பாட்டாளி வர்க்க, விடுதலைத் தேசியப் புரட்சிகள்
Arts
18 நிமிட வாசிப்பு

பாட்டாளி வர்க்க, விடுதலைத் தேசியப் புரட்சிகள்

October 10, 2024 | Ezhuna

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம், மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல. சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதினின்றும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக ‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்’ என்ற இத்தொடர் அமைகிறது.

மிக நீண்டநெடிய காலச் சுழற்சியுடன் இயங்கியவாறுள்ள இந்தப் பூமிப் பந்தின் மிகக் குறுகிய இலட்சம் வருடங்களுக்கான வாழ்வைப் பெற்ற ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் மனிதர்களான நாம் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பூமிப் பந்தின் அனைத்துத் திசைகளிலும் பரந்து வியாபித்து ஆட்சி செலுத்தும் சக்தியாக ஆகியிருந்தோம். மிகச் சில நூற்றாண்டுகளில் தோற்றம்பெற்று விருத்தியடைந்த மூலதனம் பூவுலக நாடுகள் அனைத்தையும் ஒரு கிராமம் போல ஒருங்கிணைத்துக் கொண்டது. மூலதன விருத்தியின் நல்ல பல அம்சங்களுக்கு அப்பால், அதன் அபகரிப்பு வாயிலாக வாழ்வியல் கேடுகளை வளர்த்து வரும் ஏகாதிபத்தியத் திணையை முறியடித்து உலகம் பொதுவுடமை வாழ்நெறிக்கு மாற்றம்பெற என 1917 ஒக்ரோபரில் ருஷ்யப் புரட்சி வாயிலாக உதயமான சோவியத் யூனியன் மூலமாக எடுக்கப்பட்ட எத்தனங்கள் சில தசாப்தங்கள் நீடித்திருந்து 1991 ஆம் ஆண்டில் வீழ்த்தப்படலாயிற்று. இன்னமும் சமத்துவ நெறியைக் கட்டியெழுப்பும் முயற்சியில் ஒவ்வொரு தேசமும்!

கடந்த மாதம் (செப்ரம்பர், 2024) இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியுள்ள ‘தேசிய மக்கள் சக்தி’ (தே.ம.ச.) தனக்கான ஒரு வழிமுறை ஊடாக எமது தேசத்தை சமத்துவம் நோக்கித் திசைமுகப்படுத்த முயல்வதாக அதனது கொள்கைப் பிரகடனத்தில் தெரிவித்துள்ளது. முன்னதாக ருஷ்ய, சீன, கியூபப் புரட்சிகள் ஆயுதப் போராட்டம் வாயிலாக சோசலிசப் பாதையை முன்னெடுத்தது போல 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் , 1987 – 1989 ஆகிய இரு தடவைகளில் முயற்சிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் வாயிலாக மாற்றத்தைச் சாத்தியப்படுத்த எண்ணியிருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) என்ற அரசியல் கட்சியின் தலைமையில் கட்டியெழுப்பப்பட்ட வெகுஜன அமைப்புத் தான் தே.ம.ச. (என்.பி.பி.). இன்றைய தே.ம.ச. மீது நம்பிக்கையீனத்தையும் கடும் விமரிசனங்களையும் முன்வைப்பவர்கள் ஜே.வி.பி. இன் நீடிப்பாக இந்த அமைப்பை இனங்காணும் தவறுடன் உள்ளனர். அரைநூற்றாண்டு காலம் இயங்கிய ஜே.வி.பி. தனக்கான சொந்த அனுபவங்களின் பேறாக மட்டுமன்றி மாறிவரும் உலகச் செல்நெறிக்கு அமைவாகத் தனது வேலைப் பாணியையும் ஸ்தாபனக் கட்டமைப்பையும் மாற்றிக்கொண்டுள்ளது என்பதனைக் கவனங்கொள்வது அவசியம்.

