2018 ஆண்டு கணிப்பீடுகளின் பிரகாரம் வடமாகாணத்தில் மொத்த மீனவர் குடித்தொகை 7,16 ,040 ஆகும். இது இலங்கையின் மொத்த மீனவர் தொகையில் (26.86%) சதவீதமாகும். மொத்த மீனவ குடும்பங்களின் எண்ணிக்கை 5,03,10 ஆகவும், நேரடியாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் தொகை 5,14,70 ஆகவும் காணப்படுகின்றது.
பெரும்பாலும் பெண்கள் நேரடியாக மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதில்லை, மீன்பிடிசார்ந்த உப-தொழில்களான பதனிடல், சில்லறை வர்த்தகம் போன்றவற்றில் இவர்கள் ஈடுபடுகின்றனர். இத்துறையில் பதனிடல், வர்த்தகம், போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கை, படகு, இயந்திர பழுதுபார்த்தல், ஐஸ் உற்பத்தி, படகு உற்பத்தி, வலைப்பின்னல் போன்ற நடவடிக்கைகளிலும் கணிசமானோர் ஈடுபட்டு வருவதை அவதானிக்கலாம்.
ஏறத்தாழ நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட மீன்பிடிக் கிராமங்கள் வடபகுதிக் கரையோரத்தில் இடஅமைவு பெற்றுள்ளன. மிக முக்கிய மீன்பிடிக்கிராமங்களாக மன்னார் மாவட்டத்தில் பேசாலை, தலைமன்னார், வங்காலை, அரிப்பு, தாழ்வுபாடு, விடத்தல்தீவு ஆகிய கிராமங்களும் கிளிநொச்சியில் வலைப்பாடு, நாச்சிகுடா, பள்ளிக்குடா போன்ற இடங்களும், முல்லைதீவில் கள்ளப்பாடு, கொக்கிளாய், நாயாறு , செம்மலை போன்ற இடங்களும், யாழ்ப்பாணத்தில் குருநகர் மாதகல், மயிலிட்டி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, தாழையடி போன்ற இடங்களும் பிரசித்தி பெற்ற மீன்பிடி இடங்களாக விளங்குகின்றன.
மீன்பிடி முறைகள்
வடக்கு பிரதேசமானது இலங்கையின் ஏனைய கரையோரப் பிரதேசங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு வாய்ந்த சமுத்திர சூழலை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். கிழக்கே, வடமராட்சி கிழக்கு முதல் முல்லைத்தீவு கரையில் இருந்து 200 கடல் மைல் தூரம் வரையிலான பகுதி தூரக்கரை, ஆழ்கடல் (Ofsjore ànd Deep Sea fishing) மீன்பிடிக்கும் , யாழ்ப்பாணம், வலிவடக்கு வடமராட்சி, வடக்கு மற்றும் தீவகப் பகுதி,மன்னார் வடக்கு தெற்கு கரையோரங்கள் கரையோர மீன்பிடிக்கான வாய்ப்பினையும், (Coastal fishing) யாழ் ஏரி தீவகம், ஆனையிறவு ஏரி மற்றும் பூநகரி முதல் தள்ளாடி வரையிலான நீண்ட கரையோரப் பகுதியும் ஏரி சார்ந்த பண்புகளையும் கொண்டுள்ளன. இதனால் ஏரி சார்ந்த ( Lagoon fishing) இடங்கள் மீன்பிடியில் சிறப்பிடம் பெறுகின்றன.
ஏரிப்பகுதிகளில் சிறகுவலை, இறால் கூடு, வீச்சுவலை, கைத்தூண்டில் மற்றும் கடலட்டை, இறால், நண்டு வளர்ப்பு போன்ற மீன்பிடிச் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற வாய்ப்பாக அமைந்துள்ளன. அதேவேளை ஏனைய மன்னார்த் தீவின் வட மற்றும் தென்கடல் பிரதேசங்களிலும் வடமராட்சி வடக்கு, வலிகாமம் பகுதிகளிலும் முல்லைத்தீவு கரையோரங்களிலும் கரையோர மீன்பிடிகளான கரைவலை(Beach seine) மற்றும் மீன்பிடி படுப்பு வலை அல்லது பாய்ச்சு வலைத் தொழிலும் (drift net) மிதப்புத் தூண்டில் வரிசை( long ĺine ), கூடு வைத்து மீன்பிடித்தல் சுருக்கு மடி (purse seine) போன்ற மீன்பிடித்தலுக்கும் சுழியோடி சங்கு சேகரித்தல், கடல் அட்டை சேகரித்தலுக்கும் வாய்ப்பான பகுதியாக விளங்குகின்றது. மேலும் யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் ஆழ்கடல் வரை சென்று பல நாட்கலங்களின் (Multi day boat) உதவியுடன் படுப்புவலை மிதப்பு தூண்டில் வரிசை சுற்றிவளைக்கும் வலை (Surrounding net ) போன்ற முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
கரைவலை மீன்பிடியானது வடமராட்சி கிழக்கு மணற்காடு, தழையடி, செம்பியன் பற்று, பகுதிகளிலும் முல்லைத்தீவு கரையோரம் மன்னார்த்தீவின் வடகரையோரத்திலும், தலைமன்னார் பகுதிகளிலும் நடுக்குடா, வங்காலை, அரிப்பு தாழ்வுப்பகுதி போன்றன தீவின் தென்கரையோரத்திலும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பிரதேசத்தில் பிரதான மீன்பிடியாக படுப்புவலை மீன்பிடி அல்லது கில்லை (Gill net) விளங்குகின்றது. சூடை வலை, கும்பிளா வலை, அறக்கொட்டியான்வலை, சுறாவலை, திருக்கைவலை போன்றன இந்த படுப்பு வலைத்தொகுதியில் அடங்குகின்றன. எல்லா இடங்களிலும் பொதுவாக இவை பருவ காலங்களுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டு வருகின்றன . தீவகம், ஏரிப்பகுதியில், சிறகுவலை, இறால் கூடு ,அட்டை வளர்ப்பு சிறப்பிடம் பெறுகிறது. பேசாலை, பள்ளிமுனை, குருநகர் வல்வெட்டித்துறை பகுதியில் இழுவை மீன்பிடி முறை ( trawl net ) சிறப்பிடம் பெறுகிறது. அத்துடன் சுருக்கு மடி முறையும் முக்கியம் பெறுகிறது. அண்மைக்காலங்களில் குழைவைத்து கணவாய் பிடித்தல், அட்டை சேகரிப்பு, சங்கு சேகரிப்புக்களும் இடம்பெற்று வருகின்றன. இந்த வகையில் வட பிரதேசத்தில் ஏரி பகுதியில் முதல் ஆழ்கடல் வரையில் மேற்கொள்ளப்படுகின்ற சகலவிதமான மீன்பிடி முறைகளும் இடம்பெற்று வருவது இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கில்லாத சிறப்பம்சமாகும்.
தொடரும்.