‘நாம் இன்னமும் சுவாசித்துக் கொண்டிருக்கின்றோம்’ – ஜொகான் சண்முகரத்தினம் எழுதிய நோர்வேஜிய மொழிப் புத்தகம் - ஒரு பார்வை
Arts
10 நிமிட வாசிப்பு

‘நாம் இன்னமும் சுவாசித்துக் கொண்டிருக்கின்றோம்’ – ஜொகான் சண்முகரத்தினம் எழுதிய நோர்வேஜிய மொழிப் புத்தகம் – ஒரு பார்வை

January 4, 2023 | Ezhuna

ஈழம் சார்ந்தும் ஈழப்பிரச்சினை சார்ந்தும் ஆங்கிலத்திலும் தமிழல்லாத பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 2009 இற்கு பின்னர் வெளியாகிய அபுனைவு நூல்களை அவற்றின் சமூக – அரசியல் முக்கியத்துவம் கருதி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கோடு ‘திக்குகள் எட்டும்’ என்ற தொடர் வெளிவருகின்றது. இத்தொடரின் மூலம் தமிழ் சூழலுக்கு தமிழல்லாத பரப்பில் நடைபெறும் ஈழம் சார்ந்த வெளிப்பாடுகள் அறிமுகமாகும்.

‘I can’t breathe -என்னால் சுவாசிக்க முடியவில்லை’ – என்பது இந்தக் கொரோனாப் பேரிடரின் மத்தியில் உலகை உலுக்கிய வார்த்தை. அமெரிக்க கறுப்பினத்தவரான George Floyd அமெரிக்க வெள்ளையினக் காவல்துறையினால் குரல்வளை நெரித்துப் படுகொலை செய்யப்பட்ட போது George Floyd இருபது தடவைகள் சொன்ன ‘ஒரே வார்த்தை’. அமெரிக்காவில் மட்டுமல்ல உலகளாவிய அதிர்வலைகளையும் எதிர்ப்பலைகளையும் தோற்றுவித்திருந்தது. பல்வேறு நாடுகளில் இன-நிறவெறிக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களில் மக்கள் திரண்டனர். ‘Vi puster fortsatt – நாம் இன்னமும் சுவாசித்துக் கொண்டிருக்கின்றோம்’ – இது ஜொகான் சண்முகரத்தினம் எழுதி 2020ஆம் ஆண்டு, ஒக்ரோபர் மாதம் வெளிவந்த புத்தகம்.

George Floyd படுகொலையின் புறக்காரணிகளுக்கும் இந்தப் புத்தகத்தின் பேசுபொருளுக்கும் தொடர்புள்ளது. ஆம், இது இனவாதம் பற்றிய புத்தகம். இதன் பேசுபொருள் எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது, எதனை அவாவுகின்றது, எத்தகைய விளைவினை ஏற்படுத்தக்கூடியது என்பது தொடர்பான சில குறிப்புகளை இவ்வத்தியாயத்தில் பதிவுசெய்ய விழைகிறேன்.

எழுத்தாளரின் பன்மைத்துவப் பின்னணி

முதலில் ஜொகானுடைய பின்னணி குறித்த தகவல் முக்கியமானது. இவரது தந்தை ஈழத்தமிழ்ப் பின்னணியும் தாயார் ஜப்பான் நாட்டுப் பின்னணியையும் கொண்டவர்கள். தந்தை பேராசிரியர் சண்முகரட்ணம், தமிழ்ச் சூழலிலும் உலகமட்டத்திலும் கல்வியாளர்கள் மத்தியிலும் அறியப்பட்டவர். ஜொகான் அனுபவநீட்சிமிக்க ஊடகவியலாளர். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான இவருக்குத் தற்போது 41 வயது. 3 வயதுவரை யாழ்ப்பாணத்திலும் மூன்றிலிருந்து ஆறுவயதுவரை ஜப்பானிலும் வசித்து, 6ஆவது வயதில் தாய்-தந்தை மற்றும் மூத்த சகோதரருடன் நோர்வேக்கு புலம்பெயர்ந்தவர். ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் சமூகப் புவியியல் துறையில் பயின்றவர். நோர்வேயின் இடதுசாரி நாளிதழான Klassekampen/Class Struggleஇல் 2004இல் இருந்து பணியாற்றி வருபவர். குறிப்பிட்ட சில ஆண்டுகள், அதன் சர்வதேச அரசியல் பகுதியின் பொறுப்பாசிரியராகவும் இருந்துள்ளார்.

