மலையக மக்களின் போராட்ட வரலாறு - பகுதி 1
Arts
25 நிமிட வாசிப்பு

மலையக மக்களின் போராட்ட வரலாறு – பகுதி 1

March 6, 2024 | Ezhuna
மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 'இந்திய வம்சாவளித் தமிழர்கள்' எனும் பெயரோடு ஆரம்பித்த இரு நூற்றாண்டுப் பயணம் 'மலையகத் தமிழர்' எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. இதனை நினைவுபடுத்துவதாகவும் மீட்டல் செய்வதாகவும் 'மலையகம் 200' நிகழ்வுகள் உலகு தழுவியதாக நடைபெற்றன. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பின்னடைவுகள், செல்ல வேண்டிய தூரம் போன்ற விடயங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தன. அதற்கேற்ப, விம்பம் அமைப்பு எழுநாவின் அனுசரணையுடன் கட்டுரைப் போட்டியொன்றை நடத்தியது. இப் போட்டியில் வெற்றி பெற்ற வெவ்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைகள் 'மலையகம் 200' எனும் தலைப்பில் தொடராக எழுநாவில் வெளியாகின்றன.

“சிலோன் நாட்டில் முன்னேற்றமடைந்து வரும் கோப்பிப் பயிர்ச் செய்கையானது உண்மையிலேயே மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தோற்றப்பாடாக உள்ளது. இந்தத் தீவில் இத்தகைய நிலமைகளை முன்னர் கண்டிருக்க முடியாது. சிங்கள மக்களின் நம்பிக்கையின் படி பூதங்களே மனித குலத்துக்காக இவற்றை உருவாக்கி இருக்கக்கூடும்” 

-Ceylon Miscellany 1866-

“தேயிலை வளருகின்ற இடங்கள்; அது மலைகளாக இருக்கலாம் அல்லது பள்ளத்தாக்குகளாக இருக்கலாம். அவை புனிதமானவையாகும்.” 

-Drinking of Tea : Rules of Health, Japan. (12th century)-

இருநூறு வருடங்களுக்கு மேற்பட்ட மலையக மக்களின் வரலாறு தொழிலாளர்களின் கண்ணோட்டத்தில் ஆராயப்பட வேண்டும். அதுவே உண்மையானதாக அமையும். இந்தியாவிலிருந்த இடம் பெயரத் தொடங்கிய காலம் முதல் இன்று தனது வாழிடம் மற்றும் தொழில்சார் உரிமைகள் தொடர்பாக றம்பொடை தோட்ட மக்கள் (புஸ்ஸல்லாவ) முன்னெடுக்கும் போராட்டம் வரை இடம் பெற்றுள்ள நிகழ்வுகள் அனைத்தும்  சமூக விஞ்ஞான அடிப்படையில் அணுகப்பட வேண்டும். அயராத உழைப்பு, தொழிற் சங்கங்கள் அமைப்பதற்கான முயற்சிகள், மக்கள் எழுச்சி, வேலை நிறுத்தங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், உயிர்த் தியாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மலையக வரலாற்றைப் படைத்தளித்த உழைப்பாளர் சார்பாக, அவர்களின் எதிர்கால நன்மைக்காக ஆராயப்பட வேண்டும். வெளிக் கொணரப்படும் விடயங்கள் பல்வேறு வடிவங்களில் மீண்டும் மக்களுக்கு கொண்டு செல்லப்படுவதோடு அதனூடாக நாட்டில் சமமாக வாழ்வதற்குரிய போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதும் அவசியமானதாக உள்ளது. போராட்ட வரலாற்றைக் கற்றல் என்பது சுயலாபத்திற்காகவன்றி அல்லது மனனஞ் செய்யும் கல்வி நடவடிக்கைகளிற்காகவன்றி மக்கள்சார் செயலுக்கான தூண்டுதலாக அமைய வேண்டும்.

இந்த நாட்டினை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்திலும், உள்ளூர் ஆட்சியாளர்களின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் கைமாற்றப்பட்ட பின்னரும் மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் பேரினவாத அடிப்படையிலும், முதலாளித்துவ அணுகுமுறையின் அடிப்படையிலும் ஈவிரக்கமின்றிய சுரண்டலை முன்னெடுத்த முறைகள் தொடர்பிலும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட சம்பவங்கள் தொடர்பிலும் விரிவான தேடல்களை முன்னெடுப்பது கட்டாயமானதாக அமைகின்றது. இதைவிட மலையக மக்களை ஒன்றிணையவிடாது செயற்படுகின்ற மக்கள் விரோத அரசியல், தொழிற்சங்கச் செயற்பாடுகள், மற்றும் ‘துர்நாற்றத்திற்கு வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளத் தூண்டுகின்ற’ அரச சார்பற்ற நிறுவனங்களின் மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். 

முதலாளித்துவ ஆட்சி முறை, தாராளவாதம், தனியார்மயம், பேரினவாதம், அடக்குமுறைச் சட்டங்கள் போன்றன எவ்வாறு இந்த நாட்டின் தொழிலாளர், விவசாயிகள், கீழ் மத்திய தர வர்க்கத்தினரை ஈவிரக்கமின்றி சுரண்டிக் கொழுக்கின்றன என்பதையும் இவர்களை ஒன்றிணையவிடாது தடுத்து நிற்கின்றன என்பதையும் சரியாக விளங்கிக் கொள்வதன் மூலமே எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக கடந்த இருநூறு வருடங்களுக்கு மேலாக இந்நாட்டின் நலனுக்காக உழைத்த மலையகத் தொழிலாளர்கள் தமது  போராட்ட வரலாற்றையும் ஒற்றுமையின் மூலமாக வெற்றி கொண்ட உரிமைகள் பற்றியும் ஆழமாக விளங்கிக் கொள்வதன் மூலம் மட்டுமே எதிர்காலப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை விளங்கிக் கொள்ளுதல் மிகவும் அவசியமானதாகும்.