இத்தகைய பண்புரீதியான மாற்றம் ஏற்படக் காரணமாகும் வண்ணம் உலகப் புரட்சிச் செல்நெறியில் ஏற்பட்ட மாற்றத்துக்கான வரலாற்றுத் திருப்புமுனை முழுமையாகக் கண்டு காட்டப்படுவதில்லை. சோவியத் யூனியனிலும் மக்கள் சீனத்திலும் ஏற்பட்ட (முறையே வலது, இடது) தவறுகளைத் திருத்தும் வகையிலான பண்பு மாற்றத்தை ‘21 ஆம் நூற்றாண்டு சோசலிசம்’ என தென்னமெரிக்க மார்க்சியர்கள் அடையாளப்படுத்துகின்றனர். இரு பெரும் தேசங்களும் ஜனநாயக – மத்தியத்துவக் கோட்பாட்டை பிரயோகிப்பதாகக் கூறிய போதிலும் கட்சி மேலிட மையத்தின் சர்வாதிகாரமே செயற்பாட்டில் இருந்து (மேலிருந்து கீழ்நோக்கிய திணிப்புக்கு அப்பால்) வந்தது; ஜனநாயக அடிப்படையில் ‘கீழிருந்து மேல் நோக்கிய’ கொள்கை வகுப்பும் நடைமுறையும் கையாளப்படாமையே சோவியத் யூனியனதும் மக்கள் சீனத்தினதும் பின்னடைவுகளுக்கான அடிப்படைக் காரணம் என தென்னமெரிக்க மார்க்சியர்கள் சுட்டிக்காட்டுவர். இதற்கப்பால் சமூக மாற்றப்  புரட்சிகர சக்திக்கு உரியதாக ஏற்பட்ட பண்பு ரீதியிலான மாற்றம் பற்றிப் போதிய கவனத்தை அவர்கள் வெளிப்படுத்தத் தவறிய போதிலும் இந்த அடிப்படை மாற்றப் பிரயோகத்துடன் தத்தமது விடுதலைத் தேசிய அரசியல் செல்நெறியில் இயக்கம் கொள்வதனால் தென்னமெரிக்க நாடுகள் பலவும் குறிப்பிடத்தக்க சாதனைகளை இன்று வெளிப்படுத்தி வருகின்றன.

தே.ம.ச. இனை வழிநடாத்தும் ஜே.வி.பி. உம் கூட வரலாற்றுப் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தை முழுமையாக உள்வாங்கவில்லை; இந்த மாற்றத்துக்கு உரியதான அரசியல் சாராம்சத்தை விளங்கிக் கொள்ளவில்லை. அதேவேளை 21 ஆம் நூற்றாண்டு சோசலிச முன்னெடுப்பு என்ற பொருளாதாரக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படுகின்ற மாற்றியமைத்தலைச் செயலாக்க இயலும் என்ற நம்பிக்கையுடன் ஆட்சிப் பொறுப்பைக் கையேற்றுள்ளனர். முந்திய ஜே.வி.பி. இன் வறட்டுத்தனமான நிலைப்பாடுகளைக் கைவிட்டு அணிசேராக் கொள்கைப் பிரயோக அடிப்படையில் அனைத்து நாடுகளுடனும் நட்புறவு கொள்ளும் முயற்சியில் தே.ம.ச. ஈடுபடத் தொடங்கியுள்ளது. புவியரசியலுக்கான ஒரு கூர்முனையாகவுள்ள இலங்கையை சீனத்தின் சார்பில் முன்னெடுக்க முனைந்து மற்றைய இரு பிரதான வல்லரசுகளான இந்தியாவையும் ஐக்கிய அமெரிக்காவையும் பகைக்கும் தவறினை இவர்கள் மேற்கொள்வர் எனும் வலதுசாரி அரசியல் ஆய்வாளர்களது ஆரூடம் இவ்வகையில் பொய்ப்பிக்கப்படவுள்ள வாய்ப்பே நிலவுகிறது!

அதற்காக ஐக்கிய அமெரிக்கா – இந்தியா என்பன ஒன்றிணைந்து செயற்படும் ஏகாதிபத்தியத் திணையானது இவர்களது இடதுசாரித்துவ முன்னெடுப்பை தொடர்ந்து அனுமதிப்பார்கள் என்பதற்கில்லை. இவர்களது வெற்றியைச் சாத்தியமற்றதாக ஆக்கித் தமக்கு உவப்பான தரப்பை அரியாசனமேற்ற அவர்கள் விரும்பிய போதிலும் மக்களின் கோபக் கொந்தளிப்புக்கு இடமளித்து இடைக்கால மாற்றம் ஏற்பட வாய்ப்பளித்துள்ளனர்; 2019 ஆம் ஆண்டிலும் இது போன்று மக்கள் உணர்வுக்கு இடமளித்ததன் வாயிலாகச் சந்தர்ப்பவாத மொட்டுக்கட்சி ஆட்சிப்பீடமேற அனுமதித்த போதிலும் இரண்டு வருடங்களிலேயே அதனை விரட்டியடித்தனர் என்பது கவனிப்புக்கு உரியது. மக்கள் நலத்தைவிடவும் தமக்கான கொள்ளையடித்தலில் அதிக ஆர்வம் காட்டிய மொட்டுக் கட்சி போல தே.ம.ச. இல்லை; ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்காமல் புதிய உலக ஒழுங்குக்கு உட்பட்ட வரையறைக்குள் செயற்பட்டுக் கொண்டே இலங்கைப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் உறுதியுடன் உள்ள தே.ம.ச. அதற்கமைவான தெளிந்த கொள்கைப் பிரகடனத்தையும் ஸ்தாபனக் கட்டமைப்பையும் கொண்டுள்ளது. மாற்றத்துக்கான பற்றுறுதி உடன் இளைஞர்கள் – மாணவர்கள் இடையிலும் கிராமிய மக்களிடையிலும் நீண்ட காலமாக அரசியல் களமாடி வருகின்ற ஒரு அமைப்பின் தலைமையில் தே.ம.ச. இயங்கி வருகிற காரணத்தால் மொட்டுக் கட்சியைப் போல பொலுபொலுவென இவர்கள் வீழ்ந்துவிட மாட்டார்கள். 

