தென்னாசியாவில் பல்லினப் பண்பாடு கொண்ட மக்கள் வாழ்ந்து வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இலங்கையின் வரலாறும் பண்பாடு இலங்கைக்கே உரிய தனிப் போக்குடன் வளரவும் உதவியுள்ளது. இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக இடங்களாகவே கருதப்பட்டு வருகின்றன. இவ்விடங்களில் தமிழ் மக்களே அதிகமாக அன்று தொட்டு இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் கூட்டமானது தமக்கென ஒரு பாரம்பரியப் பிரதேசம், மதம், கலை, மொழி, சமூகக் கட்டமைப்பு, கலாசாரம், பண்பாடு என ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்புடனே வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக பலவகைப்பட்ட இலக்கிய, தொல்லியல் சான்றுகள் காணப்படுகின்றன. வடக்கு, கிழக்கு இலங்கையின் தொடக்க கால வரலாறு, ஆதி இரும்பு காலப் பண்பாட்டோடு தொடங்கியமைக்கு பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் தமிழர்கள். இவர்களது தாயகம் தென்னிந்தியாவில் தமிழ்நாடும், ஈழமும் ஆகும். ஈழத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அன்று தொட்டு இன்று வரை தமிழர்களே பெரும்பான்மையானவர்களாக வாழ்ந்து வருவதற்கு பல வரலாற்றுக் காரணங்கள் சாதகமானவையாக அமைந்துள்ளன.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருவதற்கு பின்னணியாக அமைந்த முதலாவது காரணம் இலங்கையின் அமைவிடமாகும். அதாவது இலங்கை தென் தமிழகத்திற்கு அண்மையில் அமைந்திருப்பதனாலும், தென் தமிழகத்துக்கும் வடக்கு, கிழக்கு இலங்கைக்கும் இடையில் ஒடுங்கிய பாக்கு நீரிணை அமைந்திருப்பதனாலும், தமிழகத்தில் காலத்துக்குக் காலம் பேணப்பட்ட பண்பாடு, சம காலத்தில் வட இலங்கையிலும் அதன் தொடர்ச்சியாக கிழக்கிலங்கையிலும் பரவுவதற்கு சாதகமாக அமைந்தது. வட இலங்கை தமிழகத்துடனான உறவின் தொடக்க வாயிலாகவும், இணைக்கும் படியாகவும் இருப்பதனால், அதன் பண்பாடு இங்கு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்து கொண்டது.
ஈழத்தில் கிறிஸ்துவுக்கு முன்னரே தமிழர்கள் ஓர் இனக் குழுவாகவும், தமிழ் மொழியில் பரிச்சயம் பெற்றவர்களாகவும் வாழ்ந்துள்ளனர் என்பதனை ஐந்து பிராமிச் சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. இவற்றில் அனுராதபுரத்தில் கிடைத்த ஒரு சாசனத்தைத் தவிர மீதி நான்கு சாசனங்களும் திருகோணமலை – சேருவில, அம்பாறை – குடுவில், வவுனியா- பெரிய புளியங்குளம் போன்ற வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கிடைக்கப்பெற்றுள்ளன. இப்பகுதிகளில் இன்றும் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழகத்திற்கும், ஈழத்துக்கும் இடையே வணிக நடவடிக்கை காரணமாக, தமிழர்கள் ஈழத்திலிருந்து தமிழகம் சென்று அங்கு சமணத் துறவிகளுக்கு குகைகளைத் தானமாக வழங்கியுள்ளனர். உதாரணமாக திருப்பரங்குன்றம் கல்வெட்டில் ‘ஈழக் குடும்பிகன்’ என்ற வாசகம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதே போன்றுதான் தமிழக வணிகர்கள் ஈழத்தில் பௌத்த துறவிகளுக்கு குகைத் தானம் வழங்கி உள்ளனர். உதாரணமாக வவுனியா பெரிய புளியங்குளம் கல்வெட்டில் தமிழக வணிகனான ‘விசாகன்’ பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சமகாலத்தில் தமிழக வணிகர்களுக்கும் ஈழத்து வணிகர்களுக்கும் பண்பாட்டு, வணிகத் தொடர்புகள் இருந்துள்ளமை தெரிய வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆனைக்கோட்டை என்னும் இடத்தில் மேற்கொண்ட ஆய்வில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த சவ அடக்க குழியொன்றினுள் ஒரு முத்திரை கண்டெடுக்கப்பட்டது. இதில் ‘கோவேத’ எனும் பிராமி எழுத்துப் பொறிப்புக் காணப்படுகிறது. இதிலிருந்து, ஈழத்தில் பெருங்கற்காலப் பண்பாடு நிலவிய காலத்தில் தமிழ் மொழியில் பரிச்சயம் பெற்ற தமிழ் இனக் குழு ஒன்று ஈழத்தில் சமகாலத்தில் வாழ்ந்துள்ளனர் என்பதனை உறுதிபடக் கூற முடியும்.
