ஆங்கில மூலம் : G.B கீரவல்ல
சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கிளர்ச்சியாளர்கள் குற்றவியல் நீதி விசாரணை ஆணைக்குழு (CRIMINAL JUSTICE COMMISSION – சுருக்க எழுத்து : CJC) முன்னிலையில் விசாரணைக்காக நிறுத்தப்பட்டனர். அவ்வாணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த ரோஹண விஜயவீர தமது கட்சி ஏன் புதிய இடதுசாரி இயக்கம் (NEW LEFT MOVEMENT) ஒன்றை ஆரம்பித்தது என்பதற்கான விளக்கத்தை பின்வருமாறு குறிப்பிட்டார்.
“பழைய இடதுசாரி இயக்கம் சோஷலிசப் பாதையில் (நாட்டை) எடுத்துச் செல்லும் திறன் படைத்ததாய் இருக்கவில்லை. அது வங்குரோத்து நிலையில் இருந்தது. முதலாளித்துவ வகுப்பிற்கு முட்டுக் கொடுக்கும் இயக்கமாக இருந்த அதற்கு தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளையும், தொழிலாளர் வர்க்கத்தின் தேவைகளையும் பாதுகாக்கவும், நிறைவு செய்யவும் போதிய தகைமைகள் இருக்கவில்லை. இதனால் நாம் புதிய இடதுசாரி இயக்கம் ஒன்றை தொடங்குவதன் தேவையை உணர்ந்தோம்.”
1965 இல் இடதுசாரி இயக்கத்திற்குள் நெருக்கடி ஏற்பட்டதெனக் குறிப்பிட்டோம். இந்த நெருக்கடி தான் மக்கள் விடுதலை முன்னணியினைத் தோற்றுவித்த புற நிலைமையாகும். இப் புறநிலையின் வெளிப்பாடாக அமைந்த அகநிலையைப் புரிந்து கொள்வதன் மூலமே நாம் மக்கள் விடுதலை முன்னணியின் தோற்ற மூலத்தை விளங்கிக் கொள்ளலாம். இதற்காக எமக்கு இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றைப் பற்றி விளக்கும் தேவை உள்ளது.
இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாறு : முக்கிய போக்குகள்
இலங்கையின் இடதுசாரி இயக்கத்தைத் தோற்றுவித்தவர்கள் கிராமியக் குட்டி முதலாளி வர்க்கத்தின் வசதி படைத்த ஒரு பிரிவின் புத்திரர்களாவர். இவர்கள் மேற்கு நாட்டுக்கு சென்று கல்வி கற்ற போது மார்க்சியத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாய் நாடு திரும்பினர். அவ்வாறு நாடு திரும்பி இடதுசாரி இயக்கத்தை தொடங்கிய இவ்விளைஞர்கள் தம்மையும், தம் குடும்பத்தையும், கிராமத்தின் உயர் மத்திய வகுப்பு (UPPER MIDDLE CLASS) என்ற உயர் நிலைக்கு விரைவில் உயர்த்திக் கொண்டனர். கொழும்பு நகரத்தின் தொழிலாளர்கள், இளைஞர் குழுக்கள் மத்தியில் தமது அரசியல் வேலைகளை ஆரம்பித்த இவ்விளைஞர்கள், ஏ.ஈ குணசிங்க என்ற தொழிற்சங்கத் தலைவரின் நடவடிக்கைகளால் விரக்தியடைந்திருந்த தொழிலாளர்களைத் தம் பக்கம் கவர்ந்தனர். 1932 ஆம் ஆண்டில் கொல்வின் ஆர்.டி. சில்வா, வெள்ளவத்தை நெசவுச் சாலையின் தொழிலாளர்களை ஒன்று சேர்த்து ஒரு தொழிற்சங்கத்தை ஆரம்பித்தார். 1934 இல் அவர் ‘கம்கறுவ’ (தொழிலாளி) என்ற செய்திப் பத்திரிகையை வெளியிடத் தொடங்கினார். இதனையடுத்து ‘சூரியமல் இயக்கம்’ , ‘மலேரியா ஒழிப்பு இயக்கம்’ என்பன மூலம் இளைஞர் குழுக்களை அரசியல் மயப்படுத்தி தேசிய அரசியல் நீரோட்டத்தில் பங்கேற்கச் செய்தனர்.
1935 சட்ட சபைத் தேர்தல்
மேற்குறித்தவாறு I. வெள்ளவத்தை நெசவாலைத் தொழிலாளர் சங்கம், II. ‘கம்கறுவ’ பத்திரிகை, III. சூரியமல் இயக்கம், IV. மலேரியா ஒழிப்பு இயக்கம் என்பன மூலம் அரசியலில் புகுந்து கொண்ட கொல்வின் ஆர்.டி. சில்வா போன்றவர்கள், டொனமூர் அரசியல் யாப்பின்படி 1935 இல் தேர்தல் ஒன்று நடத்தப்படவிருந்த நிலையில், அவ்வாண்டில் லங்கா சமசமாஜக் கட்சி (LSSP) என்ற கட்சியைத் தோற்றுவித்தனர். அக்கட்சி ‘மார்க்சிஸ்ட் அரசியல் கட்சி’ ஒன்றிற்கான கறாரான வரையறைகளின்படி தோற்றுவிக்கப்படவில்லை. மாறாக சமூகச் சீர்திருத்தவாத பாராளுமன்றவாதக் கட்சியாகவே (SOCIAL REFORMIST PARLIAMENTARY PARTY) தோற்றம் பெற்றது. கட்சியின் கொள்கை அறிக்கை, தேர்தல் பிரகடனத்தில் (ELECTION MANIFESTO) இருந்து அடிப்படையில் வேறுபாடு உடையதாக இருக்கவில்லை. எவரும் 25 சதத்தை உறுப்புரிமைக் கட்டணமாகச் செலுத்திக் கட்சியின் உறுப்பினராகி விடலாம் என்ற நிலை இருந்தது.
