மறைந்திருக்கும் சக்தி
Arts
10 நிமிட வாசிப்பு

மறைந்திருக்கும் சக்தி

May 27, 2022 | Ezhuna

‘யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்’ என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.

மொழிபெயர்ப்புக் கட்டுரை : கென்னத் டேவிட்

யாழ்ப்பாணத்தில் பெண்களைப் பற்றிய பண்பாடு, சமூகம், பொருளாதாரம் என்பனவற்றின் நோக்கிலான ஒரு விபரிப்பு

யாழ்ப்பாணத்துப் பெண்களின் சமூகநிலை அவர்களைப் பற்றிய பண்பாட்டு வெளிப்படுத்தல்கள் என்ற இரு பிரச்சினைகளே இக்கட்டுரையின் பிரதான விடயப் பொருளாகும். இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியின் தமிழ்ப் பெண்கள் வெவ்வேறு பருவங்களில் எதிர்கொள்ளும் வாழ்வு, அவற்றோடு தொடர்புடைய சடங்குகள் என்பன கட்டுரையின் முற்பகுதியில் விபரிக்கப்பட்டுள்ளன. இவ்வாழ்க்கை வட்டத்தூடே பயணிக்கும் பெண்கள் வெவ்வேறுபட்ட அளவில் குடும்பத்தின் ஆண்களுக்கு அடங்கிப் போகின்றனர். அவர்களது வாழ்க்கை வட்டச் சடங்குகளில் இருவகைக் குறியீடுகளாக அவர்களின் அடங்கிப் போதல் அல்லது அடிமைநிலை வெளிப்படுகிறது. கட்டுதல் (binding) மழித்தல் (Shaving) என்பனவே இவ்விரு குறியீடுகளாகும். இவ்விரட்டைக் குறியீடுகளில் ஒன்று அடிமைத்தனத்தையும் மற்றது துறவையும் குறிப்பன. வெளித்தோற்றத்தில் பெண்ணை இவை கட்டுப்படுத்தி வைப்பனவாயினும் அவள் தனக்குள்ளே சக்திமிக்கவளாக இருக்கிறாள். 

கட்டுரையின் இரண்டாம் பகுதியில் சமூக- பொருளாதார விடயங்களை ஆராயவுள்ளேன். பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கிய வெளித் தோற்றம் ஒன்றைப் பெண்கள் கொண்டுள்ளராயினும் யதார்த்த வாழ்க்கையில் அவர்கள் பலமுடையவர்களாய் இருக்கின்றனர். சொத்துக்களைக் கட்டுப்படுத்துபவர்களாயும் உற்பத்தியிலும் ஏனைய விடயங்களிலும் முக்கிய முடிவை எடுப்பவர்களாகவும் அவர்கள் உள்ளனர். 

கட்டுரையின் மூன்றாம் பகுதியில் ஒரு பொதுவான கோட்பாட்டுப் பிரச்சினையின் பின்னணியில் வைத்து முதலிரு பகுதிகளிலும் எழுப்பிய வினாக்களை பரிசீலிக்கவுள்ளேன். பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகப் பிரிவான ஒரு குழுவை (பெண்கள் பற்றி) ஆராயும் போது எதிர்நோக்கும் இடர்ப்பாடுகள் எவை? இறுதியாக எனது குறியீட்டு விபரிப்பை சமூக பொருளாதார விபரிப்புடன் இணைத்துக்காட்டியுள்ளேன். கட்டுதல், மழித்தல் என்ற இரண்டும் குறியீட்டு நடவடிக்கைகள் ஆகும். இவ்விரு சொற்களும் நடவடிக்கைகள் இரண்டை விபரிக்கும் சொற்களாகும். இவற்றை நான் தொடர்புபடுத்திக் காட்டுகின்றேன். இந்தத்தொடர்புபடுத்தலே ஒரு கோட்பாட்டு விளக்கமாக ஆகிறது.

யாழ்ப்பாணத்துக் பெண்களின் வாழ்க்கைக் கட்டங்களில் குறியீடுகள்

யாழ்ப்பாணத்துப் பெண்கள் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களை அடையும் போது அவர்களின் தோற்றத்தில் வெளிப்படும் வேறுபட்ட குறியீடுகள் பற்றி இப்பகுதியில் குறிப்பிடுவேன். பால்நிலை வகிபாகம் (Gender Roles) பற்றிய பகுப்பாய்வு செய்வோர் பொதுவாகப் பெண்களின் நிலையில் எவ்வித மாற்றமும் இருப்பதில்லை என்றே கூறுவதுண்டு. இவ்வாய்வுகள் வளர்ந்தவளும், விவாகமானவளுமான ஒரு பெண்ணை எடுத்துக் கொண்டு, வளர்ந்த, விவாகமான ஒரு ஆணின் அடையாளத்துடன் ஒப்பிட்டுப் பகுப்பாய்வதாக இருப்பதுண்டு. இப்படியாக பெண்ணின் வாழ்வின் ஒரு கட்டம் அவளது வாழ்வு முழுமைக்குமான ஒன்றாகக் கொள்ளும் போது, பெண்ணின் அடிமைத்தனம், அவள் ஆண்களால் ஆதிக்கம் செய்யப்படுவது என்ற விடயத்திற்குக் கூடிய அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறான சித்திரத்திற்கு மாறாகப் பெண் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களை அடையும்போது அவளின் அடிமைத்தனத்தின் இயல்பு வேறுபடுகிறது. அவள் செலுத்தக் கூடிய செல்வாக்கின் அளவும் வேறுபடுகிறது என்பதை நான் எடுத்துக்காட்டவுள்ளேன்.

