மானிங் அரசியல் அமைப்பில் இருந்த குறைபாடுகளை நீக்கி இலங்கைக்குப் பொருத்தமான ஓர் அரசியல் அமைப்பினை உருவாக்கும் பொருட்டு 1927ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த டொனமூர் குழுவினர் இரண்டு முக்கிய சிபார்சுகளை முன்வைத்தனர்.
1. கல்வித் தகமை, வருமானம் என்பவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்ட வாக்குரிமையினை நீக்கி 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை.
2. சட்ட நிருபண சபையில் இருந்து வந்த இனவாரி பிரதிநிதித்துவத்தினை நீக்கி அதற்குப் பதிலாக பிரதேச வாரிப் பிரதிநிதித்துவம்.
இவை இரண்டும் ஒன்றோடொன்று இணைந்த வகையிலே சிபார்சு செய்யப்பட்டன. அதாவது சிங்களத் தலைவர்களும் தமிழ் தலைவர்களும் பொறுப்பு வாய்ந்த ஆட்சியைக் கோரினார்கள். இந்தப் பொறுப்பில் மக்களும் பங்குபற்ற வேண்டுமாக இருந்தால் சர்வசன வாக்குரிமையும் பிரதேச வாரிப் பிரதிநிதித்துவமும் இன்றியமையாததாக இருக்க வேண்டும் என டொனமூர் குழுவினர் கருதினார்கள். ஆனால் தமிழ்த் தலைவர்களோ இதனை தமது நலன் சார்ந்து அணுகினர். என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன் அதாவது “இராமநாதனும் மற்றும் பல பழமைபேண்வாதிகளும் (செல்லத்துரை, சிறிபத்மநாதன், ஆர். தம்பிமுத்து இதற்கு புறநடையானவர்கள்) வெள்ளாளரல்லாத சாதியினருக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை அளிப்பது கும்பலாட்சிக்கு இடம் கொடுக்கும் ஒரு பாரிய பிழையென்று நம்பினர். வாதிட்டனர். இராமநாதனோ, அவ்வாறு வாக்குரிமை வழங்குவது இந்து வாழ்க்கை முறைக்குப் பழிகேடு விளைவிப்பது என்று கருதினார்” (மேற்கோள் கா. சிவத்தம்பி) ஏ. ஈ. குணசிங்காவினைத் தவிர வேறெந்தத் தலைவர்களும் சர்வசன வாக்குரிமை வேண்டுமென்று வாதிடவில்லை.
இலங்கையின் இந்த நிலை டொனமூர் குழுவினரை அச்சமடைய வைத்திருக்கின்றது. இதனை பின்வருமாறு அவர்கள் அறிக்கை செய்தனர். “பொறுப்புவாய்ந்த அரசாங்க அதிகாரத்தைக் கொடுத்தல், அதிகாரத்தில் உள்ளவர் மற்றைய மக்களுடைய நலன்களைத் தாம் பாதுகாப்பர் என்னும் வாக்குறுதியின்றி சிலோராட்சி கையில் முழுவதிகாரத்தையும் விடுவதற்கொப்பாகும். மேன்மை தங்கிய அரசரின் அரசாங்கம் இலங்கையிலுள்ள செல்வர், கற்றறிவுள்ளோர் ஆகியோர்க்கு மட்டும் அரசாங்கமன்றி, மக்கள் தொகையில் பெரும்பாலோராய் அமைந்த நாட்டவர், கூலிகள், எளியவர், யாவருக்கும் பாதுகாப்பு உள்ளதென்பதை நாங்கள் இங்கு எடுத்துக் கூறவேண்டியதில்லை. பிற்கூறிய ஏழை மக்களின் நலன் யாவற்றையும் முன்கூறிய வகுப்பினரின் கட்டில்லாத அதிகாரத்தில் விட்டுவிடுவது நம்பிக்கைப் பொறுப்பற்ற முறையாகும். ஆயினும் வாக்குரிமையை விரிவடைய ஒத்துக்கொள்ளாது, முழுப் பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்திற்கு உரிமைகொண்டாடியவர்கள், மேற்கூறிய விடயத்தின் இயல்பினை நன்கறியாதவர்களாகத் தோன்றவில்லை”
“பிரதானமாக, வடமாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் காணப்படும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நிலை எமக்கு மிகுந்த கவலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கட்கென எவ்வகையான ஒரு பிரதிநிதித்துவத்தையேனும் ஏற்படுத்துதல் வேண்டும் என்பது பற்றியே நாம் இங்கு ஆராய்தல் வேண்டும். நாம் காட்டிய பொதுக்காரணங்களைத் தவிர்த்தாலும், அம்மக்கட்கு வாக்குரிமை அளிக்கப்படுதலும், அவர்கட்குச் சமமான போதிய கல்வி வாய்ப்புக்கள் அளிக்கப்படுதலுமே அவர்களின் நிலையைச் சீர்த்திருத்துவதற்கான வழிகள் என்று நாம் கருதுகிறோம்.” (டொனமூர் அறிக்கை)