அதேவேளை, தமது வீழ்ச்சிக்கு உரிய ஒரு இடைவெளியை விட்டுவைத்துள்ளனர்; மாற்றத்துக்கான புதிய பொருளாதார உலக ஒழுங்கு என்பது விடுதலைத் தேசங்கள் தம்மிடையே கொண்டும் கொடுத்தும் ஊடாடியபடி ஏகாதிபத்தியப் பிணைப்பைத் தகர்ப்பதுடன் தொடர்புடையது. விடுதலைக்கான இந்த மாற்றத்தை 1994 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா வெற்றியீட்டியதன் வாயிலாக (அதுவரை நிலவிய யுத்த வெறிக்குரிய ஐ.தே.க. ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலமாக) ஏற்பட்ட மாற்றத்துடன் ஒப்புவமையாக்கிப் பார்க்கின்றவர்கள் இருக்கின்றார்கள். பூகோளமயமாகும் அன்றைய உலக ஒழுங்குப் பிரகாரம் திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தி ஏகாதிபத்தியத்தின் வேட்டைக்காடாக எமது நாட்டைக் கொள்ளையடிக்க 1977 ஆம் ஆண்டு முதலாக அனுமதித்த ஐ.தே.க. அரசை முறியடித்து ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா அத்தகைய பொருளாதார உறவை மாற்றுவதற்கு எத்தகைய முயற்சியையும் மேற்கொள்ளத்தக்க வாய்ப்பைப் பெற்றிருக்கவில்லை. இன்றும் மிக மோசமான சந்தர்ப்பவாத முன்னெடுப்பில் மக்கள் விரோத சக்திகளுக்கு உதவுவதைப் போலவே அப்போதும் ‘மனித முகத்துடன் கூடிய உலகமயமாதல்’ பற்றியே அக்கறைப்பட்டார். மாறாக, டொலரின் மேலாதிக்கம் தகர்க்கப்பட்டு தேசங்கள் இடையே சமத்துவ ஊடாட்டத்தை வளர்க்கும் வகையில் இரு தரப்பினரும் ‘வெற்றி – வெற்றி’ எனத்தக்க வர்த்தக உறவைச் சாத்தியப்படுத்துகிற வகையில் ஏற்பட்டு வருகின்ற புதிய உலக ஒழுங்கு இன்று ஏற்பட்டு வருகிறது; இதனுடன் ஒப்பிடத்தக்கதாக 1970 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மாற்றம் அமைந்திருந்தது. அப்போது அணிசேராக் கொள்கையுடன் இயங்கிய, முன்னதாக ஒடுக்கப்பட்ட காலனித்துவ நாடுகளாக இருந்து விடுதலை பெற்ற எமது தேசங்கள் சுயசார்புப் பொருளாதாரத்தை முன்னெடுத்தன. அதனுடனேயே இன்றைய இருப்பை ஓரளவேனும் ஒப்பிட இயலும். அந்தச் சுயசார்புப் பொருளாதார முன்னெடுப்புக்கு சோவியத் யூனியன் பின்னணிப் பலம் வழங்கியது – இன்றைய தேசங்கள் இடையே சமத்துவ எத்தனிப்புக்கு மக்கள் சீனம், ருஷ்யா என்கிற இரு ஏகாதிபத்திய எதிர்ப்புத் தேசங்களின் தலைமையிலான ‘BRICS’ அமைப்பு வலுச் சேர்ப்பதாய் உள்ளது!

பாட்டாளி வர்க்கம் முன்கையெடுக்கும் சமூக மாற்றச் செயலொழுங்கில் இருந்து தேசங்கள் சமத்துவத்தைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் இந்தப் புதிய மாற்றம் வேறுபட்ட அடிப்படைகளைக் கொண்டது; இது உலகுக்கொரு புதுமை. இவ்வகையில் ஏறபட்டுள்ள அடிப்படையான அரசியல் வடிவ மாற்றத்தைக் கவனங்கொள்ளாமல் தேசிய இனப்பிரச்சினை என எதுவும் இல்லையெனப் பாராமுகமாக இயங்கும் இடம் அதனது வீழ்ச்சிக்கான தொடுபொறியில் தொங்குவதன் பாற்பட்டதாகும். ஏற்பட்டு வந்த வரலாற்றுச் செல்நெறி மாற்றத்தைப் புரிந்து கொள்வதன் வாயிலாக இதன் பாரதூரத் தன்மை குறித்துக் காண இயலும்!

