நேற்றோ இன்றோ அல்ல, ஐரோப்பிய காலனிய ஆட்சியின் கீழிருந்து விடுதலை பெற்ற காலத்திலிருந்தே தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் அகழ்வாய்வு என்பது திட்டவட்டமான ஓர் அரசியற் கருவியாக மாறியுள்ளது. அத்துடன் இரத்த ஆறுகளைத் தேசங்கள்தோறும் திறந்துவிடும், கண்ணுக்குத் தெரியாத படைக்கலமும் ஆகும். தேசத்தை நிர்மாணஞ் செய்யும் அதிகாரப் பொறிமுறைக்கான பெருங்கதையாடல்களைக் கட்டமைப்பதற்கான அறிவியலாடை தரித்த தந்திரோபாயமாகவே அகழ்வாராய்ச்சி நடைமுறைகள் பெருமளவிற் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தப் பின்னணியில், பெரும்பாலும் இலங்கை போன்ற நாடுகளில் கடந்த காலம், வரலாறு, அகழ்வாய்வு, மரபுரிமை (Past, history, archeology, heritage) போன்ற வேறுபட்ட விடயங்கள் அல்லது துறைசார் ஒழுக்கங்கள் ஒன்றுள் கலந்து குழப்பப்பட்டு பிரயோகிக்கப்படுகின்றன. இது அறியாமை அல்லது துறைசார் தெளிவின்மை காரணமாக நிகழும் குழப்பம் என்பதை தாண்டி, மேலாதிக்கம் செய்வதற்கான ஒரு பொறிமுறையாகவே நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதே அதிகபட்சம் சரியானது. இதனைத் தொடர்ச்சியாகச் செய்வதனூடாக இச்செயற்பாடு அதிகாரபூர்வத்தன்மையையும் – சட்டபூர்வத்தன்மையும் (authentic and legitimized ) உடையனவாக்கப்படுகின்றன. அவ்வகையில் அகழ்வாராய்ச்சி முதலிய செயற்பாடுகளை இலங்கை இனவாத அரசியலின் விசேட படையணிகளில் ஒன்றாகவே இனங்காண வேண்டியிருக்கிறது. இந்த நிலவரங்களை மேலும் புரிந்து கொள்ள வரலாறு – அகழ்வாய்வு – மரபுரிமை என்பன குறித்த அடிப்படைகளை மேலும் சற்று விரிவாகப் பார்ப்பது பயன்தரும்.
வரலாறு என்பது கடந்த காலம் பற்றியதுதான், நடைமுறையில் வரலாறானது, கடந்த காலத்திலிருந்து நிகழ்காலம் தனது தேவைகளுக்கேற்ப தெரிவுச்செய்து கொண்டவற்றின் தொகுப்பாகும். அதனாற்றான் வரலாற்று அறிஞரான றோமிலா தாப்பர் ‘அனைத்து வரலாறுகளுமே நிகழ்காலத்திற்குரியன’ என்கிறார். அத்தகைய கடந்த காலத்தில் இருந்த தெரிவுகள் கூட வரலாற்றாசிரியர்களது நோக்குநிலை வேறுபாடுகளுக்கேற்ப மாறுபடுகின்றன. இதனால் வரலாற்றை ஒற்றைப்படையாக ‘வரலாறு’ எனக் கூறாமல் ‘வரலாறுகள்’ (Histories) எனப் பன்மைப்பட அழைத்தலே சரியாகும் என வாதிடுவர். இத்தகைய பின்னணியில் வரலாற்றை அதிகாரபூர்வமான ஒற்றைப்படையாக்கம் செய்தல் என்பது அதிகாரஞ் செய்வதற்கான பொறிமுறையும் பன்மைத்துவம் – வேறுபாடுகளை ஏற்றல் முதலிய ஜனநாயக நடைமுறைகளுக்கான மறுப்புமாகும்.
