இஸ்லாம் தோன்றுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பிருந்தே அரேபியர் சிறந்த வணிகர்களாக ஆசியாக் கண்டம் முழுவதும் பிரபல்யம் பெற்றிருந்தனர். ஆயினும், அரேபியர்களுக்கு முன்பிருந்தே பாரசீகர்கள் சீனாவுடனும் தூர கிழக்கு நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இத்தகைய வர்த்தகத்தின் ஒரு முக்கிய தலமாக இலங்கை விளங்கியது. கிபி. 5 ஆம் நூற்றாண்டில் அனுராதபுர மன்னனோடு பாரசீகத்தின் சாசானியச் சக்கரவர்த்திகள் இராஜதந்திர ரீதியான உறவுகளைக் கொண்டிருந்தனர் (இமாம், 1944, 1965:13). பட்டுத் துணிகளை ஏற்றிவந்த சீனக் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்துக்குள் நங்கூரமிட்டிருந்த அதே வேளையில் மேலைத் தேசத்திலிருந்து பொருட்களைக் கொண்டுவந்த கடல் வணிகர்களும் அண்டைய இந்தியாவிலிருந்து வந்த வணிகர்களும் பொருட்களை விற்கும், விநியோகிக்கும் வாங்கும் மத்திய தலமாக இலங்கை விளங்கியதோடு இந்நாட்டு உற்பத்திகளையும் அவ் வணிகர்கள் கொள்வனவு செய்தனர்.
அரேபியாவில் இஸ்லாம் தோன்றியவுடன் பாரசீகர்கள் அம் மதத்தைத் தழுவியதோடு அரபு மொழியையும் உபயோகிக்கத் தொடங்கினர். பரந்து விரிந்த அவர்களது வணிக நடவடிக்கைகளுக்கு இப் புதிய சமயம் உந்து சக்தியை வழங்கியது. ஏனெனில் இஸ்லாமிய சமுதாயத்தில் வணிகர்களுக்கு உயரிய அந்தஸ்து வழங்கப்பட்டதோடு வர்த்தக நடவடிக்கைக்காகவும் சமயப் பணிகளுக்காகவும் மேற்கொள்ளப்படும் பிறநாட்டுப் பயணங்கள் மிகவும் உற்சாகப்படுத்தப்பட்டன. இஸ்லாம் தோன்றிய மிகக் குறுகிய காலத்தினுள் மேற்காசியா முழுவதுமாக அட்லாண்டிக் சமுத்திரம் வரையான வட ஆபிரிக்கா நாடுகளும் இஸ்லாத்தின் வெற்றிக் கொடியின் கீழ் வந்துவிட்டன. 8 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யம் சிந்து முல்தான் வரையில் விரிவடைந்தது. பலதரப்பட்ட இனங்களுக்கு இடையே ஆத்மீக உரிமைப்பாடு ஒன்றினை புதிய மார்க்கம் ஏற்படுத்தியது. பக்தாதை தலைநகராகக் கொண்ட அப்பாசிய சாம்ராஜ்யத்தின் (751-1258) எழுச்சியுடன் ஆசியாவில் முஸ்லிம்களின் வர்த்தக மேலாதிக்கம் ஆரம்பித்தது. அரபு மொழியைப் பேசிய காரணத்தினால் அரேபியர் எனப் பொதுவாக அழைக்கப்பட்ட முஸ்லிம்களான பாரசீகர், அரேபியர், அபிசீனியர்கள் என்போர் ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டுகளில் இருந்து சீனா வரையான வாணிபத்தினை தமது பூரண ஆதிக்கத்தினுள் கொண்டுவந்தனர்.
9 ஆம் நூற்றாண்டளவில் இலங்கையில், குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் அரேபிய வணிகக் குழுக்கள் நன்கு வேரூன்றி இருந்தன. அவர்கள் ஆட்சியாளர்களின் நன்மதிப்பைப் பெற்றதோடு உள்ளூர் வாசிகளுடன் சுமூகமான உறவுகளைக் கொண்டிருந்தனர். இப்னு குர்தாஹ்பி (கி.பி 845) தனது ‘கீதாபுல் மக்சிகுவா இப்னு மாலிக்’ என்னும் நூலில் இலங்கையைப் பற்றிப் பலமுறை குறிப்பிடுகின்றார். செரந்திப் எனும் பெயரை உபயோகிக்கும் மிகப் பழைய அரபு புவியியல் நூல் இதுவாகும். ‘சிங்களதுவிப’ எனும் சொல்லும் இதில் உபயோகிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் முழுத்தீவும் ‘செய்லான்’ அல்லது ‘சஹிலான்’ என அழைக்கப்பட்டது. அத்துடன், கிரேக்கச் சொல்லான ‘தப்ரபேன்’ எனும் பெயரும் அரேபிய எழுத்தாளர்களினால் உபயோகிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கையைப் பற்றி பல்வேறு இடங்களில் கூறப்பட்டிருப்பதானது இலங்கைக்கும் அரேபியாவுக்கும் இடையேயான தொடர்பு வெறும் வர்த்தக ரீதியானது மட்டுமன்றி கலாசார அடிப்படையிலானது என்பதையும் காட்டுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளைப் பற்றிக் கேள்வியுற்ற இலங்கை மக்கள் நபிகளார் காலத்திலேயே தமது தூதுவராக ஒருவரைத் தேர்ந்தெடுத்து இஸ்லாமியப் போதனைகளைப் பற்றிய மூலாதாரத் தகவல்களைப் பெறுவதற்காக அத்தூதுவரை அரேபியாவுக்கு அனுப்பி வைத்ததாக கி.பி 953 ஆண்டளவில் இப்னு க்ஷஹ்ரியார் தனது ‘அஜாயிபுல் ஹிந்’ எனும் நூலில் குறிப்பிடுகிறார். ஆபத்தான இந்நெடும் பயணத்தின் பின்னர் இத்தூதுவர் மதீனாவை அடைந்த பொழுது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி 632 இல் மரணம் அடைந்திருந்தார். கலிபா உமர் (633 – 644) அவர்களை இத்தூதுவர் சந்தித்து நபிகள் நாயகம் பற்றியும் அவர்களது போதனைகள் பற்றியதுமான எல்லா விவரங்களையும் கேட்டறிந்தார். ஆனால் அவர் இலங்கைக்குத் திரும்பி வரும்போது வழியில் மரணம் அடைந்து விட்டார். ஆயினும் அவருடன் சென்ற உதவியாளர் இலங்கைக்குத் திரும்பி வந்து அப்புதிய மார்க்கத்தைப் பற்றியும் அதன் ஆரம்ப கால வரலாற்றைப் பற்றியும் தாம் அறிந்தவற்றைப் பற்றியும் எடுத்துக் கூறினார். இஸ்லாமியப் போதனைகளைப் பற்றி தனது எஜமான்களிடமிருந்து அறிந்தவற்றை தெள்ளத் தெளிவாக கூறக்கூடிய வல்லமை உடையவராய் இவ் உதவியாளர் இருந்திருப்பார் என எதிர்பார்க்க முடியாது. அவரது எஜமானர் இலங்கைக்குத் திரும்பி வந்திருந்தால் அதனால் ஏற்பட்ட விளைவுகள் முற்றிலும் வேறுபட்டதாக இருந்திருக்கும். எனினும் திரும்பி வந்த உதவியாளர் இஸ்லாத்தைப் பற்றிய நல்லெண்ணம் ஒன்றை இந்நாட்டில் உருவாக்கியதன் காரணமாக இலங்கைக்கு வந்த முஸ்லிம்கள் வரவேற்று நன்கு உபசரிக்கப்பட்டனர் (இமாம், 1944, 1965:13).
இதே போன்ற குறிப்பினை 16 ஆம் நூற்றாண்டின் பாரசீக வரலாற்று ஆய்வாளரான பிரிஸ்தோ என்பவரினது குறிப்புகளிலும் காணக்கூடியதாக உள்ளது. இலங்கையுடனான முஸ்லிம்களின் தொடர்பு குலபா எர்ராக்ஷிதீன்களுடைய காலத்திலேயே ஆரம்பித்து விட்டதாக அவர் குறிப்பிடுகின்றார் (இமாம், 1944, 1965:13). எனினும் இத்தகைய தகவல்களை அவர்கள் எங்கிருந்து பெற்றதாக இப்னு க்ஷஹ்ரியாவோ அல்லது பிரிஸ்தோவோ தமது நூல்களில் குறிப்பிடவில்லை. எனினும் இரண்டு நாடுகளுக்கும் இடையே இருந்த நீண்ட வர்த்தகத் தொடர்புகளை கவனத்தில் கொள்ளும் பொழுது இக்குறிப்புகளை நம்பக் கூடியதாய் உள்ளது. தமது தாய் நாட்டில் ஏற்பட்ட சமயப் புரட்சியைப் பற்றி கேள்விப்பட்ட இந்நாட்டில் வாழ்ந்த இஸ்லாத்திற்கு முற்பட்ட அரேபியர்கள் அரேபியாவுக்கான இத் தூதுக் குழுவினை ஏற்பாடு செய்திருக்கக்கூடும் என்ற யூகமும் இங்கு நியாயமானதே.
