பௌத்தமும் அடையாள முரண்பாடுகளும் - பகுதி 1
Arts
18 நிமிட வாசிப்பு

பௌத்தமும் அடையாள முரண்பாடுகளும் – பகுதி 1

July 7, 2024 | Ezhuna

‘இலங்கையில் பௌத்தம்’ என்னும் இந்தத்தொடர் பௌத்தம் பற்றி மானிடவியலாளர்களாலும் சமூகவியலாளர்களாலும், அரசியல் விஞ்ஞானிகளாலும் எழுதப்பட்ட ஆய்வுகள் பற்றி அறிமுகம் செய்வதாக அமைகின்றது. குறிப்பாக 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பௌத்த சமய சீர்திருத்தவாதம், சமூகம், பண்பாடு, அரசியல், இன உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் அரசியல் பௌத்தத்தின் வகிபாகம் என்பன பற்றி ஆய்வாளர்களின் கருத்துக்கள் விரிவாக இந்தத் தொடரில் நோக்கப்படும்.  கணநாத் ஒபயசேகர, ஸ்டான்லி ஜே. தம்பையா, எச். எல். செனவிரத்தின, கித்சிறிமலல் கொட, சரத் அமுனுகம, ஜயதேவ உயன்கொட, குமாரி ஜயவர்த்தன, லெஸ்லி குணவர்த்தன ஆகிய இலங்கையின் சமூக விஞ்ஞானிகளின் நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் , ஹவ்வார்ட் றிஜின்ஸ், உர்மிலா பட்னிஸ், றிச்சார்ட் கொம்பிரிட்ஜ், யொனதன் ஸ்பென்சர் முதலிய இலங்கையரல்லாத ஆய்வாளர்களின் ஆய்வுகள் சிலவும் இந்தக் கட்டுரைத்தொடரில் விமர்சன நோக்கில் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளது.

ஆங்கில மூலம் : எச்.எல். செனிவிரத்தின

இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனம் (ICES) கொழும்பு, 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இனத்துவக் கற்கைகள் (Ethnic Studies) என்ற ஆய்வுத்துறை உலக அளவில் பிரபலம் பெற்று வந்த காலத்தில் இலங்கையில் நிறுவப்பட்ட இந்த ஆய்வு நிறுவனம், தனது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக 2002 ஆம் ஆண்டு இனத்துவமும், இனத்துவ அடையாளமும் முரண்பாடுகளும் (Ethnicity, Identity and Conflict) என்ற விடயப் பொருள் குறித்து 25 நாள் பாடநெறி ஒன்றை நடத்தியது. இப்பாட நெறியில் கலந்து கொண்டோருக்குப் பயிற்சியளிப்பதற்காக, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆய்வாளர்கள் வருகை தந்து உரையாற்றினார்கள். அப்பாடநெறியில் கலந்து கொண்டு உரையாற்றிய அறிஞர் எச்.எல். செனிவிரத்தின “பௌத்தம், அடையாளம், முரண்பாடுகள்“ (Buddhism, Identity and Conflict) என்ற தலைப்பில் உரையாற்றினார். அவ்வுரைப் பிரதி ICES நிறுவனத்தால் சிறு நூலாக வெளியிடப்பட்டது. அந்நூலை அறிமுகம் செய்வதாக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

ஒற்றையாட்சி அரசு  (Unitary State)

இலங்கை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பௌத்தர்களின் நாடாக இருந்து வருகிறது. ‘இலங்கை முழுவதையும் ஒரு குடையின்கீழ் ஆண்ட மன்னர்கள் ஆட்சியாளர்களாக இருந்து வந்தனர்; அவர்கள் பௌத்தத்தின் காவலர்களாக இருந்தனர்’ என்பன போன்ற கருத்துகள் பரவலாகச் சிங்கள மக்களிடையே இருந்து வருகின்றன. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய வரலாற்று நூல்களும் இக் கருத்துகளை மாணவர்கள் மனதில் பதிய வைப்பனவாக அமைந்துள்ளன. இச்சொல்லாடலில் அமைந்துள்ள முக்கியமான கருத்து இலங்கை ஒற்றையாட்சி நாடாக பண்டைக் காலம் முதல் இன்று வரை இருந்து வந்ததென்பதாகும். இக்கருத்தோடு இணைந்த இரு துணைக் கருத்துகளும் உள்ளன.

அ) இலங்கையின் அரசு சிங்கள – பௌத்த அரசாக இருந்து வந்தது.

ஆ) சிறுபான்மையினரான தமிழர்கள் இந்நாட்டுக்கு அந்நியர்கள். தமிழர் இனக் குழு சிங்கள பௌத்த தேசத்தினதும் அரசினதும் பாகமாகவோ, பங்காளியாகவோ ஒரு போதும் இருந்ததில்லை. 

