பண்டைய இலங்கையில் போரும் நல்லிணக்கமும்!
Arts
8 நிமிட வாசிப்பு

பண்டைய இலங்கையில் போரும் நல்லிணக்கமும்!

July 26, 2022 | Ezhuna

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்குவதாகவே இலங்கையின் ‘இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடர் அமைகிறது. இதன்படி, 1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  இன வன்முறை தாக்குதல்களையும், அவற்றின் பின்னணியையும் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்  நேரடி அனுபவங்கள் ஊடாகவும், நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தத் தொடர் ஆராய்கின்றது. இரு பகுதிகளாக அமையவுள்ள இந்தத் தொடரின் முதல் பகுதி, இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் இரண்டாம் பகுதி இலங்கையின் அரசியல் நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் இனவாத அரசியலின் பாத்திரம் பற்றியும் ஆராய்கிறது.

கடந்த காலங்களில் ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர, நீண்ட காலமாக பல்வேறு கலாசார பின்புலம்கொண்ட, மக்கள்  அமைதியாக  சகவாழ்வு நடத்தும்   ஒரு முன்மாதிரியான நாடாக இலங்கை இருந்து வந்திருக்கிறது. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான உறவுகள் ஒரு சில பக்கச்சார்பான  வரலாற்றாசிரியர்கள்  சித்திரிப்பதைப்போல  எப்போதும் அல்லது தொடர்ச்சியாக பகை முரண்பாடானதாக இருக்கவில்லை.


பண்டைக் காலங்களில் அவ்வப்போது  இடம்பெற்ற தென்னிந்தியப் படையெடுப்புகளை உள்நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்மீது தொடுத்த யுத்தங்களாக சில பேரினவாத சித்தாந்தவாதிகள் சித்திரிக்கின்றனர். அத்தகைய யுத்தங்கள் நிலப்பிரபுத்துவ மன்னராட்சி காலத்துக்கே உரிய லட்சணமாகும். இத்தகைய யுத்தங்கள் உலகம் பூராவும் நடைப்பெற்றுள்ளன. உதாரணத்துக்கு சொல்வதானால் ரோஜாக்களின் யுத்தத்தைக்  கூறலாம்.  இன்றைய   ஐக்கிய இராச்சியமானது   முன்னர் நிலப்பிரபுத்துவ சிறு இராஜதானிகளாக பிளவுண்டு தமக்குள் யுத்தம் புரிந்துகொண்டிருந்த பிரதேசங்களை இணைத்து முதலாளித்துவ காலத்தில் உருவான நாடாகும்.

இங்கு 15ஆம் நூற்றாண்டில்  லங்காஸ்டர் (Lankaster) பிரதேசத்துக்கும்  யோர்க் (York) பிரதேசத்துக்கும்  இடையில் நூறு  வருடங்களுக்கு மேலாக சமர்  நடைபெற்றுவந்தது.  இதன் உச்சகட்டமாக 1455 முதல் 1485 வரையிலான முப்பதாண்டுகள் இரு அரச வம்சங்களுக்கிடையில் யுத்தம் நடைபெற்றது. இவர்கள் மொழியால் அல்லது கலாசாரத்தால் அதிகம் வேறுபட்டிருக்கவில்லை. இது அயல்பிரதேசங்களுக்கிடையில் அரசவம்ச மேலாதிக்கத்திற்காக நடைப்பெற்ற யுத்தமாகும். இந்த இரு அணிகளாலும் மொழியின் அடிப்படையிலோ மதத்தின் அடிப்படையிலோ மக்களை போருக்கு அணிதிரட்ட முடியவில்லை. எனவே யோர்க் அணியினர் வெள்ளை ரோஜாவை தமது சின்னமாகவும் லங்காஸ்டர் அணியினர் சிவப்பு ரோஜாவை தமது சின்னமாகவும் வைத்து மக்களை அணிதிரட்டினர். ஆகவே இது வரலாற்றில் ரோஜாக்களின் யுத்தம் (War of the Roses) எனக்குறிப்பிடப்படுகிறது.

