சில குறிப்புக்கள்
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பிறந்து மருத்துவம் பயின்று அமெரிக்க மிஷனரியிற் சேர்ந்து இலங்கையின் வடபுல யாழ்ப்பாணத்தில் 26 வருடங்கள் தன்னலமற்ற சேவை செய்த அமெரிக்க மருத்துவரான சாமுவேல் பிஸ்க் கிறீன் (Dr. Samuel Fisk Green) அவர்கள் மறைந்து 138 வருடங்கள் நிறைவு பெற்றமை அண்மையில் (28.05.2022) நினைவு கூரப்பட்டது.
தமிழ்மொழி வரலாற்றில் மானிப்பாய் முக்கியத்துவம் பெறும் இரு சந்தர்ப்பங்களைக் குறிப்பிடுவது இவ்விடத்தில் பொருத்தமானது.
1. மானிப்பாய் அகராதி என அழைக்கப்படும் யாழ்ப்பாண அகராதியே தமிழில் உள்ள அனைத்துச் சொற்களையும் அடக்கிய முதலாவது அகராதியாகக் கருதப்படுகிறது. இது மானிப்பாயிலிருந்த அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டு 1842 இல் வெளிவந்தது.
2. இலங்கையின் முதலாவது மேலைத்தேச (அலோபதி) மருத்துவக் கல்லூரி மானிப்பாயில் 1848 இல் அமெரிக்க மருத்துவர் கிறீன் அவர்களால் தாபிக்கப்பட்டது. இது தென்கிழக்காசியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது மேலைத்தேச (ஆங்கில) மருத்துவக் கல்லூரியாகக் கருதப்படுகிறது.
உலகின் முதல் மிஷனரி வைத்தியசாலை
மருத்துவர் ஜோன் ஸ்கடர் (Dr. John Scudder) 1819 டிசம்பர் 17 இல் இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள தெல்லிப்பளைக்கு வருகை தந்தமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நியூயோர்க்கில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த ஜோன் ஸ்கடர் என்னும் அமெரிக்கரே மேலைத்தேய(அலோபதி) மருத்துவத்தைப் பரப்புவதற்க்காக ஆசியாவுக்கு அனுப்பப்பட்ட உலகின் முதலாவது மிசனரி மருத்துவர்.
மேலைத்தேச மருத்துவத்தைப் பரப்பும் நோக்குடன் ஆசியாவில் அமைக்கப்பட்ட உலகின் முதல் மருத்துவ சிகிச்சை நிலையம் வைத்தியர் ஜோன் ஸ்கடரால் பண்டத்தரிப்பிலே 1820.06.18 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
தமிழில் ஆங்கில மருத்துவம் கற்பித்த அமெரிக்கர்
அமெரிக்காவில் மசாசுசெட்சில் பிறந்த மருத்துவர் சாமுவேல் பிஸ்க் கிறீன் அமெரிக்க மிசனரி மருத்துவராக 1847 இல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். கிறீனும் தனது சிகிச்சை நிலையத்தை (டிஸ்பென்சரி) பண்டத்தரிப்பிலேயே ஆரம்பித்தார். எனினும் தனது மருத்துவக் கல்லூரியை மத்திய பகுதியில் அமைந்துள்ள மானிப்பாயில் 1848 இல் ஆரம்பித்தார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்பட்ட பாடநெறியே இங்கும் பாடத்திட்டமாக அமைந்தது. 3 வருட மருத்துவக் கற்கை நெறி ஆங்கில மொழி மூலம் ஆரம்பிக்கப்பட்டது.
இலத்தீன், ஜெர்மன் முதலான மொழிகளில் புலமை பெற்றிருந்தது போன்று தமிழிலும் பாண்டித்தியம் பெற்ற வைத்தியர் கிறீன் தனது மாணவர்களின் உதவியுடன் 8 மருத்துவ நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தார். இந்நூல்களை விட அருஞ்சொற்கள் அகராதிகள், மருத்துவ மாணவர்களுக்குப் பயன்படும் சிறு கையேடுகள், கட்டுரைகள் முதலாக மருத்துவர் கிறீன் மொழிபெயர்த்து மேற்பார்வை செய்த தமிழ் எழுத்துக்கள் 4500 பக்கங்களில் வெளிவந்துள்ளன.