கி.பி 892 இல் மரணம் அடைந்த ‘பலதூரி’ எனும் வரலாற்று ஆசிரியரின் கூற்றுப்படி இஸ்லாமிய உலகுடன் நல்லுறவைப் பேணிப் பாதுகாப்பதற்காக எல்லா முயற்சிகளையும் இலங்கையின் ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர் எனத் தெரிகிறது. இவர்களது வணிக முயற்சிகளுக்கு இந்நல்லுறவு மிக அவசியமான ஒன்றாகவே கருதப்பட்டது. 715 ஆம் ஆண்டில் சிந்து மாகாணத்தை அரேபியர் வெற்றி கொள்வதற்கு முற்பட்ட காலத்தில் ‘மாணிக்கத் தீவு’ எனக் கூறப்பட்ட இலங்கையின் மன்னன் ஈராக்கின் பலம் பொருந்திய ஆட்சியாளரான ‘ஹஜ்ஜாஜ் பின் யூசுப்’ என்பவரின் நன்மதிப்பைப் பெறுவதற்காக இலங்கையில் பிறந்து அனாதைகளான பெண் குழந்தைகள் சிலரினை அந்நாட்டுக்கு அனுப்பி வைத்தார். முஸ்லிம் வணிகர்களான அவர்களின் தந்தைமார் இலங்கையில் இறந்து விட்டனர். இவர்களை ஏற்றிச் சென்ற கப்பல்களை இன்றைய கராச்சியின் அருகே கடற் கொள்ளைக்காரர்கள் தாக்கினர். இதற்குப் பதிலடியாகவே சிந்து மாகாணம் வெற்றி கொள்ளப்பட்டு அரேபிய சாம்ராஜ்யத்துடன் இணைக்கப்பட்டது (இமாம், 1944, 1965:13).
முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்களின் இலங்கையைப் பற்றிய பல குறிப்புகள் ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டுகளில் உள்ளன. சுலைமான் தாஜிர், இப்னு மசூத், இபுன் க்ஷஹ்ரியா என்போர் அவர்களுள் முக்கியமானவர்களாவர். இவ்வாசிரியர்களால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையின் உற்பத்திப் பொருட்களுள் வாசனைத் திரவியங்கள், சந்தனக்கட்டைகள், மாணிக்கக் கற்கள், மன்னர்களாலும் பிரதானிகளாலும் பெரிதும் விரும்பப்பட்ட கித்துல்பாணி, மருத்துவ மூலிகைகள், இரும்பு என்பன சிலவாகும். 9 ஆம் நூற்றாண்டில் இருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை சீனப் பட்டாடைகளை மேலைத்தேயச் சந்தைகளுக்கு விநியோகிக்கும் மத்திய தலமாகவும் இலங்கை விளங்கியது.
ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டுகளில் அரேபிய வர்த்தகம் பெருமளவு அதிகரித்ததோடு கரையோர நகரங்களில் கணிசமான முஸ்லிம் குடியிருப்புகள் தோன்றியதையும் அகழ்வாராய்வுகள் நிரூபிக்கின்றன. பாரசீகரின் கட்டுப்பாட்டின் கீழ் கிழக்கு, மேற்கு வர்த்தகம் இருந்த காலத்தில் இலங்கையின் வர்த்தக கேந்திர நிலையமாக விளங்கிய மாந்தை பல்வேறு காரணங்களினால் முதன்மை நிலையைக் கொண்டிருந்தது. மாந்தை அனுராதபுர இராஜ்ஜியத்தின் பிரதான துறைமுகம். தலைநகரத்துடன் மாந்தையை இணைக்கும் பாதை ஒன்றும் இருந்தது. சர்வதேசக் கடல் வர்த்தகப் பாதைகளை இணைக்கும் கேந்திர நிலையமாக மாந்தை துறைமுகம் அமைந்திருந்ததால், மலபார் கரையோரமாகச் சென்று பின்னர் அரேபியா, பாரசீகம், எகிப்து என்பவற்றுக்குச் செல்லும் வழியாகவும் மாந்தை துறைமுகம் இருந்தது. மேலும் கரையோரமாக வங்காள விரிகுடாவிற்குச் சென்று அங்கிருந்து மலாக்கா, சுமாத்திரா, ஜாவா, மொலுகாஸ், சீனா என்பவற்றுக்குச் செல்லும் வழியையும் மாந்தை துறைமுகம் கொண்டிருந்தது. எனவே எவ்வாறு பாரசீகருக்கு மாபெரும் வணிகத்தலமாக மாந்தை விளங்கியதோ அவ்வாறே அரேபிய வணிகருக்கும் அது மாபெரும் வணிகத்தலமாக விளங்கியது.
இத்தகைய சுமூகமான வர்த்தகத்தின் மூலம் இலங்கையர் பெரும் பயடைந்தனர் என்பதை அலெக்சாண்டர் ஜோன்சனின் குறிப்புகளிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது (450 -473). மாந்தைக்கருகில் கட்டிய இராட்சதக் குளம் (யோதவாவி) அரேபிய வர்த்தகம் செழிப்புற்றிருந்த காலத்தில் மிக நன்றாகப் பராமரிக்கப்பட்டதோடு, பெரும் பரப்பளவிலான வயல்களுக்கு நீர்ப்பாசன வசதிகளையும் வழங்கியது. வறண்ட வலய விவசாயம் முற்று முழுதாக நீர்ப்பாசனத்திலேயே தங்கி இருந்தது. இன் நீர்ப்பாசன வசதிகளை உச்சப் பயன்பாட்டு நிலையில் வைத்திருப்பதற்கும் பராமரிப்பு, மனித வளம், பொருளாதார வளம் என்பன தேவைப்பட்டன. இதற்கான மேலதிக பொருளாதார வளம் அரேபியருடனான வெளிநாட்டு வர்த்தகம் மூலமே கிடைக்கப்பெற்றது. இராட்சதக் குளம் பின்னர் கைவிடப்பட்டு, சூழவுள்ள பிரதேசம் வனாந்தரமாக தனது காலத்தில் காணப்பட்டதாக அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் மேலும் கூறுகிறார். ஆகையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அரேபிய வர்த்தகம் இன்றியமையாததாக இருந்தது (அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன், 1911:537).
அரபு உலகத்துடனான தொடர்பு வர்த்தக ரீதியிலானது மட்டுமல்லாது சமய, பண்பாட்டுத் தொடர்புகளையும் கொண்டிருப்பதை பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கூபி எழுத்திலான அரபுக் கல்வெட்டு ஒன்று நிரூபிக்கின்றது. இஸ்லாமியக் கோட்பாடுகளையும் வழிமுறைகளையும் தமக்குப் போதித்து அவற்றை நடைமுறையில் பின்பற்ற வழிகாட்டுவதற்காக சமயப் போதகர் ஒருவரை அனுப்பி உதவுமாறு கொழும்பில் வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தினர் பக்தாதிய கலீபாவை வேண்டினார். இவ் வேண்டுகோளை ஏற்று கொழும்பு முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தைப் போதிக்கவும் இஸ்லாமிய வாழ்வு நெறிகளைப் பின்பற்றி வாழ்வதற்கான வழிகாட்டல்களை வழங்குவதற்காகவும், தொழுகை நடத்துவதற்குரிய பள்ளிவாசல் ஒன்றை அமைக்கும் முகமாகவும் அறிவியலாளரும் பண்புமிக்கவருமான காலித் இப்னு அபூபக்காயா இலங்கைக்கு அனுப்பப்பட்டார். இலங்கை மக்களுக்கு நல்ல இஸ்லாமிய வழிகாட்டல்களை வழங்கிய அபூபக்காயா கி.பி 948 இல் கொழும்பில் காலமானார். அவர் கட்டிய பள்ளிவாசலின் அருகிலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் இறந்ததன் பின்னர் அவரது அடக்கஸ்தலத்தின் மேல் கல்வெட்டுகளைப் பொழிவதற்காக வேண்டி சில அறிஞர்களை பக்தாதிய கலீபா கொழும்புக்கு அனுப்பி வைத்தார். அக் கல்வெட்டு அவரது அடக்கஸ்தலத்தின் மேல் சுமார் 800 வருடங்களாக இருந்தது. ஆயினும் கொழும்பிலிருந்த ஒல்லாந்த திசாவை (கலக்டர்), இதனையும் கொழும்பு முஸ்லிம்கள் மையவாடியில் இருந்த ஏனைய கல்வெட்டுகளையும் அகழ்ந்தெடுத்து தனது வீட்டின் படிக்கல்லாகப் பதித்தார். அலெக்சாண்டர் ஜோன்சன் காலத்தில் அது படிக்கல்லாகவே இருந்தது. அதன் பின்னர் கொழும்பு நூதனசாலைக்கு அது எடுத்துச் செல்லப்பட்டது. அபூபக்காயாவின் மறுமை வாழ்வுக்கான பிரார்த்தனை அக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது (சோமசிறி தேவந்திர). இலங்கை அரசர்கள் மதச் சகிப்புத்தன்மை மிகுந்தவர்கள் என அரேபிய நூலாசிரியர்கள் தமது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர். 12 ஆம் நூற்றாண்டில் ‘இத்ரீசி’ தமது நூலில் இலங்கை அரசவையில் 4 பௌத்தர்கள், 4 இந்துக்கள், 4 முஸ்லிம்கள், 4 கிறிஸ்தவர்கள் என 16 பேரைக் கொண்ட ஆலோசனை சபை ஒன்று இருந்ததாகவும் எல்லா மதத்தவரும் வரவேற்கப்பட்டு கண்ணியப்படுத்தப்பட்டதை இது காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வர்த்தக விடயங்களில் அரசனுக்கு ஆலோசனை கூறும் சபையாகவே இது கணிக்கப்பட்டது.