தென் இந்தியாவில் நடைபெற்ற சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கிடையிலான யுத்தங்களும் சரி, அரேபிய உமையாத் படையை (Umayyad force)  பிராங்கிஷ் இராணுவம் (Frankish army) கி.பி. 732ல் தோற்கடித்ததும் சரி, மத்திய காலத்தில் பலம்பெற்று திகழ்ந்த மங்கோலிய இராணுவத்தின் வலிமைமிக்க படைகள்  13 ஆம் நூற்றாண்டில் ஹங்கேரி நாட்டின் மீது வெற்றிகரமாக நடத்திய மிகப்பெரிய ‘மோஹி’ (Mohi) (சஜோ  நதிப்  போர் என்றும் அழைக்கப்படுகிறது)   போரும் சரி, பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்குமிடையே மத்தியகாலத்தில் நடைபெற்ற நூறாண்டு யுத்தமும் சரி அனைத்துமே நிலக்கொள்ளைக்காக நடைபெற்ற நிலப்பிரபுத்துவ கால யுத்தங்களே.

கடந்த காலவரலாற்றை திரிபுபடுத்தாமல் அப்படியே விளக்கும் போதும் கூட சில வரலாற்று கொடுமைகளை மறக்கத்தான் வேண்டி இருக்கிறது. கடந்த காலங்களில் முன்னோர் செய்த அட்டூழியங்களுக்காக இன்றைய தலைமுறையை தண்டிப்பது நியாயமாகிவிட்டால் அமெரிக்கா கண்டமே வெறிச்சோடிவிடும். ஏனெனில் அங்குமுன்னர் வாழ்ந்த ஆதிக்குடிகளை அழித்தொழித்துவிட்டு அவர்களது பிணக்குவியல்மீது உருவாக்கப்பட்ட வெள்ளை நாகரிகம் தான் இன்றைய அமெரிக்காவாகும்.


அவ்வப்போது வெளிநாட்டு படையெடுப்பால் பாதிக்கப்பட்டாலும் கூட இலங்கை  அத்தகைய பாரிய யுத்த அழிவுக்கு உள்ளாக்கவில்லை என்பதே உண்மை. அது மாத்திரமல்ல வியக்கத்தக்க விதத்தில் இன  நல்லுறவு நீண்டகாலம் இலங்கையில் நிலவிவந்தது. அதற்கான சில  ஆதாரங்கள் இதோ: 14 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலிருந்து கம்பளை இராச்சியத்திற்கு குடிபெயர்ந்த வணிகர்களின் குடும்பமான  அழகக்கோணரின் முக்கிய பங்கு நன்கு அறியப்பட்டதாகும். இவர் சிங்களமயப்பட்ட ஒரு இந்து. கம்பளை மன்னரின் வீரமும் விவேகமும் மிக்க தளபதியாக இவர்  இருந்தார்.  நிஸ்ஸங்க அழகக்கோணர்  என்றபெயரில் இவரால் தான் ஜயவர்தனபுர (கோட்டே) கோட்டை  உருவாக்கப்பட்டது.


ஆறாம் பராக்கிரமபாகு புத்திசாலித்தனத்திற்கும் திறமைக்கும் பெயர் பெற்றவர். 1414 இல் தனது 55 ஆண்டுகால ஆட்சியைத் தொடங்கி, கோட்டே வம்சத்தையும் இராச்சியத்தையும் இவர் நிறுவினார். அங்கு இந்து மதத்துக்கு பெருமளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவரது ஆட்சியின் போது, பத்தினி தெய்வம்  ஆரோக்கியம் மற்றும் கருவுறுதல் தெய்வமாக போற்றப்பட்டு, பத்தினி  வழிபாடு முக்கிய இடத்தை வகித்தது.  இன்றும் கூட  பெளத்த மதத்தில் பத்தினி வழிபாடு முக்கிய பங்கைக் கொண்டுள்ளமைக்கு இதுவே காரணம்.

