வடபகுதி – கடல்வளம்
Arts
10 நிமிட வாசிப்பு

வடபகுதி – கடல்வளம்

June 12, 2022 | Ezhuna

வடமாகாணம் அதன் அமைவிடம், அதன் அமைப்புக் காரணமாக இயற்கையாகவே கடல்வளம் நிறைந்த ஒரு பகுதியாகவே விளங்குகின்றது. இப்பிரதேசத்தில் கரையோரங்களில் வாழுகின்ற மக்களின் பிரதான பொருளாதார நடவடிக்கைகளில் இக்கடல் வளத்துறையானது நீண்டகாலமாக பிரதான இடத்தினை வகித்துவருகின்றது.

வடபகுதி ஐந்து நிர்வாக மாவட்டங்களை கொண்டிருக்கிறது. இவற்றுள் வவுனியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களும் (மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைதீவு) கடலோர எல்லைகளை கொண்டிருப்பதினால், அங்கு வாழ்கின்ற மக்கள் ஜீவனோபாயத் தொழிலாக மீன்பிடித் தொழிலைச் செய்துவருகின்றனர். சுதந்திரத்தை அடுத்துவந்த காலப்பகுதியிலும், அதற்கு முந்திய காலப்பகுதியிலும் மீன்பிடித்துறையானது பாரிய பிரச்சினைகள் எதனையும் எதிர்நோக்கியிருக்கவில்லை. ஆயினும் 1980 களை அடுத்து வந்த காலப்பகுதியில் இப்பகுதியில் நிலவிவந்த அசாதாரண அரசியல் நெருக்கடிகள் இத்துறையினை மிகமோசமாக பாதித்திருந்தன. இத்துறையில் தங்கி வாழ்ந்த மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து -மிகமுக்கியமாக இராணுவ நடவடிக்கையின் காரணமாக தமது உடைமைகளை இழந்து – தாம் வாழ்ந்த கிராமங்களையும் விட்டு இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களிலும், அயற்கிராமங்கள் மற்றும் தமிழ்நாட்டிற்கும் இடம்பெயர வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். 2009 வரையிலும் போர் நீடித்துக்கொண்டிருந்தமையால் அதுவரையும் இத்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. 2009 இல் போர் முடிவுக்கு வந்த பின் இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பியிருந்தனர். மீண்டும் தமது மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சித்தபோதும் தொடர்ந்தும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டியவர்களாகவே இவர்கள் இருந்துவருகின்றனர். இந்தப் பின்னணியிலேயே இக்கட்டுரை வரையப்படுகின்றது.

இலங்கையின் வடகிழக்கு கடற்பகுதி


இக்கட்டுரை வடபிரதேசத்தின் கடல்வளத்திற்கான வாய்ப்புக்கள், சமுத்திரவியல் பின்னணிகள், இதில் ஈடுபட்டுவரும் மக்கள் தொகை, மீன்பிடியில் பயன்படுத்தப்படும் முறைகள், உற்பத்திப் போக்குகள், இவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் இன்று எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறிப்பாக இந்திய மீனவர்கள் ஊடுருவல், தென்பகுதி மீனவர்களின் வருகை இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், சட்டபூர்வமற்ற மீன்பிடிச் செயற்பாடுகள், உயர் பாதுகாப்பு வலய நெருக்கடிகள், மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் பற்றி ஆராய முற்படுகிறது.


வடபகுதிக் கடல்வளமும், சமுத்திரவியல் பின்னணியும்


கடல்வளம் இயற்கை எமக்களித்த அருங்கொடையாகும். விதையாமலே பயன்தருகின்ற வளமாகவும் காணப்படுகின்றது. அந்த வகையில் வடபகுதியில் உள்ள கடல்வளங்கள் செழிப்புடன் விளங்குவதற்கு இப்பிராந்தியத்தின் கடற்சூழல், அல்லது சமுத்திர சூழலின் இயல்புகளே முக்கிய காரணிகளாக அமைகின்றன. இத்தகைய சமுத்திர சூழல் கரையோரத்தின் இயல்புகள், கடலின் அடித்தளம், அதன் ஆழம், இங்கு ஊடும் நீரோட்டங்கள், பருவகாற்று மீன்களின் வகைகள் போன்றன முக்கிய பங்கினை வகிக்கின்றன.