ஜொகான் இந்தப்புத்தகத்தில், நோர்வேக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்த சூழலில், தான் எதிர்கொண்ட அனுபவங்களை விபரிப்பதன் ஊடாக நோர்வேயின் பல்லினக்கலாசார மற்றும் பெரும்சமூகத்துடனான இணைவாக்க வாழ்வு பற்றி விபரிக்கின்றார். நோர்வேயும் உலகமும் 80 களின் நடுப்பகுதியிலிருந்து இன்றுவரையான காலவோட்டத்தில் இனவாதம், இணைந்தவாழ்வு, பல்லினக் கலாசாரசூழல் சார்ந்து எத்தகைய அனுபவங்களையும் மாற்றங்களையும் கண்டிருக்கின்றது என்பதைத் தனது பார்வையில் பதிவுசெய்கின்றார். புத்தகத்தில் அவருடைய தாய் – தந்தையரின் பின்புலம், அவர்களுடைய காதல் – திருமண வாழ்வு குறித்த தகவல்களும் உள்ளன. இந்தப் புத்தகம் இனவாதம் பற்றியது மட்டுமல்ல. வேர், அடையாளம், அடையாளச்சிக்கல் குறித்த புத்தகமும்கூட.

புலப்பெயர்வு- நினைவுகள்- அனுபவங்கள்

ஜொகான் தனது நினைவுகளிலிருந்து நிகழ்வுகளையும் அவற்றின் அனுபவங்களையும் மீட்டுத் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் சொல்கின்ற ஒரு சொல்முறையினைக் கைக்கொண்டிருக்கின்றார். நேரடியாக அவர்களுக்கு ஒரு கதையைச் சொல்வதான உத்தியை இதில் காணலாம். ‘நீங்கள் வாசிக்கவுள்ள இந்தப் புத்தகம் நோர்வேயுடனான எனது சந்திப்பும் என்னுடனான நோர்வேயின் சந்திப்பினதும் காட்சிப்படங்கள்’ என்கிறார். 1980 மற்றும் 1990 காலப்பகுதிகளில் நோர்வேயில் வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தின் குழந்தையாக வாழ்வது தொடர்பான சூழலை எழுத்திற் கொண்டு வரும் முயற்சி இதுவெனவும் குறிப்பிடுகிறார்.

இந்த வகையான தன்னனுபவக் கதையாடல், உரையாடற் சொல்முறை உணர்வுரீதியான ஒரு நெருக்கத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்துகின்றது. அனுபவங்கள், சம்பவ விபரிப்புகள், மீள்பார்வைகளைக் கதையாகச் சொல்கின்ற உத்திமுறைமை ஆகிய நான்கு தளங்களில் புத்தகம் பயணிக்கின்றது எனலாம். நோர்வேயுடனான தொடக்ககால அனுபவங்கள் முதலாவது. இலங்கை, ஜப்பான் போன்ற தனது வேர் சார்ந்த அனுபவங்கள் இரண்டாவது. நோர்வேயின் சமூக, அரசியல் போக்குகள் மூன்றாவதாகவும்,மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்த சர்வதேச அரசியல் நிகழ்வுகளும் அவற்றின் விளைவுகளும் விமர்சனப் பார்வையுடன் முன்வைக்கப்படுகின்றமையை நான்காவது தளமாகவும் வகைப்படுத்தலாம்.

இந்தப் புத்தகத்தினை அவர் எழுதுவதற்கான உந்துதலாக அமைந்தவற்றில் இன்றைய காலத்தில் நோர்வேஜிய ஊடகங்களில் இடம்பெற்றுவரும் இனவாதம் தொடர்பான விவாதங்களின் போக்கின் போதாமைகள் பற்றிய தனது அவதானிப்பு ஒரு காரணம், அத்தோடு தன்னுடைய சுய அனுபவங்கள் நினைவிலிருந்து மறந்தும் மறைந்தும் போய்விடுமென்ற அச்சம் இன்னொரு காரணம் என்கிறார் நூலாசிரியர். அனுபவங்கள் எனும்போது அவை நல்லன, கெட்டன, இயல்பானவை, மற்றும் இன்னமும் புரிந்துகொள்ள முடியாதவை என தன் அனுபவங்களை முன்வைக்கின்றார்.

