பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் இலங்கையில் நவீன சமூகம் உருவானது. அது பெருந்தோட்டத்தின் தோற்றத்தோடு ஆரம்பமானது. ஆனால் ஆரம்பத்தில் ஆளும் வெள்ளையர்களுக்கும் ஆளப்படும் இலங்கையர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக இருந்தது. அதற்குப் பலகாரணங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று மொழி, கலாசார இடைவெளி; இரண்டாவது அப்போது பிரித்தானியாவில் மேலோங்கியிருந்த ‘வெள்ளையரே உயர்ந்த இனம், அவர்களே ஆளப்பிறந்தவர்கள்’ என்ற இனவாதக் கருத்தின் தாக்கம்; மூன்றாவது கண்டிய மலைப்பகுதிகளில் வாழ்ந்த சிங்களவர்களை – அங்கு வெடித்த இரண்டு கிளர்ச்சிகளின் பின்னர் – ஆங்கிலேயர் சந்தேகத்தோடு பார்த்தமை.
இதை விட மற்றும் ஒரு காரணமும் இருந்தது. ஆங்கிலேயர் பழமைவாதக் கட்டமைப்பைக் குலைக்காமல் பழைய முதலியார் – மைய நிர்வாகமுறையின் கீழ் நாட்டை ஆள முயன்றமையே அக்காரணம். ஆங்கிலேயருக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் இடையிலான நிர்வாகத் தொடர்பை மொழிபெயர்ப்பாளர்களான முதலியார்களே ஏற்படுத்தினர். ஆனால் வேகமாக வளர்ச்சியுற்ற பெருந்தோட்டத்துறையை மையமாகக்கொண்டு நாட்டின் அபிவிருத்திப் போக்கு மாற்றமுற்று வேகம்பெற்றபோது பழைய நிர்வாகமுறையால் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
உதாரணமாக, ஆங்கிலேயர் இலங்கையின் கரையோரப்பகுதியை கைப்பற்றிய போது நவீன பாதைகள் இருக்கவில்லை. 1803 இல் கொழும்பி்லிருந்து கண்டியை அடைய ஒரு மாதம் ஆனது. அப்போது கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் ஆகிய மூன்று சிறு நகரங்களே இருந்தன. பெருந்தோட்ட வணிகம் பிரவாகம் எடுத்தபோது பாதைகள் மாத்திரமல்ல, புகையிரதச் சாலைகளையும் அமைக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தொலைத்தொடர்பு, தபால் சேவை, மருத்துவச்சேவை, நீதித்துறை போன்றன அசுர வளர்ச்சி பெற்றன. பெருந்தோட்ட வலயங்களில் நகரங்கள் உதயமாகி கிராமியப் பொருளாதாரத்துக்குப் புதிய சந்தைகளை ஏற்படுத்தின; நுகர்வோரை இணைத்தன. கொழும்புத் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு இலங்கை சர்வதேச சந்தையோடு இணைக்கப்பட்டது.
இம்மாற்றங்களைச் சரிவரப் புரிந்துகொண்ட 1833 ஹோல்புரூக் கேமரூன் ஆணைக்குழுவின் சிபாரிசு, உருவாகியிருந்த நவீனத்துவத்துக்குத் தேவையான கட்டமைப்பை உருவாக்கியது. அதனடிப்படையில் செய்யப்பட்ட நிர்வாக மாற்றங்கள் ஆங்கிலேய உயரதிகாரிகளினதும், அதுவரை சலுகைபெற்ற பழைய உள்ளூர் உயரடுக்கினரதும் அதிகாரத்தை மட்டுப்படுத்தி, புதிய ஆங்கிலம் கற்ற உயரடுக்கு ஒன்றையும், ஆங்கிலம் கற்ற இடைநிலை நிர்வாகிகளையும், ஆங்கிலம் கற்ற கிராமிய, நகரமட்ட அதிகாரிகளையும் உருவாக்கியது.
இதன் மூலம் ஆங்கிலேய உயர் அதிகாரிகளுக்கும் இலங்கையருக்கும் இடையிலான இடைவெளி குறைந்தது. எல்லா மட்டத்திலும் பிரித்தானிய காலனிய அரசு தனது பிடியை இறுக்கியது. ஒரு புறத்தில் பழைய முறைப்படி ஒரு சில நிலப்பிரபுத்துவ காலப் பிரதிநிதிகளின் துணையோடு மாத்திரம் விரிவடைந்து செல்லும் சிக்கலான நவீ்ன நிர்வாகமுறையை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் இருந்தது. மறுபுறத்தில் அவர்களின் தயவில் தங்கியிருப்பதில் உள்ள ஆபத்தை ஆங்கிலேயர் உணர்ந்தே இருந்தனர்.
கண்டியின் முன்னாள் முதன்மை சிவில் அதிகாரியான ஜான் பெய்லி, காலனி செயலாளருக்கு எழுதி குறிப்பு பின்வருமாறு: “எங்கள் அரசாங்கத்தின் கொள்கை எப்பொழுதும் பிரதானிகளின் அதிகாரத்தைக் குறைத்து, கொடுங்கோல் அரசாங்கத்தின் கீழ் அவர்கள் இயல்பாகவே கொண்டிருந்த அந்த அதியுயர் செல்வாக்கை அழிப்பதாகும்.” (“The policy of our Government has always been to curtail the power of the Chiefs and to destroy that paramount influence which under a despotic Government they naturally possessed.”) இது ஆங்கிலேயர்கள் பழைய உயரடுக்கினர் தொடர்பாகக் கொண்டிருந்த கண்ணோட்டத்தை விளக்குகிறது.
