இலங்கையிலும், தமிழகத்திலும் கிடைத்த நாணயங்களில் ‘ஸ்ரீலங்கவீர’, ‘உரக’ என்ற பெயர்பொறித்த பொன், செப்பு நாணயங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவற்றை முதலாம் இராஜராஜ சோழன் இலங்கையில் அடைந்த வெற்றிக்காக இலங்கையிலேயே வெளியிட்டான் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு கூறுவதற்குப் பல காரணங்கள் காட்டப்படுகின்றன. இந்நாணயங்களில் பெரும்பாலானவை இலங்கையில், குறிப்பாக வடஇலங்கையிலும் தமிழ்நாட்டில் சோழமண்டத்திலுமே கிடைத்துள்ளன. பாண்டிய நாட்டையும், சேர நாட்டையும் வெற்றி கொண்டதற்காக செப்பு நாணயங்களை வெளியிட்ட இராஜராஜ சோழன் இலங்கை வெற்றிக்காக பொன் மற்றும் பொன்முலாம் பூசப்பட்ட நாணயங்களை வெளியிட்டுள்ளான். வடிவமைப்பிலும் இலங்கையில் வெளியிடப்பட்ட இந்நாணயங்களுக்கும் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட இவன் கால நாணயங்களுக்கும் அடிப்படையில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டு நாணயங்களில் சிறிய கோடாகக் காட்டப்பட்டுள்ள மன்னன் அல்லது மனித உருவம் இலங்கை நாணயங்களில் தடித்த கோட்டில் காட்டப்பட்டுள்ளது. இந்த வேறுபாடு ‘ராஜராஜ’, ‘உரக’, ‘ஸ்ரீலங்கவீர’ என்ற பெயர்களுக்கிடையிலான எழுத்தமைதியிலும் காணப்படுகிறது. தமிழ்நாட்டு நாணயங்களில் சிறிதாக உள்ள குத்துவிளக்கு இலங்கை நாணயங்களில் பெரிதாகக் காட்டப்பட்டுள்ளது. இவற்றில் காணக்கூடிய இன்னொரு சிறப்பம்சம் இலங்கை நாணயங்களில் சங்கு ஒரு முக்கிய சின்னமாக இடம்பெற்றிருப்பதாகும். (ஆறுமுக சீதாராமன், 1989, 1:6). இவற்றின் அடிப்படையில் ‘உரக’, ‘ஸ்ரீலங்கவீர’ என்ற பெயர்பொறித்த நாணயங்கள் இராஜராஜ சோழனால் இலங்கையில் உள்ள அக்கசாலையில் வெளியிடப்பட்டதென அறிஞர்கள் பலரும் கூறிவருகின்றனர்.
இவற்றுள் உரக என்ற பெயர் பொறித்த நாணயம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இதன் முன்புறத்தில் நிற்கும் மனித உருவமும், மேலே உயர்த்தப்பட்ட இடக்கையில் பூரணகும்பமும், கீழ்நோக்கிய வலக்கையில் வச்சிராயுதம் போன்ற பொருளும், பின்புறத்தில் விளிம்பைச் சுற்றி வட்டமான சிறு புள்ளிகளும், அதன் உட்புறமாக விளிம்புடன் சங்கும், மத்தியில் தேவநாகிரி எழுத்தில் ‘உரக’ என்ற பெயரும் இடம்பெற்றுள்ளன. ஆயினும் இப்பெயரின் வாசிப்பையிட்டு அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துகள் உண்டு. பிறின்செப் (1885), எலியட் (1970:133) முதல், அண்மையில் மிற்சினர் (1998:38) வரை பலரும் இப்பெயரை ‘உரக’, ‘தரக’, ‘இரக’, ‘அக’ எனப் பலவாறு வாசித்துள்ளனர். சிலர் இதன் முன்னெழுத்தை தமிழாகவும் வேறுசிலர் கிரந்தமாகவும் கருதுகின்றனர். அண்மையில் ஈழத்து வெற்றியும் இராஜராஜன் காசும் என்ற தலைப்பில் தஞ்சாவூரில் கிடைத்த உரக நாணயம் பற்றி ஆராய்ந்த குடவாயில் பாலசுப்பிரமணியம் நாணயத்தில் வரும் பெயருக்குரிய எழுத்துகள் 11 ஆம் நூற்றாண்டிற்குரிய தமிழ் மற்றும் தேவநாகரி எனக் குறிப்பிட்டு, இவ்வகை நாணயம் இராஜராஜ சோழனால் வெளியிடப்பட்டதென்பதற்குப் பல சான்றாதாரங்களைக் கொடுத்துள்ளார் (1988). ஆனால் கொட்றிங்ரன், உரக என்ற பெயருடன் தரக, அக என்ற பெயரிலுள்ள நாணயங்களை தனது நூலில் புகைப்படத்துடன் பிரசுரித்துள்ளார் (1924:60-2, Plate,III, Nos. 59-60). நாணயங்களில் பொறிக்கப்பட்ட எழுத்துகளுக்கிடையிலான வேறுபாட்டை நோக்கும் போது உரக என்ற