இச் சிறு நூலின் முதலிரு பக்கங்களில் பேராசிரியர் செனிவிரத்தின இக்கருத்தியலின் கூறுகளைத் தெளிவுபடுத்துகிறார்.

“தேசியவாதிகளான அறிவாளிகளும், கருத்துருவாக்கிகளான தலைவர்கள் (Opinion Leaders) சிலரும், இலங்கை கடந்த காலத்திலும் இன்றும் ஒற்றையாட்சியுடைய சிங்கள – பௌத்த அரசாகவே (Unitary Sinhala Buddhist State) இருந்து வந்துள்ளது என்று கூறி வருகிறார்கள். இக்கருத்தின்படி சிறுபான்மையினரின் இருப்பு மறுக்கப்படுகிறது. சிறுபான்மையினரை அந்நியராகவும், அவர்களை இலங்கையின் அரசியல் சமூகத்திலும் வாழ்விலும் உள்ளடக்கப்படாத விளிம்பு நிலையினராகவும் (Peripheral to the Srilankan Polity)  கருதும் போக்குக் காணப்படுகிறது. முதலில் தேசியவாதிகளான உயர்குழுவின் (Nationalist Elite) கருத்தாக இது இருந்தது. பின்னர் இது மெதுவாக பொது மக்களிடமும் பரவிச் செறிந்துள்ளது. இந்நாடு சிறிய தேசமாகவும், பெரும்பான்மையினர் கல்வி கற்றவர்களாகவும் இருப்பதால் ஊடகங்கள் மூலமாக நாட்டின் எல்லாப் பகுதி மக்களிடமும் இக்கருத்துப் பரவியுள்ளது (பக். 1).”

நவீன தேசிய அரசு

நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் ‘பௌத்த – சிங்கள ஒற்றையாட்சி அரசு’ என்னும் பொய்மை நவீன காலத்தில் தோற்றம் பெற்ற ‘நேஷன் ஸ்டேட் (Nation State)’ என்ற கருத்தால் நியாயப்படுத்தப்படுவதை பேராசிரியர் எடுத்துக் காட்டுகிறார். ‘தேசிய அரசு’ எனப்படும் கருத்து சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றியது. முதலாம் உலக மகா யுத்தத்தின் பின் உலக அளவில் அரசுகளின் அமைப்புக்கான ஒரேயொரு மாதிரி வடிவமாக இது மாறியுள்ளது.

இந்த மாதிரியை, பின்னோக்கி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இலங்கையின் அரசுக் கட்டமைப்பு வடிவமாகக் காட்டும் வரலாற்றுத் திரிப்பை இலங்கையின் தேசியவாதக் கருத்தியலாளர்கள் செய்து வருகின்றனர். இது பற்றி செனிவிரத்தின கூறுவன கருத்தாழம் மிக்கவை.

“சிங்கள பௌத்த ஒற்றையாட்சி அரசு என்ற இந்தக் கருத்தை மேலோட்டமாக பார்த்தாலே ஓருண்மை விளங்கும். இக்கருத்தின் பின்னால் ‘நவீன தேசிய அரசு (Modern Nation State)’ என்ற மாதிரி உள்ளது. இக்கருத்து மாதிரி சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது. இக்குறுகிய வரலாற்றையுடைய தேசிய அரசு முதலாம் உலக யுத்தத்தின் பின் உலகில் அரசு உருவாக்கத்திற்கான ஒரே ஒரு மாதிரியாகக் கொள்ளப்படுகிறது (பக். 1)”

தேசிய அரசு பற்றி, வரலாறும் சமூக விஞ்ஞானங்களும் கூறுவதென்ன?

19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டிலும் வரலாற்றாய்வாளர்களும், சமூக விஞ்ஞானிகளும் ‘நேஷன் ஸ்டேட் (Nation State)’ என்னும் விடயப் பொருள் பற்றி ஏராளமான ஆய்வுகளை எழுதியுள்ளார்கள் என்பதை அடுத்து செனிவிரத்தின சுருக்கமாகக் குறிப்பிடுகின்றார். அரசு (State), தேசியம் (Nation), தேசிய அரசு (Nation State) ஆகியன பற்றிய சொற்பொருள் விளக்கங்களே தெளிவாக தமிழில் எடுத்துக் கூறப்படாத நிலையில் செனிவிரத்தின கூறுபவை கவனிப்புக்குரியவை எனக் கருதுகிறோம்.

  1. தேசிய அரசின் அடிப்படை இயல்புகள்
  2. அதன் தோற்றத்திற்கான வரலாற்றுக் காரணங்கள்
  3. தேசிய அரசுகள் வரலாற்று ரீதியாக உலகம் முழுவதும் பரவி வளர்ச்சி பெற்றமை
  4. தேசிய அரசின் கருத்தியல் (Ideology), அதன் சட்ட வரையறைகள், அதன் தத்துவ – பொருளாதார அடிப்படைகள்
  5. சமூக வாழ்விலும் இருப்பிலும் தேசிய அரசின் தாக்கம்

ஆகிய விடயங்கள் பற்றி ஏராளமான ஆய்வுகள் எழுதப்பட்டதாக செனிவிரத்தின அவர்கள் கூறுகிறார்கள் (பக். 2).