வெளிஉலகுக்கு ஆணின் மேலாதிக்கமாகவும், மறைமுகமாக தனிப்பட்ட வாழ்வில் பெண்ணின் சக்தியை ஏற்பதாகவும் இது உள்ளதையும் எடுத்துக் கூறுவேன். உண்மையில் இதுவோர் முரண்நிலை ஆகும். இரண்டு குறியீடுகளான கட்டுதல், மழித்தல் என்பன முறையே பெண்ணின் அடிமைத்தனத்தையும் அவளின் துறவு நிலையையும் எடுத்துக் காட்டுவன. பெண்பற்றிய இந்த படிமங்களைத் தமிழ்மரபில் உள்ள குறியீடுகளான புறம், அகம் என்பனவற்றுடன் ஒப்பிடும் போது அவை முரண்பட்டவையாகத் தென்படுவதில்லை. புறத்தே அடிமையாகத் தோன்றும் பெண், அகத்தில் சக்தியுடையவளாக இருத்தல் முரண்பாடு உடையதன்று.

அடுத்து வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் பெண் எவ்வகைக் கட்டுப்பாட்டு எல்லைகளுக்குள் செயற்படுகின்றாள் என்பதைப் பார்ப்போம். 

1. கட்டுதல், மழித்தல் என்ற குறியீடுகள் ஒரு பெண்ணின் தோற்றத்தில் வெளிப்படுதல்.

2. சமூக இடைத் தொடர்புகளைப் பெண் ஏற்படுத்திக் கொள்வதில் உள்ளார்ந்த குறியீடுகள் வடிவில் கூடிய அளவிலோ, குறைந்த அளவிலோ வெளிப்படுதல். என்ற இரண்டு விடயங்களையும் நாம் நோக்குதல் வேண்டும்.

புதிதாகப் பிறந்த குழந்தை சமூகநபர் (Social Person) என்ற தகுதியை உடனேயே  பெறுவதில்லை. தலைமயிரை மழித்து மொட்டையடித்தலோடு தான் அக்குழந்தை ஒரு சமூகநபர் ஆகக் கணிப்பைப்பெறும். (இச்சடங்கு 16ஆம் நாளன்று அல்லது 31ஆம் நாள் நிகழும்.) அது எத்தனையாம் நாள் நிகழும் என்பது சாதிகளைப் பொறுத்து வேறுபடும் . முடியை மழிக்கும் வரை குழந்தைக்குச் சமூக இருப்பு ஒன்று கிடையாது. இது நபருக்கு முந்திய நிலை (Pre Person) ஆகும். இங்கு குழந்தைக்கும் பெயர் இல்லை. முடியை மழிப்பதற்கு முன்னர் குழந்தை இறக்குமாயின் அதற்கு முறைப்படியான மரணச் சடங்கான தகனம் நிகழமாட்டாது. அச்சடலத்தைப் புதைப்பார்கள். இக்காலத்தில் குழந்தையின் சிகையலங்காரம், உடை என்பன இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விதியில்லை. நெற்றியில் கரிய பெரிய பொட்டு ஒன்றை வைத்துவிடுவார்கள். இந்த அழகில்லாத பொட்டு குழந்தையை பிறர் பார்த்தால் ஏற்படும் நாவூறிலும், கண்ணூறிலும் இருந்து அதனைப் பாதுகாக்கும். குழந்தை சமூகநபர் என்ற தகுதியை அடைவது தலையை மழிக்கும் சடங்குடனேயேயாகும். சிறு குழந்தையின் மீது உறவாடல் தொடர்பான தடைகள் இருப்பதில்லை. தவறானவை, நெறிமுறைக்கு ஒவ்வாதவை, தீட்டை உண்டாக்குபவை எனக் கருதப்படுபவை குழந்தை விடயத்தில் கவனிக்கப்படுவதில்லை. உதாரணமாக குழந்தையின் மலம் சிரிப்புக்குரிய விடயமாகும்.

தலைமயிரை மழிக்கும் சடங்கு முடிந்தவுடன் பெண்குழந்தையைப் ‘பெட்டை’ என்றும்,  ஆண்குழந்தையைப் ‘பிள்ளை’ என்றும் அழைப்பர். பிள்ளை, குழந்தை என்ற பொதுப் பெயர்களும், சிகையலங்காரம், உடைகள் என்பனவற்றில் பொதுமையும் பால்நிலை வேறுபாட்டைக் காண்பிப்பதில்லை. தொய்யலான தடித்த, சிறிய சட்டை அணிவித்தல், தலைமுடியை ஒட்ட வெட்டிவிடுதல் ஆகியன ஆண், பெண் இரு குழந்தைகளுக்கும் பொதுவான அலங்காரங்களாகும். ஐந்து வயதுக்கும் ஏழு வயதுக்கும் இடைப்பட்ட பெண் பிள்ளைகள் நீண்ட சட்டையை அணிவர். தமது சடையை இரட்டைப் பின்னலாகப் பின்னிவிடுவர். தலைமுடி இடுப்புவரை நீண்டு தொங்கும். வாசனைப் பொருட்களை அவர்கள் உபயோகிப்பதில்லை. சிறிய அளவிலான நகைகைளை அணிவர். மெல்லிய சங்கிலி கழுத்திலும், சிறிய தோடுகள் காதிலும் இருக்கும். சிறுகுழந்தையில் இருந்து சிறுமி ஆகும். இந்த மாற்றம் (5-7 வயது) சடங்குகள் வடிவில் கொண்டாடப்படுவதில்லை. ஆயினும் சிறுமி தாண்டக் கூடாத எல்லைகள் எவை என்ற உணர்வையும் அவதானத்தையும் இவ்வயதில் பெற்றுக் கொள்கிறாள்.

