மண்முனையில் பற்சின்னம் கொணர்ந்தவளும் மல்வத்தையில் புத்தர் சிலை அமைத்தவனும்
Arts
15 நிமிட வாசிப்பு

மண்முனையில் பற்சின்னம் கொணர்ந்தவளும் மல்வத்தையில் புத்தர் சிலை அமைத்தவனும்

June 2, 2024 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

மகாசேனனுக்குப் பின்னர் (276 – 301) அவன் மகன் மேகவண்ணன் அனுரை அரியணையில் அமர்ந்தான் (301 – 328). அவன் காலத்தில் கலிங்க நாட்டுப் பிராமணப் பெண்ணொருத்தி புத்தரின் திருப்பற்சின்னத்தை அனுரைக்குக் கொணர்ந்ததாகவும் அது மேகவண்ணன் தேவானாம்பிரிய திசையனால் அமைக்கப்பட்ட “தருமச்சக்கரம்” எனும் கட்டடத்தில் வைக்கப்பட்டதாகவும், அன்று முதல் அது “தலதா மாளிகை” என்று அழைக்கப்பட்டதாகவும்  மகாவம்சம் சொல்கின்றது (மவ. 37:90-95).

ஆனால் இராசாவழி நூல் சொல்வதன்படி, அந்தப் பெண்ணின் பெயர் ரன்மாலி அல்லது ஃகேமமாலை. அவள் கலிங்க அரசன் குகசிவனின் மகள். குகசிவனிடமிருந்த பற்சின்னத்தைக் கவர்வதற்காக பகைநாட்டு மன்னன் போர்தொடுக்கும்போது அவனிடமிருந்து புத்தபிரானின் வலது பற்சின்னத்தைப் பெற்று சன்னியாசிகளின் வடிவில் அல்லது பிராமணர்கள் வடிவில் ரன்மாலியும் அவள் கணவன் தந்தனும் தூத்துக்குடியூடாக தப்பிவருகிறார்கள். அவர்கள் அனுரைக்குச் சென்று கீர்த்தி சீமேகவண்ண மன்னனிடம் பற்சின்னத்தை ஒப்படைத்ததற்கு நன்றிக்கடனாக அவன் பெலிகல் (வில்வக்கல்) கோரளையிலுள்ள கீரைவெளி (கிராவெல்ல) என்ற இடத்தை அந்தத் தம்பதியர்க்கு வழங்குகின்றான். அது இன்றைய கேகாலை மாவட்டத்திலுள்ள இடம் (Herath, 1974:81-83). 

புத்தமல்லாத சமயத்திலிருந்து புத்தனாக மதம் மாறிய குகசிவன் தந்ததாது என்ற பெயரில் “சவத்தி”யை (செத்தார் எலும்பு) வழிபட்டதால் கோபமுற்று “சிவனையும் பிரம்மனையும் வழிபடுபவனும் குகசிவன் மீது அதிகாரம் செலுத்தியவனுமான” பாண்டு (பாண்டிய) மன்னன், அவன் மீது போர்தொடுத்தான் என்கின்றது தாதுவம்சம். தலதா சிறீத நூல், கேமமாலையும் தந்த இளவரசனும் கரையேறிய இடம் மாதோட்டம் என்கின்றது. ஆனால் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் சொல்லப்படுவது சற்று மாறுபட்ட கதை.

புத்தரின் புனித தசனத்தை நெடுங்கூந்தலில் மறைத்துக் கொணர்ந்தவள் கலிங்க ஒறிசா தேச அரசன் குகசேனனுடைய புத்திரி உலகநாச்சி என்பவள். அவள் தந்தையிடம் விடைபெற்று புத்த தசனத்துடன் காசியிலிருந்து குகவம்சத்தார் கொணர்ந்த சிவலிங்கத்தையும் தன் உடன்பிறந்தான் உலகநாதனுடன் எடுத்து வந்து மணிபுரத்தில் (முத்து + ஊர் = மூதூர்) இறங்கி விசயதுவீபத்துக்கு (கண்டி) சென்று அதை ஆண்ட மேகவர்ணனிடம் புத்ததசனத்தைக் கொடுத்தாள். 

