“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்” – திருக்குறள் (26)
மு.வரததாசனார் விளக்கம்
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்குஅரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
இந்த உலகையே மாற்றும் எண்ணங்களுடன் பலரும் வருவார்கள். அவர்களது நோக்கம் நன்றாக இருந்தாலும்கூட, அவர்களது செயல்முறை மற்றும் திட்டங்கள் என்பன அவ்வாறான காரியங்களை நிறைவேற்றத் தடையாக மாறிவிடுகின்றன. இதுவரை வெற்றியடைந்த ஆரம்ப நிறுவனங்கள் பலவற்றையும் உருவாக்கியவர்களின் (கட்டுரையாளர் உட்பட) அனுபவங்களை நோக்கினால், அவர்கள் எல்லோருமே வெற்றியடையக்கூடிய யோசனைகள்(திட்டங்கள்) , புதிய உற்பத்திகள் அல்லது ஆக்கங்கள், புத்தாக்கச் சிந்தனை, சில முக்கியமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தமது வாழ்க்கையிலும் வணிகத்திலும் பாவித்திருந்தார்கள். அதில் ஒன்று தான் ’80/20 ’என்ற கொள்கை. ’80/20’ கொள்கையென்பது எந்தச் செயலையும் இரண்டாக பிரித்து எண்பது வீதத்தை ஒரு பக்கமும் மிஞ்சிய இருபது வீதத்தை இன்னொரு பக்கமும் போடுவது. அதன்பின் இரண்டு பகுதியாக பிரித்த செயல்களை கவனமாக அணுகி அவற்றைச் சரியாக செய்துமுடிப்பதாகும்.
முதலில் அந்தக் கொள்கையை எப்படி அணுகுவது என்றும் அதன்மூலம் பயனுள்ள முடிவுகளை எவ்வாறு எடுப்பதென்றும் இந்தக் கட்டுரையில் ஆராயலாம்.
- ஆக்கங்களின் அம்சங்கள் (Product Features): ஒரு பொருளை உருவாக்கும் படிமுறையில் பல சிறு அங்கங்கள் உள்ளடங்கி இருக்கும். அவையெல்லாம் ஒன்றாகச் சேரும்போது அந்தப் பொருள் முழுமையாக உருவமெடுக்கும். ஆனால் அதிலிருக்கும் அனைத்து அம்சங்களுக்கும் ஒரே அளவான முக்கியத்துவம் இருப்பதில்லை. அதில் முக்கியமான விடயங்களைக் கண்டறிந்து, அதற்கு நிறுவனத்தின் வைப்பீட்டையும் ஆட்பலத்தையும் பாவிப்பது தான் இந்த ’80/20 ’கொள்கையின் பிரதான பயன்பாடு. முக்கியமாக இருபது வீதமான அம்சங்கள்தான் நிறுவனத்தின் உற்பத்தியை வித்தியாசமாக மாற்றி வெற்றியைத் தரக்கூடியவை. அவற்றில் கவனம் செலுத்துவதன் மூலமும் , அவற்றை நன்றாகச் செய்வதன் மூலமும் பொருட்களை விரைவாக உற்பத்தி செய்து சந்தைக்குக் கொண்டுவர முடியும்.
- தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் (Employee Productivity): நிறுவனங்களில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும்போது, அந்த நிறுவனத்தினரது நோக்கமாக அனைத்துத் தொழிலாளர்களும் ஒரே மாதிரி பங்களித்து வேலை செய்வார்களென்பதே இருக்கும். ஆனால் நடைமுறையில் அவ்வாறிருப்பதில்லை. இருபது வீதமான தொழிலாளர்கள் கூடுதலான, ஏறக்குறைய எண்பது வீதமான வேலையை, பொறுப்பெடுத்து செய்வார்கள். அதைக் கவனித்து முகாமையாளர்கள் அப்படிப் பொறுப்பெடுத்து வேலை செய்பவர்களுக்கு உரியவகையிலான ஊக்குவிப்பை வழங்க வேண்டும். அத்தோடு எஞ்சிய எண்பது வீதமானோரையும் இனங்கண்டு, அவர்களையும் பணியில் அதிகமாக ஈடுபட வைப்பதன் மூலம் ஆக்கத்திறனைக் கூட்டமுடியும்.
- சிக்கல் தன்மையும் நேர அட்டவணையும் (Complexity and Timeline): நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்களின் முக்கியமான அம்சங்களை அடையாளம் கண்டபின், அதை உருவாக்கத் தொடங்குமுன் அதில் மிகச் சிக்கலான வேலையெது? சிக்கல் குறைந்த வேலை எது? என்று அடையாளம் காண்பது முக்கியம். அவ்வாறு அடையாளம் காண்பதன் மூலம் அதற்குத் தகுந்த ஆளை வேலைக்கு அமர்த்துவதுடன், அந்த வேலைக்குத்தேவையான நேரத்தையும் ஒதுக்க வேண்டும். இதற்கும் ’80/20’ கொள்கையைப் பிரயோகித்து திட்டமிடப்படாத தாமதங்களைக் குறைக்கலாம். இதில் ஒரு சுவாரசியமான விடயம் என்னவென்றால் கடைசி 20% வேலையை முடிக்க ஏறக்குறைய 80% நேரம் எடுக்கும். அதற்கு நான் பின்பற்றிய யுக்தி , முதல் எண்பது வீதமான வேலைகளை அதி விரைவாகச் செய்துவிட்டு,அதன்மூலம் சேமிக்கும் நேரத்தை மிஞ்சிய இருபது வீதமான வேலைக்குச் செலவிடுதல் என்பதாக இருந்தது.