ஆட்சியாளர்களின் ஆசியோடு இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தாலும் உள்நாட்டில் வாழ்வதற்கு அவர்களுக்குச் சில காலம் பிடித்தது. குறிப்பாக உலகளாவிய ரீதியில் சந்தை வாய்ப்பைப் பெற்ற இரத்தினக் கற்களை உடைய சப்ரகமுவ அவர்களது விசேட கவனத்தை ஈர்த்தது. இந்நாட்டின் நவரத்தின வளங்களைப் பற்றி மார்க்கோ போலோ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “தலைசிறந்ததும் உண்மையானதுமான மாணிக்கக் கற்கள் இத்தீவிலேயே உற்பத்தியாகின்றன. உலகில் வேறு எங்கேயுமே அவை உற்பத்தியாகுவதில்லை. நீலக்கல் புக்ஷ்பராகம், செவ்வந்திக்கல் மணிகள் என்பன இந்நாட்டிலேயே உற்பத்தியாகின்றன. உலகத்திலேயே அதிசிறந்த மாணிக்கக் கல் இலங்கை நாட்டு மன்னன் வசமே உள்ளது. இதுவரை நாம் கண்ட அல்லது எப்போதாவது காணப் போகின்ற கற்களை விட இதுவே மிகச் சிறந்ததாகும் (லத்தோம் பெங், 1958:231).
‘பாவா ஆதம்’ மலையுடன் முஸ்லீம்கள் கொண்டிருந்த கலாசார தொடர்புகள்
இத்தகைய வளங்கள் அனைத்தையும் கொண்ட இரத்தினபுரிக்குச் செல்ல அரேபியர் விரும்பியமை இயற்கையானதே. புனித பாதை அடையாளத்தைக் கொண்ட பாவா ஆதம் மலைக்கு இரத்தினபுரி ஊடாகவே பயணித்தனர். பாவா ஆதம் மலையை புத்தருடைய பாத அடையாளம் என பௌத்தர்கள் நம்பிய அதே வேளை சிவபெருமானின் பாத அடையாளம் என இந்துக்கள் நம்பினர். ஆனால் ஆதம் சுவர்க்கத்திலிருந்து வந்திறங்கிய இடமென ஒன்பதாம் நூற்றாண்டில் அது கருதப்படலாயிற்று. தமது மூதாதையினரான ஆதம் தொடர்புபட்ட இவ்விடயத்தினை பாவா ஆதம் மலை எனக் கூறி முஸ்லிம்கள் கண்ணியப்படுத்த ஆரம்பித்தனர். சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவுடன் ஆதம் இவ்வுலகத்தில் முதலாவது காலடி வைத்த இடம் இதுவே என முஸ்லிம் உலகம் எங்கும் பாவா ஆதம் மலை பிரபல்யம் பெற்றது. சுவர்க்கத்திலிருந்து ஆதம் தன்னுடன் எடுத்து வர அனுமதிக்கப்பட்ட மரக்கிளையில் இருந்து இலங்கையின் வாசனைத் திரவியங்கள் உற்பத்தியாகின எனவும் கூறப்பட்டது (இஸ்லாமிய கலைக்களஞ்சியம்). 1344 இல் இலங்கைக்கு வந்த இப்னு பதூதா இந்நாட்டின் உட்பிரதேசங்களுக்குள் முஸ்லிம்கள் இலகுவாகச் செல்வதை சிங்களவர்கள் எதிர்த்ததாகக் குறிப்பிடுகிறார் (ஹீசைன், 1953:219). ஆனால் சிறீபாத என்பது பாவா ஆதம் மலையாக மாறியதும், மாணிக்கங்களைத் தேடிச் சென்றோர், சிங்களவருக்கு தம்மை யாத்திரிகர்களாகக் காட்டிக் கொண்டு, அப் பிரதேசங்களுக்குச் சென்றனர். இதனால் முஸ்லிம் யாத்திரிகர்களோடு வர்த்தகர்களும் ஒன்றாகச் சென்று மலை உச்சியில் தமது காணிக்கைகளைச் செலுத்தி விட்டு திரும்பி வரும் வழியில் இரத்தினக் கற்களையும் கொள்முதல் செய்து கொண்டு வந்தனர். இதன் மூலம் தமது சமயச் சடங்கு ஒன்றினை நிறைவேற்றியதோடு வர்த்தகத்திலும் ஈடுபட்டனர்.
பாவா ஆதம் மலை முஸ்லிம்களின் பிரபல்யமான யாத்திரைத் தலங்களில் ஒன்றாகும் என்பதற்கான பல ஆதாரங்களை அரேபிய யாத்திரிகர்களின் குறிப்புகளில் காணலாம். அரபு வர்த்தகரும் நாடுகாண் பயணியுமான சுலைமான் என்பவர், தான் கிறிஸ்துவுக்குப் பின் 850 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்ததை விபரிக்கும் பொழுது பாவா ஆதம் மலைக்குச் சென்றதைப் பற்றி இவ்வாறு விபரிக்கிறார்: “இஸ்லாமிய நாடொன்றாக இல்லாத நாட்டில் காடுகளுக்குள் அமைந்திருக்கும் மலைப் பிரதேசமொன்றில் மேற்கொள்ளும் இத்தகைய பயணங்கள், அதிலும் குறிப்பாக அந்நாட்டு மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் மிகவும் ஆபத்தானவையாகவே இருந்திருக்கும். கரையோரச் சிங்களவர்கள் அரபு வர்த்தகர்களைக் கண்டு பழக்கப்பட்டவர்களாயினும் உள்நாட்டுச் சிங்களவர்களுக்கு ஆரம்பத்தில் இவர்கள் பழக்கப்படாதவர்களாகவே இருந்திருப்பர். அதனால் அவர்களது வருகைக்கு ஆரம்பத்தில் (சிங்களவர்கள்) தடையாக இருந்தனர். பௌத்தர்கள் ஆரம்பத்தில் முஸ்லீம்கள் பாவா ஆதம் மலைக்குச் செல்வதைத் தடுத்ததோடு அவர்களை வெறுத்து ஒதுக்கி, அவர்களோடு உணவு அருந்துவதையும் அல்லது வேறு விதமான தொடர்புகளை வைத்திருப்பதையும் தவிர்த்தனர்” (ஹீசைன், 1953:219). சிங்களக் கிராமத்தவர்களின் சந்தேகங்களை நீக்கி இரத்தினக் கற்கள் அமைந்துள்ள பிரதேசத்திற்குள் சென்றமை முஸ்லிம்களின் பலவிதமான முயற்சிகளின் சாதுரியமாகும். இதற்கு முஸ்லிம் சமயப் பெரியார்களின் பக்தியும் விசுவாசமும் அவர்களது தெய்வீக சக்தியும் சிங்கள மக்களிடையே முஸ்லீம்கள் பற்றி நன்மதிப்பை ஏற்படுத்தியமை ஒரு காரணமாகும்.
