கீரிமலை பாசுபத – கபாலிகச் சைவ மரபுகளின் மூத்த மையங்களில் ஒன்றா?
Arts
7 நிமிட வாசிப்பு

கீரிமலை பாசுபத – கபாலிகச் சைவ மரபுகளின் மூத்த மையங்களில் ஒன்றா?

May 17, 2022 | Ezhuna

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.

கீரிமலை யாழ்ப்பாணத்தின் பழம்பெரும் ஊர்களில் ஒன்று. இலங்கைத் தீவில் காணப்படும் புராதனமான பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான நகுலேஸ்வரம் இங்குதான் காணப்படுகிறது. அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிரதான பிதிரர்களுக்கான கடமைகளை ஆற்றும் நீர்பெருக்கும் இங்குதான் உள்ளது. கீரிமலை பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளின் புராணிக அடிப்படைகளை வரலாற்று அறிவியற் கண்டுக்கொண்டு திறக்க முற்படுகையில் நீண்ட நெடிய சைவ மரபுகளின் ஆதிவேர்களை கண்டுக்கொள்ள முடிகிறது. இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் சிவராத்திரி இரவில் இருளிற் கசியும் பூசை மணியொலிகள் அந்த ஆதிவேர்கள் பற்றிய எண்ணங்களை மேலும் கிளறுகின்றன.

 Emblem of the god shiva – 10th – 13th century

கீரிமுகங் கொண்ட முனிவர் ஒருவர் இவ்விடத்திலுள்ள பொய்கையில் நீராடி கீரிமுகம் மாறப் பெற்றமையால் இவ்விடம் கீரிமலை ஆயிற்று என மரபுவழிக் கதைகள் அதன் இடப்பெயர் காரணம் உரைக்கிறது. கீரியுடன் சம்பந்தப்பட்ட புராணிகங்களும், விக்கிரவியலும் மிகப் புராதன இயக்ச வழிபாட்டு மரபுடன் சம்பந்தப்படுபவை. இன்றும் யாழ்ப்பாணத்திலுள்ள ‘நாட்டார் தெய்வங்கள்’ பலவும் தம் மூலத்தில் இயக்ச மரபுடன் சம்பந்தமுடையவைதான். உதாரணமாக பேய்ச்சி அம்மன், வல்லியக்கன் முதலான பலவும் இம்மரபு வழிப்பட்டு உருவானவையே ஆகும். எமக்கு நன்கு அறிமுகமான குபேரன் (குபேர இயக்சன்) தன்னுடைய மூலத்தில் இயக்ச மரபினைச் சேர்ந்தவர்தான். அதேவேளை இயக்ச – நாக வழிபாட்டு மரபை வெற்றிக்கொண்டு (கீரி – பாம்பு என்ற எதிரிடைக்கும், இயக்ச, நாக மரபு எதிரிடைக்கும் கூட சமூகவியல் ரீதியான குறியீட்டுப் பின்புலம் இருக்கலாம்). இதனைத் தொடர்ந்து, பௌத்த சமண மதங்கள் தாபித்தப்போது கீரி – கீரியோடு இணைக்கப்பட்ட கடவுளர் என்பன பௌத்த, ‘இந்துப்’ புராணிக மரபுகளோடு இணைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. பௌத்த மதத்தில் இது பிராந்தியங்களின் காவற் தெய்வ மரபுள் உள்வாங்கப்பட்டுள்ளது. அதேநேரம் இவற்றுக்கெல்லாம் முற்பட்ட சிந்துவெளிப் பண்பாட்டிலும் கீரி முக்கியத்துவம் பெற்றிருந்தமையை சிந்து வெளி முத்திரைகள் காட்டி நிற்கின்றன. ஒருவேளை கீரிமலை இத்தகைய மிகப் புராதன மரபுகளோடு இணைவுற்ற நிலையில் இப்பெயரைப் பெற்றிருக்கலாம். அதேநேரம் கீரியின் தோலையும், கீரியையும் கூட ‘நகுலக’ என்றழைக்கும் மரபுமுண்டு. இந்தப் பின்னணியில் இருந்து நகுலேச்சரம் என்ற தலப் பெயரும் உண்டாகியுள்ளதா? நிச்சயமாக அதற்கான வாய்ப்புகள் உண்டு. அதேவேளை இக்கோயில் முன்னர் நகுலேஸ்வரம் என்றில்லாமல், ‘திருத்தம்பலேஸ்வரம்’ என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை 1620களில், இக்கோயில் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்டு, பின்னர் 1878களில் ஆறுமுகநாவலரது முன்முயற்சியின் பின்னணியில் மீளக்கட்டியெழுப்பட்டமை பற்றியும் வரலாற்று நூல்கள் பதிவுச்செய்துள்ளன.