நோர்வே: புதிய மொழி-நாடு-சூழல்-இயற்கை

ஒஸ்லோவிலிருந்து 35கி.மீ தெற்காக அமைந்துள்ளது ஓஸ் எனும் பிரதேசம். அங்குதான் எண்பதுகளின் நடுப்பகுதியில் 6 வயதுச் சிறுவனாக ஜொகான் பெற்றோருடனும் மூத்த சகோதரருடனும் வந்து சேர்கின்றார். ஆரம்பத்தில் எல்லாமே புதியன. தீவிரமான இயற்கை, புதிய வாழ்வுச்சூழல், புதிய மொழி என அனைத்தும் புதியன. அந்த ஆரம்பக் காலங்கள் பற்றிய பதிவு என்பது பாடசாலை, ஆசிரியர்கள், வகுப்பறை, நூலகம் சார்ந்த அனுபவங்களின் நினைவுகளாக மீட்டப்படுகின்றன. நல்லவிதமான அனுபவங்களும், புதிய நாட்டுச் சூழலுக்குள் நல்லமுறையில் உள்வாங்கப்பட்ட நேர்மறையான அனுபவங்களே அதிகம் உள்ளன. தலைநகர் ஒஸ்லோவிற்கு வெளியில் வெளிநாட்டவர் குறைவாக வாழும் பகுதியில் ஒப்பீட்டளவில் இன நிறப் பாகுபாடுகளை அரிதாகவே காணலாம் என்பதும் ஒரு யதார்த்தம். தனது இளமைக்காலத்தில் நிறவாதத்தை எதிர்கொண்ட சில சம்பவங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

நாம்-இன்னமும்-சுவாசித்துக்-கொண்டிருக்கின்றோம்-நூலின்-அட்டைப்-பக்கம்-1

நோர்வேக்கு வந்த தொடக்கத்தில் ஜப்பானிய மொழியில் நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தைக் கொண்டிருந்தவர், குறுகிய காலத்திற்குள் நோர்வேஜிய மொழியில் எழுதத் தொடங்குகிறார். நோர்வேஜிய மொழியில் ஏற்பட்டுவந்த பரிச்சயத்தை அது வெளிப்படுத்துகின்றது. வகுப்பறைப் பாடங்கள் சார்ந்த விவாதங்களில் ஈடுபடும் அளவிற்கு மொழி செழுமை பெற்றதைக் குறிப்பிடுகின்றார். தான் வளர்ந்த சூழலை விபரிக்கும்போது நோர்வேயின் உள்நாட்டு அரசியலின் முக்கியமான நிகழ்வுகளையும் உலக அரசியல் திருப்பங்களையும் குறித்துச் சொல்கின்றார்.

ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது வளைகுடா யுத்தம் வெடித்தது பற்றிய செய்தியையும், பேர்லின் சுவர் தகர்ப்பு, சோவியத் உடைவு ஆகிய பாரிய புவிசார் அரசியல் மாற்றங்கள் தொடர்பாக அறிந்து கொண்டதையும் அந்நிகழ்வுகள் தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களோடு விவாதித்ததையும் நினைவுகூர்கின்றார்.

ஒப்பீட்டளவில் நல்ல சூழலில், அதாவது இன-நிறவாதம் தாக்கம் செலுத்தாத சூழலில் அவர் வளர்ந்துள்ளார். ஆனால் ஒஸ்லோ போன்ற வெளிநாட்டவர் அதிகம் வாழும் பகுதிகளில் அத்தகைய சூழல் அமைந்துவிடுவதில்லை என்பதையும் வருத்தத்துடன் பதிவு செய்கின்றார். Carl I. Hagen தலைமையிலான நோர்வேயின் Progress கட்சி 1990 களின் ஆரம்பத்தில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வந்துள்ளது. குறிப்பாக அரசியல் தளத்தில் முஸ்லீம் வெறுப்பு அரசியல் என்று கருதத்தக்க வகையில் இக்கட்சியின் தேசியவாத நிலைப்பாடுகள் அமைந்தன.

