பெண்களது கடந்தகால – நிகழ்கால சாதனைகளைக் கொண்டாடும் சர்வதேச மகளிர்தினம் (International Women’s Day) முதன்முதலாக 1911 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி கொண்டாடப்பட்டது. ஒரு நூற்றாண்டு காலமுடிவில் 2011 ஆம் ஆண்டு அது நினைவுகூரப்பட்டதோடு, ஒவ்வொரு வருடமும் அதேதினத்தில் பூகோளரீதியாகத் தொடர்ந்து அது கொண்டாடப்பட்டும் வருகிறது. அவ்வாறு கொண்டாடப்படும்போது ஏதாவதொரு முக்கிய விடயத்தைக் கருப்பொருளாக வைத்தே அத்தினம் கொண்டாடப்படும்.
அண்மைக்காலங்களில் பெண்களது சமூக – பொருளாதார – அரசியல் அந்தஸ்தில் நேர்மறையான வளர்ச்சி ஏற்பட்டு வந்துள்ளபோதும், பெண்களைப் பொறுத்தவரை, உலகம் இன்றும் சமமற்ற ஒன்றாகவே இருந்து வருகின்றது. எனவே, பெண்களின் கடந்த கால – நிகழ்கால சாதனைகளைக் கொண்டாடும் அதேவேளையில், இந்த சமமற்ற நிலையினைப் போக்குவதற்கு எதிர்காலத்தில் என்ன முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துவது இன்றியமையாததாகும். பூகோளமட்டத்தில் சர்வதேச மகளிர்தினம் கொண்டாடப்படும் இச்சந்தர்ப்பத்தில் சில பொருளாதாரத்துறைகளில் பெருந்தொகையான பெண்கள் பணிபுரியும் எமது நாட்டினது பெருந்தோட்டத்துறையில் பெண்தொழிலாளரது நிலை எவ்வாறு உள்ளது என்பதை இச்சிறு கட்டுரை ஆராய்கின்றது.
அபிவிருத்தியின் அனைத்து அம்சங்கள் தொடர்பிலும், சமூக – பொருளாதாரநிலை தொடர்பான விடயங்களிலும் இன்று பால்நிலைச்சமத்துவம் ஒரு முக்கிய குறியீடாக கையாளப்படுகின்றது. வளரும் நாடுகள் பலவற்றில் காணப்படும் பெண்களின் நிலையுடன் ஒப்பீட்டுரீதியில் இலங்கையில் பெண்கள் மேலான ஒரு அந்தஸ்தை வகிக்கின்றனர் என்பது எம் அனைவரையும் பெருமிதம் கொள்ளவைக்கும் ஒரு விடயமாகும். கடந்த பல தசாப்தங்களாக அரசாங்கம் செயற்படுத்திவரும் இலவசக்கல்வி, இலவச மருத்துவ – சுகாதார வசதிகள், ஏனைய சமூகநலன் சேவைகள் என்பன காரணமாகவே எம் நாட்டுப்பெண்கள் கல்வி, சுகாதாரம், தொழில்வாய்ப்புக்கள் போன்றவற்றில் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். அவர்களது வாழ்க்கைத்தரமும் சமூகஅந்தஸ்தும் உயர்ந்துள்ளன. பால்நிலை சமத்துவம் இலங்கையின் அரசியல் யாப்பிலும் உள்வாங்கப்பட்டுள்ளமை (12 – 2 ஆம் சரத்து) இங்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினுங்கூட, நாட்டின் சில உற்பத்தித்துறைகளில் பெண்களின்நிலை பின்தங்கியுள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். இந்தவகையில் பெருந்தோட்டத்துறையில் அதிலுங்குறிப்பாக, தேயிலைக் கைத்தொழிலில் பெண்களின் பின்தங்கியநிலையை இங்கு விசேடமாகக் குறிப்பிடலாம். தேயிலைத் தோட்டங்களின் ஊழியப்படையில் 60.0 வீதமானோர் பெண்களேயாவர். ஆனால், தீர்மானங்கள் மேற்கொள்ளும் மட்டங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவானதாகும். அதிகாரத்துவம் கொண்டதும் படிமுறையானதுமான பெருந்தோட்ட ஊழிய அமைப்பில் பெண் தொழிலாளர்களே ஊழியப்படையின் மையமாக உள்ளனர். அத்துடன், தேயிலைத்தோட்டங்களில் ஆண்களை விட பெண்களே கூடுதலான நேரம் உழைக்கின்றனர்.