மலையக மக்களின் வரலாற்றை கற்பதற்குரிய வாய்ப்புகள் வரையறைக்குட்பட்டதாகவே காணப்படுகின்றன. ஆங்கில மொழியில் எழுதப்பட்ட பல நூல்கள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட வேண்டியனவாக உள்ளன. மேலும் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட நூல்கள், தோட்டங்களின் அழகு – இயற்கைக் காட்சிகள் – துரைமாரின் வாழ்க்கை பற்றியே அதிகம்  பேசுகின்றன. மனிதர் அண்டாத பகுதியை வளமுள்ள பணத்தினை அள்ளித் தருகின்ற பசுஞ் சோலைகளாக மாற்றிய தொழிலாளர்கள், அவர்களது தொடர்ச்சியான போராட்டங்கள், உயிர் தியாகங்கள் போன்றன குறித்த பதிவுகள் குறைவானாகவே காணப்படுகின்றன. அவற்றை மீளவும் தேடித் தொகுப்பது காலத்தின் தேவையாகும்.

தனது சமூக வரலாற்றை மறந்த இனம் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. மானுட வரலாறையும் உலக வரலாறையும் ஆழமாகக் கற்கும் அதே வேளையில் இலங்கையின் வரலாற்றையும் மலையக மக்களின் வரலாற்றையும் சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் அணுகிக் கற்க வேண்டும். ஆனால் எமது கலைத்திட்டங்களில் மலையக மக்களின் வரலாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதிலும் பேரினவாதமும் மதவாதமும் மேலோங்கிக் காணப்படுகின்றது. வரலாறு திரிபுபடுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் பணிகளில் ஈடுபடுவோர், கலைஞர்கள், இலக்கியவாதிகள், ஆசிரியர்கள் போன்றோர் மலையக மக்களின் வரலாற்றை மாணவர்கள் கற்பதற்கான விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். பல்வேறு கலை நுட்பங்களின் மூலமாக உழைக்கும் மக்களுக்கு வரலாறு குறித்த புரிதலை ஏற்படுத்துதல் முக்கியமான பணியாக அமைகிறது. மலையக மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை வரையறை செய்து கொள்வதற்கு இத்தகைய அணுகுமுறை பெரிதும் பயன்படும்.

இந்தக் கட்டுரையானது மலையக மக்கள் மீதான அடக்குமுறைகள் குறித்தும் அதற்கெதிராக நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் பற்றியும் ஆய்வு செய்வதற்கான அடிப்படைகளை உள்ளடக்கி உள்ளது. இதனை மேலும் விரிவுபடுத்தி ஆய்வு செய்வதும், கற்றுக் கொண்டவற்றை பல்வேறு செயல்நுட்பங்களின் அடிப்படையில் மக்களிடம் கொண்டு செல்வதும் மிகவும் பயனள்ளதாக அமையும்.

இடம்பெயர்ந்து வருவதற்கு முன்னர், இந்தியாவில் பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சி தொடங்கும் காலத்தில், நிலபிரபுத்துவ சமூகத்தின் ஒடுக்கு முறை பரவலாகக் காணப்பட்டது. நிலமற்ற விவசாயிகள் பல்வேறு அடக்கு முறைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. அதேவேளையில் காலனித்துவ ஆட்சி வளச்சுரண்டலையும் இலாப நோக்கையும் அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டமையால் விவசாயம், கிராமியக் கைத்தொழில் போன்றன வீழ்ச்சியடைந்தன. வறுமை, பஞ்சம், கொள்ளை நோய்கள், சாதிய அடக்குமுறைகள் மென்மேலும் அதிகரித்தன.

17 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பனி பலமுள்ளதாக இருந்தது. அதன்மூலம், பல்வேறு  உடன்படிக்கைகள் ஆங்கிலேயருக்குச் சார்பாக மேற்கொள்ளப்பட்பட்டன. மதராஸ், ஆங்கிலக் கம்பனியின் மையமாக இருந்தது. கல்கத்தா நகரத்தில் அமைக்கப்பட்ட வில்லியம் கோட்டை காலனித்துவத்தின் செயல் மையமாக விரிவுபடுத்தப்பட்டது. தென் இந்தியாவுக்கான திறவு கோல் என்று அழைக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி கோட்டை இன்னுமொரு நிலையமாக இருந்தது. ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தாலும் படைத்துறை ஒப்பந்தங்கள் மூலமாக மக்களை அடக்கும், அடிமைப்படுத்தும் நடவடிக்கைள் இலகுவாக்கப்பட்டன. இராணுவ மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள், சட்டங்கள், அடக்குமுறை நடவடிக்கைகள் மூலமாக தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட காலனித்துவ ஆட்சி தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டன.

ஆங்கிலேயர் இந்தியாவை முழுமையாக தமது ஆட்சிக்குக்கீழ் கொண்டு வந்த போது பொருளாதார நிலை மிகவும் சீரழிந்து காணப்பட்டது. அதேவேளை இங்கிலாந்து ஆட்சி முறை முதலாளித்துவத்தின் கோர முகங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இங்கிலாந்துக்கான பொருளாதார அணுகுமுறை இந்திய மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதாக இருந்தது. இதன் விளைவாக வறுமை தாண்டவமாடத் தொடங்கியது. நிலவரி முறைகள், குத்தகைப் பணம் என்பன காரணமாக உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. ஏழை விவசாயிகள் செத்து மடிய நேரிட்டது. பல இடங்களில் ஜமீந்தாருக்கு எதிரான போராட்டங்கள் இடம் பெற்றன. ஜமீந்தார்கள் விரட்டப்பட்டனர். எனினும் அத்தகைய நிலங்களை கிழக்கிந்திய கம்பனியே பெற்றுக் கொண்டது

நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ ஆட்சி முறை ஏற்படுத்திய சமூகப் பொருளாதார விளைவுகள் வறுமை நிலையையும் மரணத்தையும் அதிகரித்துச் சென்றன. வறட்சியும் குடிநீர் இன்மையும்  இவற்றை மேலும் தீவிரப்படுத்தின. இலஞ்சமும் ஊழலும் நிறைந்த நீதிமன்ற முறையானது பிரித்தானியச் சுரண்டலுக்கும் ஒடுக்குதலுக்கும் சாதகமாக அமைந்தது. புதிதாக ஆக்கப்பட்ட சட்டங்களும் விதிகளும் அடிமை முறையை பலப்படுத்துவனவாகவே அமைந்தன.

