1864 :
Arts
7 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாண மருத்துவ வரலாறு : 1864

February 24, 2023 | Ezhuna

ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. அவ்வாறு மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போதுவரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்து தருவதாக ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகின்றது.

மானிப்பாயிலிருந்து 1864 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம் திகதி மருத்துவர் கிறீன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் தமக்கு முதலாவது மகவு பிறந்த மகிழ்ச்சியான செய்தியைக் குறிப்பிட்டிருந்தார். யூலியா என்ற தனது மூத்த சகோதரியின் பெயரையே அந்தப் பெண் குழந்தைக்கு கிறீன் சூட்டினார்.

பின்னாளில் யூலியா தான் பிறந்த யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து 1906 -1910 வரையான காலப்பகுதியில் அமெரிக்க இலங்கை மிஷனுக்காக 5 வருடகாலம் சேவையாற்றினார்.

Administration-report-of-the-director-of-medical-and-sanitary-service-for-1948

கீழைத்தேசத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் முன்னொருபோது யாழிசையில் வல்ல யாழ்ப்பாணனுக்கு வழங்கப்பட்ட மணற்றி என்னும் நிலத்திலே, ஆங்கிலேயர்களால் ஒரு நிருவாகக் குடையின் கீழ் கொண்டுவரப்பட்ட சிலோன் என்னும் இலங்கைத் தீவில் சொல்லு தமிழையும் சுருதியையும் தழிழ்கூறும் நல்லுலகில் விளங்க வைத்த நல்லை நகர் நாவலர் பெருமான் பிறந்த யாழ்ப்பாணத்தில், 19 ஆம் நூற்றாண்டில், ஏறத்தாழ 160 வருடங்களுக்கு முன்னர் ஆங்கில மருத்துவத்தைத் தமிழன்னையின் புதல்வர்கள் தமிழில் கற்பதற்குக் காரணமாக இருந்தவர் ஒருவர்; தமிழை ஆங்கில மருத்துவத்துறையின் இருக்கையிலே சீராட்டி வளர்த்த தமிழ்த்தாயின் தவப்புதல்வனான சாமுவேல் பிஸ்க் கிறீன் என்னும் அமெரிக்க மிஷனரி மருத்துவரே அந்த மேன்மைக்குரியவர்.

பூவுலகில், தமிழுக்கு என்று ஒரு வீடும் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இருந்திருந்தால் மருத்துவர் கிறீனை மேன்மை பொருந்திய தமிழின் தவப்புதல்வர்களுள் ஒருவராகக் கொண்டாடியிருப்பர்;  கிறீனது மறைவின் பின்னராவது அவருக்குரிய மாட்சிமையை வழங்கித் தமிழ்த்தாயின் தவப்புதல்வனை அரியணையில் வைத்திருப்பர்; யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சங்கப்புலவன் கணியன் பூங்குன்றனாரது பாடலுக்கு இலக்கணமாக யாழ்ப்பாணத்திலே 26 வருடங்கள் வாழ்ந்து,  ஆதுலர்க்குச் சாலை அமைத்து உயிர்காத்த உத்தமருக்கு, அமெரிக்காவிலே மசாசுசெட்சிலே உறங்கும்  தமிழர்களின் மருத்துவ ஊழியனுக்கு மணற்றியிலே ஒரு சிலையாவது வைத்திருப்பர்.

தனது மறைவின்போது தனக்கு ஒரு கல்லறை அமைப்பதாக இருந்தால் அது எளிமையானதாக இருக்க வேண்டும் என்றும் அதிலே தமிழர்களின் மருத்துவ ஊழியர் என்ற ஒரு வாசகம் மாத்திரம் இடம்பெறல் வேண்டும் என்றும் கிறீன் கேட்டிருந்தார். கிறீன் தமிழர்களின் கிறித்துவ ஊழியர் என்று தன்னுடைய கல்லறையின் நினைவுக் கல்லிலே செதுக்கச் சொல்லி தனது உயிலிலே எழுதவில்லை என்பது நம் சிந்தனைக்குரியது.

