அனுக் அருட்பிரகாசத்தின் 'ஒரு குறுகிய திருமணத்தின் கதை'
Arts
17 நிமிட வாசிப்பு

அனுக் அருட்பிரகாசத்தின் ‘ஒரு குறுகிய திருமணத்தின் கதை’

May 20, 2024 | Ezhuna

ஈழத்தில் போர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உக்கிரமாக நடந்திருக்கின்றது. அது அங்கிருந்த அனைத்து மக்களையும் ஏதோ ஒருவகையில் பாதித்திருக்கின்றது. இப்போது யுத்தம் முடிந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. போர் ஒரு கொடுங்கனவாய் மக்களின் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டிருந்தாலும், அதன் நிமித்தம் ஏற்பட்ட உடல்/உள வடுக்கள் இன்னும் இல்லாமல் போகவில்லை. இனங்களிடையே நல்லிணக்கம் மட்டுமில்லை, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆற்றுப்படுத்தல்கள், உதவிகள் கூட போரால் வெற்றி கொள்ளப்பட்ட அதிகாரத் தரப்பால் நிகழ்த்தப்படவில்லை. இன்னுமின்னும் இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு இனங்களும் துவிதங்களாகப் பிரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஈழத்துப் போர்ச்சூழலின் பின்னணியில் எழுதப்பட்ட பனுவல்களை முன்வைத்து வாசிப்புச் செய்யப்படுகின்ற ஒரு தொடராக ‘இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள்’ அமைகின்றது.

1

நெடும் வருடங்கள் நடந்த ஒரு யுத்தத்தில் ஒரு நாளைப் பிரித்தெடுத்து நிதானமாய்ப் பார்த்தால் என்னவாகும்? உயிர் தப்பியதே அதிசயமாய்த் தோன்றுவது ஒருபுறமிருக்க, அந்த நாளொன்றில் இந்தளவு சம்பவங்கள் நிகழ்ந்ததா என்ற ஆச்சரியம் இன்னொருவகையில் ஒருவரைத் திகைக்க வைக்கக்கூடும். அனுக் அருட்பிரகாசம் எழுதிய ‘The Story of a Brief Marriage’ நாவல், எறிகணைத் தாக்குதலில் காயமடையும் ஆறுவயதுச் சிறுவனை, இளைஞனான தினேஷ் வைத்தியசாலைக்குள் தூக்கிக்கொண்டு வருவதோடு தொடங்குகின்றது. அதேபோல நாவல் முடிவதும் மிகக்கொடூரமான எறிகணைத் தாக்குதலோடுதான். ஆனால் ஒரு பகலிலிருந்து அடுத்த நாள் விடிவதற்குள் நாவல் முழுவதும் நடந்து முடிந்து விடுகின்றது.

நம் வாழ்வில் ஒருநாளில் நிகழ்வதை, மிக மெதுவாகச் சுழற்றிப் பார்த்தால் எப்படியிருக்குமோ, அப்படியே இந்த நாவல் கொடும் யுத்தச் சூழலின் ஒரு நாளை மிக மிக மெதுவாக நகரவிட்டு பின் தொடர்ந்தபடி இருக்கின்றது. இங்கே இராணுவம் பற்றியோ, அதை நடத்திக்கொண்டிருக்கும் அரசு பற்றியோ எதையும் நேரடியாகச் சொல்லாமல் யுத்தத்தின் பயங்கரத்தை எழுத்துக்களால் அனுக் கொண்டுவருகின்றார். புலிகளைக் கூட இயக்கம் (movement) என அடையாளப்படுத்துகின்றாரே தவிர, அவர்களைப் பற்றி எந்த விரிவான சித்திரங்களும் இப்புதினத்தில் இல்லை. 

