புலம்பெயர்ந்த இந்தியர்களின் இன்றைய நிலை
பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த இந்தியரின் வழித்தோன்றல்களே இன்று உலகில் பல நாடுகளிலும் காணப்படும் இந்தியச் சமூகங்களாகும். மொறிசியஸ், கயானா, பிஜி ஆகிய நாடுகளில் பெரும்பான்மையினராகவும், வேறு சில நாடுகளில் பிரதான சிறுபான்மை இனமாகவும், இன்னும் சில நாடுகளில் மிகச்சிறிய சிறுபான்மைக் குழுக்களாகவும் அவர்கள் உள்ளனர். இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் சுமார் 7 வீதமாகவும், மலேசியாவில் 11 வீதமாகவும், சிங்கப்பூரில் 5.6 வீதமாகவும், கயானாவில் 50 வீதமாகவும், டிரினிடாட்டில் 35 சதவீதமாகவும், பிஜி தீவில் 51 வீதமாகவும், மொறிசியஸ் தீவில் 67 வீதமாகவும் அவர்கள் உள்ளனர். தென்னாபிரிக்காவில் அவர்களது எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் 3 வீதத்திற்கும் குறைவாகவும், கிழக்காபிரிக்க நாடுகளில் 8 வீதமாகவும் உள்ளது.
இந்தியர் வாழுகின்ற பல நாடுகள் பன்மைத்தன்மை வாய்ந்த சமூகங்களைக் கொண்ட நாடுகளாக (Pluralist Countries) உள்ளன. பன்மைத்தன்மை கொண்ட சமூகம் என்பது, ஒரு அரசியல் அலகுக்குள்ளேயே இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சமூகங்கள் ஒன்றாக ஆனால், ஒன்றுடனொன்று கலவாமல் வாழும் நிலையெனக் கூறப்படுகின்றது. (Furniva, 1938). இந்தியர்கள் இன்று நான்கு விதமான பன்மைச் சமூகங்களில் வாழுகின்றனர் (Patel, 1974).
1. இரு கலாசார நாடுகள்: மொறிசியஸ், பிஜி, கயானா போன்றன.
2. ஆசிய பெரும்பான்மைச் சமூகங்கள்: இலங்கை, பர்மா, மலேசியா போன்றன.
3. ஆபிரிக்கப் பெரும்பான்மைச் சமூகங்கள்: கென்யா, உகண்டா, தன்சானியா, செம்பியா போன்றன.
4. நவகாலனித்துவ நாடுகள்: தென்னாபிரிக்காவும், றொடீசியாவும்
1. இரு கலாசார நாடுகளில் இந்தியர்
மொறிசியஸ், பிஜி, கயானா, போன்ற இரு கலாசார நாடுகளில் இந்தியர் மிகப் பெரிய தேசிய இனமாகவிருந்த பொழுதும், அவர்களது எண்ணிக்கைக்கேற்ற அரசியற்சக்தி அற்றவர்களாக வாழுகின்றனர்.
மொறிஸியஸினது சனத்தொகை ஐரோப்பியர், இந்தியர், ஆபிரிக்கர், சீனர் ஆகியோருடன் உள்ளூர் கலப்பு இனமக்களையும் கொண்டதாகும். இங்கு எல்லாச் சமூகங்களுமே ஒன்றுடனொன்று கலந்து விட்டதால், இந்தியர் இப்பொழுது ஒரு தனிப்பட்ட இனமாக இல்லை. இந்திய கலாசாரம் மொறிசிய கலப்புக் கலாசாரத்துடன் கலந்து படிப்படியாகத் தனது தனித்துவத்தை இழந்து வருகிறது. உண்மையில் மொறிசியஸ் ஒரு குடியேறியோர் தீவாகும். போர்த்துக்கேயர் முதன் முதலாக அங்கு அடியெடுத்து வைத்தபோது அங்கு மனித குடியிருப்புக்கள் எதுவுமே இருக்கவில்லை. 1834க்கும் 1922க்குமிடையே இந்தியர் அங்கு சென்று குடியேறினர். பொருளாதார ரீதியாக இந்தியர்களது செல்வாக்கு குறைவாகவே உள்ளது. சாகுபடிக்குட்பட்ட காணிகளில் சுமார் 52 வீதம் மட்டுமே அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. எனினும், தமது பெரும்பான்மை காரணமாக அவர்கள் அரசியலில் ஓரளவு செல்வாக்குக் கொண்டுள்ளனர். மொறிசிய இந்தியர், தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமது பொதுவான புறநோக்கு என்பவற்றில் ஏனைய நாட்டு இந்தியரின்றும் வேறுபடுகின்றனர். முதலாவதாக, இந்தியர் அங்கு ஒரு தனிப்பட்ட இனமாகவிராது, நாட்டினது பல்லின அமைப்பின் ஓர் அங்கமாக மாறிவிட்டனர். இரண்டாவதாக, அவர்கள் ஒரு சிறுபான்மையினராகயிராது பெரும்பான்மையினராக உள்ளனர். மூன்றாவதாக, அவர்கள் மொறிசியர்களாகவே மாறிவிட்டனர்.
1981ஆம் ஆண்டு 636,000 ஆகவிருந்த பிஜிய சனத்தொகையில் 320,000 பேர் இந்தியராகவிருந்தனர். பிஜிய சுதேசிய மக்களும், இந்தியரும் வேறுபட்ட மொழி, மதம், கலாசாரம் என்பவற்றைக் கொண்டவர்களாவர். இந்தியர்கள் இந்துக்களாகவோ, முஸ்லீம்களாகவோவிருக்க, பிஜியர்கள் கிறிஸ்தவர்களாகவே இருக்கின்றனர். ஆரம்பத்தில் கல்கத்தாவிலிருந்தே பெரும்பாலான இந்தியர் அங்கு சென்றனர். இந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதலே தமிழ்த் தொழிலாளர் அங்கு செல்லத் தொடங்கினர். தமது சொந்தச் செலவிலேயே அங்கு சென்ற பஞ்சாபியர் விவசாயிகளாகவும், குஜராத்தியர் வர்த்தகர்களாகவும் மாறினர். இந்தியர் தமது பெரும்பான்மைக்கேற்ற செல்வாக்கைக் கொண்டிருக்கவில்லை. நாட்டினது காணிகளில் மூன்றில் இரண்டு பங்கு பிஜியருக்கே சொந்தமாகவிருக்க, இந்தியர் அவர்களிடமிருந்து அக்காணிகளைக் குத்தகைக்குப் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். 1930 ஆம் ஆண்டுகளில் ஆரம்ப குத்தகைக் காலம் (90 வருடங்கள்) முடிவுற்ற பொழுது பிஜியர்கள் அதனைப் புதுப்பிக்க தயக்கம் காட்டியதோடு, சில இந்தியர்கள் தமது காணிகளினின்று வெளியேற்றவும் பட்டனர். எனினும், 1942ல், உருவாக்கப்பட்ட உள்நாட்டு காணிகள் நம்பிக்கை சபை (Native Lands Trust Board) இதில் இணக்கப்பாட்டைக் கொண்டுவர முயன்றது. பிஜிய தலைவர்கள் எப்பொழுதுமே இந்தியர்களுக்குச் சலுகைகள் வழங்குவதற்குத் தமது மக்களை வலியுறுத்தி வந்துள்ளனர். இதற்குப் பிரதியுபகாரமாக இந்தியர் 1965 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற அரசியற் திட்டம் தொடர்பான மகாநாட்டில் காணிப் பிரச்சினையை எழுப்பாதிருக்க இணங்கினர்.
இந்தியரும், ஐரோப்பியரும் வைத்தியம், சட்டம், வர்த்தகம் போன்ற துறைகளில் உயர்மட்டத்தை அடைந்துள்ளனர். அதேவேளையில், பிஜியரும் அரசாங்க சேவை, ஆசிரிய சேவை, மதகுருத்துவம் போன்ற துறைகளில் முன்னேறி பலர் இன்று மத்திய வகுப்பு அந்தஸ்தையும் எட்டிப்பிடித்துள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளின் சனத்தொகை கயானா, டிரினிடாட், சூரிநாம் ஆகிய நாடுகளிலேயே செறிந்து காணப்படுகின்றது. 1946ல் கயானாவின் மொத்த சனத்தொகையில் இந்தியர் 43.5 வீதமாகவும், டிரினிடாட்டில் 35.1 வீதமாகவும், சூரிநாமில் 46 வீதமாகவும் இருந்தனர்.
இந்தியரின் வருகை ஆரம்பத்தில், அடிமைத்தளையினின்றும் விடுதலைப் பெற்றிருந்த ஆபிரிக்க மக்களின் எதிர்ப்பிற்குள்ளானது. இந்தியத்தொழிலாளரின் வருகையால் தமது வேதனக் கோரிக்கைகள் தோட்ட முதலாளிமார்களினால் தட்டிக் கழிக்கப்படக்கூடும் என்பதே இதற்கான காரணமாகவிருந்தது. ஆனால், ஆபிரிக்கருக்கு நகர்ப்புறங்களில் போதிய வேலைவாய்ப்புக்கள் கிடைத்தமையால் அவர்கள் நகர்ப்புறங்களிலும் இந்தியர் கரும்புத் தோட்டங்களிலும் குடியேறியதால், இவ்வெதிர்ப்பு பின்னர் மறைந்தது. 1950 களில் இந்தியரது எண்ணிக்கை ஆபிரிக்கர்களது எண்ணிக்கையிலும் பார்க்க அதிகரித்ததோடு, இந்தியரும் கல்விகற்று நகர்ப்புறத் தேர்தல்களுக்கு போட்டியிடத் தொடங்கிய போது பகைமை உணர்வுகள் மீண்டும் தலைதூக்கின.
