யாழ்ப்பாண நகரத்தின் வரலாற்றுச் சுவடுகள்
இலங்கைத் தமிழரின், குறிப்பாக வடபகுதித் தமிழரின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு நகரம் யாழ்ப்பாணம். 1619 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர், 1621 ஆம் ஆண்டு, அப்போது இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரைக் கைவிட்டு இன்று கோட்டை இருக்கும் பகுதிக்குத் தமது தலையிடத்தை மாற்றினர். இந்த நிகழ்வே வட இலங்கையின் முதன்மை நகரமாக யாழ்ப்பாணம் உருவானதன் தோற்றுவாய் ஆகும். இதைத் தொடர்ந்தே இப்பகுதியில் போர்த்துக்கேயரின் கோட்டையும், இன்றைய பிரதான வீதியை அண்டிய போர்த்துக்கேயர் நகரமும் உருவாகின. இவற்றை அடிப்படையாகக் கொண்டே இன்றைய யாழ்ப்பாண நகரம் வளர்ச்சியடைந்தது. எனவே வரும் 2021 ஆம் ஆண்டு யாழ் நகருக்கு 400 வயது நிறைவடைகின்றது.
இந்த நிகழ்வையொட்டி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 400 ஆண்டுகால யாழ்ப்பாணத்தின் வரலாறு, பண்பாடு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சார்ந்த கட்டுரைகள் இத்தலைப்பில் தொடராக வெளிவரவுள்ளன. இந்த இதழில் இக்கட்டுரை இவ்விடயம் தொடர்பான அறிமுகமாக வெளிவருகின்றது.
யாழ் நகரம் அதன் வரலாற்றுக் காலத்தில், அதன் நிர்வாக எல்லைகளுக்கும் அப்பால் பரந்துள்ள பிரதேசங்கள் தொடர்பிலும் பல்வேறு பொருளாதார, அரசியல், நிர்வாக, பண்பாட்டு வகிபாகங்களைக் கொண்டதாக இருந்துள்ளது. தற்போது நம்மிடையே நிலவும் அரசியல் கொள்கை நிலைப்பாடுகளுக்கு ஏற்ப, யாழ் நகரத்தின் தோற்றம் குறித்துப் பல்வேறு விதமான பார்வைகள் இருக்கக்கூடும். எப்படிப் பார்த்தாலும் யாழ் நகரத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த நானூறு ஆண்டுகளாக விரும்பியோ விரும்பாமலோ நமது வாழ்க்கை இதைச் சுற்றியே நடந்துள்ளது. இனியும் பல நூறு ஆண்டுகள் இவ்வாறே இருக்கும்.
யாழ்ப்பாண நகரம் யாரால், எதற்காக உருவாக்கப்பட்டது என்னும் ஒரு அரசியல் விமர்சனப் பார்வைக்கு அப்பால், இதன் தோற்றமும், நான்கு நூற்றாண்டு கால வளர்ச்சியும் நமது மண்ணில், நமது வளங்களைப் பயன்படுத்தி, நமது முன்னோரின் உழைப்பினால் ஏற்பட்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இது நமது மரபுரிமைச் சொத்து. இங்கிலாந்தின் புகழ் பெற்ற பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சிலின் கூற்றொன்றை அடிப்படையாகக் கொண்டு, “நாம் நகரங்களை உருவாக்குகிறோம் நகரங்கள் நம்மை உருவாக்குகின்றன” என்னும் ஒரு கருத்து முன்வைக்கப்படுவது உண்டு. நாம் உருவாக்கும் சூழல் நம்மை உருவாக்குகிறது என்பது இதன் அடிப்படைக் கருத்து ஆகும். இதிலிருந்து யாழ் நகரை உருவாக்கி வளர்த்ததில் நமக்கு எவ்வாறு பங்கு உண்டோ அதுபோலவே நமது சமூகத்தை உருவாக்கியதில் யாழ் நகருக்கும் பங்கு உண்டு என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஒரு நகரம் என்பது, கல்லாலும், மண்ணாலும், சுண்ணாம்பாலும், சீமெந்தாலும், மரத்தாலும் இவை போன்ற பிற பொருட்களாலும் ஆன ஒரு சடப் பொருள் என்ற உணர்வே நம்மிற் பலருக்கு உண்டு. ஆனால், ஒரு சமூகத்தின் வரலாற்றுத் தகவல்களைத் தம்முள் பொதித்து வைத்திருக்கும் அறிவுப் பெட்டகங்களாகவும் நகரங்கள் விளங்குகின்றன என்பது நமக்குத் தெரிவதில்லை. யாழ்ப்பாண நகரமும் நமது சமூகத்தின் சாதனைகள், வேதனைகள், வெற்றிகள், தோல்விகள், ஆக்கங்கள், அழிவுகள், இலாபங்கள், நட்டங்கள், எழுச்சிகள், வீழ்ச்சிகள் போன்றவற்றைப் பல்வேறு வகையில் பொதிந்து வைத்துள்ளது. இவ்வாறான பொதிவுகள் நமது மரபுரிமைச் செல்வங்களும், வரலாற்றுச் சான்றுகளும் ஆகும். அது மட்டுமன்றி மேற்சொன்ன உட்பொதிவுகளும் உள்ளாற்றலும், நகரத்தின் பொருளாதார பண்பாட்டு வளர்ச்சிக்கு அடிப்படையான வளங்களாக அமையக்கூடியவை. இதனால் இவற்றைப் பற்றி ஆழமாக அறிந்துகொண்டு இந்நகரத்தை முறைப்படி பாதுகாத்து வளர்த்துச் செல்ல வேண்டியது நமது கடமை.