சுக்கானும் மாற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய பாரிஸ் கொம்யூன்

முதலாளித்துவம் உலக நாடுகள் அனைத்தையும் மூலதனத்தின் ஆளுகைக்குள் உட்படுத்தியது என்றால் அதற்கான முழுமைப்பட்ட ஆட்சி வடிவத்தை ஏற்படுத்திக் கொண்டது 1789 ஆம் ஆண்டில் வெற்றிபெற்ற பிரான்சியப் புரட்சி வாயிலாகத் தான். தொடர்ந்தும் வர்க்கப் போராட்டத்தின் குவிமையமாக பிரான்ஸ் இருந்தது. அங்கு முதலாளித்துவ ஆட்சி எதிர் நோக்கிய அரசியல் நெருக்கடிகளுடன் பாட்டாளி வர்க்கம் தனக்கான அதிகாரத்தை வென்றெடுக்கும் வர்க்கப் போராட்ட வளர்ச்சியில் 1848 ஆம் ஆண்டு முதலாக முன்னெடுத்து வந்த போராட்ட அனுபவங்கள் குறித்து ‘பிரான்சில் உள்நாட்டுப் போர்’ என கார்ல் மார்க்ஸ் முக்கியத்துவமிக்க நூலொன்றை எழுதி இருந்தார். அத்தகைய வர்க்கப் போராட்ட முனைப்புடன் இருந்த 1848 ஆம் ஆண்டில் தான் மார்க்சும் ஏங்கெல்சும் இணைந்து எழுதிய ‘கொம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ வெளிவந்தும் இருந்தது. பின்னர் ஏற்பட்ட பாட்டாளி வர்க்கப் புரட்சிகளது அனுபவங்கள் ‘கொம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ இல் மாற்றங்களைக் கோரிய போதிலும் உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கு உரிய அடிப்படை நூலென்ற வகையில் அதன்மீது தலையீடு செய்யாமல் புதிய பதிப்புகளுக்கான முன்னுரைகளிலேயே தேவைப்பட்ட விருத்திகளைக் குறிப்பிட்டு வந்தனர். பாரிய திருத்தம் ஒன்றுக்கான அவசியம், 1871 ஆம் ஆண்டில் பாட்டாளி வர்க்கம் பாரிஸ் நகரைக் கைப்பற்றி இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தனது ஆட்சியைக் கொண்டு நடாத்திய ‘பாரிஸ் கம்யூன்’ வீழ்ச்சியினால் ஏற்பட்டிருந்தது. ஏற்கனவே நிலவி வந்த சுரண்டும் வர்க்கத்துக்கு உரியதான அரசு யந்திரத்தைத் தகர்த்தெறிந்து தனக்கான புதியதொன்றைப் பாட்டாளி வர்க்கம் உருவாக்க வேண்டும் என்பதையும் ‘கொம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ இன் புதிய பதிப்பைக் கண்டபோது பதிப்புரையிலேயே வலியுறுத்தி இருந்தனர்.

பிரித்தானியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் அங்கு மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில் ‘மூலதனம்’ நூலை கார்ல் மார்க்ஸ் எழுதியிருந்தார்; ஜேர்மன் மொழியில் எழுதப்பட்ட அந்த நூலின் முதலாம் பாகம் வர்க்கப் போராட்டக் கொந்தளிப்புடன் அதுவரை இருந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளின் எந்த மொழிகளிலும் அல்லாமல் ருஷ்ய மொழியிலேயே முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்டமை புரட்சி அலை கிழக்கு நோக்கி நகர்வதனை உணர்த்துவதாக அமைந்தது. ‘கொம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ இல் பிற்போக்கின் தலைமைக் கேந்திரங்களில் ஒன்றாகச் சுட்டிக்காடப்பட்டு இருந்த ருஷ்ய ஆட்சியாளரான ஜார் மன்னன் புரட்சியின் கைதியாக மாறிவிட்டார் என்பதனை மார்க்ஸ் குறிப்பிடத் தவறவில்லை. மார்க்சின் மறைவுக்குப் பின்னர் ‘பிரான்சில் வர்க்கப் போராட்டம்’ நூலுக்கான புதிய பதிப்பொன்றை வெளியிட்ட போது ஏங்கெல்ஸ் “வரலாறு எங்களையும் பொய்ப்பித்துவிட்டது” எனச் சுட்டிக்காட்டினார்!