ஆங்கிலேயர், குறிப்பாக ஹோல்புரூக் கேமரூன் ஆணைக்குழுவின் சீர்திருத்தம் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் பழைய உயரடுக்கினரின் அதிகாரத்தை வெகுவாகக் குறைத்தது. அடிமை முறையை ஒழித்தமையும் (வடக்கில் இது சாதி அடிப்படையில் இருந்தது), இராஜகாரிய முறையை ஒழித்தமையும் இவற்றுள் பிரதானமானவை. இதனால் நிலவுடமைச் சமூகத்தில் அதுவரை இலவசமாகப் பெறப்பட்ட உழைப்பில் ஆதாரப்பட்டிருந்த அவர்களது அதிகாரமும் செல்வமும் பறிக்கப்பட்டது. அத்துடன் நீதித்துறை சுதந்திரமாக இயங்கியதால், அவர்கள் தாம் விரும்பிய தண்டனையை தமது சேவகர்களுக்கு வழங்க முடியாமல் இருந்தது.
ஆனால், பழைய உயரடுக்கினர் ஆங்கிலேயரை எதிர்த்து அவர்களது கோபத்துக்குப் பலியாகாமல் சமரசம் செய்துகொண்டு தம்மை தகவமைத்துக்கொண்டனர். பெருந்தோட்டப் பொருளாதாரத்தை மையமாகக்கொண்டு உருவான புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி தம்மை நிலைநிறுத்திக்கொண்டனர். அத்துடன் தமது பிள்ளைகளை ஆங்கிலக் கல்வியைப் பெறச்செய்து நிர்வாகத்திலும் பின்னர் அரசியலிலும் மிளிரச்செய்து தம்மை ஆளும் வர்க்கமாகவும் உயர்த்திக்கொண்டனர். இதற்கான வாய்ப்பு அவர்களுக்கே இருந்தது. ஏனெனில் ஆங்கிலப் பாடசாலைகள் அமைப்பதற்கு நிதி வழங்குவதற்கும், பாடசாலைக் கட்டணம் செலுத்துவதற்கும், இங்கிலாந்துக்கோ அல்லது இந்தியாவுக்கோ தமது பிள்ளைகளை அனுப்பி மேற்படிப்பு படிக்கவைப்பதற்கும் அவர்களுக்கே பண வசதியிருந்தது.
இங்கு குறிப்பிடவேண்டிய முக்கிய விடயம் ஒன்றிருக்கிறது. இலங்கையில் பிரித்தானியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆங்கிலக் கல்விமுறை, வர்க்கத்தன்மை கொண்டதாக இருந்ததே தவிர (அதாவது வசதி படைத்தவர்களுக்கு அடையக்கூடியதாக இருந்ததே தவிர), ஒரு இனத்துக்குச் சலுகை காட்டுவதாக அமையவில்லை. அதனால் புதிய பணக்கார வர்க்கத்தினருக்கும் அந்த வாய்ப்பு திறந்தே விடப்பட்டிருந்தது. ஆயினும் வசதி குறைந்தவர்களுக்கும், சாதிய அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தரமான ஆங்கிலக்கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்தது.
இலங்கையில் இந்தியாவைப் போல சாதிக் கட்டமைப்பும், சாதிய ஒடுக்குமுறையும் ஆழமாக இல்லாவிட்டாலும் சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர் ஆகிய தேசிய இனங்களின் மத்தியில் வெவ்வேறு அளவில், வெவ்வேறு வடிவில், மத – கலாசார – சமூக வாழ்க்கையில் கலந்து இருந்தது; சாதியின் மேற்தட்டு அணியின் நலன்களை பாதுகாக்கும் விதத்தி்ல், மதத்தின் துணையோடு நிலைநிறுத்தப்பட்டிருந்தது. சாதிக்கு இருந்த சட்டரீதியான பாதுகாப்பு ஆங்கிலேயர் காலத்தில் இல்லாமல் போனாலும் சாதியக் கட்டமைப்பை உடைப்பதற்கு அவர்களால் முடியவில்லை. இவ்விடயத்தில் சமூக விதிமுறைகளை சிவில் உரிமைகள், சட்டங்கள் பெரியளவு மாற்றவில்லை. அதுமாத்திரமல்ல சாதிக் கட்டமைப்பை ஆங்கிலேயர்கள் பாதுகாத்து தமது நலனுக்காக அதனைப் பயன்படுத்திக்கொண்டனர். உதரணமாக, தோட்டத்துரைமாருக்கு மலையகத் தமிழ்த் தொழிலாளர் மத்தியில் காணப்பட்ட சாதியமைப்பை எப்படிப் பயன்படுத்துவது என்பது தொடர்பான வழிகாட்டல் கைநூல் ஒன்று தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தது. இதே அணுகுமுறையை ஏனைய சாதியச் சமூகங்கள் மீதும் கடைப்பிடித்தனர். முஸ்லீம் சமூகம் சாதியடிப்படையில் ஆதாரப்பட்டிருக்கவில்லை எனினும் மதகுருமாரினதும் பணக்காரரினதும் செல்வாக்குமிக்க ஆணாதிக்கச் சமூகமாகவே அது இருந்தது. சாதிமுறையின் இறுக்கம் ஏனைய சமூகங்களைவிட யாழ்ப்பாணச் சமூகத்திலேயே அதிகம் காணப்பட்டது. இங்கு வெள்ளாளரின் மேலாதிக்கம் ஆங்கிலேயர் காலத்திலே தான் வலுப்பெற்றது.