எனவே இங்கு எமது சுதந்திரப் போராட்ட தலைவர்களை விட எம்மை பொருளாதார ரீதியாகச் சுரண்டி ஆட்சி செய்த காலனித்துவ வாதிகள் மக்களின் அரசியல் சுதந்திரத்தையும் சமூகவிடுதலையையும் கூடுதலாக நேசித்துள்ளார்கள் எனலாம். இது போன்றதொரு நேசிப்பை யாழ்ப்பாண மாணவ காங்கிரசிடமும் காணக்கூடியதாக இருக்கின்றது. 1924ம் ஆண்டு இடம் பெற்ற அவர்களின் முதலாவது மகாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சைவமும் தமிழும் என்ற கருத்துநிலைக்கு நேர்மாறான மக்கள் நிலைப்பட்டவையாக இருந்தன. குறிப்பாக “தற்போது நாட்டில் நிலவிவரும் சாதி வேறுபாடுகள் தேசத்தின் முன்னேற்றத்திற்குத் தடையென இக்காங்கிரஸ் கருதுகிறதென்றும், நம்மிடையே இருந்து தீண்டாமை என்னும் காயத்தை இயன்றளவு அகற்றுவதற்கு காங்கிரஸ் அங்கத்தவர் முயல்வாரென்றும் தென்னிலங்கையில் தமிழும் வட இலங்கையில் சிங்களமும் படிப்பிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக காங்கிரஸ் எடுக்க வேண்டும்” என்பன போன்ற தீர்மானங்கள் மக்கள் நிலைப்பட்டவையாகவும் தூரநோக்குடையவையாகவும் இருந்தன. துரதிர்ஷ்டவசமாக இவ்வாறான சிந்தனைத்தளங்களைக் கொண்டவர்களை மேலாதிக்க சமூகமும் அரசும் கவனத்தில் கொள்ளவில்லை.
1920ம் ஆண்டில் மானிங்கினால் அறிமுகப்படுத்தப்பட்ட இனவாரிப் பிரதிநிதித்துவத்தினை, பிரித்தானியரின் பிரித்தாளும் நடவடிக்கை இது என பல அரசியல் அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். குறிப்பாக பேராசிரியர் கே. எம். டி சில்வா பின்வருமாறு கூறுகின்றார். “இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராக முளைத்த சகிக்க முடியாத ஒரு சவால் என இலங்கைத் தேசிய காங்கிரஸைக் கருதிய மனிங், பயங்கரமான ஒரு எதிரியை முறியடிக்கும் பாணியில், ஈவிரக்கமற்ற முறையில் அதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இலங்கையின் பல் இனச் சமூகத்தில் காணப்பட்ட இன வேறுபாடுகளையும் பதட்டநிலைமைகளையும் மிகச் சாதுரியமாக வேண்டுமென்றே பயன்படுத்தி இம்முயற்சியில் அவர் வெற்றி பெற்றார் எனக் கூறலாம். உண்மையாகவே இலங்கையின் அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை அவர் கையாண்ட விதம் பிரித்தாளும் கொள்கையை நடைமுறைப்படுத்த வழிகாட்டும் பாடநெறி நூலாகக் கொள்ளத்தக்கது” (மேற்கோள் சுசில் சிறவர்த்தனா)
இவ்வாறு பிரித்தாளும் தந்திரங்கள் பற்றி சிலாகித்துப் பேசுவோர் இவ்வாறு பிரித்தாள்வதற்கு அடிப்படையாக அமையும் அந்த அடையாளங்கள் பற்றி மௌனம் காக்கின்றனர். அல்லது அவற்றை மூடி மறைக்க முற்படுகின்றனர். உயர் வர்க்கத்தினரின் வர்க்க குணாம்சத்தினை நிரந்தரமான இன ஒற்றுமைகளாக கற்பிதம் செய்து கொள்கின்றனர். உதாரணத்திற்கு 1915ம் ஆண்டு இடம் பெற்ற கலவரத்தினை அடக்குவதற்கு பிரித்தானியர் கையாண்ட கொடுமையான அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கவும் சிறையிடப்பட்டிருந்த சிங்களத் தலைவர்களை மீட்பதற்காக சேர். பொன். இராமநாதன் உலக யுத்த அச்சத்துக்கும் மத்தியில் பிரித்தானியா சென்று அரசிடம் தமது பக்க நியாயங்களை எடுத்துக் கூறி விடுதலை பெற்றுக் கொடுத்ததும், அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக அவரை பல்லக்கில் தூக்கியதும், இதற்குப் பிரதியுபகாரமாக சேர். பொன் அருணாசலம் அவர்களை தேசிய காங்கிரஸின் தலைவராக்கியமையும் நிரந்தர ஒற்றுமையின் வெளிப்பாடாகக் காண்கின்றனர். இந்த ஒற்றுமையினை மனிங் சீர்குலைத்துவிட்டதாக முடிவுசெய்கின்றனர். இவ்வாறான பார்வையும் முடிவும் சமூக வரலாற்று நிலைக்கண்ணோட்டத்தில் தவறானதாகும். இலங்கையில் காலாகாலமாக வர்க்க ஒற்றுமையினை விட இன அடையாளமும் சாதி அடையாளமுமே வன்மமாகத் தொழிற்பட்டு வந்துள்ளதைக் காணலாம். பொதுவான விடயங்களில் சிலவேளைகளில் வர்க்க ஒற்றுமையை வெளிப்படுத்தினாலும் அடிப்படையாக இருப்பது இன, சாதி அடையாளங்களேயாகும். தொழிற்சங்கத் தலைவர் ஏ. ஈ. குணசிங்கா கூட இறுதியில் வர்க்க ஒற்றுமையினைப் புறந்தள்ளி இன அடையாளத்துக்குள்ளே சரணாகதி அடைந்தமை பற்றி கடந்த பகுதிகளில் குறிப்பிட்டிருந்தேன். எனவே மனிங் இல்லாத ஒன்றைக் கண்டுபிடித்து எம்மை பிரித்தாண்டார் என்பன போன்ற வாதங்கள் எமது சமூக நிலைமையினைப் புரிந்து கொள்ளாமல் வைக்கப்படுவது எனலாம்.