novel

இன்னும் சொல்லப்போனால் எறிகணைகள் விழுந்து வெடிக்கின்றதான சித்தரிப்புகளில்லை. ஆனால் எறிகணைகள் ஏவப்பட்டதுடன் ஆரம்பிக்கும் உத்தரிப்புகளும், எறிகணைகள் வெடித்தபின் மாறும் கொடும் சூழல் பற்றிய விரிவான காட்சிகளும் இதில் இருக்கின்றன. அப்பு எழுதிய ‘வன்னி யுத்தம்’ நூலில், மரணத்தை விட,  மரணம் எப்போதும் நிகழும் என்கின்ற அச்சமே தனக்கு யுத்தகாலத்தில் மிகப்பெரும் மனப்பாரத்தைத் தந்தது என எழுதப்பட்டிருப்பதைப் போல, இந் நாவலிலும் யுத்த காலத்தில் வாழ நேர்ந்தவர்களின் அவதிகளும் அச்சங்களும் முன்வைக்கப்படுகின்றன.

எறிகணையால் காயப்பட்ட சிறுவனின் கையை வெட்டி அகற்றினால்தான் அவன்  உயிர் தப்புவான் எனும் சந்தர்ப்பத்தில், உடல் உறுப்புகளை இழப்பதையெண்ணிக் கவலைப்படுவதை விட, உயிரோடு எஞ்சுதலே பெருங்காரியம் என நினைக்கின்ற சூழ்நிலைக்கு யுத்தம் மனிதர்களைக் கொண்டுவந்துவிட்டதை உணர்கின்றோம். தினேஷ், பின்னர் தற்காலிக மருத்துவமனையாய் அமைக்கப்பட்ட கொட்டகையைச் சூழக் குவிக்கப்பட்டிருந்த பிணங்களைத் தோண்டிப் புதைக்கின்றார்.

அந்தப் பொழுதிலே தினேஷைப் பற்றி அறிந்த வைத்தியர் சோமசுந்தரம் தனது மகளை மணக்கமுடியுமா என்பதைக் கேட்கின்றார். வைத்தியர் சோமசுந்தரம், தனது மகனையும் மனைவியையும் யுத்தத்தின் நிமித்தம் இழந்தவர். உயிரோடு எஞ்சியிருக்கும் தன் 18 வயதிற்குட்பட்ட மகளையும், இயக்கத்தின் கட்டாய ஆட்சேர்ப்பில் இழந்துவிடுவேனோ என்ற பயத்தில் திருமணம் ஒன்றைச் செய்துவைக்க முயல்கின்றார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் வைத்தியசாலைப் பகுதியில் வந்து தேவையான உதவிகளைச் செய்யும் தினேஷும், காட்டையண்டிய பகுதியில், இயக்கத்தின் கண்களில் அகப்படாது மறைந்தபடி வாழ்கின்றார்.

2

தினேஷூம், அவரின் தாயும் சில மாதங்களாய் யுத்தத்தின் நெருக்குவாரத்தில் ஒவ்வொரு இடங்களாய் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஓரிடத்தில் ஒரு குடும்பத்தோடு தங்கி நிற்கின்றனர். அந்தக் குடும்பத்து மகனை இயக்கம் யுத்த களத்திற்குக் கொண்டு சென்றிடும் என்ற பயத்தில், அந்தக் குடும்பம் நிலத்தில் புதைத்த எண்ணெய் பரலுக்குள்  மகனை மறைத்து வைக்கின்றது. இப்படி ஒளிந்து கிடப்பதன் அவஸ்தையில், ஒருநாள் வீட்டிற்குச் சொல்லாமலே அந்த இளைஞன் இயக்கத்தில் சேர்ந்துவிடுகின்றான். பிறகு அவன் களத்தில் மரணமானபோதும், அந்தத் தாய் தன் மகன் இறக்கவில்லை என தொடர்ந்து தன் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்கின்றார். எனது மகன் பிறக்க முன்னர் எப்படி எனது கருவாக என் உடலில் தங்கியிருந்தானோ அப்படியே இப்போதும் உருவமின்றி இருக்கின்றான் எனச் சொல்கின்றார். அப்போது இந்த ‘நினைவுகளின் குழப்பத்தை’ வித்தியாசமாக நினைக்கும் தினேஷ், பின்னர் தாய் தன் கண்முன்னே துப்பாக்கிகளின் சன்னத்தில் சரிவதைப் பார்க்கும்போது, அவரையும் இப்படியே நினைவுகொள்கின்றார்.