மறுபுறத்தில் இலங்கையில் ஆங்கிலேயர் காலத்தில் தான் கல்வி சாதாரண மக்களுக்கும் கிடைத்தது; அதன் தரம் வர்க்கங்களுக்கேற்ப வேறுபட்டாலும் கூட. இதற்குக் காரணம் ஆங்கிலேயரின் பரோபகாரம் அல்ல; மாறாக, தமது மொழியில் பேசி பொருளாதார நிர்வாக நலன்களைக் கவனிப்பதற்கும், இலங்கையர்களோடு தொடர்பைப் பேணி ஆள்வதற்குத் துணையாக தமது மொழியில் பேசும் இலங்கையரைக் கொண்ட தமக்கு விசுவாசமான இடைநிலை அணியொன்றை உருவாக்குவதற்கும் இலங்கையருக்கு ஆங்கிலக் கல்வியை வழங்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது.
பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலமொழி மூலம் மேற்கத்தேயக் கல்வியைப் பரப்பும் அவர்களது நோக்கத்தை அப்போது (1835 இல்) மெக்காலே பிரபுவின் (Lord Macaulay) அறிக்கைக் குறிப்பு தெளிவாக விளக்குகிறது. “….தற்போது எமக்கும் நாம் ஆளுகின்ற மில்லியன் கணக்கான மக்களுக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளர்களாக இருக்கக்கூடிய ஒரு அணியை உருவாக்குவதற்கு நாம் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அவர்கள் இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருக்கும் அதே சமயம் இரசனையிலும், கருத்திலும், ஒழுக்கத்திலும் அறிவுத்திறனிலும் ஆங்கிலேயராக இருத்தல் வேண்டும்…”: (“…. We must at present do our best to form a class who may be interpreters between us and the millions we govern; a class of persons, Indian in blood and colour but English in tastes, in opinion, in morals and in intellect …”) அவர் அன்று கூறிய ஒவ்வொரு வார்த்தையும் இலங்கைக்கும் பொருந்தும். இதனை அன்று நேரு ‘ஆங்கிலேய இராஜ்ஜியத்திற்கு (British Raj) தேவையான எழுதுவினைஞர்களை உருவாக்குவதற்கான கல்வி’ என்று கேலிசெய்தார். இவ்வாறு ஆங்கிலக்கல்வி மூலம் மேற்படிப்பு படிக்கக்கூடிய வசதியுடைய மிகச் சிலரின் மத்தியில் இருந்து சிவில் நிர்வாக சேவை இலங்கையில் உருவாக்கப்பட்டது.
இலங்கையில் ஆங்கில சிவில் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் மூலம் உடனடிப் பயனடைந்தவர்கள் யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடியினரே. அதற்குப் பிரதான காரணங்கள் பல இருந்தன. ஆரம்பகாலத்தில் யாழ்ப்பாணத்தில் தான் மிஷனரிப் பாடசாலைகள் அதிகம் திறக்கப்பட்டன. இலங்கையின் முதலாவது மிஷனரிப் பாடசாலையான காலி ரிச்மண்ட் கல்லூரி 1814 இல் வெஸ்லியன் மிஷனரியால் நிறுவப்பட்டது. மூன்றாவது மிஷனரிப் பாடசாலையான மெதடிஸ்ட் மத்திய கல்லூரி மட்டக்களப்பில் அமைக்கப்பட்டது. நான்காவது ஆங்கில மிஷனரிப் பாடசாலையான தெல்லிப்பளை யூனியன் கல்லூரி 1816 இல் திறக்கப்பட்டது. இங்கு ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும் போதிக்கப்பட்டது. இது, 1833 ஆம் ஆண்டு ஹோல்புரூக் கேமரூன் ஆணைக்குழுவின் சிபாரிசின்படி இலங்கையின் நிர்வாக மொழியாக ஆங்கிலம் பிரகடனப்படுத்தப்படுவதற்கு சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது; பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் முதல் ஆங்கிலப் பள்ளியை கொழும்பில் (ரோயல் கல்லூரி) நிறுவ முடிவெடுப்பதற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டுவிட்டது. வடக்கிற்கு வெளியே கிறிஸ்தவ மிஷனால் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின்புதான் ஒரு ஆங்கிலப் பள்ளி நிறுவப்பட்டது.
யாழ்ப்பாணத்துக்கு இந்த வாய்ப்பு தற்செயலாக அமைந்தது. 1812 இல் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான போர் நடந்திருந்தது. அதன் மனக்கசப்பு ஆள்பதி றொபர்ட் பிறவுன்றிக் மனதில் இருந்தது. எனவே அமெரிக்க – சிலோன் மிஷனரிகளின் முதல் தொகுதியினரை கொழும்பில் குடியேற அனுமதிக்க மறுத்து, வசதிகள் குறைந்த, வெப்பம் மிகுந்த, வறண்ட பிரதேசமான யாழ். குடாநாட்டுக்கு அனுப்பிவைத்தார். இது யாழ். குடாநாட்டுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தைக் கொண்டுவந்தது. தெற்காசியாவின் முதல் பெண்கள் உறைவிடப் பள்ளியான உடுவில் மகளிர் கல்லூரியும் 1824 இல் இங்குதான் நிறுவப்பட்டது.
யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரால் 1619 இல் கைப்பற்றப்படும்போது அது வணிகத்துறையிலும் அப்போதைய கல்வியிலும் தென்பகுதியை விட முன்னேறியிருந்தது. தெற்கில் பண்டமாற்றுமுறை நிலவியபோது இங்கு பணப்புழக்கம் நடைமுறையில் இருந்தது. எனவே வணிகமும், நவீன காலத்துக்கு முன்னைய – அதாவது அச்சு யந்திரம் அறிமுகமாவதற்கு முன்னர் ஓலைச்சுவடிகளில் எழுதும், மனனம் செய்யும் – கற்கை முறையும் அங்கு வளர்ந்திருந்தது. கோவிற் பள்ளிகள், சாதிய மேல் அணியினருக்கான விசேட வகுப்புகள், குருக்களின் வீட்டுத் திண்ணையில் நடத்தப்படும் கிராமப் பள்ளிகள் என்பன பதினைந்தாம் நூற்றாண்டில் அங்கு காணப்பட்டன. கீழைத்தேய மருத்துவம், சோதிடம் என்பன இங்கு பிரபலம் பெற்றிருந்தன. தமிழ்க் கல்விக்கூடம் (மத்திய கால அகாடமி) ஒன்று நல்லூரில் நிறுவப்பட்டிருந்தது. இங்கு பழங்காலத் தமிழ்ப் படைப்புகள் கையெழுத்துப் பிரதி வடிவில் சேகரித்துப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. அதே போன்று நல்லூரில் இருந்த சரஸ்வதி மஹால் நூலகம், அரசின் அனைத்து இலக்கிய வெளியீடுகளின் அரச களஞ்சியமாகத் திகழ்ந்தது .
எனவே கல்வி கற்பதில் யாழ்ப்பாண மேட்டுக்குடியினர் இயல்பாகவே ஆர்வம் காட்டினர்; மிஷனரிகளை வரவேற்று ஆதரித்தனர். இதனால் மிஷனரிகளுக்கு தமது கல்விப்பணியை ஆரம்பிப்பதற்கு யாழ்ப்பாணக் குடாவில் உகந்த சூழல் இருந்தது. அவர்கள் வழங்கிய ஆரம்பக் கல்வியின் மூலம் யாழ்ப்பாண மேட்டுக்குடியினர் பயன்பெற்றனர். அத்துடன் இலங்கையின் ஏனைய பகுதிகளை விட, யாழ் குடாவுக்கும் மன்னாருக்கும் அண்மையில் அமைந்திருந்த இந்தியாவுடன் வர்த்தக, கலாசார, மதத் தொடர்புகள் நீண்டகாலம் நிலவிவந்தது. பிரித்தானியரின் ஆளுகையின் கீழ் இந்தியாவும் இலங்கையும் கொண்டுவரப்பட்ட பின்னர் இத்தொடர்பு மீண்டும் புத்துயிர் பெற்றது. இதுவும் இவர்களது கல்வி வளர்ச்சிக்கு உதவியது. யாழ்பாணத் தமிழர்களின் ஆங்கிலக் கல்வி வளர்ச்சியில் அச்சக ஊடகங்களும் அச்சகமும் முக்கிய பங்காற்றியது. இலங்கையில் முதலாவது அச்சு இயந்திரம் 1737 இல் டச்சுக்காரர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்த அமெரிக்க மிஷன் 1820 இல் தனது முதலாவது அச்சகத்தை நிறுவியது. ‘தி மார்னிங் ஸ்டார்’ என்று ஆங்கிலத்திலும் ‘உதயதாரகை’ என்று தமிழிலும் அழைக்கப்பட்ட தமிழ் – ஆங்கில இருமொழிச் செய்தித்தாள் 1841 இல் மானிப்பாயில் வெளியிடப்பட்டது. இதுவே இலங்கையில் வெளியான முதலாவது செய்தித்தாள்; தமிழ் உலகின் இரண்டாவது தமிழ்ச் செய்தித்தாள். இது அமெரிக்க மிஷனரியால் வெளியிடப்பட்ட மதச் செய்தித்தாளாக இருந்தாலும், கல்வி, அறிவியல், விவசாயம், விளையாட்டுப் போன்ற செய்திகளையும் கொண்டுவந்தது. திரு. ஹென்றி மார்ட்டின் இதன் முதலாவது ஆங்கில ஆசிரியராகவும், திரு. சைத் பைசான் முதல் தமிழாசிரியராகவும் இருந்தனர். இதனால் வாசிப்போர் தொகை அதிகரித்தது.
வடக்கு அதன் புவியியல் அமைவிடம் காரணமாக தெற்கில் அப்போது பெரும் பிரளயம் எடுத்திருந்த பெருந்தோட்ட – மைய பொருளாதாரச் சமூக மாற்றத்தின் பாதிப்பிலிருந்து தள்ளி இருந்ததாலும், அங்கிருந்த வளங்களைப் பயன்படுத்தத்தக்க அளவுக்கு அங்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருக்காமையாலும், அபிவிருத்தியில் இருந்து பின்தங்கியது. அதனால், ஒருபுறத்தில் அது நிலப்பிரபுத்துவப் பழமைவாதத்திலிருந்து விடுபடாமல் இருந்தது. மறுபுறத்தில் நாட்டில் உருவாகிவரும் புதிய தொழில் வாய்ப்புகளை கல்வியின் மூலம் பெறுவதே அதன் முன்னால் இருந்த பிரதான தெரிவாக இருந்தது. எனவே அவர்கள் கல்வியில் கூடிய அக்கறை செலுத்தவேண்டியிருந்தது. அவர்களின் சிறப்பம்சம் என்னவென்றால், முஸ்லிம்களைப் போல மதத்தின் காரணமாகவோ, கண்டியர்களைப் போல நிலப்பிரபுத்துவ தப்பெண்ணம் காரணமாகவோ, ஆங்கிலக் கல்வியிலிருந்து ஒதுங்கியிராமல் அதில் மிகுந்த ஆர்வம் கட்டியதுதான்.
