நீரை வளிமண்டல நீர், சமுத்திர நீர், தரை மேற்பரப்பு நீர் மற்றும் தரைக்கீழ் நீர் என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். நன்னீரில் மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் என்று மேலும் சில வகைப்பாடுகள் உள்ளன (Praveen et al., 2020). மேற்பரப்பு நீரானது மேற்பரப்பில் உள்ள அனைத்து வகையான நீரையும் குறிக்கின்றது. பனி மற்றும் பனிப்பாறைகள் போன்ற திடமான நீராதாரங்கள், சதுப்பு நிலங்கள், நீர்த்தேக்கங்கள், ஆறுகள், நீரோடைகள், ஏரிகள், திறந்த நீர்த்தேக்கங்கள், மற்றும் குளங்கள் போன்றன இவ் வகையில் அடங்கும். இயற்கையாகவோ செயற்கையாகவோ அல்லது பரவலாகவோ உருவாக்கப்பட்ட எல்லைகள் அல்லது வரம்புகளில் உள்ள நீர் பூமியின் மேற்பரப்பில் காணப்படுதல் மேற்பரப்பு நீர் எனப்படும். இயற்கை நீரூற்றுகளிலிருந்து வரும் நீர், நீரூற்றில் இருந்து பூமியின் மேற்பரப்பில் வெளியேறும்போது மேற்பரப்பு நீர் என வகைப்படுத்தப்படும்.
வடக்கு மாகாணம் 24 நதிகளைக் கொண்ட ஒரு பகுதியாகும். இந்த ஆற்றுப்படுகைகள் அனைத்தும் பருவகால ஆறுகள் என்ற வகையைச் சேர்ந்தவை. ஒன்பது குறிப்பிடத்தக்க குளங்கள் உட்பட வடக்கு பிராந்தியத்தில் உள்ள 54 பெரிய, நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்கள் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தால் பராமரிக்கப்படுகின்றன. இத்திட்டங்கள் முதன்மையாக 70,197 ஏக்கருக்கு பாசன நீரை வழங்குகின்றன (படம் 8.1). இதன்மூலம் 28,459 இற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பயனடைகின்றன. மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தால் பராமரிக்கப்படும் ஐந்து குறிப்பிடத்தக்க குளங்கள் உட்பட 09 பெரிய, நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்கள் வடக்குப் பிராந்தியத்தில் உள்ளன. இத்திட்டங்கள் முதன்மையாக 45,551 ஏக்கருக்கு பாசன நீரை வழங்குகின்றன. கமநல அபிவிருத்தி திணைக்களம் வட பிராந்தியத்தில் 2,724 சிறு நீர்ப்பாசன திட்டங்களை கவனித்து வருகின்றது. இத்திட்டங்கள் முதன்மையாக 77,874 ஏக்கருக்கு பாசன நீரை வழங்குகின்றன. இப்பகுதியில் உள்ள 89,336 இற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் இதன்மூலம் பயனடைகின்றன (அட்டவணை 8.1).
வடக்குப் பகுதியை அவற்றின் நீர் ஆதாரங்களின் அடிப்படையில் இரண்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிக்கலாம். சுண்ணாம்பு மற்றும் மணல் நீர்நிலைகளில் உள்ள நிலத்தடி நீர், யாழ். குடாநாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள தீவுகளுக்கு முதன்மையான நீர் ஆதாரமாகும். இருப்பினும், 27 பருவகால ஆறுகளால் நீர் வழங்கப்படும் மேற்பரப்பு நீர்நிலைகள் ஏனைய நான்கு மாவட்டங்களில் முதன்மையான நீர் ஆதாரமாக உள்ளன.
இலங்கையின் வடக்குப் பிரதேசத்தின் நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்கள் நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ளன. வரலாற்றுக் காலத்தில், மகா பராக்கிரமபாகு, தாதுசேனன், மகாசேனன், வசபன், அக்கபோதி போன்ற பெரும்பாலான மன்னர்கள் குடிநீருக்காகவும், விவசாயத் தேவைகளுக்காகவும் பாரிய நீர்த்தேக்கங்களை உருவாக்கினர். நாட்டை ஆண்ட மன்னர்கள், வரட்சிப் பாதிப்பை எதிர்கொள்ளும் வடக்கு மாகாணம் உட்பட பெரும்பாலான உலர் வலயப் பகுதிகளில், நீர்த்தேக்கங்களை உருவாக்குவதே நாட்டின் வரட்சிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று நினைத்தனர். நான்கு மாதங்கள் கொண்ட ஒரு பருவத்தில் வடக்குப் பகுதி அதிக மழையைப் பெறும் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர். மீதமுள்ள எட்டு மாதங்களும், இப்பகுதி வரட்சிப் பிரச்சனையை எதிர்கொள்கிறது. மல்வத்து ஓயா, பாலி ஆறு, கனகராயன் ஆறு போன்ற சில ஆறுகள் எவ்வித உபயோகமும் இன்றி கடலில் கலந்தன. எனவே, முந்தைய கால மன்னர்கள் வட மாகாணத்தில் சில நீர்த்தேக்கங்களைக் கட்டினார்கள். வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, வட பிராந்தியத்தில் பல்வேறு அளவுகளில் 24 ஆறுகள் உள்ளன. அனைத்து ஆறுகளும் பருவகால ஆறுகள். அவை இரண்டாவது இடைப்பருவ காலத்திலும்; வடகிழக்கு பருவ மழைக்காலத்திலும் கிடைக்கும் மழை நீரை நம்பியே உருவாகின்றன. ஐம்பத்து நான்கு முதன்மை மற்றும் நடுத்தர நீர்த்தேக்கங்கள் வட மாகாணத்தில் அமைந்துள்ளன. பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் இந்தப் பருவகால ஆறுகளில் இருந்து நீரைப் பெறுகின்றன. இந்த நீர்த்தேக்கங்கள் இலங்கையின் வடக்குப் பகுதியின் பிரதான நிலத்தின் உயிர் நரம்பு ஆகும். முல்லைத்தீவு மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், மன்னார் மாவட்டம், வவுனியா மாவட்டங்களின் நெற் செய்கையானது இந்த நீர்த்தேக்கங்களின் பாசன நீரை நம்பியே உள்ளது. எனினும் யாழ். மாவட்டத்தின் நெற்செய்கை நேரடி மழையை நம்பியுள்ளது. எனினும் இரணைமடு, வவுனிக்குளம், கட்டுக்கரை, முத்தையன்கட்டு, பாவட்குளம், அக்கராயன்குளம், நாகபடுவான், கணுக்கேணி போன்ற எட்டுப் பெரிய நீர்த்தேக்கங்கள் வடக்குப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமானவை (படம் 8.2).
2010 இற்கு முன், வடக்கு மாகாணத்தின் உள்நாட்டுப் போர் காரணமாக சில மேற்பரப்பு நீர் ஆதாரங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்தைத் தவிர, வடக்கு மாகாணத்தின் விவசாய நடவடிக்கைகள், முக்கியமாக இந்த மேற்பரப்பு நீர் ஆதாரங்களையே சார்ந்துள்ளன. இந்த மேற்பரப்பு நீர் ஆதாரங்கள் முதன்மை விவசாய பருவங்களான பெரும் போகம் மற்றும் சிறு போக பருவங்களில் திறந்த வாய்க்கால் மற்றும் ஏற்றுப் பாசன முறைகள் மூலம் விவசாய நடவடிக்கைகளுக்கு தண்ணீரை வழங்குகின்றன. அனைத்து மேற்பரப்பு நீர் ஆதாரங்களின் நீரேந்து பிரதேசங்களுக்கும் மழைவீழ்ச்சி முதன்மையான ஆதாரமாகும். மேலும், இந்த மேற்பரப்பு நீர்நிலைகள் வீட்டு மற்றும் குடிநீருக்கான தண்ணீரை வழங்குகின்றன. வடமாகாண சபையின் (2022) அறிக்கையின்படி, 343,890 இற்கும் அதிகமான மக்கள் இந்த மேற்பரப்பு நீர்நிலைகளின் நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் நடவடிக்கைகள் மூலம் பயனடைகின்றனர்.
தொடரும்.