கயானா ஆறு இன மக்களைக் கொண்ட ஒரு நாடாகும். 1965க்கு முன்னர் இந்தியரின் செல்வாக்கைக் கொண்ட ஜெகன் அரசாங்கத்தின் கீழ் அரசாங்கத்துறை தொழில் வாய்ப்புக்களில் இந்தியர் சம அந்தஸ்து பெற்றிருந்தனர். இந்த அரசாங்கம் வீழ்ச்சியுற்ற பின்னர் நிலைமை மாறிற்று. பல்கலைக்கழக அனுமதி, தொழில் வாய்ப்புகள் என்பவற்றில் இப்பொழுது தனிப்பட்டோரின் திறமையுடன் இனவிகிதாசாரமும் கவனத்தில் எடுக்கப்படுகின்றது. இந்தியர் இதனைத் தமக்கெதிரான இனப்பாகுபாடு எனக் கூறி எதிர்த்து வருகின்றனர்.
2. ஆசியப் பெரும்பான்மைச் சமூக நாடுகளில் இந்தியர்
இந்தியர் பெருமளவினராக வாழும் ஆசிய நாடுகள் ஐரோப்பியரது வருகைக்கு முன்னரே இந்தியாவுடன் வரலாற்று ரீதியான தொடர்புகளைக் கொண்டிருந்த நாடுகளாகும். பல நூற்றாண்டு காலமாகவே இந்தியர் இலங்கையில் குடியேறி வந்துள்ளனர். இலங்கையினது பிரதான மொழிகள், மதங்கள், கலை, கலாசாரம் என்பன இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டன. 1852க்கு முன்னர் இந்தியர்கள் பெருமளவில் பர்மாவில் குடியேறவில்லையெனினும் இரு நாடுகளுக்குமிடையே நெருங்கிய வர்த்தகத் தொடர்புகள் இருந்து வந்தன. நாட்டினது பிரதான மதமான பௌத்தமும் இந்தியாவினின்று சென்றதாகும். கிறிஸ்து சகாப்தத்தின் ஆரம்பம் தொட்டே மலேசியாவிற்கும் இந்தியாவிற்குமிடையே தொடர்புகள் நிலவி வந்துள்ளன. எனினும், இத்தொடர்புகள் பெருமளவிற்கு வர்த்தகம் சார்ந்தனவாகவே இருந்தன.
இலங்கையில் இந்திய சமூகமானது இன்று சுமார் பத்து இலட்சம் பேர்களைக் கொண்டதாக உள்ளது. 1946ல் மொத்த சனத்தொகையில் 11.7வீதமாகவிருந்த இவர்களின் பங்கு, சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் பலர் தாயகம் திரும்பியதால், 1981ம் ஆண்டு 5 வீதமாகக் குறைந்தது. மிக அண்மையக்காலக் கணக்கெடுப்பில் இது மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிகின்றது. எனினும், இந்தியர்களின் எண்ணிக்கையிலேற்பட்ட உண்மையான வீழ்ச்சியை இது காட்டவில்லை. இலங்கைக் குடியுரிமை பெற்ற பலர் தம்மை இலங்கைத் தமிழரென குடித்தொகைக் கணக்கெடுப்பில் பதிந்து கொள்வதாலேயே உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களில் மேற்படி வீழ்ச்சி காணப்படுகின்றது. இதேவேளையில், குடித்தொகை மதிப்பீட்டில் இலங்கைத் தமிழரது விகிதாசாரப்பங்கு கணிசமாக அதிகரித்துள்ளமை இதனைத் தெளிவுபடுத்துகின்றது. எண்பது வீதத்திற்கும் அதிகமான இந்தியர் (தமிழர்கள்) மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் அமைந்துள்ள பெருந்தோட்டங்களிலேயே செறிந்து வாழுகின்றனர். எஞ்சியோர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிதறிக் காணப்பட்டாலும், கொழும்பு , கண்டி போன்ற நகரங்களில் செறிவாக உள்ளனர். கடந்த சுமார் இரு தசாப்தங்களில் நாட்டில் அடிக்கடி ஏற்பட்டு வந்த இனக்கலவரங்களினால் அவர்கள் தமது பாதுகாப்பிற்காக நாட்டின் வடக்கு, கிழக்குத் தமிழ் பிரதேசங்களுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர். இப்பகுதிகளில் இப்பொழுது சுமார் ஒன்றரை இலட்சம் இந்தியத் தமிழர்கள் வாழுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அண்மைக்கால இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இதில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டிருக்கக்கூடிய சாத்தியமுண்டு.
இலங்கையினது பொருளாதார அபிவிருத்திக்கு இம்மக்கள் ஆற்றியுள்ள சேவை அளப்பரியது. நாட்டினது மொத்த வெளிநாட்டு நாணய உழைப்பில் சுமார் அரைவாசிக்கு இவர்களது உழைப்பே காரணமாகவுள்ளது. எனினும், சமூக – பொருளாதார ரீதியாக இவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளனர். தோட்டப்புற மக்களது புவியியல் ரீதியான அசைவு கட்டுப்படுத்தப்பட்டதாகவிருப்பதுடன், தோட்டங்களுக்கு வெளியே அவர்களது தொழில்வாய்ப்புகளுக்குப் பல்வேறு முட்டுக்கட்டைகளும் இருந்து வந்துள்ளன. இவ்விதத் தடைகளுக்கு மத்தியிலும் ஒரு சிலர் தமது கல்வி , முயற்சியாண்மை, வினைத்திறன் என்பன காரணமாகத் தோட்டங்களை விட்டு வெளியேறி ஏனைய துறைகளில் தொழில் வாய்ப்புப் பெற்றனர். ஒரு சிலர் சட்டம், மருத்துவம், கணக்கியல் போன்ற துறைகளிலும் பயிற்சி பெற்று வெளியேறினர். இச்சிறு குழுவினரது வளர்ச்சியும், அபிவிருத்தியும் இச்சமூகத்தின் மீது சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்தவும் தொடங்கிற்று. ஆனால் 1977 முதல் ஏற்பட்டு வந்த இக்கலவரங்களினால் இவர்கள் மீண்டும் தோட்டப்புறங்களுக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பாதுகாப்புப் பிரச்சினை இவர்களது அசைவினை மேலும் கட்டுப்படுத்துகின்றது. பாதுகாப்பு என்ற பெயரில் இவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். தோட்டங்களில் தொழில் வாய்ப்புகள் பெருகாத நிலையில் வெளியிடங்களில் அவர்கள் தொழில் வாய்ப்பினைப் பெறுவதும் தடைப்படுவதால், அவர்களது பொருளாதாரநிலை மோசமாகப் பாதிப்படைந்து வருகின்றது.
மலேசியா பல்லினச் சமூகத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அங்குள்ள இந்தியர், இந்திய சுதேசிய இனத்தைச் சேர்ந்தவர்களென மலேசிய அரசாங்கத்தினால் வகைப்படுத்தப்பட்டுள்ளனர் (Thangaraj, 1971). சுமார் 15 இலட்சம் எண்ணிக்கையான மலேசிய இந்தியர் சிலாங்கூர், பெராக், ஜொஹோர், பினாங்கு, கெடா ஆகிய மேற்கு மலேசியப் பிரதேசங்களில் செறிவாக வாழ்கின்றனர். இவர்களிற் சுமார் 80 வீதமானோர் தமிழரும், 10 -11வீதமானோர் மலையாளிகளும் தெலுங்கருமாவார்.
பிரித்தானிய ஆட்சியின் கீழ் அரசாங்கத்தில் மலாயருக்கு விசேட சலுகைகள் இருந்தன. மலேசிய தீபகற்பத்திற்கு வெளியிலிருந்து வந்த சமூகங்களுக்கு குறைந்த அந்தஸ்த்தே வழங்கப்பட்டிருந்ததால், அவர்களுக்கு அரசாங்கப் பாதுகாப்பும் கவனிப்பும் குiறாகவே இருந்தன. அரசியல் தாபனங்கள் இதனைத் தொடர்ந்தும் நிலைக்க வைத்துள்ளன. 1948ம் ஆண்டு மலாயர் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கப்பட்ட போதும் அது மலாய இனத்தினருக்குப் போன்று தன்னியல்பானதாக இருக்கவில்லை. இவ்விதப் பாகுபாட்டை எதிர்ப்பதில் சீனரும் இந்தியரும் ஒன்றுபட்ட போதும் இந்த ஒற்றுமை நெடுங்காலம் நீடிக்கவில்லை. இனங்களுக்கிடையே காணப்படும் பரஸ்பர சந்தேக உணர்வுகள் இனரீதியான அரசியல் அமைப்புகளை அங்கு உருவாக்கியுள்ளன.
அரசாங்க நிர்வாகத்துறைகளிலும் சேவைகளிலும் மலாயர் கட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர். மலேசியர் அரசியற்றிட்டம் மலாயருக்கு பல விசேட சலுகைகளை வழங்குகின்றது.
(1) நிர்வாக சேவையில் கணிசமான பங்கு (75) மலாயருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
(2) காணிப் பங்கீடு, குறிப்பிட்ட சில தொழில்களுக்கும் வர்த்தகத்திற்குமான அனுமதிப் பத்திரங்கள் வழங்கல் (உதாரணம், போக்குவரத்து) போன்றவற்றில் மலாயருக்கு விசேட சலுகைகள் உண்டு. மலாயருக்கு வழங்கப்பட்டுள்ள இவ்வித சலுகைகள் இந்தியரின் வருமானம், தொழில் வாய்ப்பு என்பவற்றைப் பாதித்துள்ளன.
1971ல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை இந்தியரைப் பெரிதும் பாதித்தது. மலாயரினது பொருளாதார நிலையினை உயர்த்தும் நோக்கத்தைக் கொண்டிருந்த இக்கொள்கை. இதற்கென ஒரு சூத்திரத்தையும் முன்வைத்தது. இதுவரை காலமும் கம்பனிகளின் பங்கு முதலில் 3 வீதத்ததிற்கும் குறைவாகவிருந்த மலாயரது பங்கினை. 1990 அளவில் 30 வீதமாக உயர்த்தவும், றப்பர் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கை சிற்றுடைமைகளுக்கு மாற்றவும் அது முயன்றது. இக்கொள்கை ஆரம்பிக்கப்பட்டது முதல் தேசிய செல்வத்தில் இந்தியரின் பங்கு வீழ்ச்சியடையத் தொடங்கிற்று. இந்தியரிடையே காணியில்லாப் பிரச்சினையும் அதிகரித்து வருகின்றது. எனவே, மலேசியாவில் இந்தியர் வீழ்ச்சியடைந்து வரும் ஒரு சமூகமாக மாறி வருகின்றனர்.