தேசிய அரசின் இருப்பும் அதன் பிரசன்னமும் எல்லா இடங்களிலும் வெளிப்படுகிறது. அது எங்கும் வியாபித்துள்ளது. இதனால் அது எமது அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சமூகத்தில் உள்ள அனைத்து அமைப்புக்களையும் விடத் தேசிய அரசும், அதன் நிறுவன அமைப்புகளும் மேலாண்மை மிக்கனவாய் உள்ளன. இதனால் தேசிய அரசு நவீன காலத்து அரசு வடிவம் என்பதை மறந்து, அது வரலாற்றின் எல்லாக் காலத்திலும் இருந்து வரும் ஒரு அரசு வடிவம் என்ற பொய்யான கருத்து உருவாகியுள்ளது.

நவீனத்துக்கு முந்திய காலத்தின் அரசுகளின் (Pre-Modern States) வரலாற்று உதாரணங்கள் சிலவற்றைப் பேராசிரியர் செனிவிரத்தின எடுத்துக் காட்டுகிறார். ஒற்றையாட்சி – தேசிய அரசு என்ற கருத்துகள், இவ்வகை அரசு மத்தியப்படுத்தப்பட்ட அரசு (Centralised State) ஆகவும் இருந்தது என்ற அனுமானத்தைக் கொண்டுள்ளன. அனுராதபுரத்தில் அமைந்திருந்த அரசு ஒற்றையாட்சி அரசாகவும், சிங்கள – பௌத்த தேசிய அரசாகவும் இருந்தது மட்டுமன்றி அது மத்தியப்படுத்தப்பட்ட ஆட்சியாகவும் இருந்தது என்பதே தேசியவாத வரலாற்றாசிரியர்களின் கருத்துமாகும். 

சோழ அரசு

சோழ அரசு பற்றிய உதாரணம் இவ்விடயத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது. சோழப் பேரரசு மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

  1. சோழப் பேரரசின் தலைநகரை மையமாகக் கொண்ட மத்திய பகுதி, ‘சோழ மண்டலம்’ என அழைக்கப்பட்டது. சோழ மண்டலத்தில் அரசனின் அதிகாரம் பலமாக இருந்தது. அதன் கீழமைந்த பகுதிகளை அவர் நேரடியாகவே ஆட்சி புரிந்தார். அப்பகுதியின் பிரதான வருவாய் வரிவிதிப்பு மூலம் கிடைத்தது.
  2. இரண்டாவதாக தொண்டை மண்டலம், பாண்டி மண்டலம் என்பன அமைந்திருந்தன. இவ்விரண்டாவது மண்டலத்தில் பேரரசின் ஆட்சி அதிகாரம் வலுவுடையதாக இருக்கவில்லை. ஏனெனில் இப்பகுதியை நேரடியாக ஆட்சி செய்தவர்களாக அவ்வப்பகுதிகளின் சிற்றரசர்களும், தளபதிகளும் இருந்தனர். அங்கு பேரரசின் செல்வாக்கு இருந்தது உண்மையே. ஆனால் அதிகாரம் பெயரளவிலானது மட்டுமே. சிற்றரசர்களும், தளபதிகளும் தாமே வரியை அறவிட்டார்கள். குடி மக்கள் அவர்களது நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தனர். சிற்றரசர்களும் பேரரசருக்கு திறையைச் செலுத்தி அவரின் இறைமையை ஏற்றிருந்தனர். அவ்வளவு தான். இவ்விரண்டாவது மண்ணடலம் திறை (Tribute) என்ற வடிவில் சுரண்டப்பட்டது.
  3. மேற்குறித்த இரு மண்டலங்களுக்கும் மாறான பகுதியாக ‘ஈழ மண்டலம்’ என்னும் இலங்கை விளங்கியது. இந்த மண்டலத்தில் முதலிரு மண்டலங்களைப் போல் வரி அறவீடு (Taxation) ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இருக்கவில்லை. குறுகிய காலம் மட்டுமே சோழரின் பிடியில் இருந்த ஈழ மண்டலம், இடையிடையே புகுந்து ‘கொள்ளையிடும்’ மண்டலமாக இருந்து வந்தது. சோழப் பேரரசர்களும் படைத் தளபதிகளும் இலங்கைக்குள் புகுந்து கொள்ளையடித்துச் சென்றார்கள்.