The scenes shown on Indus shiva seals


இது ஒருபுறம் இருக்க, பல வருடங்களுக்கு முன்பதாக அர்த்தநாரீஸ்வரர் விக்கிரகவியல் பற்றி கலாநிதி இரகுபதிக்கும் எனக்குமான தனிப்பட்ட உரையாடலில் அவர் மொழியியல் ரீதியாக ‘நகுல’ என்பது ‘லகுட’ என்பதன் திரிபில் இருந்து தொடங்கி பண்டைய சைவ மரபில் வரும் ‘லகுட முனி’ பற்றிக் கூறிய தகவல்கள் உருவாக்கிய எண்ணங்களின் விளைவாக ஏற்பட்டதே இக்கட்டுரை. ‘லகுட முனி’ அல்லது அதன் திரிந்த வடிவில் ‘லகுல’ அல்லது ‘நகுல’ முனிவர் (சிலவேளைகளில் இலகுலீசர்) பாசுபத சைவத்தைத் தோற்றுவித்தவராவார். அவர் பழங்குடி மரபில் இருந்த பண்டைய சிவ வழிபாட்டைப் புதுப்பித்தார் எனவும், கி.பி 5-6ஆம் நூற்றாண்டுகளில் இது தமிழகத்தில் முதன்மை பெற்ற வழிபாடுகளில் ஒன்றாகக் காணப்பட்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பாசுபத மரபில் வருகின்ற லகுடர் அல்லது சிவன் கையிற் தண்டமுடையவராகவும், அவரது குறி மேல்நோக்கி விறைப்பு நிலையில் நிற்பதாகவும் சித்திரிக்கப்படுகிறது. ஒரு வகையில் விக்கிரவியலின் இத்தகைய தன்மைகள் மிகத் தெளிவாகப் பண்டைய கருவள வழிபாட்டின் சைவ மூலத்தைக்கோரி காட்டுவதுடன். சிவலிங்க வழிபாட்டின் மூலங்களையும் எடுத்துக் காட்டுகின்றன. அதேசமயம், காரைக்காலம்மையும் தன் வழிபாட்டு முறையில் பாசுபத சைவப் பண்புகளை அதிகம் வெளிக்காட்டி நிற்கிறார். அவரது பேயுரு ஏற்றலின் மூலம் பாசுபத மரபாக இருக்கலாம். ஏனெனில் பாசுபத சைவ அடியவர்கள் சித்தராக, பித்தராக, பேய்வடிவு கொண்டோராகத் திரிவாரெனப் பண்டைய நூல்கள் கூறுகின்றன. தேகத்திற் சாம்பரை பூசுதல் அவர்களது சடங்குசார் செயற்பாடுகளில் முக்கியமானதாகக் காணப்பட்டது.

கபாலிகம் மற்றும் களாமுகம் ஆகிய தீவிரமான சைவமரபுகளின் எழுச்சியோடு பாசுபதம் வீழ்ச்சியடைகிறது. அத்துடன் இன்னொரு புறத்தில் பாசுபதச் சிந்தனைகளது வேரில் இருந்தே சைவசித்தாந்தம் அதிகபட்சம் முளைவிடத் தொடங்கியது எனவும் சமய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அதேவேளை வேறு சில ஆய்வாளர்கள் பாசுபதத்தின் கருவிலிருந்தே காளாமுகம் மற்றும் கபாலிகம் என்பன தோற்றம் பெற்றதாகக் கூறுவர். கபாலிகர்கள் மண்டையோடு என்பதனை தமது முதன்மைக் குறியீடாகக் கொண்டார்கள். ஆடையற்ற உடலை முதன்மைப்படுத்தும் அவர்கள், சதையை உண்ணுதல், இரத்தம் அருந்துதல் என்பனவற்றை அவர்களது சமய வழிபாட்டின் பிரதான கூறாகக் கொண்டு இருந்தார்கள்.