வடபகுதியின் கரையோர நீளம் ஏறத்தாழ 649 கி.மீற்றர்களாகும். இது இலங்கையின் மொத்த கரையோர நீளத்தின் (730கி.மீ) ஏறத்தாழ 38- 40 சதவீதமாகும். (யாழ்ப்பாணம், கிளிநொச்சி, உட்பட 390கி.மீ, மன்னார் 163 கி.மீ, முல்லைதீவு 96 கி.மீ) இக்கரையோரங்கள் பல்லுருவத் தன்மைகொண்ட இயல்புடையவை. குடாக்கள், ஏரிகள், களப்புகள், உட்பட சிறிய தீவுகளையும் (யாழ்.குடாநாட்டில் அமைந்துள்ள ஏழு தீவுகள் உட்பட பாலைதீவு, கச்சதீவு போன்ற மக்கள் குடியிருப்புக்கள் அற்ற தீவுகள்) மீன்பிடித்திட்டுகளையும் அரிப்பு முத்து மேடு, பேசாலை இறால் மேடு, பருத்தித்துறை பேதுரு மீன்பிடி மேடு இவற்றில் குறிப்பிடத்தக்கன. ஆனையிறவு ஏரி, யாழ் ஏரி, தொண்டைமானாறு, உப்பாறு கடனீரேரி, கொக்கிளாய், நாயாறு, நந்திக்கடல் ஏரிகளும், மன்னார் எருக்கலம்பிட்டி களப்பு போன்றனவும் இவற்றில் சிறப்பிடம் பெறுகின்றன.


மேலும் இப்பிரதேசம் முக்கியமான நான்கு கடற்பரப்புகளை உள்ளடக்கியது.

  1. மன்னார் விரிகுடா

2. பாக்கு குடா

3. பாக்கு நீரிணைப்பகுதி

4. வங்காள விரிகுடா சார்ந்த கடல்

பாக்கு நீரிணைப்பகுதி

அத்துடன் ஆதாம்பாலம் (Adam’s bridge) எனப்படும் பல திட்டுக்களையுடைய தொடர்மணற்திட்டும் பிரசித்திபெற்ற கடற்சூழலுக்குட்பட்டதாக விளங்குகின்றது. மேற்குறித்த கடற்சூழலை பொறுத்தவரையில் பாக்கு குடா மற்றும் பாக்குநீரிணைப் பகுதி மிகவும் ஆழம்குறைந்த (20 மீ) பகுதியாக அடித்தளங்கள் சேறும், மணலும் கலந்த பகுதியாக காணப்படுகின்றது. இக்கடற்பரப்பில் தமிழ்நாட்டிலும், இலங்கையின் வடக்கு பகுதிகளிலும் ஓடுகின்ற பருவகால ஆறுகளை கொண்டு செல்லும் நன்னீர் கலப்பும், சத்துப் பொருட்களும் இக்குறித்த கடற்பகுதி செழிப்பான வளம் செறிந்து காணப்படுவதற்குரிய காரணிகளாக உள்ளன. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இவை அமைந்துள்ளமையினால் இரு நாட்டுக்கும் இடையில் கடல் எல்லைகள் 1974, 1976ம் ஆண்டுகளில் வரையப்பட்டமையினால் குறுகலான கடற்பகுதியாகவே காணப்படுகின்றது. இப்பகுதியில் தான் கச்சதீவு (பாக்கு குடா பகுதியின் மையப்பகுதி) அமைந்துள்ளது. இதைச் சார்ந்த பகுதியில்தான் இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையிலான சர்ச்சை முடிவற்ற வகையில் தொடர்ந்து செல்கின்றது. தனியே கச்ச தீவு குறித்து பின்னர் விரிவாக நோக்கலாம்.


அடுத்து மன்னார் குடா கடல். இது மன்னார் தீவுக்கு தெற்குப்புறமாக இட அமைவு பெற்றுள்ளது. இக்கடற்பரப்பின் ஆழம் 200மீற்றருக்கும் மேற்பட்டு அமைகின்றது. அடித்தளம் மணலும் கற்பார்களும் கொண்டது. இக்கடற்பரப்பில்தான் புகழ்பெற்ற அரிப்பு முத்துமேடு முத்துக்குளித்தலுக்குப் புகழ்பெற்ற ஒன்றாக விளங்கியது. இவைதவிர வங்காலை, சிறியத்துறை முருகைப்பார் தொடர்களும் அமைந்துள்ளன. இதனால் இக்கடற்பரப்பு வரலாற்று ரீதியாக முத்துகுளித்தலுக்குப் புகழ்பெற்று விளங்கியது. இப்போது கடற்சூழலில் ஏற்பட்ட மாற்றம், நவீன மீன்பிடிச் செயற்பாடுகள் இப்பகுதியில் விரிவடைந்தமை, சட்டபூர்வமற்ற முறைகளில் டைனமெட் வெடிவைத்து மீன்பிடித்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றமை போன்ற காரணிகளால் முத்துக்குளிப்பு முயற்சிகள் கைவிடப்பட்டதாக ஆய்வு மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.


வங்காள விரிகுடா சார்ந்த ஆழ்கடல்

வடபகுதியின் முக்கிய ஆழ்கடல் பகுதியாக இது விளங்குகின்றது. பருத்தித்துறையிலிருந்து முல்லைத்தீவுக் கரையோரம் தொடக்கம் கிழக்காக 200 கடல் மைல் தூரம் வரை இந்தக்கடற்பரப்பில் வடபகுதிக்குச் சொந்தமாக விரிவடைந்து செல்கிறது. மிகக் கிட்டிய தூரத்திலேயே மிக ஆழமுடையதாகவும் (200மீற்றர்) தூரம் செல்ல செல்ல மேலும் ஆழமுடையதாக (300 மீற்றர்- 500 மீற்றர்) இக்கடற்பரப்பு அமைந்துள்ளது. இக்கடற்பரப்பிலேயே புகழ்பெற்ற பேதுரு மீன்பிடி மேடையும் அமைந்துள்ளது. இக்கடற்பரப்பு ஆழ்கடல் மீன்பிடிக்கும் கரையோரம் கரைவலை மீன்பிடிக்கும் ஏற்ற ஆழத்தைக் கொண்டிருக்கிறது. வடகீழ் பருவப் பெயர்ச்சி காற்று காலங்களில் வீசும் வடகீழ் பருவகாற்று பெயர்ச்சிக்காற்று இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துகின்றது. நவம்பர் – டிசம்பரில் இப்பகுதியில் நிலவும் வங்காள விரிகுடாச் சூறாவளியின் தாக்கமும் இக்கடற்பரப்பிலேயே செல்வாக்குமிக்க ஒன்றாகவும், அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

கரைவலை மீன்பிடி


பருவகாற்று நீரோட்டங்கள்


வடபகுதி கடற்பரப்பில் மீன்பிடித்தொழிலில் மிகவும் செல்வாக்கு செலுத்துகின்ற ஒன்றாக பருவகாற்று நகர்வுகள்/ நீரோட்டம் விளங்குகின்றது. வடகீழ் பருவகாற்றானது நவம்பர் – டிசம்பர் முதல் பெப்ரவரி – மார்ச் வரை வீசுகின்றது. இக்காலப்பகுதியில் இக்காற்றின் திசைக்கேற்ப வங்காள விரிகுடா கடலில் இருந்து ஓடும் நீரோட்டமானது கிழக்கு முல்லைத்தீவு கரைவழியாவும், பாக்குநீரிணை ஊடாக பாக்கு குடாவையும் அங்கிருந்து ஆதாம்பாலம் வழியாக மன்னார் குடா கடலையும் நோக்கி ஓடுகிறது. இதேபோல ஏப்ரல் – மே தொடக்கம் ஒக்டோபர் – நவம்பர் வரை வீசுகின்ற தென்மேல் பருவகாற்று வீசுகின்றபோது – ஓடும் நீரோட்டமானது வடகீழ் பருவகாற்று நீரோட்டத்திற்கு எதிர்திசையாக மன்னார் குடாவிலிருந்து ஆதாம்பாலம் வழியாகவும், பாக்கு குடா பாக்கு நீரிணை வழியாகவும், வங்காள விரிகுடா கடலை அடைகின்றது. இவ்வாறு இரு பருவகாற்றுக் காலங்களிலும் அக்காற்றுக்களின் திசைக்கேற்ப மாறி மாறி ஓடுவதினால் வங்காள விரிகுடா கடலிலிருந்தும் மன்னார் குடா கடலில் இருந்தும் சத்துபொருட்கள் நீரோட்டத்தின் வழியாக கொண்டுவரப்படுகின்றன. அத்தோடு பருவகாற்றுகளுக்கேற்ப மீன்களும் ஒரு பகுதியில் இருந்து இன்னொருப்பகுதிக்கு இடம்பெயரவும் காரணமாகின்றன. இதனால் வடபகுதியின் நில அமைப்பு அதன் அமைவிடம் காரணமாக நீரோட்டங்களின் ஆதிக்கத்திற்குட்பட்டு வருடம் முழுவதும் மீன்பிடியில் ஈடுபடவாய்ப்பளிக்கின்றது. வடகிழக்கு பருவகாற்று காலம் வாடைப் பருவம் என்றும், தென்மேற்கு பருவகாற்று சோளகம் என்றும், நவம்பர் – டிசம்பரில் நிலவும் அசாதாரண சூறாவளிக் காற்று – ‘கச்சான்’ என்றும் மீனவர்களால் அழைக்கப்படுகிறது.

