் என்பதனை நியூட்டன் குணசிங்க மேற்படி நூல் வாயிலாக எடுத்துரைக்கிறார். கத்தோலிக்க மதக் கருத்தியலின் குவிமையமாகத் திகழ்ந்த இத்தாலி மேலும் சிறப்புக் கூறுகள் சிலவற்றைக் கொண்டிருந்தது. கைத்தொழில் விருத்தியுடன் முன்னேறி இருந்த வடக்கு இத்தாலி பின்தங்கிய விவசாய வாழ்முறைக்கு உரிய தெற்கு இத்தாலியை ஒடுக்கிச் சுரண்டுவதாக அமைந்துள்ள தனிப் பண்பு குறித்து கிராம்ஷி வெளிப்படுத்திய கூர்நோக்கு கவனிப்புக்கு உரியது. வடக்கின் முதலாளிகளுக்கு எதிராக மட்டுமன்றி அங்குள்ள பாட்டாளி வர்க்கத்துக்கும் விரோதமாகத் தங்களால் ஒடுக்கிச் சுரண்டப்படும் விவசாயப் பெருந்திரளினரை மாற்றிப் பிரதேசவாத அடிப்படையில் ஒன்றிணைத்தவாறு தெற்கு இத்தாலியின் நிலப்பிரபுக்களால் இயங்க இயலுமாகி உள்ளது. எதிர் நிலைக்கு உரிய ‘நிலப்பிரபுக்கள் – பண்ணையடிமை விவசாயிகள்’ எனுமிரு தரப்பாரும் புறநிலைக் காரணிகள் ஏற்படுத்திய வாய்ப்புடன் இணக்கப்பாட்டுக்கு உள்ளாகிய காரணத்தால், ஒன்றிணைய வேண்டியவர்களான தொழிலாளர் – விவசாயிகள் இடையேயான ஐக்கியம் ஏற்பட இயலாமலாகி உள்ளது என்பதனைக் கிராம்ஷி கவனத்தில் எடுத்துள்ளார்.

Image 3

“விவசாயிகளையும் நில உடமையாளர்களையும் உள்ளடக்கிய பிராந்திய அடிப்படையிலான விவசாயிகள் கூட்டு இருக்கும் வரையில் கிராம்ஷி வரலாற்றுக் கூட்டு (Historical Block) என விபரித்து எதிர்பார்த்திருந்த தொழிலாளர், விவசாயிகள் கூட்டு உருவாகுவதற்கு வாய்ப்பு இருக்கவில்லை. தொழிலாளர், விவசாயிகள் கூட்டு இன்றிப் புரட்சியின் வெற்றியை உறுதி செய்ய முடியாது. இதன் பிரகாரம் அரசியல் ரீதியில் நோக்கும்போது புரட்சிக்கு இருந்த முக்கிய தடை இந்த விவசாயிகள் கூட்டேயாகும். இதன்படி பார்த்தால் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வர்க்கக் குழுவான கைத்தொழில் செல்வந்த வர்க்கத்தின் தேவைகளை விவசாயிகள் கூட்டு பூர்த்தி செய்து நின்றது எனலாம். விவசாயிகள் கூட்டு என்பது தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பிரித்து அவர்களை இருவேறு அணிகளில் வைத்திருக்கும் பணியையே செய்தது. வடக்கின் செல்வச் செழிப்புப் பற்றியும் வடக்கு தெற்கைச் சுரண்டுகிறது எனவும் உரத்துக் குரல் எழுப்பும் அளவிற்குத் தெற்கின் நில உடமையாளர் விவசாய மக்கள் மீது செலுத்திய செல்வாக்கும் சுமத்திய தலைமையும் உறுதி கண்டிருந்தது. இதனால் தொழிலாளர், விவசாயிகள் கூட்டு உருவாகுவதற்குத் தடை ஏற்பட்டது” (நியூட்டன் குணசிங்க, பக். 34-35) என வரலாற்று மாற்றப் போக்குக் குறித்து வெளிப்படுத்திய அவதானிப்புக் கவனிப்புக்கு உரியது!