1870 ஆம் ஆண்டில் ஒரு இந்து தமிழ்ப்பெண் தன்து பூப்புனித நீராட்டு விழாவின்போது

பூப்படைதல் என்பது சிறுமி என்ற நிலையின் முடிவும் கன்னியின் பிறப்புமாகும். இதனைப் பெரிய சடங்காகக் கொண்டாடுவர். மாதவிடாய் தொடங்கிய நாளில் இருந்து பூப்புச்சடங்கு நடைபெறும் காலம்வரை பெண்ணிற்கும், அவளது குடும்பத்திற்கும் ஆபத்தான காலமாகும். எதிர்காலத் தலைவிதியை இக்காலம் தீர்மானித்துவிடும். குடும்பத்தைச் சேராத ஆண் ஒருவன் இத்தருணம் பெண்ணைக் கண்டுவிட்டானாயின் அவளிடம் பரத்தமைக் குணம் தூண்டப்பட்டுவிடும். அவளது இரத்தத்தில் பிசாசுகள் புகுந்துவிடும். குழந்தையின் பிறப்புடன் முடிமயிரை மழித்தல், சடங்கு நடைபெறும். இப்போது பூப்புச் சடங்கின் போது பெண்ணின் பிறப்புறப்பில் உள்ள மயிர் மழித்து விடப்படும். இது முடி திருத்ததுபவரின் மனைவியின் பணியாகும். பூப்புச் சடங்கு நடைபெறும் காலத்தில் பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் எற்படுகின்றன. இளநீர், கோவில் கிணற்றில் இருந்து பெறப்பட்ட புனித நீர் ஆகியவற்றால் பெண்ணைக் குளிப்பாட்டிய பின் அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்று கட்டு ஒன்றைப் போடுவர். பட்டுச் சேலை கட்டுதலே இக்கட்டு ஆகும். அதன் பின்னர் அவளுக்கு நெற்றியில் குங்குமம் திலகமாக இட்டு, ஆபரணங்களையும் அணிவர்.

பருவமடைந்த பெண்

பூப்படைதல் முதல் திருமணம் வரை கட்டுப்பாடான நடத்தை தொடரும். ஒரு பெண் உயர்சாதியைச் சேர்ந்தவளாயின் அவள் மீதான கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும். எனது தகவலாளி இது பற்றி மிகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார். நாற்பது ஆண்டுகளுக்கு முன் பெண்கள் பூப்படைந்தபின் சமூக வாழ்வில் இருந்தே ஒதுங்கி மறைந்து விடுவார்கள். அவர்களுக்கு வீணையும், பாட்டும் வீட்டில் வைத்துக் கற்பிக்கப்படும். வீட்டுப் பணி பற்றிய பயிற்சிகளும் வழங்கப்படும். ‘குடும்பத்தின் கௌரவம் கெட்டுப் போகக் கூடாது’ என்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படும். குழந்தைக்கு முடி வெட்டுதல் குறித்த குழந்தையை ஒரு பெண்ணாக அல்லது ஒரு ஆணாக பால் நிலை அடையாளம் செய்வதைக் குறிக்கும். கட்டுப்போடுதல் பெண்ணின் நடத்தையில் விதிக்கும் கட்டுப்பாடுகளைக் குறிக்கும். யாழ்ப்பாணத்தின் சடங்குகள் பலவற்றில் கட்டுப் போடுதல் அடிமைத்தனத்தின் குறியீடாக அமையும்.

விவாகம் முடிந்த பெண் சுமங்கலியாவாள். சுமங்கலி நிலை கௌரவம், சக்தி (சக்தி சமஸ்கிருதச் சொல்) என்பனவற்றைக் குறிக்கும். அத்தோடு அது மங்கலத்தையும் குறிக்கும். திருமணத்தின்போதும் பெண்ணின் பிறப்புறுப்பின் மயிர் மழித்து விடப்படும். அவளுக்கு ஆபரணங்களை பூட்டிப் பட்டுச்சேலையைக் கட்டிவிடுவர். அவள் மணவறைக்கு அழைத்து வரப்படுவாள். அங்கு அவளைத் தூய்மைப்படுத்தும் சடங்குகள் நிகழ்த்தப்படும். அவளது மணிக்கட்டில் நூல் கட்டப்படும். அது அவளது தியானத்தை சடங்குகளின் பக்கம் திருப்புவதற்காகச் செய்யப்படும். தீய ஆவிகளில் இருந்து நூல் அவளைப் பாதுகாக்கும். வம்சாவளியை அங்கு திருப்பித் திருப்பிச் சொல்லுவர்.

வீட்டுப் பணிகளில் ஈடுபடும் பெண்கள்

மணமகன் கொடுத்த பரிசில்கள் (கூறையும் தாலியும்) சபையோருக்கு காட்டி ஆசிர்வாதம் பெறப்படும். கூறையை எடுத்துக் கொண்டு அவள் மணவறையை விட்டுச் செல்வாள். திரும்பிவரும் போது அவள் கூறையைக் கட்டிக் கொண்டு வருவாள். முதலில் அவள் உடுத்த வந்த சேலையை விடக் கூறை வித்தியாசமானதாக இருக்கும். அதற்கு முன்னதை விடப் பெரிய கரை இருக்கும். கரையென்பதும் ஒரு எல்லைக் குறியீடாகக் குறிப்பிடுவதுதான். திருமணத்தின் மிக முக்கியமான நிகழ்வு தாலி கட்டுதல் ஆகும். இவ்வாறு கட்டியவுடன் அவள் ‘சம்பந்தம்’ (சமஸ்கிருதச் சொல் – ஒன்றாக கட்டுப்படுதல் என்பது பொருள்) கொள்கிறாள். உடல், உள்ளம், உயிர் மூன்றாலும் கணவனோடு கட்டுப்படுகிறாள். யாழ்ப்பாணத் தமிழ் மரபில் தாலி கட்டுதல் தான் முக்கியம். ஓமத்தீயைச் சுற்றிவலம் வருதல் ஆகிய ஆரிய வழக்கம் முக்கியமானதல்ல. இரண்டாம் திருமணத்தின் போது (தாழ்ந்த சாதியினர் மட்டும் பெண்ணிற்கு இரண்டாம் திருமணம் செய்வர்) தாலி மட்டும் கட்டப்படும்.

