தந்திரோபாயமற்ற தமிழர் போராட்டங்கள்
Arts
15 நிமிட வாசிப்பு

தந்திரோபாயமற்ற தமிழர் போராட்டங்கள்

January 9, 2023 | Ezhuna

இலங்கையில் அதிகாரத்துக்காகவும் அதனை தக்க வைப்பதற்காகவும் சிங்கள, தமிழ் தலைவர்களினால் அடையாள அரசியல் முன்னிலைப்படுத்தப்பட்டது. அது இனத்துவ அரசியலாக வளர்ச்சியடைந்து சிறுபான்மையினரின் உரிமைகளையும் அவர்களின் இருப்பையும் இல்லாதொழிக்கும் அரசியலாக உச்சம் பெற்றது.இதன் தொடர்ச்சி இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திற்கு எவ்வாறு வழிவகுத்தது என்ற அடிப்படை காரணிகளை உள்ளார்ந்த ரீதியில் ஆய்வுசெய்ய ‘இலங்கையில் அடையாள அரசியல் – சுதந்திர இலங்கை வரையிலான ஒரு வரலாற்று நிலைப்புரிதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் எத்தனிக்கின்றது. இதன்படி, அடையாள அரசியல் என்றால் என்ன என்ற  கோட்பாட்டுப் புரிதலை உண்டாக்கி, இலங்கையினுடைய அடையாள அரசியலின் வரலாற்றுப் போக்கினையும், தமிழ் தலைவர்களின் அணுகுமுறைகளையும் விமர்சன நிலையில் நோக்குவதற்கு இத்தொடர் முனைகிறது.

மகாத்மா காந்தி பிரித்தானிய அரசுக்கு எதிரான தனது அகிம்சைப் போராட்டத்தை தனியே தனது இனத்தினை மட்டும் வைத்துக் கொண்டு நடாத்தியவரல்ல. பிரித்தானிய அரசுக்கு எதிரான அத்தனை சக்திகளையும் இனம், மதம், பிரதேசம் பார்க்காமல் ஒன்றுசேர்த்து ஒரு மக்கள் போராட்டமாகவே முன்னெடுத்தார்.

1956-காலி-முகத்திடல்-சத்தியாக்கிரகம்

தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக 29 பேர் வாக்களித்திருந்தனர். அவர்களில் 10 பேர் மாத்திரமே தமிழர்களாவர். ஏனையவர்களில் 3 பேர் முஸ்லிம்களும் 16 பேர் சிங்களவர்களுமாவர். இங்கு தமிழ், முஸ்லிம் எனும் இரு சிறுபான்மையினரை விட சிங்களப் பிரதிநிதிகள் அதிகமானவர்கள். இவ்வாறு சிங்களப் பிரதிநிதிகள் அதிகமாக இருந்தமை தமிழர்களுக்கு ஒரு சாதகமான நிலைமையாகும். இந்தச் சாதக நிலையில் ஆதரவாக வாக்களித்த 19 சிங்கள, முஸ்லிம் பிரதிநிதிகளுடன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தமிழ்த் தலைமைகள் கலந்துரையாடி ஒரு கூட்டுத் தீர்மானத்தை எடுத்து, அதனைப் பிரதமருக்கு அறிவித்திருப்பார்களேயானால் அது தொடர்பான பிரதமரின் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கலாம். பிரதமர் பாதகமான பதிலைத்தான் வழங்கியிருந்தால் கூட அடுத்த கட்ட நடவடிக்கை சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்து ஒரு மக்கள் போராட்டத்தை நடாத்துவதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இதை விடுத்து தமிழ்த் தலைமைகள் தாங்களே தன்னிச்சையாக கூடி முடிவெடுத்து பிரதமருக்கு அறிவித்து தனியே தமிழர்களை மாத்திரம் கொழும்புக்குக் கூட்டிச் சென்று காலிமுகத்திடலில் அகிம்சைப் போராட்டத்தை ஆரம்பித்து இனக்கலவரம் ஒன்று ஏற்படுத்துவதற்கான சூழலை ஏற்படுத்தினர்.