பெயருடன் தரக, அக போன்ற பெயரிலும் நாணயங்கள் வெளியிடப்பட்டது எனக் கருத இடமளிக்கிறது. இருப்பினும் இங்கு உரக என்ற பெயரிலுள்ள நாணயங்கள் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதலாம் இராஜராஜ சோழன் காலத்திலிருந்தே நிற்கும் அல்லது இருக்கும் மனித உருவத்துடன் தேவநாகரி எழுத்தில் மன்னன் பெயர்பொறித்த நாணயங்கள் கிடைத்து வருகின்றன. இம்மரபைச் சோழ மன்னர்கள் இலங்கையில் இருந்து பெற்றதால் காலப்போக்கில் தமிழ்நாட்டு வம்சங்கள் வெளியிட்ட நாணயங்களில் வரும் மனித உருவம் பொறித்த நாணயங்கள் ‘இலங்கை மனிதன் நாணயம்’ (Ceylon Man type Coin) என நாணயவியலாளரால் அழைக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் பண்டுதொட்டு மனித உருவம் பொறித்த நாணயங்களை வெளியிடும் மரபு இருந்துள்ளது (Bopearachchi 1999:104). இதில் மனித உருவத்தைக் கோட்டுருவில் வார்க்கும் மரபு சோழர் வெற்றிக்கு முன்னரே ஏற்பட்டுவிட்டது (Michener 1998:137, Codrington 1924:58-60). இக்காலத்தில் இலங்கை சோழரால் வெற்றி கொள்ளப்பட்டதால் அதன் நினைவாக இலங்கை நாணய மரபைப் பின்பற்றி சோழ மன்னன் இலங்கையிலேயே உரக என்ற பெயர் பொறித்த நாணயங்களையும் வெளியிட்டான் எனக் கூறுவது பொருத்தமாகும். ஆனால் தமிழ் நாட்டில் மனித உருவத்துடன் மன்னன் பெயர்பொறித்த நாணயங்கள் இராஜராஜ சோழன் காலத்திலிருந்து கிடைப்பதால் அவனே உரக என்ற பெயர் பொறித்த நாணயத்தையும் வெளியிட்டான் எனக் கூறப்பட்டு வருகின்ற கருத்து பல நிலைகளில் ஆராயப்பட வேண்டியுள்ளது.
முதலாம் இராஜராஜ சோழனுக்கு முன்னரே வடஇலங்கை முதலாம் பராந்தகனால் வெற்றி கொள்ளப்பட்டமை, மதுரை வெற்றியோடு அவனது 38 ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இவன் காலத்தில் இருந்துதான் இலங்கையோடு தொடர்புடைய ஈழக்காசு, ஈழக்கருங்காசு என்ற செய்தி கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இதுவரை தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் 17 கல்வெட்டுகள் ஈழக்காசு, ஈழப்பொற்காசு, ஈழக்கருங்காசு பற்றிக் கூறுகின்றன (பவானி 2000:133-4). இதில் 15 கல்வெட்டுகள் முதலாம் பராந்தகச்சோழன் காலத்திற்குரியவை. இவற்றுள் 12 கல்வெட்டுகள் தஞ்சாவூரில் கிடைத்தவை. இப்புள்ளிவிவரம் பராந்தகனுக்குப் பின்னர் ஈழக்காசு பற்றிய செய்தி தமிழ் நாட்டில் படிப்படியாக மறைந்து போவதைக் காட்டுகின்றன. இத்தனைக்கும் பராந்தகனால் வெளியிடப்பட்டவை எனக் கூறக்கூடிய எந்தவொரு நாணயமும் தமிழ்நாட்டில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சிலர் ‘மதிராந்தன்’ என்ற பெயர் பொறித்த நாணயத்தை மதுரை வெற்றிக்காக பராந்தகன் வெளியிட்டிருக்கலாம் என்பதற்கு மதுரை வெற்றிபற்றிய கல்வெட்டை ஆதாரமாகக் காட்டுகின்றனர் (நடன காசிநாதன் 1995:59-60). ஆனால் முன்னாள் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் நாகசுவாமி அதை உத்தம சோழன் வெளியிட்ட நாணயமாகக் கூறுகின்றார் (1981:36). ‘மதிராந்தன்’ என்ற பெயர் பொறித்த நாணயத்தை மதுரை வெற்றிக்காக பராந்தகன் வெளியிட்டான் எனக் கொண்டால், சமகாலத்தில் வடஇலங்கையில் அடைந்த வெற்றிக்காகவும் நாணயம் வெளியிட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. இல்லை, அதை உத்தமசோழனே வெளியிட்டான் என எடுத்துக் கொண்டால் பராந்தகன் காலக் கல்வெட்டுகளில் வரும் ஈழக்காசு எது என்ற கேள்வி எழுகின்றது.