இத்தகைய சூழலில் கண்டிச் சீமை (சிலோன்), பினாங்கு, பிஜி, மொரிசியஸ் போன்ற இடங்களுக்குச் சென்றால் சுகமாக வாழலாம் என்ற வதந்திகள் கிராமங்களில் பரவத் தொடங்கியது. கிராமங்களில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பொய்யும், ஏமாற்றும் மக்களை கிராமங்களிலிருந்து வெளியே தள்ளியது. சென்றவர்கள் திரும்பி வராத காரணத்தால் உண்மை நிலை என்ன என்பதை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. சியாம் இரயில் பாதையை அமைக்கும் பொருட்டு பலியான பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பற்றிய செய்திகள் இந்தியக் கிராமங்களை சென்று சேராததைப் போல கண்டிச் சீமையிலும், மலேசியாவிலும், பிஜி தீவுகளிலும், மொரிசியசிலும் எதிர் நோக்கிய துன்பங்களும், அடக்குமுறைகளும் கிராம மக்களால் விளங்கிக்கொள்ளப்படவில்லை. இத்தகைய நிலையானது  ஆங்கிலேயத் துரைமார்களுக்கும் ‘ஆள் கட்டப் புறப்பட்ட’ கங்காணிகளுக்கும் வாய்ப்பாகப் போய்விட்டது. நாசுக்காகப் பேசி ‘ஆள் கட்டும்’ கங்காணிகளுக்கு வழங்கப்பட்ட பணமும் பொய் வாக்குறுதிகளும் வறுமை நிலையிலிருந்த மக்களை கிராமங்களிலிருந்து வேகமாகத் தள்ளிக் கொண்டு போனது. 

வாக்குறுதிகளை நம்பிச் சென்றவர்கள் மீளாத நிலை இலட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்வதற்குக் காரணமாகியது. ‘தேயிலைச் செடிக்குள் தேங்காயும் மாசியும்’ கிடைக்கும் என நம்பி வந்தனர் என்பதெல்லாம் வெறும் கட்டுக் கதையே ஆகும். நேர்வழியில் உழைத்தால் தேங்காயையும் மாசியையும் வாங்கி உண்ணலாம் என்ற நம்பிக்கையே இவர்களை இடம் பெயரச் செய்தது என்பதே உண்மையான வரலாறாகும். இன்றைய சூழலில் கூட மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றால் அதிக பணம் உழைக்கலாம் என்று நம்பிச் சென்று பிணமாகத் திரும்புவோரையும், காணாமல் போவோரையும், அதேவேளை அங்கு சென்று உழைப்பதற்காக ‘ஏஜென்சி’ மற்றும் ‘விசா’ காரியாலயங்களில் வரிசையில் காத்திருப்போரையும் நன்கு அவதானித்தால் அக்காலத்தின் நிலமைகளை இலகுவில் புரிந்துக் கொள்ள முடியும். 

பயணத்தின் போது முதலாளித்துவமும் காலனி ஆதிக்கமும் இலாபமீட்டுவதற்காக எதையும் செய்வதற்கு தயாராக இருந்தமையை உலக வரலாற்றைக் கற்பதன் மூலமாக அறிந்து கொள்ள முடியும். அதற்குச் சிறந்த உதாரணமாக கண்டிச் சீமைக்கான பயணத்தைக் குறித்துக் காட்ட முடியும். அந்த வகையில் இந்தியக் கிராமங்களில் தொடங்கிய பயணம் முதலில் திருச்சி, துறையூர், சேலம், நாமக்கல், மதுரை, திருநெல்வேலி, அறந்தாங்கி, தஞ்சாவூர், விழுப்புரம், அரக்கோணம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த ‘ஏஜென்சி ஆபிசுகளை’ அடைந்தது. பல்வேறு பொய்களைக் கூறி ‘ஆள் கட்டும்’ இடங்களாக அவை செயற்பட்டன. ஒப்பந்தக் கூலிகளைத் திரட்டவதற்காக  ஆங்கிலத் துரைமார்கள் வழங்கிய பணத்தின் பெறுமதியை கங்காணிகளின் சிரித்த முகங்களும், ‘தங்கப் பற்களும்’  வெளிப்படுத்தின.

அந்த நிலையங்களிலிருந்து இராமேஸ்வரம் கரையை அடையும் வரை பல நூறு கிலோ மீற்றர் தூரம் கால் நடையாகவே பயணித்த வரலாற்றை காலனித்துவ அடக்குமுறையினால் விளைந்த துன்பத்தின் இன்னுமொரு விளைவாகவே அடையாளங்காட்ட முடியும். எல்லாவிதமான துன்பங்களையும் தாங்கிக் கொண்டு கண்டிச் சீமையை அடைந்து விட்டால் இன்பமாக வாழலாம் என்ற உந்துதலே முக்கிய சக்தியானது. வரிசையாகப் பயணித்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், வறுமையின் அடையாளமாக தலைகளில் வைக்கப்பட்ட சிறு மூட்டையும் கங்காணிகளின் ஏச்சும், உரத்த சத்தங்களும் ஒரு மனித பேரவலத்தின் சாட்சியமாகவே அமைந்தன. அத்தனை துன்பங்களை எதிர்கொண்டமையையும் நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடர்ந்தமையையும் வாழ்க்கைக்கான போராட்டத்தின் தொடர்ச்சியாகவே அடையளங்காணலாம். உயிர்வாழ போராடுதல் என்பதே இதன் அடிப்படையாகும்.