1937 இல் கட்சியின் ஒழுங்கமைப்பில் சில மாற்றங்கள் வெளிப்பட்டன. கட்சியைக் கட்டுக் கோப்புள்ள அமைப்பாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் ‘லெனினிசக் கொள்கைப்படியான கட்சி’ என்ற கட்டுக் கோப்பான அமைப்பை இன்று வரை மரபுவழி இடதுசாரிக் கட்சிகள் கொண்டிருக்கவில்லை.
1935 – 1965 காலத்தில் இடதுசாரிகளுக்குள் பிளவுகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.
1. ஸ்டாலின் – ட்ரொட்ஸ்கி சர்ச்சையால் இது எழுந்தது. பெரும்பான்மையினர் ட்ரொட்ஸ்கிஸ வாதிகளாய் இருந்தனர். ஸ்டாலினிஸ வாதிகள் வெளியேற்றப்பட்டனர். கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் தம்மை ஐக்கிய சோஷலிசக் கட்சியினர் என அழைத்தனர். இப்பெயர் 1943 இல் கம்யூனிஸ்ட் கட்சி என மாற்றப்பட்டது.
2. 1950 இல் கொல்வின்.ஆர்.டி. சில்வா கட்சியில் இருந்து வெளியேறி போல்செவிக் லெனினிஸ்ட் கட்சி (B.L.P) என்ற பெயரில் கட்சியொன்றை ஆரம்பித்தார். இக்கட்சி 1950 இல் ல.ச.ச கட்சியுடன் மீண்டும் இணைந்தது.
3. இவ்வேளை இன்னொரு குழு பிலிப் குணவர்த்தன தலைமையில் பிரிந்து சென்று L.S.S.P(V) என்ற பெயரில் கட்சி அமைத்தது.
4. பிலிப் குணவர்த்தனவின் கட்சி 1956 இல் பண்டார நாயக்கவுடன் இணைந்து மக்கள் ஐக்கிய முன்னணி (மகாஜன எக்சத் பெரமுன – MEP) என்ற பெயருடன் இயங்கியது.
5. 1962 இல் சர்வதேச மட்டத்தில் சீன – சோவியத் முரண்பாடுகள் வலுப் பெற்றன. இதன் விளைவாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு பிரிவு கம்யூனிஸ்ட் கட்சி (பீகிங் பிரிவு) எனப் பிரிந்து சென்றது.
6. C.P, LSSP, MEP என்ற ஆங்கில எழுத்துக்களால் சுட்டப்பெற்ற மூன்று பிரதான கட்சிகளிடையே உட்கட்சிப் பிளவுகள் தோன்றியபடி இருந்தன. ஆயினும் அவை மூன்றும் இணைந்து 1963 இல் ஐக்கிய இடதுசாரி முன்னணி (U.L.F) என்ற கூட்டணியை உருவாக்கின.
1964 கூட்டணி அரசாங்கமும் ஐக்கிய இடதுசாரி முன்னணி உடைதலும்
மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து ஐக்கிய இடதுசாரி முன்னணியை அமைத்தமை இடதுசாரிகள் ஒன்று சேர்ந்து பலம் மிக்க சக்தியாகச் செயற்படுவர் என்ற நம்பிக்கையை உருவாக்கியது. ஆயினும் திருமதி சிறிமா பண்டார நாயக்கா தலைமையில் 1964 இல் அமைக்கப்பட்ட கூட்டணி அரசில் ல.ச.ச கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்த போது இடதுசாரி ஐக்கிய முன்னணி உடைந்தது. திருமதி பண்டார நாயக்கவுடன் ல.ச.ச கட்சி சேர்ந்தமையை எதிர்த்து அக்கட்சியின் உறுப்பினர்களான எட்மன்ட் சமரக்கொடி, மெரில். பெர்ணான்டோ என்ற இருவரும் பிரிந்து சென்று புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சி என்ற கட்சியை நிறுவினர். 1965 இல் நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் கூட்டணி அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியது.
மேற்குறித்த விதமாக இடதுசாரிக் கட்சிகளிடையே பிரிவுகள் ஏற்பட்டதன் விளைவாக இடதுசாரிக் கட்சிகளின் இளைஞர்களிடையே விரக்தியும் ஏமாற்றமுமிருந்தது. 1965 இல் கிளர்ச்சிவாத இரகசிய குழுக்கள் தோன்றியதும் பின்னர் அக்குழுக்களில் விஜயவீர குழு மேலாதிக்கம் பெற்ற குழுவாக எழுச்சி பெற்றதும் இப்பின்னணியிலேயே நிகழ்ந்தது. நூலின் பக் 33 இல் ஜி.பி. கீரவல்ல இது பற்றி கூறியிருப்பவை வருமாறு:
“மரபுவழி இடதுசாரி இயக்கத்தினுள் வலதுசாரிப் போக்குகள் வளர்ச்சி பெற்றதன் விளைவாக கம்யூனிஸ்ட் கட்சியின் பீகிங் பிரிவு, இடதுசாரிப் போக்குடையவர்களிடையே செல்வாக்குப் பெறலாயிற்று. கம்யூனிஸ்ட் பீகிங் பிரிவு 1965 காலத்தில் விரைவாகத் தனது செல்வாக்கை விரிவாக்கியது. ஆயினும் மரபுவழி இடதுசாரிக் கட்சிகள் மீது அவற்றின் வலதுசாரிகளுடன் இணங்கிப் போகும் போக்கினால் வெறுப்படைந்திருந்த இளைஞர் பிரிவினரைக் கவரக்கூடிய செயல் திட்டம் அக்கட்சியிடம் இருக்கவில்லை. இக்காரணத்தினால் அக்கட்சிக்குள் (கம்யூனிஸ்ட் கட்சி – பீகிங் பிரிவு) பல பிரிவினைவாத உட்குழுக்கள் தோன்றின. ‘கினிபுப்புர குழு’, ‘பெரதிக சுலங்க குழு’, ‘சுமித் தெவிநுவர குழு’, ‘நிகால் டயஸ் குழு’ ஆகிய குழுக்கள் அக்காலத்தில் செயற்பட்டன. இவை ஒன்றிணைந்து பின்னர் ஜனதா விமுக்தி பெரமுன என்ற பெருங்குழு மேற்கிளம்பியது. மேற்குறித்த ஒவ்வொரு குழுவும் மரபுவழி இடதுசாரி இயக்கத்தில் நுழைந்த சீர்கேடுகளைத் திருத்தி உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றை உருவாக்குவதே தமது நோக்கம் எனக் கூறின. முதலில் சரத் விஜயசிங்க குழுவும், தர்ம சேகர குழுவும், விஜய வீர குழுவுடன் இணைந்தன. மக்கள் விடுதலை முன்னணியினர் மிகுந்த அர்ப்பணிப்புடனும், உணர்ச்சி வேகத்தோடும் இயங்கினர். இதன் பயனாக குறுகிய காலத்திற்குள் அவ்வியக்கம் நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த ஒழுங்கமைப்புடைய அமைப்பாக உருவாக்கம் பெற்றது.”