அப்போது அமைக்கப்பட்ட பாடசாலைகளில் வாசிப்பு, எழுத்து, எண்கணிதம் ஆகிய மூன்று பாடங்களே போதிக்கப்பட்டன. இதனால் 1833 இல் ஆங்கிலம் அரசின் நிர்வாக மொழியாக அறிவிக்கப்படும் போது, ஏற்கெனவே ஆங்கிலம் கற்ற ஒரு சிறு அணி அரச பணிகளில் இணையத் தயாராக இருந்தது. முதலில் அலுவலகச் சிற்றூழியர்களாக பெருமளவில் இவர்களுக்கு இடம் கிடைத்தது. உயரடுக்கின் ஒரு சிலரே அதிகாரம்மிக்க உயர்பதவிகளை வகிக்க முடிந்தது.
ஆங்கிலக்கல்வி சமூகத்தில் மதிப்புமிக்க அந்தஸ்தைப் பெற்றது. அதன்மூலம் வாழ்க்கைக்கு நிரந்தர வருமானத்தைத் தரும் அரசாங்க உத்தியோகத்தைப் பெறக்கூடியதாக இருந்தது. அத்துடன் ஓய்வூதியம் கிடைப்பதையும் உறுதி செய்தது. மேலும், ஆங்கிலக் கல்வியானது யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு பர்மா, சிங்கப்பூர், மலேசியா போன்ற பிரிட்டிஷ் காலனிகளில் இலாபகரமான வேலைகளைப் பெற உதவியது.
இலண்டன் மிஷனரி சொசைட்டி 1805 இல் முதன்முதலில் இலங்கைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து 1812 இல் பாப்டிஸ்ட் மிஷனும்; 1814 இல் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷனரி சொசைட்டியும்; 1817 இல் சர்ச் மிஷனரி சொசைட்டியும்; 1840 இல் நற்செய்தியை பரப்புவதற்கான சங்கமும்; 1885 இல் இரட்சிப்பு இராணுவமும் இலங்கை வந்தன. 1812 இல் கல்கத்தாவிலிருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்க ஆணையர்கள் குழு 1816 இல் யாழ்ப்பாணத் தீபகற்பத்தை வந்தடைந்தது.
அரசு, பாடசாலைகளுக்கு நிதி ஆதரவளிக்காத நிலையில், தனியார் பள்ளிகளை நிறுவ இவற்றுக்கு அனுமதி கிடைத்தது. இதனால் 1833 இல், 15 பாப்டிஸ்ட் பாடசாலைகளும், 90 வெஸ்லியன் பாடசாலைகளும், 78 அமெரிக்கன் மிஷன் பாடசாலைகளும், 53 மிஷனரி சொசைட்டி பாடசாலைகளும் அமைக்கப்பட்டிருந்தன. இவை நாட்டின் 46% இற்கும் அதிகமான பள்ளிகளைக் கட்டுப்படுத்தின. எஞ்சிய 39%, தனியார் பள்ளிகளாக இருந்தன. இவற்றில் சராசரியாக 13 மாணவர்கள் கற்றனர். அதில் ஐந்து அல்லது ஆறு மாணவர்களின் சராசரி வருகையே பதிவானது. ஆனால் 1833 இல் ஆங்கிலம் அரசின் நிர்வாக மொழியாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஆங்கிலக்கல்வியின் அவசியம் உணரப்பட்டு, அதனைக் கற்போரின் தொகை அதிகரித்தது.
ஆங்கிலக்கல்வியின் நோக்கம் ஆரம்பத்தில் ‘பியோன்’ போன்ற துணைப் பணியாளர்களை உருவாக்குவதாகவே இருந்தது. பெருந்தோட்ட – மைய பொருளாதார வீச்சு ஏற்பட்ட பின்னர், தொழில்முறைப் பாடங்கள் ஊக்குவிக்கப்பட்டன. இது புதிய திறன்களையும் சேவைகளையும் உருவாக்கியது. அதே நேரத்தில், அத்தகைய கல்வியைப் பெற்றவர்களின் நிலையை அது மேம்படுத்தியது.
ஆங்கிலக்கல்வி, எல்லா மட்டத்திலும் அதிகாரத்திலும் செல்வாக்கிலும் வேறுபட்ட காலனிய உயரடுக்குகளை உருவாக்கியது. உதாரணமாக, வரிச் சேகரிப்பு இன்னும் அதன் பாரம்பரிய வழியில் செயற்பட்டது. ஆனால் அதற்கு புதிய நிபுணத்துவமும் ஆங்கில அறிவும் தேவைப்பட்டது. இவ்வாறுதான் நிர்வாகம் ஆங்கிலமயமாக்கப்பட்டது.