இதனை ஜனரஞ்சக வெளிகள் தொடக்கம், பாடப் புத்தகங்கள் வரை அடிப்படைவாத அரசுகள் செய்வதனூடாக அவற்றைச் சட்டபூர்வமானதாக்குவதுடன், சமூக நினைவுகளில் இருந்து தமது சித்தாந்தத்திற்குப் போட்டியான தடயங்களை நீக்கிவிட முற்படுகின்றன. அவ்வகையில் கடந்த காலம் பற்றிய உரையாடலின் ஒரு பாதை வரலாறு சார்ந்தது என்றால், அதனுடைய இன்னொரு பாதை மரபுரிமை ஆகும். ஆகவே வரலாறு போலவே கடந்த காலத்தைக் கைப்பற்றும் அதிகாரப் போட்டியில் மரபுரிமையும் முக்கியமானதாகிறது. அது இலங்கையின் மரபுரிமையையும் மிகப்பெரிய அரசியற் சூதாட்டக்களத்தினுள் இறக்கிவிட்டுள்ளது. ஒரு பொருள் அல்லது செயற்பாடு அல்லது அறிவு எப்பொழுது மரபுரிமை ஆகிறது? என்பது முதல் யாருடைய பண்பாட்டுப் பொருட்களுக்கு மரபுரிமை அங்கீகாரம் தரப்படுகிறது அல்லது தரப்படவில்லை வரை பல தொடர் கேள்விகள் இது தொடர்பில் உருவாகின்றன.
அவ்வகையில், பேராசிரியை நீரா விக்கிரமசிங்க போன்ற புலமையாளர்கள் இலங்கையில் மரபுரிமை- வரலாறு- அகழ்வாய்வியல் ஆகிய ஒழுக்கங்கள் எப்படி அவற்றின் துறைசார் தனியொழுக்கம் – முறையியல் என்பனவற்றை முனை மழுங்கச் செய்து, அரசியல் அபிலாசைகளுக்கான பொறிமுறையாக அவை மாற்றப்படுகின்றன என்பது பற்றிச் சுட்டிக் காட்டுகின்றார். இவ்வகையில் மரபுரிமை வரலாறு முதலானவற்றுக்கு இடையிலான பொதுமையான அம்சங்களை (commonalities)மேலும் கூராக்கி, ஒன்றுள் ஒன்றாக்குவதனூடாகவும், அவற்றுக்கிடையான அடிப்படையான வேறுபாடுகளை (difference) மறைத்து அல்லது பின்தள்ளி, அவ்விரண்டும் ஒன்று போன்ற ஒரு தோற்றப்பாட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தல் மூலமாக எவ்விதம் பேரினவாத, சிங்கள, பௌத்த, மைய அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது என்பது பற்றி அவர் தனது கட்டுரையில் விவாதிக்கிறார்.
2016 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், ‘இலங்கையில் பௌத்த தாதுகோபுரங்களைப் பாதுகாத்தலும் மதத் தேசியவாதமும்’ (Conserving Buddhist Stupas and religious nationalism in Sri Lanka) எனும் தலைப்பில் சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரையை ஆற்றிய பேராசிரியர் ஜகத் வீரசிங்க, இலங்கையில் அகழ்வாய்வியல் என்பது எவ்வாறு அதன் துறைசார் அறிவியல் ஒழுக்கத்திலிருந்து விலகிய ‘இனவாத அகழ்வாய்வியலாக’க் (Racist archeology) காணப்படுகிறது என்பதையும், அது எப்படி மதத் தேசியவாதத்தின் சேவகனாயும் – சிப்பாயுமாக மாறி அகழ்வாராய்ச்சி ஒழுக்கத்தை இலங்கையில் தொழிற்படுத்துகிறது என்பது பற்றியும் விவாதித்தார். இவ்வகைப்பட்ட ஆய்வு எழுத்துக்களில் எலிசபெத் நிசான் (History in the making: Anuradhapura and the Sinhala Buddhist nation’-1989) பிரதீப் ஜெகநாதன் (Authorizing the history ordering the nation :The Conquest of Anuradhapura -1995) ஆகியோரது அனுராதபுரத்தை மையமாகக் கொண்ட முன்னோடி வாசிப்புக்களும் பிரதானமானவை. அண்மைக் காலத்தில் நீரா விக்கிரமசிங்கவினால் எழுதப்பட்ட ‘நிகழ்காலத்தை உருவாக்குதல்: போருக்குப் பிற்பட்ட இலங்கை தேசபக்தியில் வரலாறே மரபுரிமையாதல்’ (Producing the Present: History as Heritage in Post-War Patriotic Sri Lanka -2012) எனும் கட்டுரையும் முக்கியமானவை.