தனிச்-சிங்கள-மொழி-சட்டம்-எதிர்ப்பின்-போது

இவ்வாறு தமிழ்த் தலைவர்கள் தனித்து நின்று போராட்டத்தை நடாத்தியதற்குக் காரணம் தங்களைத் தமிழ் மக்களிடம் கதாநாயகர்களாக காட்ட வேண்டும் என்பதற்காகவும் அதனை வைத்து அடுத்த தேர்தலிலும்  நாடாளுமன்ற உறுப்பினர்களாக வரவேண்டும் என்பதற்காகவுமேயொழிய உண்மையில் தமிழ் மொழியை அரசகரும மொழியாக்க வேண்டும் என்பதற்கல்ல. இதன் காரணத்தினால் தமிழர்களுக்கு எதிரான முதலாவது இனக்கலவரத்தினை 1956 ஆம் ஆண்டு ஆரம்பித்து 150 க்கும் மேற்பட்ட தமிழர்களின் உயிரைப் பலியிட்ட பெருமை எமது தமிழ்த் தலைமைகளுக்கேயுண்டு.

தமிழர்களைத் தம் பக்கம் திரட்டுவதற்காக தமிழ் அரசுக் கட்சியினர் எடுத்த அடுத்தகட்ட நடவடிக்கை ’சிங்கள சிறி’ எதிர்ப்புப் போராட்டமாகும். தனிச் சிங்களச் சட்டத்தைத் தொடர்ந்து 1957 இல் மோட்டார் வாகனங்களின் ஆங்கில எழுத்துக்குப் பதிலாக ’சிங்கள சிறி’ எழுத்தை அறிமுகப்படுத்தி ’சிங்கள சிறி’ எழுதப்பட்ட மோட்டார் வாகனங்களை அரசு வடக்கு – கிழக்கிற்கு அனுப்பி வைத்தது. இவ்வாறு அனுப்பப்பட்ட வாகனங்களின் சிங்கள எழுத்து தமிழரசுக் கட்சியினரால் தார் பூசி அழிக்கப்பட்டது. இதுவே ’சிங்கள சிறி’ எதிர்ப்புப் போராட்டமாகும். இந்தப் போராட்டத்தின் மூலம் தமிழ் இளைஞர்களின் இன உணர்வு தூண்டப்பட்டு தமக்கான ஆதரவுப்பலம் அதிகரிப்பதை உணர்ந்த தமிழ் அரசுக் கட்சியினர், 1957ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை துக்கதினமாகப் பிரகடனப்படுத்தி கடைகளை மூடி கறுப்புக்கொடிகளைப் பறக்கவிடும்படி வேண்டுகோள் விடுத்தனர். தமிழ் அரசுக் கட்சியினரின் வேண்டுகோளை ஏற்று திருகோணமலையில் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு மேல் கறுப்புக்கொடி கட்ட முனைந்த நடராசன் எனும் இளைஞர் சிங்கள இன வெறியர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பலியானார். இதன் மூலம் முதலாவது போராட்டப் பலியை தமிழ் அரசுக் கட்சி கிழக்கில் ஆரம்பித்து வைத்தது.