மரபுவழி இடதுசாரி இயக்கத்தில் காணப்பட்ட குறைகளே மக்கள் விடுதலை முன்னணியின் தோற்றத்திற்கான மூலகாரணம் என முன்னர் குறிப்பிட்டோம். அக் கருத்தை சான்றுப்படுத்துவனவாக அமைந்த விடயங்கள் சில வருமாறு:
1. இடதுசாரிக் கட்சித் தலைவர்களின் வாழ்க்கை முறை
இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் சமூகத்தின் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்கும் இலங்கையின் குறைவிருத்திப் பொருளாதாரத்தின் பாதிப்புக்களுக்கு ஆளான கிராமப்புறத்துப் படித்த இளைஞர்களின் வாழ்க்கை நிலைக்கும் இடையே பெரிய இடைவெளி நிலவியது. இடதுசாரிக் கட்சி தலைவர்கள் மேற்கு நாட்டுக்குச் சென்று கல்வி கற்றவர்கள். அவர்கள் நாட்டிற்குக் திரும்பியதும் சட்டம் போன்ற உயர் தொழில்களில் (PROFESSIONS) ஈடுபட்டனர். அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வானதாக இருந்தது. இந்தப் பண்பு காரணமாக அவர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற வலதுசாரிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே வேறுபாடு காணப்படவில்லை. இதனால் முதலாளித்துவ வகுப்பின் மீது இளைஞர்களுக்கு ஏற்பட்ட கோபம் இடதுசாரிக் கட்சித் தலைவர்களை நோக்கியும் திரும்பியது. இது பற்றிச் சமூகவியலாளர் கணநாத் ஒபயசேகர பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“(இலங்கையின்) பிரதான அரசியல் கட்சிகளை ஆளும் உயர் குழாம் (RULING ELITE) ஒன்றின் உட்பிரிவுகளாகவே கொள்ள முடியும். ஐக்கிய தேசியக் கட்சி அதற்கடுத்த நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்ற இரண்டும் வலதுசாரிக் கட்சிகள்; லங்கா சமசமாஜக்கட்சி (ட்ரொட்ஸ்கிஸ வாதிகள்), கம்யூனிஸ்ட் கட்சி என்பன இடதுசாரிக் கட்சிகள். இவற்றின் கட்சிக் கொள்கைப் பிரகடனங்களும், அவற்றின் கருத்தியல்களும் அடிப்படையான வேறுபாடுகளைக் கொண்டனவாய் உள்ளன. ஆனால் இக்கட்சிகள் யாவற்றினதும் தலைவர்கள் எல்லோரும் ஒரே சமூக வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். அவர்கள் யாவரும் ஒரே விதமான பாடசாலைகளில் கற்றவர்கள், அவர்கள் (மாலை வேளைகளில்) ஒரே ‘கிளப்’ களில் கூடுவர். அவர்கள் தமக்கிடையே ஆங்கிலத்தில் உரையாடுவார்கள். அரசியல் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அவர்களுக்கிடையே திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். ட்ரொட்ஸ்கிஸ கட்சியினதும், கம்யூனிஸ்ட் கட்சியினதும் தலைவர்கள் வறிய மக்கள் பிரிவினராக இருந்ததில்லை. இப்போதும் அவர்கள் அப்பிரிவில் இருந்து வந்தவர்களாக இல்லை. அவர்கள் யாவரும் பணவசதி படைத்த பின்னணியில் இருந்து தோன்றியவர்கள். அவர்கள் உயர் தரமான வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்களாய் இருப்பதில் கூச்சமடைவதில்லை. இவர்களின் நெருங்கிய உறவினர்களும், சகோதரர்களும், சகோதரிகளும், பிள்ளைகளும் வலதுசாரிக் கட்சிகளில் உறுப்பினர்களாக இருப்பார்கள். சில சந்தர்ப்பங்களில் இத் தலைவர்களின் பெற்றோர்கூட வலதுசாரி அரசியல் கட்சிகளோடு தொடர்பு உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் சார்ந்திருக்கும் சமூக வலைப்பின்னல் அமைப்பு (SOCIAL NETWORK) அதிகாரத்தினதும் வசதி வாய்ப்புக்களினதும் ஆதார மூலமாக இருந்து வருகிறது. இடதுசாரித் தலைவர்களால் விவசாயக் குடியான்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப முடியாமல் போனது ஒரு தற்செயலான விடயமல்ல. அவர்களது வர்க்கச் சார்பு நிலையும், அவர்கள் விவசாய வர்க்கத்தில் இருந்து அந்நியப்பட்டவர்களாய் தனிமைப்பட்டு நிற்பதுமே இதற்கான மூல காரணமாகும். அவர்கள் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களை அமைப்பதில் வெற்றி கண்டனர் என்பது உண்மையே. ஆயினும் தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கும் தொழிலாளர்களிற்கும் இடையே உள்ள சமூக இடைவெளி மிகப்பெரிது”
(இம்மேற்கோள் ‘1971 ஏப்ரல் கிளர்ச்சியின் பின்புலம் – சில குறிப்புகள்’ என்ற பொருளில் கணநாத் ஒபயசேகர எழுதிய கட்டுரையில் இருந்து பெறப்பட்டது)
(SOME COMMENTS ON THE SOCIAL BACKGROUND OF THE APRIL 1971 INSURGENCY IN SRI LANKA (CEYLON) GANANATH OBEYSEKEARA – JOURNAL OF ASIA STUDIES VOL 33, NO 3 MAY 1974, P.380)
பொருளாதார நெருக்கடியின் சுமைகளால் அழுந்திக் கொண்டிருந்த இளைஞர்கள், தமது ஒடுக்குமுறைக்கு விடிவு தேடினார்கள். உயர் கல்வியைச் சிங்கள மொழியில் கற்றவர்களான இவ் விளைஞர்களால் இடதுசாரித் தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்துச் செயற்பட இடமிருக்கவில்லை. இளைஞர்களின் இந்த நம்பிக்கையின்மையை விஜயவீர தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார்.