anuk

சோமசுந்தரம் திருமணச் சம்பந்தத்தைச் சொல்லும்போது, காயப்பட்ட ஒரு ஐயரை வைத்து திருமணத்தைச் செய்யலாம் என்கின்றார். பிற்பகலில் தினேஷ், வைத்தியரின் தரப்பாள் குடிலைத்தேடிப் போகும்போது, வைத்தியரின் மகள் கங்கா நிற்கின்றார். இருவரும் வைத்தியரைத்தேடிப் போகும்போது, காயப்பட்ட ஐயர், வைத்தியரின் உதவியில்லாது மரணிப்பதைக் காண்கின்றனர். கங்கா, தினேஷ் இருவருக்கும் இதில் முழுச் சம்மதமா என்று யோசிக்க அவகாசம் கொடுக்காது, வைத்தியர் அவர்களுக்கு தன் முன்னிலையில் திருமணத்தைச் செய்துவிடுகின்றார். இறந்துபோன கங்காவின் தாயாரின் தாலியை தினேஷ் அணிவித்து விட, அவர்களைத் தனியே விட்டுவிட்டு சோமசுந்தரம் வைத்தியசாலைக்குப் போகின்றார். யுத்த நேரத்தில் அவ்வப்போது சந்தித்ததைத் தவிர, வேறெந்தத் தொடர்புமில்லாத இருவர் இப்போது கணவன் – மனைவி ஆகிவிட்டனர்.

3

யுத்தகாலத்தின் நெருக்கடிகளை மிக விரிவான சித்திரிப்புக்களினூடாக அனுக் தரும்போது, நமக்கும் அதே களத்துக்குள் நிற்பதுபோலத் தோன்றுகின்றது. மல – சலம் கழிக்கக் கஷ்டப்படுவது, வாரக் கணக்காய் குளிக்காமல் இருந்து முதல் தடவை குளிப்பது, நகங்களை எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு வெட்டுவது என எல்லாவற்றையும் தினேஷூடாகச் சித்தரிக்கும்போது, மானுட விழுமியங்கள் எல்லாமே எப்படி யுத்தக்காலத்தில் அர்த்தமிழந்து போகின்றதென்பதை நாம் அறிகின்றோம்.

திருமணம் ஆகிவிட்ட கங்காவைப் பார்த்து, ‘உனக்கு இது மகிழ்ச்சியா?’ எனக் கேட்கும்போது, ‘தங்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என அறியக்கூடியவர்களுக்கு மட்டுமே மகிழ்ச்சியும் துக்கமும், எங்களுக்கு அப்படி எந்தத் தெரிவுமே இல்லையே’ என அந்தக் கேள்வியைத் தட்டிக்கழிக்கும் போது, யுத்தம் அவர்களின் வாழ்க்கையை அவர்கள் தீர்மானிக்க முடியாத கட்டத்திற்குள் கொண்டுவந்து விட்டதையும் அறிகின்றோம்.

அனுக் இந்த நாவலை, சாதாரண மக்களுக்கு யுத்த காலத்தில் என்ன தெரிவுகள் இருந்தனவோ, அந்தத் தெரிவுகளுக்குள்ளேயே நின்று எழுதியிருப்பது எனக்கு மிகப்பிடித்த விடயங்களில் ஒன்று. அதற்கு அப்பால் போய் அரசையோ, புலிகளையோ, இடங்கிடைக்கின்றதேயென விளாசவுமில்லை. இப்படியான நிலையில்தான் மக்கள் அன்று வாழவேண்டியிருந்தது என்று போருக்கு வெளியில் இருந்தவர்களுக்கு அனுக் ஒரு கதையைச் சொல்கின்றார். போர் என்பது நீங்கள் கற்பனையே செய்ய முடியாத தளங்களில் மனித வாழ்வை எப்படிக் கீழ்நிலைக்குக் கொண்டு போகின்றதென்பதை – ஒருநாளைச் சித்தரிப்பதன் மூலம் – காட்டுகின்றார்.