கிராம்ஷி போன்ற அர்ப்பணிப்புமிக்க பல மார்க்சியர்கள் முன்னெடுத்த எத்தகைய மாற்று வழிகள் ஊடாகவும் பாட்டாளி வர்க்கத் தலைமையில் ‘வரலாற்றுக் கூட்டு’ எதுவும் மேற்கில் ஏற்படவுமில்லை; முன்னேறிய முதலாளித்துவ அமைப்பைச் சோசலிசத்துக்கு உரிய அடுத்த கட்டம் நோக்கி மாற்ற இயலவுமில்லை. புரட்சியின் கோரிக்கை ஒடுக்கப்பட்ட தேசங்களின் பால் திரும்பி இருந்தது. ‘ஒடுக்கப்பட்ட தேசங்கள்’ எனும் திணைகளுக்குள் இயங்கும் பல வர்க்கங்களது ‘வரலாற்று கூட்டு’ (கிராம்ஷி முன்னுணர்ந்திருக்க இயலாத முதலாளி வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்தியவாறு) முன்னெடுத்த புரட்சிகள் வாயிலாகவே சோசலிசம் வெற்றிகொள்ளப்பட்ட சீனா, வட கொரியா, கியூபா, வியட்னாம் போன்ற தேசங்களின் அனுபவம் கிராம்ஷியின் மறைவுக்குப் பின்னர் அரங்கேறி இருந்தது. முன்னேறிய முதலாளித்துவத்துக்கு உரிய மேற்கு நாடுகளே சோசலிசத்தின் தொட்டில் எனும் நம்பிக்கையை வரலாறு பொய்ப்பித்து விட்டது!

பெருந்தெய்வமும் சமத்துவக் கடவுளர்களும்

கூர்மையடைந்த வர்க்க முரண்பாடு முழுமைப்பட்டு இருக்கவில்லை என்பதோடு அரசியந்திர ஒடுக்குமுறையை விடவும் பண்பாட்டுக் கருவி கொண்டு சுரண்டலைத் தொடரும் வாய்ப்பை அதிகம் உடையதாக இருந்த இத்தாலியில் ‘பாட்டாளி வர்க்கக் கருத்தியல் மேலாண்மையை’ சாத்தியப்படுத்தும் வழிமுறைகள், அதன் வாயிலாக இத்தாலியப் புரட்சியை எவ்வகையில் நிதர்சனமாக்கலாம் என்ற தேடலில் கிராம்ஷி புதிய சிந்தனை எல்லைகளைத் தொட்டிருந்தார். மார்க்சியச் சிந்தனையில் அது விருத்திக்கு உரியதேயாயினும், அந்த வட்டத்துக்குள்ளேயே சிறைப்பட்டுப் பாட்டாளி வர்க்கப் புரட்சியைத் தேடிக்கொண்டு இருப்பதை விடுத்து இன்றைய கால, தேச நிலைமைக்கான வளர்ச்சியை நோக்கி முன்னேறுவது அவசியம். கருத்தியல் ஒடுக்குமுறை பிரதான வடிவத்தைப் பெறாதிருந்த ருஷ்யாவில் புரட்சி சாத்தியப்பட்டது எனும் வேறுபட்ட குணாம்சத்தைக் கூறியிருப்பதை வைத்து சோவியத் புரட்சி மிக இலகுவாக வெற்றிகொள்ளப்பட்டதாக கிராம்ஷி கருதியதாகப் பொருள்கொள்ள வேண்டியதில்லை.