இரண்டாவது போர்க்காலம் வரையும் மலேசிய இந்தியர்கள் அரசியலில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் மொழி, கல்வித்தகைமைகள், பொருளாதாரவளம் போன்ற அடிப்படைகளில் பிரிவுபட்ட ஒரு சமூகமாக இருந்து வந்தனர். இந்திய விடுதலைச் சங்கத்தை அமைப்பதன் மூலம் அவர்கள் அரசியலில் காலடி வைத்தனர். 1946ல் மலேசிய இந்திய காங்கிரஸ் அமைக்கப்பட்ட போதும், றப்பர் தோட்டத் தொழிலாளரை அதில் இணைத்துக் கொள்வதில் சில பிரச்சினைகள் தோன்றின. காங்கிரஸ் தலைவர்கள் வட இந்தியராகவும் தோட்டத்தொழிலாளர் தென்னிந்தியராகவுமிருந்ததே இதற்கான முக்கிய காரணமாகும். எனினும், மலேசிய காங்கிரஸ் கட்சி ஐக்கிய மலாய தேசிய அமைப்புடனும், மலேசிய அமைப்புடனும் கூட்டுச்சேருவதன் மூலம் அரசியற் செல்வாக்கைத் தேடிக்கொண்டது. எனவே, தோட்டத் தொழிலாளர் அக்கட்சிக்கு ஆதரவளிக்க முன் வந்தனர். இன்று மலேசிய இந்திய காங்கிரசும், தோட்டத் தொழிலாளர் தேசிய சங்கமும் இந்தியரின் அரசியல், பொருளாதாரம் என்பவற்றின் பாதுகாவலராக விளங்குகின்றன.
பர்மிய இந்தியரைப் பற்றி எழுதிய சக்ரவர்த்தி, தனது நூலில், பர்மாவில் வாழ்ந்து, கஷ்டப்பட்டு உழைத்து அந்நாட்டினது அபிவிருத்திக்குப் பெரும் பங்கினையளித்த ஒரு சமூகம், இறுதியாகத் தனது வீடுகளையும் தொழில்களையும் விட்டுத்துரத்தியடிக்கப்பட்ட ஒரு சோகமான கதையென அவர்களது வரலாற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார் (Chakravarti,Op,cit).
பர்மா இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்னர், அந்நாட்டினது பொருளாதாரம் துரித வளர்ச்சி கண்டது. இந்திய மூலதனம், மனிதவலு, பொருட்கள் என்பவற்றின் கட்டற்ற பாய்ச்சலின் காரணமாகவே இவ்வளர்ச்சி ஏற்பட்டது. எனினும், இந்தியர்கள் கட்டுப்பாடின்றி நாட்டிற்குள் நுழைவதையும் முக்கிய துறைமுகங்களிலும், கைத்தொழில் மையங்களிலும் செறிந்து வாழ்வதையும் பர்மியர்கள் விரும்பவில்லை. கட்டுப்பாடுகளின்றி இந்தியர் அங்கு குடியேற விடப்பட்டமை பர்மியரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது மட்டுமன்றி, அவ்வாறு குடியேறிய இந்தியரிடையே வறுமையையும் வேலையின்மையையும் அது தோற்றுவித்தது. இருந்துங்கூட, இவ்வித குடியேற்றத்தை நிறுத்தவோ, வேலையின்றி இருப்போரை இந்தியாவிற்கு திருப்பியனுப்பவோ எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. 1938ஆம் ஆண்டு இனக்கலவரங்களுக்கும், இந்தியர் பெருமளவில் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கும் இதுவே காரணமாயிற்று. எனவே, பர்மிய இந்தியரது தலைவிதி, தவறான குடிவரவுக்கொள்கையின் ஒரு விளைவாகும்.
3. ஆபிரிக்க பெரும்பான்மைச் சமூகங்கள்
கிழக்காபிரிக்காவின் நான்கு நாடுகளான கென்யா, தன்சானியா, உகண்டா, சென்ஸிபார், என்பவற்றில் 1954ல் சுமார் 295,000 இந்தியர்கள் வாழ்ந்தனர் (hollingworth, 1960). எனினும், கடந்த மூன்று தசாப்தங்களில் அவர்களது எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சுமார் 150,000 பேர் மட்டுமே (கெனியா 100,000: தன்சானியா 50,000: உகண்டா 50) அங்கு எஞ்சியுள்ளனர். இந்நாடுகளின் மொத்த சனத்தொகை 18.3 மில்லியனாகவிருப்பதால், இந்தியர் ஒரு மிகச்சிறிய சிறுபான்மையினமாகவே உள்ளனர்.
நைரோபி, மொம்பாஸா, டார்-எஸ்-ஸலாம், சென்ஸிபார் போன்ற வர்த்தக மையங்களிலேயே இந்தியர்கள் செறிந்து வாழ்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளாகவே கிழக்காபிரிக்காவில் குடியேற்றங்களையமைத்து வாழ்ந்து வந்துள்ள போதும், அவர்கள் பெரும்பாலும் கரையோரப் பிரதேசங்களிலேயே வாழ்ந்தனர். இப்பிரதேசம் பிரித்தானிய நிர்வாகத்தின் கீழ்க் கொண்டு வரப்பட்ட பின்னரே அவர்கள் உட்பிரதேசங்களுக்கு முன்னேறினர். பிரித்தானியர் பெருமளவு இந்தியத் தொழிலாளர்களை அங்கு கொண்டு சென்ற போதும், ஒப்பந்த கால முடிவில் அவர்கள் தாயகம் திரும்பினர். அங்கிருந்த இந்தியப்படைகளும் 1917 ஆம் ஆண்டு பின்வாங்கப் பட்டன. இந்தியர்கள் பெருமளவு காணிகளைக் கொள்வனவு செய்யாததால், இந்திய நிலச்சுவான்தர் வகுப்பு ஒன்றும் அங்கு உருவாகவில்லை. எனினும், நகர்ப்புறச் சொத்துக்களின் நீண்டகாலக் குத்தகை மீது அவர்கள் பெருமளவு முதலீடு செய்தனர். பொருட்களின் விநியோகத்தின் மீது அவர்கள் ஆதிக்கம் கொண்டிருந்ததோடு உயர்மட்ட மனித வளத்தையும் அவர்களே நிரம்பல் செய்தனர். கணிசமான மூலதனத்தையும் அவர்களே கட்டுப்படுத்துகின்றனர்.
4. நவகாலனித்துவ நாடுகள்
தென்னாபிரிக்காவில் இந்தியர் கறுப்பு, வெள்ளை இனத்தவர்களிடையே ஒரு இடைநிலை இனமாக உள்ளனர். வெள்ளையினக்குடியேற்றவாதிகள் அவர்களை அங்கு அழைத்ததோடு , விரும்பினால் நிரந்தரமாகக் குடியேறவும் தூண்டினர். ஆனால், அவர்கள் அங்கு குடியேற முயன்றபோது அவர்களுக்கெதிராகப் பல சட்டரீதியான கட்டுப்பாடுகளை விதித்தனர் (Moodley, 1975). எனவே, இந்தியர் வெள்ளையின ஆதிக்கத்திற்கெதிராக ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தனர். இது சட்டமறுப்பு, எதிர்ப்புக்கூட்டங்கள், வேலை நிறுத்தங்கள், சத்தியாக்கிரகம் போன்ற பல்வேறு வடிவங்களை எடுத்தது. இவற்றினூடாக சில நிவாரணங்களை அவர்கள் பெறக்கூடியதாக இருந்தது.
நெடுங்காலமாக இந்தியர் தென்னாபிரிக்க சமூகத்தில் ஒருங்கிணைக்க முடியாத ஒரு குழுவினராகக் கருதப்பட்டனர். எனினும், 1961 ஆம் ஆண்டு நாடு குடியரசாக மாறிய போது, கொள்கை மாற்றமொன்று ஏற்பட்டது. இந்தியர் தென்னாபிரிக்காவின் பொறுப்பாக ஏற்கப்பட வேண்டுமென்றும், குடியுரிமை பெற அவர்களுக்குப் பூரண உரிமையுண்டு என்றும் உத்தியோகபூர்வ அறிக்கையொன்று கூறியது. இவ்வித கொள்கை மாற்றத்திற்குப் பல காரணங்களிருந்தன.
1. சுய விருப்பின் பேரில் இந்தியர் தாயகம் திரும்பாமை.
2. இந்தியர்கள் சட்டரீதியான பிரஜைகளாகவிருந்தனர்.
3. தென்னாபிரிக்காவே தமது தாயகமென இந்தியர் விடாப்பிடியாக இருந்தமை.
4. தனது இன ஒதுக்கல் கொள்கையின் கீழ் இந்திய குடியிருப்புக்களை கவனமாகத் திட்டமிடுவதன் மூலம் இந்தியப் பிரச்சினையைத் தீர்க்கலாமென அரசாங்கம் கருதியமை.
1948 ஆம் ஆண்டு இன ஒதுக்கல் முறையான ஒரு அரசியல் திட்டமாக தேசியக் கட்சியினால் அறிமுகம் செய்யப்பட்டதோடு, 1950ல் குழப்பிரதேசச்சட்டமும் (Group Areas Act) கொண்டுவரப்பட்டது. இச் சட்டத்தின்படி, நகர்ப்புறங்களில் வெவ்வேறு இனக்குழுக்கள் தனிப்பட்ட பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டன. இவ்வின ஒதுக்கல் இந்தியர்களையே பெரிதும் பாதிப்பதாக இருந்தது. அவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டபோது, அவர்களது சொத்துக்களுக்கு உண்மையான சந்தைப்பெறுமதிகள் செலுத்தப்படாததால் அவர்கள் பெரும் நிதி இழப்பிற்கு உட்பட்டனர்.
