மொழிபெயர்ப்புக் கட்டுரை : பிறையன் பவ்வன்பேர்ஜர்
1968 ஆம் ஆண்டு பரிஸ் நகரில் மாணவர்கள் வீதிகளில் மறியல் செய்து பெரும் கிளர்ச்சி நடத்திய அதேஆண்டில் இலங்கையின் தமிழ் கலாசாரத்தின் மத்தியான யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்குள் இன்னொருவகையான சிவில் குழப்பம் நிகழ்ந்தது. இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சியின் பீக்கிங் பிரிவுடன் (Peking wing) தொடர்புடைய செயற்பாட்டாளரின் வழிநடத்தலில் நூற்றுக்கணக்கான தீண்டத்தகாதவர்கள் என்று மரபு வழியில் ஒதுக்கப்பட்ட பள்ளர், நளவர் சாதியினர் யாழ்ப்பாணத்தின் பழமைவாத நடைமுறைகளைக் கடைப்பிடிக்கும் கோவிலான மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலின் முன்பாக சத்தியாக்கிரகம் செய்தார்கள். சீர்திருத்தவாதியான ஆறுமுகநாவலர் (1822 – 79) கூறியவாறு சீர்திருத்தம் பெற்ற சைவ ஆலயம் ஒன்று எப்படி இருக்க வேண்டுமோ அதன் இலட்சிய மாதிரியாக இருந்து வந்தது. அதன் அழகிய கட்டிடத்தின் தோற்றம் அப்படியானதொரு இயல்பைக் கொடுத்தது. ஆடி மாதத் திருவிழாவிற்கு சிறிது நாட்கள் முன்பாகத் தொடங்கப்பட்ட இந்தச் சத்தியாக்கிரகம் தீண்டத்தகாதவர்களுக்கு மூடப்பட்டிருந்த இந்தக் கோவிலைத் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடத்தப்பட்டது. அமைதி வழியில் தொடங்கிய இப்போராட்டம் சில நாட்களின் பின் வன்முறைத் தாக்குதல் ஆக மாறியது.
‘சைவ நெறியின் பாதுகாலர்கள்’ என அழைத்துக்கொண்ட உயர்சாதி இந்துக்கள் (வேளாளர்களும் அவர்களது வீட்டு உதவியாளர்களான கோவியர்களும்) இரும்புக்கம்பிகள், மண் அடைக்கப்பட்ட போத்தல்கள் என்பன கொண்டு சத்தியாக்கிரகம் செய்தவர்களைத் தாக்கினார்கள். குடா நாடு முழுவதும் இந்த சைவ நெறிப் பாதுகாலர்களின் செய்கையினால் கொந்தளித்தது. பல இடங்களில் வன்முறைகள் இடம்பெற்றன. சில சம்பவங்கள் தீவிரமானவையாய் அமைந்தன. பெரும்பாலான தமிழர்களுக்கும், வெளியாருக்கும் யாழ்ப்பாணம் ஒரு பெரும் சாதிச் சண்டைக்குக் தயாராகிக் கொண்டிருந்தது போன்ற தோற்றத்தைத் தந்தது (பார்க்க பொன்ற் ஹலன்ட் 1968). இருப்பினும் இப்பிரச்சினை தணிந்தது. 1978 வரையும் பல இடங்களில் ஆலயப்பிரவேசத்தை ஒட்டிய சச்சரவுகள் இடையிடையே ஏற்பட்டதேனும், மாவிட்டபுரம் சண்டையை தொடர்ந்து, தமிழ்ச்சமூகம் அரசியல் ஐக்கியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சிங்களவரின் மேலாதிக்கத்தின் கீழ் தமக்கு கிடைக்கவேண்டிய நன்மைகள் குறைந்து வரும் சூழலில் உயர்சாதி வேளாளர்களும் தாழ்த்தப்பட்டோரும் ஐக்கியப்பட்டு எதிர்த்தனர்.
