வேட்டுவச் சடங்காற்றுகையின் குணமாக்கல்
Arts
10 நிமிட வாசிப்பு

வேட்டுவச் சடங்காற்றுகையின் குணமாக்கல்

May 26, 2022 | Ezhuna

இலங்கைத் தீவின்  பூர்வீக குடிகளாக சிங்களவர்களையும்  மற்றும் தமிழர்களையும்  அவர் தம் பேரினவாத சிந்தனையானது,  பல வரலாற்று புனைவுகளின் ஊடாக இற்றை வரை  தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால்  இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் வேடுவர் என்பதை எவரும் மறுக்கவியலாது. அதனடிப்படையில், கிழக்குக் கரையோரம் எங்கும் வாழும் இன்று தமிழை பேசு மொழியாகக் கொண்டுள்ள வேடுவர்களின் இருப்பியல் பற்றியும், அவர் தம் தேவை பற்றியும் ‘வேடர் மானிடவியல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் ஆய்வுப்பாங்கில் விவரிக்கின்றது. வேடுவர்களுக்கே உரித்தான அடையாளங்களை வெளிக்கொணர்வதாகவும், இதுவரை நாம் அறிந்திடாத வேடுவர் குணமாக்கல் சடங்குகள், இயற்கையுடன்  பின்னிப்பிணைந்த அவர்களின் வாழ்வியல், வேடுவர் மீதான ஆதிக்க சாதியினரின் பாகுபாடுகள் என்பன உள்ளிருந்து மரபு மீட்கும் நோக்கில் பிரதானமாகக் கண்டறியப்பட்டு, அவை தொடரின் ஊடாக முன்வைக்கப்படுகின்றன. அத்துடன் காலனிய எண்ண மேலாதிக்கத்துள் சிக்குண்டு அழிந்துகொண்டிருக்கும், அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அவர் தம் மானுட நகர்வுகள் முதலான பல அல்லோல கல்லோல நிலைமைகளும் இதில் விரிவாகப் பேசப்படுகின்றன.

கிழக்கிலங்கை களுவன்கேணி வேடர்களை மையப்படுத்திய பார்வை

கரையோர வேடர்கள் எனப்படுவோர் கிழக்கிலங்கையின் தமிழ் பேசும் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் இலங்கை வேடர்களினதும், இலங்கைத் தமிழர்களினதும் வழித்தோன்றல்களாகக் காணப்படுகின்றனர். அதே சமயம் இன்றைய சூழலில் இவர்களில் தூய (கலப்பற்ற) வேடர்களைக் காண்பது அரிதாகவே உள்ளது. வலிந்து ஏற்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டங்கள் மற்றும் புவியியல் மாறுதல்களின் விளைவாக ஏனைய சமூகங்களுடன் வாழ்வியல் முறைகள் மற்றும் மரபு ரீதியில் கலப்புற்றவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர். கிழக்குக் கரையோர வேடர்களின் வழிபாட்டு முறையாக மூதாதையர் (உத்தியாக்கள்) வழிபாடே பிரதானமாகக் காணப்படுகின்றது. பின்னைய காலங்களில் பல தெய்வங்கள் இடைச்செருகியுள்ளன.


இவர்களுக்கென்று தனி மொழி காணப்பட்டாலும் இன்றைய சூழலில் அது பெருவழக்கில் இல்லை. இவர்களின் வழிபாட்டின் போதே தமது மொழியினைப் பேசுகின்றனர். கிழக்கிலங்கையிலே இவர்கள் பாட்டாளிபுரம், மாங்கேணி, காயாங்கேணி, பனிச்சங்கேணி, மதுரங்குளம், கிரிமிச்சை, உரியங்கட்டு, கதிரவெளி, கட்டுமுறிவு, அமந்தனாவளி, வாகரை, புன்னைக்கிழங்கு, குஞ்சன்குளம், மட்டக்களப்பு (முகத்துவாரம்), வேடர் குடியிருப்பு (குடியிருப்பு), தளவாய், களுவன்கேணி, சித்தாண்டி, கிரான், சந்திவெளி, வாழைச்சேனை, நாசிவன் தீவு, இறால் ஓடை, பொண்டுகல்சேனை, கோங்கனை, பால்சேனை, திராய்மடு, வாகனேரி, முறுத்தானை, பழுகாமம், கொக்கட்டிச்சோலை ஆகிய இடங்களில் கலப்புற்றும், கலப்புறாமலும் வாழ்ந்து வருகின்றனர்.