2ஆம் இராஜசிங்கன்

15 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றி, பின்னர் ஆறாம் பராக்கிரமபாகுவின் மரணத்திற்குப் பிறகு ஆறாம் புவனேகபாகு மன்னன் என்ற பட்டத்துடன் கோட்டையின் ஆட்சியைக் கைப்பற்றிய  சபுமல் குமாரையா ஒரு தமிழ் இந்து. போர்த்துக்கேயர் இலங்கையை ஆக்கிரமித்த போது முதன் முதலில் போர் தொடுத்தவர்கள் முஸ்லிம் வர்த்தகர்களே. கண்டி இரண்டாம் இராஜசிங்க மன்னன் போர்த்துக்கேயர்களுடன்  போரிட்டு தோல்வியுற்றவேளை  அவன்  தப்பி ஓடியவழியில்  பங்கரகம்மன் என்ற  (Pangaragamman) கிராமத்தில் ஒரு பெரிய மரத்தில் ஒளிந்து கொண்டான். போர்த்துக்கேய படை  அவனைத் தேடி வந்தது.  அவர் எங்கே மறைந்திருக்கிறார் என்பதைத் தெரிந்த ஒரு முஸ்லிம் பெண்ணிடம் அவனது மறைவிடத்தை காட்டுமாறு வற்புறுத்தினர். அந்தப் பெண் ரகசியத்தை வெளியிட மறுக்கவே அவளை போர்த்துக்கேய படையினர் கண்டம் துண்டமாக வெட்டி எறிந்தனர்.


தனது பரிவாரத்தோடு பயணம் செய்த  மன்னன் நரேந்திரசிங்கன் வழியில் செல்லங்கேந்தல் (Sellankendal) என்ற கிராமத்தில் சிறிது நேரம் தங்கினான். முஸ்லிம்கள் அவனை  அன்புடன் வரவேற்று வசதியாக தங்குவதை உறுதி செய்தனர். அதன்போது  தன்னை மன்னனாக பாசாங்கு செய்துகொண்ட ஒருவன்  ராஜாவை கொல்வதற்கு படையோடு வருவதாக செய்தி வந்தது. உடனே  செல்லங்கேந்தல் கிராமவாசிகள்   படையெடுப்பாளர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி மன்னனை பாதுகாக்க தம் உயிரை நீத்தனர்.  நன்றியுணர்வின் அடையாளமாக அம்மன்னன்  அக்கிராமத்திற்கு தனது தனிப்பட்ட கொடியையும்  அவனுக்கு சொந்தமான பல மதிப்புமிக்க சின்னங்களையும்   பொருட்களையும்  சன்மானமாக வழங்கினான்.

  ஸ்ரீ விக்கிரமராஜ சிங்கன்


இலங்கையின் கடைசி மன்னனான நாயக்க வம்சத்தை சேர்ந்த  ஸ்ரீ விக்கிரமராஜ சிங்க ஒரு தமிழ்  தெலுங்கன். இவனது இயற்பெயர் கண்ணுசாமி. அவனது அரசவை  மொழியாக  தமிழே இருந்தது. 1815 இல் கண்டி இராச்சியத்தை  பிரித்தானியர் வஞ்சனையால் கைப்பற்றிய பின்னர்   ஆங்கிலேயருடன் கண்டிய பிரதானிகள் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில கண்டிய பிரதானிகள்  நாயக்கர் மன்னர்களின் அரசவை மொழியான தமிழில் கையெழுத்திட்டனர். அதுமாத்திரமல்ல இலங்கையின் கடைசி இராச்சியமான கண்டியை  இறுதியாக 1739 முதல்  1815 வரை   ஆட்சிசெய்த நாயக்க வம்ச மன்னர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி எதுவும் வெடிக்கவில்லை. சிங்கள பெளத்த  மக்களின் நன்மதிப்பை இவர்கள் எந்தளவுக்கு பெற்றிருந்தனர் என்பதனை அடுத்த சம்பவம் விளக்குகிறது.

