பௌத்தமும் சமணமும் தென்னகம் வருதலுக்கு முன்பே பண்டைத் தமிழகத்திலும் ஈழத்திலும் தழைத் தோங்கிய மெய்யியற் சமய மரபாக விளங்கியது ஆசீவகம் ஆகும். தேவனாம்பிரிய திசையன் என்னும் மன்னனுக்கு முன்பு இலங்கையை ஆண்ட மன்னர்களில் பலர் ஆசீவக சமய மரபினைப் பின்பற்றியவர்களே என்பதற்கான சான்றுகள் மகாவம்சத்தில் காணப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் பல பாடல்கள் ஆசீவகக் கருத்தியலை உடையனவாக உள்ளன. சிலப்பதிகாரத்தில் முதல் முறையாக ‘அண்ணலாம் பெருந்தவத்து ஆசீவகர்கள்’ என ஆசீவகர்களின் பெயர் சுட்டப்படுகின்றமையினைக் காணலாம். மணிமேகலையின் சமயக்கணக்கர் தம்திறன் உரைத்தகாதையில் பிறசமயங்களின் கருத்துக்களைக் காட்டிலும் ஆசீவக சமயங்களின் கருத்துக்களே மிகுதியான அடிகளிற் சுட்டப்பட்டுள்ளமை அறியத்தக்கதாகும். இவற்றின்வழி கி.மு 5 ஆம் நூற்றாண்டினுக்கு முற்பட்டே ஆசீவக சமயக் கருத்துக்கள் தமிழகத்தில் செல்வாக்கு பெற்றுள்ளமையினை அறியலாம்.
வைதீக எதிர்ப்பு நிலையிலுள்ள சமயங்களில் முதலாவதாக விளங்குவது ஆசீவக சமயமாகும். வடபுல நூல்களில் ஆசீவக சமயக் கருத்துக்கள் முழுமையற்ற நிலையிலேயே காணப்படுதலினைக் காணலாம். மணிமேகலை, நீலகேசி, சிவஞானசித்தியார் முதலான வேறுபட்ட சமயங்களைச் சார்ந்ததும், வேறுபட்ட காலங்களில் எழுந்ததுமான தமிழ் நூல்களிலேயே, ஆசீவக மெய்யியல் சார்ந்த கருத்துக்கள், முழுமையும் தொடர்ச்சியும் உடையனவாக அமையக் காணலாம். தெற்காசியாவில் தோன்றிய மெய்யியல் மரபுகளையும் பிறபகுதிகளிற் தோன்றிய மெய்யியல் மரபுகளையும் தன்னகத்தே தோன்றிய மெய்யியல் மரபுகளையும் ஒருங்கே கொண்ட ஒருமொழியாக விளங்குதல் தமிழ் மொழியின் சிறப்புக்களில் ஒன்று.
ஆசீவக சமயத் தோற்றுனர்களில் மற்கலி கோசவர், பூரணகாயப்பர், பகோடகச்சாயனார் (பக்குடுங்கை நண்கணியார்) முதலானோர் சிறப்பிடம் பெறுகின்றனர். இவர்களின் பிறப்பிடம் குறித்தான மாறுபட்ட கருத்துக்கள் பல உள்ளன. ஆசீவக மரபானது ஊழ், இயல்பு, தற்செயல் என்பனவான மும்மைக் கோட்பாடுகளை முதன்மையாகக் கொண்டது.
இனித் திருக்குறளில் காணப்படும் ஆசீவக சமயக் கருத்துக்களை நோக்குவோம். பௌத்தம் நடுநிலை (மத்தியஸ்தம்) என்னும் கொள்கையினைச் சிறப்பு நிலையில் கடைப் பிடித்தமை போல் ஆசீவகம் ஊழினைத் தனது முதன்மைக் கோட்பாடாகக் கைக் கொண்டதெனலாம். ஆசீவகத்தின் அளவு ஊழினுக்கு முதன்மை கொடுத்த சமயம் வேறொன்றில்லை எனலாம். திருவள்ளுவரும் தமது நூலில் ஊழினுக்கே பல இடங்களில் முதன்மை கொடுத்துள்ளார். திருக்குறள் அல்லாத மற்ற அறநூல்கள் யாவும் கருமக் கோட்பாட்டினுக்கே முதன்மை கொடுக்க திருக்குறள் மாத்திரமே கருமக் கோட்பாட்டினும் ஊழினுக்கு மிகுதியான முதன்மையினைக் கொடுப்பதாக அமைந்தது எனலாம். ஊழ் குறித்து திருக்குறள் ஊறும் கருத்துகள் ஆசீவகத்துடன் பொருந்துவதைக் காணலாம்.