சடங்கார்ந்த நடவடிக்கைகள் கொடுக்கின்ற ஆரோக்கிய உளவிடுபடு நிலைகள் என்பன வேறெந்த விடயப்பொருட்களினாலும் ஏற்படுத்த முடியாத வினை நடவடிக்கையாகும். பல வகையான சடங்காசாரங்கள் கிழக்கிலங்கையினைப் பொறுத்தமட்டில் காணப்பட்டாலும் வேடர்களின் வழிபாட்டு முறைகளில் காணப்படுகின்ற குணமாக்கல் தன்மைகளினை ஆராய முற்பட்டதற்கான காரணங்களில் மிக முக்கியமானது, இவர்களிடம் காணப்பட்ட சில தனித்துவமான பண்புக்காரணிகளே ஆகும். அதாவது இவர்களினை விட மிக ஆடம்பரமாக, பகட்டாக, அநேகர் பங்குகொள்கின்ற சடங்கு ஆற்றுகைகள் காணப்பட்டாலும், அவர்களிடம் மிகமோசமான சாதியப்பாகுபாடு, மற்ற மனிதர்களை கேவலமாக நடாத்தும் தன்மைகள், தேவையற்ற ஆடம்பரம் முதலான தாழ்வுச்சிக்கல்கள் அபரிமிதமாகக் காணப்படுகின்றன. ஆனால் வேடர் வழிபாட்டில் இப்பிறழ் பண்புகளினை அறவே காணமுடியாது. அவ்வகையான தன்மைகளுடன் முகிழ்ந்திருக்கும் பின்வரும் சடங்கார்ந்த குணமாக்கல் செயற்பாடுகள் பற்றி நோக்குவோம்.


இலங்கையின் வேடர்கள் மற்றும் அவர் தம் வழக்காறுகள் பற்றி இதுவரைக்கும் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் முதலாவதாக செலிக்மனின் The Veddas, க. தா. செல்வராசகோபாலினால் எழுதப்பட்ட யாரிந்த வேடர், பேரா. மௌனகுருவின் மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள், காலிங்க டியூடர் சில்வாவின் People Of Srilanka, கணநாத் ஒபயசேகரவின் ‘எல்லா வேடர்களும் எங்கு சென்று விட்டனர்?’, இ. நிசாந்தினியின் ‘மட்டக்களப்பில் வேடர் சமூகம்’ முதலானவற்றைக் குறிப்பிடலாம். மேற்கண்ட ஆய்வுகள் யாவும் வேடர் சமூகத்தவர்களின் மரபுசார் வழக்காறுகளைச் சொல்லியிருந்தாலும் அவர்களின் வழிபாடுகளில் காணப்படுகின்ற குணமாக்கல் மற்றும் ஆற்றுப்படுத்தல் நற்திற விளைவுகளைக் காரண காரியத் தன்மையுடன் உள்ளிருந்து விவரிக்கத் தவறியுள்ளன எனலாம். இதன் விளைவாகவே இவ்வாய்வு, வேட்டுவச் சடங்காற்றுகையின் குணமாக்கல் தன்மைகளையும் அதன் இன்றைய தேவைகளையும் பற்றி ஆராய முற்படுகிறது.

களுவன்கேணி கிராமத்தில் வேடுவர்கள்

களுவன்கேணிக் கிராமம் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட கிராமமாகும். இதற்கு இக்கிராமத்தின் பெயரே முதற் சான்றாகும். இக்கிராமத்தின் ஆதிக்குடிகள் வேடுவர்கள் தான் என்பதில் எதுவித ஐயமும் இல்லாத போதும், இவர்கள் எக்காலப்பகுதியில் இருந்து இங்கு வாழ்ந்து வருகின்றார்கள் என்பதைத் திட்டவட்டமாக அறிய முடியவில்லை. இவர்களின் தனித்துவமான வழக்காறுகள், பெயர்கள் மற்றும் முதியவர்கள் தரும் தகவல்களின் படி அந்நியராட்சி, அதற்கு முன் மன்னராட்சி என்பன ஏற்படுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவர்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள் என்பதை அறிய முடிகின்றது.

பழங்காலத்தில் களுவன்கேணி கிராமமானது கரையோரமாக மட்டக்களப்பு திராய்மடு தொடக்கம் வாகரை வரையும், தெற்கே சித்தாண்டியை அண்மித்துள்ளதும் வேடுவர்களால் செல்லாபத்து என அழைக்கப்பட்ட மோட்டுக் காட்டுப்பிரதேசம் அடங்கலாக பரந்த ஒரு நிலப்பரப்பைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது. இதற்குச் சான்றாக வேடுவர்களால் அழைக்கப்பட்டு வழக்கொழிந்து போன இடப்பெயர்கள் உள்ளன. அந்த இடங்கள் பற்றிய விபரம் வருமாறு. செல்லாபத்து – சித்தாண்டி பேரிலாவெளியை அண்டிய பகுதி, கல்குடா முதல் கல்மடு உட்பட்ட பகுதி (கல்கோடா), சவுக்கடி (கிரிமட்டி), தளவாய் குடியிருப்பு பகுதி, திருக்காகணி-திராய்மடு, கருவப்பங்கேணிப் பகுதி, ஆக்கமது – வாகரைப் பகுதி . ஆனால் அண்மைக் கால களுவன்கேணிக் கிராமமானது வெறும் நான்கு கிலோ மீற்றருக்குள் சுருங்கியுள்ளது.

களுவன்கேணி வேடுவர்களின் வழிபாட்டு முறைகள்


ஆரம்ப காலங்களைப் போன்று இன்றைய சூழலில் களுவன்கேணி வேடர்களின் வழிபாட்டு நடைமுறைகள் காணப்படவில்லை என்பதை தற்காலத்தில் வேடுவ வழிபாட்டில் ஈடுபடுபவர்களிடம் திரட்டிய தகவல்கள் மூலம் நன்கறிந்து கொள்ள முடிந்தது. கால மாறுதல்கள், சமூகக் கலப்புகள் மற்றும் பண்பாடு ரீதியான மானிடவியல் தாக்கங்களின் விளைவாக இவை நடந்தேறியுள்ளன எனலாம். எனினும் அவர்களுடைய வழிபாட்டின் வீரியமும், அது சார்ந்த நம்பிக்கை செயல் விளைவுகளும், அதனால் ஏற்படுத்தப் படுகின்ற நோய்நீக்கல் நிலைமைகள் மற்றும் குணமாக்கல் செயற்பாடுகள் என்பனவும் இன்றும் மேம்போக்கான ஆரோக்கியத் தன்மையுடன் காணப்படுகின்றமையும் கவனிக்கத்தக்கதே.