யாழ்ப்பாண நகரம் தன் வரலாற்றில் பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் சந்தித்துள்ளது. புயல், வெள்ளம், தொற்று நோய்கள், போர்கள், பஞ்சம் போன்றவை காலத்துக்குக் காலம் நகரில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய போதிலும் மீண்டும் மீண்டும் நிமிர்ந்து நிற்கக்கூடிய வல்லமை யாழ் நகரத்துக்கு எப்போதும் இருந்துள்ளது. நீண்ட காலமாக இலங்கைத் தீவின் முதல் மூன்று பெரிய நகரங்களில் ஒன்றாக யாழ் நகரம் விளங்கி வந்துள்ளது. ஆனால் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட சூழ்நிலைகளாலும், அதனால் ஏற்பட்ட அழிவுகளாலும், மக்களின் புலப்பெயர்வுகளினாலும் யாழ்ப்பாணம் இத்தர வரிசையில் மிகவும் பின் தங்கிய நிலைக்கு இறங்கிவிட்டது. ஒரு மாகாணத் தலைநகரம் என்ற அளவில் முழு வடமாகாண மக்களுக்குமே முக்கியமான நகரம் என்பது மட்டுமன்றி, தமிழர், தமிழ் மொழி என்பன சார்ந்த பல்வேறு எழுச்சிகளுக்கு மையமாக இருந்த நகரம் என்ற வகையில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்குமே பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் இது உள்ளது. இந்த முக்கியத்துவத்துக்கு ஏற்ற தகைமைகளைக் கொண்ட ஒரு நகரமாக நமது யாழ் நகரத்தை மீண்டும் உருவாக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. எனவே இந்த நானூறு ஆண்டுகள் நிறைவு பெறும் வேளையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இதற்கான செயற்பாடுகளைச் செறிவாக முன்னெடுக்க முயல வேண்டும்.
நகரத்தின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இச்செயற்பாடுகளின் முக்கியமான நோக்கமாக அமையவேண்டும். நகரின் வரலாற்றை உணர்ந்துகொள்ளல், நகரின் பண்பாட்டு மரபுரிமைகளைப் பாதுகாத்துப் பயன்படுத்திக்கொள்ளல், இந்த நாட்டில் யாழ் நகரத்துக்கு உரிய இடத்தை உருவாக்கி வளர்த்தெடுத்தல், நகரின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புக்களை மேம்படுத்துதல், சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், நகரத்தின் மேம்பாட்டுக்கு உழைத்த நமது முன்னோர்களின் பணிகளைக் கௌரவித்தல், நகரின் இன்றைய நிலை குறித்தும் எதிர்காலத் தேவைகள் குறித்தும் ஆழமாக ஆராய்தல், நகரைச் சுத்தமாகவும் அழகாகவும் பேணுதல் போன்றவற்றின் அடிப்படையில் செயற்பாடுகள் அமையலாம். கண்காட்சிகள்: கருத்தரங்குகள்: கலந்துரையாடல்கள்: விரிவுரைத் தொடர்கள்: ஊடகக் கட்டுரைகள், கட்டுரைத் தொடர்கள், பிற அம்சங்கள்; பல்வேறு வகையான போட்டிகள்; அரங்க நிகழ்வுகள்; சிரமதானம், தன்னார்வலப் பணிகள் முதலிய களப் பணிகள் போன்றவற்றினூடாக முற்கூறிய செயற்பாடுகளை முன்னெடுக்கலாம்.
உரிய பொறுப்புக்களில் உள்ளவர்கள், மக்களிடையே இது குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திப், பல்வேறு திட்டங்களை முன்னரே தொடங்கியிருக்க வேண்டும். இந்த நிகழ்வை நல்ல முறையில் பயன்படுத்துவதாயின், இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்து நாம் பேசத் தொடங்கியிருக்க வேண்டும். இப்பொழுது வேறு பிரச்சினைகள் எல்லோருடைய கவனத்தையும் திசை திருப்பிவிட்டன. ஆனால், நாம் நினைத்தால் இது குறித்த விழிப்புணர்வைச் சாதாரண மக்கள் மட்டத்திலிருந்து மேல் நோக்கி எடுத்துச் செல்ல முடியும்.
தொடரும்.