முடியை மழித்தல், கட்டுதல் என்ற குறியீடுகள் இத்துடன் முடிவடைவதில்லை. அது வாழ்க்கையின் அடுத்த கட்டங்களுக்கும் தொடர்வன. திருமணம் நடைபெறும்போது பெண் ஆணுடன் கட்டுப்பட்டவளாய், பிணைக்கப்படுகிறாள். ஆணின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறாள் என்பதை இக் குறியீடுகள் உணர்த்துகின்றன. திருமணம் ஆன பின் பெண்ணிற்கு ஒரு அளவுகோலும் ஆணிற்கு வேறுபட்ட அளவுகோலும் உண்டு. குடும்ப கௌரவத்தைப் பேணுவதற்காகப் பெண் உணவு உட்கொள்ளுதல், உடல் உறவு என்ற இரண்டையும் கணவனுடன் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். உயர்சாதிப் பெண் தன் கணவனோடுதான் உடலுறவு வைத்துக் கொள்வாள். அவள் தனது கிட்டிய சொந்தக்காரருடன் சேர்ந்து உணவு உட்கொள்ளலாம். இவ்வாறு ஒரு பெண் சமபந்தி போசனம் செய்யக் கூடியவர்களாக இரத்த உறவுடையவர்களும், திருமண உறவு வைத்திருக்கக் கூடியவர்களுமான சொந்தக்காரர் இருப்பர். மாறாக ஒரு உயர்சாதி ஆண் குடும்ப கௌரவத்தைப் பேணுவதோடு, பெண்ணை விட விரிந்த ஒரு வட்டத்தினருடன் சமபந்தி போசனம் வைத்துக் கொள்வான். அவன் வைப்பாட்டிகளை வைத்திருந்து அவர்களை ஆதரிப்பான். தூரத்துச் சொந்தக் காரர்களையும் சேர்த்துச் சமபோசனம் செய்வதால் அரசியல், பொருளாதார நன்மைகளையும் பெருக்கிக் கொள்ளலாம். குடும்ப கௌரவத்தை இது பேணுவதோடு சம்பந்த உறவுகளை தொடர்வதற்கும் இது உதவுகிறது.

திருமணமான பெண்கள் மாதவிடாய் நிற்கும் வயதைத் தாண்டியவுடன் குடும்பத்திற்குள்ளும் சமூக நிலையிலும் கூடியளவு சுதந்திரத்தையும் விடுதலையையும் பெறுகிறாள். பெண்ணின் உடலில் ஏற்படும் இம்மாற்றம் பூப்படைதல் போன்ற சடங்கு ஒன்றினால் கொண்டாடப்படுவதில்லை. ஆய்வாளர்களுக்கு சிறந்த முறையில் தகவல்களைச் சொல்லக் கூடியவர்கள் இவ்வயதுப் பெண்களாவர். இக்கட்டத்தில் கட்டுப்பாடுகள் தளர்வதால் பெண் துணிச்சலுடன் பேசக் கூடியவளாக மாறுகிறாள். பூப்படைந்த பெண் (வாய்மூடி மௌனி ஆவதற்கு) எதிரானது இந்நிலை.

விதவை

இறுதியில் கணவனை இழந்த விதவை ‘அமங்கலி’ யாவாள். இது சுமங்கலிக்கு எதிரான கருத்துடையது. விதவை அமங்கலத்தைக் குறித்து நிற்பாள். விதவை என்ற சொல் வீட்டுக்குள் அடைபட்டு இருப்பவர் என்ற கருத்தையும் உடையது. அவளிற்கு கவர்ச்சி தரக் கூடிய எல்லா வெளித்தோற்ற அம்சங்களும் நீக்கப்படும். மரபுவழிச் சமூகத்தில் விதவைப் பெண்ணிற்கு மொட்டை வழிக்கப்படும், ஆனால் இப்போது இவ் வழக்கம் பரவலாக இல்லை. பெண் அணியும் எல்லாவகை அலங்காரங்களும் கைவிடப்படும். அவளின் ஆபரணங்கள் அவிழ்த்து வைக்கப்படும். குறிப்பாக அவளின் தாலி கழற்றப்படும், ஆடம்பரமற்ற வெள்ளை ஆடை ஒன்றை அவள் அணியத் தொடங்குவாள்.

மேற்குறித்தவாறு வெளித் தோற்றத்தில் செய்யப்படும் குறியீடு மாற்றங்கள் அப் பெண் மாதவிடாய் ஏற்படும் வயது எல்லையை தாண்டியவள் என்ற உடலியல் உண்மையைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. விதவைப் பெண் கருவளம் உடைய ஒருத்தி போலவும் குடும்ப கௌரவத்திற்கு அவளால் ஆபத்து வரக் கூடும் என்ற கருத்துடனேயே நோக்கப்படுவாள். குடும்பம் பொருளாதார நிலையில் தாழ்ந்து போயிருந்தால் விதைவைப் பெண் விபசாரத்தில் ஈடுபடக்கூடிய ஆபத்து உள்ளது என்ற கருத்தை தமிழர்கள் ஒளிவு மறைவு இல்லாமல் கூறிவிடுவர். ஆகவே வெளித்தோற்ற அலங்காரங்களை இல்லாமல் செய்வது கட்டாயப்படுத்திய துறவு ஆகும். (ஆண்கள் முதுமையில் சந்நியாசம் புகுதலோடு இதனை ஒப்பிடலாம்). நடத்தை தொடர்பான கட்டுப்பாடுகள் விதவைகள் மீது சுமத்தப்படும்.