தற்காலத்தில் வேடர் சமூக மரபில் வந்து, தமது மூதாவிகளினால் கற்றுக்கொடுக்கப்பட்ட வேடுவ வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வருடா வருடம் சடங்கு வழிபாடுகளினைச் செய்து வருகின்ற வெ.கிட்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) என்னும் வேடுவ மதகுரு ஒருவர் தனது வழிபாட்டின் ஆரம்ப காலத்தினை இவ்வாறு கூறுகின்றார். “ஆரம்பத்துல இதுக்கு முதல் இதுகல ஆதரிச்சு (வழிபட்டு) வந்தது முடமாரியர் தான். அவருக்கு முதல் அவங்கட அப்பாவங்க ஆதரிச்சிது வந்த. அதுக்கு பின்னுக்கு அம்மாட தமையன் (அண்ணன்) கந்தன் எண்டவர் செய்து வந்தவர். புறகு அதோட சேந்த ஆட்கள் எல்லாரையும் இந்த தெய்வங்கள் எல்லாம் எடுத்துத்து. (இறந்து விட்டனர்) அதோட அந்த கோயிலடி மங்கிப்பொயித்து. அதுக்குப் புறகு எனக்கு ஒரு கண் வருத்தம் வந்தது. அதோட தான் இந்த தெய்வங்கள் எல்லாம் என்னுல வந்தது. அதுல வந்தது தான் நான் இப்ப வைச்சிரிக்கிற வேட கலைக்குள்ள வாற பத்தினி அம்மன். (பத்தினி தெய்யோ) எங்களுக்கு எல்லாத்துக்கும் முதல் குடல் புரி அம்மாதான் இதுகல ஆதரிச்சு வந்தவ. அவ களுவர், பனிக்கர் ஆக்களுக்குப் புறகு வந்தவ.” இது அவருடைய வழிபாட்டு முறைகளைப் பற்றிய பதிவாகும்.


இவர்களின் இன்றைய கால வழிபாட்டு முறைகளில் உத்தியாக்கள், மா தெடுத்தன், பாலைக்கா தெவுத்தன், குருணாகல தெவுத்தன், கடல் பகுதித்தெய்வம், குடா நீலி, மாதெலிக்காயே, வட்ட முகரி, கப்பல் தெய்வம், குறுமுந்தன, மாறா தெய்வம், கரை தெய்யா, கிரி அம்மா, பத்தினி தெய்யோ, குமாரர், கன்னிமார், கரடித்தெய்வம், பின்னைய கால இடைச்சேர்கைகளாக வந்து கெங்கை காளி, கெங்கை வைரவர், சுடலை வைரவர், மயானருத்ரர், காட்டேரி, சுடலைமாடன் முதலான தெய்வங்களுக்கான வணக்க முறைகளும், வழிபாட்டு ஆசாரங்களுமே காணப்படுகின்றன. இவ்வாறு பல வணக்க முறைகள் காணப்பட்டாலும் உத்தியாக்கள் மற்றும் குமாரர் வழிபாட்;டு முறைகளில் காணப்படுகின்ற குணமாக்கல் விளைவுகள் பற்றிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வேட்டுவ சடங்காற்றுகை போது

உத்தியாக்கள் (மூதாதையர்) வழிபாட்டு முறைகள் (Ancestress Ritual Process)

வேடுவர்களின் வழிபாட்டுச் சடங்குகளிலே முதலாவதாக வழிபாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படுவது உத்தியாக்கள் வழிபாடு ஆகும். அதாவது இவ்வழிபாட்டு முறை பற்றி, “ஆரம்பத்துல ஆசுவாதிகள் (மூதாதையர்) தான் இந்த நடைமுறை எல்லாம் செய்து வந்தவங்க. அவங்க செத்ததுக்குப் புறகு இந்த உலகத்துல இருந்து அந்த உலகத்துக்குப் பொயித்தாங்க. அதாலதான் அவங்க எல்லாம் இப்ப தெய்வங்கள். நாங்க ஒரு சடங்கச் செய்யக்குள்ள அவங்களுக்கு ஒரு பூ வைக்கத்தான் வேணும். அவங்க வந்து உடம்புல ஆடின புறகு தான் எங்களுக்கு மத்த தெய்வமெல்லாம் வரும்.
“இந்தா பெடியப்பா வடபலவலோ நொதியம்பலோ ஆயியே…… நாயோ… நாகனம்மாயா
கன்டா பெடியாப்பா கமகமளு பனுவனளு ஏக் மந்த்ரயே ரயனமோ
ரயனமல் ஏ….கமந்த் வெல்லாயன் வெல்லம்பாளன் வெரிகடிகத்தோ
உஸட சாயனட உன்னும் பாணன் கட்டாங்கரியோ ஓ….கமர்தரயோ தயங் …” (பாடல்)
எண்டு கூப்புட உத்தியாக்கள் வரும். புறகு பனுவள சீயா ( அவர்களது வேட குடிவழமை). அவர் ஒரு கட்டாடி. இப்புடி நாங்க பனிக்கர், களுவர், குடல்புரி ஆச்சி, ரெட்டையர், பால்குடியா, சியா, முடமாரி, களுக்கொட்டா, இங்குலு கொட்டா, உக்குளுமா சியா எண்டு (இவர்களுடைய மூதாதையர்கள்.) எல்லாரையும் கூப்புடுவம்.
” என்கிறார் அவ்வேட்டுவ மதகுரு.