மனிங்கினால் அறிமுகப்படுத்தப்பட்ட இனவாரிப் பிரதிநிதித்துவத்தினையே டொனமூர் மாற்றி பிரதேசவாரிப் பிரதிநிதித்துவத்தினை அறிமுகப்படுத்தினார். டொனமூர் இதனைப் பிரேரித்த போது சிறுபான்மையினத்தினரும் கண்டிச் சிங்களவர்களும் தமக்கு இனவாரிப் பிரதிநிதித்துவமே தேவையென வாதாடினர். கண்டிச் சிங்களவர்கள், கண்டி மாகாணங்களுக்கு சுயாட்சியே தேவையென்ற கோரிக்கையினை முன்வைத்தனர்.
டொனமூர் குழுவினர் இவ்விரு கோரிக்கைகளையும் நிராகரித்தனர். இனவாரிப் பிரதிநிதித்துவம் இனங்களைப் பிரித்தாளும் இயல்புடையது என்றும், எல்லோர் பொது நலனையும் பேணாது குறிப்பிட்டவர்களின் நலனை மாத்திரம் இது பேணுவதால் ஜனநாயகத் தன்மையற்றது என்றும் இதுவரை பிரதிநிதித்துவத்தினைப் பெற்றிராத சாதி, சமயப் பிரிவினர் மற்றும் தனிப்பட்ட இயல்புகளைப்பாதுகாக்க விரும்புவோர் என்போரும் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தினைக் கோரும் போது சட்டசபை அங்கத்தவர்கள் அதிகரிப்பர். அத்துடன் இவ்வாறு பிரதிநிதித்துவம் வழங்கினால் வேறுபாடுகள் அழியாது வளர்வதற்கான சூழலே உருவாகும். எனவே வேறுபாடுகளை அழிப்பதற்கான வழி இனவாரிப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதேயாகும் எனக் கூறி நிராகரித்தனர்.
கண்டிய தேசிய அசெம்பிளியின் கோரிக்கை
கண்டிய தேசிய அசெம்பிளித் தலைவர்கள் பின்வரும் காரணங்களுக்காக கண்டியை உள்ளடக்கிய சமஷ்டிக் கோரிக்கையினை முன்வைத்தனர்.
1. கண்டியல்லாதோரை பெரும்பான்மையாகக் கொண்ட சட்டசபையில் கண்டி மக்களுக்கான சட்டத்தை வகுப்பதும் வருமானத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் கண்டியரும் பிரித்தானியரும் இல்லாத மூன்றாவது நபரிடம் சென்று விட்டது.
2. கண்டிச் சட்டங்களுக்குள் பெரும்பான்மையாக டச்சுச் சட்டங்கள் இடம்பெற்றுள்ளன, கண்டிய நிலையங்கள் பிறநாட்டு நிலையங்களுக்கு ஒதுக்கப்படுகின்றது, கண்டியரின் வழிபாட்டுத் தலங்களில் எவ்வினத்தைச் சேர்ந்த பௌத்தரும் தலையிடுவது.
3. அரச உத்தியோகங்கள் கண்டியரல்லாது வேறு பிரதேசத்தவர்களுக்கு வழங்கப்படுதல்.
4. கண்டி மக்களின் தற்போதைய நிலை 1815 க்கு முன்னுள்ள நிலைமையை விட தாழ்ந்ததாயிருக்கின்றது. குறிப்பாக கல்விக்கான வசதிகள் மிகக் குறைவு என்பதுடன் முன்பு இருந்த பன்சாலைப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு விட்டன அவற்றுக்குப் பதிலாக வேறு எதுவும் ஏற்படுத்தப்படவில்லை.
மேற்படி காரணங்களில் 3வது மட்டும் யாழ்ப்பாணத்துக்கு பொருந்தக் கூடியது அல்ல ஏனெனில் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த கல்வி வாய்ப்புக்களைச் சரியாகப் பயன்படுத்தி அனைத்து வேலைவாய்ப்புகளையும் பெற்று இலங்கையின் சகல பிரதேசங்களிலும் கடமையாற்றுபவர்களாக இருந்தனர். மற்றும்படி அனைத்துக் காரணங்களும் வடகிழக்கு மாகாணங்களிலுள்ள எல்லா மாவட்டங்களுக்கும் பொருந்தக் கூடியதாகும்.