இரண்டாம் போரின் பின்னர் இந்தியர்களுக்கு இருந்த அரசியல் தெரிவு ஒன்றில், தமக்கெதிரான பாரபட்சங்களை ஏற்றுக்கொள்வதாக அல்லது அவற்றை எதிர்ப்பதாகவிருந்தது. அவற்றை எதிர்ப்பதாயின் வெள்ளையினருக்கு எதிராக கறுப்பு இன மக்களுடன் இணைய வேண்டியிருந்தது. ஆனால், கறுப்பு இன மக்கள், இந்தியர் தமது பிரதேசங்களில் வர்த்தகத் தனியுரிமையின் மூலம் தம்மைச் சுரண்டுவதாகவும் அவர்கள் தம்மிலும் பார்க்க சலுகைகளுடன் வாழ்வதாகவும் கருதியமை ஒரு முக்கிய பிரச்சினையாகவிருந்தது.
1949ஆம் ஆண்டு இந்தியர்களுக்கும், ஆபிரிக்கர்களுக்கும் இடையே டர்பன் நகரில் ஏற்பட்ட இனக்கலவரம் இதற்கு முடிவுகட்டியது. இறுதியாக இவ்விரு இனங்களும் ஒன்றுபட்டு, வெள்ளையர்களுக்கெதிராகப் போராடத் தொடங்கின.
மேலே கூறிய நான்கு வகையான பன்மைச் சமூகங்களிலும் இந்தியர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சில பொதுவான பண்புகளையும் சில வேறுபாடுகளையும் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் பிரதம நீதியரசர் ஹிதாயத்துல்லா கூறியது போன்று வெளிநாடுகளில் இந்திய சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஒத்ததன்மை வாய்ந்தனவன்று. உதாரணமாக, கென்யா, உகண்டா, தன்சானியா ஆகிய நாடுகளில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மலேசியா, பர்மா அல்லது இலங்கையில் காணப்படும் பிரச்சினைகளை ஒத்தனவன்று: எத்தனை நாடுகள் உள்ளனவோ, அத்தனை பிரச்சினைகளும் உள்ளன. ஆயினும் அவற்றிற்கிடையே சில பொதுவான பண்புகளும் இருக்கவே செய்கின்றன (u;idayathullah, 1969). மொத்த சனத்தொகையில் இந்தியர் அரைவாசிக்கும் மேலாகவிருக்கும் கயானா, பிஜி, மொறிசியஸ் போன்ற நாடுகளில் அவர்கள் தமது உயர்ந்த எண்ணிக்கை காரணமாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயலுகின்றனர். இந்தியர் சிறுபான்மையினராகவிருக்கும் ஆபிரிக்க நாடுகளில் அவர்களது அரசியல் செல்வாக்கும் குறைவானதாகவே உள்ளது. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட இனங்களைக் கொண்ட நாடுகளில் அவர்களது பிரச்சினைகள் சிக்கல் நிறைந்தனவாக உள்ளன. கயானாவில் 1960ஆம் ஆண்டுவரையும், மொறிசியஸில் இன்று வரையும் அரசியலில் அவர்களதுசெல்வாக்கு காணப்படுகின்றது. பிஜியில் இவர்கள் உள்நாட்டு மக்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதோடு அரசியலிலும் ஓரளவு செல்வாக்கைப் பெற்றுள்ளனர்.
இலங்கையிலும் மலேசியாவிலும் நிலைமை சற்று வேறுபட்ட இந்திய வழித்தோன்றல்களிலும் பார்க்க எண்ணிக்கையிற் கூடிய உள்நாட்டுத் தமிழ் சமூகமொன்று இலங்கையிற் காணப்படுவது அவர்களது பிரச்சினையை சிக்கலாக்கியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் தனி நாடு அமைக்கவென சில இலங்கை தமிழ் குழுக்கள் மேற்கொண்டுள்ள ஆயுதமேந்திய போராட்டம் அவர்களது நிலைமையை மோசமடையச் செய்துள்ளது. இந்தியத்தமிழர்கள் பெரும்பாண்மை இனத்தவர்களின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்று பாதுகாப்;பே அவர்களது முக்கிய பிரச்சினை எனக் கூறின் அது மிகையாகாது. 1948ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட அவர்களது குடியுரிமை 1988 ஆம் ஆண்டிலே மீண்டும் வழங்கப்பட்டது. எனினும் இன்றுங்கூட இப்பிரச்சினை பூரணமாகத் தீர்க்கப்படாமலேயே உள்ளது.
மலேசியாவில் சீனருக்கு அடுத்ததாக மூன்றாமிடத்திலுள்ள இந்தியர் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். அங்கு அரசியல் பலன் மலாயரது கைகளிலும் பொருளாதார சக்தி சீனரது கைகளிலும் உள்ளன. இவ்விரு இனங்களுக்கு நடுவில் அகப்பட்டுள்ள இந்தியர் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கவனத்தில் எடுக்காது விடப்படுகின்றனர். பெரும்பாலான இந்தியர்கள் வேற்றாருக்குச் சொந்தமான இறப்பர் தோட்டங்களில் தொழில் புரிகின்றனர். எனினும் அவர்கள் தொழிற்சங்க இயக்கத்தில் செல்வாக்குப் படைத்தவர்களாக இருப்பதால் தொழிற்சங்கத்தினூடாக தமது செல்வாக்கை கையாள்கின்றனர். மலேசிய இந்திய சமூகம் அதனது வீழ்ச்சியடைந்து வரும் சமூக அரசியல் பொருளாதார நிலைமை காரணமாக ஒரு அநாதைச் சமூகம் என வர்ணிக்கப்படுகின்றது (Far Eastern Economic Review, 26 th July 1984).
மலேசியா, இலங்கை, பர்மா ஆகிய மூன்று நாடுகளிலேயே இந்தியருக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்றுள்ளன. பர்மிய தேசிய வாதம் எழுந்த போது 1938ல் சுமார் 400000 இந்தியர்கள் பர்மாவினின்றும் வெளியேற்றப்பட்டனர். இதே விதமான இந்தியரின் வெளியேற்றம் 1948ல் பர்மா பிரித்தானிய குடியேற்ற ஆட்சியினின்று விடுதலைப் பெற்ற வேளையிலும் 1960ம் ஆண்டுகளில் நெவினினது (Nevin) தேசிய கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட பொழுதும் இடம்பெற்றன. இலங்கையில் (இந்தியத்) தமிழருக்கெதிரான கலவரங்கள் நாட்டின் சுதேச தமிழர்களின் போராட்டங்களுடன் தொடர்புள்ளனவாகும். தனிநாட்டுக் கோரிக்கையுடன் எவ்வித சம்பந்தமும் இல்லாத மலையகத் தமிழர் தாக்கப்படுவது இன்று சகஜமாகி விட்டது. 1969ஆம் ஆண்டு மலேசியாவில் சீன இனத்தவருக்கெதிராக வெடித்த இனக்கலவரங்கள் இந்தியரையும் பாதித்தன. இந்தியர்கள் செறிந்துவாழும் பினாங்கு, பெராக், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் மலேசியக் கூட்டாட்சி கட்சி பெரும்பான்மையைப் பெறத்தவறிய பின்னரே இக்கலவரங்கள் தோன்றின. இத்தேர்தல் முடிவுகளை மலாயர் தமது அரசியல் அதிகாரத்திற்கு அச்சுறுத்தல் எனவும் அதற்கு காரணமாக இருந்தோர் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் கருதியதன் விளைவே இக்கலவரங்களாகும். இலங்கையில் முதலாவது பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இந்தியரது குடியுரிமை பறிக்கப்பட்டதை இது எமக்கு நினைவுபடுத்துகின்றது.
இலங்கையிலும் மலேசியாவிலும் இனரீதியான போக்குகள் நிலைபெற்றுவிட்டன. பல்வேறு சமூகங்களுக்கிடையே காணப்படும் பரஸ்பர சந்தேகங்களும் பிணக்குகளும் அமைதியின்மையையும், இனரீதியான கலவரங்களையும் தோற்றுவிக்கின்றன. எனவே, இனக்கலவரங்களை தவிர்ப்பது (குறிப்பாக இலங்கையில்) அரசாங்கங்களின் முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது.
இச்சூழ்நிலையில் தனியொரு இனத்தை அல்லது சமூகத்தைத் திருப்திப்படுத்தும் கொள்கைகளிலும் பார்க்க எல்லா இனங்களுக்கும் சமூகங்களுக்குமிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் கொள்கைகளை அமுலாக்குவதன் மூலமே இன நல்லுறவை உருவாக்கலாம். இந்நாடுகளில் பல்வேறு இனங்களும் சுகவாழ்வு வாழத் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிடில், முழு நாடுமே ஒரு இடுகாடாக மாறிவிட நேரிடும் என்ற மலேசியப் பிரதமர் தூங்கு அய்துல் றஹ்மானினது கூற்று (as quoted in kaul, M, 1980). மலேசியாவிற்கு மட்டுமன்றி இலங்கைக்கும் பெரிதும் பொருந்தும்.
பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் ஆட்சியாளருக்கும் ஆளப்படுவோரக்குமிடையே ஓர் ஆப்பாகத் திணிக்கப்பட்டதாகும், இந்நாடுகளை நிர்வகிப்பதிலும் வர்த்தக ரீதியாக இவற்றை சுரண்டுவதிலும் ஆட்சியாளர்களுக்கும் சுதேசிய மக்களுக்குமிடையே காணப்பட்ட இடைவெளியை அவர்கள் நிரப்பியதாகவும் கூறப்படுகின்றது. பிரித்தானியர் இந்நாடுகளை ஆட்சி செய்த காலத்தில் இந்தியரது நலன்கள், எல்லாச் சந்தர்ப்பங்களிலுமே திருப்திகரமாக இல்லாவிட்டாலுங்கூட, பெருமளவிற்கு பாதுகாக்கப்பட்டு வந்தனவெனலாம். பிரித்தானியர் தமது சுயநலனைக் கருதியே அவர்களைப் பாதுகாத்தனர். சுதந்திரம் பெற்ற பின்னர் இந்நாடுகளில் நிலைமை மாறிற்று. காலனித்துவத்திற்கெதிரான சுதேசிய மக்களது வெறுப்பு இந்திய சமூகத்தினர் மீது திருப்பப்பட்டது (Patel op. cit). 1972ம் ஆண்டு 50,000 இந்தியர்கள் உகண்டாவிலிருந்து வெளியேற்றப்பட்டதை இதற்குச் சிறந்த உதாரணமாகக் கூறலாம். இந்நாடுகள் பலவற்றில் இன்று இந்தியர் அரசியல் ரீதியாக செயற்றிறன் அற்றோராகவும், சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டோராகவும் வாழ்ந்து வருகின்றனர்.