அதற்கு நன்றியாக, குடிமக்களில்லாத இடமொன்றைக் கேட்க, மேகவர்ணன் மட்டக்களப்பை ஆளும் தன் தோழன் குணசிங்கனிடம் அனுப்ப, அவனால் அவள் அம்பிலாந்துறைக்கு அப்பால் மண்ணேறியமுனையில் குடியமர்த்தப்படுகிறாள். அவளால் மண்ணேறிமுனையில் ஒரு சிவன் கோவிலும் பின்னர் கொக்கட்டிச்சோலை சிவாலயமும் தோற்றுவிக்கப்படுகிறது (கமலநாதன் & கமலநாதன், 2005:30-31) 

மேகவண்ணன் காலத்தில் மட்டக்களப்பில் உலகநாச்சியால் குடியேற்றம் நிகழ்ந்த கதையை, இராசாவழியின் கேமமாலையின் கேகாலைக் குடியேற்றத்தோடு ஒப்பிடலாம். இச்செய்திகளுக்கு வேறு வலிமையான சான்றுகள் இல்லை. கலிங்கப்பிராமணத்தி பற்சின்னம் கொண்டு வந்த மகாவம்சக் கதை, பிற்சேர்க்கைகளால் மேலும் வளர்ச்சியடைந்த காலத்தில்  உலகநாச்சி கதை தமிழரிடமும் ஃகேமமாலை கதை சிங்களவரிடமும் முறையே இருவிதமாகத் திரிந்து இவ்வாறு வெவ்வேறு தொன்மங்களாகியிருக்கலாம். இக்கதையை மண்முனை மட்டக்களப்பின் தனித்த நிருவாக அலகாக வளர்ச்சிபெற்ற 16 ஆம் நூற்றாண்டு காலத்தில் உருவான உற்பத்திக் கதைகளில் ஒன்றாகவும் கருதமுடியும். கேமமாலை பற்றிப் பாடும் இராசாவழியும் கிட்டத்தட்ட இதே காலத்து நூல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

எவ்வாறெனினும் மேகவண்ணனின் ஆட்சி கீழைக்கரை வரை நீடித்திருந்தது என்பதை பாணமைப்பற்று இலகுகலையின் மேற்கு எல்லையிலுள்ள நாமலுவையில் (Nāmaḷuva, நாமளுவ) கிடைத்த பிராமிக்கல்வெட்டொன்று சொல்கின்றது. சிறீமேகவண்ண அபய மகாராசாவின் காலத்தில் அங்கிருந்த கிரிதிசபருவத மகாவிகாரம் பற்றி அது குறிப்பிடுகின்றது (Nicholas, 1963:23). 

மேகவண்ணனுக்கு நூறாண்டுகளுக்குப் பின்னர் ஆறு தமிழர்கள் இலங்கை மீது படையெடுக்கிறார்கள். பாண்டு, பாரிந்த, குட்டபாரிந்த, திரீதர, |தாத்திய, பீத்திய என்பது ஒருவர்பின் ஒருவர் ஆண்டதாக மகாவம்சம் சொல்லும் அவர்களது பெயர்கள் (429 – 455). முதல் மூவரின் பெயர் முறையே பாண்டியன், பாரி வேந்தன், இளம்பாரி வேந்தன், என்பனவாம். இவர்கள் மகாவலி கங்கைக்கு அப்பால் மாத்திரம் ஆண்டதாக ஓரிடத்தில் மகாவம்சம் சொல்கின்றது. 