தமிழ்நாட்டு மன்னர்கள் இன்னொரு நாட்டை வெற்றி கொண்டதன் நினைவாக அந்நாட்டுப் பெயரில் நாணயங்கள் வெளியிட்டதற்குப் போதிய சான்றுகள் உண்டு. மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழநாட்டை வென்றதற்காக ‘சோளநாடு கொண்டான்’ என்ற பெயரிலும், முதலாம் இராஜராஜ சோழன் சேரநாட்டை வெற்றி கொண்டதன் நினைவாக ‘மலைநாடு கொண்ட சோளந்’ என்ற பெயரிலும், இராஜேந்திரசோழன் கங்கை வெற்றிக்காக ‘கங்கை கொண்ட சோழன்’ என்ற பெயரிலும் நாணயங்களை வெளியிட்டுள்ளனர் (Nagaswamy 1981). ஆனால் ஒரு நாட்டு வெற்றிக்காக இரு பெயரில் தமிழ்நாட்டு மன்னர்கள் நாணயங்கள் வெளியிட்டதற்கு இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. இராஜராஜ சோழன் இலங்கை வெற்றிக்காக ‘ஸ்ரீலங்கவீர’ என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான் என்பது பல்வேறு சான்றாதாரங்களின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது இந்நாணயத்துடன் ஏன் ‘உரக’ என்ற பெயரில் இன்னொரு நாணயத்தை வெளியிட்டான் என்பது புரியவில்லை. மேலும் இவன் கால நாணயங்கள் இவனது பட்டம் அல்லது விருதுப்பெயர்களை அடிப்படையாகக் கொண்டே வெளியிடப்பட்டுள்ளன. இராஜராஜசோழன், உரக என்பதை பட்டப்பெயராகவோ அல்லது விருதுப்பெயராகவோ பயன்படுத்தியதற்கு எதுவித சான்றுகளும் இல்லை. இந்நிலையில் இந்நாணயத்தை இராஜராஜசோழனே வெளியிட்டான் என அறுதியிட்டுக் கூறுவது பொருத்தமாகவில்லை.
வடமொழியில் உரக என்பதற்கு பாம்பு, நாகம், நாகர் (உரகர்) எனப் பல கருத்துண்டு. யாழ்ப்பாணப் பேரகராதியில் இதற்கு நாகவல்லி, மலை போன்ற கருத்துகள் உண்டு (T.L. 438). ஏறத்தாழ இதே கருத்தையே ‘அக’ என்ற சொல்லும் குறித்து நிற்கின்றது. சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் நாகம் என்பதைக் குறிக்க உரக என்றும், நாகரைக் குறிக்க உரகர் என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின் மூவர் தேவாரத்தில் நாகம் என்பதைக் குறிக்க உரகம் என்னும் சொல்லும், பின்னர் ஜெயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில் நாகர் என்பதைக் குறிக்க உரகர் என்ற சொல்லாட்சியும் கையாளப்பட்டுள்ளது (பாலசுப்பிரமணியம், 1988). கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டின் காவிரியின் தென்கரையில் உள்ள பாம்பூர், உரகபுரம் என அழைக்கப்பட்டதை பல்லவர் கால கூரம் செப்பேடுகள் கூறுகின்றன (பல்லவ செப்பேடுகள் முப்பது, 44, 65). இவ்வுரகபுரத்தை அறிஞர்கள் சிலர் உறையூர் எனவும் கருதுகின்றனர் (வேங்கடசாமி 1983-251). பிற்காலத்தில் இலங்கையில் பௌத்த மதத்தைப் பரப்பிய புத்ததத்தர் இவ்வுரகபுரத்திலிருந்தே பாளிமொழியில் பல நூல்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதியில் இலங்கையில் வாழ்ந்த மக்களில் ஒரு பிரிவினரை நாகர் எனப் பாளி நூல்கள் கூறுகின்றன. கி.பி. 1 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 80 கல்வெட்டுகள் நாக மக்கள் பற்றியும், நாக என்ற பெயரிலுள்ள சிற்றரசர்கள் பற்றியும் கூறுகின்றன. பாளி நூல்கள் அநுராதபுரத்தில் ஆட்சி புரிந்த நாக என்ற பெயரிலுள்ள பல மன்னர்களைப் பற்றிக் கூறுகின்றன. வடஇலங்கையில் கிடைத்த நான்கு பிராமிக் கல்வெட்டுக்கள் நாகச் சிற்றரசர்கள் பற்றிக் கூறகின்றன. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் தமிழர் படையுடன் வந்து ஸ்ரீறிநாக என்பவன் வடஇலங்கையை (உத்தரதேசம்) கைப்பற்ற முற்பட்டான் எனச் சூளவம்சம் கூறுகிறது (44:703). ஆதியில் நாக என்ற பெயர் இலங்கையில் பரந்துபட்ட மக்களோடு தொடர்புடையதாக இருந்தாலும் காலப்போக்கில் அப்பெயர் பெரும்பாலும் தமிழ் மக்களுடன் தொடர்புடையதாக இருந்து வருவதை இன்றும் வழக்கிலுள்ள நாகன், நாகி, நாகம்மாள், நாகமுத்து, நாகநாதன், நாகராசா, நாகவண்ணன் போன்ற ஆட்பெயர்களும்; நாகபடுவான், நாகமுனை, நாகர்கோயில், நாகதேவன்துறை, நாகதாழ்வு போன்ற இடப்பெயர்களும் உறுதிப்படுத்துகின்றன. பண்டைய கல்வெட்டுகளிலும், மட்பாண்டங்களிலும் வரும் ‘ம’ என்ற ஒலிப்பெறுமானத்தைக் கொடுக்கும் பிராமி எழுத்தையொத்த குறியீட்டை நாகர்களின் குலச்சின்னமாகக் கூறும் பேராசிரியர் வேலுப்பிள்ளை அக்குறியீடு இலங்கையின் ஏனைய வட்டாரங்களை விட, வடஇலங்கையில் கூடுதலாகக் காணப்படுவதற்கு இங்கு நாக இன மக்கள் வாழ்ந்ததே காரணம் என்றார் (1980A:54).
நாக இனமக்கள் பற்றிக் கூறும் பாளி நூல்கள் அநுராதபுரத்திற்கு வடக்கிலுள்ள பிராந்தியத்தை நாகதீப(ம்) எனவும். இங்கு இரு நாக மன்னர்களிடையே நடந்த சிம்மாசனப் போட்டியை புத்தர் தீர்த்து வைத்ததாகவும் கூறுகின்றன (M.V. VIll: 54-3). இந்நிகழ்ச்சியை மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி அவற்றில் வரும் நாக நாடு இலங்கையில் உள்ள நாகதீபத்தைக் குறிப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது (சிற்றம்பலம் 1993:67-83). கலிங்கத்துப்பரணியில் ஜெயங்கொண்டார் இராஜபாரம்பரியம் பற்றிக் கூறும் போது சோழவம்சத்துக் கிள்ளிவளவன் நாகநாட்டு இளவரசியை மணந்த கதையைக் கூறுகிறார். இதேபோல் பல்லவர்கால வேலூர்ப்பாளையச் செப்பேடு பல்லவ மன்னன் ஒருவன் நாகர் குலமகளை மணந்த செய்தியைக் கூறுகிறது (பாலசுப்பிரமணியம் 1988). ஆயினும் இந் நாகதீபம் எவ்விடத்தைக் குறித்தது என்பதையிட்டு அறிஞர்களிடையே பொதுவான கருத்தொற்றுமை காணப்படவில்லை. சிலர் இவ்விடம் மகாவலி கங்கைக்கு வடக்கிலுள்ள பிராந்தியம் எனவும், வேறு சிலர் யாழ்ப்பாணம் எனவும், இன்னும் சிலர் நயினாதீவு எனவும் கருத்துத் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் வல்லிபுரம் என்ற இடத்தில் கிடைத்த கி.பி. 3 ஆம் நூற்றாண்டிற்குரிய பொற்சாசனத்தில் நாகதீவ(ப) என்ற பெயர் வருவதைக் கொண்டு இப்பெயர் யாழ்ப்பாணத்தையே குறித்ததாக அறிஞர்கள் பலரும் கருதுகின்றனர். சிலர் இதன் தலைநகர் மணிமேகலையில் வரும் மணிபல்லவம் எனவும், அது தற்போது வல்லிபுரத்தில் உள்ள பல்லப்பை என்ற இடமெனவும் கூறுகின்றனர் (கிருஷ்ணராஜா 1998:25). அநுராதபுரத்தில் 300 இற்கும் மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டும் அக்கல்வெட்டுகள் எதிலும் குறிப்பிடப்படாத அநுராதபுரம் என்ற பெயர் தென்மேற்கே அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கிடைத்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது (Paranavithana 1970, CVII. No706). வட மத்திய மகாணத்தில் கிடைத்த இன்னொரு பிராமிக் கல்வெட்டு தமிழில் ‘நாகநகர்’ பற்றிக் கூறுகிறது. கலாநிதி இரகுபதி இவ்விடம் கந்தோரடையைக் குறித்திருக்கலாம் எனக் கருதுகிறார் (பிரசுரிக்கப்படாதது). நிக்கலஸ் என்ற அறிஞர் இந் நாகநகரை கி.