எச்.எல். செனிவிரத்தின, சோழப் பேரரசின் ஆட்சி முறை மத்தியப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சியாக (Centralised Unitary State) இருக்கவில்லை; அது அதிகாரம் பரவலாக்கப்பட்டிருந்த ஒரு அரசு முறை என்பதை விளக்குகிறார். அவரது இந்த விபரிப்புக்கு ஆதாரமாக, ஜோர்ஜ் ஸ்பென்சர் (George Spencer) என்பவர் எழுதிய ‘THE POLITICS OF PLUNDER : THE CHOLAS IN ELEVENTH CENTURY CEYLON’ (கொள்ளை அரசியல் : பதினோராம் நூற்றாண்டில் இலங்கையில் சோழர் ஆட்சி) என்ற கட்டுரையை மேற்கோள் காட்டுகிறார். ஜோர்ஜ் ஸ்பென்சரின் இக் கட்டுரை ‘Journal of Asian Studies’ தொகுதி 35, இதழ் 3 (1976) இல் வெளியானது (பக். 405-419).      

உலகியல் அதிகாரமும் ஆன்மீக அதிகாரமும்

சோழப் பேரரசு பற்றிய உதாரணத்தைக் கூறியதையடுத்து எச்.எல். செனிவிரத்தின அவர்கள் உலகியல் அதிகாரமும் ஆன்மீக அதிகாரமும் (Temporal and Spiritual Power) என்னும் முக்கியமான எண்ணக்கருவைப் பற்றிச் சுருக்கமாக எடுத்துக் கூறுகிறார்.

சோழப் பேரரசில் காணப்பட்டது போன்ற வேறுபட்ட வகையினவான அரச ஒழுங்கமைப்பு (State organization) உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்துள்ளது என்பதை மானிடவியல் ஆய்வாளர்கள் விரிவாக ஆராய்ந்து கூறியுள்ளனர் எனக் குறிப்பிடும் செனிவிரத்தின, ‘A.M. Hocart’ என்ற காலனியக் காலத்து சிவில் சேவை அதிகாரியின் ‘Kings and Councillors’ என்ற நூலினை மேற்கோள் காட்டி அந்நூலாசிரியரின் ‘State as Sacrificial Organisation’ என்னும் எண்ணக்கருவை அறிமுகம் செய்கிறார். ‘சோழ அரசு போன்ற முற்கால அரசுகளில் இராணுவ பலத்தின் மூலம் மக்களை அடிபணிய வைப்பதான அரசு அதிகாரத்தை விட, சமயக்குருமார்களின் வேள்விகளையும், முடிசூட்டு விழா போன்ற சடங்குகளையும் பிரமாண்டமான முறையில் நடத்தி ‘ஆன்மீக அதிகாரம்’ கொண்டு குடிமக்களை அடிபணிய வைக்கும் ஆளும் உபாயம் அரசு அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கு உபயோகிக்கப்பட்டது’ என்ற கருத்தை ஹோகார்ட் அவர்களின் ‘அரசு ஒரு சடங்கியல் ஒழுங்கமைப்பு‘ (State as Sacrificial Organisation) என்ற எண்ணக்கரு விளக்குகிறது. அரசு அதிகாரம் மத்தியில் இருந்து, மாகாணங்கள், மாவட்டங்கள், கிராமங்கள் எனப் படிப்படியாக விரிந்து செல்லும் போது, படை பலம் மட்டும் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைக்க உதவ மாட்டாது. உலகியல் அதிகாரத்தோடு ஆன்மீக அதிகாரமும் (Spiritual Power) ஆட்சி அதிகாரத்திற்கு உதவுகிறது. படாடோபமான அரசுச் சடங்குகளையும் வேள்விகளையும் அரசர்கள் பெரும் பொருட் செலவில் நடத்தினர். இச்சடங்குகளின் போது பேரரசின் எல்லாப் பகுதிகளையும் சேர்ந்த சிற்றரசர்களும், சேனாதிபதிகளும், படைத் தலைவர்களும் சமூகமாகியிருந்து, திறைப் பொருட்களை அடையாளமாகக் கொடுத்து, பேரரசைத் தாழ்ந்து பணிந்து வணங்குவர். இந்தச் சடங்கியல் முறையை செனிவிரத்தின அவர்கள் ‘Royal Style’ எனச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார். நூலின் அடிக்குறிப்பில் லூயி துய்மோனின் (Louis Dumont) ‘Homo Hierarchicus’ என்ற நூலையும் (1970), ஆனந்த குமார சுவாமியின் ‘SPIRITUAL AUTHORITY AND TEMPORAL POWER IN THE INDIAN THEORY OF GOVERNMENT’ என்ற ஆய்வுரையையும் குறிப்பிடுகிறார்.  