பொறியியல் மற்றும் கணக்கியல் ஆகியவை மதிப்புமிக்க தொழில்களாக மாறியபோதும், மருத்துவமும் சட்டமும் மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றன. அவை சமூகத்தில் உயர்ந்த மதிப்பைப் பெற்றமைக்கு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மூன்று காரணிகள் காரணமாகின. ஒன்று, தேவையான தகுதி நிலை; இரண்டு, தீவில் அத்தகைய தகுதிகளைப் பெறுவதற்கான வரையறுக்கப்பட்ட சாத்தியக்கூறுகளே இருந்தன; மூன்று, ஒரு வழக்கறிஞரை அல்லது மருத்துவரை வெளிநாட்டுக்குப் பயிற்சிக்காக அனுப்புவதற்கு அதிக செலவாகியது. 1870 இல் இலங்கையில் மருத்துவக் கல்லூரியும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சட்டக் கல்லூரியும் நிறுவப்பட்டதன் மூலம் அத்தகைய கல்வியைப் பெறுவதற்கான சிரமம் ஓரளவு குறைக்கப்பட்டது. இருப்பினும் அது இவ்விரு தொழில்கள் பற்றிய பொதுமக்களின் கருத்தை மாற்றவில்லை.
ஆங்கிலக்கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு வேறு இரு காரணங்களும் இருந்தன. தமது தாயகமான பிரித்தானியாவில் இருந்து சிவில் சேவகர்களைக் கொண்டுவருவதற்கும் அவர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்கும் அதிகம் செலவானது. உள்நாட்டில் அவர்களை உருவாக்குவது இலாபகரமானதாக இருந்தது. பிரித்தானிய அரச ஊழியர்கள் தங்குவதற்கும் வாழ்வதற்கும் அவர்களது ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கேற்ற வசதிகள் செய்துகொடுக்க வேண்டியிருந்தது. அவர்கள் விடுமுறையில் நாடு திரும்புவதற்கும், திரும்பி வருவதற்கும் செலவழிக்க வேண்டியிருந்தது. அவர்கள் நீண்டகாலம் இலங்கையில் தங்கிநின்று சேவைசெய்வார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாமல் இருந்தது. மேலும், பரந்து விரிந்த அவர்களது சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை முழுவதுமாக நிர்வகிப்பதற்குத் தேவையான அளவு சனத்தொகை பிரித்தானியாவில் இருக்கவில்லை.
கலாசாரத்திலும் நடை, உடை பாவனையிலும் வாழ்க்கைமுறையிலும் தம்மைப் பின்பற்றி தமக்கு விசுவாசமாக இருக்கக்கூடிய ஒரு படித்த அணியை உருவாக்குவதும் இன்னொரு காரணமாக இருந்தது. இது ஒருவகை கலாசார ஆக்கிரமிப்பாகும். இதற்கு கிறிஸ்தவ மதமாற்றம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. இப்பணியில் தான் கிறிஸ்தவ மிஷனரிகள் தீவிரமாக ஈடுபட்டன. ஆங்கிலக்கல்வி மூலமும் மதமாற்றத்தின் மூலமும் இந்நோக்கத்தில் ஆங்கிலேயர் இந்தியாவை விடவும் இலங்கையில் அதிக வெற்றியைப் பெற்றனர்.
சிங்கள மேட்டுக்குடியினருக்கு ஆங்கிலப்பாணி வாழ்க்கைமீது ஏற்பட்ட மோகத்தை SWRD பண்டாரநாயக்கவின் பழக்கம் பற்றி கவர்னர் ஹென்றி மூரின் (1944 – 1947) மனைவியான டாப்னே மூர் (Lady Daphne Moore) எழுதிய ஒரு குறிப்பு சிறப்பாக விளக்குகிறது. பிற்காலத்தில் உருவான மேட்டுக்குடியினரான – ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று நாடு திரும்பிய – SWRD பண்டாரநாயக்க தனது வீட்டில் தனியாக இரவு உணவுக்குத் தயாராகும் போது கூட மேற்கத்தேயப் பாணியில் ஆடம்பரமாக உடையணிந்து கொண்டார். எதிர்பாராமல் ஆங்கில விருந்தாளிகள் எவராவது வந்துவிடுவார்களோ என்ற எதிர்பார்ப்பு அதற்குக் காரணமமாக இருந்தது.
1833 ஹோல்புரூக் கேமரூன் கமிஷனுக்கு முன்னர் ஆங்கிலக்கல்வி மிஷனரிகளினதும் தனிநபர்களினதும் கைகளில் இருந்தது. அதன் பின்னரே அரசுப் பள்ளிகளை நிறுவ வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் உணர்ந்தது. ஏனெனில் வேகமாக ஏற்பட்டுவரும் பொருளாதார, சமூக, அரசியல் மாற்றங்களை கையாள்வதற்குத் தேவையான அளவுக்கு படித்த ஆளணியை அரசின் தலையீடின்றி உருவாக்க முடியாமல் இருந்தது. அதேசமயம், மாறிவரும் தேவைகளை சிங்கள – தமிழ் மொழிமூலக் கல்வியால் பூர்த்திசெய்ய முடியாது எனக் கருதிய ஹோல்புரூக் கேமரூன் ஆணைக்குழு ஆங்கிலக்கல்வியை பரிந்துரைத்ததுடன், தாய்மொழிமூலக் கல்வியை ஆதரிப்பதை நிறுத்துமாறும் பரிந்துரைத்தது. இதனால் ஆங்கிலம் மாத்திரம் என்ற கொள்கை நடைமுறைக்கு வந்தது.