இத்தொழிலாளர்கள் பெருமளவிற்கு தோட்டங்களில் நிரந்தரமாகவே வசித்துவருவதால் அங்கு விசேட ஊழியக் கட்டுப்பாட்டுமுறையொன்று நடைமுறையிலுள்ளது. நாட்டின் ஏனைய துறைகளைச் சேர்ந்த பெண்களோடு ஒப்பீட்டுரீதியில் தோட்டத்துறைப் பெண்களது நிலை முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக உள்ளது. பெருந்தோட்டத்துறையின் படிமுறையான சமூக அமைப்பில் பெண்களுக்கு குறைந்த அந்தஸ்தே வழங்கப்படுகின்றது. வேலைத்தளத்தில் ஆண்களிலும் பார்க்க பெண்கள் நீண்ட நேரம் வேலைசெய்வதோடு அங்கு நிலவும் குளிரானதும் ஈரமானதுமான காலநிலையிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்குரிய பொருத்தமான ஆடைகளைக் கூட அவர்கள் அணிவதில்லை. அத்துடன், வெறுங்கால்களோடும் வெறுங்கைகளோடுமே தமது வேலைகளில் ஈடுபடுவதால் அவர்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் உள்ளாகின்றனர்.
தேயிலைத் தோட்டங்களின் மொத்த ஊழியப்படையில் அறுபது வீதத்திற்கும் மேலானோர் பெண்களாக இருந்தபோதும் ஆண்களாலேயே அவர்கள் மேற்பார்வை செய்யப்படுகின்றனர். இந்த ஆண் மேற்பார்வையாளர்களால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டபோதும் அவை பொதுவாக கவனத்தில் எடுக்கப்படுவதில்லை. அதேபோன்று, இரவு வேளைகளில் தேயிலைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளரும் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக கூறப்படுகின்றது. அண்மைக்காலத்தில்தான் அவர்களுக்கென பிரத்தியேகமான ஓய்வறைகளையும் மலசலகூடங்களையும் அமைத்துக் கொடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேயிலைத்தோட்டங்களில் ஆண்களிலும் பார்க்கப் பெண்களே கூடுதலானநேரம் வேலை செய்கின்றனர். கொழுந்துபறிக்கும் வேலையில் ஈடுபடும் அவர்களது வேலைநாள் சூரிய உதயத்திற்கு முன்னரே ஆரம்பித்து சூரியஅஸ்தமனத்தின் பின்னரே முடிவடைகின்றது. தோட்டவேலைக்கு அப்பாலும் அவர்கள் தமது வீடுகளில் உணவு தயாரித்தல், உணவுபரிமாறல், பாத்திரங்களைத் துப்பரவுசெய்தல், அன்றாடத் தேவைகளுக்காக நீர், விறகு போன்றவற்றை சேகரித்தல், பிள்ளைகளைப் பராமரித்தல் உட்பட பல்வேறு வேலைகளைச் செய்யவேண்டியுள்ளது. அடிப்படை வசதிகளில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள் காரணமாக வீட்டுவேலைகளை செய்வதில் அவர்கள் பல பிரச்சினைகளை (உ-ம்: நீர் விநியோகம், மலசலகூடவசதிகள், மின்சாரம் என்பன இல்லாமை, சமைக்கும் இடத்தில் காற்றோட்டமின்மை, வீட்டுவசதி போதாமை போன்றன) எதிர்நோக்குகின்றனர். தோட்டவேலை, வீட்டுவேலை என்பவற்றோடு நின்றுவிடாது குடும்ப வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட பல கிரியைகளையும் சமய சம்பந்தமான சில கிரியைகளையும் அவர்கள் செய்ய வேண்டியுள்ளது. எனவே, ஆண்களைப் போலன்றி வேலைதொடர்பில் அவர்கள் முப்பரிமாணப்பளுவை (Triple burden) சுமக்கவேண்டி இருப்பதாகக் கூறப்படுகின்றது. தொடர்ச்சியான வேலை காரணமாக அவர்களுக்கு ஓய்வுநேரம் கிடைப்பதில்லை. இதனால் தோட்டங்களுக்கு வெளியே சென்று முறைசாராக்கல்வி, தொழிற்பயிற்சி, கருத்தரங்குகள் போன்றவற்றில் பங்குபற்றுவதன் மூலம் தமது அறிவையும் அனுபவத்தையும் வினைத்திறன்களையும் வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பினை அவர்கள் இழக்கின்றனர்.
தோட்டங்களுக்கும் வெளிஇடங்களுக்குமிடையிலான தூரம், போக்குவரத்து வசதியின்மை என்பன இதற்குப் பங்களிக்கும் ஏனைய காரணிகளாகும். தோட்டங்களின் மூடியதன்மை, அதில் அவர்களது இரண்டாந்தரநிலை, குறைந்த கல்வியறிவு, குறைந்த வினைத்திறன்கள், குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பாரம்பரியக் கட்டுப்பாடுகள் என்பன காரணமாக வெளியுலகில் புதிய அறிவையும் அனுபவங்களையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு இருப்பதில்லை. பல குடும்பங்களில் பொருளாதாரத் தீர்மானங்களை மேற்கொள்வதிலுங்கூட, அவர்களோடு கலந்தாலோசிக்கப்படுவதில்லை.