பிஜி மொறிசியஸ், கயானா போன்ற நாடுகளில் இந்தியரின் நிலைமை வேறு சில நாடுகளிற் போன்று மோசமானதாக இல்லை. இம்மூன்று நாடுகளிலுமே இந்தியர் அந்நாட்டுச் சமூகங்களின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். மேலும், பல்வேறு வழிகளில் தமது தனித்துவத்தை ஓரளவு பேணியும் வருகின்றனர். அதே போன்று புதிய சூழ்நிலைக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டும் உள்ளனர். இச்சமூகங்களில் இந்தியர் பெரும்பான்மை வகித்தபொழுதும், ஏனையோருக்கு அவர்கள் ஒரு அச்சுறுத்தலாகக் கருதப்படுவதில்லை. ஆனால் இந்தியர் சிறுபான்மையினராக வாழும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் அவர்கள் காணப்படுவது அந்நாட்டு மக்களால் விரும்பப்படவில்லை போன்று தெரிகின்றது. கிழக்காபிரிக்க நாடுகளில் இந்தியரது பொருளாதாரச் செல்வாக்கும், அவர்களது இனரீதியாக ஒதுங்கி வாழும் போக்கும் ஆபிரிக்கரின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளன. அவர்கள் வசதியும் சலுகைகளும் படைத்தோராக ஆபிரிக்கரால் கருதப்படுகின்றனர். கடந்த சுமார் மூன்று தசாப்தங்களாக ஆபிரிக்க தேசியவாதத்தின் எழுச்சியும், கல்வியில் ஆபிரிக்கர் அடைந்துள்ள முன்னேற்றமும் இந்தியருக்கு அதிகரித்துவரும் எதிர்ப்பை தோற்றுவித்துள்ளன. இந்தியர் தமது சொந்த செல்வத்தைப் பெருக்கிக் கொண்ட அளவிற்கு இந்நாடுகளினது செல்வத்தைப் பெருக்குவதற்கு உதவவில்லை என்றும், இந்நாடுகளினது பொருளாதாரங்களில் ஆபிரிக்கர் பங்குபற்றுவதை அவர்கள் தாமதப்படுத்தினர் என்றும் ஆபிரிக்கர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் (Daster, A.in Gupta ed.). எனினும், இந்தியருக்கெதிரான இக் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் உண்மையானவையென்று. உதாரணமாக இந்தியர் அந்நாடுகளுக்குச் சென்றிருக்காவிடில், ஆபிரிக்கரது வருமானங்கள் உயர்ந்த மட்டத்தை அடைந்திருக்குமெனக் கூற முடியாது. மறுபக்கத்தில், கிழக்காபிரிக்க நாடுகளின் பொருளாதார அபிவிருத்திக்கு இந்தியர் எவ்வித பங்கையும் அளிக்கவில்லையென்றும் கூறமுடியாது. இந்தியரது பங்களிப்பின்றி கிழக்காபிரிக்கா அதன் இன்றைய பொருளாதார அபிவிருத்தி மட்டத்தை அடைந்திருக்க முடியாது என்று கூடக் கூறலாம்.
மூன்று ஆபிரிக்க நாடுகளிலுமே தேசிய உணர்வு ஒருபலம் மிக்க சக்தியாக எழுச்சி பெற்றுள்ளது. எனினும் ஆபிரிக்க மயமாக்கலின் வேகம் இவற்றுக்கிடையே வேறுபடுகின்றது. உகண்டா இந்தியரை முற்றாகவே வெளியேற்றிவிட்டது. கென்யா இந்தியரை கட்டுப்படுத்துவதற்கு பல சட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. தன்சானியா சோஸலிசத்தைச் சார்ந்திருப்பதால், இந்தியரைப் பொறுத்து மிகவும் அவதானமான ஒரு கொள்கையைப் பின்பற்றுகின்றது. இவ்வித சூழ்நிலையில், இந்தியர்கள் ஒன்றில் இந்நாடுகளை விட்டு வெளியேறவோ அல்லது உள்ளூர் மக்களுடன் இணைவதற்கோ நேரிட்டுள்ளது. எனினும் சமூக ஒருங்கிணைவு என்பது ஒரு நீண்ட காலப் பிரச்சினையாக இருப்பதோடு அது எதனைக் குறிக்கின்றது என்பது பற்றியும் எவ்வித உடன்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்நாடுகளில் இந்தியருக்கெதிராகக் காணப்படும் வெறுப்புணர்வு பிரித்தானிய ஆட்சிக்கெதிரான சுதேசிய மக்களது போராட்டங்களில் அவர்களது பங்கு கொள்ளத் தவறியதாலும், மாறாக வெள்ளையருடன் சமஉரிமை கோரி தனிப்பட்ட போராட்டத்தை நடத்தியதாலும், ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. காலனித்துவ ஆட்சி மறையப் போவதை உணர்ந்த பின்னரே அவர்கள் ஆபிரிக்கருக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் இந்தியரது காலந்தாழ்ந்த இந்த ஆதரவு ஆபிரிக்கரால் நிராகரிக்கப்பட்டது. என்பதும் சிலரது கருத்தாகும். சுதந்திரப் போராட்டத்தில் வெகுதூரம் முன்னேறிவிட்ட ஆபிரிக்கர்களுக்கு அதன் இறுதிக்கட்டத்தில் இந்தியரின் உதவி தேவைப்படவில்லை. இந்நாடுகள் விடுதலை அடைந்த பின்னர் இந்தியர் இதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிட்டது.
தென்னாபிரிக்காவில் தமக்கெதிராக விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், பாரபட்சங்கள் என்பவற்றை எதிர்த்து நெடுங்காலமாக வெள்ளையருடன் போராடிய இந்தியர், இப்பொழுது தமது தலைவிதியை ஏற்றுக்கொண்டு விட்டனர் மேலும், அண்மைக்காலங்களில் அவர்கள் ஆபிரிக்க கறுப்பின மக்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் தொடங்கினர். பல சந்தர்ப்பங்களில் ஆபிரிக்கருடன் இணைந்து வெள்ளையின ஆட்சிக்கெதிரான போராட்டங்களில் பங்குபற்றியுமுள்ளனர்.
பர்மா பெருமளவுக்கு இந்திய சிறுபான்மையினரை ஒழித்துவிட்டது. தமக்கெதிரான தாக்குதல்களுக்கு தாக்கு பிடித்து அங்கு நிரந்தரமாக வாழ முன்வந்தவர்கள் (சுமார் 250,000 பேர்) இன்று ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பதோடு, பர்மிய சமூகத்தோடு இரண்டறக் கலந்துவிட்டனர். அல்லது தமது தனித்துவத்தை இழந்து நிற்கின்றனர். 1948இல் பர்மா சுதந்திரமடைந்த பொழுது இந்தியரது பொருளாதார நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இக்காலப்பகுதியில் 25 வீதமான நெற்காணிகள் இந்தியருக்கு (செட்டிமாருக்கு)ச் சொந்தமாகவிருந்தன. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பர்மிய காணித் தேசிய மயமாக்கச் சட்டம் விவசாயம் செய்யாதோர் காணிகள் வைத்திருப்பதை முற்றாகத் தடை செய்தது. அதேபோன்று விவசாயம் செய்வோருக்கு 20 ஹெக்டேயர்களை உச்சவரம்பாக விதித்தது. காணி ஒதுக்கீட்டுச் சட்டம் (1948) பர்மியரல்லாதோருக்கு காணிகள் விற்கப்படுவதைத் தடைசெய்தது. ஒரு சில இந்தியர் மட்டுமே பர்மிய குடியுரிமையைப் பெற்றதால், இந்தியர் பெருமளவு காணிகளைக் கொள்வனவு செய்வது இதன்மூலம் தடைசெய்யப்பட்டது. மேலும், பர்மிய அரசியற்றிட்டம் இந்தியரை ஒரு சிறுபான்மை இனமாக ஏற்கவில்லை. அவர்களுக்கென அரசியல் பிரதிநிதித்துவமோ, விசேட பாதுகாப்புக்களோ அரசியற்றிட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படவுமில்லை.
பல்வேறு ஆய்வாளர்களின் கருத்துப்படி, பர்மிய இந்திய சமூகம் ஒரு செயற்றிறனுள்ள தலைமைத்துவத்தையோ, பர்மியர் அல்லது பர்மிய நலன்களோடு ஒத்துழைப்பை ஏற்படுத்தும் ஒரு கொள்கையையோ உருவாக்கத்தவறிற்று அவர்கள் காலனித்துவ ஆட்சியாளரோடு ஒத்துழைப்பது போன்று தோன்றிற்று இந்தியர்களுக்கிடையிலேயே பல பிரச்சினைகளும் காணப்பட்டன. ஆட்சியாளருடன் இணைவதிலும் பார்க்க பர்மியரின் நல்லெண்ணத்தைப் பெறுவதே தமக்கு ஆகக்கூடிய பாதுகாப்பாக இருக்கும் என்பதையும் அவர்கள் உணரவில்லை (Chakravarti, op,cit). பர்மாவில் அவர்களது வீழ்ச்சிக்கும் இதுவே காரணம் என்பது பல்வேறு ஆய்வாளர்களின் கருத்தாகும்.