Image 2

புரட்சிக் கனி முதிர்ச்சியடைந்ததும் லெனின் தலைமை சுலபமாக அதனைத் தட்டிப்பறித்து எடுத்திருக்கவில்லை. மார்க்சின் கருத்து நிலையைக் கடந்து தனியொரு நாட்டில் சோசலிசத்தை வெற்றிகொள்ள இயலும் என்ற மாற்றத்தை ருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் முன்னேறிய அணியினர் ஏற்க வைக்கப்படுவதற்கு மிக உக்கிரமான கருத்தியல் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி இருந்தது. ஒக்ரோபர் புரட்சியில் லெனினுடன் இணைத்துப் பேசப்பட்டவரான ட்ரொட்ஸ்கி இந்தக் கோட்பாட்டை இறுதி வரை நிராகரித்து, மார்க்சிடம் நிலவியது போல உலகப் புரட்சி ஒரேயடியாக ஏற்பட வகைசெய்யக் கூடியதான நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் மீதே தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்தார். கால மாற்றத்துடன், பாட்டாளி வர்க்கம் மட்டுமன்றி ஒடுக்கப்பட்ட தேசங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் உணரப்பட்டு லெனினால் முன்வைக்கப்பட்ட சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு மிகுந்த கவனிப்புக்கு உரியது. ரோஸா லக்‌ஷம்பேர்க் போன்ற உறுதிமிக்க மார்க்சியர்கள் ‘பாட்டாளி வர்க்கத்தை ஒடுக்கும் – ஒடுக்கப்படும் தேசங்களின் பேரால் பிளவுபடுத்தும் தவறான கோட்பாடு, சுயநிர்ணய உரிமை’ என வாதிட்டு நிராகரித்த போதிலும் அதன் பிரயோகம் காரணமாகவே சோவியத் புரட்சியை வெற்றிகொண்டு தொடர்ந்து முன்னெடுக்க இயலுமாக இருந்தது.

மிகச் சிறிய அமைப்பேயாயினும் சமூக மாற்றப் புரட்சிக்கான செயற்பாடுகளை முழு நேரப் பணியாகக் கொண்டு இயங்கும் கட்சியொன்று சரியான கோட்பாடு, ஸ்தாபனக் கட்டுக்கோப்பு, உறுதிமிக்க தலைமைத்துவம் என்பவற்றுடன் களமாடும் பட்சத்தில் புரட்சிகரச் சூழல் கனிந்ததும் மக்கள் விடுதலையை நோக்கியதாக அதனை வளர்த்தெடுக்க இயலும். எவ்வளவு பிரமாண்டமான புரட்சிகரக் கட்சியாக இருந்த போதிலும் காலப் பொருத்தமற்ற கோட்பாட்டுடன், ஸ்தாபனக் கூட்டுணர்வில்லாமல், உறுதிமிக்க தலைமைத்துவ வழிகாட்டலை வழங்கத்தவறியபடி வாய்வேதாந்தம் பேசுகிறவர்கள் புரட்சிகரச் சூழலைக் கைநழுவிப்போக இடமளித்து எதிரிக்கே வாய்ப்பை வழங்குவர் என்பதனை லெனின் முன்னதாகவே வலியுறுத்தி இருந்தார். அதன் காரணமாகவே மார்க்சியத்தைப் புதிய காலகட்டத்துக்கும் ருஷ்யப் புறச் சூழலுக்கும் அமைவாக விருத்தி செய்து லெனினிசமாகப் பரிணமித்த வடிவில் பிரயோகித்ததன் வாயிலாக உலகின் முதல் சோசலிச நாட்டை உருவாக்க இயலுமாயிற்று!