கபாலிகத்தின் மிக முதன்மையான வழிபாடு கடவுள் பைரவர் அல்லது கால பைரவர் ஆவார். யாழ்ப்பாணச் சைவத்தில் பைரவர் பிரதான காவற் தெய்வமாகக் காணப்படுபவர். அந்தவகையில் யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கெல்லாம் பைரவ வழிபாடு பரவியும் காணப்படுகிறது. ஆயினும் கீரிமலைப் பிராந்தியம் உட்பட வலிகாமம் வடக்குப் பிராந்தியத்தில் மற்றெல்லா யாழ்ப்பாணத்து ஊர்களை விடவும் பைரவ வழிபாடு அதிகமாகும். இது இன்னொரு வகையில் கீரிமலை மையத்தில் பாசுபதச் சைவத்தின் தொடர்ச்சியாகவும், நீட்சியாகவும் நிகழ்ந்த கபாலிக சைவத்தின் எழுச்சியை மறைவாகக் காட்டி நிற்கும் இன்றைய வாழும் சான்றாதாரமா? என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.

கீரிமலை கடற்கரையில் பிதிர்க்கடன்களை நிறைவேற்றும் மக்கள்

இதன் தொடராக வருகின்ற அடுத்த கேள்வி யாதெனில், எவ்வாறு காசியானது சிவ, சிவ பைரவ வழிபாடுகளோடு கூடிய பிதிரர் வழிபாட்டின் பெரு மையமாகக் காணப்படுகிறதோ அவ்விதமான ஒரு பகைப்புலம் கீரிமலைக்கும் உண்டு. வடக்கு இலங்கையில் இறந்தோருக்கான சடங்கு ஆற்றுகையின் தலையாய மையம் கீரிமலை தான். சமீப வருடங்களில் கீரிமலைப் பிரதேசமானது இராணுவத்தின் உயர்பாதுகாப்புப் பிரதேசமாக்கப்பட்டதில் அது தன்னுருவம் முதன்மை யாவையும் இழந்து, முன்னைய காலங்களோடு ஒப்பிடுகையில் பெருமளவுக்கு அழிந்து போயுள்ளது. அதற்குப் பதிலாக இன்று யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் பல புதிய இறப்புச் சடங்கு மையங்கள் உருவாகியுள்ளன. ஆனால் பண்டைய யாழ்ப்பாணத்தில் ஆடி அமாவாசை வழிபாடு தொடக்கம் மரணச் சடங்குகளின் வெவ்வேறு கட்டச் செயற்பாடுகளின் முதன்மை இடமாக கீரிமலையே காணப்பட்டது. குறிப்பாக அது ஒரு சிறு காசி போல காணப்பட்டது.

இதனைவிடவும், இவற்றோடு கூட்டிணைந்தும் இப்பிராந்தியத்தில் வீரசைவ மரபைச் சேர்ந்தவர்களது பண்பாட்டுப் படர்ச்சியும் முதன்மையாகக் காணப்படுகிறது. ரேணுகாச்சிரம் இந்த மரபின் பிரதானமான குறிகாட்டியாகும். இவைதவிர பள்ளிப்படைக் கோயில்கள் (குழந்தைவேற் சமாதி ஆலயம்), மடங்கள் (சிறாப்பர் மடம், வைத்தியலிங்கம் மடம், கிருஷ்ணபிள்ளை மடம், பிள்ளையார்கோயில் மடம், நாராயணபூடர் புண்ணிய தரும மடம், துறவிகளாச்சிரமம்) எனப் பல்வேறு சமய நிறுவனங்கள் கீரிமலையில் முக்கியமாகக் காணப்படுகின்றன.