novel 2

திருமணம் முடிந்தபின் கூடாரத்தில் தினேஷூம், கங்காவும் தனித்திருப்பது குறித்து எழுதப்படும் ஒரு அத்தியாயத்தில், இந்த யுத்தம் உடல்களின் மீதான இயல்பான காம வேட்கையையும் இல்லாமற் செய்துவிடுகிறது என்பதை விபரித்திருக்கும் முறை கவனிக்கத்தக்கது. பல நாட்களாய் தூக்கமே இல்லாதிருக்கும் தினேஷ் (அவருக்கு எவ்வளவு முயன்றாலும் நித்திரையே வருவதில்லை) கங்காவிற்கு ஒரு அதிசயமான பிறவியாகத் தெரிகிறார். இடையில் ஏதோ காட்டின் கரையிலிருந்து ஒலிவர, இயக்கம் ஆட்களைச் சேர்க்க வந்துவிட்டார்கள் என  இருவரும் அஞ்சுகின்றனர். தினேஷ், வெளியில் போய்ப் பார்க்கின்றேன் எனப் புறப்படும்போது, காயம்பட்ட காகத்தைப் பார்க்கின்றார். அந்தக் காகத்திலிருந்து வேறொரு கதை முகிழ்கின்றது. எத்தனை மாதக்கணக்காய் காகம், குயில் இன்னபிற பறவைகளைக் காணவில்லையென அவர் நினைக்கத் தொடங்குகின்றார். காயம்பட்ட காகம் ஒரு பாதுகாப்பான இடத்திற்குப் போகும்வரை நிதானமாய் இருந்து பார்த்துவிட்டு வரும் தினேஷிடம், கங்கா ‘பறக்க முடியாத பறவைகள் நீண்டகாலம் வாழ முடியாதல்லவா?’ எனச் சொல்லும்போது அதற்கு வேறொரு அர்த்தம் வருகின்றது.

கங்காவின் தோளில் சாய்ந்து, தன்  தாயின் இழப்பிலிருந்து அனைத்தையும் அடக்கிவைத்த தினேஷ் மனம் விட்டு அழுகின்றார். அதுவரை நீண்டகாலமாய் தொலைந்து போயிருந்த தன் நித்திரையைக் மீண்டும் கண்டுகொள்கின்றார். விடிகாலையில் துயிலெழும்போது கங்கா காணாமற் போய்விடுகின்றார். கங்கா தன்னோடு எப்போதும் காவியபடி இருக்கும் ஒரு பையையும் கூடவே கொண்டு சென்றுவிடுகின்றார். ஒவ்வொரு பொழுதும் அதற்குள் என்ன இருக்கிறதெனத் தேட விரும்பும் தினேஷின் ஊடாக வாசிப்பவர்களுக்கும் அந்த மர்மம் எழுந்தபடி இருக்கின்றது. இறுதி முடிவும், நாவல் தொடங்குவதைப் போலத் துயரமானது; மிகக் குறுகிய திருமணம் ஒருநாளில் முடிந்தும் போகின்றது. ஆக அந்த ஒருநாள் தினேஷின் வாழ்வில் என்றென்றைக்குமாய் மறக்கமுடியாத ஒரு நாளாய் ஆகிப்போகின்றது.

 4

அனுக் அருட்பிரகாசம் கொழும்பில் வசிக்கின்றவர். கொலம்பியா பல்கலையில் தத்துவவியலில் கலாநிதிப் பட்டத்தை பெற்றிருக்கிறார். யாழ்ப்பாணப் பெற்றோருக்குப் பிறந்த அனுக், தமிழ் தன் வீட்டு மொழியென்றாலும், முதலாம் வகுப்பிலிருந்து ஆங்கிலத்தில் கற்றவர். கொழும்பிலிருக்கும் உயர்மட்ட அறிவுஜீவிக் குழாம் மீது ஏற்பட்ட எரிச்சலே, நிறையப் புத்தகங்களை வாசித்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதற்குக் காரணம் எனக் கூறுகின்றார். ஆங்கிலம் ஒரு காலனித்துவமொழி என்கின்ற புரிதல் இருப்பதாய் கூறும் அவர், தமிழிலும் எழுத விருப்பம் என்கின்றார். போர் பற்றி நேரடிச் சாட்சிகளின் கதைகளை கேட்டு பதிவு செய்யப்போன தான், அதனைப் பின்னர் இவ்வாறான நாவலாக மாற்றியதாய் ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். போர் பற்றி தான் வாசித்தவையும், தொலைக்காட்சிகளில் பார்த்த திரைப்படிமங்களும் தன்னைப் பாதித்து இதை எழுத வைத்ததாகவும் கூறுகின்றார். 