2. இடதுசாரிக் கட்சிகளின் சீர்திருத்தவாதக் கொள்கைகள்
மக்கள் விடுதலை முன்னணி, இடதுசாரிக் கட்சிகள் பின்பற்றிய சீர்திருத்த வாதத்திற்கு எதிர்வினையாகத் தோன்றிய இயக்கமாகும். மக்கள் விடுதலை முன்னணியின் ‘விமுக்தி’ (விடுதலை) என்ற பத்திரிகையின் 1970 ஜனவரி 20 இதழில் இருந்து பெறப்பட்ட மேற்கோள் வருமாறு:
“1935 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி தொடக்கப்பட்ட இடதுசாரி இயக்கத்தின் சமூக சீர்திருத்தவாதம் தற்செயலான ஒரு விடயமன்று. அதன் தொடக்கமே ஒரு சோக நாடகத்தின் தொடக்கமும் ஆகும். அன்று முதல் துரோகங்கள், உட்பகைகள் நம்பிக்கைகளைச் சிதறடித்தல் என்பனவே தொடர்கதையாயிற்று.”
நாட்டின் குறை விருத்திப் பொருளாதார முறை மீது இளைஞர்களுக்கு இருந்த வெறுப்பும் கோபமும் அம்முறைமையினை சீர்திருத்தங்கள் மூலம் மேம்படுத்தலாம் என்று கருதிய கட்சிகள் மீதான வெறுப்பாகவும் கோபமாகவும் வெளிப்பட்டதைக் காணலாம்.
3. வலதுசாரிகளுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு
இடதுசாரிக் கட்சிகள் 1960 களில் தமது 30 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் வலதுசாரிக் கட்சியுடன் கூட்டணியில் சேர்ந்து ஆட்சியமைக்க முன் வந்தனர். இக் கொள்கையால் இடதுசாரிக் கட்சிகள் ஒன்று சேர்ந்து அமைத்த ஐக்கிய இடதுசாரி முன்னணி (UNITED LEFT FRONT – U.L.F) உடைந்து சிதறியது. லங்கா சமசமாஜக் கட்சி ஐக்கிய இடதுசாரி முன்னணியில் இருந்து வெளியேறி சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. மக்கள் விடுதலை முன்னணியின் ‘ஐந்து விரிவுரைகளில் ஒரு விரிவுரை’, ‘இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் வரலாறு’ என்ற தலைப்பில் அமைந்தது. மக்கள் விடுதலை முன்னணி ஐக்கிய இடதுசாரி முன்னணி உடைக்கப்பட்டதை இடதுசாரிகளின் துரோகச் செயலாக எடுத்துக் காட்டியது. அரசாங்கத்தில் சிலர் ‘சோஷலிஸ்ட்’ அமைச்சர்கள் என்ற பெயருடன் பதவி வகிப்பதால் அமைச்சரவையின் முதலாளித்துவப் பண்பு மாறப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரம் அமைந்தது.
4. இடதுசாரிகளின் தொழிற் சங்கங்களில் நம்பிக்கையின்மை
மரபுவழி இடதுசாரிகள் கட்டி வளர்த்த தொழிற்சங்கங்களும் அவர்களுடைய சீர்திருத்தவாதப் பாதையிலேயே பயணிக்கின்றன என மக்கள் விடுதலை முன்னணி சுட்டிக் காட்டியது. இடதுசாரித் தலைவர்கள் தொழிற்சங்கங்களை தொழிலாளர் வர்க்க அரசியலுக்குள் கொண்டு செல்லவில்லை.
தொழிற்சங்கங்கள் குறைவிருத்திப் பொருளாதார அமைப்பை மாற்றியமைப்பதற்குப் பதிலாக முதலாளித்துவ வகுப்பிடம் சலுகைகளை கேட்பனவாகவே செயற்பட்டன. மக்கள் விடுதலை முன்னணி தொழிற்சங்க இயக்கத்தில் புகுந்த பொருளாதார வாதத்தை (ECONOMISM) எடுத்துக் காட்டியது. ஆயினும் அக்கட்சி தொழிற்சங்கங்களில் நம்பிக்கையற்றதால் தொழிலாளர் வர்க்கத்தில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டது. இடதுசாரிகள் தொழிற்சங்கங்களில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியிருந்தனர். இந் நிலையில் மக்கள் விடுதலை முன்னணி தொழிற்சங்கங்கள் மீது அவநம்பிக்கை கொண்டதால் அவற்றில் இருந்து தன்னை அந்நியப்படுத்தியும் தனிமைப்படுத்தியும் கொண்டது.