- வாடிக்கையாளர்களும் பராமரிப்பு நேரமும் (Customers and Support): நிறுவனங்களைத் தொடங்கும்போது அதில் உருவாக்கப்படும் பொருட்களை பல சிறந்த வாடிக்கையாளர்களை அணுகி விற்பதன் மூலம் நிறுவனங்களின் நிலைத்த தன்மையைப் பேணமுடியும். நிறுவன உற்பத்திகளுக்கு பல வாடிக்கையாளர்கள் கிடைத்தாலும் சிலரே அந்தப் பொருட்களை விற்பதற்கு உதவி செய்வார்கள். எனது அனுபவங்களின்படி இதிலும் ’80/20’ கொள்கை தலை நீட்டும். இருபது வீதமான வாடிக்கையாளரே எண்பதுக்கும் மேலான வருமானத்திற்கு மூலகாரணமாக இருப்பார்கள். மற்ற எண்பது வீதமானவர்கள் நிறுவனத்தின் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் நேரத்தை வீணாக்கிவிடுவர். எனவே வருமானப் பட்டியலைப்பார்த்து எவரோடு நேரத்தைக் கழிப்பது நிறுவன வளர்ச்சிக்கு உகந்தது என்பதை நிர்வாகிகள் திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும்.
- வடிவமைப்புப் பிழைகளும் கவனிப்பும் (Product Bugs and Focuses): பொருட்களை உருவாக்கும்போது அதில் பிழைகள் வருவது சகஜம். கூடுதலான பிழைகளை தொடக்கத்திலேயே கண்டுபிடித்து பிழை செய்தவர்கள் திருத்திவிடுவார்கள். ஆனால் பொருட்களின் சிக்கல் தன்மையால் , சில பிழைகளை ஆரம்பத்தில் கண்டறிவதும் கடினம். அப்படியான சம்பவங்களைக் குறைப்பதற்காக இப்போது வடிவமைப்பு ஆய்வு/விமர்சனம் (Design Review) மற்றும் ’அஜைல் செயல்முறை’ (Agile Process) என்பவற்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அப்படியிருந்தும் கடைசியில்வரும் எண்பது வீதமான பிழைகள் இருபது வீதமான இடங்களிலிருந்தே வரும். அதற்கேற்ப திட்டமிட்டு உற்பத்தி செய்வது அவசியம்.
’80/20’ கொள்கையை “பறெரோ” கொள்கை (Pareto Principle) என்று சொல்வார்கள். அதன்படி பார்த்தீர்களென்றால் எந்த நிகழ்வுக்கும் பல காரணங்கள் இருந்தாலும், அந்தக் காரணங்களின் ஒரு சிறிய துணைக்குழுவே முடிவுக்கு பெரும்பாலும் காரணமாகும். இது ஒரு விஞ்ஞானரீதியான விதி இல்லையென்றாலும், இதைப்பற்றி அறிந்திருப்பதும், ஆரம்ப நிறுவனங்களில் இப்படியான கொள்கைகளைப் பாவிப்பதன்மூலமும் பெரும் பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
இப்படியான’ 80/20 ’கொள்கை கூடுதலான நேரங்களில் வந்தாலும், அதன் விளைவுகளைக் குறைப்பதன் மூலம் உற்பத்திவீதத்தை கூட்டமுடியும். அதற்கான சில வழிமுறைகள்:
திட்டமிடல்:
- ஆரம்பத்தில் குழு உறுப்பினர் எல்லோரும் சேர்ந்து திட்டமிடல்
- தொடர்ந்து ஆராய்ந்து இடை இடையில் மீளத் திட்டமிடல்
- பொருள் செய்துமுடிந்தபின் ஏற்பட்ட பிழைகளை ஆய்வது
முக்கியமான குறி:
- செய்யும் பொருளின் முக்கியமான அம்சங்களை எழுத்துமூலம் பகிர்வது
- முக்கியமான குறியைத் தொடர்ந்து கவனிப்பது
- முக்கியமான குறியை வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து சரிபார்ப்பது
ஆட்களை கவனிப்பது:
- இருக்கும் வேலைகளை எல்லோருடனும் பகிர்வது
- பொறுப்புக்களை மாற்றி/சுழற்சிமுறையில் கொடுப்பது
பகுப்பாய்வு:
- சிக்கலான வழி தேவை தானா என அலசி ஆராய்வது
- சிக்கலான பிரச்சினைகளுக்கு சுலபமான வழி காண்பது
நேர மேலாண்மை:
- வாடிக்கையாளர்களிற்கு கொடுக்கவேண்டிய நேரத்தை அறிவது
- திட்டமிடும்போது திட்டமிடாத செயல்களுக்கும் நேரம் ஒதுக்குவது
இந்தக் கட்டுரையில் எவ்வாறு ’80/20’ கொள்கை ஒரு நிறுவனத்தை தாக்கக்கூடுமென்றும் அதன் விளைவுகளை தவிர்க்க சில நுணுக்கங்களையும் கூறியுள்ளேன். அதை உரியவகையில் பயன்படுத்துவதன் மூலம் நான் பல இடையூறுகளை தவிர்த்தேன். அதேபோல் நீங்களும் வெற்றிபெற என் வாழ்த்துகள்!
தொடரும்.