Administration-report-of-the-director-of-medical-and-sanitary-service-for-1948-1

தமிழ்மொழி வரலாற்றில் தடம்பதித்த 1864

1864ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திலே வெளிவந்த உதயதாரகை பத்திரிகையில் ஒரு விளம்பரம் வெளிவந்தது. அதிலே அடுத்து ஆரம்பமாக உள்ள  மருத்துவக் கற்கைநெறி தமிழ் மொழி மூலம் இடம்பெறும் என்றிருந்தது. உதயதாரகை விளம்பரத்தைப் பார்த்துவிட்டு மருத்துவம் பயில 30 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 11 பேர் மருத்துவம் பயில்வதற்காகத் தெரிவு செய்யப்பட்டனர். 1864ஆம் ஆண்டு மே மாதம் தமிழ் மொழி மூலம் ஆங்கில மருத்துவம் பயிலும் வகுப்பு மானிப்பாயில் ஆரம்பமாகியது.

கிறீனது மருத்துவக் கல்லூரியில் பயின்ற 6 ஆவது மருத்துவ மாணவர் அணியினரே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த முதலாவது தமிழ் மொழி மூலமான மருத்துவ மாணவர்கள்.  

உலகில் தமிழ்மொழி மூலம் முதன்முதலாக மேலைத்தேச மருத்துவம் பயின்றவர்கள்:(1864 -1867)

  • கே. இளையபிள்ளை
  • கந்தப்பர்
  • எஸ். சிற்றம்பலம்
  • ஏ. சிவசிதம்பரம்
  • வி. சிற்றம்பலம்
  • எஸ்.சின்னப்பு
  • சாமுவேல் டேவிட்
  • சாமுவேல் எச். முருகேசு
  • டானியல் வெற்றிவேலு,
  • ஆர். எஸ். வேலுப்பிள்ளை
  • எஸ். மண்டலம்

இப்பதினொருவரில் இருவர் விசேட கொடுப்பனவைப் பெற்றனர். ஒருவர் வகுப்பின் மாணவ தலைவராகவும் நூலகராகவும் கடமையாற்றியமைக்காகவும், மற்றவர் மருத்துவக் கல்லூரி வளாகத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டதற்காகவும் சிறுதொகையை ஊதியமாகப் பெற்றனர். அனைவருக்கும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மருத்துவ நூல்கள் வழங்கப்பட்டன. அனைத்துப் பாட நூல்களும் தமிழாக்கம் செய்யப்படாமையால் ஆங்கில மொழியிலமைந்த நூல்களும் பயன்படுத்தப்பட்டன. மாணவர்கள் தமிழிலே குறிப்புகளை எடுத்தனர்.

கிறீனது 5 ஆவது மருத்துவ மாணவர் அணியினர் 11பேரும் 1864 ஆம் ஆண்டு நவம்பரில் மருத்துவப் படிப்பை பூர்த்தி செய்தனர். அவர்களில் ஐவர் மருத்துவர் கிறீனுக்கு உதவியாக மேலும் ஒரு வருடம் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தனர். இந்த ஐவரில் இருவர் 6 ஆவது அணி மாணவர்களுக்கு உடற்கூற்றியல்  மற்றும் உடலியக்கவியல் பாடங்களைக் கற்பிப்பதற்காகவும் நியமிக்கப்பட்டனர்; ஒருவர் கிறீனது தமிழ் ஆசிரியராகவும் விளங்கினார்; ஒரு மாணவர் இயற்கைத் தத்துவவியல் பாடத்தை கையெழுத்துப்படியாக எழுதுவதற்கும் மற்றவர் மானிப்பாய் மருத்துவமனையை நடாத்துவதற்கும் கிறீனுக்கு உதவினர். 1864 ஆம் ஆண்டு மானிப்பாயிலுள்ள மருத்துவமனையில் 1,260 பேருக்கும் யாழ். நகரிலிருந்த ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தினது மருத்துவமனையில் 6480 பேருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது.

சுதந்திர இலங்கையின் மருத்துவ மற்றும் சுகாதார சேவை

ஆங்கிலேயரிடமிருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அன்று 1948 ஆம் ஆண்டில் நாடுமுழுவதும் 246 அரச மருத்துவமனைகள் இயங்கின. இம் மருத்துவமனைகளில் மொத்தமாக 18,822 படுக்கை வசதிகள் காணப்பட்டன. அப்போது இலங்கையின் சுகாதார மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சராக இருந்தவர் எஸ். டபிள்யு. ஆர். டி.பண்டாரநாயக்க.