பி 9 ஆம் நூற்றாண்டிற்குரிய கல்வெட்டில் வரும் பெயருடன் தொடர்புபடுத்தி இது வவுனியாவின் வட எல்லையில் இருந்த இடமாகக் கூறுகிறார் (1962:81). இதிலிருந்து கல்வெட்டில் வரும் பெயர்கள் அவை காணப்படும் இடங்களை மட்டும் குறித்ததாகக் கொள்வது பிற மூலதாரங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவாகின்றது. அதிலும் ஆரம்பகாலக் கல்வெட்டுகள் பௌத்த சங்கத்திற்கு அளிக்கப்பட்ட தானங்கள் பற்றிக் கூறுவதால், பிற இடங்களுக்குச் சென்று தானம் அளித்தோர் தமது தானத்துடன் தனது சொந்த இடத்தையும் கல்வெட்டில் பொறிப்பது ஒரு வழக்கமாக இருந்துவந்துள்ளது.
ஆரம்பத்தில் ஒரு இடத்தைக் குறித்த பெயர், காலப்போக்கில் பரந்த பிரதேசத்தையும், சில வேளைகளில் நாட்டின் பெயரையும் குறித்ததற்கு வரலாற்றில் பல சான்றுகள் உண்டு. கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் வடமேற்கிலங்கையில் உள்ள ஒரு இடத்தின் பெயராக இருந்த தம்பபண்ணி நீண்டகாலம் இலங்கையின் பெயராக அழைக்கப்பட்டதற்குப் பல சான்றுகள் உண்டு. அது போல வடஇலங்கையின் குறிப்பிட்ட இடத்தின் பெயராக இருந்த நாக தீபம் படிப்படியாக பரந்த பிரதேசத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். தொடக்ககாலப் பாளி நூல்களில் நாகதீபம் என்ற பெயர், பிறகாலப் பாளி நூல்களில் நாகதீபம், உத்தரதேசம் என மாறிமாறி அழைக்கப்பட்டதை இக்கூற்றிற்குச் சார்பாகக் கொள்ளலாம். 13 ஆம் நூற்றாண்டிற்குரிய குடுமியாமலைக் கல்வெட்டில் வரும் நாக நாடு யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடஇலங்கையின் பரந்த பிரதேசத்தைக் குறிக்கிறது.
முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் வடஇலங்கை ‘உரக’ என்ற வடமொழிச் சொல்லால் அழைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு நிலாவெளியில் கிடைத்த முற்காலச் சோழருக்குரிய கல்வெட்டை ஆதாரமாகக் குறிப்பிடலாம். அண்மையில் இக்கல்வெட்டை விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் சி. பத்மநாதன் பத்தாம் நூற்றாண்டில் தமிழும் கிரந்த எழுத்தும் கலந்து பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டு இங்குள்ள மச்சகேஸ்வர ஆலயத்திற்கு ‘உராகிரிகாம’, ‘கிரிகண்ட கிரிகாம’ என்னும் இடங்களில் இருந்து வழங்கப்பெற்ற தேவதானம் பற்றிக் கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் ‘கிரிகண்ட கிரிகாம’ என்ற இடம் பண்டுதொட்டு திருகோணமலை மாவட்டத்தில் இருந்து வருவதற்குப் பாளி இலக்கியங்களையும், கல்வெட்டுகளையும் சான்றாதாரமாகக் காட்டி, இது திரியாயிலுள்ள கந்தசாமி மலையினை உள்ளடக்கிய நிலப்பரப்பாக இருக்கலாம் என்கிறார் (1998:17-8). இதில் ‘உராகிரிகாம’ என்ற இடம் எங்கேயிருந்தது எனத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். ‘உராகிரிகாம’ என்ற இடப்பெயரில் வரும் உரா என்பது நாக என்ற முன்னொட்டுச் சொல்லைக் கொண்டு தொடங்கும் ஒரு இடத்தைக் குறிப்பதாகக் கருதலாம். கிரி என்பதற்கு மலை, முனை, பன்றி, குன்று, பிணையாளி என்ற பல கருத்துண்டு. மலைகள் அற்ற வடஇலங்கையின் பல இடங்கள், அதன் அமைவிடத்தின் தன்மை மற்றும் பிற காரணங்களால் கிரி என்ற பின்னொட்டுச் சொல்லுடன் முடிவடைவதைக் காணலாம். இதற்கு நவக்கிரி, குலதிகிரி, இலபின்கிரி, குப்பங்கிரி முதலான இடப்பெயர்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். கம, காம என்ற பின்னொட்டுச் சொல்லுடன் முடியும் பல இடப்பெயர்கள் இலங்கையிலும் ஆந்திராவிலும் கி.