அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த 3 ஆவது தகுதிவாய்ந்த மருத்துவர் சாமுவேல் பிஸ்க் கிறீன். இவரது தந்தை: வில்லியம் கிறீன், தாயார்: யூலியா பிளிம்டன். பதினொரு பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் கிறீன் 8 ஆவது பிள்ளை. கிறீன் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தின் வூஸ்டா என்னுமிடத்திலுள்ள கிறீன் ஹில் என்னும் கிராமத்தில் 1822 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 10 ஆம் திகதி பிறந்தார்.
கிறீனுக்கு 11 வயது ஆகும் போது அவரது தாய் யூலியா காலமானார். மூத்த சகோதரியின் அரவணைப்பில் வளர்ந்த கிறீன், பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக தமது சகோதரிகளிடமும் தந்தையாரிடமும் வீட்டிலே கற்றுத் தேறினார். கிறீன் பொதுவாகவே உடல்வலிமை குறைந்தவராகக் காணப்பட்டார். வாழ்வின் பல்வேறு காலப்பகுதிகளில் கிறீனுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டது.
கிறீன் 1841 இல் நியூயோர்க்கிலுள்ள மருத்துவர்கள் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்தார். இங்கே மருத்துவக் கல்வியுடன் ஜேர்மன், இலத்தீன், கேத்திரகணிதம், இயற்கை விஞ்ஞானம் மற்றும் தத்துவம் முதலான பாடங்களையும் கற்று, பரந்த அறிவை வளர்த்துக் கொண்டார். கிறீன் மருத்துவ மாணவனாக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் இருதடவைகள் அவரது மருத்துவக் கல்வி தடைப்பட்டது; இதனால் மருத்துவக் கல்வியை 3 ஆண்டுகளில் பூர்த்தி செய்ய இயலவில்லை; ஓராண்டு தாமதமாகி 1845 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி மருத்துவராகத் தகுதி பெற்றார்.
எப்போதும் ஆன்மிகத்திலும் மிசனரி சேவையிலும் நாட்டமுள்ளவராக விளங்கிய மருத்துவர் கிறீன், பிறதேசங்களுக்கு மிசன் தொண்டர்களை அனுப்பும் அமெரிக்க மிசன் பணியகத்துடன் 1846 இல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.
இலங்கையில் அமெரிக்க மருத்துவ மிசனரியின் பணியை ஆற்றுவதற்கு விரும்பிய மருத்துவர் கிறீன், தமது விருப்பத்தைக் கடிதம் மூலம், பிறதேசங்களுக்கு மிசன் தொண்டர்களை அனுப்பும் அமெரிக்க மிசன் பணியகத்துக்கு (ABCFM) அனுப்பினார். கிறீனது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்க மிசன் பணியகம் கிறீனுக்கு அனுமதி வழங்கும் நியமனக் கடிதத்தை அனுப்பியது. கிறீன் இந்தக்கடிதத்தை 1846 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி பெற்றுக் கொண்டார். அனுமதிக் கடிதம் கிடைத்ததும் கிறீன் இலங்கைப் பயணத்துக்கான ஆயத்தங்களையும் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களைக் குறித்தும் வினவி, அமெரிக்க மிசன் பணியகத்துக்குக் கடிதம் வரைந்தார்.
கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, மற்றும் ஜேர்மன் முதலான மொழிகளைக் கற்றிருந்த கிறீன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவதற்கு முன்பே அமெரிக்காவிலே தமிழ் மொழியைக் கற்க விரும்பினார். 1833-1843 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலே அமெரிக்க இலங்கை மிசனில் கடமையாற்றியவரும், நியுஜெர்சியில் வசித்துவந்தருமான வண. சாமுவேல் ஹச்சிங்ஸ் அவர்களிடம் சில வாரங்கள் தமிழ் படிப்பதற்கு விரும்பினார். இதற்கான அனுமதியைக் கேட்டு அமெரிக்க மிசன் பணியகத்துக்குக் கடிதம் வரைந்தார்; ஹச்சிங்ஸை சந்தித்து உரையாடியும் வந்தார்.
கிறீன் யாழ்ப்பாணத்தில் தனக்கு ஏற்படும் இன்றியமையாத செலவுகளையும், ஏற்கனவே தாம் பயணத்துக்கு தயார் செய்தபோது ஏற்பட்ட செலவுகளையும் குறித்துக் கணக்கு அறிக்கையைத் தயாரித்து அமெரிக்க மிசன் பணியகத்துக்கு அனுப்பியிருந்தார். அமெரிக்காவிலிருந்து குதிரை வண்டில் ஒன்றை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்ல அனுமதியும் பெற்றிருந்தார்.
1840 களில் யாழ்ப்பாணத்திலே குதிரை ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்; அதேவேளை அமெரிக்காவிலே தரம் வாய்ந்த கை மணிக்கூடு ஒன்றின் விலை 25 அமெரிக்க டொலர்.
கிறீன் அமெரிக்காவின் போஸ்டன் துறைமுகத்திலிருந்து “ஜேக்கப் பேர்க்கின்ஸ்” என்ற கப்பலில் இலங்கையை நோக்கிப் புறப்பட ஆயத்தமானார். நீண்ட கடற்பயணத்தின் போது தமிழ்மொழியைக் கற்பதற்காக தமிழ் இலக்கண நூல் ஒன்றை எடுத்துச் செல்ல விரும்பி அமெரிக்க மிசன் சங்கத்துக்கு விண்ணப்பித்தார். எனினும் சில தினங்களில் திரு. கிரேன் என்பவரிடம் இருந்து தமிழ் இலக்கண நூல் ஒன்று கிறீனுக்குக் கிடைத்தது. இதனை அமெரிக்க மிசன் சங்கத்துக்குக் கடித மூலம் தெரியப்படுத்தினார்.
