புதுத்தொழில்முனைவோர் மனத்தன்மை (Entrepreneur Mindset)
Arts
7 நிமிட வாசிப்பு

புதுத்தொழில்முனைவோர் மனத்தன்மை (Entrepreneur Mindset)

October 1, 2022 | Ezhuna

திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில், புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற கட்டுரையாளரது பட்டறிவின் மொழிதலே இது. ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை’ என்ற இக்கட்டுரைத்தொடர் உலகில் மிகப்பிரபலமான தொழில் நுட்பதாரிகளைப்பற்றியும் அவர்களது ஆரம்ப நிலை தொழில் நிறுவனங்களை (Startup Companies) அமைக்கும் போது எதிர் கொண்ட சில முக்கியமான நுணுக்கங்களை (Nuances)  அடிப்படையாகக் கொண்டும், கட்டுரையாளரின் வணிகரீதியான சாதிப்பு அனுபவங்களைப் பகிர்வதாக அமைகிறது.

 “வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற” — திருக்குறள் (661)

மு.வரததாசனார் விளக்கம்:

ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய  மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.

திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில் , புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற எனது பட்டறிவின்  மொழிதலே இது.  இந்தப் பட்டறிவு எனக்குள்ளே மாத்திரம் இருப்பதைவிடவும், எல்லோருடனும் பகிர்வதன் மூலம், வணிக உலகில் சரியான பாதையில் நீங்களும் பயணித்து, சாதிக்க முடியுமென்ற உந்தலின் விளைவே இந்தக் கட்டுரைத்தொடர். 

Apple CEO Steve Jobs with his LISA computer in 1983

ஒன்று உலகில் கொடிகட்டிப் பறக்கும் மிகப்பெரிய வணிக நிறுவனங்களும், அவற்றின் உருவாக்குநர்களும் கூட ஆரம்பத்தில் மிகச் சாதாரண நிலையில் இருந்து உருவெடுத்தவர்களே. அப்பிள் நிறுவனத்தின் நிறுவுநர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜொப்ஸ் (Steve Jobs). பிறந்தவுடனேயே அவரை, அவரது தாயார் தத்துக்கொடுத்து விட்டார். அவரைத் தத்தெடுத்த பெற்றோர் ’சிலிக்கன் பள்ளத்தாக்கில்’ வேலை செய்துகொண்டிருந்தனர். அவரைப் பெற்ற தாயாரின் கனவோ  ’என் மகன் பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாக வேண்டும்’ என்பது.  ஆனால் ஸ்டீவ்  ஜொப்ஸின் கனவோ வேறுவிதமாக இருந்தது.  சிறுவயதிலிருந்தே இயந்திரவியல் மீதும், கணணிகள் மீதுமே அவரது ஆர்வம் பெருக்கெடுத்தது. தானே அவற்றைப் பற்றி சுயமாக தேடித் தேடி கற்றறிந்தார். பல்கலைக்கழகத்துக்கு அவர் தெரிவானபோதும், அதிக நாட்கள் அந்த வாழ்க்கை நீடிக்கவில்லை. பெற்றோரின் சேமிப்பை வீணாக்குவதை விட, அதைவைத்து சொந்தமாக ஒரு தொழிலைத் தேட விரும்பினார். அதன்விளைவாக சில நிறுவனங்களை அவர் ஆரம்பித்தார். அப்படி அவர் தனது நண்பனொருவருடன் இணைந்து ஆரம்பித்த நிறுவனங்களில் ஒன்றே ‘அப்பிள்’ நிறுவனம். அது அவரது வாழ்வையே அடியோடு மாற்றியது. தனது வெற்றிக்கான பிரதான மூன்று காரணிகளை ஸ்டீவ் ஜொப்ஸ்,  2005ம் ஆண்டு Stanford University பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியபோது பட்டியலிட்டார். அந்தக் காரணிகளில் முதலாவது விடயம் “பெரிதாக சிந்தி” (Think Big) என்பதே. ஸ்டீவ் ஜொப்ஸ்  சொன்ன  “பெரிதாக சிந்தி” என்பது,  பல்பரிமாண (Multi-dimensional) அர்த்தம் உள்ளது. பொருட்களை செய்யும்போது அதை எப்படி பாவனையாளர்கள் சுலபமாகவும் விருப்போடும் பாவிப்பார்கள் என்பதைக் கவனிப்பது முக்கியம். 