மார்க்சிய முன்னோடிகள் கருதியிருந்ததைப் போல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நிரந்தரப் புரட்சியின் வீச்சு வளர்ந்து உலகம் பூராகவும் ஒரே கதியில் சோசலிச மாற்றம் ஏற்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்புப் பொய்த்துப் போனபோதிலும் ருஷ்யப் புரட்சி சாத்தியப்பட்டு இன்னொரு திசை மார்க்கத்தில் சமத்துவப் புத்துலகம் மலரும் என்ற நம்பிக்கையை அவர்கள் கைவிட்டுவிடவில்லை. புதிய மொழிகளைக் கற்கும் வேகம் கைவரப் பெற்றவரான மார்க்ஸ் மாற்றத்தை நாடும் ருஷ்யச் சமூகத்தை ஆராயும் பொருட்டு ருஷ்ய மொழியைக் கற்கத் தொடங்கினார். முதலாளித்துவ வளர்ச்சியின் தொட்டில் பருவத்தில் இருந்த போதிலும், புராதன பொதுவுடமைச் சமூக எச்சங்களைக் கொண்டிருக்கும் ஆசிய உற்பத்தி முறையுடனுள்ள ருஷ்யா சுரண்டும் வர்க்க ஆட்சியதிகாரத்தை வீழ்த்திய கையுடன் அந்தப் புராதன பொதுவுடமை அமைப்பின் நீடிப்பாக, நேரடியாக சோசலிச அமைப்பை நோக்கி முன்னேற இயலும் என்ற நம்பிக்கையை மார்க்ஸ் வெளிப்படுத்தி இருந்தார். 

இத்தகைய மாற்று வழித்தடம் பற்றிய மார்க்சின் தேடல் குறித்துப் பின்னர் அதிகம் நாட்டம் ஏற்பட்டிருக்கவில்லை. ஒக்ரோபர் புரட்சி (1917) வாயிலாக பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படை ஆட்சியதிகாரத்தை வெற்றிகொண்ட காரணத்தால் வர்க்கப் புரட்சி வாயிலாகக் கட்டமைக்கப்படும் சோசலிச முன்னெடுப்புக்கு மார்க்சும் ஏங்கெல்சும் எவ்வகையில் ஆற்றுப்படுத்தினர் என்பதிலான நாட்டமே தீவிரப்பட்டு வந்தது. சோவியத் சோசலிச முன்னெடுப்பு 1991 ஆம் ஆண்டில் தகர்ந்துபோய் வர்க்க அரசியல் வீச்சை மேவியதாக அடையாள அரசியல் முனைப்படைந்து வளரத்தொடங்கிய போது விளிம்பு நிலை மக்கள் பற்றியும் தேசியம் குறித்தும் மார்க்ஸ் என்ன சொன்னார் என்ற தேடலில் அதுவரை வெளிவராத மார்க்சின் எழுத்துகளையும் வெளிக்கொணரும் முயற்சிகள் முனைப்படையலாயின.

மார்க்சியச் சிந்தனை முறைமையைக் கைவிட்டு ‘புரட்சி இறை தூதர்’ என்ன சொன்னார் எனும் தேடலில் மார்க்சியர்கள் முற்பட்ட போதே மார்க்சியமானது மதம் போலக் கட்டிறுக்கம் பெற்றுவிடுகிறது. உலகளவில் இன்று மார்க்சியம் பின்னடைவைச் சந்தித்து இருப்பதற்கான ஒரு அடிப்படையாக இவ்விவகாரம் அமைந்துள்ளது. மாற்று வழித்தடம் பற்றி மார்க்ஸ் எத்தகைய கருத்தைக் கொண்டிருந்தார் என்ற தேடலானது புதிய சூழலை முகங்கொள்ள ஏற்ற வழிகாட்டலைப் பெறுவதற்கு ஆற்றுப்படுத்த வேண்டுமே அல்லாது மார்க்ஸ் ஏற்றுக்கொண்டு முன்வைத்த கருத்துகளைத்தான் கடைப்பிடிப்போம் என்பது மார்க்சிய மார்க்கமாக மாட்டாது!