கிராம்ஷி ‘வரலாற்று கூட்டு’ பற்றி வெளிப்படுத்திய கருத்து நிலை சீனப் புரட்சியில் இயல்பாக வந்தமைந்தது. பாட்டாளி வர்க்கத் தலைமையில், பாட்டாளி வர்க்க அரசொன்றை வென்றெடுப்பதற்காக ஏற்படும் கூட்டு பற்றி அவர் அக்கறைப்பட்டதற்கு மாறாக சீன அனுபவம் அமைந்திருந்தது. விடுதலைத் தேசியப் புரட்சி ஊடாக சமூக மாற்றத்தைச் சாதிக்கும் குறிக்கோளைக் கொண்ட ‘மக்கள் அரசு’ ஏற்படுத்தப்படுவதற்கானது சீனப் புரட்சி. விவசாய மக்கள் திரளின் போராட்ட முன்னெடுப்பில் பாட்டாளி வர்க்கச் சிந்தனையான மார்க்சிஸ – லெனினிஸம் கையேற்கப்பட்டு பிரயோகிக்கப்படும் பண்பு ரீதியிலான மாற்றத்தை மாஓ சேதுங் சிந்தனை சாதித்திருந்தது. பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம் சீனப் புரட்சியால் கையேற்கப்பட்ட போதிலும் ‘பாட்டாளி வர்க்கச் சிந்தனை மேலாண்மை’ வென்றெடுக்கப்படுவதற்காக அல்லாமல் விவசாய நலனுக்கு முன்னுரிமை வழங்கும் ‘விடுதலைத் தேசியச் சிந்தனை முறைமை’ மாஓ சேதுங் சிந்தனை வாயிலாக எட்டப்பட்டது. முதலாளித்துவ மாற்றியமைத்தல் 1953 ஆம் ஆண்டுடன் நிறைவாகி விட்டதாக மக்கள் சீனம் கருதி ‘பாட்டாளி வர்க்கச் சிந்தனை மேலாண்மைக்கு’ இடமளிக்க முற்பட்ட போது சீனப் புரட்சி பெரும் இடர்பாட்டை (கலாசாரப் புரட்சிக் காலகட்டத்தில், 1966-1976) எதிர்நோக்க நேர்ந்தது. வரலாற்று மாற்றப்போக்கின் நிர்ப்பந்தத்தை மனங்கொண்டு வரலாற்று கூட்டுக்கு உரியதாக மீண்டும் முதலாளி வர்க்கத்தை ஐக்கியப்படுத்திய பின்னரே சோசலிச முன்னெடுப்பை மக்கள் சீனத்தால் ஆளுமையுடன் தொடர இயலுமாயிற்று (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ‘கலாசாரப் புரட்சி’ காலகட்டத்தில் மாஓ சேதுங் ஏற்றுக்கொண்ட போதிலும் ‘பாட்டாளி வர்க்கச் சிந்தனை மேலாண்மைக்கு’ ஆட்பட்டார் எனக் கூற இயலாது. 1953 இல் “சோவியத் சோசலிசப் பொருளாதாரம் எதிர்நோக்கும் பிரச்சினைகள்” பற்றிய ஸ்டாலின் முன்வைத்த கருத்துகளை விமரிசித்தபோது, விவசாயி வர்க்கத்தின் மீது பாட்டாளி வர்க்கத்தின் மேலாண்மையை ஏற்க மறுத்து மாஓ கண்டித்தார் என்பது கவனிப்புக்கு உரியது).

பூரண வர்க்கப் பிளவடைந்த ஐரோப்பியச் சமூகச் சூழலில் ஒடுக்கப்பட்ட தேசம் ஒன்றுக்கான விடுதலையில் பங்கேற்கும் ‘அனைத்து வர்க்கங்களையும் ஐக்கியப்படுத்தும்’ அவசியத்தைப் புரிந்து கொள்வது சிரமமான ஒன்றுதான். தனியொரு வர்க்க மேலாண்மையை வலியுறுத்தும் வகையில் அதிகாரம் பெறும் பகுதிக்குரிய பிரதான அம்சம் ஏனையவற்றை வெற்றி கொண்டு அடக்கி ஒடுக்குவதன் ஊடாக இல்லாமலாக்கும் அவசியம் வர்க்கப் பிளவுச் சமூகத்தில் இயல்பான, அவசியமான ஒரு பணி. பண்பாட்டுத் தளத்தில் ஒரு கடவுள் மேலாண்மை ஏற்பட்டு ‘சிறு தெய்வங்கள்’ தம்முடன் இணங்கி வாழத்தக்க இருப்பை அனுமதிக்க இயலாமல் அழித்துவிடுவதான வாழ்வியல் வெளிப்பாடு தான் அங்கு சாத்தியம் என்பதனால் ஐரோப்பியச் சமூகம் கிறிஸ்தவத்தை தனக்கமைவாக வடிவமைத்துக் கொண்டது!