இப்னு பதூதாவின் கூற்றுப்படி இலங்கைக்கு கிபி. 929 இல் வருகை தந்த க்ஷெய்க் அபு அப்துல்லா ஹபீப் என்பவரே பாவா ஆதம் மலைக்கான பாதையைத் திறந்து விட்ட முதல் யாத்திரிகர் ஆவார் (ஹீசைன், 1953:219). இருப்பினும் இச் சம்பவத்துக்கு முன்னரே ஏனைய அரபு யாத்திரிகர்கள் இம்மலையைத் தரிசித்ததற்கான தகவல்கள் உள்ள காரணத்தினால், சிங்கள மக்கள் மனதிலே இருந்த சகல சந்தேகங்களையும் நீக்கி, வருங்கால யாத்திரிகர்களுக்கு எவ்வித தங்கு தடையும் இன்றி இம்மலையை தரிசிப்பதற்கான வசதி வாய்ப்புகளை இலகுவாக்குவதிலேயே க்ஷேக் அபு அப்துல்லாவின் பணி அமைந்திருக்கலாம். இதனையே இப்னு பதூதாவும் குறிப்பிட்டு இருக்கலாம். பாரசீகத்தில் அதிக மதிப்பு வாய்ந்த க்ஷேக் அவர்கள் மேலும் 30 தர்வேஷிகளுடன் இலங்கைக்கு வந்ததாக இப்னு பதூதாவின் ரிஹ்லாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை மலைக்குச் செல்லும் பாதையினூடே அவர்கள் சென்று கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கு உணவு தேவைப்பட்டது. பெருந்தொகையான யானைக் குட்டிகள் உலாவித் திரிவதைக் கண்ணுற்ற தர்வேஷிமார் பசி தாங்க முடியாமல் அவற்றைப் பிடித்து உணவாக்க விரும்பினர். ஆனால் க்ஷேக் அவர்கள் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் பசியினாலும் களைப்பினாலும் வாடிய தர்வேஷிமார் அவரின் கருத்தைப் புறக்கணித்துவிட்டு யானைக் குட்டி ஒன்றைக் கொன்று அதனை உணவாக்கி உண்டனர்.
க்ஷேக் அவர்கள் அவ் உணவினை உண்ணவில்லை. அன்று நள்ளிரவில் தர்வேஷிமார் தூக்கத்தில் இருக்கும் பொழுது யானைக் கூட்டம் ஒன்று அவர்களைத் தாக்கிக் கொன்று, பழிதீர்த்துக் கொண்டது. ஆனால் யானைக் கூட்டம் க்ஷேக் அவர்களை முகர்ந்து பார்த்து, அவருடைய குற்றமற்ற தன்மையை அறிந்து கொண்டன. அவற்றுள் ஒரு யானை தன் தும்பிக்கையால் அவரைத் தூக்கி, தனது முதுகில் நிறுத்தி, மக்கள் வாழும் பகுதிக்கு சுமந்து சென்றது. ஆச்சரியமுற்ற கிராமத்தவர்கள் கூட்டமாகச் சேர்ந்து குதூகலித்தனர். யானை தனது தும்பிக்கையால் அவரைக் கீழே இறக்கி, எல்லோரும் அவரைத் தரிசிக்கும் வண்ணம், நிலத்தில் இறக்கியது. அந்த மக்கள் க்ஷேக் அவர்களை மன்னனிடம் அழைத்துச் சென்று, நடந்த அதிசயச் சம்பவங்களை அரசனுக்குக் கூறினர் (ஹீசைன், 1953: 219).
யானைக் கதைகள் தொடர்பாக பல்வேறு சம்பவங்கள் இலங்கை வரலாற்றில் கூறப்படுவதால், இச்சம்பவமும் ஒரு கதையாகவே கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். இதனைத் தொடர்ந்து, க்ஷேக் அவர்கள் சிறிதுகாலம் சிலாபத்தில் சிங்கள மக்களிடையே வாழ்ந்ததாகவும், பின்னர் தனது தாயகம் சென்று கி.பி 943 இல் ஹிராஸ் நகரில் மரணம் அடைந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன (ஹீசைன், 1953: 219). இம் மெய்ஞானி பற்றிய கதைகள் நாட்டின் பல பாகங்களில் உள்ள சிங்கள மக்களிடையே பரவி, அதன் மூலம் அரபு யாத்திரிகர்கள் பற்றிய நல்லெண்ணம் சிங்கள மக்களிடையே அதிகரிக்கக் காரணமாக அமைந்தது.
பாவா ஆதம் மலையைச் சுற்றியுள்ள மலைப் பிரதேசங்களில் பெறுமதிமிக்க அனைத்து வகை மாணிக்கக் கற்களையும் அவர்கள் சேகரிப்பதோடு, அவற்றை அண்டிய பள்ளத்தாக்குகளில் மோதிரங்களில் பதிக்கும் வைரக் கற்களையும் கண்டெடுக்கின்றனர். இதே மலைக் குன்றுகளில் நறுமணம் வீசும் வாசனைத் திரவியங்களும் மரங்களும் உள்ளதோடு, இத்தீவில் வாழ்வோர் நெல், தென்னை, கரும்பு என்பவற்றை உற்பத்தி செய்கின்றனர். பிரகாசமானதும் பெரிய அளவிலானதுமான பளிங்கு கற்களும் ஆறுகளிலே காணப்படுகின்றன. சூழவுள்ள கடலிலே விலைமதிப்பற்ற முத்துக்கள் பெருந்தொகையாகப் பெறப்படுகின்றன. செரன்தீப் அரசனுடைய செல்வத்துடன் ஒப்பிடக்கூடிய செல்வமுடைய இளவரசர் எவரும் இந்தியா எங்கும் கிடையாது. அவர் வசமுள்ள அளவற்ற செல்வமும், முத்துக்களும், ஆபரணங்களும் அவரது சொந்த நாட்டிலும் கடலிலும் பெறப்பட்டவை ஆகும். சீனாவிலிருந்து மற்றும் ஏனைய அண்டைய நாடுகளிலிருந்தும் வந்த கப்பல்களும், பாரசீகத்தின் குடிபானங்களைக் கொண்டு வந்த கப்பல்களும் இங்கு நங்கூரமிட்டுள்ளன. இக் குடிபானங்களை தனது பிரஜைகளுக்கு விற்பனை செய்வதற்காக மன்னர் கொள்வனவு செய்கிறார். குடிபானங்கள் அருந்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. விபச்சாரம் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் ஏனைய இளவரசர்கள் விபச்சாரத்தை அனுமதித்து, குடிபானங்களை விலக்கி உள்ளனர். செரன்தீப்பின் ஏற்றுமதிப் பொருட்களில் பட்டு, மாணிக்கக் கற்கள், பளிங்கு, வைரம், வாசனைத் திரவியங்கள் என்பன அடங்கியிருந்தன (அல் இத்ரீசி).
இப்னு பதூதா இந்நாட்டிற்கு வருகை தந்த காலத்தில், சிங்கள மன்னர்களால் மிகவும் கண்ணியமாக மதிக்கப்பட்ட பல முஸ்லிம் மதப் பெரியார்கள் இங்கு வாழ்ந்தனர். கொங்கார் (இது எந்த இடம் என்பது இனங் காணப்படவில்லை) எனப்படும் ராஜதானியின் சுற்றுப்புறத்தில் அமைந்திருந்த தனது பள்ளிவாசலில் வாழ்ந்த க்ஷேஹ் உஸ்மான் என்பவர் அவர்களுள் ஒருவராவார். இவரையே தனது வழிகாட்டியாக இப்னு பதூதா பாவா ஆதம் மலைக்கு அழைத்துச் சென்றார். மன்னனும் மக்களும் அடிக்கடி தரிசிக்கும் தலைநகருக்கு அருகில் இருந்த குகை ஒன்றில் வாழ்ந்த பக்தியான உஸ்தாத் மஹ்முத் லூரி என்பவரையும் இப்னு பதூதா குறிப்பிட்டுள்ளார். தனது இலங்கை விஜயத்தின் போது பாபா தாஹிர், பாபா குக்ஷ்தி ஆகிய ஏனைய முஸ்லிம் மதப் பெரியார்களையும் சந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இப்னு பதூதா மன்னாரில் ‘மண்டெல’ எனக் குறிப்பிடும் இடத்தில் குராசான் தேசத்திலிருந்து இங்கு வந்து, சுகவீனம் காரணமாகத் திரும்பிச் செல்ல முடியாமல் தங்கி இருந்த ஒரு முஸ்லிமையும் சந்தித்ததாகக் குறிப்பிடுகிறார் (ஹீசைன், 1953: 219).