புராதன பொதுவுடமை அமைப்பின் நீடிப்பு சோவியத்

ருஷ்யப் புரட்சியின் கோரிக்கை, பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தைக் கையகப்படுத்தல் என்பதற்கு முன்னுரிமை வழங்குவதனைக் காட்டிலும் சோவியத் எனும் மக்கள் கூட்டமைப்பு அதிகாரத்தைப் பெறுவதாகவே இருந்தது. மேற்கு ஐரோப்பாவில் தலைமறைவாக இருந்தபடி ருஷ்ய போல்ஷ்விக் கட்சிக்கு வழிகாட்டல்களை மேற்கொண்டு வந்த லெனின் 1917 பெப்ரவரிப் புரட்சி வாயிலாக ஜார் மன்னன் வீழ்த்தப்பட்டு மெனஷ்விக்குகள் ஆட்சிக்கு வந்த பின்னர் நாடு திரும்பினார்; ஏற்பட்டிருந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை வளர்த்தெடுத்துப் பாட்டாளி வர்க்கம் ஆட்சி மாற்றத்தை வென்றெடுக்கும் வகையில் “உள் நாட்டுப் போரை முன்னெடுங்கள்” என்ற அறைகூவலை முன்வைக்கும் நோக்கத்துடன் ருஷ்யாவினுள் வந்தவருக்கு மக்கள் மத்தியில் ஏகாதிபத்திய யுத்தத்துக்கு எதிரான கோப உணர்வே மேலோங்கி இருப்பதனைக் கண்டுணர்ந்தார். போர்முனைப்பை வெளிப்படுத்துவதை விட முன்னதாகப் புரட்சி எழுச்சி சாத்தியப்படுத்தி இருந்த முதலாளித்துவ அரசை நோக்கி “அனைத்து அதிகாரங்களையும் சோவியத்துகளிடம் கையளி” என்ற கோரிக்கையை முன்னிறுத்தினார் லெனின்.

பின்னர், 1917 ஒக்ரோபர் புரட்சி வாயிலாகப் பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை வென்றெடுத்தவுடன் சோவியத் எனும் மக்கள் கூட்டுறவு அமைப்புகளுக்கு அதிகாரங்களை வழங்கும் அரசியல் வடிவம் முன்னிலைப்பட்டது; அந்தவகையில் உருவாகி எழுந்த புது நாட்டை ‘சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்’ என லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி (பின்னர் ‘சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சி’ என அழைக்கப்பட்டது) அறிவித்திருந்தது. பாட்டாளி வர்க்கப் புரட்சியைச் சாதித்த ருஷ்யாவை முன்னிறுத்திச் ‘சோவியத் ருஷ்யா’ என அழைப்பதாக அன்றி ஜாரிஸ ருஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்து ருஷ்யப் பாட்டாளி வர்க்கப் புரட்சியில் கைகோர்த்து இணைந்திருந்த ஒடுக்கப்பட்ட தேசங்கள் அனைத்துக்குமான குடியரசுகளின் ஒன்றியமாகப் புதிய நாட்டைக் கட்டமைத்திருந்தமை கவனங்கொள்ளத்தக்க பிரதான அம்சமாகும். 

பூரண முதலாளித்துவ மாற்றியமைத்தலைச் சாத்தியப்படுத்தி இருந்த மேற்கு ஐரோப்பாவின், சோசலிசத்தைக் கட்டமைப்பது போல பாட்டாளி வர்க்கம் பலம் பெறாது, விவசாயி வர்க்கத்தை வலுவான நட்புச் சக்தியாக அரவணைத்தவாறு, சோவியத் அமைப்பு வாயிலாக முன்னெடுக்கப்படும் ருஷ்யச் சோசலிசப் பிரயோகத்தின் தனித்துவப் பண்புகளை லெனின் கவனத்தில் எடுத்திருந்தார். மார்க்சின் வசனங்களுக்குள் முடங்கிவிடாமல் ‘ஸ்தூல நிலைமைகளின் ஸ்தூலமான ஆய்வு முறையியலாக’ மார்க்சியத்தைப் புரிந்துகொண்டு பிரயோகித்த லெனின் புறநிலை நிதர்சனத்துக்கு அமைவான ‘புதிய பொருளாதாரக் கொள்கை’ ஒன்றை வகுத்தளித்து இருந்தார். புரட்சிகரமான தனியொரு வர்க்கம் என்பதற்கப்பால் வர்க்கங்களின் கூட்டமைப்பான சோவியத் எனும் சமூக சக்தி தனக்குரிய முதலாளித்துவ மாற்றியமைத்தலையும் நிறைவு செய்துகொண்டு சோசலிசம் நோக்கி முன்னேற வேண்டி இருந்தது; தவிர, ஒடுக்கப்பட்டிருந்த தேசங்களாக இருந்து குடியரசுகளாக மலர்ந்தவற்றின் சமூக அமைப்பு மாற்றத்திலும் புதிய பொருளாதாரக் கொள்கை அவசியமானதாய் அமைந்திருந்தது!