உத்தியாக்கள் வழிபாட்டில் குணமாக்கல் விளைவுகள்
(healing Effects in Ancestress Ritual Process)


வேடர்களின் வழிபாட்டு முறைகளில் உத்தியாக்களின் வழிபாடு என்பது மிகத் தோழமையுடனும், உறவுமுறையுடனும் ஆற்றுகை செய்யப்படுகின்றதோர் வழிபாடு ஆகும். இச்சடங்கிலே காணப்படுகின்ற குணமாக்கல் தன்மை என்பதும் மிகவும் தனித்திறம் கொண்ட இயல்புகளினைக் கட்டமைத்துக் காணப்படுகின்றது. அதாவது இவர்களின் கடவுளர் என்பது கண்ணுக்குத் தெரியாத மாய உருவங்களோ அல்லது உண்மைத் தன்மையற்ற கருத்துத் திரிபுகளோ கிடையாது. மாறாக தாம் ஒன்றாகக் கூடி வாழ்ந்த, வளர்ந்த, நல்ல கெட்ட நிகழ்வுகளுடன் ஒன்றித்துப் போன தமக்கு முந்தைய உறவுகளினை வழிபாடு செய்பவையாகவே காணப்படுகின்றன. குணமாக்கல் செயன்முறையில் மிகவும் இன்றியமையாத ஒரு யுக்தி முறையாகக் குணமாக்கல் உறவுமுறை (healing Relationship) என்பது காணப்படுவதையும் கூறவேண்டியுள்ளது.


இவர்களுடைய சடங்காற்றுகையின் போது உத்தியாக்கள் (மூதாதையர்) வழிபாடொன்றின் அவதானிப்புக்கள் பின்வருமாறு அமைந்திருந்தன. சடங்கு நடவடிக்கைகள் செவ்வனே ஆரம்பமாகி உத்தியாக்களின் வழிபாட்டின் அரையிறுதியில் இருந்து பக்தர்களின் வேண்டுகோளிற்கான, காத்திருப்புக்கான நேரம் வந்தது. அங்கு சிலர், பல பொருட்கள் தாங்கிய ஓலைப்பெட்டியுடன் (பழவகைகள், உணவுப் பண்டங்கள், மற்றும் சில பொருட்களுடன்) காத்துக் கிடந்தனர். அதில் ஒரு சிலரே ஆண்கள். அவர்களின் இருப்பிடம் நோக்கி உருவாடுகின்ற தேவாதி (கலையாடுபவர்) அழைத்துச் செல்லப்பட்டு ,அவர் கொட்டு வாத்திய ஒலி மற்றும் பாடல்களின் மூலம் உருவேற்றப்படுகின்றார். அந்த உருவேற்றல் முறையானது மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதாவது உருவேற்றப்பட்ட தேவாதி அழத்தொடங்கினார். பின்பு அழுகை அதிகரித்து விம்மி விம்மி அழத்தொடங்கினார். அவருடைய குரல் வித்தியாசமானதாகவும் காணப்பட்டது. அந்த குரலினைப் புரிந்து கொண்டு அருகில் இருந்த நடுத்தர வயதான பெண் “எண்ட மகனே” என அழைத்த வண்ணம் அழுது கொண்டு அவர் தனது பெட்டியுடன் முன்னோக்கி வந்தார்.

அவ்வாறு வந்தவுடன் தேவாதியும், குறித்த அப்பெண்ணும் மாறி மாறி அழுத வண்ணம் ஒருவரையொருவர் கட்டித்தழுவிய படி தமது உறவுக்கான சம்பாசணைகளைச் செய்து கொள்கின்றனர். அவை ஓரிரு நிமிடங்கள் தொடர்ந்த பின்னர் தேவாதி அப்பெண் கொண்டு வந்த பெட்டியினுள் இருந்த உணவுகளை எடுத்து புசிக்கின்றார். அதனுள் இருந்த உடைகளை எடுத்துத் தோளில் போட்டுக் கொள்கின்றார். அதனைத் தொடர்ந்து பேச ஆரம்பிக்கின்றார். அவ்வுரையாடலானது சைகை மொழியாகவே காணப்பட அதற்கான விளக்கத்தினை அருகில் இருப்பவர்கள் கூறினர்.