மலேசியாவில் இந்தியர் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். பல்வேறு சட்டரீதியான கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களது பொருளாதார நிலையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசியற்றிட்டம் அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் அளிக்காத அதேவேளையில், மலாயருக்கு (பூமி புத்திரர்கள்) அது பல்வேறு விஷேட உரிமைகளையும் சலுகைகளையும் உறுதி செய்கின்றது. எந்தவொரு தேர்தற்றொகுதியிலும் இந்தியர் 20 வீதத்திற்கும் மேலாக இல்லாதிருப்பதால், ஒரு அரசியற் சக்தியாக அவர்கள் வலுவற்றோராகவிருக்கின்றனர். ஏதேனுமொரு தேசியக்கட்சியுடன் கூட்டுச்சேருவதன் மூலமே பாராளுமன்றத்தொகுதிகளில் அவர்கள் வெற்றிபெறக் கூடியதாகவுள்ளது. கடந்த காலங்களில் அவர்கள் இதனைத் திறமையாகக் கையாண்டுள்ளனர் (இலங்கையிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இதேகொள்கையையே பின்பற்றி வருவது இங்கு நினைவுகூறத்தக்கதாகும்).
வெளிநாடுகளில் வாழும் இந்தியச் சமூகத்தினர் ஓரினத்தன்மை வாய்ந்தவர்களன்று. மொழி, மதம், பிரதேசம், சாதி போன்ற வேறுபாடுகளினடிப்படையில் நெடுங்காலமாகவே அவர்கள் பிரிபட்டுள்ளனர். உதாரணமாக, மலேசியாவில் பெருந்தோட்டத் தொழிலாளர் ஏனைய இந்தியச் சமூகங்களினின்றும் ஒதுக்கப்பட்டிருப்பதோடு, அவர்களது நலன்களும் தொழிற்றிணைக் களத்தினாலேயே கவனிக்கப்பட்டு வந்தன. இலங்கையிலும் ஏறக்குறைய இதே நிலையே காணப்பட்டதெனலாம். கிழக்காபிரிக்க நாடுகளில் இந்தியச் சமூகம் சாதி, மத, மொழி, அடிப்படைகளில் பிரிந்து வாழுகின்றது. இந்தியன் ஒருவனுக்கு அவன் ஒரு இந்தியன் என்பதிலும் பார்க்க, தான் ஒரு இந்துவா, முஸ்லிமா, இஸ்லாமியிஸ் அல்லது வேறு ஏதேனுமொரு சாதி அல்லது குழுவைச் சேர்ந்தவனா என்பதே முக்கியமாக இருப்பதாக மொறிஸ் என்பவர் கூறுகிறார். (Morris) கிழக்காபிரிக்காவின் மொத்த சனத்தொகையில் இந்தியர் எட்டு வீதமாகவே இருந்த போதும், மதம், மொழி, கலாசார அடிப்படைகளில் பல குழுக்களாக அவர்கள் பிரிந்து வாழ்கின்றனர் (Koudapi of. cit). எனினும், சீக்கியர், குஜராத்தியர் இஸ்லாமியிலிஸ் போன்ற சில குழுவினரிடையே உள்வாரியான ஒருமைப்பாடு காணப்படுகின்றது.
வெளிநாடுகளில் உள்ள இந்திய சமூகத்தவரின் தலைவர்களுக்கிடையேயும் இதேவித பிரிவினைகள் நிலவுகின்றன. இவற்றுட்சில மேலே கூறியவேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டனவாகும். எனவே, வெளிநாடுகளில் உள்ள இந்திய சமூகங்களின் வரலாறு உள்வாரியான முரண்பாடுகளைக் கொண்ட ஒன்றாகும். டிங்கரினது கருத்துப்படி யூதர்கள், சீனர்கள் போன்றோரிடையே காணப்படும் ஒற்றுமை இந்தியரிடையே காணப்படவில்லை (Tinker op. cit). வெளிநாட்டு இந்திய சமூகத்தினரிடையே காணப்படும் பிரதான பலவீனங்களுள் இதுவும் ஒன்றாகும்.
ஒருங்கிணைவும் எதிர்காலமும்
சிறுபான்மையினர், அவர்கள் எந்த இனத்தினை அல்லது குழுவைச் சார்ந்தவர்களாகவிருப்பினும், நெடுங்காலமாகத் தமது தாயகமெனக் கருதி வாழ்ந்து வரும் நாடுகளில் அவர்கள் தொடர்ந்தும் வாழுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு என்பதே சிறுபான்மையினரைப் பொறுத்தவரை சர்வதேச ரீதியாக எற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விதியாகும். அதேவேளையில், அவர்கள் எந்தளவு அதிகாரத்தை அல்லது செல்வாக்கைக் கொண்டிருப்பினும் பெரும்பான்மையினரின் நல்லெண்ணத்துடன் மட்டுமே வாழவும், வளம்பெற முடியும் என்பதை அவ்கள் உணர வேண்டும் (Chakravarti, 1971). எனவே, ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இந்தியர் வாழ்ந்து வரும் நாடுகளில் தொடர்ந்தும் வாழ்வதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு என்பதில் ஐயத்திற்கிடமில்லை. மேலும், பெரும்பாலான நாடுகளில் அவர்களது குடியுரிமைப் பிரச்சினையும், சட்டரீதியாகத் தீர்க்கப்பட்டு விட்டது. அவர்களது சமூக, அரசியல் அந்தஸ்தே இன்றுள்ள முக்கிய பிரச்சினையாகும். நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்குமுண்டு என்பதையும், அவர்கள் பூரணத்துவம் வாய்ந்த பிரஜைகள் என்பதையும் ஏற்க இந்நாடுகள் முன்வரவேண்டும். துரதிஷ்ட வசமாக பல நாடுகளில் இது பிரச்சினைகளுக்குரியதாக இருந்து வருகின்றது.
இந்நிலைமை நீடிப்பதற்கு இந்தியர் மீதே சிலர் குற்றம் சுமத்துகின்றனர். சீனரைப் போன்று இந்தியரும் சமூக ஒருங்கிணைப்பைப் பொறுத்தவரை சிக்கலானவொரு குழுவினராக இருப்பதாகவும், தாம் குடியேறிய நாடுகள் அனைத்திலுமே தம் மீது திணிக்கப்பட்ட பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், அவர்கள் ஏனைய சமூகங்களினின்றும் ஒதுங்கியே வாழ்ந்து வந்துள்ளமை அவர்கள் ஏனைய சமூகங்களுடன் ஒருங்கிணைக்க முடியாத ஒரு குழுவினர் என்பதை நிரூபிப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். தென்னாபிரிக்காவில் இது இந்தியரது இனப்போக்கினை நிரூபிப்பதாக சுதேசிய மக்கள் நம்புகின்றனர் (Moodley,1975). இந்தியரது சமூக கலாசார வாழ்க்கை முறை அவர்களை ஒரு தனிப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக்கியுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு சமூகங்களுக்கும் இந்தியருக்குமிடையே பிரிவினை காணப்படுகிறது. உதாரணமாக, பிஜி தீவில் இந்தியருக்கும் சுதேசி மக்களுக்குமிடையே தொழிற்சங்கங்களிலும், நகர்ப்புற சமூகக் கழகங்களிலும் மன்றங்களிலும் பல்வேறு விதமான இணைப்புக்கள் காணப்பட்டபோதும், மொழி, மத, கலாசார வேறுபாடுகளினால் அவர்களுக்கிடையே சமூக ரீதியான உறவுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன Morton, 1981). இலங்கையிலும், பெரும்பாலான இந்தியர் அதிலுங் குறிப்பாக, தோட்டத் தொழிலாளர் ஏனைய சமூகத்தினரோடு தொடர்பு குறைந்த நிலையில் தோட்டப்புறங்களிலிலேயே தனித்து வாழுகின்றனர். அது விடயத்தில் தோட்டப்புற மக்களை மட்டும் நாம் குறை கூற முடியாது.பெருந்தோட்டங்களில் அவர்கள் புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பதும், பெருந்தோட்ட விவசாயத்தின்சில விஷேட பண்புகளும் இந்த நிலை உருவாகுவதற்கு பெரும்பங்கை அளித்துள்ளன. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் அவர்களது குடியுரிமை பறிக்கப்பட்டமை இதற்கு மேலும் வலுவூட்டியது. எழுபதாம் ஆண்டுகளில் பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டதும், சிறிமா – சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் அமுலாக்கமும் இவ்வித தனிமைப்படுத்தலை உடைப்பதற்கு ஓரளவு உதவின.
அண்மைக்காலம் வரை மலேசிய இந்தியர்கள் தம் தாயகமான இந்தியாவிற்கு விசுவாசமுள்ளவராக இருந்து வந்தனர். ஆனால், இன்று பெரும்பாலானோரிடையே இது மறைந்து விட்டது. ஒரு சில வயோதிபர்களிடையே மாத்திரமே இந்த உணர்வு இன்றும் காணப்படுகின்றது (Arasaratnam, op. cit).
ஆபிரிக்க நாடுகளில் வாழும் பெரும்பாலான இந்தியர்கள் அவற்றையே தமது நிரந்தர தாயகமாகக் கருதுகின்றனர். அதே போன்று, மேற்கிந்தியத் தீவுகளும், பிஜி, மொறிசியஸ் தீவுகளும் இந்தியாவினின்றும் வெகுதொலைவில் இருப்பதால் ஆரம்பம் தொட்டே அவற்றையே தமது நிரந்தர இருப்பிடமாக ஏற்றனர். இலங்கை இதற்கு ஒரு விதிவிலக்கெனலாம். இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையே காணப்படும் புவியியல் நெருக்கமும் இந்நாட்டில் பரம்பரைத் தமிழ்ச் சமூகமொன்று காணப்படுவதும் இந்தியர் தமது தாயகத்துடன் நெருங்கிய தொடர்பு கொள்ளச் செய்கின்றன. அண்iமைக்கால இனக்கலவரங்களினால் இந்தியர் தற்காலிகமாக இந்தியாவிற்குச் சென்று நிலைமை திருந்தியதும் இங்கு திரும்பி வருவதும் சகஜமாகி விட்டது.