மு. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து வழக்கிலுள்ளன. இது தமிழில் கிராமம் என்ற கருத்தைக் கொண்டுள்ளது. ஆந்திராவில் கி.பி 9 ஆம் நூற்றாண்டிற்குரிய கல்வெட்டுகள் கம, காம என்பவற்றைப் பின்னொட்டுச் சொல்லாகக் கொண்ட இடங்கள் பற்றிக் கூறுகின்றன (Ramachandramurthy 1985:244-5). வடஇலங்கையிலும் இதையொத்த பெயர்கள் பண்டுதொட்டுப் புழக்கத்திலிருந்து வருவதற்கு சோழக் கல்வெட்டில் வரும் வலிகாமம், போத்துக்கேய ஆவணங்களில் வரும் பனங்காமம் போன்ற இடங்களை உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இவற்றின் அடிப்படையில் நிலாவெளிக் கல்வெட்டில் வரும் ‘உராகிரிகாம’ என்ற வடமொழிப் பெயருக்கு நாகமலையில் உள்ள கிராமம் (நாகமலை) அல்லது நாகமுனையில் (நாகமுனை) உள்ள கிராமம் எனப் பொருள் கொள்ளலாம். யாழ்ப்பாண அரசுகால இலக்கியங்களில் வெளிநாடு எனக் குறிப்பிடப்படும் பூநகரி போத்துக்கேய ஆவணங்களில் ‘உரயில் பூநரிம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள ஈழஊருக்கு பக்கத்தேயுள்ள கடற்கரைக் கிராமம் ஒன்று நாகமுனை என அழைக்கப்படுகிறது. இவற்றிலிருந்த நிலாவெளிக் கல்வெட்டில் வரும் உராகிராம என்ற இடத்தை பூநகரியுடன் தொடர்புபடுத்தலாம் போல் தெரிகிறது. அவ்வாறு கருதுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. 12 ஆம் நூற்றாண்டுக்குரிய சோழக் கல்வெட்டு, இப்பிராந்தியத்திற்கு அண்மையிலுள்ள பதவியாவில் இருந்த சிவன் கோயிலுக்கு கோணாவிலைச் சேர்ந்த வெண்காடான், எறிமணியொன்றைக் கொடுத்ததாகக் கூறுகிறது. இவ்விடம் பூநகரியில் உள்ள கோணவில் என்பதற்கு சில ஆதாரங்கள் உண்டு (புஷ்பரட்ணம் 2000:125-8).
இராஜராஜ சோழனது வடஇலங்கை வெற்றி சிங்கள் இராசதானிக்குட்பட்ட இராஜரட்டைப் பிரதேசம் அனைத்தையும் உள்ளடக்கியிருந்தது. அநுராதபுரத்திற்கு வடக்கிலுள்ள பிராந்தியத்தை நாகதீபம் என அழைத்த பாளி நூல்கள் அதனுடன் இராஜரட்டையையும் உள்ளடக்கிக் கூறியதற்குச் சான்றுகள் இல்லை. அநுராதபுரத்தின் பின்னர் பொலநறுவையைத் தனது தலைநகராகத் தெரிவு செய்த இராஜராஜ சோழன் அதற்கு ஜனநாதமங்கலம் என்ற விருதுப் பெயரையும், இலங்கைக்கு மும்முடிச்சோழ மண்டலம் என்ற பெயரையும் இட்டான். இவையிரண்டும் இராஜராஜ சோழனது விருது, பட்டம் சார்ந்த பெயர்களாகும். இவ்வாறான நிலையில் இராஜராஜன் நாகநாட்டையோ, நாகர்களையோ தனித்து இனங்காட்டி அதன் வெற்றிக்காக நாணயம் வெளியிட்டிருப்பான் எனக் கூறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்றே கூறலாம். இந்த இடத்தில் நாணயத்தில் வரும் உரக என்ற சொல் நாக இன மக்களை அல்லது நாக நாட்டைக் குறித்ததெனக் கொண்டால் இந்நாணயத்தை முதலாம் இராஜராஜ சோழனோடு தொடர்புபடுத்துவதைவிட, பராந்தகச் சோழனுடன் தொடர்புபடுத்துவதே பொருத்தமாக உள்ளது.