தலைநகரைச் சுற்றியுள்ள பல முஸ்லிம் வணக்கஸ்தலங்களும் மதப் பெரியார்களும், புனித பாவா ஆதம் மலைக்குச் செல்லும் பாதையில் அமைந்திருந்தமை, சிங்கள சமுதாயத்தினரால் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், கண்ணியப்படுத்தப்பட்டதையும் காட்டுகின்றது. மலையின் உச்சிக்கு ஏறும் பாதையில் அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தூண்களில் தொங்கும் பத்து சங்கிலித் தொடர்களில் ஒன்று ‘இஸ்லாமிய சங்கிலி’ என அழைக்கப்படுவதில் இருந்தும், இப்னு பதூதாவின் இலங்கை தரிசனத்தின் போது, பெருமளவிலான அரபு யாத்திரிகர்கள் பாவா ஆதம் மலைக்குச் சென்றனர் என அறிய முடிகிறது. இந்த யாத்திரிகர்கள் இச் சங்கிலியை அடைந்து, கீழ்நோக்கிப் பார்ப்பதன் மூலம் காணும் பாரிய பாதாளத்தால் ஏற்படும் பயத்தால் உடனடியாக பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனால் முஸ்லிம்கள் இச் சங்கிலிகளுக்கு இவ்வாறு பெயரிட்டனர் எனக் கூறப்படுகின்றது (ஹீசைன், 1953: 219).
இக்காலத்தில் நாட்டின் உட்பிரதேசங்களில் பெரிய முஸ்லிம் குடியிருப்புகள் இருந்ததற்கான ஆதாரம் கிடையாது. ஆனால், ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதின்நான்காம் நூற்றாண்டுவரை பாவா ஆதம் மலை உச்சிக்குச் செல்லும் யாத்திரிகர்கள் அதிகரித்துள்ளனர். இதன் வழிநெடுகிலும் மார்க்கப் பெரியார்களின் அடக்கஸ்தலங்களும் குகை வாழ்விடங்களும் காணப்பட்டன. பாவா ஆதம் மலையின் உச்சிக்கு சுமார் 100 அடி கீழே காணப்படும் ‘பாதவலேனா’ எனப்படும் குகையில் காணப்படும் 13 ஆம் நூற்றாண்டுக்குரிய அரபுக் கல்வெட்டு, இம்மலைக்கு வந்த முஸ்லிம் யாத்திரிகர்களின் சிறந்த ஞாபகச் சின்னமாக விளங்குகின்றது. அத்துடன், நிசங்கமல்ல (1187-1296) எனும் அரசன் இம்மலைக்கு விஜயம் செய்து, அப் புனித தலத்தின் பராமரிப்புக்காக பல கிராமங்களையும் அன்பளிப்பாக வழங்கியதை குறிப்பிடும் சிங்களக் கல்வெட்டுக்கு அருகில் இக்கல்வெட்டும் அமைந்திருப்பது அதனுடைய முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது. இவ் அரேபியக் கல்வெட்டில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “அகிலத்தாரின் சிருஷ்டி கர்த்தாவான இறைவன், முஹம்மத் நபி (ஸல்) மீது அருள்பாலிப்பானாக” (இலங்கை விஞ்ஞான சஞ்சிகை, பகுதி V, பாகம் 11, பகுதி 1, ப:20).
புனிதமான இம்மலையில், ஒன்றின் அருகே இன்னொன்றாக சிங்கள பௌத்த கல்வெட்டும், அரேபிய இஸ்லாமியக் கல்வெட்டும் காணப்படுவது, இப்புனித மலையில் ஏறும் பல்வேறு இன, மத யாத்திரிகர்கள் இடையே காலாகாலமாக நிலவி வந்த சமய நல்லிணக்கத்தின் அடையாளச் சின்னமாக இம்மலை திகழ்கின்றமைக்குச் சான்றாகும்.
11 ஆம் நூற்றாண்டில் அரபு நாடுகள் இலங்கைக்கு வழங்கிய அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகள்
பதினோராம் நூற்றாண்டின் முடிவோடு, இலங்கையின் அரசியல் ஒருமைப்பாடு ஸ்திரமற்ற நிலைக்குச் சென்றது. யாழ்ப்பாணம் உட்பட பல சிற்றரசுகளாக இந்நாடு சிதறுண்டது. யாப்பகூவ, தம்பதெனிய, குருநாகல், கம்பல என காலத்துக்கு தலைநகரங்கள் மாற்றம் பெறலாயின. மன்னர்கள் எதிர்நோக்கிய அச்ச நிலையை இது பிரதிபலித்தது. சில பிரதேசங்கள், வன்னியர் எனப்படும் பிராந்தியத் தலைவர்களின் ஆளுகையின் கீழ் சென்றன. இதனால், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இருந்து யாழ்ப்பாணம் வேறுபடுத்தப்பட்டது. அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு இந்நிலைமை தொடர்ந்திருந்ததோடு, போர்த்துக்கேயரின் வருகையின் போது (1505) கோட்டை, கண்டி, யாழ்ப்பாண இராச்சியங்களாகவும், வேறு சில சிற்றரசுகளாகவும் நாடு பிளவுபட்டிருந்தது. மன்னர்களின் ஆளுமைக்கேற்ப இச்சிற்றரசுகள் எழுச்சியும் வீழ்ச்சியும் அடைந்தன.
அரசியல் ஸ்திரமற்ற நிலைமையினாலும், அதனைத் தொடர்ந்து இராஜரட்டையின் நெற்களஞ்சிய வீழ்ச்சியினால் பரந்த விவசாயப் பூமிகள் கைவிடப்பட்டதனாலும், பொருளாதார வீழ்ச்சி இலங்கையில் தவிர்க்கப்பட முடியாத ஒன்றாக மாறியது. நீர்ப்பாசன நாகரிகம் உச்சக் கட்டத்தில் இருந்த காலத்தில் நிலவரியே அரசாங்கத்தின் முக்கிய வருமானமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது மாற்று வருமானங்களுக்கான வழிகளை தேட வேண்டிய அவசியம் இலங்கை அரசுகளுக்கு ஏற்பட்டது. இதற்கான சாதகமான சூழலை தென்கிழக்காசியாவின் செழிப்பான வர்த்தகத்தில் அவர்கள் கண்டனர். இவ்வர்த்தகம் முஸ்லிம்களின் கைகளில் இருந்ததினால், இலங்கைக்கு சாதகமான பதிலே அதனால் கிடைத்தது. இம்முஸ்லிம்கள் ஏற்கனவே இத்தீவின் துறைமுகங்களில் நிலை பெற்றிருந்ததோடு, அதன் உள்ளூர் வர்த்தகத்திலும் ஈடுபட்டிருந்தனர். இத்தகைய பொருளாதார இக்கட்டான சூழ்நிலைக்கு, பாரம்பரியமாக முஸ்லிம்களுடன் இலங்கை கொண்டிருந்த சினேக உறவு பெரும் துணையாக அமைந்தது.
12 ஆம், 13 ஆம் நூற்றாண்டுகளில், வர்த்தகம் செய்யக்கூடிய அனைத்துப் பொருட்களையும் நாடளாவ ரீதியில் கொள்வனவு செய்யும் முகவர்களையும் உபமுகவர்களையும் முஸ்லிம்கள் எவ்வாறு இந்நாட்டில் நிறுவியிருந்தனர் என்பதைப் பற்றி அலெக்சாண்டர் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டில் சேகரிக்கப்படும் பொருட்களைப் பெற்றுச் சேமித்து அனுப்புவதற்காக, ஒவ்வொரு துறைமுகத்திலும் தமது முகவர்களை அவர்கள் நியமித்திருந்தனர். இவ்வாறு, கிழக்கு மாகாணத்தில் உள்ள அரிசி, நீலச்சாயம் என்பவற்றை திருகோணமலையிலிருந்தும்; சிவப்புச் சாயம், வீட்டுக் கூரைகளுக்கான பனைமரங்கள், கோவில்களில் சமயச் சடங்குகளில் உபயோகிக்கப்படும் சங்குகள் என்பனவற்றை யாழ்ப்பாணத்திலிருந்தும்; முத்துக்களை குதிரை மலையிலிருந்தும்; பாக்கு, வெற்றிலை, கருங்காலி மரத் தளபாடங்களுக்கு உரிய குதிரைமரம், ஆரஞ்சு நிறச் சாயத்துக்கான மரம் முதலியவற்றை புத்தளத்திலிருந்தும்; கறுவா, இரத்தினக்கல் என்பவற்றை கொழும்பிலிருந்தும்; தேங்காய் எண்ணெய், தும்புப் பொருட்கள் என்பவற்றை பேருவளையிலிருந்தும்; யானை, தந்தம் என்பவற்றை காலியில் இருந்தும் பெற்றனர். இவ்வாறு பெறப்பட்ட பெறுமதிமிக்க பொருட்கள் அனைத்தும் முஸ்லிம் வர்த்தகர்களினால் மன்னாரிலும் மாந்தையிலும் கட்டப்பட்டிருந்த பாரிய கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. மன்னார் தீவுக்கு அருகில் தம் சொந்தச் செலவிலே முஸ்லிம் வர்த்தகர்களால் நிறுவப்பட்ட ஆயுதக் கப்பல்களின் துணைகொண்டு, இந்திய சமுத்திரத்தில் நடமாடிய கடற் கொள்ளைக்காரர்களிடமிருந்து கடல் வர்த்தகப் பாதைகளையும் தமது வணிகத்தையும் பாதுகாத்தனர் (அலெக்சாண்டர் ஜோன்சன்).