இந்தியர் குடியேறிய நாடுகளுக்குள்ளேயும் ஒருங்கிணைப்பிற்கு பாதகமான சில காரணிகள் காணப்படுகின்றன. சில நாடுகளில் இந்தியரது சார்பளவிலான செல்வாக்கு அவர்களுக்கு பாதகமாக இருந்து வந்துள்ளது. பர்மாவினின்றும், இந்தியர் வெளியேற்றப்படுவதற்கும் உகண்டாவில் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதற்கும் இதுவே காரணமாகவிருந்தது. இவ்விரு நாடுகளுமே இந்தியரின் வெளியேற்றத்தினால் அதிகம் நன்மையடைந்ததாக கூறமுடியாது. மாறாக, இந்தியரின் திறமைகளும், அனுபவமும், நிதிவளமும் இந்நாடுகளின் முன்னேற்றத்திற்கு கையாளப்பட்டிருக்கலாம். இந்நாடுகளில் வாழ்ந்த இந்திய சமூகத்தினர் அனைவருமே செல்வமும், செல்வாக்கும் கொண்டிருந்தரென பொதுப்படுத்திக் கூறவும் முடியாது. மொறிசியஸ், பிஜி, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தெழிலாளர் வகுப்பில் இந்தியர் கணிசமான பகுதியினராகவுள்ளனர். அவர்கள் அடைந்துள்ள சமூக, பொருளாதார அந்தஸ்து எந்தவிதத்திலுமே உயர்ந்த ஒன்றல்ல. உதாரணமாக, பர்மாவிற்குக் குடிபெயர்ந்த இந்தியர்களை மூன்று வகையினராகப் பிரிக்கலாம்.
(1). முதலாளித்துவ அல்லது வணிக வகுப்பினர் – சிறிய எண்ணிக்கையான இவர்கள் பெருமளவு முதலீடு செய்யத் தயாராக இருந்தனர்.
(2). கற்றறிந்தோர் – ஆசிரியர்கள், வைத்தியர்கள், சட்டநிபுணர்கள், கணக்காளர் போன்றோரை இது அடக்கும்.
(3). தொழிலாளர்கள்- குடியேறியோரிடையே இவர்களே பெரும்பான்மையினராகவிருந்தனர்.
மேலே குறிப்பிட்ட முதலாவது வகையைச் சார்ந்தோர் போன்று இந்த நாடுகள் அனைத்திலுமே ஒரு சில இந்தியர் தமது அயரா முயற்சியினாலும், வெளிநாடுகளுடன் தமக்குள்ள தொடர்புகள் காரணமாகவும் வர்த்தகத்தினூடாக ஓரளவு செல்வந்தர்களாக மாறினர். இக்குழுவினரே ஏனைய சமூகங்களின் பொறாமைக்குக் காரணமாகவிருந்தனர். இச்சிறு பிரிவினர் தவிர்ந்த ஏனைய இந்தியர்கள் வறுமை நிலையிலிருப்பது மற்றையோரின் கண்களுக்குத் தெரிவதில்லை.
தாம் குடியேறிய நாடுகளில் இந்தியர் அந்நாட்டு சுதேசிய மக்களுக்கிருக்கும் அதே உரிமைகளையும் சலுகைகளையும் கோருவது சிலரால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இதுபற்றிய விவாதங்களில் இந்தியரது நாட்டுப்பற்று, அவர்களது சமூக ரீதியான உறுதித்தன்மை என்பன அடிக்கடி விமர்சிக்கப்படுகின்றன. இதனை நிர்ணயிபபதில் இந்தியர் அந்நாடுகளில் வசித்த காலப்பகுதி முக்கிய காரணியாக கருதப்படுமாயின், அமெரிக்க செவ்விந்தியருக்கும், ஆபிரிக்கா கறுப்பு இன மக்களுக்கும் சொந்தமாக்கப்பட வேண்டும். மறுபக்கத்தில், இந்நாடுகளினது பொருளாதார அபிவிருத்திக்கு இந்தியரது பங்களிப்பு கவனத்திலெடுக்கப்படுமாயின் அவர்கள் சம உரிமைகளுக்கும் சலுகைகளுக்கும் பாத்திரமானவர்கள் என்பதில் ஐயப்பாட்டிற்கு இடமில்லை.
சமூக ஒருங்கிணைப்பு பற்றிய ஆய்விற்கு சிங்கப்பூர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழுகின்றது. மலேசியாவில் அரசியல், சமூக ரீதியாக இனவாதம் ஏற்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு இனத்தவர்கள் இன அடிப்படையில் சிந்திக்கவும் தொடங்கிவிட்டனர். ஆனால், சிங்கப்பூரில் கல்விக்கொள்கையும் அரசியற் படிமுறை வளர்ச்சியும் இன உணர்வுகளை மழுங்கச் செய்துள்ளன. தேசிய இயக்கம் அங்கு இன அடிப்படயில் அமையவில்லை. பிரதான அரசியற்கட்சிகள் பல்லினத்தன்மை கொண்டனவாக உள்ளன. இதன் காரணமாக, இந்தியர் சமூக ரீதியாக இல்லாவிடினும், அரசியல் பொருளாதார ரீதியாக ஏனைய சமூகங்களுடன் ஒருங்கிணையக்கூடியதாக உள்ளது (Arasaratnam,op.cit). இலங்கை, மலேசியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் அரசியலில் இனவாதம் காணப்படுவதால் இவ்வித ஒருங்கிணைப்பு சாத்தியமாகவில்லை. மொறிசியஸில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளோ, சச்சரவுகளோ மிகவும்குறைவாகும். பிஜி தீவிலும் அதிக முரண்பாடுகளின்றி இந்தியர் வாழக்கூடியதாக இருந்தது. எனினும், இலங்கையிலும் மலேசியாவிலும் போன்றே பிஜி தீவிலும் அதிக முரண்பாடுகளின்றி இந்தியர் வாழக்கூடியதாக இருந்தது. எனினும், இலங்கையிலும் மலேசியாவிலும் போன்றே பிஜி தீவிலும் பிஜிய அரசியற் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிணக்குகளும் போட்டியும் அங்கு இனவாதத்தை தூண்டியுள்ளன (Morton,op.cit). உதாரணமாக, 1977 இல் இந்தியரைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்திய தேசிய சமஷ்டிக் கட்சி, பிஜியரை பெரும்பான்மையாகக் கொண்ட கூட்டாட்சிக் கட்சியை, பிஜியக் கட்சிகளுக்கிடையே காணப்பட்ட போட்டி காரணமாக, சிறியதொரு வித்தியாசத்தில் தோற்கடித்ததுடன் புதிய அரசாங்கத்தையும் அமைத்தது. ஆனால், பிரதமருக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் காரணமாக, அரசாங்கம் தோல்வியடைந்து புதிய தேர்தல் நடைபெற்றது. இதில் பிஜியக் கூட்டாட்சிக் கட்சி வெற்றியீட்டிய சந்தர்ப்பத்தில் இங்கு இனக்கலவரம் வெடித்தது.
இந்தியர்கள் வாழும் வெளிநாடுகளில் இன்று காணப்படும் முக்கிய பிரச்சினை இந்நாடுகளின் சமூக, கலாசார அமைப்புகளுக்குள் இந்தியரை ஒருங்கிணையச் செய்வதேயாகும். இந்தியர் தமது கலாசாரங்களொடு ஒன்றிணைய வேண்டுமென உள்ளூர் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இந்தியரோ தமது கலாசார தனித்துவத்தை தொடர்ந்தும் பேணுவதற்கு முயலுகின்றனர் தேசிய ஒருங்கிணைப்பிற்கு இவ்வித பிரச்சினைகள் காணப்படும் சூழ்நிலைகளில் பொதுவாக மூன்று விதமான தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. பூரணமான ஒருங்கிணைவு (Integraton) கலாசார பன்மைத்தன்மை (Cultural pluraton) ஒன்றுடனொன்று சங்கமமாகுதல் (Melting Pot) என்பனவே இம்மூன்றுமாகும். இவற்றில் மூன்றாவது பல்வேறு சமூகங்கள் ஒன்றோடொன்று சங்கமமாகுவதன் மூலம்புதியதொரு கலாசாரம் உருவாகுவதைக்குறிக்கும். இது அவ்வாறு சங்கமமாகும் கலாசாரங்களினது பல்வேறு அம்சங்களைத் தன்னகத்தே கொண்டதாகவும், அதே வேளையில் எந்தவொரு தனிப்பட்ட கலாசாரத்தையும் சாராததாகவும் இருக்கும். இந்நாடுகளைப் பொறுத்தவரை பல்வேறு சமூகங்களின் பூரணமான இணைவே சிறந்த தீர்வாக இருந்த பொழுதும், தமது மொழி, மதம் என்பவற்றுடன் இறுகப்பிணைக்கப்பட்டுள்ள இந்தியர் இதனை ஏற்பதில்லை இந்தியர் குடியேறியுள்ள நாடுகளில் மூன்றாவது வகைத் தீர்வு சாத்தியமானதன்று. எனவே, ஒவ்வொரு சமூகமும் தனது தனிப்பட்ட இன அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய கலாசார பன்மைத் தன்மையே சாத்தியமானதும் ஏற்கக் கூடியதுமான தீர்வாகும்.
சமூக ஒருங்கிணைவு பற்றி ஆராய்ந்த சிலர் பல்லினத்தன்மை வாய்ந்த சமூகங்களுக்கும் பன்மைத்தன்மை வாய்ந்த (he terogeneons) சமூகங்களுக்குமிடையே வேறுபாடு காட்டுகின்றனர். பல்வேறு கலாசாரங்களுக்கிடையிலான ஒருங்கிணைவானது உள்ளுர் மட்டங்களிலா, தேசிய மட்டத்தலா ஏற்படுகின்றது. என்பதே இவற்றுக்கிடையிலான முக்கிய வேறுபாடாகும். பல்லினத் தன்மை வாய்ந்த சமூகங்களில் சமூகங்களுக்கிடையிலான ஒருங்கிணைவு பாடசாலை , வணக்கத் தளங்கள் போன்ற உள்ளூர் தாபனங்களின் மட்டத்திலேற்படும். எனவே தேசிய மட்டத்தில் அரசியல் தாபனங்களில் ஒவ்வொரு இனத்திற்கும் தனிப்பட்ட பிரதிநிதித்துவத்தை இது தேவையற்றதாக்கும். இதன்படி பன்மைச் சமூகங்கள் ஒருங்கிணைவதறகு முன்னர் பல்லினச் சமூகங்களாக தம்மை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இம்மாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்தலாமென்பது ஆய்விற்குரிய ஒரு விடயமாகும்.