திருவள்ளுவர் தம் குறளின் ஊழ் என்னும் மனித வாழ்வை வழிநடத்தும் முறைமை குறித்து விளக்குதற் பொருட்டு ஒரு அதிகாரத்தினையே படைத்துள்ளார். ஊழ் என்னும் அதிகார முன்னுரையில் பரிமேலழகர் “அஃதாவது இருவினைப்பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி, ஊழ், பால்முறை, உண்மை, தெய்வம், விதியென்பன ஒரு பொருட் கிளவி” என விளக்கங் கூறுவார். ஆனால் இது ஏற்புடையதல்ல. திருக்குறளில் இடம்பெறும் ஊழ் என்னும் சொல் முன்னமே முடிவு செய்யப்பட்டது; மனித வாழ்வினை வழிநடத்துவது என்பதன் அடிப்படையிலேயும் ஊழின்வழி நடந்தே உயிர்களின் வீடுபேற்றினை நோக்கி நகர இயலும் என்னும் முறைமைத் தன்மையை விளக்குவதாகவுமே அது அமையக் காணலாம். ஒருவனுக்கு எது நடக்க வேண்டும் என முன் முடிவு செய்யப்பட்டதே அதுவே நிகழும். அந் நிகழ்வு எக் காலகட்டத்தில் நிகழ வேண்டுமோ அக் கால கட்டத்திலேயே நிகழும். இதனையே ஆசீவக மெய்யியல் மரபு, சதுவா நியதங்கள் என வழங்கும். இதனையே,
பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை (குறள் 372)
என்னும் குறள், துன்பம் நிகழ்தலும் இன்பம் சேர்தலும் முன்னமே ஊழின் வழி முடிவு செய்யப்பட்டதாகும்; இழத்தலும் சேர்த்தலும் உயர்த்தலும் தாழ்த்தலும் ஊழின் அடிப்படையிலேயே நிகழ்வன எனக் கூறுவதன் வழி ஆசீவகக் கருத்தியலை வெளிப்படுத்துவதைக் காணலாம்.
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி (குறள் 371)
பொருள் தேடலுக்கான முயற்சியினை உருவாக்குதலும் ஊழின் வழி நிகழ்வதுதான்; பொருள் இழப்பிற்கு ஏதுவாகிய மடியினை உருவாக்குவதும் ஊழின் வழிப்பட்டதுவேதான்; எவை எவை எவ்வெவ் காலத்து நிகழுமோ அவ்வவ் காலத்து நிகழும்; ஆக்கமும் கேடும் ஊழின் வழிப்பட்டே நிகழ்வன; இவற்றினுக்குக் காரண காரியத் தேடல் என்பது தேவையற்றதாகின்றது என்னும் ஆசீவக மெய்யியலை மேற்படி குறளில் காணலாம். ஊழினை ஆசீவக மரபு குறித்துக் கூறும் நூல்களினையும் தாண்டி ஆகுழ், போகுழ், இழவுழ், ஆகழ்ஊழ் என்பனவாக திருக்குறளே வகைமை செய்கின்றது. ஊழினை விட வலியது ஒன்றுமில்லை எவ்வகையில் முயன்றாலும் ஊழினைக் கடந்து ஒன்றினையும் செய்துவிட இயலாது. ஊழே பெரு வலிமையினையுடையது.