Attacks-on-Tamil-protestors

இந்த ’சிங்கள சிறி’ எதிர்ப்புப் போராட்டம் அப்பட்டமான தமிழ் இனவாதப் போராட்டமே தவிர தமிழ்த் தேசியப் போராட்டம் அல்ல என்பதனை யாழ். மேலாதிக்க அதிகாரத்துவம் உணர்வதற்கான வர்க்க குணாம்சம் அவர்களிடம் இருக்கவில்லை. ஏற்கனவே காலங்காலமாக தமிழர்களை, சிங்களவர்களையும் சிங்களப் பண்பாட்டையும் அழிக்கும் ஆக்கிரமிப்பாளர்களாக உருவகிக்கப்பட்டு சிங்கள பௌத்தம் நிலைநிறுத்தப்பட்டு வந்த சூழலில், சிங்கள எழுத்தை அழித்தமையானது தமிழர்கள் தொடர்பான ஆக்கிரமிப்பு – அழிப்பு நடவடிக்கையினை உறுதிப்படுத்துவதாக இருந்தது. தமிழர்களின் இந்த இனத்துவவெறி காரணமாக சிங்கள மொழிச் சட்டத்துக்கு எதிராக வாக்களித்த முற்போக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிங்களப் பொதுமக்களும் அதுவரை தமிழர்களுக்கு வழங்கிவந்த ஆதரவை விட்டு ஒதுங்குவதற்கு வழிசமைத்தது. இவர்களின் ஒதுக்கம் சிங்கள இனவாதிகள் மேலும் தீவிரமாகத் தமிழர்களைப் புறந்தள்ளுவதற்கு வாய்ப்பாக அமைந்தது.

தமிழர்களின் தார் பூசுதலுக்கு எதிர்வினையாக சிங்களப் பகுதியில் இருந்த தமிழ்ப் பெயர்ப் பலகைகளும் எழுத்துக்களும் சிங்கள இன வெறியர்களினால் தார் பூசி அழிக்கப்பட்டன. ஏட்டிக்குப் போட்டியான இனவாத நடவடிக்கைகள் தீவிரமடைந்து கொண்டிருந்த சூழலில் அதனைத் தடுத்து தமிழர்களுக்கும் நியாயமான உரிமையினை வழங்கும் பொருட்டு எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா 1957 ஏப்ரல் 26 இல் தமிழ் மொழியின் நியாயமான உபயோகத்துக்கான மசோதாவை  நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அத்துடன் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க முன்வந்தார். சமஸ்டி ஏற்படுத்துவது பற்றியும் ஆலோசிப்பீர்களா என்று எஸ். ஜே. வி. செல்வநாயகம் கேள்வி எழுப்பியபோது பண்டாரநாயக்கா அதற்கு இணங்கியதாக  த.சபாரெத்தினம் அவர்கள் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு தமிழர்களுக்குச் சார்பான ஒரு சூழல் உருவாகியிருக்கும் போது அதனைத் தக்கபடி கையாள்வதே அரசியல் இராஜதந்திரமாக இருக்க முடியும். ஆனால் தமிழரசுக் கட்சியினர் மேலும் மேலும் சிங்களவர்களை ஆத்திரமூட்டும் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டனர். சிறுபான்மைத் தமிழர் மகாசபையினர் உதவி அமைச்சராக இருந்த எம். பி. டி. சொய்சா அவர்களை யாழ்ப்பாணம் அழைத்திருந்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணத்திற்கு ரயிலில் சென்று, காரில் ஏறிய போது தமிழரசுக் கட்சியின் வீரபுருசர்கள் அவரின் காருக்கு முன்னால் படுத்து அவரை யாழ்ப்பாணத்துக்குள் பிரவேசிக்க விடாமல் திருப்பியனுப்பினர்.

யாழ். வேளாள மேலாதிக்கத்தால் எந்தவித அடிப்படை உரிமைகளும் வழங்கப்படாமல் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களே சிறுபான்மை தமிழர் மகாசபை என்பதனை ஆரம்பித்து தங்களுக்குத் தேவையான கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை அரசாங்கத்திடம் கோரிநின்றனர். யாழ். வேளாள மேலாதிக்கத்தை மீறி அமைச்சர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்துவிடக் கூடாது என்பதும் தமிழரசுக் கட்சியினரின் நோக்கங்களில் ஒன்றாகும்.    