இத்தகைய புதிய பாதை குறித்து வலியுறுத்துகிற போது மார்க்சியத்தின் அடிப்படைகள் திரிபுபடுத்தப்படுவதற்கு இடமளிக்கக் கூடாது என்பதிலும் லெனின் அதிக அக்கறை உடையவராக இருந்தார். இருபதாம் ஆண்டுகளை எட்டிய நிலையிலும் மேற்கு ஐரோப்பாவில் பாட்டாளி வர்க்கப் புரட்சி சாத்தியப்படலாம், அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் சோவியத் புரட்சிக்கான முக்கியத்துவம் வலுவிழந்து போகும் என (‘இடதுசாரிக் கொம்யூனிசம் இளம் பருவக் கோளாறு’ எனும் நூலில்) சுட்டிக்காட்டி இருந்தமை மனங்கொள்ளத்தக்கது. பின்தங்கிய – முதலாளித்துவ மாற்றம் நிறைவுறாத – ருஷ்யாவில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை வைத்துப் பாட்டாளி வர்க்கமே சமூக மாற்றத்தின் அடிப்படையான சமூக சக்தி எனும் மார்க்சிய அத்திவாரம் இழக்கப்படலாகாது என்பதனை அழுத்தியுரைக்கும் கடப்பாடு தமக்கு இருப்பதாக அவர் கருதியமைக்கு மேற்கு ஐரோப்பியப் புரட்சி இன்னமும் சாத்தியம் என்ற நம்பிக்கையே அடிப்படையாகும். 

இந்த இரு அம்சங்களும் அவையவற்றுக்கு உரிய தளங்களில் மிக அவசியமானவை; இந்த வேறுபட்ட நிலைமைகள் பற்றி அல்லாது மார்க்சியம் திரிபுபடுத்தப்படுவதற்கு எதிரான கண்டனங்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் லெனினால் வெளிப்படுத்தப்பட்டன. அதேவேளை இந்த வேறுபட்ட சமூக – வரலாற்று அடிப்படைகள் கவனங்கொள்ளப்படுதல் அவசியமானதாகும். வரலாற்று மாற்றப்போக்கில் விடுதலை பெறும் ஒடுக்கப்பட்ட தேசங்கள் நேரடியாக சோசலிசம் நோக்கிச் செல்வதற்கான சாத்தியம் சோவியத் யூனியனைப் பாட்டாளி வர்க்கம் கட்டமைத்து உள்ளமையால் ஏற்பட்டுள்ளது; பின்தங்கிய அவற்றுக்கான புதிய பொருளாதாரக் கொள்கை ஒன்றை சோவியத் யூனியன் நடைமுறைப்படுத்தி வந்தது. அதேவேளை, பூரணமான முதலாளித்துவ மாற்றியமைத்தலை வெற்றிகொண்ட மேற்கு ஐரோப்பா இறுக்கமான பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டுக்கு உரிய மிக முன்னேறிய சோசலிசப் பிரயோகத்தை எத்தகைய திரிபுகளுக்கும் இடமற்ற வகையில் முன்னெடுத்தாக வேண்டும்!

மேற்கு ஐரோப்பாவில் வலது திரிபு வாதம் ஏற்பட்டுவிடலாகாது என்பதற்காகப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு அதீத அழுத்தத்தைக் கொடுத்து விவாதங்களை முன்வைத்த தர்க்ககங்கள் பின்னர் ஸ்டாலின் தலைமையில் இடது திரிபு வாதச் சரிவுக்கு இடமேற்படுத்தி இருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையை லெனினின் மறைவுக்குப் பின்னர் கட்சித் தலைமையை ஏற்ற ஸ்டாலின் முன்னெடுத்து வந்தார்; நான்கு வருடங்களில் அதன் பிரயோகம் துரித வளர்ச்சியை எட்டிய காரணத்தால் 1928 ஆம் ஆண்டு முதல் பாட்டாளி வர்க்கச் சோசலிச முன்னெடுப்பில் முழுக் கவனத்தை ஸ்டாலின் முன்னெடுக்கலானார். இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் மக்கள் சீனமும் சோசலிச நாடுகளாக உதயமான பின்னர் மேற்குலகு முன்னெடுக்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சிச் சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டமையை ஸ்டாலினால் புரிந்துகொள்ளப்படவில்லை. விடுதலைத் தேசங்களின் சோசலிச நிர்மாணத்தில் விவசாயி வர்க்கம் அடித்தள சக்தி என்பதைக் கண்டுகொள்ளாமல் சோவியத் யூனியனின் பொருளாதாரம் விவசாயிகளைச் சுரண்டித் தொழிலாளர்களை மூலதன விருத்தி செய்வதாக உள்ள போக்குத் தவறானது எனும் விமரிசனத்தை மாஓ சேதுங் முன்வைத்தார். 

ஆக, பாட்டாளி வர்க்கம் கட்டமைக்கும் கொம்யூன் போல கூட்டுறவுப் பொருளாதார இணைப்பை உடைய சோவியத்தின் சோசலிச முன்னெடுப்பு இருக்கும் பட்சத்தில் பின்னடைவுக்கு ஆளாகுவதைத் தடுக்கவியலாமல் ஆகும். ஸ்டாலினின் தவறுகளைத் திருத்துவதாகக் கூறியவாறு பின்னர் அதிகாரத்துக்கு வந்தவர்கள் சோவியத் யூனியன் கொம்யூனிஸ்ட் கட்சியை வலது திரிபுப் பாதைக்கு ஆட்படுத்தலாயினர்.