ஆனால் கதிர்காமத்தில் கிடைத்த கல்வெட்டொன்று ஆய் சரதரனின் மைந்தனான மகாதலி மகாநாகன் என்பவன் பற்றிக் குறிப்பிடுகின்றது. சரதரன் என்ற ஈழப்பாகதச் சொல்லை “சிறீதரன்” என்று வடமொழியில் வாசித்து அதை தமிழ் “திருதரு” பாண்டியனுக்குச் சமப்படுத்திப் பார்ப்பார் பரணவிதான. மகாதலி என்பதை “மகாதாட்டியன்” என்று வாசிக்கமுடியும் என்பதால், திரீதர, தாட்டிய என்று குறிப்பிடப்பட்டுள்ள இரு தமிழரசரே இக்கல்வெட்டில் முறையே சரதர, மகாதலி என அழைக்கப்படுவதாக அவர் இனங்காண்பார் (Paranavitana, 1994a:212-214). 

பரணவிதானவின் ஊகம் சரியாயின், இலங்கை வந்த ஆறு பாண்டியரும் ஒருவர் பின் ஒருவர் ஆண்டபோது இருவரில் பிந்தையவர், பண்டைய வழக்கின் படி முந்தையவர் ஆளும்போது உரோகணத்தில் உபராசனாக ஆண்டிருக்கக்கூடும். இவ்வூகத்தை எதிர்த்து அவர்கள் இருவரும் தமிழரசர் காலத்தில் கதிர்காமத்தை தலைநகராகக் கொண்டு தென்கிழக்கு உரோகணத்தை சுதந்திரமாக ஆண்ட வேறு இரு சிங்கள மன்னர் என்று கொள்வாரும் உண்டு (Ranawalla, 2011:75). 

ஐந்து தொடக்கம் ஏழாம் நூற்றாண்டுக்கிடையே கீழைக்கரையின் தென்கோடியில் புத்தமதம் செழித்தது என்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. குறிப்பாக பாணமைப்பற்று (இலகுகலை) பாணமை கிராமத்திலும் அதன் அயற்புறத்திலும் சில பிராமிக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பணவ ர|சமஃக விஃகர (Panava Rajamaha Vihara – பாணவை இராசமகா விகாரம்) பற்றிய வரிகள் காணப்படுகின்றன. பாணமையின் பெயர் பணவ என்று ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே கிடைப்பதால், தமிழில் நிலவும் “பேழையில் கிடைத்த பாலகி நகைத்ததால் பாலநகை – பாணகை ஆனது” எனும் தொன்மம் மிகப் பிற்காலத்தையது என்பது தெரியவருகிறது. ஆனால் அவ்வூர் மிகத்தொன்மையானது என்பதும் சமூக – அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் தமிழ்த் தொன்மங்களால் ஏற்கப்பட்டிருந்தது என்பதையே பாலநகை தொன்மம் வழி ஊகிக்கமுடிகின்றது. 

ஆறாம் ஏழாம் நூறாண்டுகளில் உரோகணத்தின் அரசியல் வகிபாகத்தில் சிறுமாற்றம் ஏற்பட்ட காலப்பகுதி ஆகும். அதுவரை எதிர்காலத்தில் அனுரையின் அரசனாக முழுநாட்டையும் ஆளப்போகும் உபராசனுக்கு உரோகணத்தை முதலில் ஆளும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டில் துவங்கி அனுரை இளவரசர்கள்  “மாப்பா” (மாயா அல்லது மாப்பாணன் அல்லது மகா அயபாய / பெருமானடிகள்) என்ற பதவி வழங்கப்பட்டு, அவர்கள் உரோகணத்துக்குப் பதில், தெற்கு தேசத்தை ஆளுபவர்களாக அனுப்பப்பட்டார்கள். தெற்கு தேசம் அல்லது தக்கண தேசம் என்பது மன்னார் – கண்டி – காலி ஆகிய மூன்று நகரங்களுக்கு இடைப்பட்ட  நிலப்பரப்பாகும். மாப்பா அல்லது மாயா ஆண்டதால் அது மாயரட்ட (மாப்பாணன் தேசம்) என்று அழைக்கப்படலாயிற்று.