வரலாறு என்பது கடந்த காலங்களில் தெரிவு செய்யப்பட்ட சம்பவங்களின் கூட்டுமொத்தமாகும். அதேசமயம் அது வரலாற்றாசிரியர்களது கருத்து நிலைக்கேற்ப மாறுபடும். தெரிவுகளால் ஆனதாயினும், அவற்றுக்கான சான்றாதாரம் என்பது இன்றியமையாத ஒரு முன்நிபந்தனை ஆகும். அதுவே அதனை விஞ்ஞானப்பூர்வமானதாக்கும் முதல் அடிப்படையுமாகும். ஆனால், மரபுரிமை என்பது அதிலிருந்து அடிப்படையில் மாறுபட்ட ஒரு கருத்தாடலாகக் காணப்படுகிறது. மரபுரிமையானது, காலங்காலமாகக் குறிப்பிட்ட சமூகத்திடையே அவர்களது கடந்த காலத்திலிருந்து கைமாற்றப்பட்டு வருவதாகும். அடிப்படையில் அது சமூக வழக்காறு மற்றும் நம்பிக்கை (Customs and believes) சார்பானது. அதனால்தான், டேவிட் லொவன்தால் ‘மரபுரிமை என்பது சரிபார்க்கப்படக் கூடிய உண்மை அன்று: பதிலாக பற்றுறுதியுடன் கூடிய நம்பிக்கை’ (Heritage counts “not on checkable fact but credulous allegiance) என்கிறார். ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை வரலாற்றுத் தடயம் ஒன்றைப் போலவே மரபுரிமை அதன் அரசியற் தேவைகளைக் கருத்திற் கொண்டு நடமாட வைக்கப்படுகிறது. அதன் விளைவுகளாக சிறுபான்மை இனத்தவரது மரபுரிமைச் சின்னங்களை அழித்தல் – கவனியாது விடுதல் – கவனிப்பது போலப் பாசாங்கு செய்து சிறுகச் சிறுக அழிய விடுதல், சொந்தங் கொண்டாடுதல் அல்லது கைப்பற்றுதல் உட்பட்ட செயற்பாடுகள் பெரும்பான்மை இனத்துவ அரசினால் முன்னெடுக்கப்படுகின்றன. அதேநேரம் மேற்படி செயற்பாடானது மரபுரிமைச் சின்னங்களுக்கு வரலாற்றுத் தடயப் பெறுமதியை எந்த வரலாற்று அடிப்படையும் இல்லாமலே வழங்க முயற்சிக்கிறது. இதனை மேலாதிக்கம் செய்வதற்கான திட்டமிட்ட செயற்பாட்டுப் பொறிமுறையாகவே புரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அடுத்த கட்டத்தில் அகழ்வாய்வு இத்தொடர் சங்கிலியில் சிறப்பு முகவராக மாற்றப்படுகிறது . வரலாற்றைப் போலவே அகழ்வாய்வும் கடந்த காலம் பற்றியதுதான். வரலாற்று எழுத்தைப் பொறுத்தவரை அகழ்வாய்வு எச்சங்கள் அதன் அடிப்படைத் தடயங்களில் ஒன்றாக அமைகிறது. அதேவேளை, வரலாற்றை உரைக்கவல்ல இன்ன பிற தடயங்களும் சேர்த்தே அதனைக் கட்டமைக்கின்றன. ஆனால், வரலாற்றுக்கான தடயங்களுள் ஒன்றென தொல்பொருளியலது அடிப்படைத் தடம் மாறி இலங்கையில் வரலாறானது, தொல்பொருளியல் மேலாதிக்கத்திற்குட்பட்டதும் அதற்குச் சேவகம் செய்யும் ஒரு துறையாகவும் பின்தள்ளப்பட்டுள்ளது. இவ்விரு துறைகளுக்குள்ளும் காணப்படக்கூடிய நெருக்கமான பொது அம்சங்களது பின்னணியில் இந்தத் தடம் மாறுதல் கவனிக்கப்படாமல் விடப்படுகிறது. அது மட்டுமன்றி இலங்கையிலுள்ள பெருமளவு அரும்பொருளகங்களும், தொல்பொருள் அரும்பொருளகங்களாகவே இருப்பதையும் கவனிக்க வேண்டும். ஒருவகையில் அது காலனிய கால நிலவரங்களது தொடர்ச்சியே எனினும் அதன் சமகாலப் பேணுகை விரிவாக்கம் என்பதனுள் இலங்கையின் பேரினவாத அரசியல் தேவைகளைப் பேணுவதற்கான பலமான அடிப்படைகளும் காணப்படுகின்றன என்பதை மறந்து விடக்கூடாது.