பெருந்தோட்டச் சமூகம் ஆண்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட ஒரு சமூகமாகும். பெண்களுக்கெதிரான பால்ரீதியான துன்புறுத்தல்களும் வன்முறைகளும் தோட்டங்களில் பரவலாக இடம்பெறுகின்றன. இத்துறையைச் சேர்ந்த ஆண் தொழிலாளரிடையே காணப்படும் அதீத மதுப்பழக்கம் பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மாலைவேளைகளில் மதுபோதையில் வீட்டிற்குவரும் கணவன்மார்கள் தமது மனைவிமாரை அடித்துத்துன்புறுத்துவது சகஜமாக உள்ளது. இதனால் வீட்டிலிருக்கும் பெண்களும் பிள்ளைகளுமே உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சில குடும்பங்களில் மதுஅருந்துவதற்கு ஆண்கள் குடும்பவருமானத்தின் பெரும் பகுதியை செலவிடுவதால் குடும்பத்தலைவிகள் குடும்பத்தைக் கொண்டு நடத்துவதில் பாரதூரமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். போஷாக்குள்ள உணவிற்கும் குடும்ப அங்கத்தவர்களின் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் குறைந்தளவு பணமே எஞ்சுவதால் பெண்களும் பிள்ளைகளும் முதியோரும் பாதிக்கப்படுகின்றனர். குடும்பங்களில் பொதுவாக பெண்களே கடைசியாக உணவருந்தும் பழக்கம் காணப்படுவதால் அவர்கள் குறைந்தளவானதும், ஊட்டச்சத்து குறைந்ததுமான உணவை உண்பதால் அவர்களிடையே மந்தபோஷணம் அல்லது ஊட்டச்சத்துக்குறைவு, குறைவான உடல் எடை போன்றன முக்கிய பிரச்சினைகளாக உள்ளமை பல ஆய்வுகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இறுதியாக, பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களில் பெண்கள் வகிக்கும் பங்கினைப்பற்றி ஆராய்வது பொருத்தமானதாகும். தேயிலை உற்பத்தி ஊழியச்செறிவு கொண்ட ஒரு உற்பத்தி நடவடிக்கையாகும். தேயிலைத் தளிரைப்பறிப்பதற்கே பெருமளவு ஊழியம் கையாளப்படுவதாலும் இப்பணியில் முற்றுமுழுதாக பெண்களே ஈடுபடுவதாலும் தேயிலைத் தொழிலின் ஊழியப்படையில் பெண்களே பெரும்பான்மையினராக உள்ளனர். எனவே, இத்தொழிலோடு சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களிலும் பெண்களே பெரும்பான்மை வகிக்கின்றனர். ஆனால் ஆண் தலைவர்களின் ஆதிக்கத்தினால் பெண்களுக்கு அங்கு உரிய இடம் அளிக்கப்படுவதில்லை. தோட்டப்பெண்களின் கூட்டுச்செயற்பாட்டிற்கு காணப்படும் ஒரேயொரு தாபன அமைப்பும் தொழிற்சங்கங்களே. ஆனால் தொழிற்சங்கங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் காணப்படும் ஆணாதிக்கம் காரணமாக தமது பிரச்சினைகள் தொடர்பாக அவர்கள் எவ்வித கூட்டுநடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாத நிலையிலுள்ளனர்.
ஆண்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட தோட்டத்தொழிற்சங்க கலாச்சாரத்தில் பெண்களது குரல் பெரிதாக ஒலிப்பதில்லை. தீர்மானங்களை மேற்கொள்ளும் மட்டத்திலும் அவர்களது பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. தோட்டங்களின் மேற்பார்வை மட்டத்திலும், நிர்வாக அமைப்பிலும், முகாமைமட்டத்திலும் ஒரு சில பெண்களே உள்ளனர். அதேபோன்று, தொழிற்சங்கங்களின் தேசியமட்டத்திலும் பெண்களின் தலைமைத்துவம் அரிதாகவே காணப்படுகின்றது. மேலும் வகுப்பு, பால்நிலை, இனம், சாதி போன்ற பல்வேறு காரணங்களினால் பெண்கள் பணிந்து போகவேண்டிய நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையிலிருந்து விடுபடுவது சுலபமான ஒரு காரியமன்று. இதற்கு தோட்டங்களின் இன்றைய படிமுறை அமைப்பிலும், தொழிற்சங்கங்களின் செயற்பாட்டிலும், அதில் பெண்களது அந்தஸ்திலும் மாற்றங்கள் ஏற்படவேண்டும். குறுகியகாலத்தில் இவற்றைச் சாதித்துவிடமுடியாது. இதற்கு எல்லா மட்டங்களிலும் திடசங்கற்பமும் அயராத முயற்சியும் தேவைப்படும்.
தொடரும்.