இவ்வாறு உபராசன் என்ற பதவி மாப்பாணருக்கு கைமாற்றப்பட்டமைக்கான காரணம், இளவரசன் ஆளுமளவு பெற்றிருந்த முக்கியத்துவத்தை உரோகணம் இழந்ததாலா, அல்லது மாப்பாண தேசத்தில் வணிகமும் குடியிருப்பும் செழித்து, அப்பகுதி செல்வத்தில் மேம்பட்டதாலா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் சோழர் படையெடுத்த பத்தாம் நூற்றாண்டிலும் உரோகணத்தின் அரசியல் முக்கியத்துவம் குன்றிப்போனதாகத் தெரியவில்லை என்பதால், உரோகணத்தில் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருந்த கிளர்ச்சிகளையும் ஆட்சியுரிமைச் சிக்கல்களையும் அனுரை அரசர்கள் நேரடியாக கையாள முடிவெடுத்து இளவரசர்களுக்கு தக்கண தேசத்தை தங்கள் ஆட்சிப்பயிற்சிக்கான நிலப்பரப்பாக தீர்மானித்தார்கள் எனலாம். 

ஏழாம் நூற்றாண்டில் இக்குவாகு வமிசத்தில் உதித்த மகாதிசையன் என்பவன் “உரோகணசாமி” என்றழைக்கப்பட்ட உரோகண ஆட்சியாளனின் மகளான சங்கசிவையை மணந்திருந்தான். அவர்களுக்கு அக்கபோதி, தப்புலன், மணியக்கிகன் என்று மூன்று மைந்தர்கள். மூத்தவனான அக்கபோதி உரோகணத்தை ஆண்டுவந்ததுடன், மகாகாமம் (கிரிந்த), கா|சரகாமம் (கதிர்காமம்) ஆகிய இடங்களில் புத்தக்கோவில்களும் மடங்களும் அமைத்திருந்தான். அவனுக்குப் பின்னர் உரோகணத்தை ஆண்ட தப்புலன் தன் எதிரிகளை வேரறுத்ததுடன் அங்குள்ள மக்களின் மனங்கவர்ந்தவனாக மாறி “உரோகண மகாசாமி” என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்டான் (மவ. 45:45-50). 

பாசாணதீபவிகாரத்தில் வசித்த மகாதேரருக்காக தப்புலன் உரோகண மகா விகாரத்தை அமைத்தான் என்கின்றது மகாவம்சம் (மவ. 45:53 – 54). இலகுகலையில் உள்ள மங்கலமகா விகாரத்தில் கிடைத்த பன்னிரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்று அதை உரோகண மகாவிகாரம் (ருன மஃக விஃகர, Runa maha vihara) என்று அழைப்பதால் உரோகண மகா விகாரமும் பாசாணதீபிகை விகாரமும் கீழைக்கரையிலேயே அமைந்திருந்தன என்பது தெரியவருகிறது (Nicholas, 1963:70). தாப்புலன் ஆரியகாரி விகாரத்துக்கென மாளவத்து கிராமத்தை ஒப்படைத்தான் (மவ. 45:60 – 65) என்பது மகாவம்சம் அடுத்துச் சொல்லும் சேதி. மாளவத்து என்பது இன்றைய சம்மாந்துறைப்பற்றிலுள்ள மல்வத்தைக் கிராமம் ஆகும். ஆரியகார விகாரம் அதன் அண்மையில் அமைந்திருத்தல் கூடும். மாளவத்துவில் புத்தரின் படிமக்கோவிலொன்றை அமைத்த அவன் அங்கு தங்கத்தில் செய்த உன்னலோமம், ஏமப்பட்டம் (புருவநடு மயிரும் பிச்சைக்கலத்துக்கான தோள் பட்டியும்) என்பவற்றை அங்கு தான் புதிதாக தாபித்த புத்தரின் படிமத்துக்குச் சூடியிருந்தானாம்

மகாவம்சக் குறிப்புகளைப் பார்க்கும் போது இவன் சிலாமேகவண்ணன் (623 – 632) காலத்திலிருந்து இரண்டாம் காசியப்பன் (650 – 659) காலம் வரை சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் உரோகணத்தை சுயாதீனமாக ஆண்டான் எனத் தெரிகிறது. இறுதியில் அவன் மகன் மானவர்மன் தமிழர் ஆதரவுடன் சாத்ததாதன் மேற்கொண்ட போரில் இறந்ததை அடுத்து, தப்புலனும் மனமுடைந்து இறந்தான் (45:70 – 80). சாத்ததாதன் தமிழ் வணிகர் மற்றும் படையினரின் ஆதரவுடன் இரண்டாம் தாதோப திசையன் (659 – 667) என்ற பெயரில் அனுரை முடியைச் சூடி ஆண்டுவந்தான்.