நோர்வேயில் இன-நிறவாதம்

2001 இல் 15 வயதுடைய Benjamin Hermansen என்ற சிறுவன் ஒஸ்லோ புறநகர்ப் பகுதியான கொல்ம்லியாவில் கத்தியால் குத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன, நிற வெறுப்பு மனநிலையில் மேற்கொள்ளப்பட்ட கொலையாகும். கொலை செய்யப்பட்ட அந்தச்சிறுவனின் தந்தை Ghana நாட்டுப்பின்னணியைக் கொண்டவர். கொலை செய்தவர்கள் Boot Boys என்ற நவநாஜிக் குழுவினைச் சேர்ந்தவர்கள். இதில் தொடர்புபட்ட மூன்றுபேருக்கு, இது இனவாத நோக்கம் கொண்ட திட்டமிட்ட படுகொலை என்ற அடிப்படையில் முறையே 18, 17, 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தக் கொடிய சம்பவமும் அது ஏற்படுத்திய அதிர்வலைகளும் அதற்கு எதிரான நாடளாவிய மக்களின் கூட்டுக் கவனயீர்ப்புப் போராட்டங்களும் இனவாதத்திற்கு எதிரான விவாதங்கள், செயற்பாடுகளில் முக்கியமானவையாக புத்தகத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கை – ஜப்பான்: தந்தை, தாயாரின் பின்புலம்

நூலின் ஒரு அத்தியாயத்தில், தந்தை, தாயாரின் பின்னணிகளைப் பற்றிய குறிப்புகளும் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. தந்தையின் இளமைக்காலம் பற்றிய தகவல்களின் ஊடாக இலங்கைத்தீவின் அரசியல் நிலைமைகள் தொடர்பான சித்திரம் வெளிப்படுகின்றது. தந்தை பற்றிய பின்னணியைச் சொல்லும் அதேவேளை, இலங்கையின் வரலாறு, அதற்குப் பின்னரான சமூக, அரசியல், கலாசார அம்சங்களையும் தொட்டுச் செல்கின்றார். காலனித்துவ ஆட்சிகளுக்கு உட்பட்டிருந்த இலங்கைத் தீவு, அதன் பின்னான இன ரீதியிலான முரண்பாடு, தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையும் அதன் பின்புலமும் இதில் எடுத்தியம்பப்படுகின்றது.

ஏகாதிபத்திய சக்திகள் வழமையாக எதைச் செய்வார்களோ, அதனையே பிரித்தானியா இலங்கையில் செய்தது. பிரித்தாளும் சூழ்ச்சியுடன் அங்கு ஆட்சி செய்தது. பிரித்தானிய ஆட்சியின் போது, தமிழர்கள் சாதகமாக நடாத்தப்பட்டதோடு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் வடக்கின் தமிழ்ச் சிறுபான்மையினர் மீது தெற்கின் பெரும்பான்மைச் சிங்களவர்களால் குற்றம் சுமத்தப்பட்டது. பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரமடைந்த பின், ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தினைச் சிங்களத் தேசியவாதிகள் அமுல்படுத்தினர் எனக் குறிப்பிட்டு இலங்கை காலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த வரலாற்றினையும் அதன் பின்னான இனமுரண்பாடு, தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்தப்பட்ட ஒடுக்குமுறை வரலாறு என்பனவும் பேசப்படுகின்றன.

கல்விச்சூழலும் மாணவர் போராட்டங்களும்

தந்தையின் ஆரம்பகாலக் கல்விச் சூழலும், பல்கலைக்கழகச் சூழலும் அங்கு மாணவர் அணித் தலைவராகப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியமையும் கைது செய்யப்பட்ட சூழலும் விபரிக்கப்படுகின்றன. தந்தையாருடைய ஆளுமைக்கும் கருத்தியல் பார்வைக்கும் அடிப்படையாக இளமையிலிருந்து அவரிடமிருந்த ஆழமான வாசிப்புப் பழக்கம் பற்றிக் கீழ்க்காணும் சம்பவத்தினூடு விளக்குகிறார்:

‘ஒரு முறை சந்தையில் காய்கறிகள் வாங்கிவருமாறு தந்தையின் தாயார் பணம் கொடுத்து அனுப்பியபோது, அந்தப் பணத்திற்குத் தந்தையார் புத்தகக் கடையிலிருந்து சோசலிசம், புரட்சி தொடர்பான புத்தகங்களுடன் வீடு சென்றுள்ளார். தந்தையின் தாயாருக்கு அரசியல் ஈடுபாடு இல்லை என்ற போதும், கார்ல் மார்க்சும், பிரெட்றிக் ஏங்கல்சும் மதிய உணவுக்குரிய பொருட்களாகப் பயன்படப்போவதில்லை என்பதைத் தெரிந்துவைத்திருந்தார். பாடசாலைக்குச் செல்லாமல், நூலகத்தில் அதிக நேரத்தைச் செலவிடுவது அவரின் வழக்கம். அங்கேயே கவனம்பெறாத இலக்கியங்களை ஆழமாகக் கற்றார். சாதிய அமைப்பு, வர்க்கப் பாகுபாடுடைய சமூக அமைப்பு மீது கோபம் கொண்டார்.

1960களில் தந்தையார் பல்கலைக்கழக அனுமதி பெற்று, இலங்கையின் பெரதெனியாப் (பேராதனை) பல்கலைக்கழகம் சென்றபோதான அனுபவங்களைப் பின்வருமாறு பதிவு செய்கின்றார்:

பல்கலைக்கழகத்தில் பல்லின இடதுசாரிச் செயற்பாடுகள் செல்வாக்குப் பெற்றிருந்தன. அங்கு தமிழ், சிங்கள், முஸ்லீம் முரண்பாடுகள் இருக்கவில்லை. மாணவர் அரசியலில் குறுங்குழுவாதப் போர் நிலவியது. ஸ்ராலினிசம், மாவோயிசம், ட்ரொஸ்க்கிச (Trotskyism) வேறுபாடுகளால் மாணவர்கள் மத்தியில் குழுவாதம் நிலவியது. தந்தையார் மாவோயிச கருத்தியலைக் கொண்டிருந்தார் எனவும் மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டதையும் நினைவுகூருகின்றார்.

ஜப்பான் பயணம் – காதல் – திருமணம்

தொடர்ந்து நாட்டின் அரசியல் நெருக்கடி நிலைமைகள் காரணமாக ஜப்பானில், ஆய்வுக்கல்விக்கான உதவித்தொகை கிடைக்கப்பெற்று அங்கு செல்ல, மாணவர் போராட்டச் செயற்பாடுகளிலிருந்து சில ஆண்டுகள் விலகியிருப்பது இந்தக் கல்வி வாய்ப்பினை ஜப்பானில் பெற்றமைக்கான காரணங்களில் ஒன்று. அங்கு தாயாரைச் சந்தித்த சூழல், காதல், திருமணத்தின் போது எதிர்கொண்ட எதிர்ப்புகள், சவால்கள் குறித்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. தாயாருடைய குடும்பப்பின்னணி, அவர்களின் காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் எதிர்ப்பு, அதனை மீறி நண்பர்களின் உதவியுடன் திருமணம் நடந்தமை போன்ற சம்பவங்கள் தொட்டுச் செல்லப்படுகின்றன. அதேவேளை அக்காலப்பகுதியில் ஜப்பான் அரசாங்கத்திற்கு எதிரான மாணவர் எழுச்சி, கலகம் பற்றிய சில தகவல்களும் பதிவாகியிருக்கின்றன. குறிப்பாக வியட்னாம் போரில் அமெரிக்காவுடன் ஜப்பான் மேற்கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எதிரான மாணவர் போராட்டங்கள் பற்றிய குறிப்புகளாக அவையுள்ளன.