1818 ஆம் ஆண்டு கெப்பெட்டிபொல தலைமையில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெடித்த புகழ்பெற்ற வெல்லஸ்ஸ எழுச்சியின் போது, கிளர்ச்சியாளர்கள் கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னனான ஸ்ரீ விக்ரமராஜசிங்கவின் உறவினன் துரைசாமி தானே என பாசாங்கு செய்து கொண்ட  வில்பவ  என்ற  பெளத்த  துறவியைச் சுற்றியே  திரண்டனர். அவர்களின் நோக்கம் மீண்டும் நாயக்க வம்ச ஆட்சியை உருவாக்குவதாகவே இருந்தது.


இனி பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் நவீன இலங்கையிலே  நடைபெற்ற மூன்று  சம்பவங்களைப் பார்க்கலாம்:

1911 இல் தான் இலங்கையில் முதன்முதலாக ஒரு பிரநிதித்துவ தேர்தல் நடைபெற்றது. “படித்த இலங்கையர்களுக்காக” புதிதாக உருவாக்கப்பட்ட ஆசனத்திற்காக தமிழரான பொன்னம்பலம் இராமநாதனும்  (பின்னர் சேர்) பிரபல சிங்கள மருத்துவருமான எச். மார்க்கோஸ் பெர்னாண்டோவும் (பின்னர் சேர்) போட்டியிட்டனர். அதில் மார்க்கோஸ் பெர்னாண்டோவுக்கு 981 வாக்குகள் மாத்திரமே விழுந்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட பொன்னம்பலம் இராமநாதன் 1645 வாக்குகள் பெற்று அமோக  வெற்றி பெற்றார். பெரும்பாலான சிங்கள வாக்காளர்களும் இவருக்கே வாக்களித்தனர். புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம்  அறிமுகப்படுத்தப்பட்ட  1920 ஆம் ஆண்டு வரை அவர் இந்த பதவியை வகித்தார்.

சிங்கள தலைவர்கள் இராமநாதனை பல்லக்கில் ஏற்றிசெல்லல்

1915 இல், முஸ்லிம்களுக்கு எதிரான இன கலவரத்தின் பின்னர் முன்னணி சிங்களத் தலைவர்களான எப். ஆர். சேனநாயக்க, டி.எஸ்.சேனநாயக்க, டி. பி. ஜெயதிலக்க போன்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது இந்த தமிழ் தலைவர்  பொன்னம்பலம் இராமநாதன் – முதலாவது  உலகப் போரின் போது கடல்கன்னி வெடி ஆபத்தையும் பொருட்படுத்தாமல் – தனிப்பட்ட முறையில் இங்கிலாந்துக்குச் சென்று தனது வாதத்தை முன்வைத்து அவர்களை விடுதலை செய்தார். அவர் தமது விடுதலையை வென்று நாடு  திரும்பியபோது  சிங்களத் தலைவர்கள் அவரைப் பல்லக்கில் ஏற்றி முகத்துவாரத்திலிருந்து கொழும்பில் வார்ட் பிளேஸில் இருந்த  “சுகஸ்தான்” என்ற அவரது இல்லத்துக்கு தோளில் சுமந்து சென்று தங்கள் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தினர்.


இலங்கையின் முதலாவது  அரசியல் ஸ்தாபனமான இலங்கை தேசிய காங்கிரஸ்  1919 இல் உருவானபோது அதன் ஸ்தாபகத் தலைவராக  சேர். பொன்னம்பலம் அருணாசலம் – ஒரு தமிழரே தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த நிலைமை ஏன் மாறியது? அதற்கான காரணிகளை அடுத்தடுத்த தொடர்களில் பார்ப்போம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

பி. ஏ. காதர்

பி. ஏ. காதர் அவர்கள் நுவரெலியா ராகலையைச் சேர்ந்த எழுத்தாளர். அத்துடன் ஆய்வாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

பாவா அப்துல் காதர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவையாக ‘சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்’, ‘சுயம் நிர்ணயம் உரிமை’ மற்றும் ‘மேதின வரலாறும் படிப்பினைகளும்’ போன்ற நூல்கள் அமைகின்றன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்