5. கிராமத்து விவசாய வர்க்கம்
மரபுவழி இடதுசாரிகள், கோட்பாட்டு நிலையில் தொழிலாளர் விவசாயக் கூட்டும் ஐக்கியமும் (WORKER PEASANT ALLIANCE) எனப் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் நடைமுறையில் அவ் இடதுசாரிகளிடம் விவசாய வர்க்கத்தை அணி திரட்டும் எந்த விதமான செயல் திட்டமும் இருக்கவில்லை. பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் இலங்கையின் விவசாய வகுப்பு நகரங்களோடு கூடியளவு பிணைப்புடையதாக இருந்துள்ளது. விவசாய வகுப்பு, கல்வி முன்னேற்றம் காரணமாக அரசியல் உணர்வுமிக்கதாய் வளர்ச்சியுற்றிருந்தது. ஆயினும் விவசாய வகுப்பை இடதுசாரி இயக்கத்தால் கருத்தியல் ரீதியாக வென்றெடுக்க முடியவில்லை. கிராமத்துக் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பழைய தலைமுறை மரபுவழி சமூகக் கருத்தியலை (TRADITIONAL SOCIAL IDEOLOGY) ஏற்றுக் கொண்டிருந்த காரணத்தால் கிராம சமுதாயத்தின் உறுதி நிலைக்கு எவ்வித அச்சுறுத்தலும் எழவில்லை. ஆயினும் இளைய தலைமுறையினர் சமூக ஒழுங்கமைப்பை முழுமையாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனை உடையவர்களாகக் காணப்பட்டனர்.
விவசாய வர்க்கம் பற்றிச் சிந்திக்கும் பொழுது 1960-70 களில் உலர் வலயத்தின் விவசாய வர்க்கத்தின் நிலை தனித்து நோக்கப்பட வேண்டியது. ஈர வலயத்தின் கிராமங்களோடு உலர் வலயக் குடியேற்றங்களை ஒப்பிடுகையில் இலங்கையின் சமனற்ற வளர்ச்சி (UNEVEN DEVELOPMENT) என்ற பண்பு வெளிப்படையாகிறது.
- உலர் வலய விவசாயிகள் கல்வியில் பின் தங்கியவர்களாய் கல்வி வசதிகள் அற்றவர்களாய் இருந்தனர்.
- இப்பகுதிகளில் சுகாதார வசதிகள் மிக மோசமான நிலையில் இருந்தன.
- போக்குவரத்து தொடர்பு சாதனங்கள் வளர்ச்சியற்ற நிலையில் உலர் வலய விவசாயிகள் பல பிரச்சினைகளை எதிர் கொண்டனர்.
உதாரணமாக அனுராதபுர மாவட்டம் முழுமைக்குமாக க.பொ.உயர்தர விஞ்ஞானப் பாடங்களைக் கற்கக் கூடிய பாடசாலைகள் மூன்று மட்டுமே இருந்தன. பொலநறுவை மாவட்டத்தில் க.பொ.த.உயர்தரம் வரை விஞ்ஞானப் பாடங்களைப் படிக்கக்கூடிய ஒரேயொரு பாடசாலை மட்டுமே இருந்தது. கல்வியில் மட்டுமல்லாமல் ஏனைய சமூக நல வசதிகளும் உலர்வலய குடியேற்றங்களின் மக்களுக்குக் கிடைக்கவில்லை. உலர் வலய கிராமவாசிகள் வரட்சியால் பாதிக்கப்பட்டனர். வரண்ட காலத்தில் நீர்ப்பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருந்தது. மலேரியா தொற்றுநோய் உலர் வலயங்களில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படாமல் தொடர்ந்தது.
மரபுவழி இடதுசாரிக் கட்சிகள் விவசாய வர்க்கத்தை அணி திரட்டுவதில் தோல்வியடைந்தமையால் ஏற்படுத்தப்பட்ட வெற்றிடத்தை மக்கள் விடுதலை முன்னணி பயன்படுத்திக் கொண்டது. மக்கள் விடுதலை முன்னணியில் பார்வையில் இலங்கையில் மூன்று பிரிவினரிடம் புரட்சிக்கான உள்ளாற்றல் இருந்தது. அவை:
- நகரத் தொழிலாளி வர்க்கம்
- தோட்டத் துறையின் தொழிலாளி வர்க்கம்
- கிராமப்புற விவசாயப் பாட்டாளிகள்
இந்த மூன்று பிரிவினரில் முதலிரு பிரிவினரும் பின்வரும் காரணங்களால் புரட்சிக்கு உதவ முடியாத பிரிவினர்களாக ஆயினர் என மக்கள் விடுதலை முன்னணி முடிவு செய்தது.
அ) நகரத் தொழிலாளர் வர்க்கம்
இவ்வர்க்கம் அரசியல் மாயைக்குள் இருந்தது. அது புரட்சிகர சக்தி என்ற தகுதியை இழந்து விட்டது.
ஆ) தோட்டத் தொழிலாளர் வர்க்கம்
தோட்டத்துறையின் (தமிழ்) தொழிலாளர்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் (INDIAN EXPANSIONISM) கையாட்கள் என்ற நிலையில் உள்ளனர்.
இக்காரணங்களால் கிராமத்து விவசாயப் பாட்டாளிகளே உண்மையான புரட்சிகர சக்தி என்று மக்கள் விடுதலை முன்னணி முடிவு செய்தது.
கிராமப்புறத்து குட்டி முதலாளித்துவ வகுப்பினரிடையே தமது பிரச்சார அணி திரட்டலை நடத்தி வந்த மக்கள் முன்னணி 1970 இல் தனது இருப்பை வெளிக் காட்டியது. தலைமறைவாக அதுகாலம்வரை இயங்கிய மக்கள் விடுதலை முன்னணி 1970 – 1971 காலத்தில்,
- தம்புத்தேகம
- ராஜங்கனை
- டெனியாய
ஆகிய இடங்களில் வெகுஜன செல்வாக்குடைய இயக்கமாக வெளிப்பட்டது.