முன்முடிவுகள் மற்றும் வெளியார் தொடர்பான அச்சங்களும் எல்லாச் சமூகங்களுக்குள்ளும் கலாசாரங்களுக்குள்ளும் இருக்கின்ற அம்சங்கள்தான். அதனைத் தனது பெற்றோரின்  குடும்ப உறவுகள் எப்படி இன்னொரு தேச, மொழி, கலாசாரப் பின்னணியைக் கொண்டவர்களை ஒருவருக்கொருவர் எதிர்கொண்டனர் என்பதனூடு நினைவுபடுத்துகின்றார்.  அதாவது தமிழ்ப் பின்புலத்தைக் கொண்ட தந்தையை, ஜப்பான் பின்னணியைக் கொண்ட தாயின் பெற்றோர் அதேபோல மறுவளமாகவும். மட்டுமல்லாமல் படிப்படியான மனமாற்றம் ஏற்பட்டு இறுதியில் எப்படி இருதரப்பும் இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொண்டனர் என்பதையும் விபரிக்கின்றார். மிக விரிவாகவும் சுவைபடவும் அந்த சம்பவங்களும் மாற்றங்களும் பேசப்பட்டுள்ளன.

செப்ரெம்பர் 11: பயங்கரவாதத்திற்கெதிரான போர்

சர்வதேச அரசியலில், செப்ரெம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல் உலகளாவிய அரசியலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து விரிவாகப் பேசப்படுகின்றன. ‘ஒன்றில் நீங்கள் எங்களோடு அல்லது பயங்கரவாதிகளோடு’ என்ற சூளுரையோடு Bush நிர்வாகம் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு’ காலக்கெடு விதித்து நாடுகளை அணிதிரட்டி முன்னெடுத்த ஆக்கிரமிப்புப் போர்கள் எத்தகைய உலகளாவிய துன்பங்களை ஏற்படுத்தியுள்ளன என்று குறிப்பிடுகின்றார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஆப்கானிஸ்தானுடன் நிற்கவில்லை. செப்ரெம்பர் 11 சம்பவத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத ஈராக் மீதும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு படையெடுத்தது. பெப்.2003 அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஐ.நா. பாதுகாப்பு மையத்தில் சதாமின் ஆட்சிபீடத்திற்கும் செப்.11இற்கும் தொடர்பிருப்பதாக நிறுவக் கடும்பிரயத்தனம் மேற்கொண்டார். சதாமிடம் இரசாயனப் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகவும், முழுஉலகிற்கும் பேராபத்து எனவும் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையல்ல. ஐ.நா. ஆதரவு வழங்காத போதும், உலகளாவிய எதிர்ப்புகளை மீறி அமெரிக்கா தன்னிச்சையாக ஈராக் மீது படையெடுப்பினை மேற்கொண்டது.

சர்வதேச அரசியல் விளைவுகள்

இதுவிடயத்தில் பிரித்தானிய சோசலிசவாதியும் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான Jeremy Gorbyn ஈராக் ஆக்கிரமிப்பினை எதிர்த்து லண்டனில் நடைபெற்ற பேரணி ஒன்றில் ஆற்றிய உரையிலிருந்து ஒரு கூற்றினை நினைவுபடுத்துகின்றார்:

ஆப்கானிஸ்தான் போர் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அமெரிக்க உயிர்களைத் திருப்பித் தரப்போவதில்லை. ஈராக்கில் மேலும் பல உயிர்களைக் கொல்வதும் எதனையும் சரிப்படுத்தப்போவதில்லை. ஈராக் ஆக்கிரமிப்பு ஒரு முரண்பாடு, வெறுப்பு, சோர்வு, துயரச் சூழலை உருவாக்கப் போகின்றது. எதிர்காலத் தலைமுறைக்கு இவற்றை நீடிக்கச் செய்வதற்கே ஆக்கிரமிப்பு வழிவகுக்குமென அவர் எதிர்வுகூறியதை ஜொகான் நினைவுபடுத்துகிறார். அத்தோடு அந்தப் போரின் சமகால விளைவுகள் அவர் எதிர்வுகூறியது போலவே அமைந்துவிட்டதென்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