இனமரபுக்குழுப் பண்பாட்டுத் தொடர்ச்சியைக் கொண்டிருக்கும் சாதியச் சமூகத்தில் ஒற்றைக் கடவுளுடன் மக்களது வாழ்வியல் நீடிக்க இயலவில்லை. ஒவ்வொரு இனமரபுக் குழுவுக்குமான கடவுளர்களின் வேறுபட்ட வடிவங்களையும் தன்னுடன் இணைத்தபடியே தான் மேலாதிக்கம் பெற்ற சாதிய வர்க்கத்தின் முழுமுதல் கடவுளால் இயங்க இயலுமாக இருந்துள்ளது. நிலப்பிரபுத்துவ அமைப்புக்குரிய ‘தென்னாடுடைய சிவன்’ மேலாதிக்கம்பெற்ற வரலாற்று இயக்கப் போக்கின் ஊடாக அந்த விவகாரங்களைப் பார்த்து வந்திருக்கிறோம்.

Image 4

சோழப் பேரரசில் அத்தகைய மேலாதிக்கத்தை வெற்றிகொண்ட சிவன் ஆரம்ப கட்டத்தில் அந்த மேலாண்மையை அதீதமாக வெளிப்படுத்துகிறவராக இருந்துள்ளார். சிவனே ‘எந்நாட்டவர்க்கும் இறைவன்’ என உணர்த்தப்படும் வகையில் லிங்கத்துடன் உள்ள கருவறைக்கான விமானம் விண்முட்டும் உயரத்தில் கட்டமைக்கப்பட்டு இருந்தது. ராஜராஜ சோழனின் தஞ்சைப் பெருங்கோயில், இராஜேந்திர சோழனின் கங்கைகொண்ட சோழபுரம் ஆகியவற்றின் விமானங்கள் ஓங்கியுயர்ந்து தமது மேலாண்மையை வலியுறுத்தி நிற்பதைக் காணலாம். மருதத் திணை மேலாதிக்கமும் அதன் வாயிலாகப் பெற்ற வளர்ச்சி ஊடாக வெள்ளாளச் சாதி பெற்றிருந்த அதியுயர் மேலாண்மையைப் பண்பாட்டு மேலாதிக்கமாக காட்டும் வகையில் விமானத்தின் ஓங்கியுயர்ந்த கம்பீரம் அமைப்பாக்கப்பட்டிருந்தது!

Image 5

இருப்பினும் பிற்காலச் சோழர்களது ஆட்சியியல் ஏனைய தரப்பாரது ஒத்துழைப்புக்கான பங்கேற்பை மதிக்கும் வகையில் (சாதியத்துக்கான தூரப்படுத்தலை வலியுறுத்தியபடி ஒன்றிணைத்து இயங்கும் அவசியத்தை ஏற்றுக்கொண்டவர்களாக) விமானத்தின் மேலாதிக்கத்தை கட்டுக்குள் வைத்தவண்ணம் சுற்றுப் பிரகாரங்களில் பன்மைப் பண்பாட்டுக் கூறுகளுக்கான அம்சங்களின் இருப்பை அங்கீகரித்து வெளிப்படுத்துபவர்களாக இருந்துள்ளனர். தமிழரல்லாத விஜயநகரப் பேரரசில் தனியொரு சாதி மேலாதிக்கம் சாத்தியமற்றுப்போன சூழலுக்கு அமைவாக வடிவம்பெற்ற கோயில் பிரகாரங்களின் பன்மைத்துவமே இன்றைய இந்துக் கோயில்களின் கட்டமைப்பாகத் தொடர்வதனை அவதானிக்கலாம்.

அதேவேளை கோயில் திருவிழாக்கள் ஊடாக சாதிய மேலாதிக்கப் பண்பு வலியுறுத்தப்படும்; குறிப்பாக வேட்டைத் திருவிழா, தீர்த்தத்திருவிழா என்பன கோயில் சுற்றுச் சூழலுக்குரிய ஆதிக்க சாதியின் ஆள்புலத்துக்கான விஸ்தீரணத்தைப் பறைசாற்றுவதாக இயக்கம் பெற்றுள்ளமையைக் கவனங்கொள்ள இயலும். மேலாதிக்கம் உணர்த்தப்படுவதற்கு அப்பால் பிற சமூகங்களுக்கான படிநிலை இறக்கத் தளத்துக்கு ஏற்றதான மதிப்பு, மரியாதைகள் அங்கீகரிக்கப்பட்டு இருத்தல் இந்துச் சமூக வாழ்வியலாக அமைந்திருந்தது. ஒவ்வொரு சாதிப் பிரிவினரது குலக் கடவுளர்கள் அவ்வப் பகுதியில் பெருமெடுப்புடன் வழிபட அனுமதிக்கப்படுவதுடன் ஆதிக்க சாதியினரது கோயில் பிரகாரங்களின் வெளிவட்டாரங்களில் ‘சிறு தெய்வங்கள்’ என்ற அங்கீகாரத்துடன் (பரிவாரத் தெய்வங்களது இருப்புக்கு உரியதாக) இடமளிக்கப்பட்டு உள்ளமையைக் காணலாம்.