ஊழின் பெருவழி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும் (குறள் 380)
முயற்சி, துணைவலி, ஆண், செல்வம், படை, மாச்சி என்பனவான எவை சூழினும் அவை ஊழின் முன் வெற்றி பெறுதலியலாது. ஊழின்முன் அவை தோற்றொதுக்கும். இதனையே சிலப்பதிகாரக் கதைப்போக்கு நமக்குத் தெளிவுறுத்தும். கோவலனின் ஊழினை முன்கூட்டியே கனவின் வழி அறிந்த நிலையிலும் அதனைத் தடுத்தலுக்கான முன் முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் சமணக் காப்பியமான சீவகசிந்தாமணியில், சீவகன் ஊழினை எதிர்த்து வெற்றி பெறுபவனாகக் காட்டப்பட்டுள்ளான். இதன்வழி திருக்குறள் சமண மரபிலிருந்து மாறுபட்டு ஆசீவக மரபின் வழி நிற்றலினை அறியலாம். ஊழின் வலியினை கழுவாய்கள் செய்தோ நல்வினைகள் செய்தோ மாற்றுதல் என்பது இயலாத செயலாகும். ஊழினால் விளையும் நன்மைகளை எவ்வாறு துய்க்கின்றோமோ அவ்வாறே அதன் விளைவால் வரும் துன்பங்களையும் துய்க்க வேண்டியிருக்கும். எவ்வகைக் கழுவாயும் தேடிக் கொள்வது என்பது இயலாது.
நன்று ஆம்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆக்கால்
அல்லற் படுவது எவன் (குறள் 399)
இன்பத்தினையும் துன்பத்தினையும் ஒன்றாகக் கருதுதல் என்பது ஆசீவக மரபு. துன்பத்துள் இன்பம் தேடுதல் என்பது அம்மரபின் கொள்கையாகும். அதனை தெளிவுறுத்திய வகைமையிலேயே மேற்கண்ட குறள் அமைந்துள்ளமையினைக் காணலாம். நன்மையும் தீமையும் முன்பே முடிவு செய்யப்பட்டன. மனிதர்களின் செயல்களால் அவை நிகழ்வதில்லை. அவை மனிதர்களுக்கு அப்பாற்பட்டவை என்பதான ஆசீவகத்தின் கருத்தியலை விளக்குவதாகவே மேற்கண்ட திருக்குறள் அமைந்துள்ளது. மனிதர்களின் அறிவினால் செயல்கள் நிகழ்வதில்லை. ஒருவன் அடையக்கூடிய நற்பேறும் ஒருவன் அடையக்கூடிய இழிவும் அவனவன் செயல்களால் நிகழ்வனவல்ல. அவை முன்னமே முடிவானவை. ஒரு நூல் கண்டினை உயர்ந்த இடத்திலிருந்து உருட்டிவிட்டால் அது எவ்வாறு முடியும் வரை நீளுமோ, அது போலவே, முன்னம் முடிவு செய்யப்பட்ட ஊழின் வழிப்பட்டே மனித வாழ்வானது செல்லும். அதில் எவ் இட மாறுதலுக்கும் இடமில்லை. இதனையே வள்ளுவரும்,
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு (குறள் 374)
என்ற குறளின் வழிக் கூறுகின்றார். இரு வேறு உலகம் என்றமையால் வறுமை, செழுமை ஆகிய பண்புகள் வேறுபட்டதே உலகம் என்பது ஆசீவகக் கொள்கையாகும். இதனை ’ஒரில் நெய்தல் கரங்கு’ என்ற புறப்பாடலின் கருத்துடனும் ஒப்பிட்டு நோக்கலாம். இவையாவும் ஆசீவகக் கருத்தியலாகவே அமைபவை.