எவ்வாறு மரபுரிமைகளுக்கு வரலாற்றுப் பெறுமானம் ஏற்றப்படுகிறதோ, அவ்வாறே மரபுரிமை இடங்களும் தொல்லியற் தலங்களாகவும், அகழ்வாய்வு இடங்களாகவும் மாற்றப்படுகின்ற சுவாரஸ்யங்களும் இலங்கையிற் காணப்படுகின்றன. இது வெறும் துறைசார் குழப்பம் என்று மட்டும் கொள்ள முடியுமா? அல்லது இலங்கையின் பேரினவாத அரசியல் இயந்திரத்தின் மிகவும் திட்டமிடப்பட்ட செயற்பாடாகக் கொள்ளப்பட வேண்டியதா?என்பது முக்கியமான ஒரு கேள்வியாகும்.
இந்தச் செயற்பாட்டுப் பொறிமுறையின் உச்சம் வரலாறு – மரபுரிமை – அகழ்வாய்வு என்பனவற்றின் சிங்கள பௌத்தமயமாக்கம் ஆகும். அகழ்வாராய்ச்சிக்குரிய தொல்லியற் தலம் – ஒருவேளை பண்டைய பௌத்தப் பயில்வுக்குரிய ஓர் இடமே ஆயினும், தற்போது அது விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளுக்கு உரிய மையமே ஒழிய பண்டைய சமய வழிபாட்டை ஆரம்பிப்பதற்கான ஓரிடமல்ல: அவ்வாறான சமயரீதியான திருப்பம் மெய்யான விஞ்ஞானபூர்வமான ஆய்வு நகர்வுகளுக்கான மத நம்பிக்கையின் பாற்பட்ட தடைகளை ஏற்படுத்துவதுடன், அவ்விடத்தை வரலாற்று ரீதியான காலக் குழப்பங்களை (Problems of Periodization) உடைய இடமாக்கும் செயற்பாட்டையும் குறிப்பாக எதிர்காலத்திற்கு விட்டுச் செல்லும்.இந்த மதத்துவ மேலாதிக்கம் – பௌத்த மதபீடங்கள் கொண்டுள்ள அரசியல்ரீதியான செல்வாக்கு வழியாக மேலும் வலுவுடையதாக்கப்படுகிறது.
சுருங்ககூறின், இலங்கையில் அறிவியல் அடிப்படைகளைக் கொண்ட வரலாறு – அகழ்வாய்வியல் – மரபுரிமைகள் போன்ற துறைசார் ஒழுக்கங்கள் இனவாதத்தால் கட்டுண்ட ஓர் அரசியற் பிராணியாக மாற்றப்பட்டுள்ளது. அவை யுத்த களத்தில் நிற்கும் சிப்பாய்க்கு நிகரான வலுவோடும் தேசபக்தியோடும் மரியாதை செய்யப்படும் ஒன்றாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறுபான்மைச் சமூகங்களின் நோக்குநிலையில், இந்நடவடிக்கைள் யாவுமே அவர்களை மிக வேகமாகவும், ஆழமாகவும் தேசத்தின் பிறத்தியார்களாக (Others of nation) உருமாற்றியுள்ளது.
தொடரும்.