மருத்துவர் கிறீன் 1864 இல் தமிழ்மொழி மூலம் மருத்துவக் கற்கை நெறியை ஆரம்பித்தார். இந்தியத் துணைக்கண்ட மொழிகளில் முதன்முதலில் தமிழிலேயே மேலைத்தேச (அலோபதி) மருத்துவம் யாழ்ப்பாணத்தில் மானிப்பாயிற் கற்பிக்கப்பட்டது. கிறீனது மருத்துவக் கல்லூரியில் பயின்றவர்களில் 33 பேர் தமிழ்மொழி மூலம் மருத்தும் பயின்று பட்டம் பெற்றனர். இற்றைக்கு 150 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு அமெரிக்கர் செவ்வியல் மொழிகளில் ஒன்றாக விளங்கும் தமிழில் ஆங்கில மருத்துவம் கற்பித்தார் என்ற செய்தி வியப்புக்குரியது.
தமிழ் அறிவியல் மொழியாக வளர்ச்சியடைவதுக்கு கலைச்சொல் உருவாக்கம் அவசியமாகின்றது. தமிழ்மொழியில் கலைச் சொல்லாக்க முன்னோடியாக மருத்துவர் கிறீன் கருதப்படுகிறார்.
மானிப்பாயில் கிறீன் மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்து 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இலங்கை அரசாங்கம் மருத்துவர் கிறீனது சேவையை கௌரவித்து 1998 இல் முத்திரையையும் முதல் நாள் உறையையும் வெளியிட்டுச் சிறப்பித்தது.
யாழ்ப்பாணத்தில் 26 வருடங்கள் மருத்துவராக சேவை செய்த கிறீன் தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஆற்றிய தொண்டு அவரது 200 ஆவது பிறந்த ஆண்டில் நினைவு கூரப்படல் வேண்டும். இதனை சிறப்பிக்கும் வண்ணம் மருத்துவர் கிறீன் அவர்களது 200ஆது பிறந்த ஆண்டு நினைவு மலர் (Dr. Green’s Birth Bicentenary Book) வெளியிடப்பட உள்ளது.
மருத்துவர் கிறீன், தனது மாணவர்களின் உதவியுடன் மொழி பெயர்த்த ஆங்கில மருத்துவ நூல்கள் சில:
(இங்கு குறிப்பிட்டுள்ள நூல்களிற் பெரும்பாலனவற்றின் பிரதியை யாழ். போதனா மருத்துமனையில் அமைந்துள்ள யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் பார்வையிடலாம்.)
- கட்டரின் அங்காதிபாத சுகரண வாத உற்பாலன நூல் (Cutter’s Anatomy, Physiology and Hygiene.) – 1852 – மருத்துவர் கட்டர் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மருத்துவ நூலான Anatomy, Physiology and Hygiene எனும் ஆங்கில நூலை அங்காதிபாத சுகரண வாத உற்பாலன நூல் என்னும் பெயரில் 1852 இல் டாக்டர் சாமுவேல் பிஷ்க் கிறீன் மொழி பெயர்த்தார். தமிழ் வடிவில் முதன்முதலாக வெளிவந்த முழுமையான ஆங்கில மருத்துவ நூல் இதுவேயாகும். இந்நூலின் இரண்டாவது பதிப்பு 1857 இல் வெளிவந்தது. இந்நுாலின் மூலப் பிரதி யாழ்ப்பாணத்தில் இருப்பதை அறியமுடியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள ரோஜா முத்தையா நூலகத்தில் இருக்கலாம்.