பிறந்த குழந்தையின் நிலையை விதவை அடைகிறாள். இரண்டு நிலைகளிலும் தலையை மழித்தல் நடைபெறும். பிறந்த குழந்தையின் நிலை தலைமுடியை மழிப்பதுடன் தொடங்குகிறது. விதவை நிலை கணவனின் மரணத்துடனும் தலையை மழிப்பதுடனும் தொடங்கும். இரு தலைமழிப்புக்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் ஒரு பெண் சமூக வாழ்க்கைக்குள் இருக்கிறாள். குழந்தையின் நிலையில் நடத்தை பற்றியாரும் அக்கறைப்படுவதில்லை. விதவையின் நடத்தை மிகுந்த முக்கியத்துவம் உடையது. அது குடும்ப கௌரவத்திற்கு ஆபத்தானது. ஒரு பெண்ணின் கணவனின் மரணச்சடங்கு அவளின் சமூக மரணச்சடங்கும் ஆகும் என்று கூறினால் மிகையன்று. சதி என்ற வழக்கம் இதையே குறிப்பிட்டது. கணவனின் உடலை வைத்து எரித்த சிதையில் பெண்ணையும் வைத்து எரித்துவிடுவது மூலம் அவளின் வாழ்வுக்கு சதி முடிவு கண்டது. கருத்துப்படி கணவனும் மனைவியும் உடலால் ஒன்றுபட்டவர்கள் என்பது ‘ஆன்றோர்’ வாக்கு. ஆகவே கணவன் இறக்க அவளும் இறந்து விடுகிறாள் என்று பொதுப்புத்தி சொல்கிறது. சதி என்ற வழக்கம் இன்று (இந்து சமூகத்தில்) மிக மிக அருமை. ஆனால் உயர்சாதிப் பெண்களுக்கு சமூக மரணம் என்பது யதார்த்த உண்மை. அப் பெண் அழகாகவும் இளமையாகவும் இருந்துவிட்டால் இந்த மரணம் என்ற நிகழ்வு உண்மையானது. அவள் நன்றாகப் படித்தவளாக இருப்பின் அதன் தீவிரம் குறைவு.

Tamil women 1914s in gingham plaid sari

பெண்ணின் சமூக வாழ்க்கையின் இரண்டு கட்டங்களான 1. பூப்படைவதற்கு முந்திய சிறுமி 2. மாதவிடாய் நின்ற பின்னரான வயது என்ற இரண்டிற்கிடையிலும் ஒரு ஒற்றுமை உள்ளது. இவ்விரு நிலைகளும் சடங்குகள் மூலம் அறிவிக்கப்படுவதில்லை. இவ்விரு நிலைகளிலும் சிறுமியும் நடுத்தரவயதுப் பெண்ணும் உடலியல் நிலைப்படி குடும்ப கௌவரத்தை கெடுக்கும் சக்தியற்றவர்கள். ஆண்களோடு தொடர்பு காரணமாக இவர்களால் குடும்பத்திற்கு கெட்ட பெயர்வரும் சாத்தியம் உடலியல் அடிப்படையில் இல்லை. வெளிப்படக் காட்டக் கூடியதாகவும், மறுக்க முடியாத சான்றாகவும் அமையக் கூடிய சட்டமுறையற்றதாகப் பிறந்த குழந்தை என்ற பிரச்சினைக்கு இடமில்லை. உடலியல் ரீதியான இந்த வேறுபட்ட நிலை காரணமாக பூப்படைய முந்திய கட்டத்துச் சிறுமிக்கும், விவாகமாகிப் பலவருடங்கள் கழிந்த நிலையில் உள்ள பெண்ணுக்கும் சமூக நடத்தை கட்டுப்பாடுகள் குறைவு. இந்த ஒற்றுமைகள் இருப்பினும் தந்தையின் செல்லப்பிள்ளையாயின் சிறுமிக்கு ஓரளவு குடும்ப விவகாரங்களில் சலுகைகள் இருக்கும். மாதவிடாய் கடந்த தாய் குடும்ப விவகாரங்களில் மிகுந்த செல்வாக்குடையவளாகிறாள். திருமணமான சுமங்கலி என்ற அந்தஸ்துத் தரும் கௌரவத்தை அவள் இழக்காமல் இருப்பதோடு இளம் பெண்ணிற்கு உள்ள கட்டுப்பாடுகள் அடக்கமான நடத்தை என்பன அவளிற்குத் தடைகளாக இருப்பதில்லை. குடும்பம் தொடர்பான முக்கிய விடயங்களில் அவளின் முடிவே தீர்க்கமானதாக இருக்கும். குறிப்பாகத் தனது மகன்மாருக்கும் மகள்மாருக்கும் திருமணத்தை ஒழுங்கு செய்வதில் அவள் முக்கிய பங்கை பெறுகிறாள். தென்னாசிய சமூகத்தில் பெண்களின் இந்தக் கட்டம் பற்றி போதியளவு ஆராயப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இது கவனிப்புக்குரிய முக்கிய விடயமாகும்.