சமரச சன்மார்க்கம், நாத்திக வாதம், ஆன்மீக நாத்திகம்

பலவேறு படிநிலை இருப்புக்கு உரியனவாக சாதிப் பிரிவுகள் இயங்கும் சமூக முறைமையை இந்திய நிலப்பிரபுத்துவக் காலகட்டம் முழு அளவில் ஒழுங்கமைத்துக் கொண்டது. வட இந்தியாவில் பிராமண மேலாதிக்கம் நிலவுடமையைப் பெறும் வகையில் சத்திரிய வர்ணம் இயங்கிய ரிக் வேத இறுதிப் படிநிலையில் சாதியக் கருத்தியல் (வர்ணக் கோட்பாட்டினூடாக) ஆரம்ப வடிவமாக வெளிப்பட்டிருந்தது. கிபி. நாலாம் நூற்றாண்டின் பின்னர் நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பிற்கு உரியதாக ஸ்மிருதிகள் வாயிலாகப் பிராமணியம் வடிவப்படுத்திய சாதியக் கருத்தியல் இன்னொரு பரிணமிப்புக்கு உரியது.

தமிழகத்தில் மருதத் திணை மேலாதிக்கம் வாயிலாக நிலவுடமைச் சாதியாக உருவாகிய வெள்ளாளர் பிராமணியத்தை உள்வாங்கிச் சாதியத்தில் ஏற்படுத்திய விருத்தி இன்னொரு வகையானது. சாதியத்தை மிக இறுக்கமுடையதாக வடிவப்படுத்தியதில் சூத்திரர்களாக வரையறுக்கப்பட்ட அதேவேளை அதியுச்ச மேலாதிக்க சாதியாகவும் மிளிர்ந்த வெள்ளாளருக்குப் பெரும் பங்கு இருந்துள்ளது. அவ்வகையில் சாதிய மேலாதிக்கத் தகுதியைத் தமக்கானதாக வருவித்துக்கொள்ளும் நோக்குடன் பிராமணர்களுக்கு அவர்கள் வழங்கிய அதீத புனிதப் பீடம் பின்னாலே வெள்ளாளர்களுக்கே நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது.

சமூகத் தலைமையைத் தம்மிடம் இறுக்கமாக வைத்துக்கொண்டு ஆன்மீகப் புனிதத்தைப் பிராமணர்களுக்கு வழங்குவது இலாபகரமானது என்ற கணிப்புத் தவறு என்பதைத் தமக்குரிய அரசுரிமையை இழந்தபோது உணர்ந்து கொண்டனர்; அதன் பேறாக ஆன்மிகத் தளத்திலும் வெள்ளாள மேலாதிக்கத்தை வலியுறுத்தும் பொருட்டு சைவசித்தாந்தத்தை வெளிப்படுத்தினர். பிராமணரை நிராகரித்து வெள்ளாளக் குரு காட்ட, கண்டடையும் பதி உடனான சங்கமிப்பே ஆன்ம ஈடேற்றம் பெறும் அதியுச்ச வீடுபேறு எனக்காட்டினர். இத்தகைய வெள்ளாள – பிராமண முரணை ஒரு எல்லைக்கு மேல் வளர்த்தெடுக்க இயலாது; முதலுக்கே சேதாரமாகிப் போய்விடுவதாக – தமக்கான சாதிய மேலாதிக்கத்தைக் கேள்விக்கு உள்ளாக்கிவிடும் அளவில் – பிராமணிய நிராகரிப்பை வெளிப்படுத்த இயலாது என்பதனை உணர்ந்து செயற்பட்டனர்!