இவற்றைத் தீர்ப்பதற்காகவே நாட்டை மூன்று சுயாட்சிப் பகுதிகளாகப் பிரித்து ஒரு சமஷ்டி அரசை அமைப்பதற்கான கோரிக்கையினை முன்வைத்தனர். மூன்று சுயாட்சிப் பகுதிகளாவன,
1. தமிழர்களின் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கு மாகாணங்கள்.
2. கண்டி மாகாணங்கள்
3. கரைநாட்டுச் சிங்களவர்களைக் கொண்ட மேற்கு, தெற்கு மாகாணங்கள்.
இம்மூன்று பிரதேசங்களையும் அவர்கள் எழுந்தமானமாக பிரேரிக்கவில்லை. வரலாற்று ரீதியாக யாழ்ப்பாண இராச்சியம், கோட்டை இராச்சியம், கண்டி இராச்சியம் எனும் மூன்று ‘இராச்சியங்கள் இருந்துவந்தன. இவற்றுக்குப் புறம்பாக கிழக்கு பல சிற்றரசர்களின் கீழ் ஆளப்பட்டும் இருந்தது. இவ்வரசாட்சிகள் தனியே பிரதேசத்தையோ அல்லது இனத்தையோ மட்டும் குறிப்பதாக அன்றி இவை தத்தமக்கென சட்டதிட்டங்களையும் மரபுகளையும் வழக்காறுகளையும் கொண்டிருந்தவையாகும். இதனால்த்தான் காலனித்துவ ஆட்சியாளர்கள் வடக்கில் அங்கு வழமையிலிருந்த தேசவழமையினை சட்டமாக்கினார்கள், இது போன்று கிழக்கில் வழமையில் இருந்த முக்குவ வழக்காறுகளை சட்டமாக்கினார்கள், கண்டியிலும் கண்டிய சட்டத்தை ஆக்கினார்கள். இவ்வாறு பண்பாட்டையும் தனித்துவங்களையும் கொண்ட அவரவர்களிடம் அவர்களுடைய ஆட்சியை ஒப்படைப்பதன் ஊடாக எந்த ஒரு பகுதியினரும் ஏனையோரை அடக்கியாழும் நிலை ஏற்படாது என்பது இக் கோரிக்கையினை முன்வைத்தவர்களது நம்பிக்கையாக இருந்திருக்கின்றது.
இருந்தபோதிலும், டொனமூர் ஆணைக்குழவினர் பின்வரும் காரணங்களின் அடிப்படையில் இதனை நிராகரித்தனர்.
1. பிரித்தானிய அனுபவத்தில் அங்கு பல்வேறு இன மக்கள் பிரித்தானியா என்கின்ற உணர்வையும் பற்றையும் கொண்டு பிரித்தானியாவைக் கட்டியெழுப்பியிருக்கிறார்களே தவிர பிரிந்து நின்றல்ல. இது தங்களுடைய அனுபவத்தினை மறுத்து அதற்கு மாறாக தங்களுடைய ஆட்சிப்புலத்தில் பிரிவினையை உருவாக்கும் என அவர்கள் எண்ணிய ஓர் ஆட்சியமைப்பை உருவாக்குவதை விரும்பவில்லை. பிரித்தானியாவைப் போல் இலங்கையிலும் எல்லா இன மக்களும் சேர்ந்து இலங்கைத் தேசியம் என்ற ஒன்றை உருவாக்குவார்கள் என நம்பினார்கள்.
2. வாக்குரிமை விஸ்தரிப்பு, கல்வி வாய்ப்புக்கள், உள்ளூர் சுயாட்சி முறைகளை ஊக்கப்படுத்தல் ஊடாக கண்டியர் கூடுதலான நன்மைகளைப் பெறுவார்கள் என நம்பினார்கள்
3. கரையோரச் சிங்களவர்கள் மற்றையோரை அடக்கியாளாது ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தேசப் பற்றை வளர்ப்பதற்கு உதவுவார்கள் என நம்பினார்கள்.
இவ்வாறு அவர்களுடைய காரணங்கள் பிரித்தானிய அனுபவத்தின் அடிப்படையில் அமைந்த நம்பிக்கையாகவே இருந்தது தவிர தென்னாசிய சமூகங்களின் அடிப்படை இயல்பாக அமையும் அடையாளங்கள் தொடர்பாக அறிவும் கவனமும் கொண்டதாக இருக்கவில்லை. கண்டியர்களுடன் இணைந்து இலங்கைச் சமூக நிலைமைக்கு உகந்த மாகாண சுயாட்சியினை எந்தந்த தமிழ் தலைவர்களும் கோரவில்லை என்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தேன்.