தென்கிழக்காசியாவின் மலாயா அரசும், தாய்லாந்து அரசும்

மலாயாவின் அரசியல் முறைமையில் நவீனத்திற்கு முந்திய காலத்தில் ‘சுல்தான்’ எனப் பெயர்பெற்ற மன்னர் ஆட்சியாளராக விளங்கினார். இம் முடியாட்சி முறையில் நிர்வாக அதிகாரம் முழுவதும் மத்தியில் குவிந்திருக்கவில்லை. பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்த மாவட்டத் தலைமையில் இருந்த சிற்றரசர்கள் சுல்தானின் கட்டளைகளுக்குப் பணியாதவர்களாகவும், பலம் மிக்கவர்களாகவும் விளங்கினர். சில சிற்றரசர்கள் சுல்தானை விட செல்வம் படைத்தவர்களாக இருந்தனர். சிற்றரசர்கள் மேலான சுல்தானின் அதிகாரம் பெயரளவிலானதாகவே இருந்தது. ஒரு மாவட்டத்தின் சிற்றரசன் சுல்தானில் தங்கியிருக்காமல் தனது சொந்தப் பலத்திலேயே செயற்படுபவராக விளங்கினார். சிற்றரசர் ஒருவர் இறக்கும் போது அரசுரிமை யாருக்குச் செல்லும் என்ற பிரச்சினையில் சுல்தானுக்கு அதிகாரம் கிடையாது. அது அவ்விடயம் குறித்த சிற்றரசின் அரச குடும்பத்தின் பிரச்சினையாகும். அக்குடும்பமே அரசுப் பதவி யாருக்குச் செல்ல வேண்டும் என்ற முடிவை எடுக்கும். சுல்தான் மலாயாவின் அரசுமுறைமையில் குறியீட்டு வடிவிலான அதிகார அந்தஸ்தைக் (Symbolic Status) கொண்டிருந்தார். சுல்தான் சர்வ அதிகாரம் படைத்தவராக இல்லாத போதும் அவருக்கு மதிப்பும் மேன்மையும் இருந்தது. மலாயா அரசியல் முறைமை சுல்தானின் அரண்மனையில் நிகழ்த்தப்படும் சடங்குகள் மூலம் சுல்தானின் பதவிக்கு புனிதத் தன்மையையும் உயர் மேன்மையையும் வழங்கியது.  சுல்தானின் பட்டமளிப்பு விழாவில் அளிக்கப்படும் அரசுரிமை அடையாளச் சின்னங்களும்  புனிதப் பொருட்களும் அவரின் இறைமையின் அடையாளங்களாக அமைந்தன. அரண்மனையில் நிகழ்த்தப்படும் தொடர்ச்சியான சடங்குகள் அவரின் சடங்கியல் அதிகாரத்தை மீள் உற்பத்தி செய்வனவாக அமைந்தன. மலாய அரசு முறை பற்றிய விளக்கத்திற்கு ஆதாரமாக, ‘J.M.Gullick’ என்பவரின் ‘INDIGENOUS POLITICAL SYSTEM OF WESTERN MALAYA (LSE MONOGRAPHS IN SOCIAL ANTHROPOLOGY 17 (LONDON 1958) என்றும் ஆய்வினை எச்.எல். செனிவிரத்தின அவர்கள் ஆதாரம் காட்டுகிறார்.

நவீனத்துக்கு முந்திய காலத் தாய்லாந்தின் அரசுமுறை, பரவலாக்கப்பட்ட அதிகாரமுறைக்கு சிறந்ததொரு உதாரணமாகும். தாய்லாந்தின் அரசுமுறையை ‘Centre Oriented Rather than Centralised System’ என செனிவிரத்தின குறிப்பிடுகின்றார். மத்தியப்படுத்த முறையில் (Centralised System) மத்தியில் அரசு அதிகாரம் குவிந்திருக்கும். தாய்லாந்து அரசு முறையில் பிராந்தியங்கள் பலம் மிக்கனவாக இருந்தன. ஆயினும் அவை மத்தியில் ஆட்சி செய்த மன்னரின் இறையாண்மைக்கு உட்பட்டனவாக இருந்தன. தாய்லாந்தின் அரசு முறை பற்றிய புகழ் பெற்ற ஆய்வை நிகழ்த்தியவர் ஸ்டான்லி தம்பையா அவர்களின் ‘WORLD CONQUEROR WORLD RENOUNCER (CAMBRIDGE UNIVERSITY PRESS 1958)’ எனும் நூலை செனிவிரத்ன மேற்கோள் காட்டுறார். ‘மண்டல’ என்பது இந்தியப் பிரபஞ்சவியல் (Indian Cosmology) கருத்தாகும். ‘The Galatic Polity’ என்ற ஆங்கிலத் தொடரால் தம்பையா இம்முறையை அடையாளப்படுத்தினார். வானில் காணப்படும் நட்சத்திரக் கூட்டங்களுக்கு (Galaxy) ஒரு மத்தியான நட்சத்திரம் காணப்படுவதில்லை. அது போல பல சிற்றரசுகளின் கூட்டமாக விளங்கும் சிறுசிறு அரசுகளின் தொகுதியில் மேலாதிக்கம் செலுத்தும் அரசு இருக்காது. அரசுகளின் எல்லைகள் தெளிவற்றவை, மாறிக் கொண்டிருப்பவை.