ஒதுக்குப் புறமான, தூங்கிக்கிடந்த ஒரு கிராமமான மாவிட்டபுரத்தில் நிகழ்ந்த ஒரு கவனிப்புக்குரியதல்லாத விடயமே இந்த ஆலயப்பிரவேசம் என்ற நிலையில் இந்த சம்பவம் இருந்திருந்தால் இலங்கையின் அரசியல் வரலாற்று எழுத்துக்களில் 1968 நிகழ்வுகளை அடிக்குறிப்பாக குறிப்பிட்டு விட முடியும். மாவிட்டபுரம் பிரச்சினைக்கு பின்னர் தோன்றிய இளைஞர் கிளர்ச்சி இலங்கையை ஒரு சிவில் யுத்தத்தின் விளிம்புக்கு இட்டு சென்றது. 60000 வீரர்களைக் கொண்ட இந்திய அமைதிப்படை காக்கும் படையணி தமிழ்ப்பகுதிகளுக்குள் புகுந்தது. தமிழர் தேசத்தின் பொருளாதாரம் பாழ்ப்பட்டது. யாழ்ப்பாணத்தில் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு பயிர்ச்செய்கை நிலங்கள் கைவிடப்பட்டன. கோவில்கள் அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட இந்த கொந்தளிப்பான நிலை பற்றிய செய்திகள் உலக ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாயின. இலங்கை தென்னாசியாவின் பெய்ரூத் (BEIRUT)என்று வருணிக்கக் கூடிய நிலை ஏற்பட்டது.
பெரும்பாலான இலங்கையர்களிற்கு 1968இன் சாதிச்சச்சரவுகள் புதுமையான ஒரு விடயமாக இருந்திக்கவில்லை. இந்த சச்சரவுகள் யாழ்ப்பாணம் ஏற்கனவே இருந்த வார்ப்படமான படிம சாதி உணர்வு மேலோங்கிய மிகமிகப் பிற்போக்கான பழமைவாதச் சமூகம் என்ற விடயத்தை உறுதி செய்தது. 1960களில் தமிழ்மொழி உணர்வும், தமிழர் அடையாள உணர்வும் வளர்ச்சியுற்ற போதும் தென்னிந்தியாவில் தோன்றிய தமிழ்ப் பிரிவினைவாத இயக்கம் யாழ்ப்பாணத்தில் செல்வாக்குப் பெறவில்லை. (Kearney 1967:115); பிராமண எதிர்ப்பையும், சமத்துவ கருத்துக்களையும் பிரதான அம்சமாகக் கொண்ட தமிழகத்தின் இப்பிரிவினைவாதம் யாழ்ப்பாணத்தில் எவ்வித சலனத்தையும் உண்டாக்கவில்லை. இதற்கான காரணம் தென்னிந்தியாவைப் போன்று யாழ்ப்பாணத்தில் பிராமணர் பொருளாதார ஆதிக்கத்தில் இருக்கவில்லை. யாழ்ப்பாணத்துப் பிராமணர்கள் வேளாண்மைத் தொழில் செய்வோரான வேளாளர்களின் கோவில்களில் சேவை செய்வோராகவே இருந்தனர். வேளாளர் சடங்கியல் சார்விடயங்களில் பிராமணர்களைப் பணிந்து ஒழுகுபவராயினும், உலகியல் நிலையில் பிராமணர்களின் எஜமான் வேளாளர்களேயாவர். (பாங்ஸ் 1960:66-69)