வேட்டுவ சடங்காற்றுகை போது


அவ்வாறு நடந்த பின்னர் குறித்த பெண் உரத்த குரலில் அழத்தொடங்கினார். மார்பில் அடித்தடித்து அழுதார். அவரோடு வந்திருந்தவர்களும் சேர்ந்து அழுதனர். பல நிமிடங்களுக்கு இச்செயல் நீடித்தது. சில மணித்தியாலயங்களின் பின்னர் அவர்கள் சடங்கு நடடிக்கைக்கு தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டனர். குறித்த அப்பெண்ணுடன் கலந்துரையாடிய போது அவர் இவ்வாறு கூறினார். “ எண்ட மகன 2014ம் ஆண்டு சி.ஐ.டி புடிச்சுப்போன. அவரத் தேடாத இடமில்லை. தெரிஞ்ச எல்லாரிட்டையும் கேட்டுப்பாத்தும் பலனில்லை. பிறகு தான் இஞ்ச வந்தனாங்க. மூண்டு வருசமா சடங்குக்கு வந்தனாங்க. இந்த முறதான் எண்ட மகன் வாக்குத்துறந்து இருக்காரு. இவளவு நாளும் உண்ம என்னெண்டு தெரியாம நாங்க செரியான துன்பப்பட்டனாங்க தம்பி. இந்த முற மனசுக்கு கவலைய விட கொஞ்சம் ஆறுதால இருக்கு. எண்ட புள்ள செத்துப்பொனது தெரியாம இருந்திட்டம். என்ன செய்ய முடியும் நம்மளால. எல்லாம் இவங்கதான் தான் பாத்துக் கொள்ளனும்” என்றார்.


உண்மையில் இச்சந்தர்ப்பமானது குணமாக்கல் செயன்முறையின் உச்சகட்ட விளைவாகும். மனிதருடைய மனப்பாதிப்புக்களைப் போக்குவதென்பது அவ்வளவு இலகுவான காரியமன்று. ஆனால் இவ்வகையான வேட்டுவச் சடங்கின் அடியாக, ஒரு குறிப்பிட்ட கண நேரத்தினுள் உளவிடுபடு நிலையினை முற்றிலுமாகக் கொடுத்து விட முடிகின்றமையானது வேட்டுவ வழிபாட்டின் உத்தியாக்கள் சடங்கின் ஊடாக ஈடேறுகின்றமை மிக வலுத்திறமான நோய் நீக்கல் நடவடிக்கை ஆகும். சடங்கு, வழிபாடு என்பவற்றின் அடியாக விளைந்த சடங்காசார நிகழ்வுகளின் மூலமே அது சாத்தியம் எனலாம். இன்றைய எமது தமிழ் சூழலில் போரின் தாக்கம் மற்றும் அதனோடு இணைந்த நடவடிக்கையினால் எமது மக்கள் பட்ட, படுகின்ற சொல்லொணா மன அழுத்தங்களினைப் போக்கிக் கொள்வதற்கு இவ்வாறான சடங்காற்றுகைகள் பெரிதும் உதவியாக இருப்பதும், இருக்கும் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதே.

இவ்வாறான தன்மை கொண்டதாகவே சிங்களப் பகுதிகளில் வாழ்கின்ற வேடர்களின் மூதாதையர் வழிபாட்டு முறைகளும் காணப்படுகின்றன. இவர்கள் தமது மூதாதையினரையே தமக்கான ஆதாரமாக, பாதுகாப்புக் கட்டமைப்பாக நினைத்துக் கொள்கின்றார்கள். இவர்கள் தமது இறந்த முன்னோர்களின் ஆவியினை வழிபாடு செய்து அவர்களினைக் கௌரவப்படுத்தா விடின், தமது உறவுகளில் யாருக்காவது நோய் பிணிகள் வந்து விடும் எனவும், தமது வேட்டைகளில் பிரச்சினைகள், இடையூறுகள் ஏற்பட்டு விடும் எனவும் அச்சம் கொள்கின்றனர்.

குமாரர் வழிபாட்டு முறைமை. (Kumarar Worship Process)


இவ்வழிபாட்டு முறையானது ஆதியில் களுவன்கேணியில் இருந்தே ஏனைய இடங்களான தளவாய் முதலிய இடங்களுக்குப் பரவியுள்ளமையினை ஆய்வின் ஊடாக அறிய முடிந்தது. “இஞ்ச இருந்த குமாரரத்தான் களுவர் ஆக்கள் தளவாய்க்குக் (களுவன்கேணிக்கு அருகிலுள்ள கிராமம்.) கொண்டு போனவங்க. இஞ்ச இருக்குறவங்க இத வழிபட மாட்டாங்க எண்டு.” (களுவன்கேணி வேட்டுவ மதகுரு) இத்தகவல் அதை உறுதிப்படுத்தும். இவ்வாறு விரிவுபடுத்தப்பட்ட குமாரர் வழிபாடு எவ்வாறு வேடர் வழிபாட்டிற்குள் நுழைந்தது என்பது பற்றிய பல புராணக்கதைகள் உலாவுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


குமாரர் வழிபாட்டில் பல வகைகள் காணப்படுகின்றன. அவை செல்லக்குமாரர், வீரக்குமாரர், காலிக்குமாரர், கொழும்புக்குமாரர், கண்டிக்குமாரர், சங்கிலிக் குமாரர், முத்துக்குமாரர், வதனக்குமாரர், புள்ளிக்குமாரர், பொல்லுக்குமாரர், ஆதிக்குமாரர் முதலிய குமாரர் கலைகள் ஆகும். ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட இவ்வழிபாட்டுச் சூழலில் நம்பமுடியாத வண்ணம் குணமாக்கல் திருப்தியைக் கொடுக்கும் விதமாக இக்குமாரர் வழிபாடானது காணப்படுகின்றமையை கள ஆய்வின் ஊடாக அவதானிக்க முடிந்தது. அதாவது பிள்ளைப் பேறுக்கான மிகவும் ஆத்மார்த்தமாக நம்பப்படுகின்ற சடங்கு முறையாக இது காணப்படுகின்றது.