Apple iPod 1st generation

பெரிதாக எதையும் சிந்திப்பதன் மூலமே, அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரமுடியும். என் தொழில் முனைவிலும் ‘பெரிதாகச் சிந்தித்தல்’ பல  திருப்புமுனைகளை உண்டாக்கியிருந்தது. அவை பற்றியெல்லாம் இந்தக் கட்டுரைத்தொடரில் ஆங்காங்கே சொல்ல விழைகின்றேன்.  ’பெரிதாகச் சிந்தித்தல்’ என்பது, ஒரு புத்தொழில் நிறுவனத்தை (Startup Company) ஆரம்பித்தவுடனேயே கொடிகட்டிப் பறப்பதல்ல. மாறாக, எந்த இலக்கை நாம் பெரிதாகச் சிந்தித்திருந்தோமோ அதை நோக்கி நகரும் வழிகளைக் கண்டடைதலே. அதற்கான சில வழிமுறைகளை நான் கைக்கொண்டிருந்தேன்.

1.பிரச்சினை அறிக்கை (Problem Statement):

முதலாவதாக நாம்  ஒரு பிரச்சினையை இனங்கண்டு, அதற்கான தீர்வு நோக்கி நகர வேண்டும். அந்தப் பிரச்சினையை நீங்கள் நேரடியாக எதிர்நோக்கியிருக்கலாம் அல்லது மற்றவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இதை தெரிவித்திருக்கலாம். 

உதாரணமாக  இலங்கையில்  எரிபொருள்வளம் இல்லை. எனவே எரிபொருளுக்காக இலங்கை வேறுநாடுகளில் தான்  தங்கியிருக்கவேண்டும். இது இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். எனவே எரிபொருளின்மை என்ற பிரச்சினைக்கு என்ன வகையான மாற்று சக்தியைக் கண்டடையலாம் என்பது நோக்கியே எமது சிந்தனை இருக்க வேண்டும்

2.வாய்ப்பு அளவு (Opportunity Size):

எந்தத் திட்டத்தையும் தொடங்குவதற்கு முன்பு , அதன் முழுமையான வாய்ப்பு அளவை (TAM – Total Addressable Market) சராசரியாக ஆராய்ந்து அறிய வேண்டும். அதன் மூலம் இறுதியில் பணம் சம்பாதிக்க முடியுமா என்று சிந்தித்து தொடங்க வேண்டும். 

மேலே சொல்லப்பட்ட ‘இலங்கையில் எரிபொருள் இன்மை’ என்ற பிரச்சினைகான தீர்வாக கண்டறியப்படும் மாற்று சக்தியை தனியே இலங்கையின் தேவையை மட்டும் பூர்த்தி செய்வதோடு நின்றுவிடாமல், அந்த மாற்று சக்தியை ஏனைய நாடுகளுக்கும் ஒரு ஏற்றுமதியாக்கும் முறைமையைக் கண்டறியலாம்.

3.அடிப்படை அறிவு (Foundational Knowledge):

அடிப்படை அறிவு என்பது நாம்  சிறு வயதிலிருந்தே பாடசாலையிலும் மற்றும் சூழலிலும் கற்றுக்கொள்ளும் விடயங்கள். அவற்றைக்கொண்டு அதை அத்திபாரமாகக் வைத்து  உற்பத்திகளை மேற்கொண்டால், பல சாதக நிலைகளை உண்டுபண்ணும். 

Solar power project

நான் இலங்கையில் போர்க்காலத்தில் வாழ்ந்த போது கூடுதலான நேரம் மின்சாரம் இல்லை. அப்போது கிராமத்து இளைஞர்கள் துவிச்சக்கர வண்டியின் டைனமோவைப் பாவித்து அதிலிருந்து பெறப்படும் மின்சாரத்திலேயே வானொலியை இயங்கச் செய்தார்கள். அதற்கு அவர்கள் படித்த இயற்பியல் (Physics) அடிப்படை அறிவைக் கொடுத்தது. இதே  முறைமையைக் கொண்டுதான், பெரிய அளவில் காற்றாலை மூலம் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. ஆகவே டைனமோவை வைத்து மின்சாரத்தைப் பெற்றுக்கொண்டவர்களால், காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்வதென்பது பழக்கப்பட்ட ஒன்றாக, சுலபமானதாக இருக்கும்.

4.மனித வளம் (Human Resources):

ஒவ்வொரு தொழில் துறையையும் வெற்றிகரமாக கொண்டு செல்ல, அதனை நகர்த்த ஆளணி அல்லது மனித வளம் மிக முக்கியமானது குறித்த தொழிலில் அனுபவம், பட்டறிவு என்பவற்றில் நிபுணத்துவம் பெற்ற மனித வளத்தைக் கண்டறிவது தொழில்முனைவோரின் முக்கியமான செயல்முறையாகும்.