சதாம் தூக்கிலிடப்பட்ட பின்னர் ஈராக்கியச் சிறைக்கைதிகள் அமெரிக்கப்படையினரால் நிர்வாணமாக்கப்பட்டு மானிடம் தலைகுனியும் வகையில் மோசமாக நடாத்தப்பட்டனர். ஈராக் போரும் அதனையொத்த குற்றவியல்களும் இனவாதத்தின் இன்னொரு அம்சம். அதன் மறுபெயர் ஏகாதிபத்தியம் என்பதாகக் கூறும் ஜொகான் ஏகாதிபத்தியம் என்ற சொல்லாடல் சமகால அரசியலில் அதன் அர்த்தத்தை இழந்து மேற்கினால் கேலிக்குள்ளாக்கப்படும் சொல்லாகியிருக்கின்றது என்கிறார். கீழைத்தேச நாடுகளின் தலைவர்கள் தமது அடக்குமுறைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப ஏகாதிபத்தியமெனும் சொல்லாடலைத் தவறாகப் பயன்படுத்துகின்றமையும் அதற்கான காரணிகளில் ஒன்று. அதன் பொருள் ஏகாதிபத்தியம் ஒழிந்துவிட்டதென்பதல்ல. ஏகாதிபத்திய சக்திகள் தம்மை ஏகாதிபத்தியமாக ஒப்புக்கொள்ளவில்லை என்பதற்காக அது இல்லாமற்போய்விட்டதென்று அர்த்தமில்லை.

காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம், இனவாதம்

காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம், இனவாதம் ஆகியன அடிப்படையில் உள்ளூறியுள்ள அம்சங்கள். இலங்கைத் தீவு பலவழிகளிலும் ஏகாதிபத்திய முதுசத்தின் வரலாற்றினைச் சுமந்திருக்கின்றது என்பதோடு விடுதலைப் போராட்டமும் வர்க்கப்போராட்டமும் எவ்வாறு இனப்போராக, கடும்போக்குவாதமாக, பயங்கரவாதமாகச் சீரழிந்து போகும் என்பதற்குரிய உதாரணமாகவும் காணக்கிடைக்கின்றது. இலங்கை மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளும் இத்தகைய அனுபவத்தினைக் கொண்டுள்ளன. 11.செப்ரெம்பருக்குப் பின்னர் பலரும் அந்தச் சம்பவத்தினை அரசறிவியலாளர் Samuel Huntington கூறியதை சரியென ஒப்புக்கொள்ள நேர்ந்தது. அதாவது உலகம் மனித நாகரிகங்களுக்கிடையிலான ஒரு மோதலை எதிர்கொண்டுள்ளது. அந்த மோதலின் மையம் மேற்கும் இஸ்லாமும் என்ற அவருடைய கூற்று சரியென்ற நிலை ஏற்பட்டது.

ஜூலை 22: நோர்வேயை உலுக்கிய பயங்கரவாதத் தாக்குதல்

ஜூலை 22, 2011 பாரிய இரண்டு பயங்கரவாத தாக்குதல்கள் நோர்வேயை உலுக்கின. இரண்டையும் நடாத்தியவர்கள் வெளிநாட்டவர்கள், முஸ்லீம்கள் மீதான வெறுப்பும், நோர்வேயின் பல்லினக் கலாசார அரசியல் மீதான வெறுப்பும் கொண்ட வலதுசாரி அடிப்படைவாதியான ஒரு தனிநபர். 9 ஆண்டுகளாகத் திட்டமிட்ட நடவடிக்கை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நோர்வே சந்தித்த மோசமான பயங்கரவாத நடிவடிக்கை இது. நோர்வே பல்லினக் கலாசார நாடாகி வருகின்றது, கலப்பினமாக மாறுவதற்குரிய வெளியை அரசாங்கமும் அரசியல் கொள்கைகளும் திறந்துவிட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுடன் நடாத்தப்பட்ட வெளிப்படையான வலதுசாரிக் கடும்போக்குவாத பயங்கரவாதத் தாக்குதல் இது.

முதலாவது குண்டுவெடிப்பு, தலைநகரின் மையப்பகுதியில் அரசாங்க அமைச்சகத் தொடர்மாடிக் கட்டடத்தை இலக்கு வைத்து நடாத்தப்பட்டது. இரண்டாவது நோர்வே தொழிற்கட்சியின் இளைஞர் அணியினரது கோடைக்கால மாநாடு நடைபெற்ற வளாகத்தில் (ஒஸ்லோவிலிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ‘ஊத்தொய்யா’ தீவு) தானியங்கித் துப்பாக்கி மூலமான கண்மூடித்தனமான தாக்குதலாக தனியொருவரால் நடாத்தப்பட்டது.  Buskerud நகரத்தில் Uttøya எனும் சிறு தீவில் ஒவ்வோராண்டும் தொழிற்கட்சியின் இளைஞரணி மாநாடு நடைபெறுவது வழக்கமாகும். ஒஸ்லோவில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, பாதுகாப்புக்கான சோதனைகளை முன்னெடுக்க வந்துள்ள காவல்துறை உறுப்பினர் என உள்நுழைந்த நபரே துப்பாக்கிச் சூட்டினை நடாத்தினார். மொத்தமாக 77 பேர் இதில் கொல்லப்பட்டனர். அதே எண்ணிக்கையினர் படுகாயங்களுக்கும் சூட்டுக்காயங்களுக்கும் உட்பட்டனர். அமைச்சகக் கட்டடத்தொகுதிக் குண்டுவெடிப்பில் எட்டுப்பேர் கொல்லப்பட்டனர்.