கீரிமலை கேணி

இத்தகைய பின்னணியில் முழுக்கீரிமலை நகுலேஸ்வரச் சுற்றாடல் சமய மரபுரிமை இடமாகப் (religious heritage site) பிரகடனப்படுத்தப்பட வேண்டும். அதன் பரந்துபட்ட மற்றும் வேறுபட்ட சமயப் பிரிவுகளும், அவர்களது வழிபாட்டு முறைகளும் அவற்றின் மரபுரிமை முதன்மை கருதிப் பாதுகாக்கப்பட வேண்டும். அதனை ஒட்டிய தேவாரப் பாடசாலைகள், பண்ணிசைப் பள்ளிகள், குருகுலங்கள் என்பனவும், அப் பிராந்தியத்திற் திறக்கப்படலாம். இந்த மூத்த சைவமரபுகளை பறைசாற்றும், அது பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள விரும்புவோருக்கான ஆவணக் காப்பகங்கள் இவ்விடம் சார்ந்து உருவாக்கப்படலாம் அல்லது யாழ்ப்பாணச் சமயங்களது மிகப் பெரிய நூலகம் ஒன்று அங்கு அமையலாம்.

அசிங்கமான – ஜனரஞ்சகக் கட்டுமானங்களை ‘ஈஸ்மன்ட் கலரில்’ அவ்விடங்களில் சைவத்தின் பெயராற் செய்து சீரழிக்காமல் துறைசார் நிபுணத்துவத்துடன் கூடிய நிலவுருவாக்கம், கட்டட உருவாக்கம் என்பன அவ்விடத்திற் செய்யப்பட வேண்டும். விகாரமான – பார்க்கச் சகிக்காத இராட்சதக் குத்துவிளக்குகள் போன்ற அசிங்க உருக்களால் இவ்விடத்தின் அமைதியை அழிக்காமல் ஒரு அமைதியின், தியானத்தின் நிலவுரு அமைய வேண்டும். அது பாக்கு நீரிணையின் அலையோசையை, பரவெளியின் அழகை – பேரண்டத்தின் இயல்பான தொடர்புகளை அறுக்காத கட்டுமானங்களால் உருவாக்கப்பட வேண்டும். ‘இந்தியச் சிற்பிகள்தான் செய்கிறார்கள்’, எனவே அது கேள்விக்கிடமற்ற சாஸ்திரிய – மற்றும் அழகியல் வசப்பட்டது என்ற நினைப்பில் கீரிமலையை சிதைக்காமல், சரியான பார்வையோடு நிபுணத்துவ ஆலோசனையுடன் கூடிய யாழ்ப்பாணச் சைவத்தின் உயர் மையங்களில் ஒன்றாக்க வேண்டும்.

அதனை விடுத்து வரலாறும் தெரியாது, மதங்களின் உட்சாரமும் அறியாத இந்து அடிப்படைவாதத்துள் அகப்பட்டு எமது ஈழச் சைவத்தின் பெருவரலாற்றை அழிக்கும் பெரும் வேலைத்திட்டத்துக்கு முகவர்களாகிக் கொண்டு இருக்கிறோம் என்பதுதான் எல்லாவற்றையும் விடக் கவலைக்கிடமானது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

9464 பார்வைகள்

About the Author

பாக்கியநாதன் அகிலன்

பாக்கியநாதன் அகிலன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் (கலை வரலாறு), பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் (கலை விமர்சனம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளாகப் பணிபுரியும் அகிலன் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுவருகின்றார்.

'பதுங்குகுழி நாட்கள்', 'சரமகவிகள்', 'அம்மை', 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்பன இவரது கவிதைத் தொகுப்புகளாகும்.

இவரின் ஏனைய நூல்களாகக் 'காலத்தின் விளிம்பு' என்ற மரபுரிமை சார்ந்த நூலும் 'குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து' ஆகியவை அமைவதுடன் 'வெங்கட்சாமிநாதன் – வாதங்களும், விவாதங்களும்' என்ற நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)