மன்னார் – கட்டுக்கரையில் வாழ்ந்த மக்கள் இற்றைக்கு 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னரே அயல் நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதற்கு நம்பகரமான தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவற்றிலிருந்து கட்டுக்கரை மக்கள் தொழில்நுட்பத் திறனும், நாகரிக முன்னேற்றமும் கொண்ட மக்களாக வாழ்ந்துள்ளனர் என்பது தெரிகின்றது. இதனை உறுதிப்படுத்தும் முகமாக அங்கு பிற நாட்டு நாணயங்கள், இறக்குமதி செய்யப்பட்ட மண்பாண்டங்கள், கண்ணாடிப் பொருட்கள் என்பன கிடைக்கப்பெற்றுள்ளன. இது தமிழரின் பூர்வீக வரலாறும், பண்பாடும் தொல்லியல் ஆய்வுகளால் வெளிக்கிளம்பியுள்ளன என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நாகபடுவான் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பூர்வீக மக்களது வழிபாட்டு மையம் ஒன்றும், சில புராதன தொன்மங்களும் வெளிப்பட்டிருந்தன. இங்கு அதிகமாக நாக வழிபாட்டினை வெளிப்படுத்தும் நாகச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மற்றும் இங்கு புற்று வழிபாடு காணப்பட்டதற்கான சான்றுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. வட இலங்கையில் இன்றும் நாக வழிபாட்டு மரபு ஆலயங்கள் காணப்பட்டு வருகின்றன. மேலும், நாகர்கள் இலங்கையில் வாழ்ந்த இனக்குழு என்பதற்கான 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு ஆதாரங்கள் பலவற்றை பேராசிரியர் பரணவிதான, சிரான் தெரணியகல ஆகியோர் வெளியிட்டுள்ளனர். நாகபடுவான் என்ற பெயரே நாகத்தை குல மரபாகக் கொண்ட மக்கள் வாழ்ந்ததன் அடையாளம் என்பதை கலாநிதி ரகுபதி அடிக்கோடிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில், இங்கு வாழ்ந்த நுண் கற்கால அல்லது குறுணிக் கற்காலப் பண்பாட்டு மனித வரலாற்றை தொடர்ச்சியாக ஆராயக் கூடிய தொல்லியல் சான்றாதாரங்கள் கிடைத்து வருகின்றன. இப்பண்பாட்டு மக்கள் தொல்லியல், மானிடவியல், வரலாற்று மொழியியல் என்பவற்றால் தமிழகத் திருநெல்வேலி மணற்குன்று நுண்கற்காலப் பண்பாட்டை ஒத்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொல்லியலாளர்கள், வட இலங்கையின் நுண்கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகளுக்கும் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகளுக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை இருப்பதனைச் சுட்டிக்காட்டுகின்றனர். உதாரணமாக, இலங்கையில் பயன்படுத்தப்பட்ட இரு பக்க அலகுடைய நுண்கற்காலக் கல்லாயுதங்கள், தமிழகத்தில் பாம்பன் கடற்கரைக்கு அண்மையில் உள்ள தேரிக்கலாச்சாரத்துடன் – ஒரே பிராந்தியம் எனக் கருதும் அளவிற்கு – ஒற்றுமை கொண்டுள்ளது.