கரையைக் கடத்தலும் இறங்குதலும் 

கப்பல் மற்றும் படகுகள் மூலமான பயணமானது மக்கள் உயிர்வாழ்வதற்கான போராட்டத்தின் உச்சத்தைத் தொட்டுச் செல்லும் சான்றுகளாகும். சிறு கப்பல்கள் மூலமான பயணம் புதிய அனுபவமாகவும், அச்சம் தரும் நிகழ்வாகவும் அமைந்து விட்டது. வாந்தியும் வயிற்றோட்டமும், ஒத்துவராத பயண நிலமைகளும், உயர்ந்து எழும் கடலலைகளின் காரணமாக ஏற்பட்ட பீதியும், குளிர் நடுக்கமும், கடல் நீரின் சாரலும் இவற்றால் ஏற்பட்ட விளைவுகளும் உழைக்கும் மக்கள் மீதான பாரிய அடக்குமுறைகளே.

அளவுக்கதிகமாகப் பயணிகளை ஏற்றியதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் மிகச் சரியான வகையில் இடம்பெறவில்லை. அவை தொடர்பான செய்திகளும் குறைவாகவே காணப்படுகின்றன. தொழிலாளர்களில் சில ஆயிரம் பேர் விபத்துகளால் பலியாகும் சம்பவங்கள் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு ஒரு பொருட்டாகவே அமைவதில்லை. அவர்களுக்கு இலாபமீட்டல் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் என்பதற்கு மலையகத்தில் இடம்பெற்ற சம்பவங்களையும் சியாம் இரயில் பாதையை அமைப்பதற்காக உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் மரணங்களையும்  சிறந்த உதாரணங்களாகச் சுட்டிக்காட்ட முடியும். 

ஆதிலட்சுமி என்ற படகு  மன்னார் வங்காலையிலிருந்து ஏறத்தாழ 150 டொன் பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுடன் பயணித்த போது கடலில் மூழ்கிய சம்பவத்தை வரலாறு பதிவு செய்கிறது. 05.02.1864 அன்று அப்படகு கடலில் மூழ்கிய வேளையில் அதில் பயணித்த 120 தொழிலாளர்களில் 14 பேர் மட்டுமே உயிர் பிழைத்ததாக செய்தி எழுதப்பட்டுள்ளது. அதே போல ‘சாரா ஆர்மி டேஜ்’ என்ற சிறு கப்பல் சிலாபத்துக்கு அருகில் சீறி எழுந்த பேரலையில் சிக்குண்டு மூழ்கியதில் 560 தொழிலாளர்கள் உயிரிழந்தமையை அக்காலத்தின் ஆளுநர் ஹென்றி வார்டின் பதிவு செய்துள்ளார். தமது உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழலிலும் கடுமையான போராட்டத்துடன் பயணித்து சிலோனை வந்தடைந்த தொழிலாளர்களின் வரலாறு, அடிப்படையில் போராட்டங்கள் நிறைந்தவை என்பதை விளங்கிக் கொள்ள முடியும். 

மன்னாரிலிருந்து மலையகத்திற்கு

மன்னாரில் வந்திறங்கிய தொழிலாளர்களுக்கு இலங்கையை ஆட்சி செய்த காலனித்துவ முதலாளிகளின் நிருவாகத்தில் மென்மேலும் துன்பங்களே வந்து சேர்ந்தன. மன்னாரிலிருந்து ஏறத்தாழ 250 கிலோ மீற்றர் தூரத்தை கால் நடையாகவே நடந்து வந்த நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் சிந்திக்கப்பட வேண்டியதொன்றாகும். அடர்ந்த வன்னிக் காட்டைக் கடந்து அனுராதபுரம், மாத்தளையைக் கடந்து கண்டிச் சீமையை அடைந்த வரலாறு உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தின் அடுத்த படி நிலையாகும். மன்னாரிலிருந்து கொழும்பிற்கு சிறு கப்பல்கள் மூலமாகப் பயணித்து அங்கிருந்து புகையிரதம் மூலமாக கண்டிக்குச் செல்லும் வழி இருந்த போதிலும், போக்குவரத்துக்கான பணம் போதாமை காரணமாகவும், கங்காணிகளின் வட்டிப் பணம் கடனாக மாறும் என்ற காரணத்தாலும் கால்நடைப் பயணத்தையே மலையக மக்கள் மேற்கொண்டனர்.

கொலரா, மலேரியா, அம்மை போன்ற கொடிய நோய்களின் தாக்கம் காரணமாக வரும் வழியிலேயே பலர் மரணித்தனர். நோய்வாய்ப்பட்டவர்களை காட்டுப் பாதையிலேயே விட்டு வந்த நிகழ்வுகளை கேர்னல் ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் பதிவு செய்துள்ளார். இதை விட தேள், பாம்பு போன்றனவற்றின் தீண்டுதலுக்குட்பட்டும் பலர் மடிந்தனர். குடிநீர் இன்றிய பயணமும் பசியும் மரண பயமும் உயிர் வாழ்வதற்கான பாரிய போராட்டமாகவே அமைந்தன. கண்டிச் சீமைக்குச் சென்றுவிட்டால் தொழில் செய்து வாழலாம் என்ற நம்பிக்கை மேலெழுந்து இருந்தமையே இம்மக்கள் போராடியதற்குக் காரணமாகும்.