இது பாரம்பரிய வைதீக சமூகங்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் பயனாக 1847 இல் தாய்மொழிமூலப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதேசமயம் பெளத்த, இந்து, இஸ்லாமிய மத கட்டமைப்புகள் போர்த்துக்கேயர் காலத்தைப் போன்று ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயர் காலம் பூராகவும் பாதிக்கப்படவில்லை. அவை தமது பாளி, சமஸ்கிருத, அரபு மொழி சார்ந்த மதக் கல்வியுடன் எழுத்து, எண், வாசிப்பு ஆகிய பாடங்களையும் தாய்மொழியில் சேர்த்துக்கொண்டன.
நாட்டின் பொருளாதர நடவடிக்கைகள் அதிகரித்த அளவிற்கு கல்விகற்ற அணி அதிகரிக்கவில்லை. நாட்டின் நிர்வாகத்தைச் செம்மையாக நடத்துவதற்கு குறைந்தபட்ச ஆங்கில அறிவை அனைத்து மாணவர்களும் பெறுவது அவசியம் என அரசாங்கம் கருதியது. ஆனால் வசதி குறைவான பெரும்பாலான அரசாங்கப் பாடசாலைகள் வசதியற்ற மாணவர்களை ஈர்க்கவில்லை. பணக்காரப் பாடசாலைகளில் இருந்த வசதிகளும் விளையாட்டு போட்டி போன்ற கவர்ச்சியான இதர விடயங்களும் இங்கு இருக்கவில்லை. எனவே, கிராமியப் பாடசாலை மாணவர் வருகை மிகவும் குறைவாக இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அரசு கடும் சட்டங்களை நிறைவேற்றியது.
பிள்ளைகள் பள்ளிக்கு வராததற்கு பெற்றோர்கள் பொறுப்பேற்க வேண்டிய அதேசமயம் பாடசாலை செல்லாத மாணவர்களை தண்டிக்கக்கூடிய விதத்தில் 1904 ஆம் கட்டளைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பாடசாலை செல்லாத ஆண் பிள்ளைகளை சாட்டையால் அடிக்கலாம் அல்லது மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் தடுப்புப் பள்ளிக்கு அனுப்பலாம். ஆனால் இதற்கான பொறுப்பை ஏற்க உள்ளூர் அதிகாரிகள் தயங்கியதால் அதனை அமுல்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
யாழ் தீபகற்பத்தில் அமெரிக்க மிஷனரிகள் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டதன் விளைவாக, யாழ் தமிழர்கள் கல்வித் துறையில், குறிப்பாக ஆங்கிலக்கல்வியில் ஒரு தொடக்கத்தைப் பெற்றனர். ஆனால் ஆங்கிலக்கல்வி தமிழர்களது ஏகபோகமாக இருக்கவில்லை. வடக்குப் பகுதிகளைத் தவிர, மேல் மாகாணத்தில், குறிப்பாக கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளான நீர்கொழும்பு, கோட்டை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகள் ஆங்கிலக் கல்வியறிவில் முன்னேறின. இங்கு கரையோரச் சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் பறங்கியர்களையும் தவிர, அதிக அளவில் இலங்கைத் தமிழர்களும் வசிக்கலாயினர். முஸ்லிம்கள் பழமைவாத மதச் சிந்தனை காரணமாக ஆங்கிலக்கல்வியில் அக்கறை காட்டவில்லை. ஆயினும் ஏனையோர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர். அவர்களுள் பறங்கியர் முன்னிலை வகித்தனர். அவர்கள் அரசாங்கப் பதவிகளில் கூடிய பிரதிநிதித்துவத்தையும் அந்தஸ்தையும் அடைந்தனர்.
ஆரம்பத்தில் கொழும்பில் மாத்திரம் அன்றி, காலியிலும் மாத்தறையிலும் வெஸ்லியன் பாடசாலைகளில் ஆங்கிலக்கல்வி கற்ற மிகப் பெரிய சிங்கள அணியினராக கொவிகம முதலியார்களின் பிள்ளைகளே இருந்தனர். இவ்வாறு 1863 இற்கு முன்னர் சிவில் சேவையில் நுழைந்த இலங்கையர்களில் பாதிப் பேர் கொவிகம சிங்களவர்களாகவே இருந்தனர். அதற்கடுத்தபடியாக் தமிழ் வெள்ளார்கள் இருந்தனர். ஆயினும் வணிகத்தி்லும் மதுபான விற்பனையிலும் ஈடுபட்டு முன்னேறிய கராவ, துராவ, சலாகம சாதியினர் சிங்களப் பகுதியில் கொவிகம சாதியினருடன் போட்டிபோடும் அளவுக்கு வளர்ந்தனர். அதே போன்று கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, சாதியின் பிடியில் இருந்து விடுபட முயன்ற கரையார் (மீனவர்) ஆங்கிலக்கல்வி மூலம் முன்னேற முயன்றனர். ஆனால் செல்வத்திலும் நில உடமையிலும் மேல்நிலையில் இருந்த வெள்ளாளருடன் போட்டியிடுவது கடினமாக இருந்தது.