மருத்துவர் கிறீன், போஸ்ரன் துறைமுகத்திலிருந்து 1847 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி “ஜேக்கப் பேர்க்கின்ஸ்” என்ற கப்பலில் யாழ்ப்பாணம் நோக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை ஆரம்பித்தார். அந்தக் கப்பல், அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடந்து ஆபிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைத் தாண்டி இலங்கைத் தீவைச் சுற்றிச் சென்று 1847 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 4 ஆம் திகதி சென்னையை அடையும் வரை நான்கரை மாதங்கள் எங்குமே தரிக்கவில்லை.
கப்பல் ஆபிரிக்காவின் நன்னம்பிக்கை முனையை அண்மித்தபோது மிகக் கடுமையான புயல் தாக்கியதால் கவிழும் நிலைக்குச் சென்றது. இதன்போது கிறீன் காயமடைந்தார். கப்பல் இலங்கைத் தீவைச் சுற்றி பயணித்த போது தீவின் அழகையும் அமைப்பையும் கிறீன் பார்வையிட்டவாறு சென்றார். மருத்துவர் கிறீன் சென்னையில் அமெரிக்க மிசனரிகளுடன் இரு வாரங்கள் தங்கியிருந்துவிட்டு, 1847 ஆம் ஆண்டு ஓக்ரோபர் மாதம் 6 ஆம் திகதி பருத்தித்துறை வந்தடைந்தார்.
மருத்துவர் கிறீனது 200 ஆவது பிறந்த ஆண்டை யாழ்ப்பாணத்தில் நினைவு கூருதலுக்கான சொற்களின் பொழிவு:
- அமெரிக்க மிசனரி மருத்துவரான சாமுவேல் பிஸ்க் கிறீன் இலங்கையில் முதலாவது மேலைத்தேச மருத்துவக் கல்லூரியை யாழ்ப்பாணத்தில் மானிப்பாயில் 1848 இல் நிறுவினார். இதுவே தென்கிழக்காசியாவில் நிறுவப்பட்ட முதலாவது மேலைத்தேச(அலோபதி) மருத்துவக் கல்லூரியாகக் கருதப்படுகிறது.
- மருத்துவர் கிறீன் தமிழ்மொழியை ஆழமாகக் கற்றுத் தமிழில் சொற்பொழிவாற்றவும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கவும் கலைச்சொல்லாக்கவும் வல்ல தமிழ்ப் புலமையாளர்.
- கிறீன் ஆங்கில மொழியிலிருந்த 8 பிரதான மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்ததுடன் வேறு சில அறிவியல் நூல்களையும், கலைச் சொல் அகராதிகள், மருத்துவக் கையேடுகள், கட்டுரைகள் முதலானவற்றையும் தமிழாக்கம் செய்துள்ளார்; இவை 4500 பக்கங்களில் வெளிவந்துள்ளன.
- மருத்துவர் கிறீன் அவர்களை தமிழின் கலைச் சொல்லாக்க முன்னோடி என்று ‘தமிழக மற்றும் ஈழ’ நாட்டுத் தமிழறிஞர்கள் போற்றுகின்றனர்.
- உலகிலே முதன் முதலில் 1864 ஆம் ஆண்டு தமிழ்மொழி மூலம் மேலைத்தேச மருத்துவம் மருத்துவர் கிறீன் அவர்களால் இற்றைக்கு 150 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ள மானிப்பாய் மருத்துவக் கல்லூரியில் கற்பிக்கப்பட்டது. (The very 1st Tamil medium batch was started in 1864 and taught by Dr. S. F. Green at the Medical School in Manipay).
- யாழ். போதனா மருத்துவமனையானது யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த சேர். பெர்சிவல் ஒக்லண்ட் டைக் அவர்களால் 1850 இல் ஆரம்பிக்கப்பட்டது. மருத்துவர் கிறீன் அவர்களே இம் மருத்துவமனையில் கடமையாற்றிய முதலாவது வருகை சத்திரசிகிச்சை நிபுணர் ஆவர். 1850 முதல் 1907 வரையான காலப்பகுதியில் யாழ். போதனா மருத்துவமனையில் (யாழ்ப்பாணம் ஆபத்துக்குதவி வைத்தியசாலை) கடமையாற்றிய மருத்துவர்களிற் பெரும்பாலானோர் மருத்துவர் கிறீனது மருத்துவக் கல்லூரியில் பயின்றவர்களே.
- தமிழ்நாட்டில் மொழிப்போராட்டம் தீவிரமடைந்த காலத்தில் தமிழ்நாட்டில் அனைத்திலும் தமிழுக்கே முதலிடம் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. தமிழ் மொழியில் அறிவியலும் மருத்துவமும் கற்பிக்கப்படல் வேண்டும் என்ற கல்விக்கொள்கை முன்வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலே தமிழில் ஆங்கில மருத்துவத்தைப் கற்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்மொழிந்த போது, திராவிட இயக்கத் தலைவர்களால் தமிழ்நாட்டின் நடமாடும் பல்கலைக்கழகம் என்று போற்றப்பட்ட நாவலர் இரா. நெடுஞ்செழியன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“நாம் இப்போது தான் தமிழிலே அறிவியலை, மேலைத்தேச மருத்துவத்தைக் கற்பிப்பது பற்றிச் சிந்திக்கின்றோம். ஆனால் சென்ற நூற்றாண்டில் யாழ்ப்பாணத்திலே ஓர் அமெரிக்கர் தமிழில் மேலைத்தேச மருத்துவத்தைக் கற்பித்தார் என்ற செய்தியை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.”
(தொடரும்)