மலாயா, தாய்லாந்து ஆகிய அரசுமுறைகளின் இயல்புகளை விளக்கிக் கூறும் செனிவிரத்தின அம்முறைமையின் விசேட இயல்பினைக் குறிப்பிடுகின்றார். அச்சமூகங்களிற்கு ஒற்றைப் பண்பாட்டு அடையாளம் இருக்கவில்லை. பொதுமைப்பட்ட ஒற்றைப் பண்பாட்டு அடையாளம் (Single Cultural Identity) இல்லாததாய் தனித்துவமான பண்பாடுகளைக் கொண்ட சமூகங்களின் கூட்டாக அவை அமைந்திருந்தமையைக் குறிப்பிடுகின்றார்.

இமாலய மலைப்பகுதியின் குடியான் சமூகம்

இமாலய மலைப்பகுதியின் குடியான் சமூகம் (Peasant Society), ஒற்றைப் பண்பாட்டு அடையாளம் இல்லாத சமூகத்திற்கு இன்னொரு நல்ல உதாரணம் எனச் செனிவிரத்தின கூறுகின்றார். ‘NATIONS AND NATIONALISM (1983)’ என்ற நூலின் ஆசிரியர் ஏர்ணஸ்ட் ஹெல்னரின் மேற்கோள் ஒன்றைச் செனிவிரத்தின தருகிறார். அம்மேற்கோளின் இலகுபடுத்திய மொழிபெயர்ப்பைக் கீழே தந்துள்ளோம்.

“இமாலயப் பகுதியின் குடியான்கள் (Peasants), பூசாரிகள் – துறவிகள் – சாமியாடிகள் என்னும் பலதரப்பட்ட சமய ஞானிகளுடன் உறவுடையவர்களாய் இருப்பார்கள். அத் தொடர்புகள், சூழல் (Context), ஆண்டின் பருவ கால வேறுபாடுகள் என்பனவற்றுக்கு ஏற்ப வேறுபடும். ஒரு குடியான் எந்தச் சாதியைச் சேர்ந்தவர், எந்தக் குடியில் பிறந்தவர், எந்த மொழியைப் பேசுபவர் என்பதனையும் பொறுத்து இந்த உறவுகளும் வேறுபடும். உதாரணமாக மந்தை மேய்ப்பவர், உழவுத் தொழில் செய்பவர், கைவினைஞர் போன்றோர் தொழிலின் படியான சாதிய அடையாளத்தை உடையவர்களாக இருப்பர். அவர்கள் மொழி என்ற பொதுமைக்குள் அடங்காதவராக ஒருவரை விலக்கி வைத்திருப்பர். ஒருவரது மொழிக் குழுமத்தினரே குறித்த நபரை ‘எம்மவர் அல்ல’ என விலக்கி வைக்கும் நிலை எழலாம். வாழ்க்கைப் பாங்கு (Life Style), தொழில், மொழி, சடங்கியல் நடைமுறைகள் யாவும் ஒருங்கிணைவதில்லை. ஒரு குடும்பத்தின் அரசியல், பொருளாதார இருப்பு, தெளிவற்ற அடையாளங்களைச் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்பத் தந்திரமாகக் கையாள்வதிலேயே தங்கியுள்ளது. தெரிவுகளுக்கான கதவுகள் திறந்தே இருக்கும். அவை மூடி வைக்கப்படுவதில்லை. இமாலயக் குடியான் சமூகங்கள் ‘தேசிய இனம்’ என்ற தெளிவான அடையாளத்தை விரும்பி ஏற்பதோ தமக்கு உள்ளக ஒருமைப்பாடும், வெளியக சுயாட்சியும் (External Autonomy) வேண்டும் என்று கோருவதோ கிடையாது. மரபுவழிச் சமூகப் பின்புலத்தில் பிரதானமான ‘ஒற்றைப் பண்பாட்டு அடையாளம் (Single Overriding Cultural Identity)’ என்ற கருத்து அர்த்தம் உடையதாக இருப்பதில்லை.”