கண்டல் தாவரங்களும் பவளப்பாறைகளும்


வடபகுதி கடற்பரப்பின் இன்னொரு சிறப்பம்சமாக கண்டல் தாவரப்பரம்பலும், பவளப்பாறைகளும் அமைகின்றன. கண்டல் காடுகளானது முல்லைதீவு ஏரிப்பகுதியைச் சூழவும், சுண்டிக்குளம், வங்காலை சரணாலயப்பகுதி, யாழ் ஏரி, தொண்டைமானாறு ஏரி, தீவக கரையோரங்கள், ஆனையிறவு ஏரிப்பகுதி, கிளிநொச்சி கரையோரப்பகுதி மன்னார் ஏரிப்பகுதி எங்கும் செழிப்புடன் காணப்படுகின்றன. இலங்கையின் மொத்த கண்டற்காடுகளின் பரம்பலில் ஏறத்தாழ பல ஹெக்டேயர் பரப்பு வடப்பகுதியிலேயே பரப்பியிருப்பது சிறப்பான அம்சமாகும்.
மீன்களின் உறைவிடமாகவும், இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் பாதுகாப்பாக தங்குமிடமாகவும் இவைகள் விளங்குகின்றன. இதனச் காற்றுள்ளப்பகுதிகளிலேயே ஏரிப்பகுதிக்குரிய இறால், பாலைமீன் பச்சை நண்டு மற்றும் ஏரிக்குரிய ஒட்டி, ஒரா, மணலை போன்ற மீன்களின் வளர்ச்சிக்கும் துணையாக அமைந்துள்ளது.

 கண்டல் தாவரங்கள்


கன்னல் மரம் (gray mangrove / avicennia marina )
கண்டல் (mangrove / Rhizophora mucronata
கிண்ணை (mangrove apple/ sonneratia alba) ஆகியன இப்பிரதேசத்தில் பரம்பியுள்ள முக்கிய கரையோர கண்டல் தாவரங்களாகும்.

முருங்கைப்பார் தொடர்கள்


இவை பவளப்பாறைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. வடபகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளைக் கொண்ட பவளப்பாறைகள் கண்டறியப்பட்டுள்ளன. பவளக்கொடி முருகை, கெட்டிப்படுத்தலிலான நுண்துளைமுருகை, கற்பாறை முருகை, இத்தகைய முருகைப் பார்கள் மீன்களின் உறைவிடமாக காப்பகமாக, இனபெருக்கம் இடமாகவும், சுற்றாடலை தூய்மையாக வைத்திருந்து, மீன்களின் வளர்ச்சிக்கு துணைபுரிகின்ற ஓர் தொகுதியாகவும் விளங்குகின்றன. அலங்கார மீன் உற்பத்தி, சுற்றுலாத்தளமாகவும், அலைகளினதும் நீரோட்டங்களினதும் வேகத்தைக் கட்டும் பகுதி கடலோர அரிப்பை தடுக்கச்செய்யும் அணை போன்று இவை தொழிற்படுகின்றன. சிலாபத்துறைபார், வடபகுதியில் சிறப்பானவையாகும்.
மேலும், வடபகுதி கரையோரங்களில் வற்றுப்பெருக்கு மேடுகள், மன்னாரிலிருந்து பூநகரி வரையிலான பகுதி, கற்புதர்கள் சதுப்பு நிலத் தாவரங்கள், சதுப்பு நிலங்கள், ஈரவலயங்கள், மணற்குன்றுகள், வடமராட்சி கிழக்குகரையோரம், மணற்காடு, பூநகரி, நாச்சிக்குடா பகுதிகளில் முக்கியமான நிலவுருவங்களாக காணப்படுகின்றன.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

19383 பார்வைகள்

About the Author

சூசை ஆனந்தன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை பேராசிரியரான சூசை ஆனந்தன் அவர்கள், தனது இளமாணிப் பட்டம், முதுமாணிப் பட்டம் மற்றும் கலாநிதி பட்டத்தையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலேயே பெற்றுக்கொண்டார்.

'சமுத்திரவியல்', 'கச்சத்தீவு அன்றும் இன்றும்', 'மீன்பிடி உபகரணங்கள்' போன்ற நூல்களை எழுதியுள்ளதுடன் பல ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்