எம். பி. டி. சொய்சா அவர்களுக்கு நடந்தது போலவே கல்வி அமைச்சராக இருந்த டபிள்யூ. தகநாயக்கா அவர்களும் தபால் அமைச்சராக இருந்த சி. ஏ. எஸ். மரிக்கார் அவர்களும் கிழக்கு மாகாணம் சென்றபோது கறுப்புக்கொடி காட்டப்பட்டது. நிதி அமைச்சராக இருந்த ஸ்ரான்லி. டி. சொய்சா அவர்களுடன் ஆறு அமைச்சர்கள் கொண்ட குழுவினர் மன்னாருக்குச் சென்றபோது அங்கும் கறுப்புக்கொடி காட்டப்பட்டு அவர்கள் எதிர்க்கப்பட்டனர்.

எஸ். ஜே. வி. செல்வநாயம்

எஸ். ஜே. வி. செல்வநாயகம் 1957 மே 13 இல் மட்டக்களப்பில் நடந்த கூட்டமொன்றில் தமிழ் மக்களை வெறும் வாய்ச்சொல் வீரர்களாக சிங்கள மக்கள் நினைப்பதாகவும் இதனை மாற்றி செயல் வீரர்களாக தமிழ் இளைஞர்கள் இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு தமிழனும் போராட்டத்தில் தீவிர பங்கெடுப்பதுடன் எந்தத் தியாகத்துக்கும் தயாராக இருக்குமாறும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துப் பேசினார்.

மேற்படி தமிழ் அரசுக் கட்சியினரின் பொருத்தமற்ற நேரத்தில் பொருத்தமற்ற போராட்டங்களும் இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தக் கூடிய பொருத்தமற்ற பேச்சுகளும் தமிழ் மக்களுக்கு எதுவுமே பெற்றுக் கொடுக்காதது மட்டுமல்ல அவை எதிர்மறைவான விளைவுகளையே ஏற்படுத்தின. இருந்த போதும் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா 1957 யூன் முதலாம் திகதி செல்வநாயகம் அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.  தமிழ் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் என இரு தலைவர்களும் கலந்துரையாடினர். இரு தரப்பாரும் மக்கள் தமக்கு அளித்த ஆணைக்குக் கீழ்ப்படிந்து தத்தமது நிலைப்பாடுகளை விட்டுக்கொடுக்காது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இணங்கினர்.

இதன் பிரகாரம் அதிகாரப் பரவலாக்கத்தின் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் பிரதேசசபைகள் அமைத்தல் தொடர்பாக இணக்கம் காணப்பட்டது. இதன்படி தமிழர் தரப்பு வடமாகாணத்தில் ஒரு பிரதேசசபையையும் கிழக்கு மாகாணத்திற்கு இரண்டு அல்லது அதனிலும் கூடிய பிரதேச சபைகளையும் அமைப்பதற்கான பிரேரணையை முன்வைத்தனர்.

வடக்கு-கிழக்கு தமிழர்களின் தாயகப் பிரதேசம் என்பதில் மிக உறுதியாக நின்ற தமிழ் அரசுக் கட்சியினர்,  அன்றே வடக்கின் அரசியல் இலாபத்துக்காக கிழக்கினை எத்தனை துண்டுகளாகப் பிரித்து பங்கிட்டுக் கொள்வதற்கும் தயங்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. கிழக்கில் முஸ்லிம், சிங்கள மக்களுக்காக கிழக்கு இரண்டிலும் கூடிய பிரதேசசபைகளாக அமைய வேண்டும் என்பது நியாயமெனின் இந்த நியாயம் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கும் பொருந்தக்கூடியதே.  இதனால் வடக்கும் இரண்டு அல்லது அதனிலும் கூடிய பிரதேசசபைகள் அமைக்கப்படுதல் வேண்டும். ஆனால் தமிழரசுக் கட்சியினர் தமது அதிகாரத்தினை கிழக்கின் மேல் செலுத்துவதாக இருந்தால் தாம் ஒருமித்த பலம்வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதும் இதன் உள்ளார்ந்த அர்த்தமாகும். எனவே இந்தத் தீர்வின் மூலம் ஒட்டுமொத்த தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதிலும் பார்க்க தமது அதிகாரத்தினைக் காப்பாற்றிக் கொள்வதே யாழ். மேலாதிக்கத்தின் நிலைப்பாடாக இருந்துள்ளது.

