யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் - 13
Arts
21 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 13

June 3, 2024 | Ezhuna

“யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்” என்ற இத்தொடரானது, யாழ்ப்பாணத்தில் புராதன நூலக வரலாறு முதல் நவீன தனியார் நூலக வளர்ச்சி, பொது நூலக வளர்ச்சி, நூலகவியல் கல்வியின் அறிமுகம், நூலகத்துறையில் ஈழத்தமிழர்களின் முன்னோடி முயற்சிகளாக யாழ்ப்பாணத்தில் எழுந்த நூலகவியல்சார் நூல் வெளியீடுகள், நூலகவியல் துறைசார் சஞ்சிகைகளின் வெளியீடுகள், யாழ்ப்பாண கல்வியியல் வரலாற்றில் தடம் பதித்த நூலகங்களின் வரலாறு என்பவை உள்ளிட்ட விடயங்களை பற்றி பேசவிழைகின்றது.

ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் தாபகர் வரலாறு

ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் (13.6.1905 – 04.11.1989), 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஆட்சியின்போது, யாழ்ப்பாணக் குடாநாட்டில் மானிப்பாயில் செல்வாக்குடன் இருந்த ஒரு கிறிஸ்தவ தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். தந்தையார் பண்டத்தரிப்பையும், தாயார் மானிப்பாயையும் சேர்ந்தவர்கள். ருவைற் (Dwight), தப்பான் (Tappan), கார்டினர் (Gardiner) குடும்பத்தினர் இவரது உறவினர்களாவர். தனது ஒன்பதாவது வயதில் தாயை இழந்த ஜேம்ஸ் இரத்தினம் அவர்கள், மானிப்பாய் இந்துக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றுக்கொண்ட பின்னர், கொழும்பில் சென்.ஜோசப் கல்லூரி, சென்.தோமஸ் கல்லூரி எனத் தன் உயர் கல்வியைத் தொடர்ந்திருந்தார். 

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தைவிட ஜேம்ஸ் இரத்தினம் அவர்கள் கொழும்பில் வாழ்ந்த காலமே அதிகம். கொழும்பில் உயர்கல்வியைப் பெற்ற இவர், அங்கு 1922 முதல் பத்திரிகையாளராகப் பணியாற்றினார். சிட்டிசன், யங் லங்கா, சிலோன் டெய்லி மெயில், சிலோன் இன்டிப்பென்டென்ட், சிலோன் மிட்லன்ட் கசட், சிலோன் மோர்னிங் லீடர், இந்து சாதனம், டெய்லி நியூஸ், த ட்ரிபியூன் என இவரது ஊடக உலகம் பரந்து விரிந்தது.

ratnum

1924 இல் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்ந்து, சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். இவரது சட்டக் கல்லூரித் தோழனாக ஜே.ஆர். ஜயவர்த்தனா இருந்தார். சட்டக்கல்லூரியில் இருந்த போது முதலாம் ஆண்டில், 1927 இல், சட்ட மாணவர் சஞ்சிகையில் (தொகுதி 1, இதழ் 4, 1927) எழுதிய ‘Trial by Jury in Ceylon under British Rule’ என்ற ஆய்வுக் கட்டுரை இவருக்கு வோல்ட்டர் பெரேரா பரிசை வென்று தந்தது. அங்கிருந்த வேளைகளில் மாணவர் எழுச்சிகளில் தீவிர கவனம் செலுத்தியதால் அவரால் சட்டக் கல்வியைத் தொடர்ந்து நிறைவுசெய்ய முடியவில்லை. அங்கிருந்து சில காலத்திலேயே சட்டப் படிப்பைக் கைவிட்டு சேர். பொன்னம்பலம் அருணாசலத்தின் பாதிப்பில் அரசியலின்பால் ஈர்க்கப்பட்டார். 

அரசியலின் பால் ஏற்பட்ட கவர்ச்சி காரணமாக, 1931-1952 காலகட்டங்களில் நான்கு தடவைகள் நுவரெலியா தேர்தல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஒரு தடவை, 1944 இல், சக போட்டியாளர் எம்.டி. பண்டாவை சட்டபூர்வமாகத் தோற்கடிக்கத்தக்க நிலைக்கு வந்திருந்தும், அரசவைப் பிரதிநிதிப் பதவி இவருக்குக் கிட்டவில்லை. நுவரெலியாவில் தொடர் தோல்வி கண்டதனால், கொழும்பு தெற்கு பகுதியிலும் ஒரு தடவை போட்டியிட்டு, அதிலும் தோல்வியடைந்தார். 

அவர் தேர்ந்த இடதுசாரி அரசியலும் அவருக்கு வெற்றிகரமாக அமையவில்லை. பின்னர் இலங்கை கல்வித்துறையில் இணைந்து, மலையகத்தில் பதுளை – ஊவா கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய பின், நுவரெலியா புனித சேவியர் கல்லூரியின் ஆசிரியராகவும், பின்னர் அக் கல்லூரியின் அதிபராகவும் சிலகாலம் பணியாற்றினார். செல்வந்த வர்த்தகரும், அரசியல்வாதியுமான விஜேரட்னவின் மகளான இவ்லினை காதலித்து, 1933 இல் மணந்து கொண்டார். காதல் திருமண வாழ்வில் அவர்களுக்கு எட்டு குழந்தைகள் உள்ளனர். அக்காலத்தில் அவரது ஈடுபாடு, வர்த்தக சாம்ராஜ்யத்துக்குள் சிலகாலம் நுழைந்து செல்வம் சேர்க்க வழி சமைத்திருந்தது. 