உரோகணசாமியின் பரம்பரையில் வந்த வேறு மன்னர்கள் உரோகணப்பகுதியை தொடர்ந்து ஆண்டு வந்திருக்கிறார்கள் என்பது கல்வெட்டுச் சான்றுகளில் தெரிகிறது. பாணமைப்பற்று இலகுகலையில் உகந்தமலைக்குச் செல்லும் வழியில் சன்னியாசிமலை என்றோர் சைவ வழிபாட்டுத்தலம் உள்ளது. கதிர்காமம் செல்வோரும் உகந்தமலைக்குச் செல்வோரும் அம்மலையடிவாரத்திலுள்ள பிள்ளையாருக்கு அவல் படைத்து வணங்கிச் செல்வது வழமை. உகந்தமலையின் தோற்றம் பற்றிய தொன்மங்கள் சன்னியாசிமலை சார்ந்தும் சொல்லப்படுவதுண்டு.

அந்த மலையிலுள்ள தொல்லியல் சின்னங்கள் “விகாரகெம புத்த மடத் தொல்பொருள்களாக” இனங்காணப்பட்டு இலங்கை அரசிதழில் வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு கிடைத்த பாறைக்கல்வெட்டொன்று இப்பகுதியை ஆண்ட வகக மகாரா|சா (Vahaka maharājā, வஃகக மஃகாரா|சா) மசல விகாரத்தை அமைத்து நான்கு கழஞ்சு நிலத்தை தானமளித்தமை பற்றியும் குறிப்பிடுகின்றது. வஃகக என்பது “விசாகன்” என்பதன் திரிபாகலாம். அல்லது பாலியில் வசப என்றும் வடமொழியில் வ்ரு_^சப என்றும் (தமிழில் “இடபன்”) என்றும் வாசிக்கக்கூடிய பெயர். 

இவன் “மகாராசா” எனும் பட்டத்தைச் சூடியவன் என்பதால் தென்கிழக்கு உரோகணத்தை சுயாதீனமாக ஆண்டவனாக இருக்கவேண்டும். இந்தக் கல்வெட்டு ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அடையாளப்படுத்தப்படுவதால், தப்புலனின் தந்தையாக, அல்லது தப்புலனின் பெயர் குறிப்பிடப்படாத வேறொரு மகனாக இம்மன்னன் இருக்கக்கூடும்.

