இந்த நாட்டில் இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் முதலாவது பிரசன்னத்தில் இருந்தே அவர்கள் இந்த நாட்டுக்காக வியர்வையையும் இரத்தத்தையும் சிந்தி உழைக்க ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் உழைத்துத் தந்த உள்நாட்டு உற்பத்தியும் ஏற்றுமதி வருமானமுமே இந்த நாட்டை ஆளும் வர்க்கத்தினரும் மேட்டுக்குடி மக்களும் சுகபோக வாழ்க்கை வாழ வழியமைத்துக் கொடுத்தது. ஆனால் அவர்கள் இதுவரை இவர்களை அடித்து உதைத்து நசித்து வந்திருக்கின்றனரேயன்றி அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஒருபோதும் செய்து கொடுக்க முன்வரவில்லை. அவர்களது அடிப்படைத் தேவைகளான உணவு, உறையுள், உடை என்பனவற்றில் கூட அவர்கள் அக்கறை காட்டியதில்லை. அவர்கள் எப்போதுமே இந்தமக்களை தங்களைவிட ஒருபடி கீழே வைத்தே அடக்கி ஆண்டு வந்தனர்.
1928 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் சீர்திருத்த ஆணைக்குழு தனது அரசியல் அமைப்பு சீர்திருத்த பரிந்துரைகளை முன்வைத்தபோது அதில் பிரதானமாக காணப்பட்டது 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்வசன வாக்குரிமை வழங்குவதாகும். அவ்விதம் சர்வசன வாக்குரிமை வழங்கப்படும்போது அதில் இந்திய வம்சாவழி பெருந்தோட்டத் தொழிலாளர்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. மேலும் அவ்விதம் வாக்குரிமை வழங்குவதற்கு சில நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன. அதில் ஒன்று, தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நாட்டில் குடியேறி வாழ்ந்திருக்க வேண்டும் என்பதாகும். இந்த ஐந்து வருட காலத்தில் ஒருவர் நாட்டைவிட்டு வெளியேறி இருந்தார் என்றால் அது எட்டு மாத காலத்துக்கு மேற்படலாகாது என மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் அவ்விதம் வாக்களிக்கத் தகுதி பெறும் ஒருவர் இந்த நாட்டு நலனிலும் மேம்பாட்டிலும் அக்கறை கொண்டவராக இருப்பதுடன் இந்த நாட்டில் நிரந்தரமாக வசிப்பதை நோக்கமாகக் கொண்டு இருத்தலும் வேண்டும். எவரும் தம்மை வாக்காளராகப் பதிவு செய்திருக்க வேண்டுமென்பது கட்டாயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் இந்திய வம்சாவழி மக்களை பொறுத்தவரையில் ஒரு வரவேற்கத்தக்க அம்சமாக இருந்தது.
எனினும் அப்போது இருந்த பல முன்னணி அரசியல் தலைவர்களுக்கு இது விடயத்தில் உடன்பாடு இருக்கவில்லை. அவர்கள் அதனை ஒரு சாபக்கேடாகக் கருதினர். இந்தக்காலத்தில் சமூகத்தில் பல பிரிவினராலும் நன்கு மதிக்கப்பட்ட அரசியல் தலைவராக கருதப்பட்ட சேர். பொன். இராமநாதனும் சர்வசன வாக்குரிமை வழங்கப்படுவதை எதிர்த்து, அதனை இல்லாதொழிக்க வேண்டும் என்று கோரி இங்கிலாந்தில் இருந்த மகாராணியைக் காண பிரதிநிதிகளுடன் தானும் லண்டன் சென்றார். அதேபோல் கண்டியச் சிங்களவர்களும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு சர்வசன வாக்குரிமையின் கீழ் வாக்குரிமை வழங்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். மலைநாட்டுப் பிரதேசங்களில் இந்தியப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பரந்து வாழத் தொடங்கியதால் அது தமது அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து விடும் என்று அவர்கள் கருதினார்கள். அத்துடன் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தால் தமது பாரம்பரியக் குடியிருப்புகளும் நிலங்களும் பறிக்கப்பட்டு அத்தகைய பிரதேசங்களிலிருந்து கண்டியச் சிங்களவர்களைத் துரத்தி அடித்தனர் என்றும் மேலும் குற்றச்சாட்டு சுமத்தினார்கள். எனினும் 1931ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது அரசாங்க சபையில் அப்போது ஆளுநராகப் பணியாற்றிய ஹெர்பேர்ட் ஸ்டான்லி (herbert standley 1928-1931) அவர்களால் மேற்படி பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது .
இந்த விடயம் அந்த நேரத்தில் இலங்கையில் வாழ்ந்திருந்த இந்திய வம்சாவழி மக்கள் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்றபோதும் இது நடந்து ஒரு தசாப்தத்தின் பின்னர் சோல்பரி கமிஷனின் விதந்துரையின் பெயரில் மீண்டும் ஒருமுறை அரசியலமைப்புக்கு திருத்தம் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டது. இந்தத் திருத்தங்களே பின்னர் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைக்கவும் காரணமாக அமைந்தன. குறிப்பாக அதிகரித்துவரும் இந்திய வம்சாவழி மக்கள் தொகையினை கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது. இதிலும்கூட குடியுரிமை பெறுதலுக்கான முன்பு காணப்பட்ட நிபந்தனைகள் மாற்றப்படவில்லை.
எனினும் இந்தக்காலத்தில் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த டி. எஸ். சேனாநாயக்க தொடர்ந்தும் இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் வாக்கு எண்ணிக்கை அதிகரிப்பதை விரும்பவில்லை. 1928 களுக்கு பின் அவர் தமிழ்த்தலைவர்களுடன் இணைந்து இந்திய தமிழ் மக்களுக்கும் வாக்குரிமை கிடைப்பதை அனுதாபத்துடனும் ஆதரித்தும் நோக்கினார். அவர் அதன் பின்னர் வந்த காலத்தில் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு சிங்கள பேரினவாதக் கண்கொண்டே இந்தப் பிரச்சினையை அணுகினார்.
ஏற்கனவே 1931 ஆம் ஆண்டு இந்திய வம்சாவழி மக்களுக்கும் சர்வஜன வாக்குரிமை வழங்கும் ஏற்பாட்டின் கீழ் வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது. அவர்களின் வாக்குகளும் கணிசமாக அதிகரித்திருந்தன. இதனைப் பயன்படுத்தி அவ்வாண்டு பொதுத்தேர்தலின் போது அவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக வேட்பாளர்கள் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழ்ந்த மத்திய மலைநாட்டுப் பிரதேசங்களுக்கு அரசியல்வாதிகள் படையெடுத்தனர். இவர்களின் பேச்சுக்கள், துண்டுப் பிரசுரங்கள், கோரிக்கைகள், முன்வைத்த உரிமை பிரச்சினைகள் என்பன இதுவரை காலமும் தமக்கு இல்லாதிருந்த முக்கியத்துவத்தினை தோட்டத் தொழிலாளர்களுக்கு உணர்த்துவதற்கு காரணமாக அமைந்தன. அவ்வாண்டு நடந்த தேர்தலில் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அட்டனில் இருந்து பெரி. சுந்தரமும், தலவாக்கலையிலிருந்து எஸ்.பி. வைத்திலிங்கமும், பண்டாரவளையில் இருந்து ஏ. பெளோவ்ஸ் கோடன் (A. Fellowes Gordon) என்ற தோட்டத் துரையும் தோட்டத் தொழிலாளிகளின் வாக்குகளில் அரசாங்க சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்கள். இவர்களில் பெரி.சுந்தரம் தொழில், கைத்தொழில், மற்றும் வர்த்தக அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மகாத்மா காந்தி (1927), நேரு (1931,1939), சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, ஜி. பி. திலக் (1919), சரோஜினி நாயுடு (1924 ), டாக்டர் மணிலால் (1921), கமலா தேவி சட்டோபாத்யாய் (1931) ஆகிய இந்தியத் தேசியத் தலைவர்களின் இலங்கை வருகை, இந்தியத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸின் புரட்சிகர எழுச்சிச் செயற்பாடுகள் என்பன ஏற்கனவே இலங்கை வாழ் இந்திய மக்களிடையே ஒரு அரசியல் புரிந்துணர்வையும் விழிப்புணர்வையும் தோற்றுவித்திருந்தன. இதனுடன் சேர்ந்து கோ. நடேசய்யரின் அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகள், மற்றும் ஆரம்பத்தில் சட்டசபையிலும் அதன்பின்னர் அரசாங்க சபையிலும் அவரது செயற்பாடுகள், அவர் வெளியிட்ட பத்திரிகைகள், அந்தப் பத்திரிகைகளில் அவர் எழுதிய ஆசிரிய தலையங்கங்கள் என்பன தொடர்ச்சியாக இந்திய வம்சாவழி மக்கள் மத்தியில் அரசியல் ரீதியான எழுச்சி ஒன்றையும் தோற்றுவித்திருந்தது. இத்தகைய ஒரு அபிமானத்தால் காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் பெரிய அளவிலான படங்கள் சட்டம் இடப்பட்டு தோட்டத் தொழிலாளர்களின் லயக்காம்பிறாக்களில் முன்வராந்தா சுவரை அலங்கரித்ததை காணக்கூடியதாக இருந்தது.