சமூக ஒருங்கிணைவிற்கு சிங்கப்பூர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் என்பது ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. பல்வேறு சமூகங்கள் அங்கு அரசியல் – பொருளாதார அமைப்புக்களில் ஒருங்கிணைந்துசெயற்படுவதோடு, பிரதான அரசியற் கட்சிகள் பல்லினத்தன்மை கொண்டனவாகவிருக்கின்றன. இன ரீதியான உணர்வுகளும் இன ரீதியான பதட்ட நிலைகளும் இங்கு மிக மிகக் குறைவாகும்.கடந்த சுமார் மூன்று அல்லது நான்கு தசாப்தங்களில் இந்நாடு அடைந்துள்ள குறிப்பிடத்தக்க அபிவருத்தி இனங்களுக்கிடையிலான சமரச வாழ்வின் ஒரு பிரதிபலிப்பே எனக் கூறின் அது மிகையாகாது. எனினும், இந்தியர் குடியேறியுள்ள ஏனையநாடுகளிலுள்ள சமூகங்கள் சிங்கப்பூரோடு ஒப்பீட்டு ரீதியில் நீண்ட வரலாற்றையும் கலாசாரத்தையும் கொண்டனவாகவிருக்க, சிங்கப்பூரில் எல்லாச்சமூகங்களுமே வந்தேறு குடிகளாகவிருப்பதால், இங்கு இன ரீதியான பிரச்சினைகள் குறைவாகவிருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். இக்கூற்றில் ஓரளவு உண்மை இருந்தாலுங்கூட, சிங்கப்பூரினது அனுபவத்தினின்றும் ஏனைய நாடுகள் கற்றுக்கொள்ளக்கூடிய படிப்பினைகள் பல உள்ளன என்பதை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
சுமார் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் அயனவலய நாடுகளிலும், உப அயனவலய நாடுகளிலும் பிரித்தானிய தொழில், வர்த்தகம் என்பவற்றின் கேள்வியைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்திய குடிப்பெயர்வுகள் அதிலுங்குறிப்பாக தொழிலாளர் வகுப்பினரின் குடிப்பெயர்வுகள் இடம்பெற்றன. இவ்வாறு குடிப்பெயர்ந்தோர் வெளிநாடுகளிலே அனுபவித்து வரும் பிரச்சினைகள் பலவற்றிற்கு பெருந்தோட்ட விவசாயத்தில் பிரித்தானியர் கையாண்ட முதலாளித்துவ முறைகளும் தொழிலாளர் தொடர்பாக அவர்கள் பின்பற்றிய கொள்கைகளுமே காரணமெனலாம். பெருந்தோட்ட விவசாயத்திற்கு மலிவானதும், அடங்கி நடப்பதுமான ஊழியமே தேவையானதாகவிருந்தது. பிரித்தானியக் காலனித்துவ கொள்கைகளினால் மந்தநிலை அடைந்திருந்த அல்லது வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட பிரதேசங்களிலிருந்து வினைதிறனற்ற பெருமளவு தொழிலாளரை இறக்குமதி செய்வதன் மூலம் தொழிலாளர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணப்பட்டது.
இவ்வாறு குடிபெயர்ந்து சென்றோரின் சமூக பொருளாதார நிலை இந்தியக் கிராமங்களில் காணப்பட்ட நிலைமைகளிலும பார்க்க அதிகம் வேறுபட்டதாக இருக்கவில்லை. நசுக்கப்பட்டதும், மனிதாபிமானமற்றதுமான சூழ்நிலைகளில் இவர்கள் வாழ நேர்ந்ததோடு, பல்வேறு வித சுரண்டல்களுக்கும் உட்படுத்தப்பட்டனர். தாய் நாட்டில் வறுமையின் பிடிக்குட்பட்டிருந்த அவர்கள், தாம் குடியேறிய நாடுகளில் முதலாளித்துவ சக்திகளின் பிடிக்குட்பட்டனர். அவர்களது கல்வி புறக்கணிக்கப்பட்டது. தமது பாடசாலைகளைத் தாமே உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவல நிலைக்கோ, ஏனையோரிலும் பார்க்க தமது கல்விக்குக் கூடிய கட்டணங்களைச் செலுத்தவேண்டிய கட்டாயத்திற்கோ தள்ளப்பட்டனர். உதாரணமாக, பிஜி தீவுகளில் இந்தியர் தாமாகவே பாடசாலைகளை அமைக்கவேண்டியிருந்ததோடு, ஆசிரியர்களையும் பராமரிக்க வேண்டியிருந்தது. பிஜியருக்கு மட்டுமே அரசாங்கப் பாடசாலைகள் இருந்தன. இன்று இந்நாடுகளில் அவர்களது கல்விநிலை மிக மோசமாக உள்ளமைக்கு இதுவே ஆரம்ப காரணமாகும். கல்வியறிவின்மை அவர்களது சமூக மேம்பாட்டிற்கும் முன்னேற்றத்திற்கும் இன்று மிகப் பெரும் தடைக்கல்லாக உள்ளது.
வர்த்தகம், அரசாங்க நிர்வாகத்துறை, நிபுணத்துவ தொழில்கள் என்பவற்றில் முன்னேறி மத்திய வகுப்பு அந்தஸ்தையடைந்த ஒரு சிறிய அளவான இந்தியர் சுதேசிய மக்களின் பொறாமைக்கு இலக்காயினர், அதேவேளையில், துறைமுகங்களிலும், பெருந்தோட்டங்களிலும் வேறு தொழில்களிலும் வியர்வை சிந்தி உழைத்து இந்நாடுகளின் செல்வத்தைப் பெருக்கிய பெரும்பான்மை இந்தியர்கள் ஏனைய சமூகங்களினால் ஒன்றில் மறைக்கப்பட்டனர் அல்லது வெறுக்கப்பட்டனர். இந்தியர்களைத் தம்மைச் சுரண்ட வந்த இடைத் தரகர்களாகவும், ஊடுருவற்காரர்களாகவும் அவர்கள் கருதினர். பிரித்தானிய ஆட்சியாளரால் இந்தியர்கள் ஈவிரக்கமின்றி சுரண்டப்பட்டமை ஆபிரிக்கரினதும், பர்மியரினதும், மலாயரினதும் ஏன் இலங்கையினரது கவனத்தையுங்கூட ஈர்க்கத் தவறியது.
இந்தியர்கள் தாம் வாழும் நாடுகளில் சட்டபூர்வமான ஒரு சமூக அரசியற் குழுவாக ஏற்கப்பட வேண்டுமென விரும்புகின்றனர். ஆனால், அந்நாடுகளிற் காணப்படும் சில விசேட நிலைமைகளினால் (தென்னாபிரிக்காவில் இன ஒதுக்கலும் கிழக்காபிரிக்க நாடுகளில் ஆபிரிக்கர் மயமாக்கலும் ஆசிய நாடுகளில் தேசிய வாதத்தின் எழுச்சியும் காரணமாக) பல்வேறு பாகுபாடுகளுக்கும் புறக்கணிப்புகளுக்கும் அவர்கள் உட்படுத்தப்பட்டனர். சில நாடுகளில் அவை சுதந்திரமடைந்த பின்னர் குடியுரிமைப் பிரச்சினையையும் அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருந்தது. பல சிரமங்களுக்கும் மத்தியில் குடியுரிமையைப் பெற்றோர் அது தமக்கு நாட்டினது அரசியலிலும் பொருளாதாரத்திலும் நியாயமான பங்கினை வழங்கத்தவறியமையை உணர்ந்தனர். அதே வேளையில் நாடற்றோர் பல்வேறுபட்ட சட்டரீதியான கட்டுப்பாடுகளினாலும், நிர்வாக நடவடிக்கைகளினாலும் பாதிப்பிற்குள்ளாக நேரிட்டது.
சீனரைப் போன்றே இந்தியரும் தாம் வாழும் சமூகங்களில் ஒருங்கிணைய முடியாத நிலையிலுள்ளர் என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சென்றவிடங்களிலெல்லாம் அவர்கள் ஏனைய சமூகங்களினின்றும் ஒதுங்கியே வாழ்ந்துள்ளனர். எனவே இந்தியர்கள் தேவைக்குமதிகமாகவே இந்தியர்களாகவிருப்பதும், ஒதுங்கி வாழுவதாகவும் குறை கூறப்படுகின்றது. அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியர்களிடையே மனமாற்றம் ஏற்படவேண்டுமென்றும், தாம் வாழும் நாடுகளின் சமூகங்களுடன் சேர்ந்து வாழ்வதா, அல்லது தொடர்ந்தும் புதியவர்களாகவே அந்நாடுகளில் வாழ்வதா என்பதை அவர்களே நிர்ணயிக்க வேண்டுமென்றும் கூறப்படுகின்றது. இந்தியர்களது தெரிவில் இது முன்னையதாக இருக்குமாயின், அவர்கள் உள்நாட்டு மக்களது தேசிய அபிலாசைகளுடனும், அவர்கள் தமது நாட்டில் கட்டியெழுப்ப விரும்பும் சமுதாயத்துடனும் தம்மை இனங்கண்டு கொள்ள வேண்டும். அதே போன்று, உள்ளுர் வாசிகளும் அவர்களை ஏற்று, அவர்களுடன் சகவாழ்வு வாழ முன்வர வேண்டும். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதுவே சிறந்த வழியாகும்.
தொடரும்.
குறிப்பு : பேராசிரியர் மு.சின்னத்தம்பியின் கட்டுரைகள் கலாநிதி. ரமேஷ் இராமசாமி தொகுக்கப்பட்டு, நூலுருவக்கமாக வெளிவரவுள்ளது.