இந்த இரண்டக நிலை காரணமாக சைவசித்தாந்த – வேதாந்த முரணை ஒரு எல்லைக்கு மேல் வளரவிடாமல் கட்டுப்படுத்தும் பொறுப்பு ஆதிக்கத் தரப்புக்கு இருந்தது. சைவசித்தாந்தம் தனிவழியில் எழுச்சி பெற்று ஆளுமையை நிலைநாட்டிய ஓரிரு நூற்றாண்டுகளில் வேதாந்தத்தினின்றும் பேதப்பட்டதல்ல சைவசித்தாந்தம் எனும் சமரச சன்மார்க்கக் கருத்து நிலைகள் வெளிப்பட்டு ஒட்டுறவை ஏற்படுத்த முனைந்தன. தாயுமான சுவாமிகள் போன்றோர் சமூக நல்லிணக்கத்துக்காக முன்வைத்த சமரச சன்மார்க்க இயக்க முன்னெடுப்புக் கால ஓட்டத்தில் பிராமண மேலாதிக்கத்துக்கு வழிகோலுவதாக அமைந்தது. மாறி வரும் ஆட்சியாளர்களுடன் ஆன்மிகத் தளம் சார்ந்து ஒட்டுறவாட இருந்த வாய்ப்பும் பொருளாதார மேலாதிக்கத்தைத் தக்கவைக்கும் உற்பத்தி உறவு முறைமையும் காரணமாக பிராமணியத்தின் வழித்தோன்றலாக (சமஷ்கிருதத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு) உருப்பெற்றதே சைவசித்தாந்தம் என்ற இடத்துக்கு சமரச மார்க்கம் வழிகோலியிருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் சைவசித்தாந்திகளே கூட மெய்கண்டதேவர் தொடக்கி வைத்தது சமஸ்கிருதத்தில் இருந்து பெறப்பட்ட தத்துவ நெறியே எனக் கூறும் அவலம் ஏற்படலாயிற்று.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் குடியேற்ற நாடாக இந்தியா முழுமையும் ஒட்டச் சுரண்டப்பட்ட போது சாதியத்துடன் காலனித்துவம் எனும் மற்றொரு கருத்தியல் ஒடுக்குமுறையும் கைகோர்த்தபடி உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை நாசப்படுத்தின. நவீன சிந்தனைகளை வெளிப்படுத்தும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுக்குரிய ஐரோப்பிய ஆட்சியளர்கள் தமது நாடுகளில் நிலப்பிரபுத்துவத்தை இல்லாமல் ஆக்கியது போல இந்தியாவில் மாற்றத்தை முழுமைப்படுத்த விரும்பவில்லை. இந்திய நிலப்பிரபுத்துவத்தின் சில பிடிகள் தகர்க்கப்பட்ட போதிலும் ஒழிக்கப்பட்ட பழமையின் இடத்துக்கான புதிய அடித்தளங்கள் ஏற்படுத்தப்படவில்லை. தமது ஊடுருவலுக்கு ஏற்புடைய சாதிய எதிர்ப்பை பேசுபொருளாக்கிய போதிலும் ஏற்பட்ட இடைவெளியில் காலனித்துவக் கருத்தியல் தளையை வலுவாகப் பிணைத்து அடக்கியாளும் வாய்ப்பையே காலனித்துவ வாதிகள் வருவித்துக்கொண்டனர்.