இப்னு பதூதா கொழும்புக்கு வருகை தந்த போது, ஜெலஸ்தி எனும் பெயருடைய அமைச்சரும், கடற்படைத் தளபதியுமான ஒருவரும் அங்கு வாழ்ந்ததாகவும், இவர் தன்னுடன் 500 அபிசீனியர்களை வைத்திருந்ததாகவும், காலியில் வாழ்ந்த கேப்டன் இப்ராஹீம் என்பவர் பதூதாவிற்கு தனது இல்லத்தில் விருந்தளித்துக் கௌரவித்ததாகவும் குறிப்பிடுகின்றார் (ஹீசைன், 1953:219). பேருவளையில், குவாஜா ஜஹான் எனும் சரசானிய கொடுங்கோலன் வாழ்ந்ததாக ஜோன் டி மெரிக்நொல்லி குறிப்பிடுகிறார் (கொட்றிங்கடன், 1924:157). 1410 ஆம் ஆண்டு சீனக் கப்பல் தலைவன் செங்கோ என்பவரால் நிறுவப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய நூதனசாலையில் உள்ள காலி மும்மொழி சிலாசனம் பாரசீகம், தமிழ், சீனம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. பௌத்த, இந்து, முஸ்லிம் மத நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகளை குறிப்பிடும் இவ்வாவணம், காலியில் வாழ்ந்த முஸ்லிம் வர்த்தக சமூகத்தின் அளவையும் முக்கியத்துவத்தையும் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டும் சான்றாகும்.
மேலும் தங்களது சொந்தச் சட்டங்களின் கீழ் விசாரிக்கப்படுவதற்கான மிக முக்கிய சலுகை ஒன்றினையும் சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து முஸ்லிம் வர்த்தகர்கள் பெற்றிருந்தனர். முஸ்லிம்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள துறைமுகங்களில் ஏதாவது ஒன்றில் பிணக்குகள் ஏதும் ஏற்பட்டால் அது எவ்வித தாமதமோ செலவோ இன்றி முஸ்லிம் மதத்தலைவர், வர்த்தகர், மாலுமி என்பவர்களை உள்ளடக்கிய விசாரணைக் குழு ஒன்றினால் விசாரிக்கப்பட்டு விரைவாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதும் ஒரு சலுகையாகும். ஆசிய முஸ்லிம்கள் அனைவருக்கும் பொருத்தமானதாய் அமுல் செய்யப்பட்டு வந்த சட்டக் கோவைகளுக்கு ஒத்ததாகவே இவர்களது விசாரணையும் அமைதல் வேண்டும் என்ற நிபந்தனையும் அதில் பின்பற்றப்பட்டு வந்தது. நேரத்தை பெறுமதியாக மதிக்கும் இவ் வர்த்தகர்கள் நீண்ட காலத்தை எடுக்கும் விரிவான விசாரணைகளில் தமது காலத்தை வீணாக்க விரும்பாமல் இச் சலுகைகளைக் கேட்டுப் பெற்றனர். நெல் உற்பத்தியில் மட்டும் தங்கியிருந்த இந்நாட்டுப் பொருளாதாரம் ஏற்றுமதி வர்த்தகத்துக்கு மாறிக்கொண்டிருந்த இக்காலகட்டத்தில் அவ் ஏற்றுமதிப் பொருளாதார வருமானத்தை பெரிதும் வேண்டிய ஆட்சியாளர்கள் இச் சலுகையை முஸ்லிம்களுக்கு வழங்கினர்.
13 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பல்வேறு காரணங்களினால் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இருந்த பிணைப்பு மேலும் விரிவடைந்தது. சிங்கள இராச்சியங்கள் தென்மேற்கு நோக்கி நகர்ந்ததற்கும், அதன் விளைவாய் ஏற்றுமதி பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததற்கும் தென்னிந்தியப் படையெடுப்புகளும் ஓரளவு காரணமாக அமைந்தன. இத்தகைய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தகம் முஸ்லிம்களின் கையிலே இருந்ததனால் சிங்கள ஆட்சியாளர்கள் அவர்களின் மேல் தங்கி இருக்கும் நிலை மென்மேலும் அதிகரித்தது. முஸ்லிம்களின் தென்னிந்திய ஆதிக்கம் சுதந்திரமான யாழ்ப்பாண இராச்சியம் தோன்றுவதற்கும் காரணமாக இருந்தது. இவ் இராச்சியம் ஆரம்பத்தில் பாண்டியர் செல்வாக்கிற்கு உட்பட்டதாய் இருந்தது. யாழ்ப்பாணம், வாசனைத் திரவிய வர்த்தகத்தில் மிகவும் ஈடுபாடுடையதாக இருந்த காரணத்தினால், யாழ்ப்பாணத்துக்கு எதிரான சிங்கள – முஸ்லிம் இணைப்பு மேலும் விருத்தியடைந்தது. கீழைத்தேய வாசனைப் பொருட்களுக்கான கிராக்கி மேலைத்தேய நாடுகளில் அதிகரித்தது. அதன் விளைவாக தென்கிழக்காசியாவில் வாசனைத் திரவியங்களின் வர்த்தகம் வளர்ச்சி அடைந்தது. இவ்வர்த்தகப் பொருட்களை மேலைத்தேசங்களுக்கு கொண்டு செல்பவர்கள் அரேபியர் என்ற காரணத்தினால் வாசனைத் திரவியங்கள் அபரிமிதமாய் உள்ள தீவில் அவர்களது அந்தஸ்தும் மதிப்பும் உயர்ந்தன. கல்கி துக்ளக் என்பவரின் தலைமைத்துவத்தின் கீழ் இஸ்லாமியப் படைபலம் இந்தியாவில் உச்ச நிலை அடைந்ததனையும், அவர்களின் நாகரிக வளர்ச்சியையும் இலங்கை நன்கறிந்திருந்தது.
இப் பின்னணியிலேதான் யாப்பகூவையில் அரசாண்ட முதலாம் புவனேகபாகு மன்னன் (1273 – 1284) அல்ஹாஜ் அபூ உதுமான் தலைமையில் 1283 ஆம் ஆண்டில் எகிப்திய மன்னன் மம்லுக் என்பவரைச் சந்திக்க அனுப்பிய இராஜதந்திர தூதுக் குழுவின் முக்கியத்துவத்தை நோக்குதல் வேண்டும் (மென்டிஸ்:1983: 184). பக்தாத் தலைநகரத்தை விட அப்போது பிரபல்யம் பெற்று விளங்கிய எகிப்தோடு நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தி, அதன் மூலம் தனது அரசியல் செல்வாக்கையும், நலிவடைந்து கொண்டு செல்லும் பொருளாதார வளத்தையும் அதிகரிக்க முடியுமென மன்னனின் அரேபிய ஆலோசகர்கள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையிலேயே இத் தூதுக்குழு அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான நல்லுறவை தொடர்ந்து வைத்துக் கொள்வதற்காக எகிப்திய தூதுவரை இலங்கைக்கு அனுப்புமாறும், சுல்தானின் இராஜ்ஜியத்தில் உள்ள வர்த்தகர்களை இலங்கைக்கு வர்த்தகம் செய்ய வருமாறும் இலங்கை மன்னன் அழைப்பு விடுத்தான். அவ்வாறு வர்த்தகம் செய்யக்கூடிய நீண்ட பொருட்பட்டியலில் மாணிக்கக் கற்கள், முத்துக்கள், யானைகள், கறுவா என்பனவும் பட்டியலிடப்பட்டிருந்தன. சிங்கள அரசவையில் இருந்த பலம் பொருந்திய முஸ்லிம் செல்வாக்கின் விளைவாகவே இத் தூதுக்குழு அனுப்பப்பட்டுள்ளது என்பது மன்னனது கடிதத்திலிருந்து தெளிவாகின்றது. முஸ்லிம்களின் அபிலாசைகளோடு இந்நாட்டு ஆட்சியாளர்களது அபிலாசைகளும் மிகவும் நெருக்கமாக இருந்த காரணத்தினால் முஸ்லிம்களின் ஆலோசனைகள் தங்கு தடையின்றி மன்னர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மேலும் தென்னிந்தியாவிலிருந்து படையெடுப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் இருந்தமையினாலும், அவற்றைத் தாக்குப்பிடிக்கக் கூடியவாறு முஸ்லிம் உலகுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளின் மறைமுக ஏற்பாடாகவும் இவ் வர்த்தகத் தூதுக்குழு சென்றிருக்கலாம் எனக் கருத முடியும் (மென்டிஸ் 1981: 423).