முதலாம் பராந்தகச் சோழனின் இலங்கை மீதான வெற்றியைப் பற்றி சூளவம்சம் எதுவுமே கூறாத நிலையில் அவனது 38 ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு ‘மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்’ எனச் சிறப்பித்துக் கூறுகிறது (S.I.I.11:35). இவ்வெற்றியை கலிங்கத்துப்பரணியும் (பாட்டு 200), இராஜராஜன் உலாவும் (வரி 39-40) கூறுகின்றன. இவற்றில் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளும் இருக்கலாம். ஆனால் யாழ்ப்பாணத்திற்கு வெளியே பூநகரியில் உள்ள மண்ணித்தலை என்ற இடத்தில் பெருமளவு மண்ணில் புதையுண்ட நிலையில் சோழர்கால ஆலயமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கல்வெட்டுகள் இதுவரை கிடைக்காவிட்டாலும் ஆலயத்தின் அமைப்பு, பாணி, கலை வேலைப்பாடுகள், பயன்படுத்தப்பட்ட ஓடுகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இது முற்காலச் சோழக் கலைமரபுக்குரியதெனக் கூறமுடிகிறது (புஷ்பரட்ணம் 1993:83-95). அதேபோல் பல்லவராயன் கட்டுப்பகுதியில் கிடைத்த சூரியச் சிற்பமும் பிற்பட்ட பல்லவ அல்லது முற்பட்ட சோழக் கலைமரபுக்குரியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. பூநகரியில் புழக்கத்தில் இருந்து வரும் குடமுறுட்டியாறு, மண்ணியாறு, நல்லூர், சோழியகுளம் போன்ற இடப்பெயர்கள் பெரிதும் முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் சோழமண்டலத்தில் புழக்கத்திலிருந்த இடப்பெயர்களாகும். பாண்டியர், சோழர் அநுராதபுர அரசை வெற்றி கொள்ள முன்னர் வடஇலங்கையில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்கலாம். அவ்வாறு கருதுவதற்குப் பாளி இலக்கியங்களிலும் சில சான்றுகள் உண்டு. பேராசிரியர் கே.எம்.டி. சில்வா இக்காலத்தில் தமிழகப் படையெடுப்பாளர்களுக்கு வடஇலங்கையே தளமாக இருந்ததென்பதை சான்றாதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார் (1980). சூளவம்சம் கூறும் நாகதீபத்தின் மீதான தென்னிந்தியப் படையெடுப்பு, இவன் படையெடுத்த காலத்துடன் தொடர்புடையதாகும். இதில் வரும் நாகநாட்டை ஒரு அரசுக்குட்பட்ட நாடாகச் சுட்டுவதாக எடுத்துக்கொள்ள இடமுண்டு. ஏனெனில் ஏறத்தாழ இதே காலத்தைச் சேர்ந்த (கி.பி. 9 ஆம் நூற்றாண்டு) உதயணன் பெருங்காதையையும், பிற்பட்ட மயிலநாதர் உரையும் இலங்கையைச் சிங்களம், ஈழம் எனத் தனித்தனியாகக் கூறுகின்றன (வேலுப்பிள்ளை 1986:10). இச்சான்றுகள் இலங்கையில் இருவேறு அரசுகள் இருந்ததெனக் கருத இடமளிக்கிறது. ஈழம் என்ற சொல் வரலாற்று மூலங்களில் சில சந்தர்ப்பங்களில் முழு இலங்கையைச் சுட்டி நின்றாலும் பல சந்தர்ப்பங்களில் நாகநாடான வடஇலங்கையைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். பாண்டியர் காலக் கல்வெட்டில் நாகநாட்டைக் குறித்த ஈழம் (A.R.E.1917:No.588 of 1916), விஜயநகரக் கல்வெட்டில் யாழ்ப்பாணத்தைக் குறிக்கிறது (S.I.I.:No.778). இந்த வேறுபாடு ஆள்புலத்தைக் குறிக்காது அரச தலைநகரத்தைக் குறிக்கின்றது. ஏனெனில் விஜயநகரக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த தலைநகர், பாண்டியர் காலத்திற்கு முன் நாகநாட்டில் (வன்னியில்) இருந்துள்ளது. இங்கே போத்துகேய ஆவணங்களில் வரும் உரயில், நிலாவெளிக் கல்வெட்டில் வரும் உராகிரிகாம, சோழ நாணயத்தில் வரும் உரக என்பவற்றிக்கிடையே பெயரடிப்படையில் ஒருவித ஒற்றுமை காணப்படுகிறது. இதனடிப்படையில் நாகநாட்டை