மறுபுறத்தில் சிங்களவர் மத்தியில் உருவான புதிய தனவந்தரின் அளவுக்கு தமிழர் மத்தியில் உருவான மேலடுக்கினரால் செல்வநிலையில் உயர முடியவில்லை. இங்கே சிங்களவர் மத்தியில் உருவான மேலடுக்கினருக்கும் தமிழர் மத்தியில் உருவான மேலடுக்கினருக்கும் இடையே மற்றொரு வேறுபாடு இருந்தது. சிங்கள காலனித்துவ மேலடுக்கினர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி வீட்டில் ஆங்கிலமொழி பேசி ஆங்கிலப் பாணியிலான வாழ்க்கைக்கு அடிமைப்பட்ட அதேவேளை, தமிழ் வெள்ளாளர் தமது மதத்தையும் கலாசாரத்தையும் விட்டுக்கொடுக்காமல் ஆங்கிலக்கல்வியை மாத்திரம் ஏற்றுக்கொண்டனர். இதற்கு தமிழ் மொழிக்கிருந்த ஆளுமையும், அதேசமயம் இந்து மதம் சாதி ரீதியில் இவர்களது உயர்ந்த அந்தஸ்தை வலுப்படுத்தியதும் பிரதான காரணங்கள்.
1857 முதல் 1862 வரை, அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 99 இல் இருந்து 5,518 ஆகவும், இலவசப் பள்ளிகளின் எண்ணிக்கை 315 இல் இருந்து 12,087 ஆகவும், உதவி பெறும் பள்ளிகள் (மாநில நிதியுதவி பெறும் மிஷனரிப் பாடசாலைகள்) 15 இல் இருந்து 1,424 ஆகவும் உயர்ந்தன; அதேசமயம் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 873 இல் இருந்து 5,508 ஆக உயர்ந்தது.
1881 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் 17.4% மக்கள் ஆங்கிலம், சிங்களம் அல்லது தமிழ் ஆகிய மொழிகளில் கல்வியறிவு பெற்றவர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1901 ஆம் ஆண்டில், கல்வியறிவு பெற்ற மக்கள் தொகை 773,193 ஆக இருந்தது. 1904 இல் 246,669 மாணவர்களுடன் 3,007 பள்ளிகள் இருந்தன. கல்வி அறிவு வீதம் மேல்மாகாணத்திலும் வடமாகாணத்திலும் அதிகமாகக் காணப்பட்டது.
1890 ஆம் ஆண்டளவில், வடக்கிலே பத்து, தென்மேற்கில் பன்னிரண்டு பாடசாலைகள் இருந்த அதேசமயம் மேல்மாகாணத்தில் அறுபது ஆங்கிலப் பள்ளிகள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை காலியில் இருந்தன. இந்தப் பள்ளிகளில் பெரும்பாலானவை மிஷன் அமைப்புகளால் நிர்வகிக்கப்பட்டன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் மற்றொரு பகுதியான, மத்திய மாகாணத்தில், குறிப்பாக கண்டியில், பன்னிரண்டு ஆங்கில மொழிப் பள்ளிகள் இருந்தன.
குறிப்பு : இவ் அத்தியாயத்தில் தரப்பட்ட தரவுகளும் தகவல்களும் பிற்காலத்தில் பெருந்தேசியவாதிகளால் பரப்பட்ட பல பொய்யான செய்திகளுக்கு மறுப்புரையாக அமையும்.
உசாத்துணை
- Abeysinghe, T (n.d). Jaffna Under the Portuguese.
- Albulescu, I.,(2018.)The Historical method in Education Research. American Journal of Humanities and Social Sciences Research (AJHSSR).
- Arasaratnam, S. (1981). ‘Social History of a Dominant Caste Society: The Vellalar of North Ceylon in the 18th Century’, IESHR, Vol. 18(3-4)
- Azeez, A.M.A. “The Muslim Tradition” in EC,CV .
- Bastiampillai, B, (1988)’Caste in Northern Sri Lanka’, Sri Lanka Journal of the Social Sciences, Vol. 11 (1-2.)
- CO 54/59 CO official to Governor, 27 March.
- David, K. A. (1972.) The Bound and the Nonbound: Variations in Social and Cultural Structure in Rural Jaffna, Ceylon. Ph.D. dissertation, The University of Chicago.
- Declan Quigley (1993) Interpretation of Caste. Oxford.
- Denham, E.B. (1912) Ceylon at the Census of 1911, being the Review of the Results of the Census of 1911, Colombo.
- Eric Meyer (1992 Mar.) Historical Aspects of Caste in the Kandyan Regions’, unpublished paper delivered to the Seminar on Caste, International Centre for Ethnic Studies, Colombo.
- Fernando, C. (1977). “English and Sinhala Bilingualism in Sri Lanka.” Language in Society, 6(03)
- Hocart, A.M. (1950) Caste: A Comparative Study. London.
- Kularatne, T. (2006) History of printing and publishing in Ceylon 1736-1912, Sridevi printers, Dehiwala.
- Louis Dumont. Homo Hierarchicus (1970): The Caste System and its Implications, Chicago.
- Manor. J (n.d), The Expedient Utopian. Bandaranaike and Ceylon.
- Mendis G.C, Colebrooke-Cameron Papers. Vol.1
- National Report ( 2004). Colombo: Ministry of Education.
- Patrick Peebles (1995), Social Change in Nineteenth Century Ceylon, New Delhi.
- Rajasingham. KT (2002) Sri Lanka: The Untold Story Chapter 27 – Horsewhip Amirthalingham”.
- Rogers, J. (2004). Caste as a Social Category and Identity in Colonial Lanka. The Indian Economic and Social History Review 41(1)
- Ruberu R, (n.d) Education in Colonial Ceylon. Kandy.
- SLNA, N/5/8, ‘Sessional Paper’ (Colombo 1920, 1927)