இரும்புக்காலப் பண்பாடு இற்றைக்கு சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் இந்தியத் தீபகற்பத்தின் மேற்குக் கரை வழியாக தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் பரவத் தொடங்கி இருக்கின்றது. இவ்வாறு பரவிய ஆதி இரும்புக்கால மக்கள் வடக்கிலும், கிழக்கிலும் அதிகமாக வாழ்ந்தமைக்கான தொல்லியல் மையங்கள் பல இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதாவது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் வாழ்ந்தாலும், பெருங்கற்காலப் பண்பாட்டுடன்தான் குறிப்பிட்ட பொருளாதாரம், பண்பாடு, பண்டமாற்று முறை, சமயம், கலை என்ற ஓர் சமூகக் கட்டமைப்பு தோன்றியது. இதனை வட இலங்கையில் கந்தரோடை, சாட்டி, ஆனைக்கோட்டை, மன்னார், வன்னியில் சில இடங்களிலும், கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, கதிரவெளி, அம்பாறை போன்ற பகுதிகளிலும் கிடைத்த தொல்லியல் சான்றுகள் உறுதி செய்கின்றன.
பாக்கு நீரிணை, சேது சமுத்திரம் வழியாகத் தமிழ்நாட்டில் இருந்து பரவிய இவ் இரும்புக்கால பண்பாடு நதியோரம் வழியாக இலங்கையின் பல்வேறு இடங்களுக்கும் பரவியது போல், பறங்கியாறு வழியாக வவுனியா மாவட்டத்திலும், ஜான் ஓயா வழியாக கிழக்கிலங்கையிலும் பரவியது. இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பெருங்கற்கால மக்கள் பரவியமை, இன்று இப்பகுதிகளில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்து கொண்டது.
தமிழகத்தை போல் இலங்கையிலும் பெருங்கற்கால மக்களிடையே தமிழ் எழுத்து மொழி பயன்பாட்டில் இருந்ததை பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட பிராமிச் சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதற்கு மட்டக்களப்பு, வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் கிடைத்த மட்பாண்டச் சாசனங்கள் சான்றாகும். பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய மக்கள் பேசிய மொழி, திராவிட மொழி என தொல்லியலாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும், மொழியியலாளர்களும் கருதுகின்றனர். கிறிஸ்துவுக்கு முன் 300 ஆண்டுகளை அடுத்து வருகின்ற வரலாற்றுக் காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சியடைந்ததும், செல்வாக்குப் பெற்றதுமான ஒரு மொழியாகப் பரிணமிப்பதைக் காண முடிகின்றது. இந் நிலமை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் காணப்படுகின்றது. உதாரணமாக, வட இலங்கையில் ஆணைக்கோட்டையில் கிடைத்த முத்திரை ஒன்றில் ஒரு வரி தமிழ்ப் பிராமியிலும் மற்றைய வரி சிந்துவெளிக் குறியீடுகளை ஒத்தும் அமைந்திருந்தன. சாட்டியை அண்டிய பிரதேசத்தில் முதற் சங்க காலம் தொட்டு நாகரிகம் அடைந்த மக்கள் வாழ்ந்ததாக அறிய முடிகின்றது. இதனால், அக்காலத்தில் இலங்கையில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியாவில் வாழ்ந்த திராவிட மொழி பேசிய மக்கள் இனத்தவரே என்னும் கருத்தை சில ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.
வடக்கே பூநகரியிலிருந்து தெற்கே திஸமகாராம வரை எழுத்துக்களோடு கூடிய மட்பாண்டத் துண்டுகள் பல கிடைத்துள்ளன. இவற்றில் குடிப் பெயரான ‘வேள்’ என்பது காணப்படுகிறது. இது பண்டைத் தமிழ் நாட்டில் இருந்த ‘வேள்’ குடியை குறிப்பதாகக் கருதப்படுகின்றது. பண்டைத் தலைநகரமான அனுராதபுரத்திலும், இலங்கையின் பிற பகுதிகளிலும், கிறிஸ்துவுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டில் இருந்து தம்மை ‘தமேத, தமேட’ என அழைத்து கொண்டவர்கள் (தமிழர்கள்) வாழ்ந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. இவ்வாறான கல்வெட்டுகள் வவுனியா மாவட்டத்தில் உள்ள பெரிய புளியங்குளத்தில் இரண்டும், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சேருவிலவில் ஒன்றும், அம்பாறை மாவட்டத்தில் உள்ள குடுவில் என்னும் இடத்திலும் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த மக்கள் வரலாற்றுத் தொடக்கத்தில் இருந்தே கோகர்ண, மாந்தை முதலான துறைமுகங்கள் ஊடாக அயல்நாடுகளுடன் கடல்சார் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது கிறிஸ்துவுக்கு சில நூற்றாண்டுகள் முன்பே இலங்கையின் வட பகுதியின் குதிரைமலை, கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய நகரங்களுக்கும் தமிழ்நாட்டு நகரங்களுக்கும் இடையே தமிழ் வணிகர்கள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். தொல்லியல் ஆய்வுகள் மூலமும், தமிழ்க் காப்பியமான மணிமேகலையின் மூலமும் யாழ்ப்பாண குடா நாடு முத்து, சங்கு போன்ற கடல் பொருட்களுக்கான பன்னாட்டுச் சந்தையாக இருந்ததும் தமிழ் வணிகர்கள் இங்கே வணிகத்தில் ஈடுபட்டிருந்ததும் தெரிய வருகின்றது. கிறிஸ்துவுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டில் தமிழர்கள் தோணிகளில் இலங்கைக்கு குதிரைகளைக் கொண்டு வந்தமைக்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன.
தமிழ்நாட்டில் தோன்றிய பக்தி இலக்கியத்தின் செல்வாக்கால் இந்து, பௌத்த மதங்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடுகளினாலும் அதனைத் தொடர்ந்து உருவான இன உணர்வுகளினாலும் இலங்கையில் இன முரண்பாடுகள் ஏற்பட்டன. இதனால் இலங்கையில் பரந்து வாழ்ந்த தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு இலங்கையில் வாழ்வதை பாதுகாப்பாகக் கருதத் தொடங்கினார்கள். பாதுகாப்பு ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், இலங்கைத் தமிழர்கள் மொழி, மதம், பண்பாடு, வாழ்க்கை முறை என்பவற்றில் தமிழக மக்களோடு நெருங்கிய வகையில் ஒற்றுமை கொண்டு இருந்ததனால் தமிழகத்துக்கு அண்மையில் உள்ள வடக்கு, கிழக்கு இலங்கையில் வாழ்வதை விரும்பினர்.
நாயன்மார்கள் கிழக்கு இலங்கையில் கோணேஸ்வரர் ஆலயத்தையும், வட இலங்கையில் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தையும் போற்றிப் பாடியமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சம்மந்தர், திருக்கோணேஸ்வரம் பற்றிப் பாடுகின்ற போது தமிழ் குடிகள் செறிந்து வாழ்கின்ற ஒரு பிரதேசம் என்று பாடுகிறார்.
தமிழகத்தில் ஏற்பட்ட பல்லவ ஆட்சியோடுதான் தமிழகத்தின் இயற்கை எல்லைகளை தாண்டி இலங்கை மீது படையெடுப்புகளும், அரசியல் தொடர்புகளும் தோற்றம் பெற்றன. வணிகக் கணங்கள் தோற்றம் பெற்று அவர்கள் இலங்கையிலும், கிழக்காசியாவிலும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவ்வணிகக் கணங்கள் எங்கெங்கு செயற்பட்டனவோ அந்த இடங்களிலே வழிபாட்டு ஆலயங்களும் அமைக்கப்பட்டன. பல்லவ கால அரசியல் தலையீடு, வணிகக் கணங்களின் செல்வாக்கு, பக்தி இயக்கத்தின் செல்வாக்கு முதலான காரணங்களினால் வடக்கு, கிழக்கு இலங்கையில் பல்லவ மரபை ஒத்த கலை மரபு தோற்றம் பெற்றது. உதாரணமாக திருக்கோணேஸ்வரத்திலும், திருக்கேதீஸ்வரத்திலும் கிடைத்த தொல்பொருள் சான்றுகளில் சில பல்லவர் காலத்துக்குரியதாக காணப்படுகின்றன. வடக்கு, கிழக்கு இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்வதற்கு பல்லவரின் செல்வாக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
கிறிஸ்துவுக்கு முன் மூன்றாம் நூற்றாண்டில் இலங்கைக்கு பௌத்த மதம் பரவிய போது அது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பரவியது. இதை உறுதிப்படுத்தும் பிராமிச் சாசனங்கள் பௌத்த மொழியான பிராகிருதத்தில் எழுதப்பட்டது. அவற்றில் தமிழ் பிராமி எழுத்தும், தமிழ் மொழியும் கலந்து எழுதப்பட்டமை, தமிழர்களும் பௌத்த மதத்தைப் பின்பற்றியமைக்குச் சான்றாகும். அதாவது இலங்கையில் வட இந்தியாவில் இருந்து வட பிராமி எழுத்தும், பிராகிருத மொழியும் அறிமுகமாவதற்கு முன்னரே, தமிழகத்தைப் போல் பெருங்கற்கால பண்பாட்டின் முதிர்ச்சி நிலையால் இங்கு தமிழ்ப் பிராமி எழுத்தும், தமிழ் மொழியின் பயன்பாடும் தோன்றியிருந்தன. இலங்கையின் பிராமிக் கல்வெட்டுகளின் மொழி பிராகிருதமாக இருப்பினும், அம்மொழியில் பல தமிழ்ச் சொற்கள் கலந்து காணப்படுவதுடன், தமிழ் மொழிக்கே உரிய தனித்துவமான சிறப்பு எழுத்துக்களான ‘ற, ன, ள, ழ’ ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளமையைக் காண முடிகின்றது. இதற்கு உதாரணமாக வல்லிபுரப் பொற்சாசனத்தைக் குறிப்பிடலாம்.
சோழரின் நேரடி ஆட்சியில் இருந்து தமிழரின் வரலாறும், பண்பாடும் வடக்கு – கிழக்கில் தனிப் போக்குடன் வளர்ந்தது. அதாவது பல்லவரோடு ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி நிலை சோழர் காலத்தில் அதிகரித்துக் காணப்பட்டது. சோழர் 993 இல் பொலநறுவையைத் தலைநகரமாகக் கொண்டு 77 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். அரச மொழியாக தமிழ் மொழியும், அரச மதமாக இந்து மதமும் காணப்பட்டது. இவர்களுடைய ஆட்சியின் செல்வாக்கு வடக்கு, கிழக்கு இலங்கையில் அதிகமாகக் காணப்படுகின்றது.