மேற்படி பிரதேசசபைகளின் மூலமான அதிகாரப் பகிர்வினையும் வடக்கு-கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாகத் தமிழையும் கொண்டதாக ‘பண்டா-செல்வா ஒப்பந்தம்’ எனக் கூறப்படுகின்ற ஒப்பந்தம் கைச்சாத்தானது.

ஜி.ஜி.பொன்னம்பலம் இந்த ஒப்பந்தத்தை தனது அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்தினார். அதாவது மாநில சுயாட்சியும் மொழிச் சமத்துவமும் கேட்டுப் போராடியவர்கள் பிரதேசசபையுடனும் வடக்கு – கிழக்குடனும் நின்றுவிட்டார்கள் என தமிழ் அரசுக் கட்சியினரைச் குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலளித்த செல்வநாயகம் “நாங்கள் எங்கள் இலட்சியத்தைக் கைவிடவில்லை. இது ஒரு இடைக்கால ஒழுங்கு மட்டுமே” எனப் பதிலளித்தார்.

“இடைக்கால ஒழுங்கு” எனும் செல்வநாயகம் அவர்களின் பதிலை சிங்களப் பேரினவாதிகள் ஆயுதமாக எடுத்துக்கொண்டு ’இது தமிழர்கள் தனிநாடு அமைப்பதற்கான முதற்படி’ என்று ஒப்பந்தத்திற்கு எதிராகப் பிரசாரம் செய்தனர். 1958 இல் களனியில் நடந்த மகாநாட்டில் தமிழர் பிரச்சினைக்குக் கௌரவமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக பண்டாரநாயக்கா தெரிவித்தார். ஆனால் பண்டா- செல்வா ஒப்பந்தத்தினை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, டட்லி சேனநாயக்கா போன்ற யு. என். பி. கட்சித்தலைவர்கள் கடுமையாக எதிர்த்து சிங்கள உணர்வைத் தூண்டி அரசியல் இலாபம் தேட முயன்றனர். ஜே. ஆர் கண்டி யாத்திரையை ஆரம்பித்தார். கொழும்பில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கல்லெறித் தாக்குதலில் ஈடுபட்டனர். ஊர்வலம் கம்பஹாவுக்கு அப்பால் செல்ல சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தொண்டர்கள் அனுமதிக்கவில்லை.

பண்டாரநாயக்காவும் அவருடைய கட்சித் தொண்டர்களும் ஒப்பந்தத்துக்கு சார்பாக இருந்து யு. என். பி. கட்சியினரையும் பிற இனவாதிகளையும் எதிர்த்தமை தமிழர்களுக்குச் சார்பான ஒரு நிலையாகும். “சமஷ்டிக் கட்சித் தலைவர்கள் அவருக்கு உதவி செய்வதற்குப் பதிலாக முட்டாள்தனமாக சிறி எதிர்ப்பு இயக்கத்தை ஆரம்பித்தார்கள். தமிழ் பிரச்சினைக்கு பரிகாரம் ஒன்றை அமுல்படுத்தக் கூடியளவிற்கு போதிய தேசிய அந்தஸ்தும் மக்கள் ஆதரவும் உடைய ஒரேயொரு சிங்களத் தலைவராக திரு.பண்டாரநாயக்கா ஒருவரே இருந்தார் என்பதை உணர்ந்துகொள்ளக் கூடியளவிற்கு அவர்களிடம் அரசியல் ஞானம் இருக்கவில்லை” என என்.சண்முகதாசன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