பூப்படைந்த பின்னரும் திருமணம் செய்வதற்கு முன்னருமான கன்னிப் பருவம், திருமணமான பின்னர் மாதவிடாய் நின்றுவிடுதல் வரையான காலம் என்ற இரண்டும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியம் பெறுகின்றன. இந்த இரு கட்டங்களும் ஒவ்வொரு சடங்குடன் ஆரம்பிக்கின்றன. அவளது யோனியின் மயிர் மழிக்கப்படுகிறது. இவ்விரு கட்டமும் அவளின் ஆளுமை அடையாளம் பற்றிய வரையறை நிகழும் கட்டமாக மட்டும் பார்த்தல் முடியாது. அவளின் ஆளுமைக்கும் மேலாக அவள் பாலியலுக்குரிய நபராகவும் பார்க்கப்படுகிறாள். பெண்களின் தூய்மை பற்றிப் பேசும் எழுத்துக்கள் இக்கட்டங்களுக்கு முதன்மை அளிக்கின்றன. இக்கட்டத்தில் அவள் தீட்டுக்கு உள்ளாகிறாள். குடும்பத்திற்கு அவளால் அவப்பெயர் வந்துவிடக் கூடிய காலமும் இதுவாகும். இதனால் இக்கட்டத்தில் பெண் மீது கடுமையான கட்டுப்பாடுகள் பல விதிக்கப்படுகின்றன. கட்டுதல் என்ற குறியீடு பல வடிவங்களில் வெளிப்படுகிறது. சேலையைக் கட்டுதல், தலைமயிரைக் குடும்பியாகக் கட்டுதல், தாலியைக் கட்டுதல் என்பன முக்கிய குறியீடுகளாகும். இவை பாலியல் உறவு, உணவு உட்கொள்ளல் ஆகியன மீதான கட்டுப்பாடுகளாகவும் வெளிப்படுகின்றன. மனிதரின் உடல் யதார்த்தங்கள் இவ்விரு செயல்கள் (பாலியல் உறவு, உணவு உட்கொள்ளல்) மூலமாக பரிமாறப்படக் கூடியவை.

நாம் இங்கே கூர்ந்து கவனிக்க வேண்டிய விடயம் அகக் கட்டுப்பாடுகள், புறக் கட்டுப்பாடுகள் என்ற வகுப்பும் அகம், புறம் சார்ந்த அதிகாரங்களும் ஆகும். இதை நான் கண்டுபிடித்த ஒன்றாகக் கூறவில்லை. தமிழ் மரபில் அகம், புறம் என்பன இதனையே குறிப்பிட்டன. தமிழ் இலக்கியத்தில் இப்பிரிவு உள்ளது (ராமானுஜன் 1970). இதனை மேற்குறிப்பிட்ட இருகட்டங்களிலும் உள்ள பெண்களுக்குப் பொருத்திப் பார்க்கும்போது அவர்களது அகத்தூய்மையை (கற்பு) அகமும், மடம், நாணம் என்பனவும் அடக்கமும் புற நடத்தையையும் விளக்குவனவாகும். பெண்களின் அகத்தில் மிளிரும் கற்பு அல்லது தூய்மை வெளியில் தெரியாத ஒரு சக்தியுடன் தொடர்புடையது. அகத்தே உறையும் இந்த சக்தியின் உணர்வெழுச்சியை ஒரு பெண் தனது எதிர்காலக் கணவனை முதன்முதல் காணும்போது உணர்கிறாள் என்று கூறப்படுகிறது. (ஒரு ஆண் தன் ஞான குருவை/ ஞானாசிரியனைச் காணும்போது இவ்வுணைர்வைப் பெறுவானாம்). புறத்தே தெரியும் அடக்கம் கூச்சம் என்ற உணர்வாக இது வெளிப்படும். பெண்ணின் வாழ்க்கையின் இந்தக் கட்டங்கள் அவளது வெளித்தோற்றம், பொருத்தமான நடத்தைகள் என்பனவற்றை வெளிப்படுத்தும் குறியீடுகளைக் கொண்டவை. 

மேலே கூறிய வண்ணம் உடலின் வெளிப்படையான தோற்றப் பண்புகளுக்கும், உள்ளே மறைந்திருக்கும் தோற்றப் பண்புக்கும் உள்ள வேறுபாட்டின் முக்கியத்துவம் என்ன என்பதை நான் இப்போது விபரிக்கப்போவதில்லை. யாழ்ப்பாணத்துப் பெண்கள் வெளித்தோற்றத்தில் பொது வாழ்க்கையில் அடங்கிப் போகும் பண்பை வெளிப்படுத்துவார்கள். ஆனால் வீட்டுக்குள் வகிக்கும் செல்வாக்கை வெளிப்படுத்தும் இந்த விடயத்தை நான் விளக்குவதற்கு முன்னர் யாழ்ப்பாணச் சமூகத்தின் தமிழ்ப்பண்பாட்டில் இந்த இரு வேறு படிமங்களும், இருவகை நடத்தைகளும் கருத்தியல் நிலையில் எவ்விதம் ஏற்புடமை பெறுகின்றது என்பதை விளக்கிக் கூறுவேன்.