சோழர் ஆட்சியில், திருகோணமலை ஒரு உப தலைநகரமாக அமைந்திருந்தது. அவர்களுடைய அரசியல், இராணுவ, நிர்வாக நடவடிக்கைகள் திருகோணமலையை மையப்படுத்தியதாகக் காணப்பட்டது. இதனால் பொலநறுவையைக் காட்டிலும் சோழரின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் செல்வாக்கு வடக்கு, கிழக்கு இலங்கையில் அதிகரித்தது. மேலும், சோழர் ஆட்சி தொடர்பான பெரும்பாலான கல்வெட்டுகள் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சோழர் கால தமிழ்க் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதிக நாணயங்களும் இப்பிரதேசங்களில் கிடைக்கப்பெற்றன. பேராசிரியர் அரசரட்ணம் அவர்கள், “1070 இல் சோழர் ஆட்சி இலங்கையில் முடிவுற்றாலும் இவர்களுடைய ஆட்சியில் வாழ்ந்த வணிகர்கள், கலைஞர்கள், பிராமணர்கள், படைவீரர்கள் என்பவர்கள் சோழராட்சி முடிந்ததன் பின்னரும், தமிழகம் திரும்பிச் செல்லாது, இலங்கையிலே நிரந்தரமாக தங்கிக் கொண்டனர்” என்கிறார்.
சோழராட்சி முடிந்ததன் பின்னர், சிங்கள மன்னர்கள் பொலநறுவையை ஆட்சி செய்தாலும் அரசையும், அரச மதமான பௌத்தத்தையும் பாதுகாக்கின்ற பொறுப்பு தமிழ்ப் படை வீரர்களிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனால் பௌத்த மதத்தோடு இந்து மதத்தையும் சிங்கள மன்னர்கள் ஆதரித்தார்கள். கந்தளாயில் சோழர் ஆட்சியில் அமைக்கப்பட்ட ‘ராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்’, முதலாம் விஜயபாகு காலத்திலே ‘விஜய ராஜ சதுர்வேதி மங்கலம்’ என பெயர் மாற்றப்பட்டு, அதற்கு வேண்டிய நன்கொடைகள் செய்யப்பட்டன. வடக்கு, கிழக்கு இலங்கையில் பெரும்பாலான மக்கள் தமிழ் மொழி பேசியதால், அவர்களுடனான நிர்வாகத் தொடர்புகளை தமிழிலே மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, சிங்கள மன்னர்கள் தமிழில் பல கல்வெட்டுகளை வெளியிட்டார்கள். இதற்கு உதாரனமாக முதலாம் விஜயபாகு, கஜபாகு, பராக்கிரமபாகு போன்றோர்களின் தமிழ்க் கல்வெட்டுகளை குறிப்பிடலாம். பராக்கிரமபாகு வெளியிட்ட தமிழ்க் கல்வெட்டு நயினாதீவில் கண்டுபிடிக்கப்பட்டது.
1215 இல் ஏற்பட்ட கலிங்கமாகனது ஆட்சி சிங்கள மக்களுக்கு பாதகமாகவும் தமிழர்களுக்கு சாதகமாகவும் இருந்ததால், சிங்கள மக்கள் தென் இலங்கைக்கு புலம்பெயர்ந்த போது, வடக்கில் (கலிங்கமாகன்) சாவகன் தலைமையில் தமிழர் சார்பான அரசு தோன்றியது. கலிங்கமாகன் சிங்கள மக்களின் வயல்கள், மந்தைகள், குடியிருப்புகள் போன்றவற்றைப் பறித்து படைவீரர்களுக்கு நன்கொடையாகக் கொடுத்தான் என சூளவம்சம் கூறுகின்றது. இவனுடைய புதிய ஆட்சியினால் காலப்போக்கில் சிங்கள மக்களும் சிங்கள இராசதானியும் தெற்கு நோக்கி நகர்ந்தது. தமிழர்களுக்குச் சார்பாக இந்த அரசு, திருகோணமலை உள்ளிட்ட வட இலங்கையின் பெரும் பகுதியை உள்ளடக்கி இருந்ததை பாளி, சிங்கள இலக்கியங்களில் இருந்து அறிய முடிகின்றது. கலிங்கமாகனது அரசு திருகோணமலை, மாதோட்டம், ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம் உள்ளடங்கிய இடங்களில் செல்வாக்குப் பெற்றிருந்தது.