தென்னிந்தியாவைப் போன்று அல்லாமல் யாழ்ப்பாணத்தவர்கள் கோவில் வழிபாட்டு முறையில் பிராமணரின் தேவையையும் முக்கியத்துவத்தையும் அழுத்திச் செல்லும் போக்கை வெளிப்படுத்தினர். (இப்பண்பு மாவிட்டபுரம் கோவிலில் வெளிப்படுகிறது. அக்கோவில் பிராமணரின் உடைமையாகவுள்ள சில கோவில்களில் ஒன்று) காந்தியக் கொள்கைகளின் ஈர்ப்பும், சாதி விடயங்களில் தளர்ச்சியும் ஏற்பட்டபோதிலும், கோவில் நடைமுறைகளில் பிராமணர் பங்கை அழுத்துவதால் தாழ்த்தப்பட்டவர்களின் ஆலயப் பிரவேசத்திற்கு எதிரான கருத்தும் வலுப்படலாயிற்று. 1967இல் வெளிவந்த ஒரு பத்திரிகைச் செய்தியின்படி, யாழ் மாவட்டத்தில் 1309 இந்துக்கோவில்களில், 17 வீதமானவையே தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் திறந்துவிடப்பட்டன. (ஒப்சேவர் 1967 செப் 26, பக் 11) ஆகவே மாவிட்டபுர மோதல் ‘பழையான மரபுகள்’ மற்றும் ‘நவீனத்திற்கு முந்தைய சாதிய தொடர்புகள்’ ஆகிய இரண்டும், நவீனத்துவம் மற்றும் சமூக மாற்றத்துடன் மோதுவதாகவே தெரிந்தது. இதில் மரபுகளும், சாதியும் வெற்றிபெறுவது போன்றே தோன்றியது. மேற்குறித்த விளக்கம் ஒரு புறமிருக்க தமிழ்ப்பிரிவினை வாதத்திற்கும் மாவிட்டபுரம் கோவிலுக்கும் ஒரு தொடர்பும் உள்ளது. இலங்கையின் இனத்துவ முரண்பாடுகள் பற்றிய ஆய்வுகளில் கவனிக்கப்படாத விடயம் இது. வடக்கின் தமிழர்களுக்கு சுயாட்சி வேண்டும் என்பதும், பின்னர் பிரிவினை வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழர்களின் வேளாளர் சாதியின் பழமைவாதப் பிரிவினர்களிடமிருந்தே முதலில் தோன்றியது.
தமது தனிப்பட்ட விவகாரங்களான சாதி உறவுகள், ஆலய வழிபாடு ஆகிய விடயங்களில் கொழும்பு அரசு அநாவசியமாகத் தலையிடுகின்றது என அவர்கள் அதிருப்தியை வெளியிட்டனர். திரு.சி.சுந்தரலிங்கம் என்ற வேளாளர் அரசியல் ‘தலைவர் சைவப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் 1959 இல் துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டார். அதில் இலங்கையில் தனித்தமிழ் தேசத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். (Kearney 1967:112:13 Elam: Our Deity என்ற பிரசுரம் டிசம்பர் 18, 1959 மேற்கோள் காட்டப்பட்டுள்ளது). வேளாளர் நீண்டநாட்களாக யாழ்ப்பாணத்தைத் தமது ஆதிக்கத்திற்குரிய தனிப்பட்ட இடமாக கருதி வந்தனர் (Banks 1960). பிரித்தானியர் புகுத்திய தாராளக் கொள்கைகளாலும் சுதந்திரத்தின் பின்னர் (சிங்களவரால் மேலாதிக்கம் செய்யப்படும்) அரசின் தலையீட்டாலும் நிலைமைகள் தலை கீழாகின என வேளாளர்கள் நம்பினர். பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் தீண்டத்தகாதவர்களின் ஆலயப்பிரவேசத்தைத் தாம் எதிர்ப்பதற்குக் காரணம் தாழ்த்தப்பட்ட குழுக்களுக்கு வழிகாட்டல், நிதி என்பன சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து வருவதுதான் என்று சுந்தரலிங்கம் கூறினார். (சிலோன் ஒப்சேவர் யூலை 5, 1968 பக் 11).