அடிக்குறிப்புகள்

  1. இராசாவழி உருவான 16 – 17ஆம் நூற்றாண்டு காலத்தில் கிராவெல்ல என்பது அரசன் பெண்ணெடுக்கும் வம்சமாக இருந்தது.
  2. தாதுவம்சமும் தலதா பூசாவழி நூலும் இவ்விடத்தை “லங்காபட்டணம்” என்கின்றன. மகாவலி கங்கையின் தெற்குக் கழிமுகமான திருக்கோணமலையின் இலங்கைத்துறையை இலங்கைப்பட்டணம் என்பதன் தமிழ் வடிவமாக இனங்கண்டுகொண்டார் ஆய்வாளர் W.B.M. பெர்னாண்டோ (Herath, 1974: 114, 3ff). இன்று அங்கு இலங்காப்பட்டண விகாரம் அமைக்கப்பட்டுள்ளது. விடயம் என்னவென்றால், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, அவ்வூர் இலந்தைத்துறை என்றே அழைக்கப்பட்டு வந்தது (துலாஞ்சனன், 2021:66).  
  3. மண்முனை இன்று மட்டக்களப்பில் ஆரையம்பதிக்கும் தாழங்குடாவுக்கும் இடையே மட்டக்களப்பு வாவியின் கரையோரமாக உள்ள சிற்றூர். ஆரையம்பதியின் தென்மேற்கில் உலகநாச்சி அமைத்த கோவில் தொடர்பான “சிகரம், கோவில்குளம்” ஆகிய பெயர்கள் இடப்பெயர்களாக நீடிக்கின்றன. அப்பகுதியில் பல தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், அங்கு கிடைத்த கருங்கல் கதவுநிலையொன்று இன்றும் ஆரையம்பதி கந்தசுவாமி கோவிலில் காணப்படுகின்றது. தாழங்குடாவில் மாளிகை அமைந்திருந்த தெருவென ஓரிடம் இன்றும் இனங்காட்டப்படுவதுண்டு. 
  4. இக்கதையில் தொடர்புறும் கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றீச்சரம், உலகநாச்சியின் கயிலாய லிங்கேச்சரம் என்பவற்றை சோழர் ஆட்சிக்குப் பிந்தைய சிவாலயங்களாகக் கருதமுடியுமாயிருக்கிறது.
  5. ஐந்தாம் நூற்றாண்டுக்குரிய பிராமி வரிவடிவில் “ளபரி தேவ” (ḷapari deva, இளம்பாரி தேவர்) என்ற பெயருடன் பொறிக்கப்பட்ட குட்ட பாரிந்தனின் ஈழப்பாகதக் கல்வெட்டு அவன் பெயர் “இளம்பாரி வேந்தன்” என்பதை உறுதிப்படுத்துகின்றது. (Paranavitana, 1994b:111-115). எனினும் இப்பெயரை இளம் பாரிட, இளம் பாரிந்த என்றே வாசிக்கிறார் பரணவிதான. தமிழில் அச்சொற்களுக்கு அர்த்தமில்லை.  
  6. திருதரு என்ற பெயரை, இக்காலத்துக்கு சில நூறாண்டுகள் முந்தைய தமிழ் இலக்கியத்திலுள்ள “நிலந்தரு திருவிற்பாண்டிய’னுடன் இணைத்துப் பார்ப்பது ஆர்வமூட்டுகிறது.

உசாத்துணை

  1. கமலநாதன், சா.இ., கமலநாதன், க. (2005). மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம், கொழும்பு : குமரன் புத்தக இல்லம்.
  2. துலாஞ்சனன், வி. (2021). காலனித்துவ கால ஆவணங்களில் வெருகல் பிரதேசம், செண்பகம் (வெருகலசம் 02), வெருகல் : பிரதேச செயலக மலர்க்குழுவும் கலாசார அதிகார சபையும் வெளியீடு, பப. 62 – 68.
  3. Herath, H.M.D.B. (1974). A History of The Tooth Relic In Ceylon With Special Reference To Its Political Significance (c. AD 300 – 1500) [Doctoral dissertation, University of London]. SOAS Research Online. https://eprints.soas.ac.uk/29161/1/10731256.pdf
  4. Nicholas, C.W. (1963). Historical Topography of Ancient And Medieval Ceylon, JCBRAS, Vol VI (New, Sp. No.)
  5. – Paranavitana, S. (1994a). Kataragama Inscriptions, in Epigraphia Zeylanica (D.M.D.Z.Wickramasinghe & H.W.Codrington Eds.), Volume III, pp.  212-225.
  6. _____________________. (1994b). Anuradhapura : Slab Inscription of Khudda Pārinda, in Epigraphia Zeylanica (D.M.D.Z.Wickramasinghe & H.W.Codrington Eds.), Volume III, pp.  212-225.pp. 111-115.

இவ்வத்தியாயத்தில் பிறமொழி ஒலிப்புக்களை சரியாக உச்சரிப்பதற்காக, ISO 15919 ஐத் தழுவி உருவாக்கப்பட்ட தமிழ் ஒலிக்கீறுகள் (Diacritics) பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஒலிக்கீறுகளின் முழுப்பட்டியலை இங்கு காணலாம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6110 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)