- மருத்துவ வைத்தியம் (Midwifery – The Duplin Practice of Midwifery by Henry Maunsell M.D. with notes addition by Chandler R. Gilman M.D. (New York)) இது யாழ்ப்பாணத்திலுள்ள இறிப்பிலி மற்றும் ஸ்றோங்கு என்பவர்களது அச்சகத்தில் 1857 இல் அச்சிடப்பட்டது. (மருத்துவ வைத்தியம் என்பது இங்கு மருத்துவிச்சி வைத்தியம் என்பதையே குறித்து நிற்கிறது)
- இரண வைத்தியம் (The Science and Art of Surgery by Erichsen and Druitt) இது மானிப்பாயில் உள்ள ஸ்றோங்கு அஸ்பெரி அச்சகத்தில் 1867 இல் அச்சிடப்பட்டது.
- மனுஷவங்காதிபாதம் அல்லது கிறேயின் அங்காதிபாதம் (Human Anatomy: Complied by Grey, Horner, Smith, and Wilson) இது நாகர்கோயிலில் உள்ள இலண்டன் மிசன் அச்சகத்தில் 1872 இல் அச்சிடப்பட்டது. அதேவேளை மானிப்பாயில் உள்ள ஸ்றோங் அஸ்பெரி அச்சகத்திலும் 1872 இல் அச்சிடப்பட்டது. (இங்கு குறிப்பிடப்பட்ட மனுஷவங்காதிபாதம் வேறு 1852 இல் மொழிபெயர்த்த கட்டரின் மனுஷ அங்காதிபாதம் வேறு. இரு வெவ்வேறு ஆசிரியர்களின் நூல்களை மருத்துவர் கிறீன் வெவ்வேறு காலப்பகுதிகளில் மொழி பெயர்த்திருக்கிறார்.)
- வைத்தியாகரம் (The Principles and Practice of Physic being a Tamil version of Hooper’s Physician’s Vade Mecum) இது நாகர்கோயிலில் உள்ள இலண்டன் மிசன் அச்சகத்தில் 1872 இல் அச்சிடப்பட்டது.
- மனுஷ சுகரணம் (Human Physiology by Prof. John C Dalton) இந்நூலின் பகுதி 1, மானிப்பாயில் உள்ள அச்சகத்தில் 1872 இல் அச்சிடப்பட்டது. முழுமையான நூல் 1883 இல் அச்சிடப்பட்டது.
- கெமிஷ்தம் (Chemistry: Practical and Theoretical by David A Wells, A.M) இது நாகர்கோயிலில் உள்ள இலண்டன் மிசன் அச்சகத்தில் 1875 இல் அச்சிடப்பட்டது.
- வைத்தியம் (Practice of Medicine) மருத்துவர் கிறீன் அவர்களால் எழுதப்பட்டு மானிப்பாயில் உள்ள அச்சகத்தில் 1875 இல் அச்சிடப்பட்டது.
- இந்துப்பதார்த்த சாரம் (Pharmacopeia of India by Edward John Warring). இது மானிப்பாயில் உள்ள ஸ்திறோங்கு அஸ்பெரி அச்சகத்தில் 1888 இல் அச்சிடப்பட்டது.
- சுகரண அகராதி (Physiological Vocabulary) – 1872 – (இப்பிரதியும் யாழ்ப்பாணத்தில் இருப்பதை அறியமுடியவில்லை)
- பதார்த்தசாரம், சிகிச்சம், என்பவைகளிலும், மருத்துவம், ஸ்திரி வைத்தியம் பாலர் வைத்தியங்களிலும் வைத்தியவியவகாரத்திலும் வரும் அருஞ் சொற்களை அடக்கிய அகராதிகள் (Vocabularies of Materia Medica and Pharmacy of Midwifery & The Diseases of Women & Children and of Medical Jurisprudence By Samuel F Green, M. D) இது நாகர்கோயிலில் உள்ள இலண்டன் மிசன் அச்சகத்தில் 1875 இல் அச்சிடப்பட்டது.
தொடரும்.