தகுதிப் பெயர்ச்சிச் சடங்குகள் நிகழும் போது பெண்ணின் வெளித்தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் கட்டுதல், என்ற குறியீட்டினால் வெளிப்படுத்தப்படும். தலைமுடியை வாரிமுடிந்து விடுதல், தாலி முதலிய ஆபரணங்களை கட்டுதல் குறியீடுகளாகும் (Binding Symbolism). கட்டுதல், குறியீடு கட்டுப்பட்ட நிலையையும் அடிமைத்தனத்தையும் குறிப்பவை. இச்சடங்குகளின்போது இன்னொரு குறியீடும் தொடர்புபடுகிறது. இது மழித்தல்/ மொட்டையடித்தல் (சவரம் செய்தல்) என்ற குறியீடே அது. இக்குறியீட்டில் இருவகை உண்டு. தலைமயிரை மொட்டையடித்தல் வெளித்தோற்றத்தில் நிகழும் மாற்றத்தின் குறியீடு.  உடலில் (ஆடைக்குள்) மறைந்திருக்கும் மயிரை மழித்தல்  அகத்தே ஏற்படும் மாற்றத்தின் குறியீடு ஆகும். மழித்தல் என்ற இக்குறியீடு புலன் இன்பங்களை மறுத்து , தன்னை ஒறுப்புக்கு உள்ளாக்குதல் (Self Denial) என்ற குறியீட்டுடன் தொடர்புடையது. இக்குறியீடு தென்னாசியாவில் பரவலாகக் காணப்படுகிறது. மொட்டையடிப்பதன் மூலம் சந்நியாசி ஒருவரின் துறவு வாழ்க்கையின் சின்னத்தை அல்லது குறியீட்டை பெண் தன்னில் வெளிப்படுத்துகிறாள். இது அவளிற்கு அகத்தே ஒரு சக்தியை வழங்குகின்றது.

மேற்குறிப்பிட்ட குறியீடுகள் பெண் ஒரு பாலுறவுக்கான நபர் (Sexual Person) என்பதை சமூகம் அங்கீகரிக்கும் அல்லது கவனத்தில் எடுக்கும் கட்டத்தில் முக்கியம் பெறுவதைக் காணலாம். பிறந்த குழந்தையை ஒரு நபராக பெண்மை உடைய ஒன்றாக மதிப்பதில்லை. இதேபோல் விதவையும் ஒரு நபர் (Person) என்ற கணிப்பையே இழந்துவிடுகிறாள். ஆகவே இவ்விரு கட்டங்களிலும் கட்டுதல் குறியீடு முக்கியம் இல்லை. (கணவனின் மரணச் சடங்கின்போது மனைவியின் தாலி கழற்றப்படும். அவள் கை வளையல்கள் நொருக்கி உடைக்கப்படும்). விதவை மொட்டை அடிக்கப்பட்டு துறவு என்ற குறியீட்டை ஏற்றுக்கொள்கிறாள். பருவமடைந்த கன்னியும் திருமணமான பெண்ணும் கட்டுதல் என்ற குறியீடு மூலம் தமது நிலையை பிரகடனப்படுத்துகின்றனர். உடை, ஆபரணம், தலைமுடி என்பன இதற்குரிய அடையாளங்களாகும். இக்கட்டங்களில் பெண்ணிடம் உறையும் துறவு என்னும் சக்தி அவளின் உடலின் பிறப்புறுப்பை சார்ந்துள்ள மயிரை மழிப்பதன் மூலம் குறியீட்டு வகையில் உணர்த்தப்படுகிறது. சிறுமியாக இருக்கும்போது ஒரு பெண் ‘நபர்’ என்ற தகுதியைப் பெற்றாலும் அவள் பாலியலுக்குரிய நபர் எனக் கருதப்படுவதில்லை. ஆதலால் கட்டுதல் குறியீடுகள் இப்பருவத்தில் வேண்டப்படுவதில்லை. சிறுமி வளர வளர கட்டுதல் என்ற குறியீடு வெளிப்படும். தலையை வாரிப் பின்னலாகப் பின்னிவிடுதல், (ஆனால் முடிந்து குடும்பியாக கட்டவேண்டியதில்லை) ஒரு குறியீடாகும். எனது வாதம் என்னவெனில் கட்டுதல் என்ற குறியீடு (புலனின்பங்களைத் துறக்கும்) துறவின் அடையாளம் என்பதே இப்படிமங்களில் எவ்வித முரண்பட்ட தன்மையும் கிடையாது. இதனை தமிழ்ப் பண்பாட்டின் ‘புறம்’, ‘அகம்’ என்ற கருத்துக்கள் ஊடாகப் புரிந்து கொள்ளலாம்.

வீட்டுப் பணியில் ஈடுபடும் சுமங்கலி

அடங்கிப் போதலும் அடிமைத்தனமும் தொடர்பான குறியீடுகள் யாழ்ப்பாணப் பெண்களுக்கு மட்டும் உரியனவல்ல. இவை தமிழர்களிடம் பரவலாக உள்ளவை. இலகுவில் அடையாளம் காணப்படக் கூடியவை. பக்திமார்க்கமான தாசமார்க்கம் சாதாரண மக்களுக்குரியவை. மனிதரிடம் உள்ள குறைபாடுகளிற்குப் பதிலீடாக தனிநபர்கள் சமயவழியில் சக்தியைப் பெற்றுக் கொள்வதற்குப் பண்பாடு வழி செய்கிறது. கடவுளுக்கு அடிமையாதல் (தாசன் ஆதல்) ஒரு வழி. இது கடவுளுக்குக் கட்டுப்படுதல் ஆகும். வேலையாட்கள் அடிமைகளாக இருக்கும் சமூக முறையில் கடவுளுக்கு அடிமையாதல் என்பது பழக்கப்பட்ட தெளிவான ஒரு விடயமே. வேலையாட்கள் எஜமானுக்கு அடிமையாக இருத்தல் போன்றதே கடவுளுக்கு அடிமையாதல். கோவிலில் ஆண்டுத்திருவிழா நடக்கும் போது தனிநபர்கள் இவ்விதமான அடிமையாகும்  செயலை மிகத் தெளிவான முறையில் வெளியிடுவர். இக்காலத்தில் நபர் ஒருவர் தாமாக விரும்பி கடவுளின் அடிமையாவார். அவர் கையில் காப்புக் கட்டிக் கொள்வார். சடங்கோடு தொடர்புடைய பணிவையும் அடிமைத்தனத்தையும் வெளிப்படுத்தும் கடமைகளைச் செய்வார்.