13 ஆம் நூற்றாண்டில் தோன்றிய யாழ்ப்பாண அரசு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழர்களை அரசியல் ஆதிக்கத்தாலும், திருமண உறவாலும், பண்பாட்டாலும் ஒன்றுபட வைத்தது. அதாவது கலிங்கமாகன், சாவகன் ஆட்சியை தொடர்ந்து யாழ்ப்பாண நல்லூரை தலைநகராகக் கொண்டு ஆரியச் சக்கரவர்த்திகளுடைய அரசு உருவாகியது. சாவகனை வெற்றி கொண்டு அவனுடைய மகனை ஆட்சியில் அமர்த்திய பாண்டியப் படைப் பிரதானிகளான ஆரியச் சக்கரவதிகளே நல்லலூரைத் தலைநகராகக் கொண்ட ஆட்சியை உருவாக்கினார்கள். இவ்வரசு 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ஏறத்தாழ 150 ஆண்டுகாலம் நிலைத்திருந்தது. இவ் ஆட்சியின் ஆதிக்கம் வட இலங்கை, வன்னி பெரு நிலப்பரப்பு, திருகோணமலையின் பெரும் பகுதி போன்ற பிரதேசங்களை உள்ளடக்கியதாக இருந்தது.
திருமணக் கலாசார தொடர்புகளினால் மட்டக்களப்பிலே உள்ள பிரதேசங்களுடன் நல்லுறவு காணப்பட்டது. இடையிலே பல தமிழ் வன்னிச் சிற்றரசர்களின் ஆட்சி இடம் பெற்றது. ஆகவே கலிங்கமாகன் ஆட்சியைத் தொடர்ந்து வட இலங்கையில் தோன்றிய யாழ்ப்பாண அரசும் தமிழர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழ்வதற்கு அடிப்படையாக அமைந்தது.
ஐரோப்பியர் ஆட்சியில் வடக்கு, கிழக்கு நிர்வாக ரீதியாக ஒரு பிராந்தியமாகக் கணிக்கப்பட்டது. ஒல்லாந்தர் இம் மாகாணங்களில் தமது நாணயங்களை தமிழில் வெளியிட்டமை இதற்கு மேலும் ஒரு சான்றாகும். விரிவாக நோக்கும்போது, போத்துக்கேயர் இலங்கை வந்த போது இலங்கையில் கண்டி, கோட்டை, யாழ்ப்பாணம் என மூன்று அரசுகள் இருந்தன.
போத்துக்கேயரின் பின் வந்த ஒல்லாந்தர் ஆட்சியில் கூட வடக்கும், கிழக்கும் தமிழர் பிரதேசமாகக் காணப்பட்டது. ஆனால், 1796 இன் பின் பின்னர் ஒல்லாந்தரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய பிரித்தானியர் 1815 இல் கண்டியையும், 1811 இல் வன்னியையும் கைப்பற்றியதை அடுத்து, முழு இலங்கையும் பிரித்தானியருடைய ஆதிக்கத்தின் கீழ் உட்பட்டது. ஆயினும் வடக்கு, கிழக்கு இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசமெனவே ஆங்கிலேயருடைய ஆவணங்கள் கூறுகின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அன்று தொட்டு இன்று வரை பெரும்பான்மையாக வாழ்ந்து வருவதற்கு இவ்விரு பிரதேசங்களினதும் ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு கொடுத்த முக்கியத்துவமே காரணம் எனலாம். மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு இலங்கையில் பெரும்பான்மையாக தமிழர்கள் அன்று தொட்டு இன்று வரை வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உசாத்துணைகள்
- சிற்றம்பலம்.சி.க., 2001, ஈழத்தமிழர் தொன்மை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்- இலங்கை.
- சிற்றம்பலம்.சி.க., 1994, ஈழத்தமிழர் வரலாறு, தொகுதி- 01, (கி.பி 1000 வரை), இந்துக்கல்லூரி சாவகச்சேரி.