எமக்கு பண்டா – செல்வா ஒப்பந்தம் பண்டாரநாயக்காவினால் கிழித்தெறியப்பட்டதன் பின்புலம் கூறப்படாமல் சிங்களத் தலைவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளாகவும் தமிழ்த் தலைவர்கள் வீரபுருசர்களாகவும் கொள்கைப் பற்றுள்ளவர்களாகவும் தியாகிகளுமாகவே கதையாடல்கள் கட்டமைக்கப்பட்டு எமது அரசியல் பகுத்தறிவு மழுங்கடிக்கப்பட்டு வந்திருப்பதை தமிழ் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளைப் பகுத்தாராயும் போது விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.  

இலங்கையில் அநுராதாபுரக் காலம் முதல்  தொடர்ச்சியாக, நீர் முகாமைத்துவத்தினையும் நிலவளப் பயன்பாட்டினையும் மக்களின் பொருளாதார ,சமூக, அபிவிருத்திக்கான அடிப்படைகளாக இலங்கை மன்னர்களும் மக்களும் வினைத்திறனுடன் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனுடைய நீட்சியாக காலனித்துவ காலத்திலும் குளங்களை அமைத்தலும் குடியேற்றத்திட்டங்களை ஏற்படுத்துதலும் இருந்து வந்திருக்கிறது. இந்தக் குடியேற்றத் திட்டங்கள் சிங்களப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட போது தமிழர்களுக்கு அது தேவையாகவும் பிரச்சினையாகவும் இருக்கவில்லை.

வட க்கு- கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகப் பிரதேசம் எனப்படும் நிலப்பரப்பானது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் மூன்றிலொரு பகுதியாகும். இந்தப் பெருமளவான நிலப்பரப்பில் 11 வீதமான தமிழர்களே வாழ்ந்தனர். சிங்களவர்கள் நிலமின்றி இருக்க தமிழ்ப் பிரதேசங்களில் பெருமளவான நிலங்கள் தரிசுநிலங்களாக காணப்பட்டன. தமிழ் அரசியல் தலைவர்கள் இந்தத்தரிசு நிலங்களை தமிழ்மக்களினதும் நாட்டினதும் பொருளாதார மேம்பாட்டுக்காக எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?  என்கின்ற எந்தவிதமான திட்டங்களையும் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் தமிழ்த் தலைவர்களாக இருந்தவர்களும் அவர்களுடைய சந்ததிகளும் ஆங்கிலக் கல்வியைக் கற்று அதனால் கிடைக்கப்பெற்ற அரச உத்தியோகங்களினூடாக பொருளாதார மேம்பாட்டினை அடைந்து இலங்கையின் உயர் வர்க்கமாக இருந்தனர். இவர்களுக்கு தமிழ்ப் பிரதேசங்களின் நிலவளம் பற்றியோ, அந்த நிலவளத்தினை எவ்வாறு மக்களுக்கான பொருளாதார வளமாக மாற்றலாம் என்பது பற்றியோ ,அல்லது சாதாரண தமிழ் மக்களின்  பிரச்சினைகள், தேவைப்பாடுகள் பற்றியோ உண்மையான அக்கறையும் அறிவும் இருக்கவில்லை என்பதே உண்மையாகும். அவ்வாறு இருந்திருக்குமானால் அதற்குரிய அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்து அவற்றை நடைமுறைப்படுத்தவதற்கு தந்திரோபாயமாக முயற்சித்திருப்பர். இவற்றைச் செய்யாது டி.எஸ்.சேனநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தை  தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கான ஒரு வஞ்சகத்தனமான திட்டம் என்று கூறி இனமுரண்பாட்டை ஊக்கப்படுத்தி சிங்களக் குடியேற்றத்திட்டங்களை விரிவுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தினை அரசுக்கு ஏற்படுத்தி சிங்கள மக்களுக்கு உதவினர்.