தமிழில் வாசிக்காதவர்கள்/ தமிழை வாசிக்கத் தெரியாதவர்களால் ஈழ யுத்தம் குறித்து எழுதப்படும் புனைவுகள் மற்றும் புனைவுகள் அல்லாதவற்றில் காணப்படும் ஈழம் பற்றிய சித்தரிப்புகள் பலவீனமாகவே அமைந்திருக்கும். அந்தப் பலவீனத்தை அனுக் தாண்டியிருப்பதற்கு அவருக்குத் தமிழ் ஏதோ ஒருவகையில் பரிச்சயமாக இருப்பது முக்கிய காரணமாயிருக்கும் என நினைக்கின்றேன். அத்துடன் அடிக்கடி பல இடங்களில் ஏலவே நான் குறிப்பிட்டதைப் போல, மிகச்சிறிய நாவல்களை நுட்பமான சித்தரிப்புக்களுடன் எழுதவேண்டும் என்பதற்கு இணங்க, இந்த நாவல் 200 பக்கங்களில் அடக்கப்பட்டு எழுதப்பட்டு இருப்பது பிடித்திருந்தது. நாவலில் கூறப்பட்ட சம்பவங்களும், அனுபவங்களும் தமிழில் நாம் ஏற்கனவே வாசித்திருக்கக்கூடியவைதான். ஆனால் இந்த நாவலின் சிறப்பம்சம் என்னவென்றால் அதன் சித்தரிப்புகள், ஆங்கிலச் சூழலிற்கு அவ்வளவு பரிச்சயமில்லாதது. ‘அரசு X புலிகள்’ என எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் மேற்குலகிற்கு, ஈழ யுத்ததின் கோரத்தை அவர்களின் மொழியிலே முன்வைத்து, ஒருவகையில் இந்த யுத்தத்தின் பங்காளிகளான நீங்கள் இந்தச் சாதாரண மக்களுக்கு வழங்கக்கூடிய நியாயம் என்னவாக இருக்குமென்ற கேள்வியை எழுப்பி, மேற்குலகின் மனச்சாட்சிகளை கொஞ்சம் அசைத்துப் பார்ப்பதாக இப்புதினம் இருப்பதையும் நாம் கண்டுகொள்ள முடியும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8645 பார்வைகள்

About the Author

இளங்கோ

யாழ்ப்பாணம் அம்பனையில் பிறந்தவர். ஈழத்திலிருந்து போரின் நிமித்தம் தனது பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து தற்போது ரொறொண்டோவில் வசித்து வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், நாவல் தவிர, 'டிசே தமிழன்' என்னும் பெயரில் கட்டுரைகளும், விமர்சனங்களும், பத்திகளும் பல்வேறு இதழ்களிலும், இணையத்தளங்களிலும் எழுதி வருகின்றார். நாடற்றவனின் குறிப்புகள் (கவிதைகள் - 2007), சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (சிறுகதைகள் -2012), பேயாய் உழலும் சிறுமனமே (கட்டுரைகள் - 2016), மெக்ஸிக்கோ (நாவல் - 2019), உதிரும் நினைவின் வர்ணங்கள் (திரைப்படக்கட்டுரைகள் - 2020), ப்யூகோவ்ஸ்கி கவிதைகள் (மொழிபெயர்ப்பு -2021), தாய்லாந்து (குறுநாவல் - 2023) ஆகியவை இதுவரையில் இவர் எழுதிய பனுவல்கள் ஆகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)