தமிழ் நாட்டின் அரசியலில் இருந்து யாழ்ப்பாணம் வித்தியாசமானதாக அதனின்றும் தனித்து விலகி நிற்கிறது என்பதைக் காட்டுவதற்கும் அப்பால் மாவிட்டபுர மோதல் கவனிப்புக்குரியதொரு விடயமாக உள்ளது. தென்னாசியப் பிராந்திய சமூகங்களின் அரசியல் ஒழுங்கினை மிரட்டும் நவீனத்திற்கு முற்பட்ட சமூக முரண்நிலையின் மூன்று விடயங்களான (i) தீண்டத்தகாதவர்களுக்கு எதிரான வன்முறை, (ii) பழமைவாத நோக்குடைய சமய சீர்திருத்த இயக்கங்கள், (iii) இன ரீதியான பிரிவினை வாதம் என்பன இந்தப்பிரச்சனைக்குள் பின்னி பிணைந்துள்ளன. இவை மூன்றும் புராதன உணர்வுநிலைகள் (Primordial Sentiments) உடனும் நவீனத்திற்கு முந்திய சமூகத்தோடும் உள்ள பிணைப்பாலும் உருவானவை (Geertz 1973). இம் மூன்று வகை வன்முறைகளும் அனைத்து தென் ஆசிய தேசங்களுக்கும் ஆபத்தான நிலையொன்றை உருவாக்கியுள்ளன. அசாதாரணமான மாவிட்டபுர மோதலில் இம்மூன்றும் காணப்படுவதோடு அவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புபட்டும் உள்ளன. சாதிகளுக்கு இடையிலான இந்த மோதல் யாழ்ப்பாணச் சமூகத்தைச் சின்னா பின்னமாக்கும் காலத்தின் உச்சம் மாவிட்டபுரத்தில் வெளிப்பட்டது.
ஒரு நூற்றூண்டுக்கு மேலாகத் தொடர்ந்து வந்த இந்து மத வழக்கங்களை உயர்சாதி இந்துக்களுக்குச் சாதகமான முறையில சீர்த்திருத்தும் முயற்சிகளின் உச்சகட்டத்தினை இந்த மாவிட்டபுர பிரச்சனை பிரதிபலித்தது. இந்த இரு போக்குகளுக்கும், அரசியல் உள்நோக்கமுடையவர்களான சிங்கள அரசியல் கட்சிகள், இடதுசாரிக் குழுக்கள் மற்றும் பௌத்த சமய அமைப்புக்கள், குடாநாட்டின் இப்பிரச்சனைகளில் தலையிட ஏதுவாயிற்று. இதன் விளைவாக பழைமைவாத உயர்சாதி இந்துக்கள் தமக்குச் சுயாட்சி வேண்டும் என்ற முடிவினை எடுக்க ஊக்குவித்தது. எல்லாவகையிலும் யாழ்ப்பாணம் மரபுவழிச்சமூகம் என்ற சித்திரத்திற்கு ஏற்ற மாதிரியாக உள்ளது. யாழ்ப்பாணம் சமூகம் சாதி படிநிலைச் சமூக அமைப்பின் உயர்வு தாழ்வுகளால் கூறு போடப்பட்டுள்ளதோடு இலங்கையின் பிற பகுதிகளில் இருந்து அதன் தனித்துவ இனக்குழுமத்தால் வேறுபடுத்தப்பட்டு நிற்கிறது. இப்பின்னணியில் தான் வெளியில் இருந்து புகுத்தப்பட்ட அரசியல் நவீனத்துவத்துவம் மரபுவழிச் சமூகத்துடன் மோதலில் இருப்பதாக தோற்றம் பெறுகிறது. ஆகவே தான் இந்த தோற்றம், இந்த கட்டுரை காட்டுவதுபோல் இந்த பிரச்சினையில் சாதி, சமயம், இனத்துவம் என குறிப்பிடப்படுவது அல்லது குறிப்பிட்டு கடந்து செல்வது எல்லாம் நவீன காலக் கட்டத்தினைச் சார்ந்தவை. இந்த அம்சத்தைக் கவனத்தில் கொண்டால் மட்டுமே நாம் இம்மோதல் பற்றிய சரியான விளக்கம் ஒன்றைப் பெறுதல் முடியும்.