ஏர்ணஸ்ட் ஹெல்னர், 20 ஆம் நூற்றாண்டின் இமாலயப் பகுதிகளின் குடியான் சமூகங்களிற்கு ஒற்றைப் பண்பாட்டு அடையாளம் அர்த்தமுடையதல்ல எனக் குறிப்பிட்டார். இதற்கு மாறாக, பிரதானமான ஒற்றைப் பண்பாட்டு அடையாளம் காலனியத்திற்கு முற்பட்ட இலங்கையில் காணப்பட்டதாக இலங்கையின் தேசியவாதிகள் கருதுகின்றனர். இலங்கையில் காலனியத்திற்கு முற்பட்ட காலத்தில் தோன்றிய இலக்கியப் பனுவல்களில் பௌத்த உணர்வு நிலை (Buddhist Consciousness) வெளிப்படுவது உண்மையே. அவ்வாறே இப்பனுவல்களில் இலங்கை முழுவதையும் ஒரு குடையின் கீழ் உட்படுத்திய மேலாண்மையுடைய சிங்கள – பௌத்த அரசு (Sinhala Buddhist State) என்னும் மாதிரி (Model) பற்றிப் பேசப்படுவதும் உண்மையே. ஆயினும் இவற்றை ஆதாரப்படுத்தும் வலிதான வரலாற்றுச் சான்றுகள் எவையும் கிடையாது என்பதே வரலாற்று ஆசிரியர்களின் முடிவாகும். அத்தோடு நவீனத்திற்கு முந்திய அரசு முறைகள் பற்றிய எமது கோட்பாட்டு அறிவு, அக்கருத்தை ஆதரிப்பதாக இல்லை. அவ்வாறாயின் இலக்கியப் பனுவல்கள் அத்தகையதொரு அரசு பற்றிய சித்திரத்தைத் தருவதன் காரணம் யாது?  தென்னிந்தியாவில் இருந்து வந்த படையெடுப்புகள் இப்பனுவல்களை எழுதியோர்  மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருத்தல் வேண்டும். அதனால் தான் அவர்கள் இவ்வாறாக எதிர்வினையாற்றினர் என ஊகிக்க இடமுள்ளது (பக்.05). நவீன கால வரலாற்றாசிரியர்களில் பலர் கூட, ‘பண்டைய நாளில் இலங்கையில் பௌத்த தேசிய அடையாள உணர்வு இருந்தது; அதனை அடிப்படையாகக் கொண்ட அரசு இருந்தது’ என்று எழுதியிருப்பதையும் செனிவிரத்ன குறிப்பிடுகின்றார். தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகளிலும், இலங்கையிலும் காலனித்துவத்தின் வருகைக்கு முந்திய காலத்தில் அரசுக் கட்டமைப்பு எவ்வாறு இருந்தது, தேசிய அரசு (Nation State) என்ற அமைப்பு பண்டைய நாளில் இருந்திருக்க முடியுமா? என்பதை கோட்பாட்டின் துணையுடன் ஆராய்வதே அறிவு பூர்வமானது என செனிவிரத்தின கூறுகின்றார்.

நவீன தேசிய அரசு அல்லது நேஷன் ஸ்டேட் (Nation State) பற்றிய வரைவிலக்கணத்தை இக்கட்டுரையின் முற்பகுதியில் விளக்கிக் கூறினோம். நேஷன் ஸ்டேட் என்ற மாதிரியில் ‘ முந்து தேசிய அரசு (Proto Nation State)’ இலங்கையில் கண்டி இராச்சியத்தில் தோன்றியது என்றொரு கருத்தை தேசியவாத எழுத்தாளர்கள் கூறுவதுமுண்டு. பேராசிரியர் செனிவிரத்தின அவர்கள் கண்டி இராச்சிய காலத்து அரசு எவ்வாறு இருந்தது என்பதை அடுத்து விளக்குகின்றார்.

கண்டி இராச்சிய காலத்து அரசு

‘நேஷன் ஸ்டேட்’ கோட்பாடு, மத்தியப்படுத்தப்பட்டதும் மேலாதிக்கமுடையதுமான அரசு (Centralised and Hegemonic State) மத்தியில் இருந்தது என்று கூறுகிறது. அந்த மேலாதிக்க அரசு தனது ஆட்சிப்பரப்பில் ஓரினத் தன்மையுள்ள (Homogeneous)  சமூகம் ஒன்றைக் கொண்டிருந்தது என்றும் கூறுகிறது (பக்.06). இத்தகைய தன்மையுடையதாக காலனித்துவத்திற்கு முந்தைய காலத்துக் கண்டி இராச்சியம் இருந்தது என்று கூற முடியுமா என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு விடை கூறும் முறையில், கண்டிய நிலமானிய அரசு அவ்வாறு மத்தியப்படுத்தப்பட்ட மேலாதிக்கமுடைய அரசாகவும் ஓரினத் தன்மையுடைய மக்கள் சமூகத்தை ஆட்சி செய்யும் அரசாகவும் இருக்கவில்லை என்று செனிவிரத்தின கூறுகின்றார் (பக்.06).