ஆரம்ப காலம்

பல்வேறுபட்ட இழப்புகளுக்குப் பின்னர் மலையகப் பிரதேசத்தை அடைந்த போது ஆங்கிலத் துரைமார்களினதும் கங்காணிகளினதும் அடக்குமுறையின் புதிய வடிவங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. மனிதக் காலடியே படாத காடுகளை அழித்து பசுஞ் சோலைகளை அமைப்பதற்காக தொழிலாளர்கள் தனது உயிரையே கொடுத்தனர். உழைப்பின் சாராம்சம், அதன் குவிப்பு மலைகளின் உச்சி வரை விரிந்தது. துரைமார்கள் ஆனந்தம் கொண்டாடக் கூடியதாக அனைத்தும் அமைக்கப்பட்டது. தேயிலை எனும் பச்சைத் தங்கம், இறப்பர் எனும் பால் கொட்டும் மரம் என்பன தன்னலங்கருதாத உழைப்பினால் சாத்தியமானது. ஆங்கிலத் துரைமார்கள் மலையகத்தின் எழிலை இரசித்து எழுதிய அளவுக்கு மக்களின் உழைப்புத் திரட்சியின் விளைவை பதிவு செய்ய முடியாமல் போனதற்கான காரணம் காலனித்துவ மன நிலையும் உழைப்புச் சுரண்டலின் தேவையுமாகும்.

“ஆங்கில முதலாளிகளால் குறிப்பாக தோட்டத் துரைமார்களால் அடையாளங்காணப்பட்ட பகுதிகள், இது வரை மனித குடியேற்றம் நிகழாத இடங்களாக இருந்தன. அவற்றை  தேயிலைத் தோட்டங்களாக உருவாக்கிய கூலிகள் தனித்தன்மை கொண்டவர்களாவர்” எனக் குறிப்பிடுகின்றார் ஹென்றி வில்லியம். 

இவ்வாறு உருவாக்கப்பட்ட தோட்டங்கள் மூடிய நிலையிலேயே காணப்பட்டன. சகலதும் தோட்டத்துக்குள்ளே எனும் நிலை உருவாக்கப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடியாதவாறு தோட்ட முகாமைத்துவம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. மனிதாபிமானமற்ற, அடக்கு முறை சார்ந்ததாகவே நிருவாக நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. தொழிலாளர்கள் அதிகாலை முதல் மாலை இருள் பரவும்  வரை தொடர்ந்து உழைக்கக் கூடிய வகையில் தோட்ட நிருவாகம் ஒழுங்கமைக்கப்பட்டது. 

தொழிலாளர்கள் வாழும் லயன் அறைகள், தொழில்முறை யாவும் அடக்குமுறையுடன் கூடிய நடவடிக்கைகளுக்குத் துணை புரிவனவாகவே அமைக்கப்பட்டன. வாழ்வதற்குப் பொருத்தமற்ற வீடுகள், சாதிய அடிப்படையிலான குடியிருப்புகள், உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட வெள்ளைக்காரன் பங்களா, ‘ஸ்டோர்’ நிருவாகிகளுக்கு அமைக்கப்பட்ட வீடுகள் போன்றனவற்றைச் அதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். 

குறைவான கூலியை வழங்கியதன் மூலம் தொழிலாளர்களைக் கடன் நிலையிலேயே வைத்திருந்தமை தோட்டங்களை விட்டு வெளியேற முடியாத சூழலை ஏற்படுத்தியது. கங்காணியினதும் துரைமார்களினதும் அடக்குமுறைக்குச் சாதகமாகவே, வழங்கப்பட்ட கூலியும் அமைந்திருந்தது. கங்காணிக்கு உரித்தான கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கியமை, பிழையான கணக்கு விபரங்கள் போன்றன கடன் சுமையை மேலும் இறுக்கியது. 

துண்டு முறையும் பற்றுச் சீட்டும் தொழிலாளர்களை தோட்டத்துக்குள்ளேயே அடக்கி வைத்தன. வெளியேற முயன்றவர்கள் கங்காணிகளால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். அடிமை முறையைப் பேணக்கூடியதாகவே சகல நடவடிக்கைளும் ஒழுங்கமைக்கப்பட்டன. தொழிலாளர்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டன. இதன் காரணமாக நாளாந்த வாழ்வில் பல துன்பங்களுக்கும் வன்முறைகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டது. நிருவாகத்திற்கு எதிரானவர்கள் ‘பற்றுச் சீட்டின்றி’ வெளியேற்றப்பட்டனர்; தாக்கப்பட்டனர். தொழிலாளர்கள் தமது கோபத்தை, வெறுப்பினைக் காட்டக் கூடியதாக மலைகளெங்கும் சாமிகளை உருவாக்கிக் கொண்டனர். அத்தகைய சாமிகளுக்கு சிவப்புப் பட்டு அல்லது துணியைக் கட்டியிருந்தனர். ‘நாசமா போக…அவன் வீட்டுல எழவு விழுக….கடவுளே நீ இருந்தா பார்த்துக்க’ என மண்ணை வாரி இறைத்துச் சாபமிட எவ்வித தடையும் இருக்கவில்லை. ஆனால் இந்த அடிமை முறை வாழ்வு நீண்ட காலத்திற்கு நிலைக்கவில்லை. தொழிற் சங்கம் என்ற சக்தி அவர்களை ஒன்று திரட்டியது. போராட்டம் எனும் ஆயுதத்தைக் கையிலெடுக்க வழி ஏற்பட்டது. வாழ்வதற்கான போராட்டம் என்பது தொழில் உரிமைக்கான போராட்டங்களாக வளர்ச்சி பெற்றமையானது தியாகங்களின் அறுவடையே எனத் துணியலாம்.  