குமாரர் வழிபாட்டின் குணமாக்கல் விளைவுகள்- healing Effects in Kumarar Worship Process

ஒரு தம்பதியினர் பல காலமாக தமக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் வைத்தியசாலை மற்றும் ஏனைய பல முறைகளை எல்லாம் தம்மில் நடைமுறைப்படுத்திப் பார்த்து விட்டும், குழந்தைக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்னும் மனக்கசப்பான தகவல் அவர்களுக்கு கிடைக்கின்றது. தமது உறவுகள், அயலவர்கள் உட்பட அனைவரின் வசையினாலும் உச்சகட்ட மன அழுத்தத்திற்கு உள்ளாகித் தவிக்கின்ற வேளையிலே குமாரர் வழிபாடு பற்றி அறிந்து இங்கு வருகின்றனர். பலனும் அடைகின்றனர்.

“தங்களுக்கு புள்ள இல்லண்டு தம்பதியள் வந்தால், உடனே நான் பெரிய சாமிக்குள்ளால (சிவன்) குறி பாப்பன். அதுல சொல்லும் என்னால முடியாது குமாரருக்கு உள்ளால வேல செய்யனும் எண்டு. புறகு நான் தம்பதிகளுட்ட எத்தின புள்ள வேணும் எண்டு கேட்பன். ஒண்டா, ரெண்டா எண்டு. ஏனெண்டால் குமாரருட்ட முதல் தரம் கேட்குற மாதிரிதான் புள்ளையள் புறக்கும். ஒண்டு எண்டால் ஒண்டுதான், ரெண்டு எண்டால் ரெண்டுதான். கேட்டுத்து குமாரருக்கு உள்ளால அஞ்சி வாழப்பழத்த அந்த பொண்ணுக்குக் ஓதிக்குடுப்பன். நான் ஓதிக்குடுக்குற அஞ்சி பழத்தையும் காலையில பச்சத்தண்ணியும் குடிக்காம சாப்புடனும். அப்புடி செஞ்சா அடுத்த மாதம் துவால (மாதவிடாய்) மாறி மாறி வரும். அதாவது முன்னுக்கு வரும், பின்னுக்கு வரும், பட்டும் படாத மாதிரி வரும். (அதாவது குறித்த அப்பெண்ணின் மாதவிடாய் ஆனது வழமைக்கு மாறாக சிறு அளவு வெளியேறல்) அதுதான் புள்ளைக்கான முதல் அறிகுறி, அதோட சேந்து அந்த பொண்ணுக்கு உடலுறவு சார்ந்த கனவுகளும் வரும். அத அந்த பொம்புல ரகசியங் காத்து என்னட்ட சொல்லனும். அப்படி சொன்ன புறகு நான் உடலுறவு கொள்ள அவங்களுக்கு விருப்பம் சொல்லுவன். அதுவரைக்கும் கூடாது. அப்படி அவங்க உடலுறவு செய்யக்குள்ள அந்த ஆண்ட ரூபத்துல குமாரர் போவாரு. இப்படி செய்தால் அடுத்த வருடம் இந்த ஆலயத்துக்கு புள்ளயோட வருவாங்க. இதுக்கு சடங்கு காலத்துலதான் வரணும் எண்டில்ல. எப்ப வந்தாலும் குமாரர் செய்து கொடுப்பாரு.”

இவ்வாறாக குமாரர் வழிபாட்டின் ஊடான குணமாக்கல் செயன்முறையினை அந்தமதகுரு விளக்கினார். இங்கு பல விடயங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவையாகும். மனித மனங்களின் ஒருமித்த சக்தி, ஒன்றை அடைய வேண்டும் என்ற தீவிர செயற்பாடு, தமக்கு தம்மை மிஞ்சிய சக்தி பாதுகாப்பு அளிக்கின்றது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை முதலான குணமாக்கல் உத்திகள் என்பன குறித்த பாதிப்படைந்தவர்களிடம் இவ்வழிபாட்டின் மூலம் ஈடேறி விடுகின்றமையே இங்கு கவனிக்கப்பட வேண்டிய குணமாக்கல் நிலைமையாகும். அதுவரை காலமும் வைத்தியசாலைகள் மற்றும் இதரபல இடங்களிலும் சிகிச்சை பெற்றுக் கொண்டு, அங்கிருந்து சாத்தியம் இல்லை என்று கைவிட்ட பின்னர் இது எவ்வாறு சாத்தியம் ஆகின்றது என்பது வியப்புக்குரிய விடயமாகும்.