லெனாட் வூல்ஃப் அவர்களின் அறிக்கை
இலங்கையிலிருந்த எந்தத் தலைவர்களையும் விட இலங்கையின் சமூக நிலைமைக்குப் பொருத்தமான ஓர் ஆட்சிமுறையினை டொனமூர் சீர்த்திருத்தத்துக்குச் சற்றுப் பின்பு லெனாட் வூல்ஃப் என்பவர் முன்வைத்தார். இவர் காலனித்துவ இலங்கையில் பிரித்தானிய சிவில் அதிகாரியாக அம்பாந்தோட்டையில் கடமையாற்றியவர். 1911ம் ஆண்டு சேவையிலிருந்து ஓய்வு பெற்று பிரித்தானிய தொழிற் கட்சியில் இணைந்து அக்கட்சியின் காலனிய விவகாரங்களுக்கான ஆலோசகராக இருந்து முதலாம் உலகப் போரை அடுத்து இலங்கைக்கு சுதந்திரத்தைப் பரிந்துரைத்ததோடு சுதந்திர இலங்கையில் சிறுபான்மையினரது பாதுகாப்புக்கு முற்காப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என வாதாடினார்.
“இது தொடர்பாக 1938 இல் தனது பொதுநிலை அறிக்கையில் அவர் எழுதியதாவது, ‘சிறுபான்மையினரது பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதே ஆலோசனைக் குழுவின் எண்ணமாகும். அரசியல் யாப்பில் மாற்றத்தை எதிர்க்கும் தமிழருக்கு இது குறிப்பாகப் பொருந்தும். சிங்களவர் தமது பெரும்பான்மையைத் தமிழருக்கு மாறாகப் பயன்படுத்தியுள்ளதோடு இனியும் பயன்படுத்துவர் என்ற அடிப்படையில் சுய ஆட்சிக்கான மேலதிக ஏற்பாடுகட்கும் இது பொருந்தும் சம்மதத்தை மறுக்க ஆளுநருக்கு உள்ள உரிமையின் பேரிலும் தொகுதிகளை மீள வலியுறுத்து ஆசனங்களை மீள ஒதுக்கீடு செய்வதற்கான பிரேரணை மூலம் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
‘எனினும், மற்றொரு முறையும் கருத்தில் கொள்ளப்படலாம். அதாவது, பெருமளவிலான அதிகாரப் பரவலாக்கம் ஒன்றை அல்லது ஒரு சமஷ்டி முறையைக் கூட அறிமுகப்படுத்தும் சாத்தியப்பாடு. தமிழ் சிறுபான்மைப் பூர்வகுடிகள் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழுகின்றனர். கரையோரச் சிங்களவரினின்று பல வகைகளிலும் வேறுபட்ட கண்டியச் சிங்களவர் தீவின் நடுப்பகுதியில் ஒருமைத் தன்மையான ஒரு சிங்களச் சனத்திரளாக உள்ளனர்.
குறைந்தளவில் சுவிற்சர்லாந்தின் வகைமாதிரியான கன்ரன்கள் நான்கேனும் உருவாக்கப்படலாம். அதாவது, கரையோரச் சிங்கள மாகாணங்கள், கண்டியச் சிங்கள மாகாணங்கள், தமிழ் வடமாகாணம், தமிழ் கிழக்கு மாகாணம், அதைவிட வந்தேறு குடிகளான இந்தியத் தமிழர் சனத்தொகையிற் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளைக் கொண்ட ஒரு ஐந்தாவது கன்ரனும் தேயிலைத் தோட்டங்களில் உருவாக்க இயலுமாயிருக்கும்.
இவ்வாறான ஒரு அமைப்பிற்கு இலங்கையும் அதன் உட்பிரிவுகளும் அளவிற் சிறியன என்ற வாதம் செல்லாது. இலங்கையின் பரப்பு சுவிற்சர்லாந்தினதும் பரப்பைவிட 10,000 சதுரமைல்கள் (25,000 சதுர கிலோமீற்றர்) அதிகம். இலங்கையின் மக்கள் தொகை ஏறத்தாள 5,300,000. சுவிற்சர்லாந்தினது 4,000,000. சுவிற்சர்லாந்தின் சமஷ்டி முறை இலங்கையில் பாவிக்கப்பட்டால் அதன் ஆகச் சிறிய கன்ரோன் 200,000க்கும் மேலான மக்கள் தொகையுடைய அதன் கிழக்கு மாகாணமாகும். சுவிற்சர்லாந்தின் மிகச் சிறிய கன்ரோனின் மக்கள் தொகை 14,000 அளவிலானது. மிகப்பெரிய மக்கள் தொகை 700,000 அளவிலானது.