- சிற்றம்பலம்.சி.க., 1982, தொல்லியல் ஆய்வும் ஆதிக்குடிகளும், யாழ் பல்கலைக்கழகம்.
- சிற்றம்பலம்.சி.க., 2000, பண்டைய ஈழத்தில் தமிழர் ஒரு பன்முகப்பார்வை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
- சிற்றம்பலம்.சி.க., 1992, யாழ்ப்பாண இராச்சியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு.
- புஷ்பரட்ணம்.ப, 2006, இலங்கையில் தமிழர், குமரன் புத்தக இல்லம்.
- புஷ்பரட்ணம்.ப, 1993, பூநகரி தொல்லியல் ஆய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு.
- புஷ்பரட்ணம்.ப, 2003, பண்டைய இலங்கையில் தமிழும் தமிழரும், கொழும்புத் தமிழ்ச் சங்கம்.
- புஷ்பரட்ணம்.ப, 2002, தொல்லியல் நோக்கில் ஈழத்தமிழர் பண்டைய கால மதமும் கலையும், குமரன் புத்தக இல்லம்.
- புஷ்பரட்ணம்.ப, கட்டுக்கரை தொல்லியல் மேலாய்வு மற்றும் அகழாய்வுகளின் முக்கியத்துவம்.
- புஷ்பரட்ணம்.ப, வன்னியின் வரலாறும் பண்பாடும் அண்மைக்கால தொல்லியல் கண்டுபிடிப்புக்களைக் கொண்ட ஆய்வு.
- புஷ்பரட்ணம்.ப, தமிழர்கள் நாக இனக்குழுவின் வழித்தோன்றல்கள் என்பதை உறுதிப்படுத்தும் பூநகரி, நாகபடுவான் தொல்லியல் ஆய்வுகள்.
- கிருஷ்ணராஜா.செ, 2012, இலங்கையின் பண்பாட்டு அடிப்படைகள், AB creator and publishers.
- கிருஷ்ணராஜா.செ, 1998, தொல்லியலும் யாழ்ப்பாண தமிழர் பண்பாட்டுத் தொன்மையும், வரலாற்றுத் துறை யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.
- கிருஷ்ணராஜா.செ, கிளிநொச்சியின் பண்பாட்டுத் தொன்மையும் தொல்லியல் மூலங்களும்.
- இந்திரபாலா.கா, 2006, இலங்கையில் தமிழர், குமரன் பதிப்பகம்.
- நடராசா.வே.க, 1969, பண்டைய ஈழம், சேது நூலகம்.
- நடராசா.வே.க, 1973, பண்டைய ஈழம், சேது நூலகம்.
- நடராசா.F.X.C., 1956, இலங்கை சரித்திரம் ஒல்லாந்தர் காலம் 1658-1796, கலைமகள் கம்பெனி
- நடராஜன்.சோ, 1942, இலங்கையின் பூர்வீக சரித்திரம், The Colombo Apo the cary co, LTD
- மெண்டிஸ்.ஜி.ஸி., 1933, இலங்கையின் பூர்வீக சரித்திரம், MADRAS LAW JOURNAL press, myapore, ADRS
- குணராசா, 1987, ஈழ தமிழர் வரலாறு, பூபாலசிங்கம் பதிப்பகம்.
- ரகுபதி.பொ, 1983, பெருங்கற்கால யாழ்ப்பாணம், வரலாற்றுத் துறை யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.
- லூயிஸ்.ஜே.பி, 2012, இலங்கையின் வன்னி மாவட்டங்கள் ஒரு கையேடு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயப் பரிபாலன சபை.
- தங்கேஸ்வரி.க, சுவாமி விபுலானந்தரின் தொல்லியல் ஆய்வுகள், அன்பு வெளியீடு.
- சிவரூபி.ச, இலங்கையில் தமிழ் அரச மரபின் உருவாக்கம் தொடக்கம் – அண்மைக்கால தொல்லியல் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு.