இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள் - பகுதி 1
Arts
15 நிமிட வாசிப்பு

இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள் – பகுதி 1

July 27, 2022 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

இலங்கை தொடர்பாக அண்மைக் காலங்களில் வெளிவந்த வரலாற்று ஆய்வுகள், அரச வரலாற்றுப்பாட நூல்கள், தொல்லியற் கண்டுபிடிப்புக்கள் என்பன இலங்கையின் பூர்வீகமக்கள், பண்பாடு என்பவற்றின் தொடக்க காலத்தை விஜயன் வருகைக்கு முந்திய நாகரிகத்தில் இருந்து ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும் என்பதைக் கோடிட்டுக்காட்டுவதாக உள்ளன. பிரித்தானிய ஆட்சியிலிருந்து இலங்கையின் பூர்வீக வரலாறு தீபவம்சம், மகாவம்சம் முதலான பாளி இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுவந்துள்ளன. அவ்விலக்கியங்கள் கி.மு.6ஆம் நூற்றாண்டளவில் வடஇந்தியாவில் இருந்து விஜயன் தலைமையில் ஏற்பட்ட குடியேற்றத்துடனேயே இலங்கையின் மனிதவரலாறும், நாகரிக வரலாறும் தோன்றியதாகக் கூறுகின்றன. இக்குடியேற்றம் நடப்பதற்கு முன்னர் இயக்கர், நாகர் என்ற இருவினமக்கள் இங்கு வாழ்ந்ததாக இந்நூல்களில் (Mahavamsam:vi-vii.5155) குறிப்பிட்டப்பட்ட போதிலும் பிற்காலத்தில் எழுந்த பெரும்பாலான வரலாற்று ஆய்வுகளில் அம்மக்களை மனித இனமாகக் கருத்தில் கொள்ளப்படவில்லை (Mendis 1946:8, Paranavithana 1961:181-82) மகாவம்சம் வடஇந்தியாவிலிருந்து குடியேறியவர்களை இந்நாட்டிற்குரிய மக்களாகவும், தமிழர்களை அக்கரையிலிருந்து (தென்னிந்தியா) வந்து சென்ற அந்நியராகவும் குறிப்பிடுகின்றது. இக்கதைகளை அடிப்படையாகக் கொண்டெழுந்த பிற்கால வரலாற்று நூல்கள் சிங்கள மக்களை வடஇந்தியாவிலிருந்து குடியேறிய ஆரிய இனக்குழுமத்தின்  வழித்தோன்றல்களாகவும், தமிழர்களைத் தமிழ்நாட்டிலிருந்து பிற்காலத்தில் வந்து குடியேறிய அந்நியராகவும் குறிப்பிடுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்கால வரலாற்று மொழியில் சார்ந்த ஆய்வுகள் சிங்கள மக்களை ஆரியமொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவும், தமிழர்களைத் திராவிடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் அடையாளப்படுத்திக் கூறியுள்ளன. ஆயினும் 1970களிலிருந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விஞ்ஞான பூர்வமான தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் வடஇந்தியக் குடியேற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்குப் பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் மனித வரலாறும், நாகரிக வரலாறும் தோன்றிவிட்டதை உறுதிசெய்கின்றன. இவை தமிழ், சிங்கள மக்களின் பூர்வீகவரலாறு, பண்பாடு பற்றிய பாரம்பரிய வரலாற்றுக் கதைகளையும், நம்பிக்கைகளையும் மீளாய்வு செய்யத் தூண்டியுள்ளன. அவற்றை மேலும் உறுதிப்படுத்துவதில் கட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வுகளில் கண்டு பிடிக்கப்பட்ட பூர்வீக மக்கள் பற்றிய சான்றுகளுக்கு முக்கிய இடமுண்டு.

கட்டுக்கரையின் அமைவிடம்

அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆய்வுக்குழி

கட்டுக்கரைத் தொல்லியல் மையம் வடஇலங்கையில் மன்னார் மாவட்டத்திற்கு வடகிழக்கே 26கி.மீ. தொலைவில் கட்டுக்கரைப் பிரதேசத்தில் உள்ள குருவில் என்ற சிறிய கிராமத்தில் காணப்படுகின்றது. தற்காலத்தில் இக்குளத்தைச் சுற்றியமைந்துள்ள பிரதேசம் சிங்களத்தில் “யோதவேவ” எனவும், தமிழில் “கட்டுக்கரைக்குளம்” எனவும் அழைக்கப்படுகின்றது. ஆயினும் இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் இக்குளம் உட்பட அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்கள் “பாலப்பெருமாள் கட்டு” என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது. இக்குளத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களின் இடப்பெயர்களின் பின்னொட்டுச் சொற்களாகக் குளம், அடி, மோட்டை, வில், புலவு, தாழ்வு, கட்டு, காடு என முடிகின்றன. இப்பின்னொட்டுச் சொற்கள் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இடப்பெயர்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்ததற்கு தமிழ், பாளி இலக்கியங்களும், பிராமிக்கல்வெட்டுகளிலும் ஆதாரங்கள் காணப்படுகின்றன (Ragupathy1991, Pushparatnam). இவ்வாதாரங்கள் கட்டுக்கரைப் பிரதேசத்திலுள்ள சில ஊர்ப்பெயர்களுக்கு நீண்டகால வரலாறு இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.

தொல்லியல் மேலாய்வு

ஆதியிரும்புக்கால மட்பாண்ட வகைகள்

கட்டுக்கரைகுளம் வடஇலங்கையில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இக்குளம் தொடர்பான வரலாற்றுக்கதைகள், இலக்கியக்குறிப்புகள், தொல்பொருட்சான்றுகள் என்பன இக்குளத்திற்கு தொன்மையான வரலாறு இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. இச்சுற்றாடலில் காணப்பட்ட தொல்பொருட் சின்னங்கள் பற்றிய தகவலை முதலில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை அதிபர் டேவிட் அவர்கள் தொல்லியல் மாணவன் கிரிசாந்தனுக்கு கூறியிருந்தார். அத்தகவலின்  அடிப்படையில் 2016-2017 ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொல்லியல் பிரிவு ஆசிரியர்களும், மாணவர்களும் இங்கு விரிவான தொல்லியல் மேலாய்வினை மேற்கொண்டிருந்தனர். அதன்போது குளநீர்ப் பெருக்கினால் சிதைவடைந்த அணைக்கட்டுக்கள், கால்வாய்கள், குளபரப்பினுள் தொல்பொருட் சின்னங்கள் காணப்பட்ட இடங்கள் என்பவற்றில் இருந்து அதிகளவான தொல்பொருட் சின்னங்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. குளத்திற்கு வடக்குப்பக்க அணைக்கட்டுடன் இணைந்த காட்டுப் பிரதேசத்திலும், மேட்டுப் பிரதேசத்திலும் பிறதேவைக்காக மண் அகழப்பட்ட ஆழமான குழிகளிலிருந்து தொல்பொருட் சின்னங்களுடன், கலாசார மண்ணடுக்குகளையும் அடையாளம் காணமுடிந்தது. இந்த மேலாய்வின் மூலம் கட்டுக்கரைப் பிரதேசத்தில் கற்காலம் தொட்டு மக்கள் வாழ்ந்து வருவதை உறுதிப்படுத்தும் கற்கருவிகள், பல்வேறு காலகட்ட மட்பாண்டங்கள், சுடுமண் உருவங்கள், கட்டிட எச்சங்கள், கூரை ஓடுகள், செங்கட்டிகள், ஆதிகால, இடைக்கால உள்நாட்டு, வெளிநாட்டு நாணயங்கள் என்பவற்றைக் கண்டுபிடிக்க முடிந்தது. மேலும் இக்குளம் வற்றிய காலங்களில் தெரியவரும் தொல்லியற் சின்னங்களும்,கட்டிட எச்சங்களும் இக்குளம் 1896ஆம் ஆண்டு பெருப்பித்துக் கட்டப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு  முன்னரே இங்கிருந்த சிறிய குளங்களை அண்டியதாக மக்கள் குடியிருப்புகள் இருந்ததையும் அறிந்து கொள்ளமுடிந்தது.

தொல்லியல் அகழ்வாய்வு

வடஇலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புரதான குடியிருப்புமையமாகக் கட்டுக்கரைப்பிரதேசம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இக்குடியிருப்புகள் கட்டுக்கரைக்குளத்திற்கு வடக்குப்பக்கமாக ஏறத்தாழ 3 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தில் இருந்துள்ளதை இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் ஆதாரங்கள் உறுதிசெய்கின்றன. ஆயினும் இப்பிரதேசத்தில் இருந்து பிறதேவைக்காக நீண்டகாலமாக மண் அகழப்பட்டு வருவதனால் அவ்விடங்கள் தற்போது பெரிதும், சிறிதுமான குழிகளாகக் காணப்படுகின்றன. இக்குழிகளில் இருந்து பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட மண்ணோடு தொல்பொருட் சின்னங்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளதை தொலைதூரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வீதிகளிலும், அணைக்கட்டுக்களிலும் அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் கட்டுக்கரைப் பிரதேசத்தின் பூர்வீக மக்கள், பண்பாடு என்பவற்றைக் கண்டறியும் நோக்கில் 2016-2017 காலப்பகுதியில் இரு இடங்களில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றுள் முதலாவது குளத்தின் வடக்குப்பக்க அணைக்கட்டிற்கு அருகிலும், இரண்டாவது குளநீர் வெளியேறும் வாய்க்காலுக்கு அருகிலும் மேற்கொள்ளப்பட்டன.

ஆதியிரும்புக்கால மட்பாண்ட வகைகள்

முதலாவது அகழ்வாய்வில் 6 குழிகள் 4 மீற்றர் நீள, அகலத்தில் இயற்கை மண்ணை அடையாளம் காணும் வரை அகழ்வு செய்யப்பட்டது. ஏறத்தாழ இக்குழிகளின் மேற்படையில் இருந்து முதல் நான்கு அடி ஆழத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கலாச்சார மண்ணடுக்குகளைக் காணமுடியவில்லை. அவ்விடங்களின் மேற்படையில் குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்த காலத்தில் நீரலையினால் அள்ளுண்டு வந்த மண், மட்பாண்ட ஓடுகள், சங்கு, சிற்பி, கடல் உயிரினச்சுவடுகள், சுடுமண் உருவங்கள், புராதன கூரையோடுகள், செங்கற்கள் என்பனவே பரவலாகக் காணப்பட்டன. குழிகளின் நான்கடி ஆழத்திற்கு கீழே 3 வேறுபட்ட கலாசார மண்ணடுக்குகள் காணப்பட்டன. அவற்றுள் முதலிரு மண்ணடுக்குகளில் இருந்து பலவடிங்களில் அமைந்த மட்பாண்டங்கள், மென்தன்மை குறைந்த பெருங்கற்கால கறுப்பு-சிவப்பு நிறமட்பாண்டங்கள், சிறிய மட்கலசங்கள், குறியீடுகள் பொறித்த மட்பாண்ட ஓடுகள், கழிவிரும்புகள் (iron slacks) கற்களில் வடிவமைக்கப்பட்ட கைவளையல்கள், பலவடிவங்களிலும், பல அளவுகளிலும் செய்யப்பட்ட அகல் விளக்குகள், சுடுமண் தெய்வச்சிலைகள், சிற்பங்கள், சமயச் சின்னங்கள், ஆண், பெண் உருவங்கள், எருது, யானை, குதிரை, பாம்பு, மயில் முதலியவற்றின் சிலைகள், சிற்பங்கள், சங்கு, சிற்பிகள், குவாட்ஸ் கல்லாயுதங்கள்,என்பன கண்டுபிடிக்கப்பட்டன. இத்தொல்பொருட் சின்னங்களைத் தொடர்ந்து நான்காவது கலாசார மண்ணடுக்கில் செங்கட்டிகளைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட அத்திவாரம் காணப்பட்டது. அதன் ஒரு பகுதி குளத்தை நோக்கிக் கட்டப்பட்ட நிலையில் சிதைவடைந்து காணப்பட்டது.

இரண்டாவது அகழ்வாய்வில் இரண்டு குழிகள் 4மீற்றர் நீள அகலத்தில் அவற்றின் இயற்கை மண் அடையாளம் காணப்படும்வரை ஏறத்தாழ 7அடி ஆழத்திற்கு அகழ்வு செய்யப்பட்டது. இங்கு அகழ்வாய்வுக்குத் தெரிவு செய்யப்பட்ட இரு குழிகளின் மேற்பகுதிகள் இயந்திரங்கள் கொண்டு மண் அகழப்பட்டதனால் அகழ்வு செய்யப்பட்ட குழிகளின் மேற்பரப்பு மண்ணடுக்குகளும், அங்கு கிடைத்த தொல்பொருட் சின்னங்களும் பெருமளவுக்கு குழம்பிய நிலையில் காணப்பட்டன. இதனால் சிதைவடைந்த மண்ணடுக்குகளில் பிற்காலத் தொல்லியற் சான்றுகளுடன் முற்காலத் தொல்லியற் சான்றாதாரங்களும் கலந்துகாணப்பட்டன. அவற்றுள் பலவகை மட்பாண்டங்கள், தாழிகளின் உடைந்த பாகங்கள், சுடுமண் உருவங்கள், கழிவிரும்புகள் என்பன தொன்மைச் சான்றுகளாக அடையாளம் காணமுடிந்தது.

அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆய்வுக்குழி

இந்நிலையில் சிதைவடையாதிருந்த கலாசார மண்ணடுக்கில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் ஏறத்தாழ ஏழடி ஆழத்தில் பெருங்கற்கால அல்லது ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுக்குரிய இருவகை ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை 1980ஆம் ஆண்டு ஆனைக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்கால ஈமச் சின்னங்களின் பின்னர் வடஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது அதிமுக்கியத்துவம் வாய்ந்த பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் எனக் கூறலாம். அவற்றுள்  முதலாவது அகழ்வாய்வுக் குழியில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமச் சின்னத்தில் இறந்த மனிதனது எலும்புகளை எருது வடிவில் மண்ணால் செய்யப்பட்டு பின்னர் சுடப்பட்ட ஈமப்பேழைக்குள் (Sarcophagus) வைத்து அடக்கம் செய்யப்பட்டிருந்தது. இவ்வகையான ஈமச்சின்னங்கள் தென்னிந்தியா சிறப்பாக தமிழகப் பெருங்கற்காலப் பண்பாட்டில் பரவலாகப் பயன்படுத்தப் பட்டிருந்தபோதும் அது இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. ஆனால் முதன் முறையாகக் கட்டுக்கரையில் ஈமப் பேழை யொன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெருங்கற்காலப் பண்பாட்டில் கட்டுக்கரை முக்கிய இடத்தில் இருந்ததைக் காட்டுகின்றது. ஏறத்தாழ மூன்றடி நீளமும், இரண்டடி அகலமும் கொண்ட ஈமப் பேழைக்குள் இறந்தவரது எலும்புகள் வைக்கப்பட்டு அவை வைரமான களிமண் கொண்டு மூடப்பட்டிருந்தது. ஈமப்பேழையை மூடிய மண் மங்கலான சிவப்பு நிறத்தால் தனித்து அடையாளப்படுத்திக் காணப்பட்டது. அத்துடன் ஈமப்பேழையைச் சுற்றி பல்வேறு அளவுகளில், பல வடிவங்களில் மட்பாண்டங்கள், குவழைகள் வட்டில்கள், மண்தட்டுக்கள் என்பன வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் நரை நிற மற்றும் தனிக் கறுப்பு, சிவப்பு நிற மட்பாண்டங்களுடன் பெருங்கற்காலப் பண்பாட்டிற்கே தனித்துவமான கறுப்பு சிவப்புநிற மட்பாண்டங்கள் அதிக அளவில் காண்டுபிடிக்கப்பட்டமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இம்மட்பாண்டங்கள் இறந்தவர் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய பலதரப்பட்ட பொருட்களை நிவேதனப் பொருட்களாக (படையற் பொருட்கள்) வைப்பதற்கு பயன்படுத்தப் பட்டவையாகும். அவற்றை உறுதிப்படுத்தும் வகையில் இம் மட்பாண்டங்களுடன் கலந்த நிலையில் கார்ணலேயன், அகேட் வகையிலான கல்மணிகள், இரும்புப் பொருட்கள், குறியீடுகள் பொறித்த மட்பாண்ட ஓடுகள், சுடுமண் உருவங்கள், சங்கு, சிற்பி, கடல் உணவின் எச்சங்கள், தானிய வகைகள், மாமிச உணவுகளின் எச்சங்கள் எனபன கிடைத்துள்ளன.

கட்டுக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமத்தாழி

இரண்டாவது ஆய்வுக் குழியில் முதலாவது ஆய்வுக் குழியின் சம ஆழத்தில் இறந்தவரது எலும்பின் பாகங்களை தாழியில் வைத்து அடக்கம் செய்யப்பட்ட ஈமச் சின்னம் கண்டுபிடிக்கப்பட்டது. இவ் வகையான ஈமச் சின்னங்கள் பொதுவாக தாழியடக்கம் என அழைக்கப்படுகின்றது. இது போன்ற ஈமச் சின்னங்களே தமிழகப் பெருங்கற்காலப் பண்பாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை மணிமேகலையில் வரும் “சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுவோர் தாழ்வையின் அடைப்போர் தாழியிற் கவிப்போர்” என்ற பாடல்வரிகள் உறுதி செய்கின்றது (மணிமேகலை 6.111.11.66-67). இலங்கையிலும் பெருங்கற்காலக் குடியிருப்புகள் காணப்பட்ட மணற்பாங்கான இடங்களில் பெரும்பாலும் தாழியடக்க முறையே இருந்துள்ளது. இதற்குப் புத்தளம் மாவட்டத்தில் பொம்பரிப்பு என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான ஈமத்தாழிகள் சிறந்த சான்றாகும். கட்டுக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமத்தாழி ஒரு அடி உயரமும், அதன் வாய்ப்பகுதி ஆறு அங்குல விட்டமும் கொண்டது. இத்தாழிக்குள் இறந்தவரது எலும்புகளுடன் மட்பாண்ட ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இம்மட்பாண்டங்கள் படையற் பொருட்கள் வைக்கப்பட்ட பாத்திரங்களாக இருக்கலாம். தாழியைச் சுற்றி பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய கறுப்புச் சிவப்பு நிற மட்பாண்டங்களுடன் பல வடிவங்கள், பல நிறங்கள் கொண்ட மட்பாண்டங்களும் கிடைத்துள்ளன. இவை முதலாவது ஆய்வுக்குழியில் கிடைத்த பொருட்களை பெருமளவிற்கு ஒத்திருப்பதால் அதன் சமகாலத்திற்குரிய ஈமச் சின்னமாகக் கருதலாம். இருப்பினும் இவ் ஈமச் சின்னத்தில் பெருங்கற்காலப் பண்பாட்டுக்கு முந்திய நுண்கற்கால மக்கள் பயன்படுத்திய சேட் கல்லாயுதங்களும் கிடைத்துள்ளன. இவ்வாதாரங்கள் கட்டுக்கரையில் நுண்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாகப் பெருங்கற்காலப் பண்பாடு பரவிய போது அப் பண்பாட்டை நுண்கற்கால மக்கள் ஏற்றுக் கொண்டதை உறுதிப்படுத்துவதாக இருக்கலாம், அல்லது பெருங்கற்காலப் பண்பாட்டின் தொடக்க காலத்தில் நுண்கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகளை பெருங்கற்கால மக்களும் பயன்படுத்தியிருக்கலாம். இவ்வாறான பண்பாட்டுத் தொடர்ச்சி தமிழகத்திலும், இலங்கையில் பொம்பரிப்பு, அநுராதபுரம் ஆகிய பெருங்கற்கால மையங்களிலும் கண்டறியப்பட்டுள்ளன. கட்டுக்கரை அகழ்வாய்வில் இரு வேறுபட்ட பண்பாட்டுகளுக்குரிய ஆதாரங்கள் ஒரேயிடத்தில் ஒன்றுடன் ஒன்று கலந்தநிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இப் பிரதேசத்தின் மனித வரலாறும், பண்பாட்டு வரலாறும் நுண்கற்கால மற்றும் பெருங்கற்காலப் பண்பாட்டுன் தோன்றி வளர்ந்ததைக் காட்டுதாக உள்ளன.

கட்டுக்கரையின் பூர்வீக பண்பாடு

இலங்கையில் வாழ்ந்த நுண்கற்கால, பெருங்கற்கால மக்கள், அவர்களின் பண்பாடுகள் என்பன தொடர்பான தொல்லியற் சான்றாதாரங்களை வட இந்தியக் குடியேற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த இயக்கர் நாக மக்களுடன் தொடர்புபடுத்தி ஆராயும் போக்கு அண்மைக்காலத்தில் தோன்றியுள்ளது. இதனால் கட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வுகளின் போது  கண்டுபிடிக்கப்பட்ட நுண்கற்கால, பெருங்கற்காலப் பண்பாடுகளின் முக்கியத்துத்தை மேலே கூறப்பட்ட ஆய்வுகளின் பின்னணியில் நோக்கப்படுவது பொருத்தமாகும்.

இலங்கையில் விஜயன் யுகத்திற்கு முந்திய நாகரிக வரலாறு உண்டு என்பதற்கு தொல்லியற் கண்டுபிடிப்புக்களை ஆதாரங்களாகக் காட்டியிருக்கும் பேராசிரியர் சேனகபண்டாரநாயக்கா இலங்கை மக்களின் இன அடையாளங்களுக்கு உடற்கூற்றியல் வேறுபாடுகள் காரணமல்ல, பண்பாட்டு வேறுபாடுகளே காரணம் என்றும் அப்பண்பாட்டு வேறுபாடுகளை இலங்கையில் நாகரிக வரலாறு தோன்றிய காலத்திலிருந்து ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றார் (சேனகபண்டாரநாயக1985:1-23) இந்நிலையில் பேராசிரியர் சத்தமங்கல கருணாரட்ன மகாவம்சம் கூறும் நாகரும் இலங்கையில் வாழ்ந்த இனக் குழு என்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமிக் கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ள “நாககுலம்” என்ற வரலாற்றுக் குறிப்பை ஆதாரமாகக் காட்டுகின்றார் (Karunaratne 1984:56).

நாக இனக்குழு பற்றிக் கூறும் பிராமிக் கல்வெட்டு

மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்ட நாக என்ற பெயர் வட இந்தியக் குடியேற்றம் நடந்ததாகக் கூறப்பட்ட காலத்திற்குப் பின்னர் வரலாற்றுத் தொடக்ககால இலங்கையுடன் பின்னிப்பிணைந்த பெயராக இருந்ததைப் பிராமிக்கல் வெட்டுக்களும்,  சமகாலப் பாளி இலக்கியங்களும் உறுதிசெய்கின்றன. இலங்கையில் இதுவரை ஏறத்தாழ 1500 பிராமிக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஏறத்தாழ 200 கல்வெட்டுக்களில் “நாக” என்ற பெயரைப் பலதரப்பட்ட மக்களும் தனிநபரின் பெயராகப் பயன்படுத்தியதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. அப்பெயருக்குரியவர்கள் இனக்குழுத் தலைவர்கள், சிற்றரசர்கள், அரச அதிகாரிகள், வணிகர்கள் என உயர் பதவிகளில் இருந்ததை அக்கல்வெட்டுக்கள் மேலும் உறுதிசெய்கின்றன. வவுனியா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு பிராமிக் கல்வெட்டுக்கள் அங்கிருந்த நாகச் சிற்றரசர்களின் ஆட்சி பற்றிக் கூறுகின்றன. பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் நாகரைப் பற்றிய செய்திகள் அவற்றின் சமகால வரலாறு கூறும் பாளி இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.  இதற்கு உதாரணமாக அநுராதபுர இராசதானியில் ஆட்சியில் இருந்த துல்லத்தநாக (கி.மு.119), கல்லத்தநாக (கி.மு.109-103), சோறநாக (கி.மு.63-51), மகாநாக(கி.பி.7-9), இளநாக (கி.பி.33-43), மகல்லநாக (கி.பி.136-143), குஜநாக (கி.பி.186-187), குஞ்சநாக (கி.பி.187-189), ஸ்ரீநாக (கி.பி.189-209), அபயநாக (கி.பி. 231-240), ஸ்ரீநாக (கி.பி.240-242) முதலான நாக மன்னர்களின் ஆட்சி பற்றிக் கூறியுள்ளதைக் குறிப்பிடலாம். இவ்வாதாரங்கள் வரலாற்றுத் தொடக்க கால இலங்கையில் வாழ்ந்த நாகர்களுக்கும் வட இந்தியக் குடியேற்றம் நடப்பதற்கு முன்னர் வாழ்ந்த நாகர்களுக்கும் தொடர்பிருப்பதைக் காட்டுகின்றன.

மகாவம்சம் கூறும் இயக்கரும் நாகரைப் போல் வடஇந்தியக் குடியேற்றத்திற்கு முன்னர்  இலங்கையில் வாழ்ந்த இன்னொரு இனக்குழுவாகப் பார்க்கப்படுகின்றது. இதற்குப் பேராசிரியர்  ராஜ்சோமதேவ பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் யக்ஷ என்ற பெயரை ஆதாரமாகக் காட்டுகிறார். இலங்கையில் தோன்றி வளர்ந்த யக்ஷ வழிபாடுகள் பற்றி விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் சிற்றம்பலம் அவற்றின் தொடக்க காலத்தை மகாவம்சம் கூறும்  இயக்கருடன் தொடர்புடையவர்கள் என்பதற்கு பிராமிக் கல்வெட்டுக்களையே ஆதாரங்களாகக் காட்டுகின்றார். தமிழரது பண்பாட்டு அடையாளங்கள் இலங்கையில் வாழ்ந்த பூர்வீக மக்களது பண்பாட்டிலிருந்து தொடங்க வேண்டும் எனக் கூறும் கலாநிதி பொ.இரகுபதி இதற்குச் சான்றாக  2500 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர் மத்தியில் இருந்து வந்த இயக்கவழிபாடு பற்றிக் கால அடிப்படையில் எடுத்துக்கூறி அவ்வழிபாடு காலப்போக்கில் வல்லிபுரநாதர் ஆலயமாக மாறியதைப் பொருத்தமான ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார் (இரகுபதி 2006:1-23).

மேற்கூறப்பட்ட கருத்துக்கள் இலங்கை மக்களின் வரலாறும், பண்பாடுகளும் இதுவரைகால வரலாற்று ஆய்வுகளில்  கவனத்தில் கொள்ளப்படாத யக்ஷ, நாக மக்களிலிருந்து  பார்க்கப்படவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. தொல்லியல் அறிஞர்கள் இயக்கர் நாக மக்களின் பண்பாடுகளாக நுண்கற்காலப் பண்பாட்டையும் (Mesolithic Culture), பெருங்கற்கால (Megalithic Culture) அல்லது ஆதியிரும்புக்காலப் (Early Iron Age Culture) பண்பாட்டையும் அடையாளப் படுத்துகின்றனர். மானிடவியல் அறிஞர்கள் உடற்கூற்றியல் அடிப்படையில் இம்மக்களை ஆதி ஒஸ்ரலோயிட் மற்றும் திராவிட மக்கள் எனவும், மொழியியல் அறிஞர்கள் இவர்கள்  பேசிய மொழிகளை  ஆதி ஒஸ்ரிக் மற்றும் திராவிட மொழிகள் எனவும் கூறுகின்றனர். கட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வுகளில் மேற்கூறப்பட்ட இருவகைப் பண்பாடு மக்களும் வாழ்ந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனால் அப்பண்பாடுகளின் முக்கியத்துவத்தை சமகால தென்னிந்திய, இலங்கைப் பண்பாடுகளின் பின்னணியில் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டுக்கரைத் தொல்லியற் கண்டுபிடிப்புக்களின் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்வதற்குப்  பெரிதும் உதவலாம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்