இன,மத பேதங்கள் கடந்தும் இவ்வழிபாட்டு முறையில் குணமாக்கல் விளைவு பரவியிருந்ததை அறிய முடிந்தது. நம்பிக்கை என்னும் கூட்டுணர்வு என்பதற்கு முன்னால் இவர்களிடம் எதையும் கொண்டு செல்ல முடியாது. காரணம் இவ்வழிபாட்டு முறைகள் மிகவும் ஆழ்ந்த, மரபு சார் உணர்வு பூர்வமான, அதியுச்ச நம்பிக்கை நடவடிக்கையாகும். இவ்வாறான சடங்குகளுடன் பேயோட்டல், திருநீறு போடல் (உடற்சோர்வு முதலியவற்றிற்கு), தண்ணீர் ஓதிக்கொடுத்தல் (செரிமானப் பிரச்சினை, தலைவலி முதலியவற்றிற்கு), நூல் கட்டுதல், கூடு போடுதல் (கெட்ட ஆவிகள் நெருங்காமல்), குறி பார்த்தல் முதலான வழிபாட்டு வழி குணமாக்கல் நடைமுறைகளும் களுவன்கேணி வேடர் வழிபாட்டில் அவதானிக்கக் கூடியவையாகும்.

குணமாக்கல் என்பது ஒரு மீட்புக்குச் (சுநஉழஎநசல) சமனான விடயமாகும். உளப்பாதிப்புற்ற ஒருவரை அவரது முன்னைய தொழிற்பாட்டு நிலைக்கு சகல வழிகளிலும் இட்டுச் செல்ல வைக்கும் நடைமுறைகளுக்கு வழிவகுப்பதாக அமைகின்ற மீட்புச் செயன்முறையினையே நாம் குணமாக்கல் என்கின்றோம். பாதிக்கப்பட்ட நபர்களினை ஒரு இயல்பான தொழிற்பாட்டு நிலைக்குச் செயற்பட ஆளாக்கி, அவர்களின் தொழிற்பாட்டுத் திறனை மேம்படுத்தி, அவர்களினை சமூகத்திற்கு உபயோகம் உடையவர்களாக மாற்றும் நடவடிக்கைகளினை பொதுவில் குணமாக்கல் செயன்முறை என்பர். இச் செயற்பாடானது ஒவ்வொரு தரப்பிலும் ஒவ்வொரு விதமாகக் காணப்படுகின்றது. குணமாக்கலானது நம்பிக்கை, பாதுகாப்பு, அமைதி, செயற்பாட்டுத்திறன், மகிழ்வு போன்ற உணர்வுகளைப் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மிகையாகக் கொடுக்கின்றது எனலாம்.


குணமாக்கல் விளைவுகள் மற்றும் ஆற்றுப்படுத்தல் முறைகள் என்பன மேற்கத்தேய உளவியல் செயற்பாடுகளிலேயே தோன்றி வளர்ந்துள்ளது என்பது பலரது நிலைப்பாடு ஆகும். ஆனால் எமது பாரம்பரிய சடங்காற்றுகைகள் மற்றும் அரங்க முறைமைகளில் இவ்வாறான செயற்பாடுகள் பல வருடங்களுக்கு முன்னே இருந்துள்ளமையினை குறித்த வழிபாட்டுச் சடங்கு நிகழ்வுகள் வலுவாக எடுத்தியம்புகின்றன. சக்தியற்ற ஓர் உணர்வையும், ஒரு சக்தியுள்ள உணர்வையும், இயற்கையின் மீது அச்சத்தையும், அதனோடு சேர்ந்து இயற்கையைக் கட்டுப்படுத்துகின்ற திறனையும் ஒரு சேர உருவாக்குகின்ற, மானுட வாழ்க்கையின் அடிவேரிலேயே இருக்கின்றன மாறாத தனித்துவங்கள் சடங்கு நடடிவக்கைகள் ஊடாக வெளிக்கொணரப்படுகின்றன. இயற்கையில் இருந்து ஒரு பொருளைப் பிரித்தெடுத்து, ஒரு அடையாளத்தின் மூலமாகப் பெயரிட்டு, அந்த மொழியுருவத்தை ஒரு சக்தி ஆயுதமாக மற்ற மனிதர்களுக்கும் கொடுப்பதான வேலையில் அமைந்ததாகவே வேட்டுவச் சடங்கும், அதுசார் ஆற்றுகைகளும் அமைந்து விடுகின்றன எனலாம்.


மேற்கத்தேய உளவியல் செயற்பாடுகளிலே காணப்படும் பிளேபேக் தியேட்டர் (Play back theatre) ஒரு சடங்கின் இடத்தைப் போன்று உருவாக்கப்படுகின்றது. அங்கு எந்தவொரு கதையும் சாதாரணமானதாக, அசாதாரணமானதாக, மறைக்கப்பட்ட அல்லது கடினமானதாக சொல்லப்படலாம், உடனடியாக அது நாடக ஆற்றுகையாக மாற்றப்படும். ஒவ்வொரு நபரின் தனித்துவமும் மதிக்கப்படுவதும் உறுதிப்படுத்தப்படுவதும் அதே நேரத்தில் மக்கள் சமூகமாக ஒருவருக்கொருவர் தங்கள் தொடர்புகளை உருவாக்குவதும் பலப்படுத்துவதுமான அனைத்துக் கூட்டுணர்வு சார் நடவடிக்கைகளையும் இந்த நாடக முறைமையானது கொடுத்து விடும் எனலாம். இவ்வாறான பண்புகள் ஆதியில் இருந்தே வேட்டுவச் சடங்கு மற்றும் அதுசார் ஆற்றுகைகளில் மிக இலகுவாக மேம்போக்கான தன்மையுடன் அமைந்துள்ளமையினை இவ்வாய்வின் ஊடாக விளங்கித் தெளிவுற முடிந்தது.