ஒஸ்லோவில் அக்குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தபோது ஜொகான், அவருடைய மனைவி, இரண்டு பிள்ளைகளும் அமைச்சகக் கட்டடத்திற்குள் நின்றிருக்கின்றார்கள். மனைவியின் முந்நாள் வேலைத்தளம் தொழிற்துறை அமைச்சகம். அந்த அதிர்ச்சிமிகு சம்பவத்தின் நேரடி அனுபவம் விபரிக்கப்படுகின்றது.

அடையாளச் சிக்கல், நிற-இனவாதம்; மீதான புரிதல்

மேற்கத்தேய நாடுகளின் சமூக அரசியல் ஓட்டத்தில், வலதுசாரித்தேசியவாதம் வளர்ச்சிபெற்றுவரும் புறநிலையில் அதனைப் பிரதிபலிக்கும் ஒரு சமகாலப் பேசுபொருளையும் இந்நூல் கொண்டுள்ளது. பல்லின மக்களைக் கொண்ட தேசங்களின் வலதுசாரித் தேசியவாதத்தின் வளர்ச்சிப்போக்கு சிறுபான்மை வெளிநாட்டவர்களின் மனங்களில் ஏற்படுத்தக்கூடிய அச்சங்களைக் கரிசனையுடன் பேசுகின்றது. இனவாதம், இனவெறிக்கு எதிரான அல்லது அதுசார்ந்த விவாதங்களுக்குரிய திறவுகோலாக அமையக்கூடியது இதன் பேசுபொருள்.

கடந்த காலத்தை அதன் இயல்புடனும் விமர்சனத்துடனும் திரும்பிப் பார்ப்பதனூடு, எதிர்காலத்தைக் கண்டடைதல் என்பது இந்த அணுகுமுறைக்கான, அதாவது தன்னனுபவப் பதிவுக்கு அடிப்படையான உந்துதலாகப் புரிந்துகொள்ளலாம். அடையாளச் சிக்கல், நிற-இனவாதம் ஆகியவற்றின் அரசியல் மீதான புரிதலையும் பார்வையையும் முன்வைக்கின்ற இந்தப் புத்தகம் நோர்வேயின் உள்நாட்டு நிலைமைகளையும் சர்வதேச நிலைமைகளையும் அவற்றின் போக்குகளையும் தனித்தனியாகவும் உலகளாவித் தொடர்புபடுத்திப் பார்க்கவும் ஏதுவாக அமைகின்றது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

14040 பார்வைகள்

About the Author

சிவராஜா ரூபன்

ரூபன் சிவராஜா அவர்கள் 1993 ஆம் ஆண்டு சிறுவனாக இருக்கும்போது ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தார். தற்போது கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, நாடகம் மற்றும் ஊடகம் ஆகிய தளங்களில் இவர் செயற்பட்டு வருவதுடன் அரசியல், சமூகம், கலை, இலக்கியம் சார்ந்தும் எழுதி வருகிறார். ஈழம், தமிழகம், மற்றும் புலம்பெயர் ஊடகங்கள், இதழ்களில் இவரது எழுத்துக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.

'எதிர்ப்பரசியல்', 'அதிகார நலனும் அரசியல் நகர்வும்' (உலக அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு), 'எழுதிக் கடக்கின்ற தூரம்' (கவிதைத் தொகுப்பு), 'கலைப்பேச்சு' (திரை நூல் அரங்கு) என்பன இவரது படைப்புகளாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)