மாறுபாடில்லா உண்டி - அறிமுகம்
Arts
9 நிமிட வாசிப்பு

மாறுபாடில்லா உண்டி – அறிமுகம்

July 7, 2022 | Ezhuna

ஈழத்தில் யாழ்ப்பாணம் தனக்கென சிறப்பான உணவுப் பழக்கவழக்கங்களையும் மருத்துவத்தில் சில விசேட முறைகளையும் கொண்டிருந்தது. ஆயினும் அந்நியர் ஆட்சி, பூகோளமயமாதல், வர்த்த நோக்கிலான வாழ்வியல், நாகரிகமோகம் என்பன அந்த உணவுப்பழக்கவழக்கத்தைக் குலைத்துப்போட்டது. அதன் விளைவாக, ஆரோக்கியக் குறைபாடுகள், தொற்றா நோய்கள் என பலவீனமான சமுதாயம் ஒன்று நம்மிடையே உருவெடுத்துள்ளது. இந்த நிலையை மாற்றியமைத்து, மீண்டும் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப எமது பாரம்பரிய உணவுமுறைமையை மீட்டெடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் உணவுப்பழக்க வழக்கங்கள், உணவுகள் என்பன தொடர்பாக  சித்தமருத்துவம், தற்கால உணவு விஞ்ஞான  ஆய்வு என்பவற்றின் நோக்குநிலையில் விளக்குகின்றது ‘மாறுபாடில்லா உண்டி’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர்.


பெருகிவரும் நோய்நிலைகள் மனித சமுதாயத்துக்கு பெரும் சவாலாகவே இருக்கின்றன. இதற்குமேலாக தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையானது உடல் உள ரீதியில் பாரிய நெருக்குதலை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக உளநெருக்கீடுகள், தொற்றா நோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள் என்பனவற்றை நாளடைவில் அதிகரிக்க ஏதுவாகின்றது.


இதற்கு தற்சார்பு பொருளாதாரம் பலவீனமான நிலையில் உள்ளமை மிகப்பெரிய காரணமாக உள்ளது. உடல் நலத்தைப் பொறுத்தவரையில் அருகி வரும் பாரம்பரிய உணவுமுறைகள் தொற்றா நோய்கள், ஊட்டச்சத்துக்குறைபாடுகள் மற்றும் நோய் எதிர்ப்புச்சக்தி குறைபாடுகளுக்கு காரணமாகின்றன.எனவே இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் பொருளாதார ரீதியில் இலகுவாகப் பெறக்கூடியனவாகவும் உணவுவகைகள் இருத்தல் அவசியம்.இதற்கு சித்தமருத்துவத்தில் சித்தர்கள் எவ்வகையான உணவுகளை கூறியிருக்கின்றார்கள் என்பதை அவை எவ்வாறு தமிழர் பாரம்பரியத்தில் பயன்படுத்தப்பட்டன என்பது பற்றிய தேடலே இக்கட்டுரையாகும்.

பாரம்பரிய உணவுகள்

அதற்குமுன் எவ்வாறு உணவு உட்கொள்ள வேண்டும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும். எவ்வகையான உணவு எனினும் அதனை எவ்வாறு உட்கொள்ள வேண்டும்? எப்பொழுது உட்கொள்ள வேண்டும்? எந்த அளவில் உட்கொள்ள வேண்டும்? என்பன உடல் ஆரோக்கியத்துக்கு ஆதாரமாகின்றன. ஏனெனில் நோய்வருவதற்குரிய காரணங்களுள் இவையும் அமைந்துவிடுகின்றன.


நோய் வருவதற்குரிய காரணங்களைக் கண்டு அவற்றை விலக்குவதே நோய்வருமுன் காத்தலாக (Prevention is better than cure) அமைகின்றது. இதனையே திருவள்ளுவர்,


“எதிரதாக்காக்கு மறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்”

நோய் வருவதற்குரிய காரணங்களை நீக்கி தம் உடலை காத்துக் கொள்ளும் அறிவுடையவர்களுக்கு நோய்வராது என திருக்குறளில் கூறுகின்றார். ஆனால் இன்று நாம் எல்லோரும் அறிவில்லாது செயற்பட்டு நோய்களைப் பெருக்கிக்கொண்டுள்ளோம்.
எப்போது உணவு உண்ணலாம்? பசித்தபின் உணவினை உட்கொள்ளவே சித்தமருத்துவம் கூறுகின்றது.