இந்த நிலைமைகளின் கீழ் தான் கோ. நடேசய்யர் தனது முதல் தொழிற்சங்கமான அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் கூட்டமைப்பு என்ற சங்கத்தை 1931ஆம் ஆண்டு தோற்றுவித்தார். இந்தத் தொழில் சங்கமே முதன் முதல் இந்திய வம்சாவழிப் பெருந்தோட்ட மக்கள் மத்தியில் தமது உரிமைகளுக்காக தாம் போராட வேண்டுமென்ற போராட்ட உணர்வை தோற்றுவித்தது. இதற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் கொல்வின் ஆர். டி. சில்வா தலைமையில் லங்கா சமசமாஜக் கட்சியால் தொழிற்சங்கம் ஒன்று தோற்றுவிக்கப்பட்ட போது தோட்டத் தொழிலாளர்களும் அதன்பால் கவரப்பட்டனர். 1936 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசாங்க சபைக்கான தேர்தலில் சமசமாஜக் கட்சியின் வேட்பாளர்களான பிலிப் குணவர்தன அவிசாவளைத் தொகுதியிலும், என். எம். பெரேரா ருவான்வெல தொகுதியிலும் வெற்றி பெற்றமைக்கு இந்திய வம்சாவழித் தமிழர்களின் பங்களிப்பும் காரணமாக இருந்தது. அதேபோல் இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் 1948ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்திய வம்சாவழி மக்கள் சார்பாக ஏழு பேர் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு சென்றனர். அதே நாடாளுமன்றத்தில் டொக்டர் என். எம். பெரேரா அவர்களைத் தலைவராகக் கொண்ட லங்கா சமசமாஜக் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. அந்தக்கட்சியின் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் வெற்றி பெற்றமைக்கு இந்திய வம்சாவழித் தமிழரின் வாக்குகளே மீண்டும் காரணமாக அமைந்தன.
இவ்வாறான காரணங்களினால் அச்சமடைந்த, அப்போது இலங்கையின் பிரதமராக இருந்த பழமைவாதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான டி. எஸ். சேனாநாயக்க எதிர்காலத்தில் இடதுசாரிக் கட்சிகள் இந்திய வம்சாவழித்தமிழர்களுடன் இணைந்து இந்த நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று பயந்தும் பெரும்பான்மை மக்களான சிங்கள மக்களின் அழுத்தம் காரணமாகவும், 1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க குடியுரிமை சட்டம், 1949 ஆம் ஆண்டின் இந்திய – பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டம் என்பவற்றின் வாயிலாக சகல இந்திய – பாகிஸ்தானியர்களினதும் பிரஜா உரிமைகளைப் பறித்தெடுத்தார். அதன்பின் இந்திய வம்சாவழித் தமிழர்கள் இந்த நாட்டில் சகல உரிமைகளையும் இழந்த அரசியல் அனாதைகளாக்கப்பட்டனர்.
தொடரும்.