தனது மகன் தன்னுடைய அனுமதியின்றி ஒரு சிங்களப் பெண்ணை மணந்ததை ஏற்றுக்கொள்ளாத, மானிப்பாயிலிருந்த இவரது தந்தையார், திருமண நாளன்று தனது வீட்டைச்சுற்றி கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டிருந்ததுடன், அந்நாளைய பிரபல பத்திரிகைகளில் தனது மகனுடனான உறவு முறிப்பையும் பகிரங்கமாகப் பிரசுரம் செய்திருந்தார். அதன் பின்னர் ஜேம்ஸ் இரத்தினம் நிரந்தர தென்னிலங்கைவாசியாகத் தன்னைப் பொருத்திக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்ட போதிலும், ஈழத்தமிழர் தொடர்பாகவும், யாழ்ப்பாணம் தொடர்பாகவும், தனது தாயகம் சார்ந்த ஆத்மார்த்த உணர்வுகளை அவரால் முற்றாகக் கழற்றிவைக்க முடியவில்லை. சந்தர்ப்பம் கிட்டும்போதெல்லாம் இலங்கையின் தமிழர் சார்பான கரிசனையை அவர் அழுத்தமாக வெளிக்காட்டி வந்திருப்பதை அவரது வாழ்க்கை வரலாற்றை மீள்பார்வை செய்யும் எவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். தனது தந்தையார் பத்திரிகையில் வெளியிட்ட அந்த உறவு முறிப்பை தாங்கிவந்த பழுப்படைந்த பத்திரிகைப் பிரதியினை, ஜேம்ஸ் இரத்தினம் தன் மரணம் வரை பாதுகாத்து வந்திருந்தார். 

1931 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி எழுதிய ஒரு கட்டுரையில் காணப்பட்ட கருத்தினை விமர்சித்து, ‘ஏகாதிபத்தியத்தின் கருவி என ஒரு மதத்தை ஒதுக்கலாமா?’ எனக் கேள்வியெழுப்பி, 11.04.1931 இல் ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்கள் மகாத்மா காந்திக்கு எழுதிய கடிதமொன்றும், அதற்கு 03.05.1931 இல் மகாத்மா எழுதிய ஏற்புக் கடிதமும் இவரது கடித எழுத்துகளின் சேர்க்கைகளில் குறிப்பிடத்தகுந்தவை. இக்கடிதமும், அதற்காக ‘யங் இந்தியா’ பத்திரிகையின் வாயிலாக மகாத்மா 7.5.1931 இல் வழங்கிய பதிலும் ‘Collected Works of Mahatma Gandhi’ என்ற பெருந்தொகுப்பின், தொகுதி 46 (XLVI) இன் 77, 109, 110 ஆகிய பக்கங்களில் இடம்பெற்றுள்ளன.

அவர் பாதுகாத்து வைத்திருந்த அரிய மூலச் சுவடிகள், பழைய நூல்களின் முதற் பதிப்புகள், வில்லியம் டிக்பி – சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் போன்றோரின் சிறப்புக் கடிதச் சேகரிப்புகள், வரலாற்றாதாரங்கள், கையெழுத்துப் பிரதிகள், மகாத்மா காந்தி – ஜே.ஆர். ஜெயவர்த்தனா உள்ளிட்ட வரலாற்று நாயகர்கள் எழுதிய கடிதங்கள் என்பவற்றை விரிவாகக் குறிப்பிட்டால் பெரும்பட்டியலாக அது நீளும். 

கொழும்பில் தனது இல்லத்தில் (Baron’s Court, 35, Guildford  Crescent, Colombo 7) சேகரித்துப் பாதுகாத்து வைத்திருந்த ஜேம்ஸ் இரத்தினம் அவர்களின் நூல்நிலையம் (Evelyn Rutnam Institute) அறிஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஹொரேஸ் வால்போல் (1717 – 1797) என்பவர் ஒரு ஆங்கில எழுத்தாளர்; கலை வரலாற்றாசிரியர், கடிதங்களின் நாயகன்; அவரும் ஒரு அரசியல்வாதியாக அறியப்பெற்றவர். அவரது கடிதச் சேகரங்களில் ஒருபகுதி ஏதோவொரு வகையில் ஜேம்ஸ் இரத்தினம் அவர்களிடம் இருந்தது. பிரபல அமெரிக்கப் பல்கலைக்கழகமான யேல் பல்கலைக்கழகத்தில் ஹொரேஸ் வால்போல் அவர்களது மற்றைய கடிதச் சேர்க்கைகளுடன் பாதுகாத்து வைத்திருக்கும் பொருட்டு, ஜேம்ஸ் இரத்தினம் அதனை அன்பளிப்பாக வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹொரேஸ் வால்போல் பற்றிக் கூறும் அறிஞர்கள் ‘வரலாற்றுணர்வு மிக்க கடித எழுத்தாளன்’ என்று குறிப்பிடுவர். வால்போலைப் போன்றே ஜேம்ஸ் இரத்தினமும் வரலாற்றுணர்வு மிக்க ஒரு கடித, கட்டுரை எழுத்தாளனே. 

polce

தனிநாயகம் அடிகளாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அவர், உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் பலவற்றினதும் முக்கிய பங்காளராக இருந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 1974 இல் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பேராசிரியர் சு. வித்தியானந்தன், வி.எஸ். துரைராஜா, கோபன் மகாதேவா, பேராசிரியர் சி. பத்மநாதன், மறவன்புலவு க. சச்சிதானந்தம் உள்ளிட்ட குழுவினருடன் ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்களும் ஒன்றிணைந்து முகாமைக் குழுவில் சேவையாற்றினார். அதன்போது தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளைக் குழப்பியடிக்க மேற்கொள்ளப்பட்ட அரசின் விரும்பத்தகாத நடவடிக்கைகளால் கலாநிதி ஜேம்ஸ் இரத்தினம் அவர்கள் விசனமடைந்திருந்தார். பத்தாம் நாள் நிகழ்வுகளையிட்டு யாழ்ப்பாணம், பாம் கோர்ட்டில் இடம்பெற்ற மக்கள் குழு விசாரணையில் அவர் முன்வந்து சாட்சியமளித்தார். 

அவர் பின்வருமாறு சாட்சியமளித்தார்:

“யாழ்ப்பாணதில் நடந்த அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டைப் பொறுத்தவரையில், அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டின் தாய் அமைப்பின் பொதுச்செயலாளராக நான் இருந்தேன். திரு. துரைராஜா, டாக்டர் வித்தியானந்தன் ஆகியோருடனும் பொதுச் செயலாளராக இருந்தேன். நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டை இலங்கையில் நடத்துவதென பாரிஸில் தீர்மானித்தோம். 

இலங்கை வந்ததும் அனைத்துலக தமிழாராய்ச்சி மகாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதென தீர்மானித்தோம். புதிய நிர்வாகிகள் தெரிவின்போது, யாழ்ப்பாணத்தில் நடத்தவேண்டுமென்ற நிபந்தனையுடன் இணைச்செயலாளர் பதவியினை ஏற்றுக்கொண்டேன். நான் கடிதத் தலைப்புக்களுடன், யாழ்ப்பாணத்தில் மகாநாடு நடைபெறவிருப்பதான அறிவித்தலை அச்சுப்பதிக்கும் வேலையை ஆரம்பித்தேன். யாழ்ப்பாணத்தில் மகாநாடு நடைபெறவிருப்பதாக தீர்மானித்ததையடுத்து, பலவித கஷ்டங்களை நாங்கள் எதிர்நோக்க வேண்டியதாயிற்று. என்னைப் பொறுத்தவரையில் மகாநாட்டை யாழ்ப்பாணத்தில் தான் நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இந்தப் பிரச்சினை பெரும் விவாதத்துக்குள்ளாகி, அனைத்துலகத் தமிழாராய்ச்சி இலங்கைக் கிளை பிளவுபடுவதைக் கவனித்தோம். 

மேடைக்கு இரண்டாவது வரிசையில் நான் இருந்து கொண்டிருந்தேன். மேற்குப் பக்கமாக நைனா முகம்மது திரும்பி நின்றுகொண்டு பேசுவதைக் கவனித்தேன். அந்தப் பக்கம் ஏதோ குழப்பம் நிகழ்வதைக் காணக்கூடியதாகவிருந்தது. கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. மேடையை நோக்கி மக்கள் வந்துகொண்டிருந்தார்கள். குண்டாந்தடிப் பிரயோகம் செய்யப்பட்டுக் கொண்டிருப்பதால் தான் அப்படி மக்கள் மேடையை நோக்கி வந்துகொண்டிருப்பதைத் தெரிந்துகொண்டேன். என்னால் ஓரிடமும் ஓடமுடியவில்லை; சனநெரிசலாக இருந்தது. ‘பெற்றோல் செட்’ பக்கமாக நகர்ந்தேன். நான் விழுந்துவிட்டேன். என்னைச் சில இளைஞர்கள் மதிலின் மற்றப் பக்கத்தில் போட்டார்கள். எனக்கு அறிவு வந்தபோது ஜனங்கள் ஓடிக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவிருந்தது. பின்னர் நான் ‘மேர்ச்சன்ஸ் ஷொப்புக்கு’ கொண்டுசெல்லப்பட்டேன். முன் அறையில் வைக்கப்பட்டேன். மக்களை ஆயுதம் தாங்கிய பொலிஸ் ஜீப் விரட்டியடித்துக் கொண்டிருப்பதை அறையிலிருந்து கவனித்தேன். நான் பல சர்வதேச மகாநாடுகளில் கலந்துகொண்டுள்ளேன். இப்படியானதொரு பெரிய கூட்டத்தைக் காணவில்லை. கூட்டத்தில் அமைதிதான் நிலவியது. சுலோகங்கள் கிடையாது. பேராசிரியர் நைனா முகமதுவின் பேச்சை எல்லோரும் உற்றுக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் 2 வாரம் சுகவீனமாக இருந்தேன்.” (தகவல் : ஈழநாடு 14.02.1974: ப.6,8).

யாழ்ப்பாணத்துக்கான ஒரு தொல்பொருளியல் அமைப்பொன்றின் தேவையை கலாநிதி கா. இந்திரபாலா அவர்கள், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தில் தொல்லியல்துறை விரிவுரையாளராகப் பணியாற்றிய காலகட்டத்திலேயே உணரத் தலைப்பட்டிருந்தார். இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களம் சிங்கள பௌத்த சார்புநிலையை அக்காலத்திலேயே எடுத்திருந்தது. 