சர்வதேச நிலைமைகள்
1971 இன் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியை அக்காலப் பகுதியின் சர்வதேச அரசியல் நிகழ்வுகளில் இருந்தும், மூன்றாம் உலக நாடுகளின் அரசியல் போக்குகளில் இருந்தும் தனிமைப்படுத்தி நோக்க முடியாது. சர்வதேச அரசியலில் இரண்டு முக்கியமான போக்குகள் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கோட்பாட்டின் உருவாக்கத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தின. அவையாவன:
- இராணுவச் சதிப் புரட்சி என்னும் அரசியல் ஆபத்து
- கியூபாவின் புரட்சி
அ) இராணுவச் சதிப் புரட்சி என்னும் அரசியல் ஆபத்து
வெகுஜன ஆதரவுடன் தேர்தல் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசுகள் பல 1960 களில் இராணுவச் சதிப் புரட்சிகள் மூலம் கவிழ்க்கப்பட்டன. 1965 இல் இந்தோனேசியாவின் சுகர்ணோ, இராணுவச் சதிப் புரட்சி மூலம் தூக்கி வீசப்பட்டார். கானாவின் நிகுறுமாவும், இலத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசுகளின் தலைவர்களும் இவ்வாறே ஆட்சி அதிகாரத்தில் இருந்து இராணுவச் சதிப் புரட்சியால் நீக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். மக்கள் விடுதலை முன்னணியின் 5 விரிவுரைகளில் ஒரு விரிவுரை ‘அரசியல் ஆபத்து’ (THE POLITICAL THREAT) என்ற தலைப்பில் அமைந்தது. அது இலங்கையில் இராணுவச் சதிப்புரட்சியின் ஆபத்துப் பற்றி அரசியல் வகுப்புக்களில் விளக்கம் கொடுத்தது.
1. சமாதான வழியில் சோஷலிசம் என்ற பாதையை தேர்வு செய்தால் இராணுவச் சதிப் புரட்சியை தவிர்க்க முடியாதது. மூன்றாம் உலகின் அனுபவம் இதற்குச் சாட்சியாக விளங்குகிறது.
2. 1965 – 1970 ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இதற்கான தயாரிப்பு வேலைகள் நடைபெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி கூறியது. சுற்றுலாத் தொழில் விரிவாக்கம், டியோகோ கார்சியாவில் அமெரிக்கா அமைத்த கடற்படைத்தளம், அமெரிக்காவின் ‘ஹோப்’ கப்பலின் இலங்கை வருகை, போர்ட் பவுண்டேசன் முதலிய நிறுவனங்களின் செயற்பாடுகள் என நீண்ட பட்டியலைக் காட்டி தயாரிப்பு வேலைகள் பற்றி விரிவுரையின் போது இளைஞர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
3. 1970 இல் தேர்தல் நடைபெறலாம். அல்லது நடைபெறாமல் போகலாம். எவ்வாறாயினும் இராணுவப் புரட்சிக்கான சாத்தியம் உள்ளது எனவும் அப்படி நிகழும் போது மரபுவழி இடதுசாரி இயக்கம் முழுமையாக அழித்தொழிக்கப்படும் என்றும் மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டது.
‘அரசியல் ஆபத்து’ பற்றிய விளக்கம் ஒரு புறம் இருக்க கியூபாவின் புரட்சி என்னும் முன்னுதாரணம், மக்கள் விடுதலை முன்னணியின் வேலைத் திட்டத்திற்கு இன்னொரு பரிணாமத்தை வழங்கியது.
ஆ) கியூபாவின் புரட்சி
கியூபாவின் புரட்சியை மனோரதியமானதாகச் சித்தரிக்கும் நூல்களும் பிரசுரங்களும் (ROMANTICIZED LITERATURE) இலங்கையில் 1960 இல் புதிதாகத் தாபிக்கப்பட்ட கியூபாத் தூதரகம் ஊடாகப் பெறக்கூடியனவாய் இருந்தன. கியூபாப் புரட்சியைப் பற்றி இப்பிரசுரங்கள் மூலமாக அறிந்து கொண்டவர்கள், அப்புரட்சியின் உண்மைத் தாற்பரியத்தை புரிந்து கொள்ளாதவர்களாக, ஒரு வரலாற்று நிகழ்வை முக்கியமான ஒரு திருப்பு முனையான மூன்றாம் உலகை நிகழ்வை வைத்து மாயக் கற்பனை ஒன்றைக் கட்டமைத்தனர். தொழிலாளர் வர்க்கத்தினை அணி திரட்டாமல் வெறுமனே துப்பாக்கி ஏந்திய போராட்டம் மூலம் புரட்சியை ஏற்படுத்தலாம் என்ற வகையில் இது முன்வைக்கப்பட்டது.
1. மரபுவழி இடதுசாரிக் கட்சிகளைப் புறந்தள்ளி புரட்சிகர இளைஞர்களை ஒன்று திரட்டி ஆயுதப் போராட்டத்தை நடத்துவதன் மூலம், இருந்து வரும் முறைமையை மாற்றலாம்.
2. கியூபா புரட்சி பற்றிய மனோரதியமான சித்தரிப்பு. புரட்சிகரக் கட்சி (REVOLUTIONARY PARTY) தேவையில்லை; ஆயுதப் போராட்டத்தினை நேரடியாக ஆரம்பிக்கலாம்.
ஆகிய இரு கருத்துகள் மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்டன. கியூபாவின் உதாரணத்தைக் காட்டி ‘போல்செவிக் கட்சி’ அவசியமில்லை என்ற கருத்து முன்னிறுத்தப்பட்டது.
மார்க்சிய – லெனினிசக் கோட்பாடு, பாட்டாளி வர்க்கத்தின் கட்சி வர்க்கப் போராட்டத்தின் ஊடாகக் கட்டி வளர்க்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி தனது கட்சி உறுப்பினர்களை சேர்த்துக் கொண்ட முறை வேறுபட்டதாக இருந்தது.
1. கட்சியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையை விளக்கும் உரையும் தொடக்க நிலை உரையாடலும் நடத்தப்பட்டது.
2. மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலின் அடிப்படைகளை ஏற்றுக் கொண்ட இளைஞர்களுக்கு, அடுத்து நான்கு அரசியல் வகுப்புக்கள் நடத்தப்பட்டன.
3. இந்த நான்கு விரிவுரைகளில் கூறப்பட்ட கருத்துக்களை ஏற்றுக் கொண்டவரும் நம்பிக்கைக்கு உரியவர் எனக் கருதப்பட்டவருமான இளைஞர் ஐந்தாவது விரிவுரைக்கு அழைக்கப்படுவார். இவ்விரிவுரையின் முடிவில் அவருக்கு உறுப்புரிமை வழங்கப்பட்டது. புதிய உறுப்பினர், கட்சியின் கருத்துக்களைப் பரப்புரை செய்பவராகப் பணியாற்றத் தொடங்குவார்.