சுவிற்சர்லாந்தின் கன்ரோன் சமஷ்டி முறை, இலங்கையிலுள்ளது போன்றதை மிகவும் ஒத்த நிலைமைகளின் கீழ், அதாவது இனத்தாலும் மதத்தாலும் மொழியாலும் ஒன்றிடமிருந்து இன்னொன்று மிகவும் வேறுபட்டுள்ள, வெவ்வேறு அளவிலான சமூகங்கள் ஒரே சனநாயக அரசின் கீழ் சேர்ந்து வாழும் நிலைமைகளின் கீழ், வழமைமீறியளவு வெற்றிகரமானதாகக் காணப்பட்டுள்ளது. 2,750,000 மக்கள் தொகை கொண்ட ஜேர்மன் மொழி பேசும் சுவிற்சர்லாந்தினர் எண்ணிக்கையிற் சிங்களவரின் இடத்தையும் 824,000 பேரைக் கொண்ட பிரெஞ்சு மொழி பேசும் சுவிற்சர்லாந்தினர் தமிழரின் இடத்தையும் 284,000 பேரைக் கொண்ட இத்தாலியர் சோனகரின் இடத்தையும் பிடிக்கின்றனர். சனநாயகக் கன்ரனும் சமஷ்டி முறையும் சிறுபான்மையினரின் நீதி, நியாயமான நலன்களைப் பாதுகாத்துள்ளது.” (மேற்கோள் என். சண்முகதாசன்) இது தொடர்பாக சண்முகதாசன் அவர்கள் குறிப்பிடும் போது “தேயிலைத் தோட்டத்து இந்தியத் தமிழருடைய குறிப்பான தேசிய நலன்களைப் பேணுமாறு அவர்கட்காகத் தனியொரு கன்ரனையும் பரிந்துரைத்த ஒரே ஒருவரும் நாமறிய அவர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் நிச்சயமாகத் தனது காலத்தைத் தாண்டிச் சிந்தித்துள்ளார்.” என்பார்.
தமிழ்த் தலைவர்களின் நிலை
கண்டி அசெம்பிளியினது சமஷ்டி கோரிக்கை, லெனாட் வூல்ஃப் அவர்களினதும்; சமஷ்டி சிந்தனை போன்றவற்றின் பின்னணியில் தமிழ்த் தலைவர்கள் பின்வரும் இரு நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தார்கள்.
1. இனவாரிப் பிரதிநிதித்துவத்தினை அதிகரித்தல்
2. இலங்கையின் பூரணமான சுதந்திரத்தை அடைதல்
1. இனவாரிப் பிரதிநிதித்துவத்தினை அதிகரித்தல்
இனவாரிப் பிரதிநிதித்துவத்தினை அதிகரித்தல் எனும் கோரிக்கையானது முழுக்க முழுக்க யாழ் மேட்டுக்குடியினரின் நலன் சார்ந்த கோரிக்கையாக இருந்ததே தவிர வடகிழக்கு தமிழ் மக்களின் நலன்சார்ந்த கோரிக்கையாக இருந்தது என்பது சந்தேகமே. இதன் பிரதிநிதிகளாகக் சேர். பொன். இராமநாதன், சேர்.பொன் அருணாசலம், ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றவர்களைக் குறிப்பிட முடியும். ஏனெனில் சர்வசன வாக்குரிமை வழங்கப்படக் கூடாது என எதிர்த்தவர்களில் இராமநாதன் முக்கியமானவர் என்பதை கடந்த பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டது. இது போன்றே இராமநாதனுடைய முன்னோடியான ஆ.குமாரசுவாமி என்பவர் 1810ம் ஆண்டே தேசாதிபதியின் தமிழ் மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். பின் இவரே 1833ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட சட்ட நிருபண சபைக்கு உத்தியோகப்பற்றற்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். இவருடைய காலத்திலேயே வடகிழக்கு மாகாணங்கள் தனித் தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு மத்திய நிர்வாக அமைப்பினுள் உள்வாங்கப்பட்டன.
அரசாங்கத்திலும் மக்களிடத்திலும் மதிப்புமிக்க தலைவராக இருந்த குமாரசுவாமி அவர்கள் தமிழர் நலன் தொடர்பாக சிந்தித்திருக்கக்கூடிய தலைவராக இருந்திருந்திருந்தால் இவ்வாறான ஒரு நிர்வாக ஒழுங்குக்கு எதிராக மாற்று நடவடிக்கைகளை எடுத்திருப்பார். அவர் ஒரு தேசிய வாதியாகவும் அரசாங்கத்துக்கு நம்பிக்கைக்குரியவராகவுமே இருந்திருக்கின்றார். இதனால் அவர் தமிழர் நலன் அவர்களுடைய நிர்வாக அலகு என்பவை பற்றி சிந்திக்கவும் இல்லை நடவடிக்கைகள் எடுக்கவுமில்லை.
குமாரசுவாமியின் மறைவுக்குப் பின் சைமன் காசிச் செட்டி அவர்கள் சட்ட நிருபணசபையில் உறுப்பினராக இருந்தாலும் இவரும் வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தேவைப்பாடுகள் பற்றி எதுவும் செய்தவராக அறியப்படவில்லை. சைமன் காசிச் செட்டிக்குப் பின் இராமநாதனுடைய மாமாவாகிய முத்துக்குமாரசுவாமி அவர்கள் 1862ம் ஆண்டு தொடக்கம் 1879ம் ஆண்டு வரையான 17 வருடங்கள் சட்ட நிருபணசபையின் உறுப்பினராக இருந்தார். இவர் சமூக அரசியல் அறிவும் சட்ட வல்லுனராகவும் திறமையான பேச்சாளராகவும் இருந்து அரசாங்கத்தின் நன்மதிப்பைப் பெற்றவராக விளங்கியபோதும், வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எதுவுமே செய்தவர் எனக் கூறமுடியாது. இவரும் இலங்கை தேசியத்தை பாதுகாப்பவராகவும் அரசாங்கத்தின் நம்பிக்கைக்குரியவராகவுமே இருந்திருக்கின்றார்.