கலியுக உச்சமும் கிருத யுக எழுச்சியும்

ருஷ்ய ஒக்ரோபர் புரட்சியை சோவியத் யூனியனுக்கு வெளியே வாழ்த்தி எழுதப்பட்ட உலகளவிலான முதல் படைப்பாக பாரதியின் ‘புதிய ருஷ்யா’ எனும் பாடலே அமைந்துள்ளது என்பர். கொடுங்கோலாட்சி புரிந்த ஜார் மன்னனின் வீழ்ச்சியை “கலி வீழ்ந்தான்” என்பார் பாரதி; ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகக் கருதப்படுவதும் பணத்தின் பயன்பாடு ஒழிக்கப்படும் வகையில் உழைப்புப் பெரு மதிப்பைப் பெறுவதும் ஏழ்மை ஒழிக்கப்பட்டு ஏற்றத்தாழ்வுகளைத் தகர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதையும் புதிய சமூக எழுச்சியாக மதித்து (இவை பெப்ரவரிப் புரட்சியில் இடம்பெறாதன), இவற்றினூடாக ‘கிருத யுகம் எழுக’ எனப் பாடுவார். மனிதருழைப்பை மனிதர் பறிக்கும் கலியுகத்தை ஒழித்துக்கட்டி, கிருத யுகத்தின் சமத்துவ நெறியை இந்தியாவே உலகுக்கு உணர்த்தும் எனக் கூறி வந்த பாரதிக்கு ருஷ்யா அதனை முன்னதாகச் சாதித்தது குறித்து இலட்சிய பூர்வமான பொறாமை உணர்வுடன் கூடிய பாராட்டினைத் தெரிவிக்காமல் இருக்க இயலவில்லை.

வர்க்கப் பிளவுறாமல் முழுச் சமூக சக்தி (திணை) மேலாதிக்கம் புரிந்த காரணத்தால் புராதன பொதுவுடமைச் சமூகக் கூறுகளின் தொடர்ச்சியாக எமது ஏற்றத்தாழ்வான வாழ்வியல் அமைந்து வந்தது. நிலவிய சமத்துவக் கூறுகள் காரணமாகவே இந்தியா முன்னதாகச் சமத்துவ வாழ்நெறியை உலகுக்கு உணர்த்தும் எனக்கூற இயலுமாய் இருந்தது – திணைகள் இடையே சமத்துவம் நிலவிய தமிழ்ப் பண்பாடு உருப்பெற்றதில் இருந்து மூன்று, நான்கு நூற்றாண்டுகளின் பின்னர் கிமு. 3 ஆம் நூற்றாண்டில் மருதத் திணை மேலாதிக்கம் ஏற்பட்ட போதிலும் தொடர்ந்தும் ‘தமிழ் வாழ்வியலில் சமத்துவம் நிலவியதான’ கருத்து ஊடாடி வந்துள்ளது. முன்னாளில் நிலவியதாகக் கருதப்படும் கிருத யுகத்தைத் தொடர்ந்து ஏனைய இரு யுகங்களில் உயர் விழுமியப் பண்புகள் நலிவடைந்து வரலாயிற்று; அவற்றுக்குரிய பதிவுகளை கிமு. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து நிலவி வந்த வேளிர் ஆட்சிக்கால வாழ்வியல் வெளிப்படுத்தும் சாத்தியம் நிலவின. மருதத் திணை மேலாதிக்கத்தில் முடிவேந்தர் ஆட்சி ஏற்பட்ட பின்னர் கலியுகம் பற்றிய ஐதிகம் அர்த்தம் பெறுவதாக அமைந்து காலனித்துவப் பிடியில் உழலும் வரலாற்று நிலை கலியுக உச்சமாகப் பார்க்கப்பட்டது. ஏற்கனவே முந்திய பகுதியில் காலனிய – சாதிய ஒடுக்குதல்கள் ஏகாதிபத்தியத்தால் கையாளப்பட்ட பாங்கு காரணமாக இந்தியப் புரட்சி சமத்துவ நெறி நோக்கிச் செல்ல இயலாமல் போனமையைப் பார்த்து வந்துள்ளோம். 

திணை மேலாதிக்கத் தகர்ப்பின் வாயிலாக சோசலிசத்தை அடையும் வரலாற்று இருப்புப் பற்றி அடுத்து வரும் இயல்களில் அலசுவோம்! 


ஒலிவடிவில் கேட்க

2964 பார்வைகள்

About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (1)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)