மேற்குறித்த படிமுறையூடாக கட்சியில் இணைக்கப்பட்டவர்களிடையே காணப்பட்ட பொதுத் தன்மைகள் முக்கியமானவை.
அ) க.பொ.த (சா), க.பொ.த (உ.த) ஆகியன வரை இரண்டாம் நிலைக் கல்வியைப் பெற்றவர்களாக அல்லது பல்கலைக்கழகப் பட்டதாரிகளாக இருந்தனர். அண்மையில் கல்வியை முடித்தவர்களாக இருந்தனர்.
ஆ) பெரும்பாலானோர் வேலையற்றவர்களாக, வேலையை தேடிக் கொண்டிருப்பவர்களாக இருந்தனர்.
இ) இவர்களின் பெற்றோர் நிரந்தர வருமானத்தைப் பெறுபவர்களாக இருந்தபடியால் இவ்விளைஞர்களிடம், தமக்குக் கிடைத்த சமூக அங்கீகாரம் காரணமாக பெருமித உணர்வு இருந்தது.
ஈ) சமூகத்தில் மேலாதிக்கம் பெற்றிருந்த மேட்டிமையான மதிப்பீடுகள் (ELITIST VALUES) தம் தேவைகளை அலட்சியம் செய்வதையும் அதிகார வர்க்கம் தமக்கு வேலை வழங்க மறுப்பதையும் கண்டு கொதிப்படைந்த இவ்விளைஞர்கள், இருந்து வரும் முறையை மாற்ற வேண்டும் என உறுதி பூண்டனர்.
உ) பெரும்பாலானவர்கள் கட்சியின் முழுநேர ஊழியராக வேலை செய்ய முன் வந்தனர்.
மேற்குறித்தவாறு மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் நடைபெற்ற சில நிகழ்வுகள், மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாடுகள் வேகம் பெறக் காரணமாயின.
மக்கள் விடுதலை முன்னணியை மேலோட்டமான ஒரு கருத்தியலை முன் வைத்து இளைஞர்களை அணி திரட்டிய இயக்கம் என்று முடிவு செய்தல் ஒரு தலைப்பட்சமான கருத்தாகவே இருக்க முடியும். 1966 மார்ச் – ஏப்ரல் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் (பீகிங் பிரிவு) மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டில் விஜயவீரவையும் அவரது குழுவினரையும் வெளியேற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட காலம் முதல் மக்கள் முன்னணி கிராமப் புறங்களில் தன் களப் பணியைத் தீவிரப்படுத்தியது. வடமத்திய மாகாணத்திலும் (அனுராதபுரம, பொலநறுவை மாவட்டங்கள்) தெற்கு மாவட்டங்களிலும் மக்கள் விடுதலை இயக்கம் விவசாயப் பண்ணைகளை ஆரம்பித்து அப்பண்ணைகள் ஊடாக தம் வேலைத் திட்டங்களைச் செயற்படுத்தினர். 1967 இல் களத்தாவ என்ற இடத்தில் ஓர் உரையாடல் நடைபெற்றது. இதே காலப் பகுதியில் பொலநறுவை மாவட்டத்தின் காணி அபிவிருத்தி திணைக்களத் தொழிற்சங்கத்தினை மக்கள் விடுதலை முன்னணி தம் பக்கம் வென்றெடுப்பதில் வெற்றி கண்டது. அத் தொழிற்சங்கத்தின் பத்திரிகையான ‘சங்வர்த்தன ஹண்ட’ (அபிவிருத்தியின் குரல்) பத்திரிகையைக் கட்சியின் பிரச்சார ஏடாக விடுதலை முன்னணி உபயோகிக்கத் தொடங்கியது. 1967 இல் ‘களத்தாவ உரையாடல்’ நடைபெற்ற வேளை கட்சியின் இயல்புகளில் இரண்டு கூறுகள் தெளிவாக வெளிப்பட்டன.
- ‘ஐந்து விரிவுரைகள்’ ஊடாக இளைஞர்களை கட்சிக் கொள்கைப் பற்றாளர் ஆக்குதல் (INDOCTRINATION)
- மாணவர்கள், படித்த வேலையற்ற இளைஞர்கள் ஆகியோரைக் கொண்ட இயக்கத்தை விரிவாக்குதல்.
கடுமையான உழைப்பின் மூலம் கட்டயெழுப்பப்பட்ட இயக்கமாயினும், மக்கள் முன்னர் செல்வதற்கு தெளிவான ஒரு கருத்தியலை அக்கட்சி வகுத்துக் கொள்ளவில்லை.
இலங்கையின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் பகுப்பாய்வு மேலோட்டமானதாகவே அமைந்திருந்தது.
மக்கள் விடுதலை முன்னணிப் படை வீரர்களாக கிளர்ச்சியில் பங்கு கொண்டவர்களின் தியாக உணர்வு, அர்ப்பணிப்பு, வீரம் என்பன அளப்பெரியன. ஆயினும் அதன் குட்டி முதலாளித்துவக் கருத்தியலின் பலவீனம், இவ்விளைஞர்களின் சக்தியைப் பயனுடைய வகையில் உபயோகிக்கத் தவறியமைக்குக் காரணமாக அமைந்தது. மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி ஒழுங்கமைப்பில் இரண்டு முக்கிய குறைபாடுகள் இருந்தன.
1. சர்வாதிகாரம் : இது கட்சியின் உறுப்பினர்கள் மீது மேலோங்கியிருந்தது. குறிப்பாகச் சொல்வதனால் ரோஹண விஜேவீர என்ற ஒரு தனிநபர் தவிர்ந்த வேறு எவரும் கட்சியின் தேசியத் தலைமை என்பதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
2. உயர் மட்டக் குழுக்கள் : கட்சியின் ‘பொலிட் பீரோ’, மத்திய கமிட்டி என்பன ஜனநாயக முறையில் அமைக்கப்பட்டனவாக இருக்கவில்லை.
மேற்படி இரு குழுக்களும் தனியாள் உறவுகளின் படி உருவாக்கப்பட்டதால் கட்சிக்குள் குறுங்குழு வாதம் (FACTIONALISM) நிலவியது.