தொழிற்சங்கப் போராட்டங்கள்

ஏறத்தாழ நூறு ஆண்டுகள் நீடித்த அடக்குமுறையுடன் கூடிய அடிமை முறை வாழ்வை மாற்றியமைப்பதில் தொழிற்சங்க நடவடிக்கைகள் பெரிதும் பங்களித்தன. தோட்டப்பகுதிகளில் தொழிற்சங்கங்களை அமைப்பதற்கு தொழிலாளர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாரிய சவாலுக்குரியதாகவே காணப்பட்டன. தொழிலாளர்கள் ஒன்று கூடுவதை துரைமார்களும் கங்காணிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. தொழிலாளர்களின் ஒருங்கிணைவு, பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் தங்களது அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு பாதகமாக அமையும் என்பதையும் தோட்ட நிருவாகம் நன்கு அறிந்திருந்தது. ரஷ்யப் புரட்சியின் விளைவுகளும் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் இயக்கச் செயற்பாடுகளும் தோட்டத்து ராஜாக்களுக்கு பல எச்சரிக்கைகளை ஏற்கனவே வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைவதற்கான முக்கிய சக்தியாக தொழிற்சங்கம் காணப்பட்டது. தொழிற்சங்கங்கள் தொடர்பான விளக்கத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதில் தேசபக்தன் கோ. நடேசையர் முக்கிய பங்கினை வகித்தார். 1905 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட தோட்டப் பாடசாலைகளும் இதற்கு வாய்ப்பாக அமைந்தது.  

nadesaiyar

‘தேசபக்தன்’ கோ. நடேசையர், இந்தியாவின் குஜராத் எனுமிடத்தில் பிறந்த மணிலால் மங்கன்லால் (28.07.1881 – 08.01.1956) எனும் தேசியவாதி, பொதுவுடைமைச் செயற்பாட்டாளனின் கருத்து மற்றும் நடவடிக்கைகளினால் கவரப்பட்டவராக இருந்தார். மணிலால் அவர்களால் வெளியிடப்பட்ட வாராந்தரப் பத்திரிகையான இந்துஸ்தானி தனிநபர் சுதந்திரம், ஒன்றிணையும் உரிமை மற்றும் இனங்களுக்குமான சமத்துவம் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டிருந்தது. மணிலால் 1907 முதல் 1910 வரையிலான காலப்குதியில் மொறிசியஸ் நாட்டில் சட்டத்துறை சார்ந்த கடமைகளை முன்னெடுத்தார். அந்த நாட்டில் வாழ்ந்த இந்தியத் தொழிலாளர்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவதற்கான அடிப்படைகளை வழங்கி இருந்தார். அவரது போராட்ட அரசியல் செயற்பாடுகள் காரணமாக பிஜி நாடு அவரை அங்கிருந்து வெளியேற்றியது. அவர் இலங்கையில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் துன்பங்களை நேரடியாகக் கண்டறிந்தார். நடேசையர் அவர்களும் அவரது மனைவியான மீனாட்சியம்மாள் அவர்களும் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கும் தொழிற்சங்கத்தை அமைத்து போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் மணிலால் பெரிதும் உதவினார். எனினும் மணிலால் சிலோனில் தங்கியிருக்க பிரித்தானிய ஆட்சியாளர்கள் அனுமதி அளிக்கவில்லை. 

meenatchiyammal

ஆரம்ப காலங்களில் தொழிற்சங்கங்களை அமைப்பது என்பது இலகுவானதாக அமையவில்லை. வெள்ளைக்காரத் துரைமார் மற்றும் கங்காணிகளின் கண்டிப்பு, நோட்டம் விடுதல், கருங்காலிகளைப் பயன்படுத்துதல், காவல்காரனைப் பயன்படுத்துதல், பேச்சுக் கொடுத்துப் பார்த்தல் என பல உத்திகளைப் பயன்படுத்தி தொழிற் சங்கம் பற்றி கதைப்போரை கண்டறிதல், தோட்டத்தை விட்டு பற்றுச்சீட்டில்லாமல் வெளியேற்றல், கட்டி வைத்து அடித்தல், பொலிஸ்காரர்களின் ஒத்துழைப்புடன் அடக்குமுறையை முன்னெடுத்தல், காயப்படுத்துதல், காவலில் வைத்தல், சிறைக்கு அனுப்புதல், சுட்டுக் கொல்லுதல் என நீண்டது அடக்குமுறை. 

ஆனால் இவற்றையெல்லாம் கடந்து துன்பங்களை ஏற்று தொழிற் சங்கத்தை அமைத்த தொழிலாளர்களின் போராட்ட வல்லமை இறுதியில் வெற்றியடைந்தது. இரகசியச் சந்திப்பு, இரவில் கூடுதல், வேலைத்தலத்தில் கதைத்தல் போன்ற நுட்பங்களை அவர்கள் கண்டறிந்தனர். தோட்டத் துரைமார்கள், கங்காணிகள், காட்டிக் கொடுப்போர் ஆகியவர்களோடு பொலிசும் இணைந்து எதிர் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும் தொழிற்சங்கம் அமைப்பதில் தொழிலாளர் வெற்றி பெற்றமை போராட்ட வரலாற்றில் உச்சம் தொட்ட நிகழ்வு எனக் குறிப்பிடலாம்.

தொழிற் சங்கங்களை அமைப்பதற்கான போராட்டங்கள் 

தொழிலாளர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழிமுறையாக தொழிற்சங்க இயக்கம் அமைந்தது. தனியாகவும் கூட்டாகவும் செயற்பட்டதன் விளைவாக தொழிற்சங்க நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டன. இலங்கை இந்தியன் காங்கிரஸ், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், செங்கொடிச் சங்கம் போன்ற தொழிற் சங்கங்கள் இவ்வகையில் தோற்றுவிக்கப்பட்டவையே ஆகும்.

கம்பனித் தோட்டங்களில் தொழிற்சங்கங்களை ஆரம்பிப்பதை விட தனியார் தோட்டங்களில் தாபிப்பது பெரும் சவாலுக்குரியதாக இருந்தது. தோட்டச் சொந்தக்காரனும் பொலிசாரும் இணைந்து தொழிற் சங்கங்களுக்கு எதிராக செயற்பட்டதன் விளைவு பல தொழிலாளர்கள் காயப்படுவதற்கும், உயிரிழப்பதற்கும் காரணமாக அமைந்தன. தோட்டங்களுக்கு அருகில் காணப்பட்ட கிராமங்களில் வாழ்ந்த இனவாதக் காடையர்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களை தாக்கும் நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன. 

தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களில் கொட்டியாகலை தோட்டத்தில் 1939 ஆம் ஆண்டில் இடம் பெற்ற போராட்டம் முக்கியமானதாகும். மது விற்பனை மற்றும் சூது விளையாட்டு ஆகியவற்றுக்கெதிராக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வெள்ளைக்காரத் துரையால் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு எதிராக பல அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இறுதியில் தொழிலாளர் வெற்றியடைந்தனர். பிற்காலத்தில் தொழிற்சங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பினை இப்போராட்டம் பெற்றுக் கொடுத்தது. 

அக்காலத்து தொழிலாளர் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றிய ஜிம்சன் பின், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை இந்தியத் தொழிலாளர் முன்னெடுத்த முக்கியப் போராட்டமாகவும் பிற்காலத்தில் பல வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு வித்திட்டதாகவும் குறிப்பிடுகின்றார். 

அதே காலத்தில் பொலிஸ் மா அதிபராகச் செயற்பட்ட பி.என். பேங்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளதை நடேசன் எஸ். (1993) தனது நூலில் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார். 

“பல்வேறு காரணிகளின் செல்வாக்குக் காரணமாக தொழிலாளர்கள் அரசியல் சிந்தனையுடன் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. அவர்கள் தற்போதைய வாழ்க்கை மற்றும் தொழில் ஆகியன தொடர்பில் திருப்தியாக இல்லை. அதன் காரணமாக வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகின்றனர். தோட்டத் துரைமார்கள் இத்தகைய போராட்டக்காரர்களை வெளியேற்ற நீதிமன்ற ஆணைகளைப் பெற்றுள்ளனர். ஆகவே பொலிஸார் எத்தகைய நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர்.” பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டங்களின் போது தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே தீர்மானங்கள் மேற்கொள்ளபட்டுள்ளன என்பதை இதன் மூலமாக அறிய முடிகின்றது.

கண்டி, நுவரெலியாப் பகுதிகளில் தொழிற்சங்கம் அமைக்கும் போராட்டம் வெற்றி அடைந்தாலும் இரத்தினபுரிப் பகுதியில் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வது கடினமாகவே இருந்தது. 1945 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து வருகை தந்த குட்டிப்பிள்ளை எனும் பெயருடைய செயற்பாட்டாளனின் முயற்சியால் மயிலிட்டியா தோட்டதில் இலங்கை இந்தியன் காங்கிரஸ் அமைக்கப்பட்டது. பல்வேறு அடக்குமுறைகளை வெற்றி கொண்ட எண்ணூறு தொழிலாளர்கள் தொழிற்சங்க அங்கத்தவர் ஆனார்கள். தொழிலாளர் போர்க்குணம் வெற்றியடைந்தது. 

1953 ஆம் ஆண்டு சாமிமலைப் பகுதியைச் சேர்ந்த மீரியாகோட்டை தோட்டத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கான போராட்டத்தில் தோட்ட முதலாளிக்கு ஆதரவாகச் செயற்பட்ட பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தமையால் பதினேழு தொழிலாளர்கள் காயமடைந்ததோடு பி. வெள்ளையன் என்ற தொழிலாளி மரணமானார். 

அவ்வாறே 1957 ஆம் ஆண்டு தொழிற்சங்க காரியாலயம் ஒன்றை உடபுசல்லாவ நகரில் அமைப்பதற்கான போராட்டத்தில் தொழிலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக கொம்பாடி மற்றும் பொன்னையா ஆகிய இரு தொழிலாளர்கள் தியாகி ஆனார்கள். இந்த தொழிற்சங்க காரியாலயத்தை அமைப்பதற்கு எதிராக நகர வர்த்தகர்களும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் தொடர் போராட்டத்தின் மூலமாக தொழிற்சங்க காரியாலயம் அமைக்கும் உரிமையும் வென்றெடுக்கப்பட்டது.

1961 ஆம் ஆண்டு நாவலப்பிட்டிக்கு அருகிலுள்ள மொன்டிசிரஸ்டோ தோட்டத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கான போராட்டம் உக்கிரமாக முன்னெடுக்கப்பட்ட போது ஆராயி, நடேசன், செல்லையா, மாரியப்பன் ஆகிய தொழிலாளர்கள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். தொழிற்சங்கத் தலைவர்கள் கிராமத்தைச் சேர்ந்த காடையர்களால் தாக்கப்பட்டனர். 

தொழிற்சங்கத்தை கட்டி எழுப்புவதற்கு பெரும் தடையாக இருந்த தோட்டத் துரைமார்கள் மற்றும் முதலாளிகள் தொழிற்சங்க செயற்பாடுகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். உதாரணமாக, பத்தனை டெவன் தோட்டத்தில், தொழிலாளர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்த போது தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். மு. வைத்திலிங்கம் என்ற தொழிலாளி கொலை செய்யப்பட்டார். 

தோட்டத் தொழிலாளர்கள் வேலை நேரத்தில் சுகயீனம் அடைகின்றபோது, விபத்துகளை சந்திக்கும் போது, அல்லது கரப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது, வாகனம் கோரிப் பெறுவது என்பது கால தாமதத்தை ஏற்படுத்தும் செயலாகும். அதற்கான அனுமதி பெறுவது, போக்குவரத்துப் பாதைகள் முறையாக இல்லாமை, இனவாதம் போன்ற காரணங்களால் உரிய வேளைக்கு வைத்தியசாலைக்குச் செல்லாமையினால் பலர் உயிரிழந்துள்ளனர். தோட்ட வைத்தியசாலைகளிலும் முறையான மருத்துவ உதவியைப் பெற முடியாது. வாகன வசதியைப் பெறுவதற்குக் கூட பாரிய போராட்டங்களை தொழிலாளர்கள் முன்னெடுத்துள்ளனர். பதுளை, குயினஸ்டவுன் நகருக்கு அண்மையிலுள்ள சினாக்கொல்லை தோட்டத்தில் 1970 ஆம் ஆண்டு இதற்கான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சுமார் தொண்ணூறு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப்போராட்டத்தை அடக்குவதற்கு வழமை போல பொலிஸ் உதவி கோரப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதில் லெட்சுமண் அழகர் மற்றும் பெருமாள் இராமையா ஆகியோர் உயிரிழந்தனர். பாரிய போராட்டம் வெடித்தது. தொழிலாளர் போராடி வென்றனர். 