முத்தக்குமாரசுவாமியின் பின்பு அவருடைய மருமகனான பொன். இராமநாதன் சட்ட நிருபணசபையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய தேர்வுக்கு ஆறுமுகநாவலர் கணிசமான பங்களிப்பினை ஆற்றியிருந்தார். 1879 தொடக்கம் 1892ம் ஆண்டு வரையான 13 வருடங்கள் அவர் இப்பதவியினை வகுத்திருந்தார். (மாமனும் மருமகனும் தொடர்ச்சியாக 30 வருடங்கள் சட்ட நிருபணசபையின் உறுப்பினர்களாக இருந்துள்ளார்கள்) பொன்.இராமநாதன் அவர்களுடைய பதவிக்காலங்களில் தான் சிங்கள பௌத்தம் சிறுபான்மையினருக்கு எதிரானதாக வளர்ச்சி பெற ஆரம்பித்தது. 1883ம் ஆண்டு கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக நடந்த வன்முறை இதற்கு உதாரணமாகும். இக்காலத்தில் பல பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் காலனித்துவ அரசால் மேற்கொள்ளப்பட்டன. வளர்ந்து வந்த சிங்கள பௌத்தம் சிறுபான்மையோருக்கு ஏற்படுத்தும் விளைவு பற்றியோ அல்லது அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் வடக்குக் கிழக்கிலும் மேற்கொள்வதற்கு எந்தவித நடவடிக்கையினையும் இவர் எடுத்தவராகவும் இல்லை. உதாரணமாக 1890ம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு புகையிரத சேவையை வழங்குவதற்கு அமைக்கப்பட்ட சாத்திய வள ஆணைக்குழுவின் ஒரு அங்கத்தவராக பொன். இராமநாதன் இருந்தார். இவ்வாணைக்குழுவின் அறிக்கை சட்ட நிருபணசபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது உத்தியோகப் பற்றுள்ள உறுப்பினர்கள் அதற்கு எதிர்த்து வாக்களித்தமையினால் அத்திட்டப்பிரேரணை நிராகரிக்கப்பட்டது. அதற்கெதிராக திரு.பொன்.இராமநாதன் எதுவுமே செய்யவில்லை. ஆனால் அதன் பிறகு 1915ம் ஆண்டு கண்டிக்கலவரத்தில் ஈடுபட்டு தண்டனை பெற்ற தனது வர்க்கத்தினரை விடுவிப்பதற்கு கிளர்ந்தெழுந்தார். இது முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக அவர் செய்த துரோகத்தனமாகும். இது போன்றே 1931ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சர்வசன வாக்குரிமைக்கும் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவத்துக்கும் எதிராக டொனமூர் ஆணைக் குழுவினருக்கு சாட்சியமளிப்பதற்கும் அறிக்கைகள் விடுவதற்கும் தயங்கவில்லை. இது ஜனநாயகத்திற்கு அவர் செய்த துரோகத்தனமாகும். இதற்கு அடிப்படைக் காரணம் இராமநாதனின் வர்க்க இயல்பேயாகும். அவர் வடகிழக்கு சாதாரண தமிழ் மக்களின் அபிலாசைகளை விட தனது எதிர்கால நலன்கள் தொடர்பாக சிந்தித்து காலனித்துவ அரசுக்கு விசுவாசமானவராக செயற்பட்டிருக்கின்றார். இதன் காரணத்தினால்த்தான் பிரித்தானிய அரசால் 1889ல் சேர் பட்டம் வழங்கி கௌரவிக்கபட்டார். 1892ல் அவருடைய சட்ட நிருபண உறுப்புரிமை முடிவுபெற இலங்கையின் சொலிசிற்றர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு 1902ல் கிங்ஸ் கவுன்சிலராக பிரித்தானிய அரசால் நியமிக்கப்பட்டு 1903ல் ஓய்வு பெற்றார்.
முக்கியமான காலகட்டத்தில் பதவியில் இருந்தபோது காலனித்துவ அரசின் விசுவாசியாக இருந்து சிறுபான்மையினருக்கு எதுவுமே செய்யாதவர் டொனமூர் திட்டத்தில் இனவாரிப் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற அவருடைய கோரிக்கை மாத்திரம் எந்தளவுக்கு சாதாரண தமிழர் நலன் சார்ந்ததாக இருக்கமுடியும். 30 வருடங்களாக மாமனும் மருமகனும் ஏகப் பிரதிநிதிகளாக இருந்து கொண்டு தமிழர்களுக்குச் செய்யாததை பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதினால் மாத்திரம் செய்ய முடியும் என நினைப்பது அல்லது செயலாற்றுவது மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையேயாகும். நிச்சயமாக இது உயர்வர்க்க நலனுக்கு தமிழ் இன உணர்வை தக்கபடி கையாளும் வர்க்க நல அரசியலேயாகும். அந்தவகையில் தமிழ் இன உணர்வையும் தமிழ் இனத்தையும் உயர்வர்க்கம் தமக்கு ஏற்றபடி பயன்படுத்தும் அவ்வாறு முதன்முதல் பயன்படுத்திய உதாரணபுருஷராக சேர்.பொன்.இராமநாதன் அவர்களைக் கருதமுடியும்.