அணுக்கள் புதிதாகத் தோன்றுவதுமில்லை அழிவதுமில்லை; மாறுதலும் இல்லை. அணுக்கள் ஒன்று சேர்ந்து பொருட்களை உருவாக்குகின்றன. பின் அவ்வணுக்கள் தனித்தும், பிரிகின்ற நிலையில் மீண்டும் தங்கள் பழைய நிலையினையே அடைகின்றன. அணுக்கள் சேரும் பொழுது எந்த அணுவின் விழுக்காடு மேலோங்கியுள்ளதோ, அந்த அணுவின் தன்மையையே பெறும் என்பது ஆசீவக மெய்யியல். அதனடிப்படையில் ஒருவன் எத்துணை அறிவினை வளர்க்கும் முயற்சியை மேற்கொண்டாலும், அவனது உண்மையறிவே வெளிப்படும் என்னும் கருத்தியலில் அமைந்த குறளாக,
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும் (குறள் 373)
என்ற குறள் அமைந்துள்ளமையினைக் காணலாம். நகம் செய்யும் நல்வினையால் நன்மைகள் நடக்கும்; தீவினையால் தீயது நடக்கும் என்ற கர்மக் கோட்பாட்டில் ஆசீவகர்களுக்கு நம்பிக்கை இருந்ததில்லை. ‘இல்லன தோன்றா உள்ளன மறையா’ என்னும் கருத்தியலிலேயே மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். ஒருவன் அனைத்தும் கற்ற அறிஞனாகவிருப்பதும், ஏதுமறியாதோனாக இருப்பதும் முன்னமே முடிவு செய்யப்பட்டது. இவற்றில் அத் தனிமனிதனின் பங்களிப்பு என்பது ஏதுமில்லை. ஆதலால்தான் பழந்தமிழ் புறப்பாடலும் ‘பெரியோனென வியத்தலுமிலனே சிறியோனென இகழ்தலுமிலனே’ எனப் பாடுகின்றது. இதனையேதான் வள்ளுவரும் ஒருவன் எத்தனை நுட்பமான நூல்களைக் கற்பினும் அவனது உண்மை அறிவின் அடிப்படையிலேயே அவற்றின் நுட்பமும் திறனும் வெளிப்படும் என்று கூறுகின்றார். அதனையொப்பவே, இவ்வுலகியல் இன்பங்களை ஒருவன் எவ்வகையில் எவ்வளவு காலம் துய்க்க வேண்டும் என்பதும், என்னென்னவாறான வளங்களைப் பெற்று வாழவியலுமென்பதும், வளங்களற்ற வாழ்வினையே கொண்டு செல்லவேண்டிய சூழல் அமைவதும், ஊழின் வழிப்பட்டு முன்னமே முடிவு செய்யப்பட்டனவாம். இதனை சிலப்பதிகாரத்திலும் காணலாம். மாதவியுடன் உள்ள காலம் முடிந்ததும் சிறிது காலம் கூட கூடுதலாக அவளுடன் கோவலனால் இருக்க இயலவில்லை என்பதினைச் சிலம்பு காட்டும். அம் மரபினை ஒத்ததாகவே,
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது (குறள் 377)
என்ற வள்ளுவரின் குறளும் அமைகிறது. ஒருவர் வாழ்வில், நிகழ்வுகள் முன்னமே முடிவு செய்யப்பட்டவை; அவை எப்படி நிகழவேண்டும் என்பதும் முன்னமே முடிவு செய்யப்பட்டது; அதனைக் கடந்து எதுவும் நிகழாது என்பதும் முன்னமே முடிவு செய்யப்பட்டது என்பதாக ஆசீவகக் கருத்தியலை இக் குறள் கொண்டுள்ளமையினைக் காணக் கூடியதாக உள்ளது.
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம (குறள் 376)
தமக்கே உரியவையை தெருவிலே கைவிட்டபோதும் புறத்தே போகாது; தமக்கு எழுதப்படாதவை, எத்தனைதான் முயன்றாலும் கிட்டாது என்னும் ஆசீவகக் கருத்தியலை மேற் குறித்த குறளிலே காணலாம். ஊழ் குறித்த கருத்துக்களில் வள்ளுவர் சில இடங்களில் முரண் கொள்வதாகக் கூறுவோரும் உண்டு. உற்று நோக்கில் அதனை முரணாகக் கொள்ளலென்பது இயலாது. சான்றாக,
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும் (குறள் 619)
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி (குறள் 618)
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் (குறள் 620)
ஆகிய மூன்று குறட் பாக்களையும் கூறுவர். ஆனால் ஊழின் உப்பக்கம் காணுதலும் முயற்சியை மேற் கொள்ளுதலுமான தன்மைகள் ஆசீவகர்களின் கோட்பாட்டிற்கு உட்பட்டனவே. அவையும் ஊழின் வழி அமைவனவேயாகும்.
மேற்கண்டவாறாக ஆசீவக சமயக் கருத்துக்கள், ஊழியலிலும் திருக்குறள் முழுமையிலும் விரவிக் கிடக்கின்றமையினைக் காணலாம்.
தொடரும்.