5.நிதி வளங்கள் (Financial Resources):

தொழிலை ஆரம்பிக்கவும், செயற்படுத்தப்படும் திட்டங்களை முன்னெடுக்கவும் நிதிவளம் இன்றியமையாதது. ஆனால் அந்த நிதி மூலங்களை கண்டறிவதிலும்,கையாள்வதிலுமே பெரும்பான்மையான தொழில் முனைவுகளின் வெற்றி, தோல்வி என்பன தீர்மானிக்கப்படுகின்றன.

 இலங்கையில் வளர்ச்சியடைந்த மற்றும் பெரிய நாடுகளுடன் போட்டி போட பணவசதி குறைவு. ஆனாலும் அரசாங்கம், சர்வதேச உதவி செய்யும் சங்கங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து இவற்றைச் செய்ய தொடங்கலாம். நான் மேலே சொன்னது போல் இப்படியான கூட்டாண்மைகள்  உள்ளூர் உற்பத்திகளை இலங்கைக்கு வெளியே விற்பதற்கு உதவும்.

6.உற்பத்தி திட்டம் (Manufacturing Plan): இப்போதைய உற்பத்திப் பொருட்கள் இரண்டு விதமானவை. ஒன்று மென்பொருள் மற்றது வன்பொருள். மென்பொருட்கள் உற்பத்தி செய்வது விற்பனை செய்வது சுலபம். அதை இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கலாம். அத்தோடு பணக் கைமாற்றத்தையும் இலகுவாக இணையத்தளத்திலேயே செய்துகொள்ள முடியும். ஆனால் வன்பொருள் செய்வது தொடக்கம் அதை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவது வரையான படிமுறைகள் வேலைப்பளு கூடிய விடயங்கள். அதேசமயம், வன்பொருளை உருவாக்கி வாடிக்கையாளர்களை கைப்பற்றினால் அவர்கள் சுலபமாக விட்டுச்செல்லமாட்டார்கள். இவற்றை ஆழமாக ஆராய்ந்தே தொழில் திட்டங்களை தொடங்க வேண்டும்.

7.சந்தைப்படுத்தல் (Marketing):  உற்பத்திப் பொருள்களுக்கான சரியான சந்தைவாய்ப்பை பெற்றுக்கொடுத்தல் என்பது தொழில் முனைவின் மிகமுக்கியமானது. நாங்கள் பல விதமான எண்ணங்களுடன் பணத்தை செலவழித்து பொருட்களை செய்யலாம். ஆனால் அவற்றை பணம் கொடுத்து வாங்குவதற்கான வாடிக்கையாளர்கள் விரைவாகக் கண்டுபிடிக்காமல் போனால் நிதிவளம் குன்றி, உற்பத்திகள் தேங்கி, இறுதியில் நிறுவனத்துக்கே மூடுவிழாச் செய்யவேண்டியதுதான். 

 ஒரு புத்தொழில் வல்லுநராக வர நினைப்பவர்கள் முதலில் பெரிதாக சிந்திக்க வேண்டும். அத்தோடு அதை செய்வதற்கு தேவையான அடிப்படை அறிவுகளைச் சேர்க்க வேண்டும். 

இத்தகைய படிமுறைகள் ஊடாகவே, சிலிக்கன் வழியூடாக, நாம் உரையாடும் ஒலிகளை இணையத்தின் மூலம் (Voice over IP) சுலபமாக அனுப்பும் வழிமுறையை எமது நிறுவனத்தின் மூலம் கண்டறிந்தோம். இதன்போது  பல விடயங்களை ஆராய்ந்து செய்ய முனைந்ததனால் ஒரு  மிகப்பெரும் வெற்றியையும் தழுவினோம்.  

தொடரும்.

References:

Steve Jobs Stanford Commencement Speech 2005


ஒலிவடிவில் கேட்க

23023 பார்வைகள்

About the Author

கணபதிப்பிள்ளை ரூபன்

கந்தரூபன் (ரூபன்) கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ் மாவட்டத்தின் புலோலியைச் சேர்ந்தவர். போர் காரணமாக ஆபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பின் அங்கிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று இளமாணி, முதுமாணிப் பட்டங்களை இயந்திரவியலில் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களில் பல புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி பல கோடி டொலருக்கு விற்றுள்ளார். மேலும் இவர் “Accidental Entrepeneur by Ruban” என்ற தலைப்பில் நூற்றிற்கு மேற்பட்ட கட்டுரைகளை தன்னுடைய அனுபவங்களை உள்ளடக்கி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)