“எரிவளர்த் திடுவோ ரெவ்வா
றிந்தன மிடுவர் பற்றி
அரிவளர்த் திடுநெய் தானே
யவித்திடு மதிக ரித்தால்
பருவமா யதைய றிந்து
பசித்திடப் புசித்தா நோய்கள்
வருவது மில்லை வந்தான்
மருந்தினாற் றீரு மண்றே”
(பக்.106, சொக்கநாதர் தன்வந்திரியம்)

பசி வந்தபின் அதனை அறிந்து உணவினை உட்கொள்ள வேண்டும். பசியை ஏற்படுத்தும் வழிவகையை அறிந்து பசியை ஏற்படுத்தல் வேண்டும். உணவுடன் நெய் உட்கொண்டால் பசியை அதிகரிக்கும். பசி அதிகரிக்கும்போது குறித்த நேரத்தில் பசிக்கு ஏற்ற அளவில் உணவினை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு பசித்தபின் பசி அளவறிந்து உணவு உட்கொண்டால் நோய்கள் வராது. வந்தாலும் மருந்துகள் உட்கொள்ள இலகுவாய் தீரும் என்கிறது சித்தர் பாடல்.

பாரம்பரிய சித்தமருத்துவம் தொடர்பான ஓவியம்

பசியின் அளவறிந்து உண்ணாது ஏற்பட்ட பசிக்கு மேலாக உண்ணும்போது நோய்கள் ஏற்படும். இதனை திருவள்ளுவர் மருந்து எனும் அதிகாரத்தில் இவ்வாறு கூறுகின்றார்.

“தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப்படும்”

தனது பசியறிந்து உண்ணல் வேண்டும். இல்லேயேல் நோய்கள் அளவு கணக்கின்றி வரும்.

இதேபோல் எமக்குத் தேவையான உணவு அளவினில் குறைந்த அளவினை அறிந்து அந்த அளவில் உணவினை உட்கொள்வோமானால் ஆரோக்கியமும் இன்பமும் நிலைத்து நிற்கும் என்கின்றது கீழ்வரும் குறள்.

“இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்”

இக்கருத்தினையே கீழ்வரும் குறளும் வலியுறுத்துகின்றது. அதாவது எமது உடலுக்கு மாறுபாடில்லாத அதாவது ஒத்துவரக்கூடிய உணவுகளானாலும் அவற்றை அளவுக்கதிகமாக உண்ணாது அளவோடு மேலதிகமாக வேண்டாம் என உண்போமானால் எமது உயிருக்கு எந்தவித ஊறுபாடுகளும் வராது என்கின்றார் திருவள்ளுவர்.

“மாறுபாடில்லா உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடில்லை உயிர்க்கு”

இதனை அடிப்படையாகக் கொண்டே உண்ணும் உணவினை எவ்வாறு உண்ண வேண்டும் என சித்தமருத்துவம் வரையறுக்கின்றது.

“சுத்திசெய் யமுதை யன்பாற் றுணை விலக்காக நீரால்
புத்தியா லிரண்டு கூறு பொருந்தவுண்டோர்க்கு டிக்க
வித்துறு மிளகு சாறு மேவிய பசுவின் பால்தான்
உத்தம மாகும் வெந்நீ ருண்பவர்க் கில்லை நோயே”
பக்.109, ஆகாரமே ஆதாரம் (மூலம்-பரராசசேகரம்)

இரைப்பை


இரைப்பையினை நான்கு பகுதிகளாகப்பிரித்து, உண்ணும்போது அதில் இரண்டு பகுதிக்கு உண்ணும் உணவையும், மிகுதியில் ஒரு பகுதிக்கு வெந்நீர், பால், மோர், மிளகுரசம் போன்ற திரவ ஆகாரங்களையும், இரைப்பையின் மிகுதி ஒரு பகுதியினை வெறுமையாக இருக்கத்தக்கவாறு உணவினை உண்டால் நோய்கள் ஏற்படாது.

இன்றைய உணவு விஞ்ஞானத்தில் இதனை கருத்திற்கொண்டு ஒருவர் ஆரோக்கியமாக உயிர்வாழ்வதற்கு தேவையான அளவின் இழிநிலை அளவானது கலோரிகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகின்றது. இது உடலின் அடிப்படை அனுசேப வீதம் ( Basic Metabolic Rate – BMR) இதைவிட ஏனைய ஊட்டச்சத்துக்களின் நாளாந்த தேவையும் (Daily requirements) கணிக்கப்பட்டு உள்ளது.