கண்டிய அரசு, ‘மண்டல அரசியல் சமூகம் (The Galactic Polity)’ என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது என செனிவிரத்தின கூறுகின்றார். கண்டி இராச்சியத்தில் இரு பிரிவுகள் இருந்தன. இவற்றுள் ‘ரட்ட’ எனப்படுவது ஒரு பிரிவு. ‘ரட்ட’ சிறிய இடப்பரப்பை உடைய சிறு பிரிவுகள். இவை தலைநகரான கண்டியைச் சுற்றி அமைந்திருந்தன. இதனை ஆளும் நிர்வாக அதிகாரியான ‘ரட்டே’ மஹாத்மயாவின் அதிகார எல்லைக்குள் இருந்த பகுதி அரசனின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்தது. அப்பகுதி கண்டி நகருக்கு அண்மையில் இருந்தபடியால் அரசனால் அப்பகுதியை நேரடியாகக் கண்காணிக்க முடிந்தது. கண்டி நகரத்தில் இருந்து தூரத்தே இருந்த பகுதிகளான ‘திசாவனிகள்’ அரசனின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. மிகவும் தொலைதூரத்தில் இருந்தனவும் தனிமைப்படுத்தப்பட்டனவுமான இப்பிரிவுகள், உண்மையில் சுயாட்சியுடைய பகுதிகளாக இருந்தன. இவை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாக விலகி இருந்தன (The More Distant and Isolated of These Divisions Were De Facto Autonomous Domains, Completely Out of the Kings Control – பக். 06).

மேற்கண்டவாறு குறிப்பிடும் செனிவிரத்தின கண்டி இராச்சியத்தில் அரசனின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த ‘ரட்ட’ பிரிவுகளுக்கும், நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத திசாவ பிரிவுகளுக்கும் இடையிலான முக்கிய வேறுபாட்டை எடுத்துக் காட்டுகின்றார். தூரத்தே இருந்த திசாவ பகுதிகள் ஏறக்குறைய சுயாட்சிப் பகுதிகளாகவே இருந்தன. அரசின் இறையாண்மை இப்பகுதிகளில் பெயரளவிலானதாயும், சடங்கியல் தன்மையுடையதாகவும் இருந்தது. இவற்றில் மலாயா மாதிரியில் காணப்பட்டது போன்று சடங்கியல் குறியீட்டு வடிவிலான அதிகாரமே இருந்தது (Like the Malay System, The King Had Ritual and Symbolic Authority (பக். 6-7). இதனை அடுத்து அவர் கண்டி அரசு முறையின் இன்னோர் அம்சத்தையும் எடுத்துக் கூறுகின்றார்.

The ancient and medieval polities of Srilanka were not unitary or ‘Ekiya’ as believed by nationalist elites and relentlessly reiterated in the nationalist media (பக். 07). பண்டைய மத்திய கால அரசுகளை ‘ஒற்றையாட்சி முறை (Unitary System)’ எனக் கூற முடியாது என்பதை மேற்குறித்த ஆங்கில வாக்கியம் எடுத்துக் கூறுகிறது. இலங்கையின் வரலாற்றில் பண்டைக்காலத்திலும், மத்திய காலத்திலும் ஒற்றையாட்சி அரசுமுறை இருந்தது என சிங்களத் தேசியவாத உயர்குழாம் (Nationalist Elite) நம்புகிறது. இதனையே தேசியவாத ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் என்பன நாளும் பொழுதும் அழுத்தம் கொடுத்துத் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றன. இது உண்மைக்கு புறம்பான வரலாற்றுத் திரிபு. வரலாற்றைப் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களும் இந்தப் பொய்ப்புனைவை மாணவர்களின் மனதில் விதைக்கின்றார்கள். இக் கருத்திற்கு ஏற்ற முறையிலே பாடப் புத்தகங்களிலும் வரலாறு எழுதப்பட்டிருக்கின்றது என பேராசிரியர் செனிவிரத்தின குறிப்பிடுகின்றார். இன்று இலங்கையில் உள்ள ஒற்றையாட்சி முறையின் கீழ், மத்தி – மாவட்டம் – உதவி அரசாங்க அதிபர் பிரிவு – கிராம சேவகர் பிரிவு என அதிகாரம் படிப்படியாக மேலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் அதிகாரப் படிமுறை ஒழுங்கமைப்பு (Bureaucratic Hierarchical Organisation) உள்ளது. அத்தகைய ஒழுங்கமைப்பு கண்டி அரசுக் காலத்திலும் இருந்தது என்று எண்ணத்தக்க வகையில் வரலாற்றுப் பாடநூல்கள் எழுதப்பட்டன. விளக்கமாகச் சொல்வதானால் அரசன் – திசாவை – கோறளை – அத்துக்கோறளை – விதானை என ஒரு திட்டவட்டமான தெளிவான அதிகாரப்படிமுறை ஒழுங்கமைப்பு கண்டி இராச்சியத்தில் இருந்தது என்றவாறு மாணவர்களை நம்ப வைக்கும் முறையில் வரலாற்றுப் பாடநூல்கள் ஊடாக போதிக்கப்படுகிறது. இப் பின்னணியில் இலங்கையில் நவீன காலத்தில் சிறுபான்மை இனங்களிற்கு அதிகாரப் பகிர்வு செய்தலும் (Sharing of Power), இலங்கையின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதும் சிக்கலான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது என்பதை பேராசிரியர் எடுத்துக் காட்டுகின்றார்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

6981 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)