அடுத்து சேர்.பொன். அருணாசலம் அவர்கள் மேல் மாகாணத்திற்கான பிரதிநிதித்துவ ஒதுக்கீடு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டினால் இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து வெளியேறி தமிழர் மகாஜன சபையை உருவாக்கியிருந்தார். அருணாசலம் அவர்களின் இச் செயற்பாட்டினூடாக தமிழ்த் தேசிய வாதம் ஆரம்பித்ததான கருத்தும் உண்டு. தமிழ்த் தேசிய வாதத்தின் மிகப் பெரிய பலவீனமே அது எதற்காக யாருடைய தேவைக்காக தோற்றம் பெற்றது என்பதுதான். ஒரு தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்தின் நலன்களையும் உரிமைகளையும் சுரண்டி வாழாது தனக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய உரிமைகளையும் நலன்களையும் பெற்று வாழ முயற்சிக்க வேண்டும். அந்த நியாயத்தக்கான போராட்டமே தேசிய வாதப் போராட்டம் ஆகும். ஆனால் இங்கு தமிழ் தேசியவாதம் என்பது சட்டசபையில் முறையற்ற பிரதிநிதித்துவக் கோரிக்கையின் அடிப்படையில் எழுகின்றது. அந்தச் சட்டசபைக்கு தெரிவாகப் போகிறவர்கள் கவ்விகற்ற வசதிபடைத்த உயர்வர்க்கமேயாகும். எனவே தமிழ்மக்களுடைய அடிப்படை உரிமைகளுக்காகவன்றி குறிப்பிட்ட சில பேர் சட்டநிருபணசபையில் உறுப்பினர் ஆதல் வேண்டும் என்பதற்காக பூசப்பட்ட சாயமே தமிழ் தேசியவாதமாகும். இதனை சேர்.பொன்.அருணாசலம் அவர்களும் அவருக்குப் பின்வந்த தலைவர்களும் மிக கட்சிதமாக முன்னெடுத்தனர்.
அடுத்து ஜி.ஜி.பொன்னம்பம் அவர்களுடைய அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக நோக்குதல் வேண்டும். யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் டொனமூர் அரசியல் திட்டம் பூரண சுதந்திரத்திரத்திற்க்குத் தடையாக உள்ளதால் அவ்வரசியல் திட்டம்மூலம் கொண்டுவரப்பட்ட தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்து பகிஷ்கரிப்பை மேற்கொண்ட போது அப்பகிஷ்கரிப்பை கொள்கையளவில் ஏற்றுக் கொண்ட திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் சட்டசபையில் அந்தப் பகிஷ்கரிப்பின் நோக்கத்தையே இருட்டிப்புச் செய்து உரையாற்றியிருந்தார். அதாவது “முப்பத்தேழு அங்கத்தவர்களைக் கொண்ட சபையில் எமது ஒன்பது அங்கத்தவர்கள் இருந்தனர். இன்று ஐம்பது தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ள சபையில் நாங்கள் நாலு அல்லது ஐந்து பேர் என்ற நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளோம். இந்தச் சபைக்கு நாம் செல்வதில் என்ன பயன்? என்பதே. இந்தப் பகிஷ்கரிப்பு முடுக்கி விடப்பட்டதற்கான காரணத்தை கௌரவ அங்கத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன். தமிழ் சமூகத்திலிருந்து ஒரு சில அங்கத்தவர்கள் மட்டும் தெரிவு செய்யப்படுதல் தாக்கமற்றதாகிவிடும். அதனால் கடந்த காலத்தில் இருந்த அளவுக்கு அரசாங்கத்தில் தாம் குரலெழுப்ப வாய்ப்பு இருக்க முடியாது என திடமாக மக்கள் நம்பினர்.” எனத் தனக்குச் சார்பாக பகிஷ்கரிப்பை பயன்படுத்திக்கொண்டார். இது போன்றே ஆளுநரின் அதிகாரங்கள் அதிகரிக்க வேண்டும் எனும் மசோதா சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது அதனை திரு. பொன்னம்பலம் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பானதும் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் நலனுக்கு உகந்தது என்று பாராட்டி வரவேற்று ஒரு மகஜரை அனுப்பியிருந்தார். ஆயினும் 30 தடவைகளுக்கு மேல் இச்சட்டத்தினை ஆளுநர் பயன்படுத்தியிருந்தாலும் ஒரு போதும் சிறுபான்மையினர் நலன்கருதி பயன்படுத்தவில்லை. சிறுபான்மையினர் நலன்பற்றி அக்கறைப்பட்ட பொன்னம்பலம் தானும் அது பற்றி கேட்காததில் இருந்து அவர்களுடைய மேட்டுக்குடி நலன் எப்படிப்பட்டது என்பதை தெளிவாகக் காட்டுகின்றது.
தொடரும்.