பொதுவாக மாப்பொருளைக் கொண்ட பிரதான உணவுகளுடன் ஏனைய ஊட்டச்சத்துக்களை நாம் பெற்றுக் கொள்ள நாளொன்றுக்கு பிரதான உணவுடன் மரக்கறிகளும் பழங்களும் சேர்த்து குறைந்தது அரைக் கிலோ இருத்தல் அவசியமாகின்றது.
இவை பின்வரும் காரணிகளில் தங்கியுள்ளன

  1. ஒருவரது உடல் அமைப்பு – இது உடலின் தசைவிருத்தியில் தங்கியுள்ளது. சித்தமருத்துவத்தின் அடிப்படையில் எமது உடலானது வாத உடலமைப்பு (மெல்லிய உடலமைப்பு), பித்த உடலமைப்பு (நடுத்தரமான உடலமைப்பு), கப உடலமைப்பு (பருமனான உடலமைப்பு) எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு உடலமைப்பானது என்பின் வளர்ச்சியிலும் தசைகளின் வளர்ச்சியிலும் வேறுபடுகின்றன. இது பெரும்பாலும் பரம்பரை அலகில் தங்கியிருக்கும். இன்று மேற்கூறப்பட்ட வாத, பித்த, கப உடலமைப்புக்கள் முறையே Asthenic (thin, small, weak), Athletic (muscular, large–boned), Pyknic (stocky, fat) வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  2. வயது – வயதுடன் உடலின் அடிப்படை அனுசேபவீதம் குறைந்து செல்கின்றது. எனவே உணவின் அளவும், உணவின் சத்துக்களின் விகிதமும் வயதுடன் மாறுபடும். உதாரணமாக சிறுவயதில் உடல் வளர்ச்சிக்கும், உடற்தொழிற்பாடுகளுக்கும், விளையாட்டுக்களில் ஈடுபடுதல் என்பவற்றுக்கும் அதிகளவு சக்தி தேவைப்படுகின்றது. அதேபோல் உடல் வளர்ச்சிக்கு நாளாந்தம் ஒப்பீட்டளவில் அதிக புரதம் தேவைப்படுகின்றது. இதே போல் ஏனைய உயிர்ச்சத்துக்கள், கனிமங்களின் தேவையும் அதிகரித்து காணப்படும். உடல் வளர்ச்சி உடல் தொழிற்பாடுகள் வயதுடன் குறைவடையும்போது தேவையான உணவின் அளவுகளும் குறைவடைகின்றது.
  3. உடற்பருமன் – உடற்கட்டமைப்பு மேற்கூறப்பட்டது போல் மூன்று வகையாகக் காணப்பட்டாலும் அவ்வவ் உடற்கட்டமைப்பை மீறி மேலதிக கொழுப்புப் படிவினால் உடற்பருமன் அதிகரிக்கின்றது.

முன்னைய காலங்களில் உடற்பருமன் என்பது பொதுவான பிரச்சினையாக இருந்திருக்கவில்லை. காரணம் தாராளமான உடல் உழைப்பும் இயற்கையுடன் இணைந்ததான உணவுப் பழக்கவழக்கங்களும் அக்காலத்தில் காணப்பட்டன.

 உணவுப் பழக்கவழக்கங்கள்

இன்று உடல் உழைப்பானது அருகிவிட்டது. அத்துடன் நார்த்தன்மை குறைந்த அல்லது அற்ற நன்கு தீட்டப்பட்ட அல்லது பக்குவப்படுத்தப்பட்ட மாப்பொருள் உணவுகளும், தனியே கலோரிகளைக் கொண்ட ஊட்டச்சத்துக்கள் அற்ற நொறுக்குத்தீனிகளும் உடற்பருமனை அதிகரிக்கக் காரணமாகின்றன. இவ்வுடற்பருமனை அறிந்துகொள்ள உடற்திணிவுச் சுட்டி (Body Mass Index – BMI) உதவுகின்றது.

ஒருவரது உடல் நிறையை கிலோகிராமில் பெற்றுக்கொள்ளல் வேண்டும். அவரது உயரத்தினை மீற்றர் அளவுத்திட்டத்தில் எடுத்து அந்தஅளவின் வர்க்கத்தால் நிறையைப் பிரிக்கும்போது வருவதே உடற்திணிவுச் சுட்டி ஆகும். இம்முறை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே பொருத்தமானது.

  1. உடற்தொழிற்பாடுகள் – உடல் உழைப்பு, உடற்பயிற்சி அதிகரிப்புக்கு ஏற்ப உணவின் அளவுகள் தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்து காணப்படும். ஒரே வயது, ஒரேபாலானவர்கள் தொழில்கள், உடற்பயிற்சிகளின் அளவுகள் மாறும்போது உணவுத் தேவையும் மாறுபடுகின்றது.
  2. பால் வேறுபாடு – பெண்களைவிட ஆண்களுக்கு அதிகம் உணவு தேவைப்படுகின்றது.
  3. ஓமோன்கள், சூழற்காரணிகள் என்பனவும் உணவின் தேவை வேறுபாட்டைக் காட்டுகின்றன.