அதுவரையான கிராமிய நிலப்பிரபுத்துவ வாழ்முறையில் நிலவுடமையாளரின் சுரண்டலுக்கு அமைவாகப் பலவேறு சாதிப் பிரிவினரும் தத்தமக்கன உரிமைகள் – கடமைகளின் பாகுபாட்டுடன் கொண்டும் கொடுத்தும் வாழும் உயிர்த்துடிப்பான ஊடாட்டம் இருந்துவந்தது. எங்கோ உள்ள காலனித்துவச் சுரண்டலாளர் முகம் தெரியாமல் இருந்தவாறு எமது விளைச்சலைத் ‘துட்டுக்கு இரண்டாக விற்கும்படி’ ஆணையிடுவதோடு ஆதாயம் அனைத்தையும் வறுகி எடுத்துச் செல்வதாகவும் வாழ்வின் அந்நியமாதல் உச்சம் பெறலாயிற்று. பஞ்சம், பசி, பட்டினி, கொள்ளை நோய்கள் என்பன பெருகி மரண ஓலங்கள் நாளாந்த விவகாரமாயின. அத்தகைய சூழலில் ஆன்மிகத் தேடலில் ஆர்வம் கொண்ட ஆன்மாவொன்று ‘வாடிய பயிரைக் கண்டு வாடித் துடித்தது’. தாம் நாடிய மதக் கருத்தியல் தனக்கும் சமூகத்துக்கும் உரிய தீர்வைத் தராத ஏக்கத்தில் மதநீக்க ஆன்மீக எழுச்சியை முன்னிறுத்தும் இயக்கத்தைத் தொடக்கி வைத்தது. மக்களின் பட்டினிக் கொடுமையைத் தீர்க்கும் வழிமுறைக்கு முன்னுரிமை வழங்கியபடி சுத்த சமரச சன்மார்க்க நெறியைத் தொடக்கிவைத்தது!

இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய முதலாளித்துவம் ஏகாதிபத்தியக் கட்டத்தை எட்டியது; அதனைத் தகர்க்கும் குறிக்கோளை அதனுடன் இணைந்த அம்சமாக வளர்ந்த பாட்டாளி வர்க்கம் ஏற்கனவே பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெற்றிருந்த மார்க்சியச் சிந்தனை ஆயுதத்தை மேலும் கூர் தீட்டி, ஏகாதிபத்திய சகாப்தத்துக்கான விருத்தியை எட்டிய லெனினிசமாக வளர்த்தெடுத்து ருஷ்யப் புரட்சியைச் சாதித்தது. “எவரும் ஆள்வோரும் இல்லை, அடிமையென யாரும் இல்லை” என்ற சோவியத் சோசலிசச் சிந்தனை இந்தியாவிலும் எதிரொலித்தது. மக்கள் விடுதலைக்கான மார்க்கம் குறித்த தெளிவற்ற காலச் சூழலில் மத நீக்கத்துடன் வள்ளலார் கண்டடைந்த ஆன்மிகத் தேடலை வளர்த்தெடுத்து ஆன்மிக நாத்திகக் கருத்தியல் அடிப்படையிலான விடுதலைத் தேசியச் சிந்தனை முறையாக இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வெளிப்படுத்தியது!

ஏகாதிபத்தியக் கையாளுகை காரணமாக ஆன்மிக நாத்திகக் கருத்தியல் தொடர் விருத்தியைப் பெற இயலாமலாகி வேறு தளங்களிலான தேடல்கள் ஒன்றுடனொன்று ஊடாடியபடியே சமாந்தரமாக இயங்குவனவாக இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதி கடந்துபோயிற்று. தலித் அரசியல், இனத் தேசிய அரசியல், தாராளவாத அரைப் பிராமணத் தேசிய இயக்கம் என்பன சாதியக் கருத்தியல் மீது தத்தமது தளங்கள் சார்ந்த தாக்குதல்களை ஏற்படுத்தின. தலித்தியம், இனத்தேசியம், தேசியம் எனும் மூன்று முனைகளில் இயங்கியவை சாதியம் – காலனித்துவம் எனும் இரு நுகத்தடிகளையும் பூரணமாகத் தூக்கியெறியும் விடுதலைத் தேசியச் சிந்தனை வகைக்கு உரியனவல்ல என்றபோதிலும் சாதியத் தகர்வுக்கான முன்முயற்சிகளைத் தொடக்கி வைத்தன. “சாதியத் தகர்ப்புக் கருத்தியல்கள்” எனும் இந்த மூன்றாம் பகுதி அவை குறித்து ஆறு அத்தியாயங்களில் அதனது தேடலை முன்வைக்கும்!

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

7722 பார்வைகள்

About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)