கொழும்பு பொது வைத்தியசாலை (General Hospital Colombo)- 1948

National-Hospital-of-Sri-Lanka

இலங்கை சுதந்திரம் அடைந்த ஆண்டில் கொழும்பு பொது மருத்துவமனையில் கட்டணம் செலுத்தும் 115 படுக்கை வசதிகள் உள்ளடங்கலாக 1,294 படுக்கை வசதிகள் காணப்பட்டன. இங்கு 1948 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 55,797 நோயாளருக்கு விடுதிகளில் சிகிச்சை வழங்கப்பட்டது. இவர்களில் 1,451 பேர் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெற்றனர். மொத்தமாக 2,568 இறப்புக்கள் பதிவாகின. மருத்துவமனைக்கு நாளாந்தம் வருகைதந்து சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கையை அவதானித்த போது 1948 நவம்பர் 9 ஆம் திகதி ஆகக் கூடுதலாக 2,489 பேர் சிகிச்சைக்காக வருகை தந்தனர். அதேவேளை 1948 யூன் 18 இல் ஆகக் கூடுதலாக 115 பேர் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெற்றனர். இந்த ஆண்டில் 11,423 சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. 792 சிறிய சத்திரசிகிச்சைகள் வெளிநோயாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை 151,139 பேருக்கு வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டது. குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் 460,857 தடவைகள் வெளிநோயாளர் பிரிவில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெற்றனர்.

இக்காலப்பகுதியில் கொழும்பு பொது வைத்தியசாலையின் என்புமுறிவு சிகிச்சை நிலையத்தில் 32 பேருக்கு செயற்கை அவயவங்கள் பொருத்தப்பட்டன. இரத்த வங்கியில் 1,933 பேர் இரத்ததானம் செய்திருந்தனர். இவர்களில் 1,814 பேருக்கு இரத்தானம் வழங்கியமைக்காக வெகுமானமாக தலா 10 ரூபா வழங்கப்பட்டது. எக்ஸ் கதிர் பரிசோதனைக்காக கட்டணம் செலுத்தும் பிரிவில் 1,677 பேரும் கட்டணம் செலுத்தாத பிரிவில் 23,194 நோயாளரும் எக்ஸ் கதிர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணம் சிவில்  வைத்தியசாலை (Civil Hospital Jaffna)- 1948

1850 இல் ஆபத்துக்கு உதவி நண்பர்கள் கழக வைத்தியசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட யாழ். போதனா மருத்துவமனையானது 1850 முதல் 1907 வரை ஆபத்துக்கு உதவி வைத்தியசாலை என்ற பெயரில் இயங்கியது. பின்னர் 1908 முதல் 1955 வரை யாழ்ப்பாணம் சிவில் வைத்தியசாலை என்ற பெயரில் இயங்கியது.

1948 ஆம் ஆண்டு சிவில் வைத்தியசாலையில் 248 படுக்கை வசதிகள் காணப்பட்டன. இக் காலப்பகுதியில் மொத்தமாக 11,486 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது; சராசரியாக 370 நோயாளர் நாளாந்தம் சிகிச்சை பெற்றனர்; 266 இறப்புகள் நிகழ்ந்தன; 670  பாரிய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8333 பார்வைகள்

About the Author

பாலசுப்ரமணியம் துவாரகன்

பாலசுப்ரமணியம் துவாரகன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். 2005 - 2008 காலப்பகுதியில் சுகாதார அமைச்சில் கடமையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் ஆளுமைகளை நேர்காணல் செய்து கனடாவிலிருந்து வெளிவரும் 'வைகறை' வாரப்பத்திரிகையிலும் 'காலம்' சஞ்சிகையிலும் பிரசுரித்துள்ளார். கலாநிதி. சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலரின் பதிப்பாசிரியர்.

கடந்த 14 வருடங்களாக யாழ். போதனா மருத்துவமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் துவாரகன் 2018 இல் யாழ். போதனா மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மேலைத்தேச மருத்துவ வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார். இவர் மருத்துவ அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பு அலுவலராக விளங்குவதுடன் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களது வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் தனித்துவமான மருத்துவ அருங்காட்சியகம் உருவாகக் காரணமானவர். இங்குள்ள தொலைமருத்துவப் பிரிவில் பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள் வாரந்தோறும் கலந்துகொள்ளும் இணையவழி தொலைமருத்துவக் கருத்தமர்வுகளின் இணைப்பாளராகவும் செயற்படுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்