‘பொலிட் பீரோ’ வின் உறுப்பினர்களின் இயல்புகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. 14 உறுப்பினர்களில் 11 பேர் முப்பது வயதுக்குக் குறைந்த இளைஞர்களாக இருந்தனர்.
2. 14 உறுப்பினர்களில் 6 உறுப்பினர்கள் உயர்கல்வியை முடித்தவர்களாகவும் பட்டதாரிகளாகவும் இருந்தனர். அவர்களில் 2 பேர் வேலையற்ற இளைஞர்களாக இருந்தனர்.
3. 13 உறுப்பினர்கள் க.பொ.த (சா.தர) பரீட்சையில் சித்தியடைந்தவர்களாக அல்லது அதனை விட உயர்ந்த கல்வித் தராதரம் உடையவர்களாக இருந்தனர்.
4. 8 உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 6 உறுப்பினர்கள் ஒரு குறிப்பட்ட நகரசபைப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 5 உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட பாடசாலையில் படித்தவர்களாக இருந்தனர்.
5. ‘பொலிட் பீரோ’ உறுப்பினர்கள் ஏறக்குறைய அனைவரும் மக்கள் விடுதலை முன்னணியில் இணைவதற்கு முன்னர் கம்யூனிஸ்ட் கட்சி (பீகிங் பிரிவு) உறுப்பினர்களாக இருந்தவர்களாவர்.
முடிவுரை
மக்கள் விடுதலை முன்னணியின் 1971 ஏப்ரல் கிளர்ச்சி பற்றிய இவ்வாய்வின் முடிவுகளாக பின்வரும் கருத்துக்களை முன் வைக்கிறோம்.
1. மக்கள் விடுதலை முன்னணியின் தோற்றத்திற்கான புற நிலைமைகளையும், இலங்கையில் உருவாக்கம் பெற்ற சமூக உருவாக்கத்தையும், காலனியப் பின்புலத்தில் உருவான உற்பத்தி முறையையும் வரலாற்று நோக்கில் புரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.
மக்கள் விடுதலை முன்னணி ஒரு குட்டி முதலாளித்துவ இயக்கமாகும். மேற்கு நாடுகளின் வரலாற்றில் குட்டி முதலாளி வர்க்கம் ஓர் இடதுசாரிச் சக்தியாக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டதாகக் கூற முடியாது. அது வெவ்வேறு வரலாற்றுச் சூழமைவுகளில் வெவ்வேறு விதமாகச் செயற்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் அது தீவிர இடதுசாரிச் சக்தியாகவும், வேறு சில சந்தர்ப்பங்களில் தீவிர வலதுசாரிச் சக்தியாகவும் செயற்பட்டுள்ளது. இலங்கை போன்ற சார்பு மண்டல முதலாளித்துவ நாடுகளில் (PERIPHERAL CAPITALIST COUNTRIES) பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்ச்சியாக மோசமடைந்து பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு வருவதால் குட்டி முதலாளித்துவ வர்க்கம் இடதுசாரிச் சக்தியாகச் செயற்படும் உள்ளாற்றல் வாய்ந்ததாக விளங்கியது. இலங்கையின் மக்கள் விடுதலை இயக்கம் ஒரு இடதுசாரி எதிர்க் கிளர்ச்சியை 1971 இல் நடத்தியது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆகையால் 1971 இன் கிளர்ச்சியை குட்டி முதலாளி இளைஞர் பிரிவினரின் இடதுசாரிக் கிளர்ச்சி என வரையறை செய்யலாம்.
2. மக்கள் விடுதலை முன்னணி போன்ற இடதுசாரி இயக்கம், மரபுவழி இடதுசாரிக் கட்சிகள் சமூக ஜனநாயக வாதமாக சீரழிவுற்ற பின்னணியில் தோன்றியது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இலங்கையின் தொழிலாளர் வர்க்க இயக்கம் மரபுவழி இடதுசாரிக் கட்சிகளின் ஏவல் படி செயற்படுபவனவாய், அவற்றிடம் எதிர்பார்க்கப்பட்ட வகிபாகத்தை ஏற்றுச் செயற்படத் தவறின. இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் கிளர்ச்சிவாதப் பிரிவினர் நிரப்புவதற்கு முன் வந்தனர். இருந்து வரும் சமூக அரசியல் முறைமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் கிளர்ச்சியாளர்கள் என்ற வகிபாகத்தை குட்டி முதலாளி வர்க்கம் ஏற்றுச் செயற்பட்டதை குறை விருத்தி நாடுகளின் அண்மைக்கால வரலாறு எமக்கு உணர்த்துகிறது.
3. மக்கள் விடுதலை முன்னணியின் 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சி முதலாளித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு கிளர்ச்சி என்பதில் ஐயமில்லை. அம் முன்னணியினர் சோஷலிச சமுதாயத்தை உருவாக்குவதில் அர்ப்பணிப்பு உடையவர்களாய் இருந்தனரேனும் தாம் அமைக்கப்போகும் சோஷலிசம் பற்றித் தெளிவான திட்டம் எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை. சோஷலிச சமுதாயத்தை நிர்மாணிக்கும் ‘தெய்வீக உரிமை’ தமக்கு இருப்பதாக மக்கள் விடுதலை இயக்கம் நம்பியது. ஆயினும் குட்டி முதலாளித்துவ கிளர்ச்சி வாதிகளான இவ் இயக்கத்தினரின் தியாகமும், இவர்களிடமிருந்த ஆற்றல்களும் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையும் நெறிப்படுத்தலும் இல்லாமையால் வீணாக விரயம் செய்யப்பட்டன.
G.B. கீரவல்ல
கலாநிதி G.B. கீரவல்ல அவர்களால் 1980 ஜனவரியில் இக் கட்டுரை எழுதப்பட்டது. அவ்வேளை, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் உதவி விரிவுரையாளராக இவர் கடமையாற்றினார். பின்னர், அதே பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றார். இவர் இலங்கையின் நவீன வரலாறு, அரசியல் சர்வதேச உறவுகள் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார்.
தொடரும்.