மாவிட்டபுரம் சம்பவம் ஒரு சமூகத்திற்குள் இடம்பெறும் மோதல்கள் சச்சரவுகள் மற்றும் சமூக மாற்றம் ஏன் தற்காப்பு இனத்துவ தேசியவாதத்தை (Defensive Ethnic Nationalism) தூண்டிக் கிளரச் செய்துவிடுகிறது என்பதை விளக்கி நிற்கிறது. அரசியல்வாதிகளும் தங்கள் சமூகம் சிதைவடைவதை தடுத்து ஐக்கியப்படுத்திப் பாதுகாத்துக் கொள்ளும் இறுதி முயற்சியாக தற்காப்பு இனத்துவ தேசியவாதத்தை வலியுறுத்தியிருக்கலாம். உண்மையில் தமிழ் அரசியல்வாதிகள் தற்காப்பு தேசியவாதத்தைத்தையும் ஐக்கியத்தையும் தேர்ந்து கொள்ள வேண்டியதற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன. அதில் குறிப்பாக சிங்கள மேலாதிக்கம் உள்ள நாட்டிற்குள் தமிழரின் தொழில் வாய்ப்புக்களும் கல்வி வாய்ப்புக்களும் சடுதியாக வீழ்ச்சியுற்றன. சாதிகளுக்கு இடையிலான நெருக்கடி மேலும் மோசமடைந்தப் போது தமிழர் அரசியல் கட்சியான தமிழரசுக்கட்சி (சமஷ்டிக் கட்சி) யாழ்ப்பாணத்திற்கு வெளியே உள்ள காரணிகளில் மக்களின் கவனத்தைத் திருப்புவதிலும் தமிழ் மக்களை அரசியல் ரீதியில் ஐக்கியப்படுத்தக்கூடிய பிரச்சினைகளிலும் அக்கட்சி கவனம் செலுத்தியது. மாவிட்டபுரம் பிரச்சினையில் கட்சி ஏதாவது ஒரு பக்கத்தின் சார்பாக நின்றிருந்தால் அல்லது குரல் கொடுத்திருந்தால் அதன் ஆதரவுத்தளம் சரிந்திருக்கும். ஆகவே தமிழரசுக்கட்சி மக்களின் கவனத்தை மாவிட்டபுரம் பிரச்சினையில் இருந்து வேறுபக்கம் திருப்பியது. இந்துத் தமிழர்களின் பிரச்சினைகளில் அரசாங்கம் அக்கறையின்றி அசட்டை செய்வதையும், மாவிட்டபுரம் பிரச்சினைக்கு முன்பாகவும், பின்பாகவும் அரசாங்கம் கைக்கொண்ட கொள்கைகளின் குறைகளையும் அது சுட்டிக்காட்டியது. இதனைவிட தமிழரசுக்கட்சி அரசியல்வாதிகள் தற்காப்புத் தேசியவாதத்தின் துணையைத்தேர்ந்து கொண்டதற்கு இன்னொரு வலுவான காரணமும் இருந்தது. தமது சமூகத்தை தமது தலைமைத்துவத்தின் கீழ் ஒன்று திரளவும் தனது வாரிசுக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) பிரிவினவாத அரசியலுக்கு வித்திடவும் இந்த தற்காப்புத் தேசியவாதம் வழிவகுத்தது.
குறிப்பு : ‘The Political Construction of Defensive Nationalism: The 1968 Temple-Entry Crisis in Northern Sri Lanka’ என்ற தலைப்பில் 1990 ஆம் ஆண்டு The Journal of Asian Studies, 49(1): 78-96 என்னும் இதழில் பிறையன் பவ்வன்பேர்ஜர் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.
தொடரும்.