அன்றைய யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் பல தொல்பொருளிடங்கள் கவனிப்பாரற்று தனி மனித முயற்சிகளாக மட்டுமே முன்னெடுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, அளவெட்டியில் வாழ்ந்தவரும் ஸ்கந்தவரோதயா கல்லூரி ஆசிரியருமான பொன்னம்பலம் ஆசிரியர், மாரிகாலத்தில் கந்தரோடைப் பகுதியில் மழைகாரணமாக மேலெழும்பும் பல தொல்பொருட்களை தனது கல்லூரி மாணவர்களின் உதவியுடன் பொறுக்கிப் பாதுகாத்து வந்திருந்தார். கந்தரோடைப்பகுதியில் அவ்வாறு சேகரிக்கப்பட்ட பல்வேறு புராதன நாணயங்கள், மட்பாண்ட ஓடுகள், ஆபரணங்களின் சிதிலங்கள் போன்றவை அவரிடம் சேகரமாகி இருந்தன. இவ்வாறு பல்வேறு தனிநபர் சேகரிப்புகள், பின்னாளில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது ஜனவரி 1974 இல் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களின் தலைமையில் காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றில் பொன்னம்பலம் ஆசிரியரின் சேகரிப்புகள் தவிர்ந்த பிற சேகரங்கள், இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகத்தின் உருவாக்கத்தின்போது, திரு.வி. சிவசாமி, கலாநிதி கா. இந்திரபாலா ஆகியோரினால் வரலாற்றுத்துறையில் ஏற்படுத்தப்பட்ட தொல்லியற்பிரிவில் நிரந்தரமாகப் பேணப்படலாயிற்று. தமிழாராய்ச்சி மாநாட்டின் பின்னர் பொன்னம்பலம் ஆசிரியர் தனது சேகரங்களை யாழ்ப்பாண மாவட்ட உயர் அரச அதிகாரி ஒருவருக்கு வழங்கியதாக அறியப்படுகின்றது. அச்சேகரங்களின் கதி இன்றுவரை என்னாயிற்றென்பது பரம இரகசியமாகவே உள்ளது. 

இவ்வாறான அழிவுகளிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தின் தொல்பொருள் சுவடிகளை பாதுகாத்து பேணும் வகையிலும், சாதாரண மக்களுக்கு அதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலும், யாழ்ப்பாணத் தொல்பொருளியல் தளங்களை அறிவுபூர்வமாக அடையாளப்படுத்தவும், பின்னாளில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை முறையாக முன்னெடுக்கவும் உதவும் வகையில் கலாநிதி கா. இந்திரபாலா 1971 இல் யாழ்ப்பாணத் தொல்பொருளியல் கழகத்தை நிறுவினார். முதலாவது தலைவராக 1971 இல், ஸ்கந்தவரோதயா கல்லூரி ஆசிரியரான பொன்னம்பலம் ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டார். திரு.வி. சிவசாமி, கலாநிதி கா. இந்திரபாலா ஆகியோர் இவரைத் தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றியிருந்தார்கள். 

இவரது தலைமைத்துவக் காலத்தில் தான் (1971-1972) கல்வெட்டியல் ஆய்வு தொடர்பான பத்து தொடர் கருத்தரங்குகள் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் இடம்பெற்றிருந்தன.

யாழ்ப்பாணத் தொல்பொருளியல் கழகத்தின் இணைச் செயலாளர்களாக, அவ்வேளையில் யாழ்ப்பாணக் கல்லூரியின் விரிவுரையாளர்களாக இருந்த ஆ. சிவநேசச்செல்வன், வி. சிவசாமி ஆகியோர் நீண்டகாலம் பணியாற்றினர். ஆரம்ப காலகட்டத்தில் யாழ்ப்பாணத் தொல்பொருளியல் கழகத்தின் முகவரியாக, பொதுப்பட்ட வசதியின் நிமித்தம், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் முகவரியே பாவிக்கப்பட்டது. 1973 வரை இம் முகவரி தொடர்ந்தது. யாழ்ப்பாணத் தொல்பொருளியல் கழகத்தின் கல்வெட்டியல் ஆய்வு வெளியீடான ‘Epigraphia Tamilica (Journal of Tamil Epigraphy)’ கலாநிதி இந்திரபாலா அவர்களால் யாழ்ப்பாணத் தொல்பொருளியல் கழகத்தின் சார்பாகப் பதிப்பிக்கப்பட்டு, ஜுன் 1971 இல் மேற்படி கழகத்தின் முதலாவது இதழாக 56 பக்கங்களில் வெளிவந்தது. ஒரேயொரு இதழே வெளியிடப்பட்ட இவ் இதழின் முகவரி, பேராதனை வளாகமாக குறிப்பிடப்பட்டிருந்தது. கண்டியில் நெஷனல் பிரின்டர்சில் இவ்விதழ் அச்சிடப்பட்டிருந்தது. 

1972 இல் யாழ்ப்பாணத் தொல்பொருளியல் கழகத்தின் இரண்டாவது தலைவராக தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அதிபராக 1972 இல் பணியாற்றிய  மா. மகாதேவன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இலங்கைப் பல்கலைக்கழக பேராதனை வளாகத்தில் வரலாற்றுத்துறையில் முதல்தர சித்திபெற்ற ஒருவர். மட்டுவில் வேற்பிள்ளை உபாத்தியாயரின் பேரனான இவரது தந்தையாரே மா.வே. மாணிக்கவாசகர் ஆவார். பின்னாளில் 1973 இல் கொக்குவில் இந்துக் கல்லூரியின் அதிபராக கல்வித் திணைக்களத்தால் சடுதியாக மாற்றப்பட்டவர். 

இவரது காலத்திலேயே யாழ்ப்பாணத் தொல்பொருளியல் கழகத்தின் மற்றொரு வெளியீடான ‘பூர்வகலா” சஞ்சிகையும் 1973 இல் வெளிவந்து ஓரிதழுடன் நின்றுபோனது. நிதி வசதி, கட்டுரைகளின் பற்றாக்குறை, விநியோக வசதியின்மை போன்ற பல காரணங்களால் அது தொடர்ந்து வெளியிடப்படவில்லை. அவ்வேளையில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தின் வரலாற்றுத்துறையில் பணியாற்றிவந்த கலாநிதி கார்த்திகேசு இந்திரபாலா பதிப்பாலோசகராகப் பணியாற்றியிருந்தார். திரு.வி. சிவசாமி, ஆ. சிவநேசச்செல்வன் ஆகிய இருவரும் பதிப்பாசிரியர்களாக இருந்தனர். ‘பூர்வகலா’ வெளியீட்டின்போது யாழ்ப்பாணத் தொல்பொருளியல் கழகத்தின் முகவரி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

1974 இல் யாழ்ப்பாண வளாகம் தொடங்கப்பட்டு ஆ. சிவநேசச்செல்வன், வி. சிவசாமி ஆகியோர் உள்ளிட்ட பல விரிவுரையாளர்கள், நூலகர், நூலக ஊழியர்கள் என்போர் திருநெல்வேலியில் பரமேஸ்வராக் கல்லூரியில் அமைந்திருந்த யாழ்ப்பாண வளாகத்தினால் உள்வாங்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத் தொல்பொருளியல் கழகத்தின் முகவரியாக, திருநெல்வேலி – அம்மன் வீதி – 23 ஆம் இலக்க இல்லம் பயன்படுத்தப்பட்டது (இது கலாநிதி கா. இந்திரபாலா அவர்கள் ஆரம்பகாலத்தில் குடியிருந்த வீடாகும்).

ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்கள், யாழ்ப்பாணத் தொல்பொருளியல் கழகத்தின் மூன்றாவது தலைவராக 1974 இல் தேர்வுசெய்யப்பட்டார். இதன்போது 1974 இல் நவம்பர் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத் தொல்பொருளியல் கழகத்தின் வரலாற்று முக்கியத்துவமானதொரு தலைமையுரையை கலாநிதி ஜேம்ஸ் இரத்தினம் அவர்கள் நிகழ்த்தியிருந்தார். இவ்வுரை பின்னர் 1975 இல் ‘Some aspects of the history of Archaeology in Sri Lanka’ என்ற தலைப்பில் சிறு நூலுருவில் யாழ்ப்பாணத் தொல்பொருளியல் கழகத்தின் ஆறாவது பிரசுரமாக வெளியாகியிருந்தது. சமகால ஈழத்தின் தொல்லியலாய்வு பற்றிய விரிவான தகவல்களை இத் தலைமையுரை உள்ளடக்கியிருந்தது. இதனை அக்கழகத்தின் துணைத்தலைவராக இருந்த பேராசிரியர் கா. இந்திரபாலா பதிப்பித்திருந்தார். 

பெருங்கற்கால யாழ்ப்பாணம் தொடர்பான ஆனைக்கோட்டை அகழ்வாய்வுகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையினால், விரிவுரையாளர் கலாநிதி பொ. இரகுபதி அவர்களினால் அடையாளப்படுத்தப்பட்டு (Exploration), யாழ்ப்பாண வளாகத்தின் சிறிய முதல் ஒதுக்கீட்டுடன், ‘கரையான்பிட்டி’ பகுதியில் (Excavation) இடம்பெற்றது. இவ்வகழ்வாய்வுகள் 1981 இல் பேராசிரியர் கா. இந்திரபாலா அவர்களின் தலைமையில், கலாநிதி பொ. இரகுபதி, கலாநிதி சி.க. சிற்றம்பலம் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரால்  முன்னெடுக்கப்பட்டது. அவ்வேளை, ஜேம்ஸ் இரத்தினம் அவர்கள் தீவிரமாக இவ்வகழ்வாய்வில் ஆர்வம் காட்டிவந்தார். இது தொடர்பாக அவர் ‘A Megalithic Burial site in the Jaffna District at Anaicoddai’ என்ற தலைப்பில் ‘The Tribune’ சஞ்சிகையில் 10.01.1981 அன்று விரிவான கட்டுரையொன்றை எழுதியிருந்தார். இக்கட்டுரை பின்னர் சிலோன் டெய்லி நியூஸ் பத்திரிகையில் 20.01.1981 இலும், ‘Tamil Times (London)’  மாத இதழில் செப்டெம்பர் 1984 இலும் பிரசுரமாகின. இக்கட்டுரையின் தமிழ் வடிவம் ‘ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சி : இலங்கை வரலாற்றுக்கு அதன் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் 08.02.1981 திகதிய வீரகேசரி வாரமலரில் விரிவாகப் பிரசுரமாகியிருந்தது. 

இவரது தன்னலம் கருதாத சேவைகளை கௌரவிக்கும் வகையில், 13.06.1975 இல் கொண்டாடப்பட்ட அவரது எழுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஜுன் 1975 இல் யாழ்ப்பாணத் தொல்பொருளியல் கழகத்தின் மூலம் ‘James Thevathasan Rutnam Felicitation Volume’ என்ற சேவை நயப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. இவ்வெளியீட்டின் பதிப்பாசிரியராக பேராசிரியர் கா. இந்திரபாலா செயற்பட்டிருந்தார். பதிப்பாசிரியர் குழுவில் ரோலண்ட் சில்வா, ஆ. சிவநேசச்செல்வன், வி. சிவசாமி, சி.க. சிற்றம்பலம் ஆகியோர் பணியாற்றியிருந்தனர். 

சேவை நயப்பு மலரில் கா. இந்திரபாலா, பசில் பெரேரா, கா. சிவத்தம்பி, பேற்றம் பஸ்தியாம்பிள்ளை, W.S.கருணாதிலக்க, எஸ். சுசீந்திரராஜா, ஏ. சுப்பிரமணியம் (சென்னை), சோபனா கோகலே (பூனா), மைக்கல் ரொபர்ட்ஸ், க. கைலாசபதி, கே.எம்.டீ. சில்வா, சி.க. சிற்றம்பலம், ஆஷ்லி ஹால்ப், அ. சண்முகதாஸ், வி. சிவசாமி, ரோலண்ட் சில்வா ஆகியோர் தமது ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருந்தனர். இம்மலரின் இறுதியில் ஆ. சிவநேசச்செல்வன் அவர்கள் தொகுத்திருந்த 1975 வரையிலான ஜேம்ஸ் இரத்தினம் அவர்களின் ஆக்கங்களுக்கானதொரு தேர்ந்த நூற்பட்டியல் நான்கு பக்கங்களில் இடம்பெற்றிருந்தது. அப்பட்டியலை விரிவுபடுத்தி ஜுலை 1988 இல் 37 பக்கங்களில் ஈவ்லின் இரத்தினம் பல்லினப்பண்பாட்டியல் நிறுவன நூலகர் என். செல்வராஜா அவர்கள் அந்நிறுவனத்தின் வாயிலாக தனி நூலாக வெளியிட்டிருந்தார். 

ஜேம்ஸ் இரத்தினம் அவர்களின் அயராத ஆய்வுப் பணிகளை மதித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு 1980 களில் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்திருந்தது. இவ்வேளையிலேயே 1975 இல் தயாரிக்கப்பட்ட சேவைநயப்பு மலரும் (ஜுலை 1980 இல்) விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

தீவிரமான அரிய நூல் மற்றும் ஆவணச் சேகரிப்பாளரான கலாநிதி ஜேம்ஸ் இரத்தினத்தின் துணைவியார் இவ்லின் இரத்தினம் அவர்கள் மறைந்த பின்னர், அவரது ஞாபகார்த்தமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில், ஒரு பல்லினப் பண்பாட்டு நிறுவனத்தினை, உசாத்துணை நூலக வசதியுடன் அமைத்து, 10.05.1981 அன்று ஜேம்ஸ் இரத்தினம் திறந்துவைத்தார். அந்நிறுவனம் திறக்கப்பட்டு சில நாட்களில் யாழ்ப்பாணப் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டமை கலாநிதி ஜேம்ஸ் இரத்தினத்தின் மனதில் தாங்கொணாச் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதுவரை காலமும் தனது கொழும்பு 7 இல்லத்தில் சேகரித்து, அவரது துணைவியாரால் பராமரிக்கப்பட்டு வந்திருந்த அரிய நூல்கள் அனைத்தையும் தனது தாய்மண்ணுக்குக் கொண்டுவந்து சேர்த்த அவர், ஈவ்லின் இரத்தினம் நிறுவனத்தை ஒரு ஆராய்ச்சி நூலகமாக மாற்றியமைத்தார். 

எஸ்.பி. அமரசிங்கம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1954 முதல் வெளிவந்த ‘த ட்ரிபியூன்’ சஞ்சிகையில் டிசம்பர் 1955 முதல் ஜனவரி 1981 வரை பல சுவாரஸ்யமான கட்டுரைகளை இவர் எழுதிவந்துள்ளார். 

இலங்கை அரசியலில் 1956 ஆம் ஆண்டில் ‘சிங்களம் மட்டும் சட்டம்’ பணடாரநாயக்க அரசினால் கொண்டுவரப்பட்ட வேளையில், 1957 ஜுலை 19 ட்ரிபியூன் இதழில் ஜேம்ஸ் இரத்தினம் அவர்கள் ‘House of  Nilaperumal’ என்றொரு சுவையான ஆய்வுக் கட்டுரையை எழுதியிருந்தார். அதில் பண்டாரநாயக்கவின் மூதாதையர் நீலப்பெருமாள் என்ற தமிழரே என்று நிறுவியிருந்தார். இக்கட்டுரை பிரசுரமான வேளையில், ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் பாராளுமன்றத்தில் எஸ்.டபிள்யூ பண்டாரநாயக்கவைச் சீண்டி அவமானப்படுத்தும் நோக்குடன் இக்கட்டுரையை எடுத்தாண்டு உரையாற்றியிருந்தார். 

ஜே.ஆரின் இந்த நிலைப்பாடு, அவருடன் சட்டக்கல்லூரிக் காலத்திலிருந்து நண்பராயிருந்த போதிலும், ஜேம்ஸ் இரத்தினம் அவர்களுக்கு உவப்பாயிருக்கவில்லை. பண்டாரநாயக்காவை கேலி செய்யும் அளவுக்கு ஜே.ஆர். ஜயவர்த்தனவின் மூதாதையர் ஒன்றும் தூய சிங்கள வழித்தோன்றல்கள் அல்ல என்று கூறும் மற்றொரு ஆய்வுக் கட்டுரையை ‘Tambi Mudaliyar’s Legacy’ என்ற பெயரில் எழுதி 1957 ஓகஸ்ட் 30 ‘ட்ரிபியூன்” இதழில் பிரசுரித்து ஜே.ஆர் இன் கொட்டத்தை அடக்கியிருந்தார். அவரது கட்டுரையை இரசித்த ஜே.ஆர், கலாநிதி ஜேம்ஸ் இரத்தினம் அவர்களுக்கு எழுதிய கடிதத்தையும், அவர் இரத்தினம் நிறுவனத்தில் தனது கடிதச் சேகரிப்பில் பாதுகாத்து வந்தார். பின்னாளில் 13.06.1985 அன்று ஜே.ஆர். ஜனாதிபதியாக இருந்த வேளையில், கொழும்பு லங்கா ஒபராய் ஹோட்டலில் அரச விருந்துபசாரம் ஒன்றினை நடத்தி, கலாநிதி ஜேம்ஸ் இரத்தினம் அவர்களின் 80 ஆவது பிறந்த தினத்தை அவர் கொண்டாடியிருந்தார். 

jr

இந்நிகழ்வின்போது இலங்கையின் யுனெஸ்கோ தேசிய கொமிஷன் (Sri Lanka UNESCO National Commission) ‘Festschrift 1985 – James Thevathasan Rutnam’ என்றவொரு ஆய்வுக் கட்டுரைத் தொகுதியொன்றையும் கலாநிதி ஜேம்ஸ் இரத்தினம் அவர்களின் பிறந்ததினத்தையொட்டி வெளியிட்டிருந்தது. இச்சிறப்பு மலரை யு.சு.டீ.அமரசிங்க, எஸ்.ஜே. சுமணசேகர பண்டா ஆகிய இருவரும் பதிப்பாசிரியர்களாகவிருந்து சிறப்புற வெளிக்கொணர்ந்திருந்தனர். இவ்வெளியீட்டுக்கென மேர்வின் காசிச்செட்டி, A.R.B. அமரசிங்க, எஸ்.யூ. தெரனியகல, ராஜா டீ அல்விஸ், பேற்றம் பஸ்தியாம்பிள்ளை, பட்ரிக் ஏ. பீபிள்ஸ், சீ.ஆர்.டீ. சில்வா, சுதர்சன் செனவிரத்ன, ஜோன் கார்ஸ்வெல், லோர்னா எஸ். தேவராஜா,  எஸ்.ஜே. சுமணசேகர பண்டா, சின்னப்பா அரசரத்தினம் ஆகியோர் தமது கட்டுரைகளை வழங்கி கலாநிதி ரட்ணம் அவர்களை கௌரவப்படுத்தியிருந்தனர். அது மட்டுமல்லாது, கலாநிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்கள் 04.11.1989 அன்று கொழும்பில் மறைந்தவேளையில் அவரது இறுதி ஊர்வலத்தின்போது, ஜே.ஆர். உலங்கு வானூர்தி மூலம் பூச்சொரிந்து தனது அஞ்சலியைத் தெரிவித்திருந்தார். அவ்வேளையில் ஆர். பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பண்டாரநாயக்க, ஜே.ஆர். பரம்பரைகளின் மூதாதையர் தமிழரே என்ற உண்மையை போட்டுடைத்த ஜேம்ஸ் இரத்தினம் அவர்கள், மேலும் பல சுவையான ஆய்வுக் கட்டுரைகளையும் தன் வாழ்நாள் காலத்தில் எழுதியிருக்கிறார். வட்டுக்கோட்டை செமினரி வரலாறு, கண்டி அரசியின் ஓவியம் பற்றிய சர்ச்சை, பொலநறுவை பெருஞ்சிற்பம் அரசருடையதா, அகஸ்தியருடையதா? என்ற விசாரணை, எல்லாளன் சமாதி பற்றிய வரலாற்று மோசடி, பெருங்கற்கால யாழ்ப்பாணம் என இப்பட்டியல் நீள்கின்றது.

1975 இல் வெளிவந்த ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்களின் சேவை நயப்பு மலரில் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் எழுதியிருந்த ‘முற்போக்குக்கு வழிவகுத்த ஒரு முதிய இளைஞன்’ என்ற கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதை இங்கு மீள்பதிவுசெய்ய விரும்புகின்றேன்:

‘ஜேம்ஸ் இரத்தினம் இன்று இலங்கையின் முக்கிய வரலாற்று ஆசிரியர்களில் ஒருவராக முகிழ்ந்துள்ளார். இப்படிக் கூறுவதிலும் பார்க்க, இவர் பிரபல வரலாற்றாசிரியர்கள் தேடிச்சென்று தகவல் பெற்றுக்கொள்ளும் வரலாற்று மூலப் பெட்டகமாக முகிழ்ந்துள்ளார் என்று கூறுவது மிகப் பொருத்தமாகும். இலங்கையிற் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பகால வரலாறு பற்றியும், இருபதாம் நூற்றாண்டின் முதலிரு தசாப்தங்களிலும் நடந்தேறிய அரசியல் அபிவிருத்திகள் பற்றியும் அறிந்து கொள்வதற்கான பல தகவல்களையும் சான்றுகளையும் சேகரித்து வைத்திருந்த ஜேம்ஸ் இரத்தினம் இத்துறைகளில் ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களுக்கு உதவியுள்ளார். பேராசிரியர்கள் நடராசா, கே.எம்.டி. சில்வா, கலாநிதி குமாரி ஜயவர்த்தனா ஆகியோரின் ஆராய்ச்சி வெளியீடுகளுக்கு ஜேம்ஸ் இரத்தினம் ஆற்றியுள்ள உதவிகள் பற்றி அவர்களே எழுதியுள்ளனர். 

சேர் அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்ரன், பொன்னம்பலம் அருணாசலம், பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோர்களது சேவை பற்றியும், வட்டுக்கோட்டைச் செமினரியின் கல்விச் சேவை பற்றியும் அதிகாரபூர்வமான அறிவாழம் கொண்ட திரு இரத்தினம், பொன்னம்பலம் அருணாசலத்தின் வாழ்க்கை வரலாற்றைச் சிறு நூலாகவும் வெளியிட்டுள்ளார். இலங்கை வரலாற்றுக்கான பல மூலச் செய்திகளை இந்திய அமெரிக்கப் பல்கலைக்கழக நூல் நிலையங்களிலிருந்து தேடிப் பெற்றுள்ளார். இத்தகவல்களை ஆதாரமாகக் கொண்டே பல ஆராய்ச்சி நூல்கள் எழுதப்படலாம். ஜேம்ஸ் இரத்தினத்தின் அறிவார்வம் அவரை அகழ்வாராய்ச்சி முதல் மானிடவியல் வரை பல துறைகளில் ஈடுபடுத்தியுள்ளது. யாழ்ப்பாணத் தொல்பொருளியல் கழகத்தின் நடப்பு வருடத் தலைவராக விளங்கும் அவர் ஆற்றிய தலைமைப்பேருரை இத்துறையின் வரலாற்றை அறிவதற்கான கருவூலமாகும்.”

நூலார்வம், ஆராய்ச்சிகளுக்கான தேடல்களில் அவர் கொண்ட ஈடுபாடு, தான் பெற்ற அறிவை பிறருடன் பகிர்ந்து கொள்வதில் இவருக்கிருந்த ஆர்வம் ஆகிய பண்புகள் இவரை இலங்கையின் பல்கலைக்கழகங்களின் தமிழ், சிங்கள ஆராய்ச்சியாளர்களது நட்பு வட்டத்திற்குள் கொண்டுபோய்ச் சேர்த்தது. அரசியல் ஈடுபாட்டில் இவரது தோல்வி, அறிவியல்துறைக்கு இவரை பெறுமதிமிக்கவராக இழுத்துவந்துவிட்டது. 

கலாநிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்கள் 04.11.1989 அன்று கொழும்பில் சுகவீனம் காரணமாக தனது 84 ஆவது வயதில் காலமானார். அரிய பல சுவடிகளுக்கிடையேயும், புத்தகங்களுக்கிடையேயும்  தன் வாழ்வைக் கடத்திய அவர், சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் பற்றியோ, வில்லியம் டிக்பி பற்றியோ விரிவான நூல் எதனையும் எழுதிவைக்க முன்வரவில்லையே என்பது அறிவுஜீவிகளின் ஆதங்கமாக இன்றும் உள்ளது. 

அவ்வப்போது அவர் எழுதிய கட்டுரைகளே இன்றும் அவரது பெயர்கூற நிலைத்திருக்கின்றன. 1969 இல் அவரது ஆரம்பகாலக் கட்டுரைகளின் தொகுப்பொன்று ‘Mixed Grill’ என்ற பெயரில் வெளிவந்திருந்தது. அவரது அளப்பரிய தேடல்கள் பல கட்டுரைகளாகி, அவரது மறைவுடன் அவருடனேயே மறைந்துவிட்டன. திருநெல்வேலியில் கலாநிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்களது அரிய நூலகமும், அந்நூலகத்தினை கொண்டியங்கிய அவரது அன்புத் துணையாளின் நினைவகமும், அதனைப் பொறுப்பெடுத்த யாழ்ப்பாணக் கல்லூரியின் முறையான பராமரிப்பின்றி அழிந்துவிட்டன. அடுத்த இதழில் கலாநிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்களின் மனைவியின் நினைவாலயமான இவ்லின் இரத்தினம் நூலகம் பற்றிப் பார்ப்போம். 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6825 பார்வைகள்

About the Author

நடராஜா செல்வராஜா

நடராஜா செல்வராஜா, யாழ். இராமநாதன் பெண்கள் கல்லூரியில் நூலகராகவும், யாழ்ப்பாண, சர்வோதய சிரமதான சங்கத்தின் யாழ்.மாவட்ட நூலகப் பொறுப்பாளராகவும், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகராகவும், இந்தோனேசியா, ஐக்கியநாடுகள் சபையின் கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகவும், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகத்தின் பொறுப்பாளராகவும், கொழும்பு இனத்துவக் கல்விக்கான சர்வதேச நிலைய ஆய்வு நூலகப் பொறுப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகரும், நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகையின் தாபக ஆசிரியராகவும் செயற்பட்டார். ஊடகத்துறையிலும் பணியாற்றிவிட்டு, தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இவர், ரோயல் மெயில் தபால் நிறுவனத்தின் அந்நிய நாணயப்பிரிவில் அதிகாரியாக தற்போது பணியாற்றுகின்றார். இவர் நூலகவியல் பற்றி தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், நூலகவியல் பற்றியும் பல வெளியீடுகளை செய்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • July 2024 (2)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)