உணவு உண்ணும் காலங்கள்


உடலுக்கு ஒத்துவரக்கூடிய மாறுபாடுகள் இல்லாத உணவாயினும் எமக்கு தேவையான அளவினை எடுத்துக்கொள்வது எவ்வளவு ஆரோக்கியமானதோ அந்த அளவுக்கு உணவு உண்ணும் காலங்களும் ஆரோக்கியத்துக்கு அவசியமானது. எமது உடலானது ஒரு உயிர் உள்ள தானியங்கு இயந்திரமாகும். இதனது உடற்தொழிற்பாடுகளுக்கு சூரியஒளி ஒரு ’ரிமோட்’ போலானதாகும். சூரிய உதயம், மறைவு என்பன உடல் இயக்கத்தில் முக்கிய செயலாற்றுகின்றது. அதனைப்போலவே உணவு சமிபாட்டு செயலிலும் தாக்கம் செலுத்துகின்றது. இதனை சித்தமருத்துவம் இப்பாடல்கள் மூலம் தெளிவுபடுத்துகின்றது.

“தருமநூல் விதியிரண்டே தப்பிமுக்கா லுண்ணவெனில்
சிருமிதலை காலைமுற்றச் சேய்பருவ – வருமுகூர்த்த
மொன்றுக்கு ணான்குக்கு ளோதுமிரண்டுக்கு ளுண்பர்
னன்றுக்குத் தீயோர் நயந்து”

“மூன்றுநான் காரெண் முகூர்த்தங்க ளின்முறையே
ஞான்று ளுண்ணுமந்த நறுமுணவே – தோன்றுடலுக்
கொக்குமித நோயரமு ரோமுயிற் கந்தரஞ்செய்
விக்குமித மாராய்ந்து விள்”

பக்.74-75, ஆகாரமே ஆதாரம்(நோயில்லா வாழ்வு)

இவற்றின் சாரம்சம் என்னவெனில், ஒரு முகூர்த்தம் என்பது 1 ½ மணிநேரம் ஆகும். எமது உடலுக்கு இரண்டுநேர உணவு போதும் என தரும நூல்கள் கூறுகின்றன. ஆனால் நாம் மூன்றுவேளை உணவுக்கு பழக்கப்பட்டு உள்ளோம்.

இவ்வாறு 3 நேர உணவினை உட்கொள்ள வேண்டுமெனில் சீரான சமிபாடு உள்ளவர்கள் சூரிய உதயத்தில் இருந்து 1 ½ மணி நேரத்துக்கு உள்ளாகவும், காலைப்பருவமாகிய 6 மணி நேரத்துக்குள்ளாகவும், இரவு உணவினை இரவில் மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிக்குள்ளாகவும் உண்ணுதல் வேண்டும்.

மதியம் 12 இல் இருந்து பிற்பகல் 3 மணிக்குள் உணவு உட்கொண்டால் நோய்கள் உருவாகும். பிற்பகல் 3 மணியில் இருந்து மாலை 6 மணிக்குள் உணவு உட்கொண்டால் உயிரைக்கொள்ளும் நோய்கள் உருவாகும் எனக் குறிப்பிடுகின்றது சித்தமருத்துவம்.

எனவே ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் உண்ணும் உணவு சரியானதாகவும், அளவோடும், உரியகாலத்திலும் உண்ணுதல் வேண்டும். எமது தமிழ்ப்பாரம்பரியம் இவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொண்டே உணவுப் பழக்கவழக்கங்களை உருவாக்கியுள்ளது.

இத்தொடரில் பாரம்பரிய உணவுப்பழக்கங்களும், பாரம்பரிய உணவுகள் தொடர்பாகவும் தமிழ்மருத்துவமான சித்தமருத்துவம் என்ன கூறியிருக்கின்றது என்பதனையும் அவற்றினை தற்காலத்தில் எவ்வாறு பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம் என்பதையும் காண்போம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5837 பார்வைகள்

About the Author

தியாகராஜா சுதர்மன்

தியாகராஜா சுதர்மன் அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவ பட்டதாரியும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானத்தில் பட்டப்பின் டிப்ளோமா பட்டதாரியும், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் உளவளத்துணை டிப்ளோமா பட்டதாரியும் ஆவார்.

அரச சித்த மருத்துவ உத்தியோகத்தராகப் பணிபுரியும் இவர் ஒரு சிறுகதை எழுத்தாளருமாவார். இவர் 'ஆகாரமே ஆதாரம்' எனும் நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)