பெண்களுக்குரியதான கட்டுதல் குறியீடு (தலையை முடிந்து கட்டுதல், தாலி சேலை என்பன) பொதுப்பட்ட மேற்குறித்த குறியீட்டு முறைகளோடு நன்கு பொருந்துகிறது. ஆணிற்கு அடிமையாகும் மணப்பெண், அடிமை ஆவாள். தன் தலைமுடியை அவள் முடிந்து கட்ட வேண்டும். மணமகன் கொடுத்த சேலையை அவள் கட்ட வேண்டும். மணமகன் அவளது கழுத்தில் தாலியைக் கட்டி விடுவான். இச் செய்கைகளில் பெண் கணவனின் அடிமை என்ற படிமம் வெளிப்படுகிறது.

சமூக யதார்த்ததின் ஓர் அம்சத்தை இந்த வெளிப்படையான கட்டுக்கள் புலப்படுத்துகின்றன. இது வெளி உலகில் பெண், ஆணின் அடிமையாக இருத்தல் என்ற யதார்த்தத்துடனும் பொருந்துகிறது. பெண்ணின் மறைந்திருக்கும் சக்தியைக் குறிக்கும் குறியீடே அவளின் பிறப்புறுப்பின் மயிரை மழித்தல் ஆகும்.

தமிழர் பண்பாட்டில் கஷ்டங்களை அனுபவித்தல் என்பது ஒருவர் பலமற்றவர், தாழ்ந்த நிலையில் உள்ளவர் என்பதன் அடையாளம் அன்று. இவ்விடயம் சமய நோக்கில் பார்க்கப்படுகிறது. கஷ்டமும் துன்பமும் ஒருவருக்குச் சக்தியைக் கொடுப்பன. (Egnor, ரெயினோல்ட்ஸ், டானியல் ஆகியோரின் கட்டுரைகளைப் பார்க்க). ஒழுக்கமும், கட்டுப்பாடும், தவமும் ஒருவருக்குச் சக்தியைக் கொடுப்பன. தன்னைத் தானே வருத்துதல் துறவிகளான ஆண், பெண் இருபாலாருக்கும் வலியைத் தருவன. புராணக் கதைகளின்படி இந்த வலிமையைக் கொண்டு கடவுளைக் கூட அச்சுறுத்திய நிகழ்வுகள் நடந்தன. சந்நியாசம் பூண்ட துறவிகள் தாம் பெற்ற சக்தியை துஷ்பிரயோகம் செய்த வேளை கடவுளுக்கு ஏற்பட்ட சங்கடங்களைப் புராணங்கள் எடுத்துக் கூறும். தம்மை வருத்தித் தவம் செய்த முனிவர்கள் தாம் கடவுளிடம் பெற்ற வரத்தால் பிறருக்குத் தீங்கை இழைத்த கதைகள் புராணங்களில் உண்டு.

கற்புநெறி என்பது தன்னை வருத்தும் ஒழுக்கம். இதனால் பெண்களுக்கு நன்மை தரும் சக்தி கிடைக்கும். அவர்களுக்கு அழிக்கும் சக்தியும் இதனால் கிடைக்கிறது. சிலப்பதிகாரம் என்ற தமிழ்க் காப்பியத்தின் தலைவியான கண்ணகி கற்புள்ளவள். ஒழுக்கமற்ற கோவலன் நடத்தையால் அவள் பழிவாங்கும் செயல்களைச் செய்கிறாள். தன்னிடம் உள்ள சக்தியைக் கொண்டு அவள் மதுரை நகரை எரியூட்டுகிறாள். அந்நகரில் இருந்து ஆட்சிபுரியும் அரசன் அநீதியான முறையில் கோவலனைக் கொலை செய்து தண்டித்தமைக்காகக் கண்ணகி பழிவாங்குகிறாள்.

யாழ்ப்பாணச் சமூகம் பெண்ணை வெளித் தோற்றத்தில் அடிமையாகவும் பலமற்றவளாகவும், அகத்தில் சக்தி மிக்கவளாகவும் காட்டுகிறது. இது தமிழ்ப் பண்பாட்டில் அடிப்படையாக உள்ள விடயம். ஆதலால் பெண்கள் புறவாழ்க்கையில் பலமற்ற அடிமைகளாகவும், அகத்தில் சக்தி மிக்கவர்களாயும் கருதப்படுவதில் ஆச்சரியமில்லை. பெண்ணின் வாழ்க்கைப் படி நிலைகளில் இப்பண்புகள் புறத்தே அடிமைத்தனம், அகத்தே துறவினால் வரும் சக்தி என்ற வகையில் வெளிப்படும். இவ்வாறான கருத்தியலின் பின்புலத்தில் தான் பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் பொதுவாழ்வு நடத்தைக்கும் வீட்டில் அல்லது தனிப்பட்ட வாழ்வில் எதிர்பார்க்கப்படும் நடத்தைக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளலாம். ஆண்கள் தமிழ்ப் பண்பாட்டின்படி ஆதிக்கம் உடையவர்களாயும், பெண்கள் அடங்கிப் போகிறவர்களாயும் உள்ளனர். பெண்ணிடம் மறைந்திருக்கும் அக ஆற்றல் அல்லது தனிப்பட்ட வாழ்வில் வெளிப்படும் ஆற்றல் வெளியே பேசப்படாத விடயமாகும். 

குறிப்பு  : ‘Hierarchy and Equivalence in Jaffna, North Ceylon Normative Code as Mediators’ என்ற தலைப்பில் 1977 ஆம் ஆண்டு The New Wind: Changing Identities in South Asia, pp.179-226. (The Hague: Mouton) எனும் நூலில்  கென்னத் டேவிட் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

9230 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)