தமிழ்த் தலைவர்களின் கையாலாகாத்தனத்தையும் தூரநோக்கற்ற பார்வையையும் எவ்வித கேள்விகளுமின்றி ஏற்றுக்கொண்டு அவர்களால் கூறப்பட்ட இனவாதக் கருத்துகளுக்குள் கட்டுண்டு அவற்றிலிருந்து மீண்டுவரமுடியாத அறிவிலிகளாக்கப்பட்டு ஆளும் தமிழ் வர்க்கத்தின் அடிமைகளாக்கப்பட்டிருக்கின்றோம். இனவாதத்தை வளர்த்து தமிழர்களை அடிமையாக்கியதில் சிங்கள அரசின் பங்களிப்பை விட தமிழ்த் தலைவர்களின் பங்களிப்பே அதிகமாக இருந்துள்ளது என்பதைத்  தமிழ் அரசியல் தலைவர்களின் வரலாறு முழுவதும் காணக்கூடியதாக இருக்கின்றது.

உண்மையில் கல்லோயாத் திட்டம் முடிவடைந்த போது கிழக்குமாகாண மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. ‘பதி எழாப் பழங்குடியான’ கிழக்கு மாகாணத்தமிழர்கள் தங்களது கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து புதிய குடியேற்றத் திட்டங்களுக்குப் போகவிரும்பவில்லை. ஆறு மாதங்களாகப் போதிய விண்ணப்பங்கள் கிழக்கு மாகாண மக்களிடமிருந்து கிடைக்கப்பெறாமையினால் ஏனைய மாகாணங்களிலிருந்து விண்ணப்பித்தோருக்கு அந்த வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

தமிழ்த் தேசியம் பற்றியும் தமிழர் உரிமை, அபிவிருத்தி பற்றியும் பேசும் அன்றைய தமிழ்த் தலைவர்கள் பெருந்தோட்டங்களில் எந்தவிதமான அடிப்படை வசதியுமின்றி கடும் குளிரிலும், பனியிலும் நாள் கூலிக்காக உழைக்கும் மலையகத் தமிழர்களில் ஒரு பகுதியினரை குடியேற்றி அவர்களைப் பொருளாதார ரீதியாகவும் சமூகரீதியாகவும் முன்னேற்றுவதற்கான உபாயங்களை இந்தக்குடியேற்றத்திட்டங்களை அடிப்படையாக வகுத்து செயற்படுத்தியிருக்க முடியும். ஆனால் அந்தத் தொழிலாளர்களை கள்ளத்தோணிகளாகக் கூறி சக தமிழர்களாக மதிக்காத யாழ்.மேலாதிக்கம் அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதில் திருப்தி கண்டது.

இதே போன்று வடக்கு – கிழக்கில் தாழ்த்தப்பட்ட மக்களாக வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்,  குடியிருக்கக் கூட நிலமில்லாது தங்களுடைய எஜமானர்களின் காணிகளில் குடியிருந்து அதற்கு வாடகையாக அந்த எஜமானர்களின் வீடுகளிலும் தோட்டங்களிலும் எந்தவிதக் கூலியும் இன்றி, எஜமானர்களுக்காக உழைத்துக் கொடுக்க வேண்டிய கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்தார்கள். இந்தத் தமிழ்த் தேசியத் தலைவர்கள் இந்தத் மக்களைத்தானும் இந்தக்குடியேற்றத்திட்டங்களில் குடியேற்றுவதற்கு துளியளவும் சிந்திக்கவில்லை. இதற்குக் காரணம் இவர்களை இவ்வாறான இடங்களில் குடியேற்றினால் தாழ்த்தப்பட்ட மக்களை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களின் தொழில்களும் வாழ்வாதாரங்களும் அழிந்துவிடும். அந்தத் தாழ்த்தப்பட்ட மக்களும் பொருளாதாரரீதியாக, சமூகரீதியாக முன்னேறுவது தங்களுடைய பொருளாதார, சமூக அந்தஸ்துக்கு இழுக்காகிவிடும் என்கின்ற சாதித்திமிரும் வர்க்கநலனுமாகும்.

செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு அதன் கொள்கையில் தீண்டாமையை ஒழித்தல், சமூக உயர்வு தாழ்வுகளை இல்லாமல் செய்தல் போன்ற விடயங்கள் இடம்பெறுவதை விரும்பாத யாழ். வேளாள உயர்வர்க்கம் கட்சியில் இருந்து விலகிச் சென்றிருந்தனர். உண்மையில் மேற்படி கொள்கை நடைமுறை ரீதியாக இன்றி தாழ்த்தப்பட்ட மக்களையும் தமது கட்சியில் சேர்த்துக்கொள்வதற்கான ஒரு தந்திரோபாயமாகவே இது கொண்டுவரப்பட்டிருந்தது. ஏனெனில் தீண்டாமையை ஒழிப்பதற்கோ அல்லது சமூக உயர்வு தாழ்வுகளை இல்லாமல் செய்வதற்கோ எவ்வித நடவடிக்கையினையும் தமிழரசுக் கட்சி எடுக்கவில்லை. இந்நடவடிக்கைகளை இடதுசாரிகளே முன்னெடுத்திருந்தனர்.

பகுத்தறிவுவாத சிந்தனையாளர்களான தந்தை பெரியார், அண்ணாத்துரை போன்ற சிந்தனைகளாலும் செயற்பாடுகளாலும் கவரப்பட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சமபந்திப் போசனம், சமகல்வி வாய்ப்பு என்பவற்றில் ஈடுபட்டாலும் அந்த ஈடுபாடு ஒரு தத்துவார்த்த தளம் சார்ந்ததாக இல்லாமல் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்பட்டவைகளாகத்தான் இருந்திருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுக்கிணறுகளில் தண்ணீர் அள்ளுவதற்கு தடுக்கப்பட்டிருந்த காலத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் மிகப் பெரிய விளம்பரங்களுடனும் ஊடகங்களுடனும் அவ்விடங்களுக்குச் சென்று அக்கிணறுகளில் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களை தண்ணீர் அள்ளவைத்து அவர்களுடன் நின்று படங்களும் எடுத்து ‘தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுக்கிணறுகளில் தண்ணீர் அள்ளல் போராட்டம் வெற்றி’ என்று தலைப்புச் செய்தியாக பத்திரிகைகளில் வெளியிடுவதுடன் அவர்களது போராட்டம் முடிந்து விடும். மக்கள் இதனை நம்பி பொதுக்கிணறுகளில் தண்ணீர் எடுக்கச் சென்றால் உயர்சாதிக்காரர்களால் தாக்கப்பட்டு அவ்விடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டிருக்கிறார்கள். இது பற்றிக் கேட்கவோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் அக்கிணறுகளில் தொடர்ச்சியாக தண்ணீர் அள்ளுவதை உறுதிப்படுத்தி அந்த மக்களுக்கான பாதுகாப்பை வழங்கவோ எந்த ஒரு தமிழரசுக்கட்சிக்காரர்களும் முன்செல்லாத சூழலே நிலவியிருக்கின்றது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

14664 பார்வைகள்

About the Author

சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம்

கலாநிதி சு. சிவரெத்தினம் அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நுண்கலையில் இளமாணிப் பட்டத்தையும் முது தத்துவமாணிப்பட்டத்தையும் பெற்றவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தில் கலைவரலாற்றில் கலாநிதிப் பட்டம் பெற்று, தற்போது சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கட்புல தொழில்நுட்பக் கலைகள் துறையின் தலைவராகப் பணிபுரிகின்றார்.

கலைவரலாற்றில் மட்டுமன்றி நாடகம், இலக்கியம், அரசியல், சமூகவியல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்