அவ்வகையில் தான் சடங்குகள், சடங்கார்ந்த நிகழ்வுகள், அது சார்ந்த மரபுகள், அந்நிகழ்வுகளின் மூலம் உண்டாக்கப்படுகின்ற கூட்டுணர்வுச் சேர்க்கைகளின் சக்திப்பிரவாகம் என்பன இவ்வழிபாடுகளை மேற்கொள்ளுகின்ற மனிதர்களினதும், பாதிப்புக்களைக் களைவதற்காக வழிபாட்டுகளை நாடிவருகின்ற மனிதர்களினதும் அதியுச்ச நம்பிக்கையின் விளைவாக விளைகின்ற உணர்வுப் பெருக்கினாலேயே சாத்தியமாகின்றமை புலனாகின்றது. இவ்வாறான தன்மைகளின் ஊடாகவே காலங்காலமாக மக்களில் நிலவுகின்ற உள நெருக்குதல் நிலைமைகளினை, மிகவும் இலகுவான முறையில் ஏற்படுத்தப்படுகின்ற சடங்காசாரங்களினால் ஈடேற்றி விடுகின்றமையை அவதானிப்புக்கள் வாயிலாக உணர்ந்து கொள்ள முடிந்தது. என்னதான் மேலைத்தேய கலாசாரங்களின் தாக்கங்களின் வாயிலாக குணமாக்கல் நடைமுறைகள் செயற்படுத்தப் பட்டாலும், பலவகையான பக்க விளைவுகளினை உண்டாக்கின்ற சிகிச்சை முறைகள், மருந்து மாத்திரைகள் என்பன பாதிப்புற்றவர்களின் குணங்குறிகளினை மட்டுமே மாற்றக்கூடியதாக அமைகின்றமையானது ஏற்றுக்கொள்ளப்படாத உண்மை.


இவ்வாறான சடங்குகளில் விக்டர் டர்னரின் மீவியல் வெளி, தலைகீழாக்கம் என்பன இல்லாது போகின்றமையினையும் உணர முடிந்தது. பிறந்தது தொடக்கம் இறப்பது வரையான காலப்பகுதியில் மனிதனின் வாழ்வில் மதச்சடங்குகள் முக்கிய இடம் பெறுகின்றன. சைவ சித்தாந்தம் அல்லது வேதாந்தம் நீண்ட கால நோக்கில் ஆன்ம விடுதலைக்கு வழிகாட்டினாலும் அன்றாடக் கஷ்டங்களில் இருந்து தப்ப, நோய்கள் மற்றும் வாழ்க்கைப் பிரச்சினைகளான நடைமுறைத் துயரங்களில் இருந்து மீள கிராமியச் சமயம் தான் கிராமிய மக்களுக்கு உதவுகின்றது. இந்த நோய் நொடிகளை ஏவுகிற சக்திகளையும், ஆவிகளையும் வசியம் பண்ணுவதன் மூலம் தமக்கு வரும் நோய்களைத் தீர்க்கலாம் என்ற நம்பிக்கையைக் கிராமிய சமயம் தருகின்றது.


“Animism , Magic Polytheism, Ghost beliefs and other forms of primitive religion, are rampant among the rural people to a far greater extent than among the urban people.”


ஆகவேதான இன்றைய காலகட்டத்தில் ஏற்படுத்தப்படுகின்ற உலகமயமாதல் மற்றும் காலனியச் சிலந்திச் சிக்கலுள் இருந்து விடுபட்டுக் கொள்வதற்கும், இவற்றால் உண்டாகின்ற பக்கவிளைவுகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கும் இவ்வாறான கலைசார்ந்த சடங்கார்ந்த நிகழ்வுகள் தான் மீளாத பயனைத்தரும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

21073 பார்வைகள்

About the Author

கமலநாதன் பத்திநாதன்

கமலநாதன் பத்திநாதன் அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடன நாடகத்துறையில் நாடகமும் அரங்கியலும் கற்கைநெறியில் இளமானி சிறப்புப்பட்டம் பெற்றவர். கிழக்கிலங்கையின் பூர்வ குடிகளான வேடர் சமூகத்தைச் சேர்ந்த இவர் இலங்கையில் தமிழ் பேசும் வேட்டுவ மக்கள் சார்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார். அவ்வகையில் ‘வேடர் மானிடவியல்’ எனும் விடயத்தின் கீழ் பல ஆய்வுக் கட்டுரைகளை தொடரச்சியாக வெளியிட்டு வருகின்றார்.

மேலும் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு நாளிதழ்கள், சஞ்சிகைகளில் வேடர் சமூகத்தின் சமயம், வரலாறு, தமிழ் இலக்கியம், பண்பாட்டு ஆய்வு சார்ந்த கட்டுரைகளையும் வெளியிட்டுள்ள பத்திநாதன் தற்பொழுது இலங்கை நூலக நிறுவனத்தில் கள ஆய்வாளராகக் கடமையாற்றுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்