இத் தூதுக்குழுவின் பயன் யாதென்பதை பற்றிய தெளிவுகள் இல்லையாயினும், இத் தூதுக்குழு இடையிலான தொடர்புகள் நீடித்திருந்ததை அவதானிக்க முடிகின்றது. ஏனெனில், கைரோவின் மம்லுக் மன்னர்களது காலத்து நாணயங்கள் கொழும்புக்கும் கண்டிக்கும் இடையிலே கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் அனேகமானவை சிங்கள மன்னன் இத் தூதுக்குழுவை வரவேற்று உபசரித்த சுல்தானது (1279-1290) காலத்துக்குரியதாகும். இக் காலப்பகுதயில் வாசனைத் திரவியங்களுக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட அதிகரித்த தேவை காரணமாக, மிகவும் இலாபத்தை தந்து கொண்டிருந்த கறுவா வர்த்தகத்தையும், முத்துக் குளிப்பையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகளுக்கும் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியதையும் காணக்கூடியதாக உள்ளது. இதனைத் தொடர்ந்து முஸ்லிம்களின் ஆதரவுடன் சிங்கள இராச்சியத்துக்கும் யாழ்ப்பாண இராச்சியத்துக்கும் இடையே ஏற்பட்ட பிணக்குகள் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான போட்டியாய் அல்லது வர்த்தக வளங்களைப் பெருக்குவதற்கான போட்டியாய் அமைந்தது (ஹொட்றிஹ்கடன் 1924: 158).
1344 இல் இப்னு பதூதா இலங்கைக்கு வருகை தந்த போது, சிங்கள இராச்சியத்தில் நிலவிய அமைதியின்மையால் யாழ்ப்பாண மன்னன் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உயர்நிலையை அடைந்து கொண்டிருந்தான். ஏமன் தேசம் வரைக்கும் வர்த்தகம் செய்யும் வர்த்தகக் கப்பல்களையும் ஆயுதம் தரித்த கடற்கொள்ளைக் கப்பல்களையும் ஆரியச் சக்கரவர்த்தி தன் வசம் வைத்திருந்தான். முத்துக் குளிப்பினால் அவனது வருமானம் பலம் பெற்றிருந்தது. மார்க்கோ போலோவின் கூற்றுப்படி, மன்னார் குடாவில் காணப்பட்ட முத்துக்கள் விலைமதிப்பற்றவையாகவும் உருண்டையாகவும் செழிப்பாகவும் அமைந்திருந்ததால், உலகம் முழுவதும் அதற்கு பெரும் கிராக்கி இருந்து வந்தது. வர்த்தகர்கள் தமது வருமானத்தில் ஒரு பகுதியை வரியாகச் செலுத்தியதின் காரணமாக, முத்துக்குளிப்பிலிருந்து கணிசமான வருமானம் மன்னனுக்குக் கிடைத்ததாக மார்க்கோ போலோ குறிப்பிடுகிறார். மதுரையினதும் யாழ்ப்பாணத்தினதும் ஆட்சியாளர்களும் சிங்கள ஆட்சியாளர்களும் இப் பொருளின் மேல் கண் வைத்து இருந்தனர். ஆரியச் சக்கரவர்த்தி தனது கடற்கரையோரங்களில் வந்திறங்கிய வர்த்தகர்களுடன் தென்னிந்தியத் துணிகளைப் பரிமாற்றம் செய்தான். இதனால் தென்கரையோரப் பிரதேசத்தை கைப்பற்றுவதற்கும் அவன் விரும்பினான். பாரசீக மொழியை சரளமாகப் பேசுவதோடு, அவனது ஆற்றல் இப்னு பதூதாவுக்கு வியப்பை ஏற்படுத்தியது. தனது விருந்தினரை பாவா ஆதம் மலைக்கு பாதுகாப்பாக அனுப்பக்கூடிய அளவிற்கு, யாழ்ப்பாண ஆட்சியாளன் தெற்கில் அதிகாரம் கொண்டிருந்தான்.
ஆரியச் சக்கரவர்த்தி தனது முஸ்லிம் விருந்தினரை உபசரித்ததற்கு பல காரணங்கள் இருந்தன. முதலாவதாக, இப்னு பதூதா ஆரியச் சக்கரவர்த்தியின் நண்பனான மாபார் சுல்தானின் மைத்துனர் ஆவார். இரண்டாவதாக, ஆரியச் சக்கரவர்த்தி சிங்கள இராச்சியத்தில் உள்ள முஸ்லிம் இடைத்தரகர்களைத் தவிர்த்து, மேற்காசியாவுடன் நேரடி வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்த விரும்பினான். மேலும், 1284 இல் எகிப்திய சுல்தானோடு சிங்கள மன்னன் மேற்கொண்ட தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு, தானும் தனது சொந்தத் தொடர்புகளை ஏற்படுத்த விரும்பியிருக்கலாம்.
அரபுச் சந்தையைப் பிடிக்க சிங்கள மற்றும் தமிழ் ஆட்சியாளர்களுக்கிடையே பலத்த போட்டி நிலவியது. முஸ்லிம் வர்த்தகர்களுடன் ஏற்கனவே இருந்த தொடர்புகளின் காரணமாக சிங்கள மன்னனுக்கு சாதகமான நிலை இருந்தது. இந்தியாவில் இந்து – முஸ்லிம் பிணக்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், தென்னிந்தியாவின் இந்து ஆட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்த யாழ்ப்பாண இந்து மன்னனுக்கு எதிராக, இலங்கையில் முஸ்லிம்கள் சிங்களவருடன் இணைந்தனர். ஆகவே, பொருளாதாரமும் அரசியலும் சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைத்தது.
மூன்றாம் விக்ரமபாகுவின் (1357–1374) ஆட்சியின்போது, ஆரியச் சக்கரவர்த்தி நீர்கொழும்பு மற்றும் கொழும்பைத் தாக்கி மேற்குக் கரையோரத் துறைமுகங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான். இப்னு பதூதாவின் கூற்றுப்படி, அச்சமயத்தில் முஸ்லிம் வர்த்தக நடவடிக்கைகள் சிறப்புற்று விளங்கிய இடமாக கொழும்பு திகழ்ந்தது. தங்கள் குடியிருப்புகளை பாதுகாக்க, அரேபியர் முக்கிய கவனம் செலுத்தியதோடு, தமது சிங்கள நண்பர்களுக்கு கடற்பாதுகாப்பை வழங்கியதன் மூலம் தமது பலத்தையும் அந்தஸ்தையும் அதிகரித்தனர். சிங்கள இராணுவம் முஸ்லிம் போர் வீரர்களை சேவைக்கு அமர்த்தியதிலிருந்து இது தெளிவாகிறது.
மார்க்கோ போலோ, தனது காலத்தில் (1292) இலங்கை மக்களுக்கு போர் வீரர்களின் சேவை தேவைப்படும் போது, சரசானியர்களை சேவைக்கமர்த்தியதாக குறிப்பிடுகிறார். ஐந்தாம் புவனேகபாகுவின் (1372–1408) ஆட்சிக் காலத்தில் ஆரியச் சக்கரவர்த்தி தெற்கின் மேல் இரண்டாவது முறையாக படையெடுத்தான். ஆனால் இவ்விரு படையெடுப்புகளும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.
தென்னிந்தியாவில் விஜயநகர இராச்சியத்தின் அதிகாரம் (1360–1370) பரவ ஆரம்பித்ததினாலும், ஆறாம் பராக்கிரமபாகுவின் காலத்தில் (1412–1467) கோட்டை இராச்சியத்தின் அதிகாரம் விரிவடைந்ததின் விளைவாகவும் ஆரியச் சக்கரவர்த்தியின் செல்வாக்கும் அதிகாரமும் குறையத் தொடங்கின. பலம் பொருந்திய வடபுறத்து சாம்ராஜ்யத்தின் மேலாதிக்கத்திற்கு எதிர்ப்புக் கொடுக்க முடியாத யாழ்ப்பாண அரசன், விஜயநகர ஆட்சியினை அங்கீகரித்து கப்பம் செலுத்த வேண்டியதாயிற்று. இவ்வாறு தமது வர்த்தகப் போட்டியாளரின் அரசியல் அதிகாரம் அஸ்தமித்த காரணத்தினால் நாட்டின் ஏனைய பகுதிகளின் அனைத்து வர்த்தகமும் மிகவும் அமைதியான முறையில் முஸ்லிம்களின் கைவசமாயிற்று.