வெற்றி கொண்டதற்காகவே ‘உரக’ என்ற பெயர் பொறித்த நாணயம் பராந்தகச் சோழனால் வெளியிடப்பட்டதெனக் கூறலாம். இக்காலத்தில் ஈழம் என்ற சொல் வடஇலங்கையின், அதாவது நாக நாட்டின் இன்னொரு பெயராக இருந்துள்ளதைக் காணமுடிகிறது. கல்வெட்டுகளைப் பெரும்பாலும் தமிழில் வெளியிட்ட சோழ மன்னர்கள் சர்வதேச வர்த்தக நோக்கத்திற்காக நாணயங்களை வடமொழியில் வெளியிட்டுள்ளனர். இந்த வேறுபாட்டையே பராந்தகன் காலக் கல்வெட்டுகளில் வரும் ஈழம் என்ற நாட்டுப் பெயரும், நாணயங்களில் வரும் உரக என்ற நாட்டுப் பெயரும் எடுத்துக்காட்டுவதாகக் கொள்ளலாம். இச்சான்றாதாரங்களின் பின்னணியில் வைத்துப்பார்க்கும் போது ‘உரக’ என்ற பெயர் பொறித்த நாணயத்தை வடஇலங்கையின் வெற்றிக்காக முதலாம் பராந்தகன் வெளியிட்டான் எனக் கூறுவதே பொருத்தமாகும்.
குறிப்பு : நாணயங்களுக்குரிய படங்களைத் தந்துதவிய நாணயவியலாளர் அளக்குடி ஆறுமுக சீதாராமனுக்கு நன்றி.
உசாத்துணை
- Codrington, H.A. 1924, Coins and Currency, Colombo.
- Desikachari, T. 1933, South Indian Coins.
- Elliot, W. 1970 Coins of South India, Prithivi Prakasan, Varanasi, Mitchiner, M 1998, The Coinage and History of Southern India, Hawkins Publication.
- Nagaswamy, R. 1981, Tamil Coins, Madras.
- Nicholas, C.W., 1963, Historical Topography of Ancient and Medieval Ceylon in Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society, Colombo, VI.
- Nilakanta Sastri, K.A., 1984, The Colas, Madras.
- Ragupathy, P., 1991, The Language of the Early Brahmi Inscription in Sri Lanka (Unpublished).
- Seyon, K.N.V., 1998, Some Old Coins Found in Early Ceylon, Nawala, Sri Lanka.
- Sircar, D.C., 1968, Studies in Indian Coins, Motilal Banarsidass, Delhi.
- Sircar, D.C., 1971, (E.d), Early Indian Indigenous Coins, Sri Sibendranath kanjilal, Calcutta.
- காசிநாதன், நடன,. 1995 தமிழர் காசு இயல், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.
- கிருஷ்ணராசா, செ., 1998, தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும், பிறைநிலா வெளியீடு, யாழ்ப்பாணம்.
- சிவசாமி,வி., 1974, யாழ்ப்பாணக் காசுகள், நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகள் (ப.ஆ.).
- வித்தியானந்தன்,சு,. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கை கிளை, கொழும்பு. 26-36.
- சீதாராமன் ஆறுமுகம், 1986, இராஜராஜனின் ஈழக்காசுகள், தமிழ்நாடு நாணயவியல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை.
- பத்மநாதன், சி. 1998, (ப.ஆ.) தக்ஷணகைலாச புராணம், இலங்கை இந்து கலாசாரத்திணைக்கள வெளியீடு, கொழும்பு.
- பாலசுப்பிரமணியம், குடவாயில், 1988, ஈழத்து வெற்றியும் ராஜராஜன் காசும், தினமணி (9.12.1988).
- பவானி,ம. 2000, இடைக்காலக் கல்வெட்டுக்களில் நாணயப் பெயர்களும் அவற்றின் புழக்கமும், ஆவணம் 11:130-4.
- புஷ்பரட்ணம், ப,. 1993, பூநகரி தொல்பொருளாய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, யாழ்ப்பாணம்.
- புஷ்பரட்ணம், ப. 1999, வடஇலங்கையில் அரசதோற்றமும் பாண்டியர் வெளியிட்ட நாணயங்களும், தமிழ் நாட்டு நாணயங்கள் அருங்காட்சியகங்கள், சென்னை 6-9.
- புஷ்பரட்ணம், ப., 2000, தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை.