வடக்கின் பண்பாட்டுச் சுற்றுலாவும் காலனிய கட்டட மரபுரிமையும்
Arts
7 நிமிட வாசிப்பு

வடக்கின் பண்பாட்டுச் சுற்றுலாவும் காலனிய கட்டட மரபுரிமையும்

May 15, 2022 | Ezhuna

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.

பண்பாட்டுச் சுற்றுலா (cultural tourism) என்பது  குறித்த ஒரு பிராந்தியத்தின் பண்பாட்டுச் சொத்துக்கள் மீது கவனத்தைக் குவித்துள்ள சுற்றுலா ஆகும். அது குறிப்பிட்ட பிராந்தியம் அல்லது குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் பௌதீகச் சொத்துக்கள், வழக்காறுகள், பயில்வுகள், நம்பிக்கைகள் என்பனவற்றின் மீது கவனத்தைக் கோருகின்ற பண்பாட்டு மேம்பாட்டு முறையாகும். அது பல்வேறுபட்ட உப களங்களைக் கொண்ட ஒரு பரந்த பரப்பாகும். இன்று இலங்கைச் சுற்றுலாத்துறையின் புதிய அல்லது மீள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பரப்பாக வட இலங்கைச் சுற்றுலாவும் அமைந்துள்ளது. பரந்த பின்னணியிற் நோக்கினால் இது ‘வடக்கின் வசந்தம்’ என்று முன்பு பெயரிடப்பட்ட எண்ணக்கருவின் நீட்சியுமாகும்.

Doric bungalow, Mannar

இலங்கைத் தீவில் மாகாண  மற்றும் மத்திய சுற்றுலாத்துறைகள் என இரண்டு துறைகள் இயங்குகின்றன. இது அடிப்படையில் சுற்றுலாத்துறையை முன்னேற்றுவதற்கான சிறந்த வழிபோல தென்பட்டாலும் இலங்கை அரசக் கட்டமைப்பில் ஒரு கையால் மாகாணங்களுக்கு அதிகாரங்களைக் கொடுத்து, மறு கையால் அதனைத் தடுக்கும் அல்லது குழப்பும் பொறிமுறைக்கான அடிப்படை ஏற்பாடுகளில் ஒன்றே இது என்பதை அவற்றுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள், நடைமுறைகளைக் கவனிக்கும் எவரும் புரிந்துகொள்ள முடியும். இது ஏற்கனவே அதிகார மமதை நிரம்பப்பெற்ற அரச அதிகாரிகள் என்ற வர்க்கத்திடையே மத்தி மற்றும் மாகாணம் என்ற பெரும் போட்டியை அல்லது அதிகாரத்தில் மேலும் முன்னேறிப் போவதற்கான தந்திரோபாய விட்டுக்கொடுப்புக்களை உருவாக்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. இதில் நிகழும் கவலைக்கிடமான விடயம் யாதெனில்,  விடய அறிவுள்ள திணைக்களங்களது இரண்டாம் மூன்றாம் நிலை உத்தியோகத்தர்கள் பின்தள்ளப்படுவதில் இருந்து குறிப்பாக நிபுணத்துவ ஆலோசனைகள், துறைசார் சிறப்புத் தேர்ச்சியுடையோரை உள்ளீர்க்காது விடுதல், அவர்களை அத்திட்டங்களில் இருந்து வெளியேற்றுதல் வரை இது நிகழ்கிறது. இன்னொரு புறம் திணைக்களங்களது உயர் அதிகாரிகள் மேலதிகாரிகள் என்போர் எந்தத் துறைசார் பின்புலமும் அற்று, அதேசமயம் அவர்கள் விரும்பும் ஜனரஞ்சக விடயங்களைச் செய்துகொடுக்கத் தயாராக இருக்கும் துறைசார் பட்டயம் உடைய ‘நிபுணர்கள்'(?) என்போரைத் தேடியலைந்து அவர்களிடம் அவற்றை ஒப்படைத்து அவற்றை அவற்றின் உச்சப் பெறுபேற்றை அடைய விடாமற் தடுத்து அழிக்கச் செய்தலாகும்.  இதன் மூலம் தமது சொந்த மக்களையும், அவர்களது பண்பாட்டையும் இத்தகையவர்கள் தொடர்ந்து தோற்கடிக்கிறார்கள் அல்லது தோற்கடிக்க முனைவோரது முகவர்களாகிறார்கள்.

Dutch period kachcheri building, jaffna

தொடர்ந்து வருகின்ற இந்த வகையான பொதுப் பின்னணிக்குள் சிக்குண்டு அழிந்துக் கொண்டிருக்கும் பலவற்றுள் ஒன்று வடக்கு, இலங்கைத் தீவின் காலனிய கட்டட மரபுரிமைச் சொத்துக்களாகும். எவ்வாறு வன்னியை ஒரு சூழல் சுற்றுலாவின் பெரும் மையமாக்க முடியுமோ, அவ்வாறே மன்னார், யாழ்ப்பாணம் ஆகியவற்றில் காணப்படும் அழிந்தும் வரும் அல்லது அழிக்கப்பட்டு வரும் காலனிய கட்டக்கலை மரபுரிமை வெளிப்பாடுகளை உரிய முறையிற் காப்புச் செயற்பாடுகளுக்கு உள்ளாக்கிப் (conservation) பாதுகாத்து அதனை அபிவிருத்திக்கான தனித்துவமான முதலீடாக்குதல் ஆகும். அவ்வகையில் அவற்றை வட இலங்கையின் பண்பாட்டுச் சுற்றுலாவின் பகுதியாக்கலாம். சம்பந்தமற்ற மேற்குலகச் சுற்றுலா முறைகளை விழுங்கி அதனை உள்ளூரில் வாந்தி எடுக்கும் சுயத்துவமற்ற முறைகளைக் கைவிட்டு வேரிலிருந்து சிந்திக்கவேண்டும். அவற்றில் ஒன்றாக எமக்கே தனித்துவமானதும் ஒரு காலகட்ட சமூக பண்பாட்டை வெளிப்படுத்தக்க சான்றாதாரமாகவும் உள்ள காலனிய கட்டங்களைக் கொண்டுவருதல் வேண்டும்.

அந்தவகையில், கோட்டைகள் முதலான காலனிய இராணுவக் கட்டுமானங்கள், இறங்குதுறைகள்,  பாலங்கள்,  வெளிச்ச வீடுகள் முதலான போக்குவரத்துச் சார்ந்த கட்டுமானங்களும் பண்டகசாலைகள், நீதிமன்றங்கள், கச்சேரி முதலான பொதுக் கட்டங்களும் காலனிய காலக்கட்டத்திற்குரிய சைவக் கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய மசூதிகள் உட்பட பலவிதமான மதக் கட்டுமானங்கள் மற்றும் காலனியகால பல்வகை வீட்டுக் கட்டுமானங்கள் என்பனவற்றை உட்படுத்திய காலனிய கட்டட மரபுரிமைச் சுற்றுலா (Colonial architectural heritage tourism) வடிவமைக்கப்படலாம்.

Colonial House Jaffna

இவை தொடர்பில் இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வமான முயற்சிகளும் இல்லை. சுற்றுலாத்துறை தவிர  பண்பாட்டு அமைச்சு,  அதன் கீழ் நூற்றுக்கணக்கான பண்பாட்டு அலுவலர்கள், பண்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என மிகப் பெரிய தொழிற்படை காணப்படுகிறது.  ஆனால் அத்தனையும் இலக்கற்ற வேலைத்திட்டங்களில் வீணடிக்கப்படுகிறது. இந்த இரு தசாப்த கால மரபுரிமைக்களுக்கான  குரல் கொடுப்பில் அவர்களுக்கான சரியான வேலைத்திட்டங்கள் அளிக்கப்பட்டிருந்தால் மிகக் குறைந்தபட்ச பாதுகாப்புக்காக நடவடிக்கை எதனையாவது செய்திருக்கலாம்.

‘உண்மைதான்! இது பற்றி ஒரு கூட்டம் கூட்டிப் பேசுவோம்’ என ஒரு மேலதிகாரி சொல்வதற்கிடையில், மிஞ்சிக் கடைசிக்கட்டத்தில்  உயிர்வாழும் கட்டடங்கள் உடைக்கப்பட்டுவிடும். இன்றைய யாழ்ப்பாணத்தின் மிகப் பெரிய தொழில்களில் ஒன்று பண்டைய கட்டிடங்களை இடித்து விற்றல் என்பது யாருக்கும் தெரியாதா என்ன? கண்காணிப்பு அல்லது யதார்த்தமான தடுப்புச் செயற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? அல்லது அப்படிச் செய்யவே முடியாதா? இவற்றில் பெரும்பகுதி தென்னிலங்கைக்கு ஏற்றி அனுப்பப்படுகிறதா? ‘இன அடையாளம்’ – ‘பண்பாடு’ என மேடை மேடையாக ஒலிவாங்கியே அஞ்சும் அளவுக்குக் கத்துபவர்களே எங்கே உங்கள் யாரையும் காணோமே?

Chankanai Dutch Church

குறைந்த பட்சம் மாகாண சபையின் வெவ்வேறு அமைச்சுக்கள், தமிழ் அரசியற்கட்சிகள் இத்தகைய கட்டடங்களை வாங்கியோ அல்லது வாடகைக்குக் கொடுத்தோ அதனை பாதுகாக்கலாமே? ‘மேடைக்கு மட்டுந்தான் யாவும் என்கிறீர்களா’? நான் அறிந்தவரை திருவாளர் ஐங்கரநேசன் மட்டுந்தான் ஒரு பழைய நாற்சார வீட்டை தன் அலுவலகமாக வைத்திருக்கிறார்.

அவ்வகையில், 2009ஆம் ஆண்டு தமிழர்களது ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்பு சுற்றுலா உட்பட அபிவிருத்தியின் பெயர் தரித்த அநேக நிகழ்ச்சித் திட்டங்கள் தமிழர் அதிகம் செறிந்து வாழும் பகுதிகளுக்கு எடுத்துவரப்படுகின்றன. இவற்றில் அநேகமானவை தோற்றத்திலும் அவற்றின் உடனடியான விளைவுகளின் வழியிலும் முன்னேற்றகரமானவை போலத் தென்பட்டாலும், ஆழமான அர்த்தத்தில் இவை நீண்ட கட்டமைப்பு ரீதியான இனத்துவ அழிப்பினை உள்நோக்கமாகக் கொண்டவை என்பதை எமது அப்பாவித்தனம் காட்டிக் கொடுப்பதில்லை. அதேவேளை அதனைப் பற்றிச் சிந்திப்பதற்கு தமிழ் மக்களின் தொழில்முறைப் பிரதிநிதிகளாகக் கூறிக்கொள்ளும் எமது அரசியற் தலைவர்களும் சிற்றளவிலேனும் அக்கறைகொள்வது இல்லை. அவர்களுக்கு நேரமும் இல்லை என்பதைத்தான்  கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்ட காலம் மிகத் தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளனர். அதேசமயம், எமது புலமையாளர்களுக்கும் பிரயோக ரீதியான மக்கள் மயப்படுத்தப்பட்ட சமூக ரீதியான அறிவியல் உற்பத்திப் பணிகளில் அக்கறை கொள்வது இல்லை. அல்லது அக்கறை உள்ள மிகமிகச் சிலரும் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறுபட்ட அதிகாரத் தரப்புக்களால் தோற்கடிக்கப்பட்டு அவற்றில் இருந்து மனநோவுடன் ஒதுங்கிக் கொள்கிறார்கள். இன்னும் சிலருக்கு ஓய்வுபெற்ற பின்பு இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்ற காலத்திற்றான் இது பற்றிய ஞானோதயம் அவர்களுக்குச் சித்திக்கிறது.  அத்துடன் புதிய தேசிய அங்கீகாரங்களும் மேடை மரியாதைகளும் கூடக் கிடைத்துவிடுகின்றன. ஏதாவது பொதுநன்மை அதனாற் கிட்டும் என்றால் அது கூடப் பரவாயில்லைத்தான்.

இத்தகைய பின்னணியில் காலனிய கட்டட மரபுரிமையை பாதுகாத்தல், அதனை சமூக பண்பாட்டு மேம்பாட்டிற்கான கருவியாக முன்மொழியாது விட்டால் மிகப்பெரிய வரலாற்று வறுமையையும் – பண்பாட்டு வறட்சியையும் அடைவோம். அதேசமயம் பாதுகாத்தலின் பெயரால் நிபுணத்துவ ஆலோசனைகளற்று நிகழும் காத்தல் திருத்துதல் அனைத்துச் செயற்பாடுகளும் கூட கட்டடங்களின் அழிவினை உறுதிச் செய்யும் என்பதை மறந்து விடக்கூடாது. அதேசமயம்  பல பண்டைய கட்டுமானங்கள் அவற்றின் உருக்கெட மாற்றி அமைக்கப்படுகின்ற அழித்தலின் வேறொரு வடிவமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இப்போது, தந்தை செல்வா கூறியது போல ‘தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமா’? அல்லது கிறிஸ்தவர்களது தவக்காலம்  தவக்காலத்து பெரியவெள்ளியிற் படிக்கப்படும் பசாமில் அடிக்கடி வருமே ‘ஐயோ கிறிஸ்தவர்களே’ என்று அதனைச் சற்று மாற்றி ‘ஐயோ தமிழர்களே’ என்று அழுது புலம்புவதா?

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

21619 பார்வைகள்

About the Author

பாக்கியநாதன் அகிலன்

பாக்கியநாதன் அகிலன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் (கலை வரலாறு), பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் (கலை விமர்சனம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளாகப் பணிபுரியும் அகிலன் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுவருகின்றார்.

'பதுங்குகுழி நாட்கள்', 'சரமகவிகள்', 'அம்மை', 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்பன இவரது கவிதைத் தொகுப்புகளாகும்.

இவரின் ஏனைய நூல்களாகக் 'காலத்தின் விளிம்பு' என்ற மரபுரிமை சார்ந்த நூலும் 'குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து' ஆகியவை அமைவதுடன் 'வெங்கட்சாமிநாதன் – வாதங்களும், விவாதங்களும்' என்ற நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)