ஆரம்ப காலத்தில் தொழிங்சங்கங்கள் தொழிலாளர் சார்பாக செயற்பட்ட போதிலும் 1950 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அந்தப் போக்கிலிருந்து நழுவிச் சென்றமையைக் காண முடியும். அவை தொழிலாளர் ஒற்றுமையைச் சிதைத்ததோடு சில சந்தர்ப்பங்களில் தோட்ட நிருவாகத்திற்கு ஆதரவாகச் செயற்பட்ட போக்கும் பதிவாகி உள்ளது. 1956 ஆம் ஆண்டில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து விலகிய அப்துல் அசீஸ், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் எனும் தொழிற்சங்கத்தை அமைத்தார். இவ்விரு தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான முரண்பாடு காரணமாக பல மோதல்கள் இடம் பெற்றுள்ளன. ஐக்கியத்துக்காகப் போராட வேண்டிய தலைமைத்துவம், தொழிலாளர்களிடையே முரண்பாடுகளை விதைத்த வரலாறு இன்று வரை தொடர்வதைக் காணலாம். தொழிற்சங்கப் பலம், தொழிலாளர் நலன், உரிமைகளுக்காகப் போராடுதல், ஐக்கியத்தை வலுப்படுத்தல் போன்ற மகோன்னதமான தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கைவிட்ட தொழிற்சங்கங்களை இன்றும் காண முடியும். மலையகச் சமூகம் தனது அடையாளத்தை வென்றெடுக்க முடியாமல் இருப்பதற்கும் தொழிங்சங்க உரிமைகளை தொடர்ந்து பாதுகாத்து மேம்படுத்திக்கொள்ள முடியாமல் வலுவிழந்து நிற்பதற்கும் இத்தகைய பிற்போக்குத் தொழிற்சங்கங்களே காரணமாகும்.  

1956 ஆம் ஆண்டு மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த நல்லதண்ணி தோட்டத்தில் தொழிற்சங்க மோதல் காரணமாக நாற்பது தொழிலாளர்கள் கைது செய்யப்பட்னர். தோட்ட நிருவாகத்தின் கையாட்களால் இளம் தொழிலாளி பெ. கருமலை என்பவர் கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டில் நிகழ்ந்த தொழிற்சங்க மோதல் காரணமாக இருபத்து மூன்று வயது நிரம்பிய அப்புஹாமி ஏப்ரகாம் சிங்கோ எனும் பெயருடைய தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையைத் தொடர்ந்து தொழிலாளர்கள் நாற்பத்தெட்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. ஒரு தோட்டத்தில் ஒரு தொழிற்சங்கம் மட்டும் என்ற நிலையை மாற்றி தொழிலாளர்களின் தெரிவுக்கேற்ப மாற்றுத் தொழிற்சங்கத்தையும் அமைக்கலாம் என்ற உரிமை இந்தப் போராட்டத்தின் மூலமாக வெற்றி கொள்ளப்பட்டது. 

தோட்டத் துரைமார்களின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாகவும் தொழிலாளரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. நிருவாகத்திற்கு ஆதரவான ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்குவதன் மூலமாக தொழிலாளரிடையே காணப்படும் ஒற்றுமையைக் குலைக்க மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக 1959 ஆம் ஆண்டு மாத்தளை எல்கடுவ தோட்டத்து தொழிலாளி காலக்கார முத்துசாமி கொலை செய்யப்பட்டார். அதே பகுதியில் 1964 ஆம் ஆண்டு கந்தே நுவர தோட்டத்தில் நிருவாகத்திற்கு ஆதரவாகச் செயற்பட்ட பிற்போக்குத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அழகர் மற்றும் ரெங்கசாமி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். செங்கொடிச் சங்கத்துக்கு எதிராக, நிருவாகமும் மக்கள் விரோதத் தொழிற்சங்கமும் செயற்பட்ட போதிலும் பெரும்பாலான தொழிலாளர்கள் செங்கொடிச் சங்கத்தையே ஆதரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

rosariyo fernando

துரைமார் மற்றும் பொலிஸார் இணைந்து தொழிலாளருக்கு எதிராகச் செயற்பட்டது போல தோட்டத்தில் வேலை செய்யும் கணக்குப்பிள்ளை, கண்டாக்கு, தொழிற்சாலைக் காவல்காரன் போன்ற ‘சிறு துரைமார்’களின் கெடுபிடி காரணமாகவும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1967 ஆம் ஆண்டு மடுல்கலை சின்ன கிளாப்போக்கு தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் அழகன் சோணை என்ற தொழிலாளி கணக்குப்பிள்ளையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும், மயிலிட்டியா தோட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது தொழிற்சாலை காவலாளி துப்பாக்கியால் சுட்டதில் அந்தோனிசாமி எனும் தொழிலாளி தியாகி ஆனதும், 1970 ஆம் ஆண்டில் மாத்தளை கருங்காலி (நாளந்தா) தோட்டத்தில் காவல்காரன் சுட்டதில் மரணமான பார்வதி (18 வயது), கந்தையா, இராமசாமி என்ற சிறுவன் ஆகியோர் மரணமானதும் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10309 பார்வைகள்

About the Author

எஸ். ராஜேந்திரன்

‘மலையம் 200’ நிகழ்வுகளை முன்னிட்டு, விம்பம் அமைப்பினரால் எழுநாவின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் எஸ். ராஜேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட ‘மலையக மக்களின் போராட்ட வரலாறு’ எனும் இக் கட்டுரை மூன்றாம் பரிசைப் பெற்றது. இக் கட்டுரை எழுநாவில் இரண்டு பகுதிகளாக வெளியாகின்றது.