இதே நேரம் இந்திய உபகண்டத்தில் மற்றுமொரு மாற்றம் ஏற்பட்டது. 13 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் பக்தாத் ஆட்சிப் பீடம் வீழ்ச்சியுற்றதோடு இந்து சமுத்திரத்தில் அரேபியரது வர்த்தக நடவடிக்கை நலிவடைந்தது. இந்து சமுத்திரத்தின் மேற்குப் புறப்பிரதேசத்துக்கு அரேபிய வர்த்தகர்கள் தொடர்ந்து வர்த்தகம் செய்து வந்தாலும் கூட, கிழக்குப் பிரதேசத்தின் வர்த்தகம் முற்று முழுதாக முஸ்லிம் வர்த்தகர்களான குஜராத்தியர், மலபாரி மற்றும் சோழ மண்டலத்திலிருந்து வங்காளம் வரை வாழ்ந்தவர்களின் கைகளுக்கு மாறியது. இந்து வர்த்தகர்கள் தரைப் பகுதிகளிலேயே தங்களது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு முஸ்லிம்களுக்கு சொந்தமான கப்பல்களில் தமது பொருட்களை வர்த்தகப் பொருட்களை ஏற்றுமதி செய்தனர்.
இந்து மத சமூக அமைப்பில் ஆழமாகப் பதிந்துவிட்ட சாதிப் பாகுபாட்டின் காரணமாக உயர்சாதி இந்துக்கள் வெளிநாட்டுப் பயணங்களை தவிர்த்துக் கொண்டனர். அவ்வாறான பயணங்களை மேற்கொண்டால் திரும்பி வந்ததும் சாதி அமைப்பிலான தமது உயர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வதற்காக தம்மை பரிசுத்தப்படுத்துவதற்கான சடங்குகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. முஸ்லிம்களுடனும் ஐரோப்பியருடனுமான தொடர்புகளும், பிற நாட்டாருக்குச் சொந்தமான கப்பல்களில் பிரயாணம் செய்வதும் உயர்சாதி இந்துக்களை ஆசார ரீதியாக அசுத்தப்படுத்தின. இஸ்லாத்தின் சகோதரத்துவ, சமத்துவக் கொள்கை பிற மதத்தாரை மதம் மாறக் கவர்ந்ததோடு, குறிப்பாக சாதியப் பாகுபாட்டில் ஊறிப் போயிருந்த இந்து சமுதாயத்தின் தாழ்ந்த சாதியினரை, தன்பால் ஈர்த்தது. இதன் மூலம் ஏற்கனவே இருந்த அரேபிய குடியிருப்புகள் விரிவடைந்து பலம் பெற்றன. மேலும் கடலோடி வர்த்தகர்கள் தமது குடும்பங்களை மிக அரிதாகவே தம்முடன் அழைத்துச் செல்வர். அதிலும் குறிப்பாக அரேபிய பெண்கள் வீட்டோடு வாழ்வதிலேயே விருப்பம் காட்டினர். முஸ்லிம் கடல்சார் வர்த்தகர்கள் தமது மனைவிமாரை தம்முடன் அழைத்துச் செல்வதில்லை. இதனால் தான், செல்லும் நாடுகளில் அவர்கள் மனைவிமாரைப் பெற்றுக் கொண்டனர். அவ்வாறு மணம் முடித்த பெண்கள், இஸ்லாத்தை தழுவியதோடு அவர்களது குழந்தைகளும் முஸ்லிம்களான மாறினர். இதனால் அரேபியர்களின் குடியிருப்புகள் எண்ணிக்கையில் அதிகரித்ததோடு, அவர்கள் மேலும் பலம் பெற்றனர். இவ்வாறு மக்கள் மதம் மாறி, அரேபியருக்கான உள்ளூர்த் தளத்தையும் ஆதரவையும் மனித வளத்தையும் வழங்கினர். அதனால் அவர்களும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நன்மை அடைந்தனர். இவ்வகையில் மேற்கு ஆசியாவில் இருந்து வருகை தந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட முன்னோடிகளின் இடத்தினை இந்தியாவின் மேற்கு, தெற்குக் கரைகளில் உள்ள துறைமுகங்களில் வாழ்ந்த இஸ்லாத்தை தழுவிய இந்தியர்கள் பெற்றனர்.
திரிப்போலி, மொரோக்கோ வரையிலான தூர தேசங்களோடும் கூட வர்த்தக உறவுகளைக் கொண்ட செழிப்பான முஸ்லிம் வர்த்தகர்கள் எவ்வித வன்முறையையும் உபயோகிக்காது மிகச் சமாதானமான முறையில் இந்தியக் கரையோரம் எங்கும் தமது வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரித்தனர். உள்ளூர் ராஜாக்கள் இவ் வர்த்தகர்களோடு மிகுந்த நல்லுறவைக் கொண்டிருந்ததோடு அவர்களுக்கு விசேட பாதுகாப்பும் வழங்கினர். அவ்வாறே மன்னர்களுக்குத் தேவையான அனைத்தையும் இவ் வர்த்தகர்கள் வழங்கியதோடு நாட்டின் உற்பத்திப் பொருட்களுக்கு மிகக் கூடிய விலையையும் வழங்கினர். இலங்கையில் நடைபெற்றது போன்று முஸ்லிம் வர்த்தகர்களின் கடற் பயண அனுபவங்களையும் கடலோடித் திறமைகளையும் இந்திய ராஜாக்களும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். குறிப்பாக, தனது பொது எதிரியான போர்த்துக்கேயர்களுக்கு எதிராக இலங்கை நாடானது முஸ்லிம் தூதுவர்கள் மூலம் எவ்வாறு கள்ளிக்கோட்டை சமோரிய மன்னனது உதவியை நாடியதோ, அவ்வாறு இந்திய மன்னர்களும் முஸ்லிம் தளபதிகளின் கீழ் இருந்த சமோரிய மன்னனின் உதவியோடு தமது எதிரிகளை விரட்டி அடிப்பதில் வெற்றி கொண்டனர். சமோரிய மன்னன், இவர்களின் மூலம், எகிப்திய – பாரசீக ஆட்சியாளர்களோடும் வட இந்திய சுல்தான்களோடும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தான். மேலும் முஸ்லிம்களின் சிறப்பான பெருளாதார வர்த்தக நிலையமாக காயல்பட்டணம் விளங்கியது. அரபுத் தலைவன் ஒருவன் இங்கிருந்து தனது முகவர் மூலம் பாண்டிய மன்னனுக்கு வருடாந்தம் பத்தாயிரம் குதிரைகளை விநியோகம் செய்தான். இவ்வாறான சூழ்நிலைகளில், முஸ்லிம் சமூகம் தமது அமைதியான பொருளாதார நடவடிக்கைகளின் காரணமாகவும் சமயத் தனித்துவத்தின் காரணமாகவும் இந்தியத் துணைக் கண்டத்தில் தனித்துவமான வளர்ச்சி அடைந்தது.
உசாத்துணை
- Alexander Johnston. (1827), An Account of an Inscription found near Trincomalee, in the Island of Ceylon,V.I, London
- Codrington, H. W. (1924), Ceylon Coins and Currency (CCC), Memoirs of The Colombo Museum Series A. No. 3..
- Dewaraja, Lorna (2000). Muslim Merchants and Pilgrims in Serendib c. 900 to 1500 A. D., Reflection on a Heritage, History and Archaeology of Sri Lanka, Volume I, (ed) Gunawardana, R. A. L. H., Pathmanathan, S., Rohanadeera, M., Central Cultural Fund, Ministry of Cultural and Religious Affairs.
- Hussain Mahdi.(1953), The Rehla of Ibn Batuta, (ed), Baroda.
- Imam.S.A, (1944-65) “Ceylon-Iran Cultural Relationship”, “Moors Cultural Home Souvenior, P.10-13. Colombo.
- Perera, B. J. (1951), The Foreign Trade and Commerce of Ancient Ceylon – The Ports of Ancient Ceylon. The Ceylon Historical Journal, Volume. I, No. 2, 109-119.
- Tennent, J.E. (1859), Ceylon an Account of the Island.London ,2nd edition,vol, I.